முதன் முதலில், 1976 இல், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் அறிமுகமாகிய ஆசான், எனது வழிகாட்டி. 1984 வரை தினமும் சந்தித்த சரித்திரம், அவர்.
பரந்த முகம். அந்தக்காலத்து ரவிச்சந்திரனின் மீசை போன்ற மெல்லியதோர் மீசை. சற்றே பெரிதான பற்கள், லைட்- கரியர் பூட்டிய சைக்கில், வெள்ளைசேட் வௌ்ளை கால்சட்டை, மிகுந்த எளிமை, இது தான் அவர்.
இவற்றைவிட அவரை அடையாளம்காண அவரின் குரல் போதுமானது.
சில குரல்கள், அவர்கள் சொல்லாமலே எம்மை கீழ்படிய வைக்கும். ஆனால் புண்ணியமூர்த்திசேரின் குரலில் ஒன்றும் அப்படி ஒரு வசீகரமும் இல்லை.
ரோட்டோரத்தால் நடக்கும்போது காதுக்குள்வந்து ஒலியெழுப்பும் பாரவூர்தியின் ஹோன் போன்றது அவரது குரல். கீழ்ப்படியச் சொல்லாது, சும்மா ஒரு பயத்தை மட்டும் தற்காலிகமாய் தந்து போகும், அவ்வளவுதான்.
ஆனால் மாணவர்களின் காதுமட்டும் கிழிந்து தொங்கும், சில நிமிடங்கள்.
விளையாட்டுப்போட்டிகளின்போது பல ஆசிரியர்களுக்கு ஒலிபெருக்கி தேவைப்படும், ஆனால் எங்கள் புண்ணியமூர்த்திசேர் அதைத் தூக்கி நான் கண்டதே இல்லை. அவருக்கு அது தேவையும் இல்லை.
அவரிடம் இருந்த ஒரேஒரு கெட்டபழக்கம் மூக்குத்தூள் போடுவதுதான். அவரின் கைலேஞ்சியின் நிறம், வேண்டாம் அது பற்றி நாம் பேசவேண்டாம், இவ்விடத்தில். ஆனால் அவரின் கைலேஞ்சியை யார் அவருக்குத் தோய்த்துக்கொடுத்தார்கள் என்ற சந்தேகம் இன்றும் எனக்குண்டு. அவரே தோய்த்தாரா? இல்லாவிட்டால் மனைவி தோய்த்தாரா? மனைவியிடம் கொடுத்திருந்தார் எனின் புண்ணியமூர்த்திசோ்ருடன் எனக்கு மிகுந்த கோபம் வரும்.
காலைப் பொழுதுகளில் அவர் முதற்பாடம் கற்பிக்கும் போது அவரது வெள்ளைக் கால்சட்டையின் பொக்கட் வாயில்கள் இரண்டும் வெள்ளையாய் இருக்கும், ஆனால் கடைசிப் பாடம் எடுக்கும் போது ஐயோ!!!!!!! அதைக் கேக்காதீர்கள். ஆனால் தினமும் தோய்த்து வெள்ளையாய் மினுங்கும் காட்சட்டையை அணிந்துவருவார்.
ஒரு முறை, எங்களுடன் பாடசாலை விடுதியில் தங்கியிருந்த மனோகரன், இளங்கோஅண்ணண் கோஸ்டியிடம் அவர் மூக்குத்தூள் வாங்கக் குடுத்தபோது, அவர்கள் சிறிது மிளகாய்த்தூள் கலந்து...
அதை அவர் கண்ணை மூடி, தன்னை மறந்து
மூக்கினுள் ஊறுஞ்சியிழுத்து
சற்று நேரத்தின் பின்
தும்மித் தும்மிக் களைத்து
நிதானம் காற்றில் பறக்க
கோபத்தில் முகம் சிவக்க
மனோகரன், இளங்கொ அண்ணர்களின்
காது கிளியக் கிளிய
கத்தி அனுப்பியது
மட்டக்களப்பு மத்திய கல்லூரி
எமக்குத் தந்தனுப்பிய
மறக்க முடியாத
சிரிப்பலைகள்.
