மறந்து, மறைந்து போகும் கதை

ஈழத்து முற்றத்தில் ஃபஹீமாஜஹான் எழுதிய ”மாய்வெல ஊரின் வரலாற்றுத் தகவல்கள்” என்னும்  பதிவை வாசிக்கக்கிடைத்தது.  அதை வாசிப்பதற்கு சில நாட்களுக்கு முன் தான் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ”யாமம்” வாசித்து முடித்திருந்தேன். அப் புத்தகத்தின் முன்னுரையில் எஸ். ரா ”எல்லா நகரங்களும் ஏதோ சில கதைகளைச் சுமந்து கொண்டிருக்கின்றன” என்கிறார்.
எவ்வளவு உண்மையான வார்த்தைகள் அவை.

அவ் வார்த்தைகளின் அர்த்தத்தை ஃபஹீமாஜஹான் இன் பதிவின் ஊடாகவும் உணரக்கூடியதாக இருந்தது. ஃபஹீமாஜஹான்  சொல்லியிருப்பதோ ஒரு ஊரின் சுயசரிதம். எஸ். ரா பேசுவதோ ஒவ்வொரு ஊரின் வெளிகளிலும், சாலைகளிலும், வீடுகளிலும், தோட்டங்களிலும், மயானங்களிலும், கோயில்களிலும், பாடசாலைகளிலும், அவ்வூரின் காற்றிலும் அலைந்து திரியும் கதைகளைப் பற்றியது. உலகில் எழுதப்படும் கதைகளின் ஆரம்பம் எங்கோ ஒரு ஊரின் ஒரு மூலையில் இருந்தே ஆரம்பிக்கிறது போலிருக்கிறது எனக்கு.

நான் முன்பு வட மேற்கு நோர்வேயின் ஒரு மிகச் சிறிய தீவில் வாழ்ந்திருந்தேன். எமது நகரசபையில் ஏறத்தாள 4000 மக்களே வசித்தனர். எமது நகரசபையில் எறத்தாள 4 கிராமங்கள் இருந்தன. அவற்றில் ஒன்று பாரம்பரியமாக வடதுருவத்தில் திமிங்கிலம், கடற்சிங்கம், துருவக்கரடி ஆகிய மிருகங்களை வேட்டையாடும் கடலோடிகள் வாழ்ந்திருந்த கிராமம்.

இன்றோ இந்தக் கிராமத்தில் அத் தொழிலில் ஈடுபடுபவர்கள் எவருமில்லை. அத்துடன் அந்தக் கிராமத்தில் 130 வீடுகளுக்கு மேல் நிட்சயமாக இல்லை. ஆனால் இன்று அவர்களின் பழமைவாய்ந்த வேட்டையாடும் கப்பல் ஒன்றை தரைக்கிழுத்து அதைச் சுற்றி மண்டபம் எழுப்பி அத்துடன் அதற்கருகே அருங்காட்சியகம் ஒன்றையும் நிறுவியிருக்கிறார்கள் அம் மக்கள். அருங்காட்சியகத்தில் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையையும் சுற்றாடலையும் அப்படியே புகைப்படங்களாகவும், கானொளிகளாகவும், பத்திரிகைகள், ஆவணங்கள், உடைகள், பொருட்கள், பதப்படுத்தப்பட்ட மிருகங்கள் என அது இரு மாடிகளைக் கொண்டிருக்கிறது. தங்கள் ஊரின் சுயசரிதத்தில் பெருமை கொண்ட மக்கள் இவர்கள்.

இந்தக் கிராமத்தில் ஒரு பௌதீகவியல் ஆசிரியர் ஒருவர் இருக்கிறார். அவரின் பொழுது போக்கு கிராமத்தின் சுயசரிதத்தை ஆவணப்படுத்துவதே. 4 - 5 வருடங்களுக்கு ஒரு முறை ”கிராமத்தின் புத்தகம்” என்னும் புத்தகத்தை வெளியிடுவார். அதில் அக் கிராமத்தில் வாழும் அனைவரின் சரிதமும் இருக்கும்.  உதாரணமாக ஒருவரின்  பெயரை எடுத்துக் கொண்டால் அன்னாரின் துணைவரின் பெயர், குழந்தைகளின் பெயர், குழந்தைகளின் துணைவர்களின் பெயர், ‌பேரக் குழந்தைகளின் பெயர் என சகல விபரங்களும் இருக்கும். தவிர கிராமத்தில் நடந்த முக்கிய மாற்றங்கள் பற்றியும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும்.

இதைத் தவிர 4 - 5 வருடங்களுக்கு ஒரு முறை ”குடிபெயர்ந்தவர்களின் புத்தகம்” என்றும் ஒரு புத்தகம் வெளியிடுகிறார். அதில் குடி பெயர்ந்தவர்களின் பெயர்கள், எங்கு குடிபெயர்ந்தார்கள் என்னும் விபரமும் இருக்கும்.

இவரைப் போன்றே ஒவ்வொரு கிராமத்திலும் யாரோ ஒருவர் தங்கள் ஊரின் சுயசரிதத்தை ஆவணப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அரசின் மக்கள் பதிவுத் திணைக்களத்தின் ஆதரவும், எழுத்தாளர்களின் ஆர்வமும்,  புத்தகங்களின் விற்பனையும் இந்த ஆவணப்படுத்தை சாத்தியமாக்குகின்றன. அந்தச் சிறிய கிராமத்தின் சரித்திரத்தில் சில காலங்கள் அங்கு வாழ்ந்து வெளியேறிய எனது பெயரும் அப் புத்தகங்களினூடாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது எனக்கு மகிழ்ச்சியே.

அண்மையில் நேர்வேயின் உள்ளூர் சரித்திர நிறுவனம் என்னும் அரச நிறுவனம் ஒன்றின் ”குடிபெயர்ந்தவர்களின் சரித்திரம்” என்னும் திட்டத்தில் சேர்ந்து பணியாற்ற அழைக்கப்பட்டிருந்தேன். சம்பளமற்ற வேலைதான் என்றாலும் மனதுக்கு இதமாய் இருந்ததால் ஒப்புக்கொண்டேன். ”நோர்வேக்கு தமிழர்களின் வருகையும் வாழ்வும்” என்னும் தலைப்பில் ஒரு திட்டம் தொடங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் நாம் நோர்வேக்கு வந்த பொழுது எப்படி வாழ்ந்தோம், என்ன என்ன பொருட்களை கொண்டு வந்தோம், கடிதங்கள், புகைப்படங்கள்,கானொளிகள், ஒலி நாடாக்கள், கதைகள், கவிதைகள், இலக்கிய இதழ்கள், உடைகள் போன்றவற்றை தமிழர்களிடம் இருந்து சேகரித்து அரச செலவில் மிகவும் உயர்ந்த பாதுகாப்புடன் பாதுகாக்கப்படும். அவை எனது குழந்தைகளின் குழந்தைகளுக்கு அல்லது அவர்களின் குழந்தைகளுக்கு பல கதைகள் சொல்லும். நம் ஊரில் காணாமல் போன கதைகளைப் போலிருக்காது இவை.

எமது ஊரின் சரித்தரத்தையும் கதைகளையும் நாம் ஆவணப்படுத்தாததால் தொலைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் புலம் பெயர்ந்து வந்த நாட்டில் அந் நாட்டினர் தமது சரித்திரத்தை ஆவணப்படுத்தி பாதுகாப்பதாக எமது சரித்திரத்தையும் சேர்த்தல்லவா ஆவணப்படுத்துகிறார்கள்.

நாம் கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது.


இந்தப் பதிவுக்கு கரு தந்த தம்பி கானா பிரபாவின் ஈழத்து முற்றத்துக்கு எனது நன்றிகள்.

.

ஈன்ற பொழுதினும் பெரிதுவந்த தந்தை


இன்று எனது மகளுக்கு 14 வயது. அவளுடனான எனது அனுபவம் ஒன்றை மீள் பதிவிடுகிறேன்.
                   ..........................

மூத்த மகள் வளர்ந்து விட்டாள். பதின்மக் காலம் அவளுடயத்தாகிவிட்டது. அப்பா, அப்பா என்று என்னைக் கதாநாயகனாய் கொண்டாடிய அவள், தானே கதாநாயகி என்னும் தொனியில் ஆடுகிறாள், நடக்கிறாள், கதைக்கிறாள், ஏன் பேசவும் செய்கிறாள் என்னை.
மவுசு குறைந்த தென்னிந்திய திரைப்பட கதாநாயகன் போலாகிவிட்டேன் நான். இந்த வேதனையைக் கூட தாங்கிக் கொள்ளலாம் ஆனால் தாயுடன் சினேகிதியாகி விட்டாள் என்பதை ஜீரணிக்க கஸ்டமாக இருக்கிறது.
ஒன்றாய்
உலா வருகிறார்கள்..
பச்சை எரிச்சலாய் இருக்கிறது.

உடுப்புக் கடை,
சப்பாத்துக்கடை,
கோப்பி சொப்,
சினிமா
என்று
சுற்றித் திரிகிறாகள்...

என்னோடு
கார் ஓடியதையும்,
மலை ஏறியதையும்,
பந்தடித்ததையும்,
எனது கழுத்திலிருந்து ஊர் சுற்றியதையும்,
யானை மேல் என்னுடன் இருந்து
இளவரசி போல் உலா வந்ததையும்
மறந்து விட்டாள் போல இருக்கிறது அவளது நடவடிக்கை.

இருப்பினும் அவளுக்கு தெரியாமல் ரசிக்கிறேன் அவளின் அலட்சிய பார்வையையும், பேச்சையும். பேரானந்தம் அது..

பிறந்த போது கூட நான் தான் முதலில் அவளைக் கண்டேன்... அதன் பின் தான் தாயிடம் போனாள். இன்று நான் என்று ஓருவன் இருப்பது போல காட்டிக் கொள்கிறாள் இல்லை. முன்பெல்லாம் கேட்காமல் கிடைக்கும் அவளின் முத்த மழையில் சளிப்பிடித்து கிடந்திருக்கிறேன். இப்ப வரண்ட புமியாய் எனது முகம்..... நானே கேட்டுப்போனாலும் யானைப்பசிக்கு சோளம் பொரி போல சின்னதாய் ஒன்று பட்டும் படாமலும் தருகிறாள்.

எனது உலகம் இப்படியாய் போய்க் கொண்டிருந்த போது ஒரு நாள் எனது பிறந்த நாள் வந்தது. பரிசாய் ஒரு புத்தகம் தந்தாள்..

முத்தை (முகத்தை) தொலைத்து விட்டேனோ
என்று
நடுங்கியிருந்த போது
முத்தமிட்டு
மெதுவாய்த் தந்தாள்
நோர்வேஜிய மொழியில்
”என் தந்தை”
எனறொரு தலைப்பிட்ட
ஒரு பொக்கிஷத்தை
அதிலிருந்து
மொழிபெயர்த்த சில வரிகள்

முதல் பக்கம்

30. புரட்டாதி. 2009...
என் அப்பாவுக்கு!
அன்பிலும் அன்பு
கொண்டுள்ளேன் உன்னில்.
தந்துள்ள
பொக்கிஷத்தை பாதுகாப்பாய்
என்னும் நம்பிக்கையில்
காவியா......

பொக்கிஷத்தில் இருந்து சில வரிகள்
நான்
என்றென்றும்
நன்றியுடையவள்
உனது
சிரிப்பு
பொறுமை
அன்பு
நட்புக்கு
.........................
நீ
வீராதி வீரன்
கடமையிலும்
அன்பிலும்
........................
எனது
தந்தை
நீ
இருப்பினும்
குழந்தைப் பருவத்தில்
நீ
பரிமாறிய சிரிப்புக்கும்,பொறுமைக்கும்
நாம்
ஒன்றாய் செய்த செயல்களுக்கும்
தந்த ஆறுதலுக்கும்
ஆயிரம் ஆயிரம்
நன்றிகள்
........................
என்னுடன்
நடையபின்று
உலகத்தை
காண்பித்தாய்
அதன் மீதான
பார்வைவை
பெருப்பித்தாய்
.........................
தந்‌தையே
நீ
பலமானவன்
புத்தி உடையவன்
ஆனால்
நினைக்காதே
உன்
வாழ்வு
சாமான்யமானதென்று
........................
காலச்சக்கரம் ஓடுகிறது
ஆனால்
ஏமாற்றமலும்
வற்றாமலும்
இருக்கிறது
உனதன்பு.
மாறாத
உன் வாஞ்சை
மூச்சைப்
போன்றதெனக்கு
..........................
நன்றி.
நீ
எனதுறுதியில்
கொண்ட
நம்பிக்கைக்கு
...........................
வேதனை
வலித்தது
நீ
தவறிழைத்த போது.
அதன்
தாக்கம் மரித்த போது
உண்மை தெளிந்து,
புரிந்தது
நீ
சாதாரணமானவன்
அல்லவென்று
...........................
கற்பித்தாய்
தவழ
எழும்ப
நடக்க
ஓட
விடா முயற்சி
சுயகட்டுப்பாடு
பாராட்டு
ஊக்கம்
ஆர்வம்
மேலும்
கற்கவும்
மெதுமையும்
பொறுமையும்
மரியாதையும்
நட்பும்
அன்பும்
கற்பித்தாய்
.........................
வாழ்வும்
வாழ்க்கையும்
மாறலாம்.
கனவுகள்
கானலாகலாம்
அவை பெரிதல்ல
என் மீது நீ கொண்ட அன்பும்
உன் மீது நான் கொண்ட அன்பும்
வாழ்ந்திருக்கும் வரை.
..........................
முதன் முதலில்
உலகம் கண்ட போது
உயரத்தில்
உன்
தோள் மேலிருந்தேன்
நீ
மெதுவாய் ஆடி
நடக்கையில்
வாழ்க்கை
பெருத்தது
அரைத் தூக்கத்தில்
நீ என்னைத்
தோளில் சுமந்தது
போல்
சுமந்து
மறவேன்
உன்னையும்
நீ
தந்த
குழந்தைப் பிராயத்தையும்
............................
எனதன்புத் தந்தையே
என்றென்றும்
நான் உன்னுடையவள்
............................

பொக்கிஷத்தை
பார்த்தபின்
ஈன்ற பொழுதினும், பெரிதுவந்த
தந்தையாய்
கண் கலங்கி
நெஞ்சு விம்மி
நின்றிருந்தேன்
திருப்தியான நாள்
.................

பின் பொருநாள் மெதுவாய் கேட்டேன் ”அய்யா அந்த புத்தகத்தை வாசித்து விட்டா வாங்கித் தந்தாய் என்று ”அதிலென்ன சந்தேகம்” என்றால் அலட்சியமாய்...
மீண்டும் உயிர்த்திருந்தேன்....அவளின் பதிலால்
.................................................................................................................................
விழுந்து, தொலையும்போதெல்லாம் என்னை ”எழும்பு, எழும்பி நில், நட”  என்று அசரீரியாய் காதில் ரகசியம் பேசி என்னை உயிர்ப்பிக்கும் என் மகள்களுக்கு இது சமர்ப்பணம்..

தமிழ்த் தாயின் அதிசய புத்திரிகள்

இன்று நண்பர் ஒருவருடன் முகப்புத்தகத்தில் இருந்தபடியே ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்.  அவர் விரைவில் தொழில் நிமித்தம் நோர்வேயில் விரிவுரையாற்ற வருகிறார் என்பதாலும் அவரை மனதுக்கு பிடித்துப் போனதாலும் மிகவும் அன்னியோன்யமாக பேசிக்கொள்கிறோம். மகிழ்ச்சி. 

‌அவருடன்  பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு ஜேர்மனியப் பெண்ணைப் பற்றி மிகவும் சிறப்பாகவும், பெரும் மரியாதையுடனும் பேசினார். அவர் zu Koln என்னும் ‌ஜேர்மனியப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக தொழில் புரிகிறார் என்றும், மிக சாதாரணமாக தொல்காப்பியத்தில் இருந்து உதாரணங்களை எடுத்துக் காட்டுகிறார் என்றும் சொன்னார். மிக ஆச்சரியமாய் இருந்தது. அவரின் முகப்புத்தகத்தைப் பார்த்தேன். தமிழ் பெருக்கெடுத்து ஓடிக்‌கொண்டிருந்தது அங்கு.

எம்மில்எத்தனை பேர் தமிழைக் கற்கிறோம்? அதைப் பேசினாலே அவமானமாய் கருதும் கூட்டமும் இருக்கத் தானே செய்கிறது. எனக்குள் இன்று இருக்கும் தாகங்களில் தமிழ் மொழி மேலுள்ள தாகமே பெரியதாயிருக்கிறது. அந்தக் காலத்தில் ஒழுங்காய் படித்திருக்கலாம் என்று இப்போது தான் நினைக்கிறேன்.

ஏறத்தாள 1990ம் ஆண்டு என நினைக்கிறேன். ஓஸ்லோ நகரிலுள்ள பெரிய வாசிகசாலைக்குப் போயிருந்தேன். தமிழ் புத்தகப் பகுதியில் புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது கண்ணில் பட்டது ஒரு நோர்வேஐிய மொழியிலிருந்த விளம்பரம். இப்படி இருந்தது அதில்;
”எனக்கு தமிழ் கற்றுத் தந்தால் உனக்கு நோர்வேஐிய மொழி கற்றுத் தருவேன்”
தொலைபேசி இலக்கத்தை குறித்துக் கொண்டேன். கைத் தொலைபேசி இல்லாத கற்காலம் அது. எனவே வீதியோர தொலைபேசிப் பெட்டி ஒன்றின் மூலம் தொடர்பு கொண்டேன். அழகிய பெண் குரல் கேட்டது மறு பக்கத்தில். உங்கள் விளம்பரம் பார்த்தேன் மொழிகளை பரிமாறிக் கொள்ள எனக்குச் சம்மதம் உங்களுக்கு சம்மதமா? என்று கேட்டேன். மகிழ்ச்சியாய் ஒத்துக் கொண்டார்.

மாணவர்களுக்கான ஒரு விடுதியில் தங்கியிருந்தேன், அந் நாட்களில். ஒரு சிறிய அறை அது தான் எனது சாம்ராஜ்யத்தின் எல்லையாயிருந்தது. அறையை சுத்தப்படுத்தி அவருக்காய் காத்திருந்தேன். 20 வயதுக்குட்பட்ட பெண்ணொருவர் வந்தார். மிக அழகாய் இருந்தார். வணக்கம் என்று கைகூப்பினார். நானும் வணக்கம் என்றேன்.

தெற்கு நோர்வேயைச் சேர்ந்தவர் என்பது அவரது மொழியுச்சரிப்பில் இருந்து புரிந்தது. அங்கு வாழும் ஒரு தமிழ்க் குடும்பத்தை சந்தித்துப் பழகியிருக்கிறார். அக் குடும்பத்தில் வாழ்ந்திருந்த ஒரு மூதாட்டி மிகவும் அன்பாகப் பழகியிருக்கிறார், இவருடன். மொழிப்பிரச்சனை வர மூதாட்டி மொழி கற்பது சாத்தியமல்ல, தான் தமிழ் கற்றால் தான் உண்டு என்று இவர் தமிழ் கற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்.

என்னிடம் வந்த போது தமிழ் எழுத்துக்களை உச்சரிக்கவும் வாசிக்கவும் தெரிந்திருந்தது. மிகவும் புத்திசாலியாய் இருந்தார்.  அந்த மூதாட்டி கிழமைக்கோர் கடிதம் போட்டபடியே இருந்தார். மிகவும் குறைவான  எனது உதவியுடன் வாசிக்கவும் பழகியிருந்தார், ஓரிரு வாரங்களில். பதில் எழுதுவதே அவருக்கு பிரச்சனையாய் இருந்தது. நோர்வேஐிய மொழிக்கட்டுமானத்தில் தமிழை அவர் எழுதுவதே முக்கிய பிரச்சனையாய் இருக்கிறது என்ற போது இலக்கணம் கற்பி என்று பெரியதொரு கல்லைத் தூக்கிப் போட்டார்.

எனக்கு எங்கு முற்றுப்புள்ளி, காற்புள்ளி, அரைப்புள்ளி வைப்பது என்று தடுமாறும் ஆள் நான், தவிர எனக்கு தமிழ் கற்பித்த பெருமைக்குரிய சர்மாசேரே எனக்குள் இலக்கணத்தை ஏற்றிவிட முடியாது தவித்தவர், பரீட்சையில் சாதாரண சித்தி பெற்றவன் என்னும் பல பெருமைகளைக் கொண்டவன் நான். இவர் என்னிடம் இலக்கணம் கற்பிக்கக் கேட்டது என்னை பயமுறுத்தியது.

தெரிந்தளவில் எழுவாய், பயனிலை, செயற்படுபொருள் கற்பித்தேன். அடுத்த கிழமை அவர் கேட்ட கேள்விகளுக்கு என்னிடம் பதில் இருக்கவில்லை. பூசி மெழுகிச் சமாளித்தேன். வாரம் 1 மணி நேரம் என்று 8மணி நேரங்கள் மட்டுமே என்னிடம் கற்றுக் கொண்டார். அவரின் வேகம் கட்டுக்கடங்காதிருந்தது. தமிழ் அவரின் வாயிலும் கையிலும் நர்த்தனமாடியது. அவ்வளவு வேகமாக ஒரு மொழியைக் கற்றுக் கொள்ள முடியாது என்பது எனது கருத்தாயிருந்தது. ஆனால் அது பிழை என்பதை அவர் நிரூபித்தார். தமிழ் அவரைக் காதலித்ததா அல்லது அவர் தமிழைக் காதலித்தாரா என்று எனக்குப் புரியவில்லை. தமிழும் அவரும் அவ்வளவுக்கு ஒருவரை ஒருவர் அந்தளவுக்கு புரிந்திருந்தார்கள்.

ஒன்றைத் தவிர எல்லாம் புரிந்தது அவருக்கு, அந்த மூதாட்டியின் கடிதத்தில் இருந்து.  முதாட்டி கடிதம் போட முதல் கடிதத்தின் மேற் பகுதியில் போடும் ”உ” என்பது  ஏன் என்பது அவருக்குப் புரியவில்லை.  ஓரளவு விளக்கினேன். பின்பு இது மதம் கலந்த கலாச்சார பிரச்சனை என்று பெரிய வார்த்தையினைப் பாவித்து சமாளித்துக் கொண்டேன்.

இறுதியாய் சந்தித்த போது அவரே  முதாட்டிக்கு ”அன்புள்ள பாட்டி அம்மாவுக்கு” என்று தொடங்கி அன்புடன் மகளின் மகள் என்று முடித்து அருமையானதொரு கடிதம் எழுதியிருந்தார். ல ழ, ர ற, ன ண பிரச்சனைகளைத் தவிர பெரிய பிழைகள் இருக்கவில்லை.

அவரின் தமிழ் ஆர்வததால் நான் ‌நோர்வேஜிய மொழி கற்றுக் கொள்வது மறந்து போயிருந்தது. அதற்கு அவரின் அழகும் ஒரு காரணமாயிருக்கலாம்.

எது எப்படியோ தமிழ் என்னால் சற்று வளர்ந்திருக்கிறது என்றால் அதில் தப்பே இல்லை.


வாழ்க தமிழ்


.

வஞ்சகத்தின் பேரொளி


எனக்கு மனிதர்களுடன் பிரச்சனைகள் வருவது மிகவும் குறைவு. நாணல் போல் வாழ்வது அதற்குக் காரணமாயிருக்கலாம்.  இருப்பினும் என்னை வெறுப்பவர்கள் இருக்கிறார்கள். அதற்குக் காரணம் அவர்கள் என்னைப் புரிந்து கொள்ளவில்லை என்று எனது ஈகோ நினைத்துக் கொண்டிருக்கிறது. நானும் அதனுடன் வாதாடி அலுத்தோய்திருக்கிறேன். நானும் என்னை வெறுப்பவர்களுடன் சமரசம் செய்து கொண்டிருக்கலாம்,ஆனாலும் ஏனோ மனம் அவர்களுடன் சமரசம் செய்து கொள்ளவில்லை. ஈகோ என்னிடமும் இருக்கிறது. இருப்பினும் தற்போதைய காலங்களில் சமரசத்தையே விரும்புகிறேன்.

இது இப்படி இருக்க சிலரைக் கண்டால் மட்டும் மனம் ”அவதானம் சஞ்சயா அவதானம்” என்று சொல்லும். முட்டாள்தனமாக அதை நான் அலட்சியம் செய்த நாளில், வாழ்க்கை பெரும் பாடங்களை கற்பித்தது எனக்கு. அதைத் தான் பகிர நினைத்திருக்கிறேன் இன்று.

1986ம் ஆண்டு, சித்திரை மாதம், வெய்யில் சென்னை நகரத்தை எரித்துக் கொண்டிருந்த நாட்களில் ஒரு மேன்சன் ஒன்றில் தங்கியிருந்தேன். அந்த ‌அறைக்குப் பொறுப்பானவர் ஒரு இயக்கத்தில் முக்கியமானவராயிருந்தார். அவர் எனது நண்பனின் மாமா.

நான் இந்தியாவில் மொக்கை போட்டுத் திரிந்த காலங்களில் எங்கு எப்படிப் போவது, எந்த கல்லூரியில் அனுமதி கிடைக்கும், என்ன என்ன விண்ணப்பங்கள் நிரப்ப வேண்டும், எங்கு என்ன படம் எத்தனை மணிக்கு ஓடுகிறது, இலங்கையில் இருந்து கொண்டு வரும் பொருட்களை எங்கே விற்பது என்று ஒரு சிறியதொரு வீக்கிபீடியாவாக நான் இருந்தேன். (பீத்திகிறான் என்று நீங்கள் திட்டப்படாது .. ஆமா)

ஒரு நாள் நண்பனின் மாமா என்னிடம் ஒருவரை அறிமுகப் படுத்தினார். கண்டதுமே மனதுக்குள்  கவனம் ராஜா கவனம் என்று ஆயிரம் மணியடித்தது. அவரது கண்களில் வஞ்சகம், வஞ்சகமில்லாமல் குடியிருந்தது. அவரின் உடம்பின் மொழிகளும், அதிர்வுகளும் என்னை எச்சரித்துக் கொண்டிருந்தன.

நண்பனின் மாமா இவருக்கு தேவையானதை கட்டாயம் செய்து கொடுங்கள். மிகவும் வேண்டியவருக்கு தெரிந்தவர், மாலை சந்திக்கிறேன் என்று சொல்லியடி‌யே மறைந்து போக நானும் அவரும் தனித்து விடப்பட்டோம்.

”உங்களுக்கு என்ன உதவி தேவை” என்றேன்.
”பாடசாலைக்கு அனுமதிப் பத்திரம் நிரப்பி கொடுக்க வேண்டும்” என்றார்.
நாம் இருந்த இடத்தில இருந்து பஸ் எடுத்துப் போக வேண்டும் அவரின் பாடசாலைக்கு.
பசிக்குது என்றார் புதிய நண்பர்.
நாயரின் டீக்கடையில் இட்டலி கொட்டிக் கொண்டோம். எனது செலவிலேயே அதீதமாய் சாப்பிட்டார். நாயரிடம் கணக்கு இருந்ததால் தப்பினேன்.

எனது கையில் காசு இல்லை. அவரிடம் நீங்க தான் டிக்கட் எடுக்கணும் என்றேன். ம் கொட்டினார். ம் இல் விருப்பம் இருக்கவில்லை என்று புரிந்தது. பஸ் வர நீங்க பின்னால ஏறி டிக்கட் எடுங்க என்று சொல்லி முன்னால் ஏறிக் கொண்டேன். பஸ் சைதாப்பேட்டை வரை ஏறத்தாள அரை மணிநேரமாய் நிம்மதியாய் போய்க் கொண்டிருந்தது.  சைதாப்பேட்டை பாலத்தை தாண்டியதும் டிக்கட் பரிசோதகர்கள் கைகாட்டி பஸ்ஐ ஓரம் கட்டி டிக்கட் பரிசோதித்தார்கள். என்னிடம் கேட்ட போது நண்பரைக் காட்டினேன். அவர் ஒரு டிக்கட்ஐ மட்டும் காட்டினார். அது தனது என்றும் வாதித்தார்.