அன்பான, பண்பான மனிதர். கத்துவாரே தவிர, அடிக்க மாட்டார். மனிதம் நிறைந்த மனிதர், அவர்.
வறுமைப்பட்ட மாணவர்களுக்கு தன் செலவில் பஸ் சீசன் டிக்கட் எடுத்துக் கொடுத்தவர்.
சுகாதாரம், விளையாட்டு, சாரணீயம், சிரமதானம், பள்ளிக்கூடத்திற்கு நேரஅட்டவனை தயாரிப்பது போன்றவையே அவரின் அடையாளங்கள். அவர் இல்லாதிருந்தால் எங்கள் பேராசான் பிரின்ஸ் சேர்கூட ஆட்டம் கண்டிருப்பார் என்பேன் நான். பாடசாலையின் சகல செயற்பாடுகளிலும் அவர் இருந்தார்
அவர்
பாடசாலைக்கு டைம் டேபிள் போடும் அழகு
அலாதியானது.
புள்ஸ்க்கைப்பேப்பர் நான்கு எடுத்து
அவற்றை, ஒன்றோடு ஒன்றோடு
வேப்பம் பிசின் போட்டு ஒட்டி
மஞ்சல்நிற மரத்திலான அடிமட்டத்தினால்
பல கோடுகளைக்
குறுக்கும் நெடுக்குமாய் போட்டு
அழித்து
மீண்டும் போட்டு
x அச்சில் வகுப்புகளின் பெயர் எழுதி
y அச்சில் ஆசிரியர்களின் பெயர் எழுதி
அப்பப்பா, பாடசாலைக்கே
குறிப்பு எழுதும் சாத்திரி போல
அடிக்கடி மூக்குத் தூள் போட்டபடி
தலையை அந்தப் பேப்பருக்குள்
பூகுத்தி வைத்திருப்பார்.
அந்த நேரத்தில்
”சோ்” என்று கூப்பிட்டால்
அவரின் வாய் கத்தாது
ஆனால், கண் கத்தும்.
எப்படியோ
எல்லோருக்கும்
பொருந்தக் கூடிய
நேர அட்டவணையைத் தயாரித்து
அவரின் கந்தோரில் ஒட்டி வைத்திருப்பார்.
(யாராவது அதை ஆவணப்படுத் தியிருந்தால் மகிழ்ச்சியடைவேன். இருக்குமா?)
அவரின் மூத்த மகன் நவனீதன் (பட்டப் பெயர் ”பூனை”) எங்களுடன் தான் படித்தான். மிகுந்த அமைதியானவன் தான். ஆனால் ஒரு முறை விவசாயத்தில் நாம் ”மரங்களை ஒட்டுதல்” பற்றிப் படித்த போது ”பூனை” வீட்டிற்குப்போய் ரோசாப்பூ மரத்தை வெட்டி, வீட்டில் இருந்த பப்பாசி மரத்தோடு ஒட்டி, விவசாயப்புரட்சி செய்திருக்கிறான்.
அடுத்தநாள் இந்த விவசாயப்புரட்சியை எங்கள் அரசவையில் புண்ணியமூர்த்தி சேர் அறிவித்ததால், பாவம், பூனை, நொந்து நூலாய்ப் போனான்.
சுகாதாரப் பாடம் நடத்துவார். இனப்பெருக்கம் என்றால் சொல்லவா வேணும் கேட்கவா வேண்டும், அந்த காலத்தில்.
எங்கள் கேள்விகளுக்கு நக்கலும், குறும்பும், குசும்பும் கலந்து பதிலளித்து லாவகமாய் பாடம் நடாத்துவார்.
எங்கள் பின்வரிசைக் கதாநாயகனான அமீர்அலி, ஒரு முறை யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த போது, வின்சர் தியட்டரருகில் இருந்த பெட்டிக்கடையில் வாங்கிய ”பலான” புத்தகத்தை முழு வகுப்பும், இனிப்பை மொய்த ஈக்கள் போல சுற்றியிருந்து பார்த்தது.