பரிசோதகர்களின் முன்னால் அவமானத்தில் கூனிக் குறுகி நின்றேன். கேலிப் பார்வைகள் உடலைத் துளைத்தன. அசுத்தத்தின் மேல் நிற்பது போல் அருவருப்பாயிருந்தது. தலை குனிந்திருந்தேன்.  என்னுடன் வந்தவர் மெதுவாய் மறைந்து போனார். நான்கு மணிநேரமாய் வெய்யிலில் காய வைத்து விடுதலை செய்தார்கள்.

சைதாப்பேட்டை பாலத்தை நடந்து கடந்த போது ”மவனே நீ அகப்பட்டால்” என நினைத்துக் கொண்டேன். மனம் வெய்யிலைப் போல் சூடாகவிருந்தது. ஆற்றுக்குள்  நின்றிருந்த கழுதைகள் என்னைப் பார்த்துச் சிரிப்பது போலிருந்தது.

பல மணிநேரம் நடந்து மாலை மேன்சன் வந்த போது நண்பனின் மாமா காத்திருந்தார். என்னைப் பார்த்ததும் எங்கே அவன் என்றார். சகலதையும் ஒப்புவித்தேன். கேட்டவர் ஒரு ஆறுதலுக்காக நாயரின் கடையில் மட்டன் பிரியாணி வாங்கித் தந்து போனார். பிரியாணி சுவைக்கவில்லை.

இரவு மொட்டைமாடியில் படுத்திருந்தேன். நட்சத்திரங்கள் கண்ணடித்துக் கொண்டிருக்க, அனுபவித்த அவமானம்  உடம்பில் பிசு பிசுத்துக் கொண்டிருந்தது. தவறு என்னில் இல்லை என்று என்னை ஆற்றிக் கொண்டபடியே தூங்கிப்போனேன். மறுநாள் காலை புதிதாய் விடிந்திருந்தது நான் முழித்துக் கொணட போது.

25 வருடங்களாகப் போகின்றன இது நடந்து.  இன்னுமும் அவரின் கண்களில் இருந்த வஞ்சகத்தின் பேரொளியை உணரக் கூடியதாயிருக்கிறது.

 மறக்க முடியாத அனுபவம் வந்த அந்த நண்பருக்கு இது சமர்ப்பணம் .


.

ஒரு பெருங்”குடி” மகனும் பெப்சி கோலாவும்

சில வருடங்களுக்கு முன் எனது தொழில் நிமித்தமாக ”ஸ்லோவாக்கியா” என்னும் நாட்டிற்கு செல்ல நேர்ந்தது. எப்போதும் தனியே பயணம் செய்ய விரும்புபவன் நான். அப்பொழுது தானே நான் விரும்பியபடி ஊர் சுற்றலாம். இம்முறை என்னுடன்  ஒரு மேலதிகாரியும் சேர்ந்து கொண்டார். அவருடன் அதிகம் பழக்கமிருக்கவில்லை.  இருப்பினும் அவரைப் பற்றி மற்றவர்கள் மூலமாக சற்று அறிந்திருந்தேன்.

நெருங்கிப் பழக மாட்டார், புகைத்தலை வெறுப்பவர், தனது கருத்தே சரி என்று நிரூபிக்க தலைகீழாகவும் நிற்கக் கூடியவர், ”வைன்” என்னும் பழரசத்தை மிகவும் விரும்பியும், ரசித்தும் உண்பார், புகைப்படக்கலையில் ஆர்வமுள்ளவர், அவரிடம் பொறுமை இருக்கிறதா என்பதை பூதக்கண்ணாடி வைத்துத் தான் தேட வேண்டும்  என்றெல்லாம் அறியக் கிடைத்தது. புகைப்படக்கலையை விட வேறு ஒன்றிலும் எமக்குள் ஒற்றுமையில்லை. தவிர எனக்கு  பெப்சி கோலாவை விட வேறு எந்த குடிவகைகளிலும் பெரீய பரீட்சயம் இல்லை. ஆண்டுக்கொருமுறை பழரசம் குடிப்பேன். அதுவும் ரசித்துக், நிறம், பதம் பார்த்து எல்லாம் குடிப்பது கிடையாது. தண்ணி குடிப்பது போல குடித்த கிளாசை கீழே (அதாம்பா மேசையில) வைத்தால் அடுத்த கிளாஸ் குடிக்க ஒருவருடமாகும்.. அப்பேர் பட்ட பெருங்”குடி” மகன் நான்.

எமக்கிடப்பட்ட வேலை அங்கு எமது கம்பனியின் கிளைக் ஒரு கந்தேரை ஆரம்பிக்க வேண்டும் என்பதாகும். நான் கணணி சம்பந்தமான வேலைகளையும் அவர் வேலையாட்களை தேர்வு செய்யவுமே போய்க் கொண்டிருக்கிறோம். இரண்டு மகள்களும் முத்தத்தால் வெற்றித் திலகமிட்டு அனுப்ப எனது பயணம் ‌தொடங்கியது.

மனிதர் என்னை விமான நிலையத்தில் கண்டதும் கையில் காபியுடன் வந்து காலை வணக்கம், நான் நேற்றிரவே வந்து அருகில் இருந்த விடுதியில் தங்கியிருந்தேன் என்றார். நான் மனதுக்குள  உங்க பணமா கம்பனி பணம் தானே என்று சொல்லிக் கொண்டேன். நாம் முதலில் ஓஸ்லோ போக வேண்டும், பின்பு ஹங்கேரி போய் அங்கிருந்து புகையிரதத்தில் ஸ்லோவாக்கியா போக வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தது எமக்கு.

விமானத்தில் அமர்ந்ததுமே நான் பல நாடுகளுக்கு போயிருக்கிறேன் ஆனால் ஸ்லோவாக்கியா போகவில்லை என்றார். நான் ஒரு மாதத்துக்கு முன் போயிருந்தேன் என்றேன். ஆகா என்று தலையாட்டினார். பின்பு உங்கள் ஊரில் என்ன பிரச்சனை, ஏன் யுத்தம் நடக்கிறது, அதைத் தீர்க்க முடியாதா? என்றார்.  நானும் மிக இலகுவாகாகத் தீர்க்கலாம் என்றேன். மனிதர் நிமிர்ந்து உட்கார்ந்து எப்படி என்றார்? இரு பகுதியினரும் கேட்பதை கொடுத்துவிட்டால் பிரச்சனை தீர்ந்து விடும் என்றேன். மனிதருக்கு நக்கல் புரிந்திருக்க வேண்டும் நமட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு அமைதியாகினார்.

ஓஸ்லோவில் Duty free கடைக்குள் அவரின் பின்னால் அலைந்து திரிந்தேன். வைன் போத்தல்களின் பக்கம் போக மனிதர் ஒவ்வொரு போத்தலாக எடுத்துப் பார்த்து, கண்ணைச்சுருக்கி போத்தலில் எழுதியிருந்ததை வாசித்தார்.  அதில் என்ன அப்படி இருக்கிறது என்று எனது வாய் உளரியது தான் தாமதம் மனிதர் வைன் விரிவுரையாளராகவே மாறி ஒரு சிறிய வைன் சொற்பொழிவையே ஆற்றினார். எனக்கு கண்ணைக் கட்டியது. நான் வைன் குடிப்பதில்லை என்றபடி நகர்ந்து கொண்டேன். விலையான வைன் போத்தல் ஒன்றை வாங்கி வைத்துக் கொண்டார்.

விமானத்தில் அமர்ந்ததும் நீ ஏன் வைன் குடிப்பதில்லை என்றார். நான் குடித்திருந்தால் எனது பாடசாலை அதிபரும், எனது அப்பாவும் சேர்ந்து என்னை உயிரோடு புதைத்திருப்பார்கள் என்றேன். அப்ப உனது அப்பாவும் குடிப்பதில்லையா என்றார். சற்று யோசித்தேன். அப்பா ஒரு போத்தலை கீழே வைக்காமலே தொண்டைக்குள் இறக்கிக் கொள்ளும் வல்லமை படைத்தவர் என்றால், அப்பாவுக்கு ஒரு சட்டம் உனக்கு ஒரு கட்டமா என மனித உரிமை பற்றி பேசத் தொடங்கிவிடுவார் என்பதால் இல்லை என்று தலையாட்டினேன். மனிதர் திருப்திப் பட்டவர் போல தலையாட்டினார்.

முதல் நாள் வேலை முடிந்த போது வா போய் சாப்பிடுவோம் என்றார். பிராட்டிஸ்லாவா என்னும் சிறிய நகரத்தை இரண்டு தரம் சுற்றி வந்து ஒரு உணவகத்தை தேர்ந்தெடுத்தார். போய் குந்தியதும் உபசரிப்பாளன் வந்தான் வைன் லிஸ்ட் எடுத்து வா என்று கட்டளையிட்டார். நான் ஒரு பெப்சி கேட்டேன். அவரின் வைன் லிஸ்ட் வந்தது. எதையே காட்டி என்னமோ கேட்டார். அவனும் ஆகா ஓகோ என்று  என்னமோ சொல்ல இவரும் தலையாட்ட அவனும் ஒரு கிளாஸ் இல் அதைக் கொண்டு வந்தான். எனக்கு சிவப்பு வைன் என்பது மட்டும் புரிந்தது. வந்ததும் மூக்கைச் சுற்றி இரு தடவை ஆட்டினார். ஆட்டும் போதே முகத்தில் மகிழ்ச்சி ‌மறைந்தது. டக் என்று மேசையில் வைத்தார். கிளாஸ்ஐ தொட்டுப் பார்த்தார். முகம் இன்னும் கறுத்தது. சற்றுப் பொறுத்து மீகிளாஸ் மீண்டும் தொட்டுப் பார்த்தார்.  உபசரிப்பாளனிடம் உனது மனேஜரை அழைத்த வா என்றார். மனேஜர் ஓடோடி வந்தார். சம்பாசனை தொடங்கியது.

”இது என்ன?” என்றார் நம்மவர்
”வைன்”
”இப்படியா அதை பரிமாறுவது?”

பின்ன என்ன பிளேட்டிலா ஊத்தித் தாறது என்று நான் நினைத்துக் கொண்டேன்.

மனேஜரும் ”ஏதும் பிழை இருந்தால் சொல்லுங்கள் நான் வேறு வைன் தருகிறேன்” என்றார்.
”இந்த வைன் குடிக்கும் பதத்தில் இல்லை. ரெட் வைன் குடிப்பதானால் 6 தொடக்கும் 8 பாகையில் வெப்பம் இருக்க வேண்டும் என்றார்.

எனது காதுக்குள் வடிவேலு ”ஆகா கிளம்பீட்டாய்ங்க” என்று சொல்வது கேட்டது.

மனேஜர் வைன்ஐ தொட்டுப் பார்த்து ”குளிர்கிறதே” என்றார்.
”ஆம்,” குளிர்கிறது ஆனால் 4 பாகை இருக்கும்” என்றார் நம்மவர்
எனக்கு பசிக்க ஆரம்பித்திருந்தது
”இதை விட பதமான குளிரில் கொண்டுவா” என்று கிளாசை மனேஜரிடம் நீட்ட அவரும் அதை பயபக்தியாக வாங்கிப் போய் சற்று நேரத்தில் திரும்பிவந்தார்.
அதை அவர் வாயில் வைத்ததுமே அவரின் முகம் போன போக்கில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று புரிந்தது. மேசையில் காசை வைத்தார். ஜக்கட்டைப் போட்டார், என்னையும் பார்த்தார். நானும் எழுந்து கொண்டேன்.
எமக்குப் பின்னால் மனேஜர் கெஞ்சுவது கேட்டுக் கொண்டிருந்தது.

இன்னுமொரு  உயர் ஜாதி ஹோட்டலுக்குள் புகுந்து  கொண்டார். அவனுக்கு வைன் பற்றி இவரை விட அதிகமாகத் தெரிந்திருந்தது. மனிதர் அவனுடன் ஐக்கியமாகிவிட்டார். அவன் ஊத்த இவர் குடிக்க, இவர் குடிக்க அவன் ஊத்த இன்று வைன் ஆறாக ஓடி இறங்கிக் கொண்டிருந்தது அவரின் வயிற்றுக்குள். நான் ஆட்டுத்துடையும் பெப்சியுடனும் திருப்திப் பட அவரின் பில் 100 டாலர்களைத் தாண்டியது. ஹோட்டலுக்கு வந்ததும் வா பாருக்கு போவோம் என்றார். அய்யா சாமீ ... ஆளை விட்டால் காணும் என்று எனது அறைக்கதவை இறுக்கமாய் பூட்டிக் கொண்டேன். எனது கனவிலும் மனிதர் வைன் குடித்துக் கொண்டிருந்தார்.

அடுத்த நாளும், அதற்கடுத்த நாளும், அதற்கடுத்த நாளும் வைன், வைன் என மனிதர் மூழ்கித் திரிந்தார். ஆனால் வேலை நேரத்தில் வேலையில் மிக அவதானமாய் இருந்தார்.

இறுதி நாள் எல்லோருக்கும் விருந்து நடந்தது. 13 பேர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம் மனிதர் உபசரிப்பாளனுடன் உணவகத்துக்கு கீழ் இருந்த வைன் சேகரிக்கும் இடத்திற்குப் போய் மிகவும் சிறந்த வைன் எடுத்து வந்தார். அப்படி எல்லொரையும் வைன் சேகரிக்கும் இடத்திற்குப் போக அனுமதிக்க மாட்டார்களாம். ஆனால் தான் போய் வந்ததாக பெருமைப்பட்டார். நானும் வளமை போல தலையாட்டினேன்.

அங்கு வந்திருந்த எல்லொரும் (என்னைத் தவிர) அவர் தெரிவு செய்த வைன்ஐ பற்றி புகழ்ந்து தள்ள மனிதர் பல  வைன் சொற்பொழிவுகளை ஆற்றினார். எனக்கு வைன் குடிக்காமவே தலை சுற்றிக் கொண்டிருந்தது.இது ஸ்லோவாக்கிய நாட்டு வைன்னுக்கு சமர்ப்பணம்.


.

தீரா வலி தின்றவர்கள்

இன்று ஒரு கடைக்குப் போயிருந்தேன். பெரியதொரு கடை. ஆயிரக்கணக்கில் மக்கள் கடைக்குள் தம் விருப்பத்துடன் தொலைந்து போய்க்கொண்டிருந்தார்கள். எனக்கு கடை என்றாலே ஒரு வித அலர்ஜி பல காலமாய் இருந்து வருகிறது. ஆனால் இன்று அந்த அலர்ஜியை என்னால் உணரமுடியவில்லை. குழந்தைகளுடன் கடைக்குள் மகிழ்ச்சியாய் அலைந்து கொண்டிருந்தேன்.

எல்லோரும் புன்னகைக்க கூட நேரமில்‌லாமல் கடந்து போயினர். நானும் தான். இறுதியில் ஒரு இடத்தில் நின்றிருந்தேன், என்னைச் சுற்றிப் பார்த்தபடியே. அப்போது தான் கண்ணில் பட்டது அந்த விளம்பரம்.

இரு ஆண்களின் படங்கள் போடப்பட்டிருந்தது. அவர்களுக்கு 25- 30 வயதிருக்கலாம். விளம்பரத்தில், இவர்களைக் கண்டீர்களா? இவர்களை தேட உதவுங்கள் என்றிருந்தது. திடீர் என மனம் எல்லாம் கனத்துப் போனது. ஊரே நத்தாருக்கு தயாராகிக் கொண்டிருக்கும் போது எங்கோ ஒரு இடத்தில் ஓரு தாய், மனைவி, குழந்தைகள், சகோதரங்கள் என யாரோ மெதுவாய் தங்களின் இழப்பை மென்று தின்று கொண்டிருக்கிறார்கள். இழப்புக்களின் நெருக்க்தைப் பொறுத்து அவை செரிக்கும் காலமும் நீண்டு போகும்.

தொலைந்தவரும், தொலைத்தவரும் ஒருவரை ஒருவர் தேடிக் கொண்டிருக்க, அவர்களின் வாழ்க்கையில் இழப்பின் வழி ஒரு நூலைப்போல் எஞ்சியிருக்கும் காலமெல்லாம் மெலிந்து, நீண்டு வந்து கொண்டேயிருக்கும். காலம் மட்டும் சகலதையும் அறிந்திருந்தாலும் மெளனமாய் வழிந்தோடிக் கொண்டிருக்கும்.

சிலருக்கு  தொலைந்தவர் மீண்டும் கிடைக்கலாம். பலருக்கு இந்தப் புதிரின் முடிவு கிடைப்பதில்லை அவர்களும் இழப்பின் பிசு பிசுப்பை வாழ்க்கை முழுவதும் உணர்ந்தபடியே அலைந்துகொண்டிருப்பார்கள்.

இப்படியான வலிகளை அதிகமாக மனிதர்களே மற்ற மனிதர்களுக்குக் கொடுக்கப்படுகிறது என்பது தான் விசித்திரமானது.  எப்படி ஒரு மனிதனால் இது இயலுகிறது? இதற்கு என்ன காரணம் என்றெல்லாம் சிந்தித்தாலும் தீர்க்கமான ஒரு பதில் ஒன்றும் இன்று வரை எனக்குக் கிடைக்கவில்லை.

எனக்கு இன்று வரை இப்படியான வேதனைகள் ஏற்பட்டதில்லை. ஏற்படக் கூடாதென்பதே எனது விருப்பமும். ஆனால் எனது வாழ்வில் சில மணிநேரங்களே வந்து போன தற்காலிக இழப்புக்கள் நிரந்தர இழப்பின் வீரியத்தை காட்டிப் போயிருக்கின்றன.

எனது இளைய மகளுக்கு 3 வயதிருக்கும் போது ஒரு தடவை டென்மார்க் போயிருந்தோம். ஒரு கடையினுள் நாம் அனைவரும் எங்கள் கவனத்தை கடையில் இருந்த உடைகளில் செலுத்தியிருந்த போது காணாமல் போனாள் எனது பூக்குட்டி. அவளைக் காணவில்லை என்றறிந்து தேடத் தொடங்கும் போதே மனதுக்குள் ஒரு வித பாரம் மெதுவாய் பரவத் தொடங்கியது. கடையினுள் இல்லை. ஓடும் படிகளில் கீழ் இறங்கியிருப்பாளோ என்று கீழிறங்கி ஓடினேன். அங்குமில்லை. மனதின் கனம் அதிகரித்துக் கொண்டே போனது. கற்பனை என்னை விட வேகமாக ஓடித்திரிந்தது. வெளியில் ஓடினேன். அங்குமில்லை. மனம் துடி துடிக்க மேலே‌ போன போது மனைவியும், மூத்தமகளும் கூட அவளைத் தேடியலைந்து கொண்டிருந்தார்கள். எமக்கருகில் ”க்ளுக்” என்னும் சிரிப்புச் சத்தம் கேட்ட அருகில் இருந்த உடைகளை அகற்றி அதற்குள் பார்த்தேன். கடவுள் குந்தியிருந்து என்னைப் பார்த்து கண்களால் சிரித்துக் கொண்டிருந்தார். அள்ளி எடுத்த போது இழப்பின் வலியும், உறவின் அருகாமையும், பிரிவின் வலியும் புரிந்திருந்தது.

இதே போல் இன்னுமோர் நாள் மனைவியும் , மூத்த மகளும் பயணம் போயிருந்தனர். நானும் பூக்குட்டியுமே வீட்டில் இருந்தோம். வெளியில் விளையாட என சொல்லிப் போன பூக்குட்டியை காணவில்லை. எங்கு தேடியும் அவள் கிடைக்கவில்லை. அரை மணிநேரமாகியது, அதுவே இரண்டு மணிநேரமாகிய போது என்னால் சிந்திக்கவே முடியவில்லை. எனவே நண்பர் ஒருவரை அழைத்தேன். அவரும் தேடத் தொடங்கினார். மாயமாய் மறைந்து போயிருந்தாள் பூக்குட்டி. இன்னும் சில நண்பர்களையும் அழைத்தேன். என் எமது குடியிருப்புப் பகுதிக்குள் நடந்த படியே தேடிக் கொண்டிருந்தேன். திடீர் என எனக்கு முன்னால் நடந்து வந்து கொண்டிருந்தாள். அம்மா என்று  பெருஞ்சத்தமாய் அழைத்தபடியே ஓடிப்போய் அள்ளி எடுத்துக் கொண்டேன். என் கண்களில் கண்ட கண்ணீரை கண்டு ”ஏன் அழுகிறாய் என்றாள்” உன்னைக் காணவில்லை என்று பயந்து விட்டதாகக் கூறிய போது சிரித்தபடியே தான் அக்காவின் நண்பியுடன் அருகில் இருந்த வீட்டில் இருக்கும் முயலுக்கு இலைகளை சாப்பிடக் கொடுத்துக் கொண்டிருந்ததாகச் சொன்னாள்.

அன்றிரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை. முன்று மணி நேரப் பிரிவு தான் ஆயினும் அதன் வீரியம் பயங்கரமானது.  அவளை அணைத்தபடியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். இடையிடையே மனம் நடுங்கிக் கொண்டிருந்தது.

என்னைப் போலவே நான் விளம்பரத்தில் கண்டவர்களையும் அவர்களின் குடும்பத்தினர் தேடித்திரிவார்கள். ஒரு பதில் கிடைக்கும் வரை அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என என்னால் நன்றாகவே புரிந்து கொள்ளக்கூடியதாயிருக்கிறது.

இவர்களைப் போலத்தானே  எமது நாட்டிலும் காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் அலைந்து கொண்டிருப்பார்கள். எம்மினத்தில் மட்டும்மல்ல பெரும்பான்மையினத்தவர்களிடையேயும் காணாமல் போனவர்கள் அதிகமாய் இருக்கலாம். வலி என்பது இனம் பார்த்து வருதில்லையே. அது எல்லோருக்கும் பொதுவானது.

நாம் வலிகளால் ஒற்றுமையாயிருந்தாலாவது ..அது எமக்கு பெருமை தான்.


இது தொலைந்தவர்களுக்கும் தொலைத்தவர்களுக்கும் சமர்ப்பணம்.


.

261 வயது இசைக்கருவியுடன் ஒரு ஞானசூன்யம்

லண்டன் செல்லும் விமானத்தில் குந்தியிருந்தேன்.  எனக்குப் பக்கத்தில் இருந்த இரு இருக்கைகளும் காலியாயிருந்தன. மனம் மிக மகிழ்ச்சியாய் இருந்தது. கணணியை மடியில் வைத்து இயக்கி லண்டன் விமான நிலைய கால நிலையைப் பார்த்தேன். அதிக பனிவீழ்ச்சி காரணமாக விமானநிலையம் காலையில் இருந்து மூடப்பட்டிருந்ததாகவும் தற்போது திறக்கப்பட்டிருப்பதாகவும் ஆனால் எந்நேரமும் மூடப்படலாம் என்றுமிருந்தது. நான் பிரச்சனையின்றி போய்ச் சேர வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் ஒரு ஆள்  உயரமான வயலீன் போன்றதொரு இசைக்கருவியை அது போன்றதொரு  பெட்டியில் வைத்து துக்க முடியாயாமல் துக்கிக் கொண்டு வந்தார்.

என்னடா இது விசர்த்தனம் என்று நினைத்துக் கொண்டேன். அவர் அதை எப்படி இருக்கைக்கு மேலுள்ள பொதிகள் வைக்குமிடத்தில் வைக்கப் போகிறார் என்று  போசித்தக் கொண்டிருந்த போது என்னருகில் வந்து எனக்கு அருகாமையில் காலியாக இருந்த ஒரு இருக்ககையில் பெரிய வயலினை வைத்தார். அதற்கருகில் இருந்தார்.

இதென்னடா கூத்து.. இவர் ஒரு இருக்கையை வயலினுக்கு கொடுக்கிறார், விமானப் பணிப் பெண்ணும் ஏதும் கதைக்காமல் கடந்து போகிறாளே என்று ஆச்சரியப்பட்டேன்.

விமானி, விமானம் புறப்படப் போகிறது என்றும், ஆனால் நாம்  ”கட்வீக்” விமானநிலையத்தில் இறங்குவது நிட்சயமில்லை என்று பயமுறுத்திக்கொண்டு விமானத்தைக் கிளப்பும் முயற்சியில் மும்மரமாயிருக்கும் போது விமானப்பணிப் பெண் என்னருகில் இருந்தவருக்கு குழந்தைகளை விமான இருக்ககையுடன் இணைக்கும் பட்டி ஒன்றைக் கொடுக்க எனது ஆச்சரியம் அளவு கடந்தது. மனிதர் அதை வாங்கி இருக்கையுடன் அந்த  பெரீய வயலினை இருக்கையுடன் சேர்த்திணைத்தார்.

எனது ஆச்சர்யம் கட்டுக்கடங்காதிருந்தது. மனிதரைப் பார்த்தால் 20 - 23 வயதிருக்கும். சில நாள் தாடியும், என்னை விட மிக மிக அதிகமான தலைமயிருடனும் இருந்தார். நோர்வேஜிய புத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்ததால் அவர் நோர்வேஜியன் என்று அறிந்து கொண்டேன்.

எனக்கு சங்கீதம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்குமளவு அறிவு தான் இருக்கிறது. தவிர ஒரு விதமான இசைக்கருவியையும் இசைக்கவோ, மற்றவர்கள் கேட்கும் படியாக பாட்டுப்படிக்கவோ எதுவும் தெரியாத ஒரு ஞானசூன்யம் தான் நான். ஆனால் மனதை மயக்கும் இசையில் கசிந்து கரைந்து போகும் மனம் இருக்கிறது.


தொண்டையை கனைத்துக் கொண்டு இது என்ன பெரிய வயலினா? என்று ஒரு போடு போட்டேன்.  எனது நான்கு சொற்களிலேயே அவர் எனது சங்கீத அறிவை அறிந்து கொண்டது போலிருந்தது  மனிதர் பார்த்த பார்வை.

இது வயலின் பெரிய வயலினும் இல்லை, சிறிய வயலினும் இல்லை என்று சொன்னார். நானும் விடாமல் அப்ப இதற்கு என்ன பெயர் என்றேன். எனது ஆர்வம் மனிதருக்கு பிடித்துப் போயிருக்க வேண்டும்.

இதன் பெயர் ”செல்லோ” (Cello) என்றும், இது மிகவும் பழமையான இசைக்கருவி என்றும் இது வயலினைப் போன்றது என்றும் இதை தனியே இசைக்கவும் முடியும், ஏனைய இசைக்கருவிகளுடன் சேர்ந்தும் இசைக்கலாம் எனவும் இது 1600ம் ஆண்டளவில் அறிமுகப்படுத்தப்பட்ட இசைக்கருவி என்று விளக்கினார்.  கோயில் மாடு மாதிரி தலையாட்டினேன். அத்துடன் என்னிடமுள்ள ”செல்லோ” மிகவும் பழமையானது என்றார். எத்தனை வயது இருக்கும் என்று கேட்டேன். 1749ம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது என்றும், தான் அதை அதிக விலை கொடுத்த லண்டனில் நடந்த ஒரு ஏலத்தில் வாங்கியதாகவும்  சொன்னார். அத்துடன் செல்லொ என்னும் சொல் ”வியலான்செல்லலோ” என்னும் இத்தாலிய சொல்லில் இருந்து வந்தது என்றார். சிம்பொனி ஆர்கஸ்ராவில் 8 - 12 பேர்வரை செல்லோ வாசிப்பார்கள் என்றும் சொன்னார்.

இந்த இசைக்கருவியின் அடிப்பக்கம் 2 -3 மில்லிமீற்றர் மொத்தமானது என்றும் அதுவே இதன் இசையின் தரத்தை நிர்நயிக்கிறது என்றும் சொன்னார். தனது ”செல்லோ”வில் சிறு சிறு திருத்தங்கள் செய்திருப்பதாகவும், ஆனால் திருத்த வேவைலைகள் மிகவும் சிரமமானவை என்றார்.