நாம், உலகம் மறந்து ”உயர் இலக்கியம்” படித்துக்கொண்டிருந்த போது மெதுவாய் வந்து
ம்..ம் என்று கனைத்தார்
வேர்த்து விறைத்து நின்ற போது
ம் என்று கையை நீட்ட
”உயர் இலக்கியம்” கை மாறியது
தலையங்கம் பார்த்து
சிரித்தவர்
யாரும் வாசிக்காதவர்கள்
இருந்தால்
வந்து கேளுங்கோ
தாறேன், என்று சொல்லி எடுத்துச் சென்றார்.
அதே நாள்
பாடம் நடாத்த வந்த போது அதைப் பற்றி
தெரியதது போலவே பாடம் நடாத்தினார்.
வீட்டில் மாடு வளர்த்தார். அந் நாட்களில் அவர்தான் பாடசாலை விடுதிக்கும் பொறுப்பாயிருந்தார். விடுதி குசினிக் கழிவுகளை வீட்டிற்குக் கொண்டு செல்வார். அந்தக் காலத்திலேயே recycle பற்றி தெரிந்து வைத்திருந்த மனிதரவர்.
பாடசாலையின் ஒவ்வோரு நிகழ்விலும் அவரின் அடையாளமும், ஆளுமையும், உழைப்பும் இருக்கும். இரவு பகல் பாராது பாடசாலைக்கு என உழைத்த மனிதரவர். பிரின்ஸ் காசிநாதரின் ஆட்சிக் காலத்தில் அவரின் வலதுகரமாய் இருந்தவர்.
அன்றிருந்த மட். மத்திய கல்லூரியின் மிடுக்கும், செருக்கும் இன்று இல்லாதது வலிக்கிறது. மிகவும் வலிக்கிறது. மிக நெருங்கிய உறவொன்று தொலைந்துபோனது போன்றதோர் வலி அது.
நான், வழிதடுமாறிய நேரங்களில் தோளில் கைபோட்டு, நண்பனாய் மாறி மனச்சாட்சியுடன் உரையாடக் கற்றுத்தந்தவர் அவர். எனது ஆடோகிராப் இல்
”உண்மையாய் இரு. உண்மை உன்னை உயர்த்தும்” என்னும் தொனியில் அவர் எழுதியிருந்தது நல்ல இன்றும் நினைவிலிருக்கிறது.
பாடசாலைவாசலில் நாம் நின்றிருந்தால் ” டேய் என்னடா சுளட்டுறீங்களோ” என குறும்பாய்க்கேட்டு தானே வெடித்துச் சிரிப்பார். (பெண்கள் பாடசாலை அருகிலேயே இருந்தது)
இப்போ அவர் மறைந்து பல ஆண்டுகளாகி விட்டன. அவரின் மகன் (பூனை) ஜேர்மனியில் வசிப்பதாய் அறிந்தேன். மற்றைய மகன் மட்டக்களப்பில் இருக்கிறார். பலமுறை சந்தித்திருக்கிறேன்.
கடைசியாய் எனது தம்பி அவரைச் சந்தித்த போது அவர் வாயிலிருந்த ஒரே ஒரு பல்லும் ஆடியபடி
உன்ட அண்ணண் எப்படி இருக்கிறான்? என்று அவர் கேட்டதை
வீடியோவில் பார்த்த போது
சத்தியமாய், கண்கலங்கியிருந்து
எனக்கு
இறுதியாய்
புண்ணியமூர்த்தி சேர், உங்களை மூக்குத்தூள் என்று பல தரம் திடடித்துலைத்திருக்கிறேன். மற்றவர்களுடன் கதைக்கும் போது கூட உங்கள் பெயரைப் பாவித்ததில்லை. மூக்குத்தூள் என்று தான் உங்களை குறிப்பிட்டு கதைத்திருக்கிறேன்...
மனிதமே........மன்னிப்பாயா?
புண்ணியமூர்த்தி மாஸ்டரின் நினைவுகளுடன்
சஞ்சயன்
23.10.2009
No comments:
Post a Comment
பின்னூட்டங்கள்