அவரின் பேச்சில் இருந்து அவர் இசை பற்றி மிகுந்த அறிவு உள்ளவர் போலிருந்தது. எனவே உங்கள் தொழில் ”செல்லோ” இசைப்பதா? என்றேன்.  ஆம், இல்லை என்றபடி சிரித்தார். புரியவில்லையே என்றேன். தான் நோர்வேயின் உலகப் பெயர் பெற்ற பல்கலைக்கழகத்தில் (NTNU) இல் செல்லோ பற்றிய ஆராய்ச்சி செய்து வருவதாகவும், அதேவேளை இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் பகுதிநேர விரிவுரையாளராக கடமையாற்றுவதாகவும் சொன்னார். ஒரு ஞானசூனியம் ஒரு இசைமேதைக்கு அருகில் உட்கார்ந்திருக்கிறது என எண்ணிக் கொண்டேன். பெருமையாயும் இருந்தது.

இப்போது புரிந்தது ஏன் அவர் அதை இவ்வளவு கவனமாக கையாளுகிறார் என்று. எனது எண்ணத்தை புரிந்து கொண்டவர் போல சொன்னார், இதை விமானப்பொதிகளுடன் அனுப்ப தான் சம்மதிப்பதில்லை என்று. ஏன்? என்றேன்.  பணியாளர்களுக்கு இதன் அருமை புரிவதில்லை எனவே கவனமாகக் கையாள மாட்டார்கள் என்றார். தவிர அதனால் தான் விலை என்றாலும் விமானத்தில் இதற்கென்று ஒரு தனி ஆசனம் ஒதுக்கிக் கொள்கிறேன் என்றார். தயைாட்டினேன். தனது செல்லோவை தான் ஒரு சிறு குழந்தைபோல பராமரித்து வருவதாகக் கூறினார். அதை நானும் அவதானித்தேன் என்றேன். சேர்ந்து சிரித்தோம்.

விமானம் மேலெழும்பி வெள்ளை முகில்களுக்கூடாக பறந்து கொண்டிருந்தது. நான் முதன்   என் வாழ்வில் முதன் முதலில் ஒரு இசைக்கருவின் அருகாமையுடன்  பயணம் செய்கிறேன். எனது இசையறிவின் அளவற்ற ஆழத்தைப் புரிந்து கொண்டது போல அந்த இசைக் கருவி மெளனமாகவே இருந்தது. நானும்  அதன் அருகாமையின் பெருமையை உணர்ந்தபடி, அடிக்கடி அதை கடைக்கண்ணால் பார்த்தபடி பயணித்துக் கொண்டிருந்தேன். அந்தப் பெட்டியினூடாக ஒரு வித இசை கசிந்து என் காதுகளில் வளிந்தோடுவது போல் இருந்தது. மெதுவாய் கண்ணை மூடிக் கொண்டேன். காற்றில் பறப்பது போலிருந்தது.

விமானம் ”கட்வீக்” இல் இறங்கியது. வெளியில் 10 சென்டிமீற்றர் பனி கொட்டியிருந்தது. இந்த 10 சென்டிமீற்றர் பனி தான் விமானநிலையம் மூடப்படுவதற்கான காரணம் என்று என்னைப் பார்த்துச் சொல்லிச் சிரித்தார். அவரின் நகைச்சுவை புரிந்ததால் நானும் சேர்ந்து சிரித்தேன். நேர்வேயில்  150 சென்டிமீற்றர் பனி கொட்டினாலும் விமான நிலையம் இயங்கிக் கொண்டிருக்கும் என்பதே அவரின் நகைச்சுவையின் கருத்தாய் இருந்தது

விடைபெற்றுக் கொண்டோம். கடவுச்சீட்டு பரிசோதனை நிலையத்தை கடந்த போது நன்பர் தனது முதுகில் ”செல்லோ”வை சுமந்து வந்து கொண்டிருந்தார். அந்தக் காட்சி ஆபிரிக்கப் பெண்கள் தங்கள் குழந்தைகளை முதுகில் சுமந்து திரிவது போலிருந்தது எனக்கு. புன்னகைத்துக் கொண்டேன்.

என்னைச் சுற்றி எப்பவும் ஏதோ வித்தியாசமாய் நடந்து கொண்டே இருக்கிறது. நன்மையாயும், தீமையாயும். இன்றைய அனுபவமும் அப்படியே.

சென்ற வருடமும் இந்த நாட்களில் வாழ்க்கையில் மறக்கவே முடியாத, மறக்கக் கூடாத ஒரு அனுபவம் நடந்தது. வீதியில் போகும் போது மிதிபட்ட அசுத்தத்தைப் போல் அதன் பிசுபிசுப்பு இன்னும் என்னுடன் வந்து கொண்டே இருக்கிறது. இன்னும் பல வருடங்கள் செல்லலாம் அதை எழுதும் பக்குவம் வர.

எது எப்படியோ? இன்றைய நாள் அழகானதே.


.

தொழில் பக்தியும் முக்தியும்

 இன்று வலை மேய்ந்த போது கண்ணில் பட்டது ”வேலைத்தளங்களில் வேலையை மட்டும் செய்கிறார்களா?” என்னும் பதிவு. அதன் விளைவாக எனது தொழில் இடங்களில் நடந்த சில சம்பவங்களை பகிர்வோம் என நினைத்ததன் விளைவு தான் நீங்கள் வாசிப்பது.

ஊரில் எனது ஞாபகத்தில் இருக்கும் மனிதர் இவர். இவர் என்னுடன் வேலை செய்யவில்லை. ஆனால் அவர் ஒரு இடத்தில் வேலை செய்தார். அப்போ நான் பாடசாலை மாணவன்.  கறள்கட்டிய சைக்கிலில் வருவார். சுருட்டுடன் திரிவார். கிட்டப் போய் கதைத்தால் காலையில் குடித்த சோமபானத்தின் மணம் கமளும். எது செய்ய வேண்டுமென்றாலும் ஒரு பிளேன் டீ வாங்கிக் கொடுக்க வேண்டும். அதிகாரிகளின்  எடு பிடி வேலைகளையும் வேறு சிறு சிறு வேலைகளையும் செய்வார். ஆனால் அரசாங்கம் சம்பளம் கொடுத்தது. ஊருக்குப் போன போது சந்தித்தேன். வயதாகி ஓடுங்கிப் போயிருந்தார். கண்டதும் பெயர் சொல்லி அழைத்து ஆச்சர்யப்படுத்தினார். அப்பவும் சோமபானத்தின் மணம் கசிந்து கொண்டிருந்தது. வாழ்க எங்கள் ........ அண்ணண்.

அடுத்தவர் என்னுடன் வேலை செய்தவர். ஒரு நோர்வேஜிய நாட்டுப் பிரஜை. அவரின் பிரச்சனை என்னவென்றால்  எமது வேலைத்தளம் தனக்குச் சொந்தமானது என்று நினைப்பது தான். அதற்கும் ஒரு காரணம் இருந்தது. 1970களில் எனது நண்பரின் தகப்பனார் பொருளாதாரச் சிக்கலினால் தனது நிறுவனத்தை ஒருவருக்கு விற்றாராம். அவரின் தகப்பன் விற்றது எங்களின் நிறுவனத்தை. வாங்கியது இப்போதைய உரிமையாளர். ஆனால் எனது நண்பர் மட்டும் தகப்பனின் முன்னை நாள் சொத்தை இப்பவும் உரிமை கொண்டாடுவது போல கதை விடுவார். அதை அப்படி இப்படி மாற்றம் செய்‌ய வேண்டும் என்பார். அதை பெரிதாய் விவாதிக்கவும் செய்வார். பழைய விசுவாசத்திற்காக உரிமையாளர்கள் இவரை பொறுத்துக் கொண்டார்கள் என்றே சொல்லலாம். தற்போது ஓய்வு பெற்று வாழ்கிறார்.

நேர்வேக்கு வந்த ஆரம்ப வருடங்களில் ஒரு விடுதியில் (hotel) இல் வேலை செய்தேன். விடுதியின் பொறுப்பாளருக்கு 2 சிறிய கடைகள் இருந்தன. சில நாட்களின் பின் பொறுப்பாளரின் அறைக்கு அழைக்கப்பட்டு நாளை முதல் அவரின் கடையில் என்னை தொழில் புரியக் கேட்டார். தலையாட்டினேன். காலையில் 6 -9 மணிவரை கடையில் வேலை பின்பு 9 -16 மணி வரை விடுதியில் வேலை. கடையில் இருந்து விடுதிக்கு வர 30  நிமிடங்கள் எடுக்கும். ஆனால் பொறுப்பாளர்  அதை கண்டு கொள்ள மாட்டார். அதாவது எனக்கு 30 நிமிட சம்பளம் இலவசம். கடையில் காலையில் நான் நிற்கும் போது ஒரு வயதான பெண்ணும் நிற்பார். பலவிதமான பொறுட்கள் வாகனத்தில் வரும். வாகனத்தை அந்த பொறுப்பாளரே செலுத்தினார்.  திடீர் என பொறுப்பாளரை வேலையில் இருந்து நிறுத்தினார்கள். எனக்கு பாவமாய் இருந்தது. அதன் பின்பான ஒரு நாளில் எமது பொறுப்பாளர் விடுதிக்கு என்று பொறுட்களை வாங்கி தனது கடையில் வைத்து விற்பனை செய்ததனாலேயே வேலை நிறுத்தம் செய்யப்பட்டார் என அறிந்தேன். அதற்குப் பின்னான சில வாரங்கள் எனக்கு இலவசமாக வந்த 30 நிமிடச் சம்பளம் நின்று போனது.

நான் கணணித்துறையில் தொழில் செய்திருந்த ஒரு நிறுவனத்தில் எனக்கு மேலதிகாரியாக ஒருவர் இருந்தார். மனிதர் எனக்கு நல்லவராய் தெரிந்தாலும் மற்றவர்களுக்கு ஒரு அடாவடியான மனிதனாயே தெரிந்தார். அவரை பலரும் வெறுத்தார்கள். அவரும் அதை அறிந்திருந்தார். அந்த நாட்களில் "I Love You" என்றும் வைரஸ் ஒன்று வெளி வந்தது. அது ஒரு மின்னஞ்சலின் இணைப்பாக வந்து மற்றவர்களுக்குப் பரவும். எனது மேலதிகாரிக்கும் ஒரு மின்னஞ்சலில் அது வந்திருக்கிறது. அவருக்கும் காதல் ஆசை வர, அவர் அதை கிளிக் பண்ண, எமது நிறுவனத்துக்குள் புகுந்தது அந்த வைரஸ். சில நிமிடங்களில் எமது நிறுவனம் செயலிழந்தது. அதற்கிடையில் அவராகவே தனது பிழையை உணர்ந்து என்னிடம் வந்து நிலமையை விளக்கினார். பிரிதாபமாக கெஞ்சும் குரலில் பரிகாரமும் கேட்டார். அவரின் பெயரை வெளிவிடாமல் அடக்கி வாசித்து பிரச்சனையை இரண்டு நாட்களின் பின் தீர்த்துக் கொண்டோம்.அதன் பின் அவர் எனக்கு பல சலுகைகள் தந்தது வேறு கதை.

அதே நிறுவனத்தில் எனக்கு மேலதிகாரியாக வந்தார் இன்னொருவர். அவரின் இம்சையோ வித்தியாசமானது. அவரின் தொழில் கணணித்துறையை நிர்வகிப்பதுடன் நிதித் துறைக்கு பொறுப்பாகவும் இருந்தார். கணணித் துறையில் முக்கிய முடிவுகளை எடுப்பார். நான் மிகுதியை கவனித்துக் கொண்டேன். ஆனால் இந்த மனிதருக்கு புதிய புதிய செல்லிட தொலைபேசிகளிலும் (Mobile Phone) புதிய புதிய  கணணிகளிலும் தீராக் காதல் இருந்தது. ஏறத்தாள மாதத்திற்கு ஒரு செல்லிட தொலைபேசியும், கணணியும் அவருக்குத் தேவை. எவ்வித தலைபோகும் முக்கிய வேலை இருந்தாலும் அவர் தனது கணணியையும் செல்லிட தொலைபேசியையும் தலைபோகும் பிரச்சனையாக்கிவிடுவார். நானும் மேலதிகாரியை பகைப்பான் ஏன் என்று அடக்கியே வாசித்தேன். ஆனால் அவரிடம், உங்களுக்கு புதிய புதிய கணணியும் செல்லிடதொலைுபேசியும் தர முதல் நான் அவற்றை பரிசீலனை செய்து பார்த்தபின்பே தருவேன் என்றேன். எதிர்ப்பின்றி நீ சொல்வது நியாயம் என்றார்.  அந்த நிறுவனத்தில் தொழில் புரிந்த கடைசி 4 -5 வருடங்களும் எனது கையில் மாதத்துக்கு ஒரு புதிய செல்லிட தொலைபேசியும், சந்தைக்கு வந்து புதிய கணணிகளும் தாராளமாய்ப் புழங்கின. பலருக்கு நான் புதிய செல்லிடபேசிகளுடன் திரிந்ததற்கான காரணம் இப்போது விளங்கக் கூடும். எனவே அவை எல்லாம் எனது சொந்தப் பணத்தில் வாங்கியதாக  அவர்கள் நினைத்திருக்கக்கலாம்.  அதற்கு நான் பொறுப்பாக முடியாது. இப்போ ஒன்றரை வருடமாய் ஒரு செல்லிட தொலைபேசியுடன் அலைகிறேன்.

இன்‌னுமொரு இடத்தில் கொள்வனவுத் துறை அதிகாரியாக ஒருவர் இருந்தார். மனிதரின் வாழ்க்கையின் இலட்சியம்  கோப்பி குடிக்கும் ”கப்”கள் சேகரிப்பது. அதனிலும் முக்கியம் அந்த ”கப்” இல் ஏதாவது ஒரு நிறுவனத்திக் இலட்சனை இருக்க வேண்டுமென்பது. எங்கு சென்றாலும் அவரின் முக்கிய இலக்காக இவைகளே இருக்கும்.  விற்பனைக் கண்காட்சிகளுக்கு சென்றால் மனிதர் ஒரு பெட்டி நிறைய  ”கப்” களுடன் வருவார். அவரின் கந்தோரினுள் பல நூற்றுக் கணக்கில் கோப்பி  ”கப்” கள் இருந்தன. அழகாக அடுக்கி வைப்பார்.  மாதத்தில் இரு நாட்கள் அவற்றை தூசு தட்டி மீண்டும் அழகாக அடுக்குவார். அதுவும் வேலை நேரத்திலேயே. எமது நிறுவனத்தின் உரிமையாளரின் மிக நெருங்கிய நண்பர் என்பதால் அவர் தனது பொழுது போக்கை வேலையுடன் செய்து வந்தார். தட்டிக் கேட்பதற்கு எவருக்கும் ”தில்” இருக்கவில்லை. அதனால் அவர் ”தில்”லுடன் திரிந்தார்.

இது இப்படியாயிருக்க எனது நண்பரின்  நண்பரொருவர் சுத்தத் தமிழர். அவர் காட்டிய கூத்து பெரீய கூத்து. அவரின் தொழிட்சாலையில் அவருக்கு  கஸ்டப்பட்டு வேலை செய்பவர் என்னும் பெயர் இருந்தது.  எனவே அவர் பெயரும் புகழுடனும் வாழ்ந்திருந்தார், தொழிட்சாலையில். திடீர் என அவரை தொழிட்சாலையால் நீக்கியதாக் கூறினார்கள். காரணம் அறியக் கிடைத்தது. மனிதருக்கு ஆள் அரவமில்லாத இடங்களில் புகுந்து போய் குந்தியிருந்து வெல்டிங் செய்யும்  வேலை. அன்றும் அப்படித்தான் வேலை செய்திருக்கிறார். அவரின் கஸ்டகாலம் அவரின் மேலதிகாரி அவர் வேலை செய்யுமிடத்திற்கு வந்த போது பெருஞ்சத்தமாய் குறட்டைஒலி கேட்டிருக்கிறது. அதுவே அவரின் வேலைக்கு ஆப்பு வைத்தது. இதை வைத்து அவரின் நண்பர்கள் அவரை பண்ணிய கேலி.. அப்பப்பா... கொடுமையிலும் கொடுமை அது.

இப்படி பல கதைகள். என்னைப் பற்றியும் யாரும் எழுதக் கூடும். ஒரு பிரின்டருக்கு 2 மணிநேரமாக மின்சாரம் கொடுக்காமல் அதைத் திருத்திய பேரறிஞனல்லவா நான்..


வாழவிடுங்கள் மற்றவரை


நம்மவர்களில் சிலருக்கு இன்னொருவரின் வாழ்க்கையை ரணப்படுத்திப் பார்ப்பதில் இருக்கும் ஆனந்தம் தமது செய்கையை சுயவிமர்சனம் செய்துகொள்வதில் துளியளவேனும் இல்லை. எனது நண்பர் ஒருவர் அனுபவித்த, அனுபவிக்கும் அவஸ்தயைப் பற்றிய க‌தை தான் இது.

அவர் எனக்கு அறிமுகமாகிய விதமும் சற்று வித்தியாசமானதே அம் மனிதரைப் போல. நண்பர் ஒருவர் தனது நண்பர் ஒருவருக்கு மாலை வரை தங்க இடம் வேண்டும் என்று கேட்டார். "அனுப்புங்கள்" என்ற போது 6 அடி உயரத்தில் கறுப்பு நிற உடம்புடனும் அதே நிற ஒரு பையுடன் வந்து இறங்கினார். பார்த்ததும் பிடித்துப்போயிற்று. ”தம்பிட  பெயர் என்ன?” என்ற பொழுது ஒரு உபகரணத்தின் பெயரைச் சொன்னார். என்னய்யா நக்கலா? என்றேன். ”இல்லை அண்ணணா.. சத்தியமா அது தான் தனது பெயர்” என்றார். நம்பினேன்.

தேத்தண்ணி குடித்தபடி தான் ஏன் வீடு ‌தேடுகிறார் என்னும் காரணத்தை விளக்கினார். இரத்த உறவுடன் தங்கியிருந்திருக்கிறார். பிரச்சனை துளிர் விட, இவருக்கு ரோஷம் பிய்த்துக்கொண்டு வர, வெளியேறி நண்பரின் உதவியுடன் தற்போது வீடு தேடிவருகிறார் என்றார்.

தங்குவதற்கு இடம் எடுத்துத் தாங்கண்ணா என்று கேட்டார். நான் தங்கியிருந்த வீட்டுக்காரிடம் கேட்டேன். எங்களுடனேயே தங்கட்டும் என்றார்  அவர். இருவராக இருந்த நாம் மூவராக மாறியிருந்தோம் சில மணி நேரங்களுக்குள்.

இதற்கிடையில் அவரின் சரித்திரம் பற்றி எனக்கு மிகவும் விளக்கம் அளித்திருந்தார் புதிய நண்பர். எமக்குள் 10 - 13 வயது வித்தியாசமிருக்கும். வாய்க்கு வாய் அண்ணா அண்ணா என்றார். நோர்வேக்கு வந்ததே பெரீய கதை. அதையும் சொன்னார். வன்னியின் ஒரு நகரத்தில் பெரும் செல்வாக்கு வாய்ந்த குடும்பத்தின் பிள்ளை. சொத்துக்கு அளவு கணக்கு இல்லை. தலைவரின் மீது இருந்த கண்மூடித்தனமான, விமர்சனமற்ற பக்தியை அவரின் கதைகளின் மூலம் அறிந்து கொண்டேன். தமிழின் பால் மிகுந்த பற்றும் ஆழ்ந்த அறிவும் இருந்தது அவரிடம். திருக்குறளை கரைத்துக் குடித்திருந்தார் என்பதை பின் வந்த நாட்களிள் நான் அறிந்து கொண்டேன்.

பாடசாலை நாட்களில் இவர் ஒரு வாத்தியாரின் மகா எரிச்சலுக்கு காரணமாயிருந்திருக்கிறார்.  பல்கலைக்கழகப் தேர்வுப் பரீட்சையின் போது நண்பருக்கு தனது விடைத்தாளை கொடுத்துதவியிருக்கிறார். அந்த எரிச்சலடைந்த  ஆசிரியர் இதைக் கண்டு கொண்டதால் தனது முழு எரிச்சலையும் இவ்விடத்தில் காட்டியதால் பரீட்சையில் இருந்து விலக்கிவைத்திருக்கிறார்கள். தனது ‌ஆசிரியர்களால் மாகாணத்திலேயே முதலிடத்தில் சித்தயடைவார் என எதிர்பார்க்கப்பட்டவராம். அந்த இடத்திலேயே அந்த ஆசிரியருக்கு  உன் முன்னேயே வாழ்ந்து காட்டுகிறேன் என்று சவால்விட்டு வந்திருக்கிறார்.

காலம் அவரை கணணித்துறையில் கற்பிக்கும் திறமையை கொடுத்திருக்கிறது. கல்விக்கந்தோரால் ஆசிரியர்களுக்கு கணணி கற்பிக்க அழைக்கப்பட்டிருக்கிறார். அங்கு அந்த ஆசிரியருக்கும் கற்பித்ததாக மிகவும் பெருமையாகச் சொன்னார். அந்த ஆசிரியர் குனிந்த தலை நிமிரவில்லையாம் அன்று.

குசினி என்றால் அது எப்படி இருக்கும் என்றறியாதிருந்தார். ‌தேத்தண்ணி போட, முட்டை பொரிக்க, சோறு வடிக்க, கோழிவெட்ட,  கறிவைக்க என எனக்குத் தெரிந்ததை பழக்கினேன். இரண்டே நாட்களில் என்னை விட மிக மிக அதிக ருசியில் சமைக்கப் பழகிக் கொண்டார்.  அண்ணண் நீங்க வைக்கிறதெல்லாம்  கோழிக்கறியா என்று ஒரு நக்கலும் விட்டார் ஒரு நாள். சமைப்பதில் மகா கில்லாடியாகினார், மிக மிக குறுகிய காலங்களில். எனக்கும் ஒரு பெரிய சிக்கல் தீர்ந்ததில் மகிழ்ச்சியே.

எமக்குள் அரசியல் சம்பந்தமாக கதை வந்தால் நான் அவரைச் சீண்டுவேன். எனது ஊரை வைத்து நக்கல் பண்ணுவார். நானும் திருப்பியடிப்பேன். எது எப்படியோ.. மனிதருக்கு ”தலைவர்” என்றால் பெரும் பக்தி இருந்தது. இப்போதெல்லாம் நாம் அரசியல் பேசுவதில்லை. இருந்தால் தானே பேசுவதற்கு.

அவருக்கு ஊரில் பெண் பார்த்திருந்தார்கள். விழுந்து விழுந்து உருகி உருகிக் கதைப்பார். நான் அவர் கதைக்கும் போது வந்தால் வெட்கப்படுவார். நான் சிரித்தபடியே... இதெல்லாம் சகஜமய்யா என்பேன்.

தம்பி உந்த கலியாண கூத்தெல்லாம் வேண்டாம். அண்ணண் சொல்லுறத கேளய்யா என்று சொன்னால்..  சிரித்தபடியே.. உங்களுக்கு எரிச்சல் என்பார்.  சரி, கலியாணத்தை முடிச்சு 2-3 வருடத்தின் பின் பதில் சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறேன். தம்பி எங்கு வருவார் என்று எனக்கு மிக நன்றாகவே தெரியும்.

மது, மாது, புகைத்தல், அலட்டல், புறம்பேசல் என்று எதுவுமில்லாத மனிதர். சிறு குழந்தைகள் அவருடன் மிக மிக இலகுவில் ஒட்டிக் கொண்டனர். மிகவும் இளகிய மனம் கொண்டவர். என்னிடத்தில் மட்டும் தனது ரகசியங்களையும், பரம ரகசியங்களையும் பகிர்ந்து கொள்வார்.  கேலியும், நக்கலும் அவருக்கு கைவந்த கலையாக இருந்தது. பெரிதாய்ச் சிரிப்பார், நகைச்சுவையுணர்வு மிக்கவர். மொத்தத்தில் மிக அருமையான மனிதர்.

நான் வீடு மாறி புதிய வீடு ஒன்றில் வாழ்திருந்த நாட்களில், எதிர்காலக் கனவுகளுடன் எதிர்கால மனைவியுடன்  தன்னை மறந்து, தொலைபேசியில் பேசித்திரிந்த காலங்களில் அவருடன் பகையான அவரின் நோர்வே வாழ் உறவினர்கள் இவருக்குத் தெரியாமலே இவர் நோர்வேக்கு வந்த விடயம் பற்றியும், விசா பெற்றுக்கொண்டது பற்றிய பல இரகசிய தகவல்களை போலீசாரிடம் அறிவிக்க அவர்கள் இவரை மிக இரகசியமாக அவதானித்து, இவருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து விசாவை ரத்துப் பண்ணி, சிறைக்கு அனுப்பினர். விரைவில் நாட்டை விட்டு வெளியேறு என்றும் கட்டளை வந்தது.

மேற் கூறியது நடந்து சில வாரங்களின் பின் அவரின்  எதிர்கால மனைவி மிகவும் சுகயீனமாயிருந்து உயிருடன் போராடி தற்போது தேறிவருகிறார் என அறியக்கிடைத்தது. அது பற்றி தொலைபேசியில் கதைக்கும் போது மிகவும் உடைந்து போய் இருந்தார். எதைச் சொல்லியும் அவரை மனதின் ரணங்களை முடியவில்லை.

நேற்று முன்தினம் அவரிடம் இருந்து தொலைபேசி ஒரு அழைப்பு வந்தது. மிகவும் ‌உடைந்து போயிருந்தார்.  என்னய்யா? என்றேன். அண்ணண் ஊருக்கு போகப் போறன் என்றார். அது சம்பந்தமாக சில உதவிகளைக் கேட்டார் செய்து கொடுத்தேன். இன்னும் சில நாட்களில் ஊரில் இருப்பார்.

இலங்கைக்கு வந்தால் தன்னிடம் வரவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார். அத்துடன் கலியாண அழைப்பும் எனக்குத் தான் முதலில் கிடைத்திருக்கிறது.

நல்ல மனிதர்களுக்கே சோதனை மேல் சோதனை வருகிறது. ஏன் இப்படி நடக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை.

அந்தத் தம்பி எங்கிருந்தாலும் நன்றாகவே வாழ்வார் என்பதில் எனக்கு துளியேனும் சந்தேகமில்லை. காரணம் அவரின் மனிதம் நிறைந்த அவரின் மனது.


.

ஒரு உண்மையான ”கொல்லும் காதல்” கதை

இது ஏறத்தாள 30 வருங்களுக்கு முன்னான கதை. உலகின் நினைவற்று மனதின் போக்கில் எம்மை மறந்து வாழ்திருந்த காலத்தில் இப்படி எத்தனையே கதைகள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால் இக் கதை மடடும் இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கிறது.

ஒரு தலை ராகம், பயணங்கள் முடிவதில்லை, கிளிஞ்சல்கள் என காதல் படங்களின் வழியாக எங்கள் ஊரிலும் வழிந்தோடிக் கொண்டிருந்தது, காதல். என்னையும் ஒருத்தி பெரும்பாடுபடுத்தினாள். அது வெறொரு கதை. அது பற்றி 60 வயதின் பின்பே எழுதுவதாக இருக்கிறேன். (அது வரைக்கும் நீ இருப்பியா என்றெல்லாம் நீங்க நக்கல் பண்ணக் கூடாது.. ஆமா)

இந்தக் கதையின் நாயகன் எனது நட்பு வட்டத்தினுள் இருந்தார். பிரச்சனையில்லாவன். என்னுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் அவன் மிக மிக அமைதியானவன். நம்மளை விட நிறத்தில் ரொம்பவே அழகானவன். பார்த்தாலும் பையன் அழகானவன் தான். சலூனுக்கு போனால் காது மூடி ”பொபி” கட் தான் வெட்டுவான். மிக அழகாக உடுத்துவான்.

அவனுக்கு இருந்த பிரச்சனை, வில்லன்கள் மாதிரி உடம்பை வளர்த்திருந்த அவனது எண்ணிக்கையில்லா அண்ணண்மார் தான். மூத்தண்ணண், பெரியண்ணண், சின்னப் பெரியண்ணண், நடு அண்ணண், சின்னண்ணண், குட்டியண்ணண், அண்ணண் என்று அவனின் அப்பா ஈவுஇரக்கமின்றி பெத்துத் தள்ளியிருந்தார். நம்ம கதாநாயகன் தான் கடைக்குட்டி.

அவர்கள் வீட்டில் எல்லோரினதும் சைக்கிலும் நிறுத்தப்படிருந்தால் அதுவொரு சைக்கல் கடை மாதிரியே இருக்கும். நம் நண்பனிடமும் ஒரு அழகிய சைக்கில் இருந்தது. அதை மிக அழகாகவே வைத்திருந்தான்.

நாங்கள் ஊரில் இருந்த பாவடைபோட்ட புள்ளிமான்களை ரசிக்கும் நேரங்களில் எமக்கு சைக்கிலோடும் சாரதி இவனாய்த் தான் இருக்கும். எப்பவும் தனது எண்ணிக்கையில்லா  அண்ணண்மார் கண்ணில்படுகிறார்களா என்று பார்ப்பதிலேயே அவனது நேரம் போய்க் கொண்டிருந்தது. அவனின் கஸ்டகாலமோ அல்லது அவனின் அப்பாவின் விடாமுயற்சி்யின் பலனோ என்னவோ அவன் எங்கு திரும்பினாலும் அவனின் அண்ணண்களாகவே இருந்தனர். கோயிலுக்கு போனால் அப்பாவும் அம்மாவும் இருப்பார்கள். தியட்டருக்கு போனால் குறைந்தது ஒரு  அண்ணண், மற்ற தியட்டருக்கு போனால் அடுத்த அண்ணண், விளையாடப் போனால் அங்கு இன்னொரு அண்ணண். சும்மா ரோட்டில சைக்கில் ஓடினால் அங்கும் இரண்டு அண்ணண்மார் அவனைக் கடந்து போவார்கள்.

இப்படியாய் கடந்து கொண்டிருந்தது அவனின் 16 வயது. அந்த நேரத்தில் அருகிலிருந்த கிராமத்தில் குடியிருந்தாள் மிக மிக மிக ஒரு தேவதை. அவளை இவன் பல தடவைகள் முன்பும் கண்டிருக்கிறான். அந்த நேரங்களில் இவனின் ஹோர்மோன்கள் விளித்துக் கொள்ளவில்லை. ஆனால் 16 வயதில் பேயாட்டம் ஆடியது அவனது ஹோர்மோன்கள்.

அவளோ ஒரு மேட்டுக் குடி குடும்பத்துப் பெண். சற்று செருக்கும் இருந்தது. அவளின் அப்பாவுக்கும் இவனின் அப்பாவுக்கும் இருந்தது ஒரே ஒரு ஒற்றுமைதான். இருவரும் குட்டி போடுவதில் மகா கில்லாடியாக இருந்தனர். அவளுக்கு 3 - 4 மிக மிக மிக மிக அழகிய அக்காமார் இருந்தனர். அவர்களின் வீட்டைச்சுற்றி பெரியதொரு மதில் இருந்தது. அருகில் ஒரு கிறவல் ஒழுங்கையும் இருந்தது. ஊரில் இருந்த இளசுகள் அந்தத் தெருவால் தினமும் ஒரு தடவையாவது போய்வரா விட்டால் பைத்தியம் பிடித்தவர்கள் போலானார்கள்.

அவர்களின் மித மிஞ்சிய அழகால் அவர்களுக்கு சற்று செருக்கு இருக்கத் தான் செய்யதது (இருக்காதா பின்ன?). பகிடி என்னவென்றால் பிற்காலத்தில் ரோந்து செல்லும் இராணுவா்தினரும் அவர்களின் வீட்டைக் கடக்கும் போது மிக மிக மிக மெதுவாகவே கடந்து போனார்கள்.

இவர்களின் வீட்டில் இருந்து ஒரு வித காதல் கதைகளும் கிளம்பவில்லை. ஆனால் 70களின பின் பகுதியில் அவர்கள் வீட்டில் இருந்து ஒரு காதல் கதை ஒன்று கிளம்பியதாக ஒரு நண்பர் சொல்லக் கேட்டேன். அவர் தான் கதையின் நாயகனாகவும் இருந்தார். அவர் மிகவும் அழகானவர், படிப்பில் கெட்டி, வானொலியில் பேசக் கூடய குரல். ஆனால் அவர் இஸ்லாமியராக இருந்தார். எனவே அந்தக் காதல் கனவாகியது என்றார் அவர்.

அந்த வீட்டில் இருந்த கடைக்குட்டியுடன் எனது நண்பனுக்கு காதல் உருகி உருகி ஓடத் தொடங்கியது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் அவளுக்கு இவர் உருகுவது முதலில் தெரியவில்லை.

இவனுக்கு காதல் நோய் கண்டது 1980 இல் என்றே ஞாபகம் இருக்கிறது. நாட்கள் வாரங்களாயின, வாரங்கள் மாதங்களாயின, மாதங்கள் ஆண்டுகளாயின.... ஒரு வித முன்னேற்றமும் இல்லை அவளிடம் இருந்து.

இவன் தினம் தினம் முன்னேறினான், தேவைக்கு அதிகமாய் முன்னேறினான. பைத்தியமாய் அலைந்தான். இரவு 10 மணிக்கு வந்து ” டேய் வாடா  ஒருக்கா வா அவளைப் பார்த்திட்டு வருவோம் என்‌பான்”. ஏதோ இவர் போகாவிட்டால் அவள் நித்திரைக்கு போகமாட்டாள் என்பது போல. அங்கு போனால் அவளின் வீடும் அந்த ஓழுங்கையும் இரவினுள் தொலைந்திருக்கும். இவனுக்கு அதன் பின் தான் நித்திரையே வரும்.

காலையில், அதுவும் நாம் பாடசாலைக்கு பஸ் ஏறுவதற்கு முன்பு ஒரு தரம் அவளின் வீட்டு மதிலை பார்த்து வருவான். அவள் எந்த பஸ்ஸில் ஏறுகிறாள் என்பதை  பஸ்ஸின் படியில் தொங்கிவரும் நண்பர்கள் அறிவிப்பார்கள். அவரும் ஏறிக் கொள்வார். அவள் திரும்பியும் பார்க்க மாட்டாள். ஆனால் இவர் பார்த்துக்கொண்டேயிருப்பார்.

அவள் எங்கு படித்தாள், என்ன படித்தாள், எங்கு டியுசன் எடுத்தாள், எத்தனை மனிக்கு டியுசன் ஆரம்பிக்கிறது முடிகிறது, எந்த பஸ்ஸில் போகிறாள், எந்த கோயிலுக்கு இன்று போவாள், நாளை என்ன செய்வாள் என்று ‌எல்லாவற்றையும் ஞாபகம் வைத்திருக்க தனது அறிவைப் பாவித்துக்கொண்டான். எம்மையும் இம்சைப்படுத்தினான்.

50 சதவீம் முன்னேறிய அவனது காதல் அந்த 50 வீதத்தை விட்டு 3-4 ஆண்டுகளாக நகரவே இல்லை (அவளின் 50 வீதம் சேர்ந்தால் தானே காதல் 100 வீதமாகிற‌து)

இவனும் "சற்றும் சளைக்காத விக்கிரமாதித்தன் மீண்டும் முருக்கை மரத்தில் ஏறி” என்னும் கதையைப்போன்று அவளைச் சுற்றித் சுற்றிக் காதலித்தான். 1985 ம் ஆண்டு என நினைக்கிறேன். கல்லைப் போன்ற‌ அவள் மனம் மெதுவாவாகக் கரைகிறது போல் இருந்தது எமக்கு.

இவன் கால்கள் நிலத்தில் படாமலே நடந்தான், சைக்கில் டயர் வீதியில் படாமலே சைக்கிலோடினான். இதை சாட்டாக வைத்து நாங்கள் இலவசமாகக் சாப்பிட்டோம், படம் பார்த்தோம். அவனும் மகிழ்ச்சியாய் இருந்தான், நாங்களும் மகிழ்ச்சியாய் இருந்தோம்.

நாங்கள் அவர்களை பார்க்கவில்லை என அவர்கள் நினைக்கும் போதெல்லாம் இருவரும் பார்த்துப் புன்னகைத்தார்கள், வெட்கப்பட்டார்கள். இதெல்லாம் சகஜமய்யா என்பது போலவும் நாங்கள் பார்க்காதது போல இருந்தோம்.

ஒரு நாள் கடிதம் பரிமாறப்பட்டதாக கதைவந்தது. ”டேய் என்னடா கடிதம் வந்ததாக வதந்தி வருகிறதே” என்றேன். ‌பயல் வாயைத் திறந்து பதில் சொல்லவில்லை. மௌனம் சம்மதம் என்று நினைத்துக் கொண்டேன்.

மட்டக்களப்பு நகரத்தில் இருந்த மாதா தேவாலயத்தில் சந்தித்துக் கொண்டார்கள் என்று ஒரு கதை வந்தது. (நகரத்தில் அண்ணண்மாரின் தொல்லை இல்லை). நானும் வாழ்க வளர்க என்று மெளனமாய் இருந்தேன். இடையில் பரீட்சைகள் காரணமாகவும், எனது காதல் காரணமாகவும் எமது நட்பின் நெருக்கம் சற்றுக் குறைந்திருந்தது

நான் கல்வி உயர்தரப்பரீட்சை எடுத்து பரீட்சை முடிவுகளுக்காக காத்திருந்த நாட்களில் திடீர் என ஒரு நாள் மதியம் மட்டக்களப்பு நகரத்துப் பேரூந்து நிலையத்தில் அவனைச் சந்தித்தபோது அவன் முகம் வாடிப் போயிருந்தது. மழையில் நனைந்த சேவல் போலிருந்தான். ”என்னடா” என்றேன். கண்கலங்கி வாய் துடித்தது அவனுக்கு. வா என்றழைத்துக் கொண்டு தேத்தண்ணிக் கடைக்குள் புகுந்தேன்.

இவன் அவளைச் சுற்றிய நாட்களில் மட்டக்களப்பு நகரத்தில் இருந்த ஒரு மேட்டுக்குடிப் பையனும் அவளைச் சுற்றியிருக்கிறான். இவனுடன் ஐக்கியமானவள் சற்று நாட்களின் பின் இவனின் தராதரங்களை அவனுடன் ஒப்பிட்டுப் பார்த்து, பின்பு அவனுடன் ஐக்கியமாகிவிட்டாள். அதை இவனால் தாங்க முடியவில்லை. உடைந்து அழுதான். இருவரும் தேத்தண்ணியும் போண்டாவும் சாப்பிட்டு வெளியே வந்தோம். அவன் சற்று ஆறியிருந்தான்.

அதன் பின் ஊர்ப் பிரச்சனைகள் காரணமாக நான் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டேன். இந்தியாவில் இருந்த ஒன்றரை ஆண்டுகளின் இறுதியில் அவனைக் கண்ட போது, இந்தியாவில் ஒரு  மிக மிக மிக  அழகான பெண்ணைக் கண்டிருப்பதாகவும், காதல் 50 சத வீத வெற்றியளித்துள்ளதாகவும் சொன்னான். அப்ப மீதி 50 என்ற போது... என்னை அடித்து விடுவது போலப் பார்த்தான். அடங்கிக் கொண்டேன்.

தற்போது இந்தியாவில் பிள்ளை குட்டிகளுடன் வாழ்கிறான் என அறியக்கிடைத்தது. ஆனால் அவனின் இரண்டாவது காதல் 100 வீதமாகியதா என்பது தெரியவில்லை. தெரிந்தும் இனி ஒன்றும் செய்வதற்கில்லை.

பி.கு:
அந்த நண்பனுக்கும், ஏறாவூருக்கும்,  மட்டக்களப்புக்கும் இடையே ஓடித்திரிந்த இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்துகளுக்கும், பேரூந்துகளை அழகாக்கிய எங்கள் தேவதைகளுக்கும், தேவதைகளுக்கு அழகாகத்தெரிந்த எங்களுக்கும் இது சமர்ப்பணம்.

இம்சை அரசர்கள் ஜாக்கிரதை!

எனக்கு மிக நெருங்கிய நண்பர்கள் என்று சொல்லக் கூடியவர்களை இரண்டு மூன்று விரலுக்குள் அடக்கிவிடலாம். ஆனால் நண்பர் மாதிரி என்று சொல்வதற்கு சிலர் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்கள் பல மாதிரியான உருவத்தில், நிறத்தில், குணத்தில், பாரத்தில், தலைமுடியுடனும், இல்லாமலும் இருக்கிறார்கள். ஊர், நகரம், நாடு, கண்டங்கள் எனவும் இவர்களைப் பிரிக்கலாம். ஆனால் எல்லோரும் என்னுடன் நட்பாகவே இருக்கிறார்கள். நானும் அதையே முயற்சிக்கிறேன்.

நேற்றிரவு இவர்களைப் பற்றி மனம் சிந்தித்துக் கொண்டிருந்தது. இவர்களில் பலருக்கு ஏதாவது விநோதமான, விசேடமான பழக்கவழக்கங்கள், திறமைகள் இருந்து கொண்டே இருக்கிறது. உதாரணமாக மூக்கை தோண்டி வாயில் வைப்பது, என்னுடன் தொலைபேசியில் கதைத்தபடியே தூங்குவது, பகிரங்கமாக சொறியக் கூடாத இடங்களில் கவலையின்றி கண்மூடிச் சொறிவது இப்படி பலதைச் சொல்லலாம்.

ஊரில் ஒருவன் இருந்தான். அப்போது நாம் விடுதியில் இருந்தோம். அவன் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன். நான் விடுதியில் தலைமை மாணவர் தலைவனாக இருந்தேன். அவனால் மரத்தில், நிலத்தில் எதைக் கண்டாலும் கல்லெறியாமல் இருக்க முடியாது. விடுதிக்கு பின்னாலிருந்த வீட்டு கோழிகள் ஒரு மரத்தில் தான் இரவில் தங்குவதற்குப் பழகியிருந்தன. அந்த மரத்தின் கிளைகள் எங்கள் கிணத்தடிப் பக்கமாக நீண்டு வளர்ந்திருந்ததால் கோழிகள் எங்கள் பகுதியில் அவர்களின் மரத்தில் தூங்கும். எனது நண்பனோ கல்லெறிவதில் மகா கில்லாடி. இரவில் நாம் படிக்கும் போது இவன் அடிக்கடி காணாமல் போவதை கண்ட நான் ஒரு நாள் இரகசியமாக அவனைப் பின் தொடர்ந்தேன். கிணத்தடிக்கு வந்தவன் குளிந்து ஒரு கல்லெடுத்து ஒரு கோழியை ஒரே கல்லில் விழுத்தினான். பொத் என்று சத்தம் கேட்டது. அடுத்து வந்த ஐந்து நிமிடத்தில் கோழியை உரித்து கழிவுகளை வாழைமரத்தருகில் கிடங்கு கிண்டி தாட்டான். கோழியுடன் குசினிக்குள் புகுந்த போது நானும் குசினிக்குள் போனேன். அன்று முதல் எனக்கு வாரத்தில் ஒரு நாள் இரவில் கோழிக்கறியும் பாணும் கிடைத்தது. நானும் அவனின் கல்லெறியும் திறமையை தடைசெய்யவில்லை.

நாம் இந்தியாவில் வாழ்திருந்த காலங்களில் எனது நண்பர்கள் புகைத்தலையும், மதுவையும் ருசிக்கத் தொடங்கியிருந்தார்கள். இவர்களில் சிலர் குடித்தால் ஊருக்கே நாம தான் ராஜா மாதிரி குதித்தாடி, மற்றவர்களை திட்டி, வாந்தியெடுத்து ஓய்வார்கள். இவர்களால் எனக்கேதும் பிரச்சனை இருக்கவில்லை. ஆனால் ஒரு நண்பனுக்கு மட்டும் போதை ஏறும் போதே ”டேய்.. எங்கடா அந்த ஊத்தையன் என்று எனது பட்டப் பெயரை பாவித்து அன்பாக அடாவடிகளை ஆரம்பிப்பான். போதை ஏறிவிட்டால் எனது மடியல் படுத்தபடியே அழுவான். அழுதழுது கதை சொல்லுவான். நான் எழும்பவே முடியாதபடி பிடித்திருப்பான். விடிய விடிய அவனின் அழுகையையும், தொலைந்த காதல் கதையையும் கேட்டு காது புளித்துப் போகும் போது ”உவாக்” ”உவாக்” என்று சாப்பிட்ட சாப்பாட்டை மொட்டைமாடியில் வாந்தியாய் கொட்டிவிட்டு அதன் மேலேயே நிம்மதியாய் படுப்பான். அவனை எழுப்பி, குளிப்பாட்டி, புதிய சாரம் கட்டி படுக்கவைத்தால் காலையில் எழும்பியவுடன்  பாத்தியாடா நான் குடிச்சாலும் கீழ இறங்கி வந்து குளித்துவிட்டு தான் படுத்திருக்கிறேன் என்பான். நான் மொட்டை மாடியை களுவிக் கொண்டிருப்பேன்.

இன்னொருவர் இருந்தார் எம்முடன். வயதில் பெரியவர். அவரிடம் இருந்த பிரச்சனை என்னவென்றால் ஒரு இடத்தில் படுப்பார். ஆனால் விடிவதற்கிடையில் எமது அறையை கோயிலை சுற்றி அங்கப்பிரதட்சனை செய்வது போல உருண்டு திரிவார். அதை ஓரளவுக்கு மன்னிக்கலாம். ஆனால் உருளும் போது அவரின் சாரம் கால் வழியாகக் கழண்டு அரை வழியில் நின்றுவிடும். அதிகமான காலைகளில் நான் முழித்தது அண்ணணின் பலான அவையவங்களில் தான். காலையில் எழும்பியவுடன் ஏதோ கற்பு பறிபோனது போல ஓடிப் போய் சாரத்தை தேடி எடுத்து உடுத்துவார். அன்றிரவு மீண்டும், நாம் செக்கன்ட் சோ வரும்போதே அண்ணணின் சாரம் மீண்டும் தனியே தூங்கியிருக்கும். அண்ணணும் தனியே தூங்கியிருப்பார். அந்த கண்றாவி காட்சியை தவிர்ப்பதற்காக நாம் எவ்வளவோ முயற்சித்தோம் ஆனால் அண்ணண் திருந்தவே இல்லை. அவரின் சாரமும் திருந்தவில்லை.

நோர்வேக்கு வந்த புதிதில் ஒரு நண்பர் இருந்தார். அவருக்கு இங்கிருந்த கழிப்பறைகளின் தத்தவங்கள் புரியாதிருந்தன. ஊரில் குந்தியிருந்தே  பழக்கப் பட்டவருக்கு இங்கு கதிரையில் இருப்பது மாதிரி உட்கார முடியவில்லை. இரகசியமாக என்னிடம் சிக்கலைச் சொன்னார். நானும் உங்கள மாதிரித்தான் கதிரை மாதிரி நினைத்துக் கொண்டு குந்தியிருந்து முக்குங்கோ என்றேன். முடியாது என்று அடம் பிடித்தார். சரி இதுக்கு மேல ஏறி குந்துங்கோ என்றேன். அதயும் செய்து பார்த்திட்டேன். நிம்மதியா இருக்க ஏலாமல் இருக்கு என்றார். பின்பு ஒரு விதமாக  மேலே குந்தியிருக்க பழகிக் கொண்டார். 4- 5 வருடங்கிளின் பின் ஒரு இடத்தில்  அவரை சந்திக்க நேர்ந்தது. இப்ப எப்படி பிரச்சனை தீர்ந்து விட்டதா என்ற போது, அப்போதும் தான் கதிரையில் இருக்க முடியாமல் மேலேயே குந்தியிருப்பதாக.சொன்னார். இப்ப 20 வருடங்களாகி விட்டன.  இப்பவும் குந்திக் கொண்டுதானிப்பார் என நினைக்கிறேன். குந்துவதிலும் ஒரு சந்தோசம் இருக்குத் தானே.

இவரின் இம்சை பறவாயில்லை. இன்னொருவர் இருக்கிறார். தொலைபேசி எடுத்தால் வைக்கவே மாட்டார். நான் கழிப்பறைக்கு போகவேணும் என்பேன். பறவாயில்லை அங்கிருந்து கதையுங்கள் என்பார். சில நேரங்களில் அவரின் பேச்சு மு‌டிவது போலிருக்கும். எனக்கும் மகிழ்ச்சியாய் இருக்கும். ஆனால் பேச்சு முடியும் போது புதிய கதையொன்றைத் தொடங்குவார். கைத்தெலைபேசி பற்றறி முடிகிறது என்றால் உடனேயே மின்சாரத்தை இணையுங்கள் நான் காத்திருக்கிறேன் என்பார். அமெரிக்க உளவுத்துறையிடம் இருந்து தப்பலாம் ஆனால் இவரிடம் இருந்து தப்பவே முடியாது.

இன்னொருவர் இருந்தார்.  அவருடன் நேரே நின்று கதைக்கமுடியாது. மனிதர் எப்போது பேசினாலும் பன்னீர் தெளித்து ஆசீர்வதிப்பது போல எச்சிலை தெளித்துக் கொண்டே இருப்பார். அவரால் எச்சில் தெளிக்காமல் பேசவே முடியாது.

இவர் பறவாயில்லை. இன்னொருவருடன் முன் நின்று பேச முடியாது. அதற்கான கா‌ரணம் அறிய விரும்புபவர்கள் ”மன்மதன் அம்பு” படத்தில் கமலஹாசன் எழுதிப் படித்திருக்கும் கவிதையைப் பாருங்கள் உங்களுக்கு பதில் புரியும். (புரியாதவர்கள் மின்னஞ்சல் அனுப்புங்கள்)

இன்னுமொருவரின் இம்சை வேறுமாதிரியானது. அவரை நான் சந்திக்கும் போது எங்களைச் சுற்றி எப்போதும் சனக்கூட்டமாயிருக்கும். அதாவது தமிழ் நிகழ்ச்சிகளிலேயே   சந்திக்கும் சந்தர்ப்பம் அமையும். அவர் என்னைக் கண்டவுடன் பெருஞ் சத்தமாய் சஞ்சயன்.. அண்டைக்கு கடன் வாங்கின சீப்பு எங்கடா என்பார்? ஊரே திரும்பிப் பார்க்கும் எனது தலையை. அங்கு சீப்புக்கு என்ன வேலையிருக்கப்போகிறது?

எனக்கு தாங்க முடியாத எரிச்சலை தரும் நண்பர் ஒருவர் இருக்கிறார்.  அவரின் இம்சை தாங்கவே முடியாதது. தொலைபேசி எடுப்பார். எப்போதும் இரவிலேயே எடுப்பார். அதுவும் அவரின் கட்டிலில் படுத்திருந்தே எடுப்பார். பேச்சு சுவராசியமாக ஆரம்பிக்கும். இடையிடையே அமைதியாகி விடுவார். திடீர் என்று என்று சொன்னீர்கள் என்பார். பிறகு சிறிய குறட்டைச் சத்தம் கேட்கும் திடீர் என்று என்ன சொன்னீர்கள் என்பார். அல்லது அவரின் கதையைத் தொடர்வார். இறுதியாக அவரின் குறட்டை மெதுவாய் சத்தம் அதிகரித்து சீரான ஒலியுடன் உச்சஸதாயிக்கு போனதும் நான் தொலைபேசியை வைத்துவிடுவேன். சில நாட்களில் நான் தொலைபேசியை வைத்த சற்று நேரத்தில் எனக்கு தொலைபேசி எடுத்து ஏன் வைத்தீர்கள் என்று டோஸ் விடுவார். பிறகு மீண்டும் குறட்டை.  இவர் தான் எனக்கு இம்சை அரசன்.

இப்படி பலர் பல விதமாக எனக்குள் தங்கள் நினைவுகளை பதித்திருக்கிறார்கள். இவையெல்லாம் அன்பான இம்சைகளே. 

அது சரி.. இவர்களுக்கு நான் எப்படியான இம்சைகளை கொடுக்கிறேன்? கேட்டுச் சொல்லுங்களேன் ப்ளீஸ்.


.

பகிரப்படாத குடும்ப ரகசியம்


இன்றைய கதை எங்கள் குடும்பத்து (பரம்பரையின்) பரமரகசியங்களின் ஒன்று. இதில் சம்பந்தப்பட்ட  முக்கிய பாத்திரங்களில் எவரும் இன்று எம்முடன் இல்லை. தவிர இது ஒரு மனிதரின் மகத்தான தியாகத்தின் கதை. எனவே அதை பகிர்வதில் எனக்கு பெருமையிருக்கிறதே அன்றி தவறிருப்பதாய் தெரியவில்லை.

கதையின் தொடக்கத்தினை நாம் தேடிச்செல்லவேண்டுமானால் காலச் சக்கரத்தை பலமாக  பின்னோக்கிச் சுற்ற வேண்டும்.

ஆம் 1933ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7ம் திகதி எனது தாயாரும் அவரின் இரட்டைச்சகோதரியும் பிறந்தார்கள். அவர்களுக்கு 7 வயதாயிருந்த போது அவர்களின் தாயார், எனது அம்மம்மா காலமாகிறார். அம்மாவையும், அவரின் சகோதரியையும் அவர்களின் மூத்த அக்கா  கவனித்துக் கொள்கிறார். அவருக்கும் இவர்களுக்கும் 23 வயது வித்தியாசம். ஆம் 23 வயது தான். அவரின் திருமணத்தின் பின் இளைய அக்கா பார்த்துக் கொள்கிறார்.  காலம் உறுள்கிறது. அம்மா 1950களின் இறுதியில் கொழும்பில் வைத்தியராகிறார். அப்பாவை திருமணம் செய்கிறார். ‌ இருவரும் கொழும்பில் உள்ள கம்பஹா என்னுமிடத்தில் தொழில்புரிகிறார்கள். அம்மாவின் இரட்டைச் சகோதரி ”சந்திராராணி” பிற்காலத்தில் எங்களால் ”சந்திரா அன்டி”  என்றழைக்கப்பட்ட சந்திரா அன்டி அம்மாவுடன் தங்கியிருந்து கொழும்பில் கல்விகற்கிறார்.

அப்பாவின் நண்பராக அறிமுகமாகிறார் நம்ம ஹீரோ. அப்பாவின் நெருங்கிய நண்பன். சிங்களவர். நாம் அவரின் பெயரைச் சுருக்கி ”ஜின் மாமா” என்றழைத்தோம். கம்பஹாவில் பெயர் போன குடும்பம். நண்பராக வீட்டுக்கு வந்த... பெயரிலேயே  போதையிருக்கும் ”ஜின் மாமா”வுக்கும் ”சந்திரா அன்டி”க்கும் இடையில் ”கெமிஸ்ரி” எனது அப்பாவுக்கு தெரியாமல் ஓகே ஆகிறது. அம்மாவுக்கு தெரிந்திருக்கலாம் என்றே நினைக்கிறேன். அக்கா தங்கச்சி என்றால் அப்படித்தானே. ஆனால்  அப்பாவுக்கு தெரியாமல் மறைக்கப்படுகிறது.

சந்திரா அன்டி இந்தியா போய் பூனே என்னுமிடத்தில் படித்து மீண்டும் இலங்கைக்கு வருகிறார். ஜின் மாமாவும் சந்திரா அன்டியும் ஆசிரியர்களாகிறார்கள். காதல் விடயம் பரமரகசியமாகப் பாதுகாக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் பெரிய பெரியம்மாவும், பெரிய பெரியப்பாவும் சந்திரா அன்டிக்கு கலியாணம் பேச.. தமிழ்ப்படங்களில் வருவது மாதிரி சந்திரா அன்‌டி மாவுக்கு தகவல் சொல்ல அவரும் படத்தில வாறது மாதிரி நண்பர்களுடன் சேர்ந்து கொழும்பில் காதும் காதும் வைத்தால் போல பதிவுத் திருமணம் முடித்த போது தாங்கள் சரித்திரத்தின் ஒரு பெரும்பகுதிக்கான வெடிகுண்டின் திரியை பற்றவைத்திருப்பது அவர்களுக்கு தெரியாது.

கேள்விப்பட்டதும் முதலில் தொலைந்தது அப்பாவின் நட்பு. பிறகு பெரியம்மா பெரியப்பாவுக்கும் சந்திரா அன்‌டிக்குமான உறவு. அப்பா இறக்கும் வரைக்கும் நண்பருடனும் அன்டியுடனும் பேசவேவில்லை. பெரியப்பாவும் அப்படியே. பெரியப்பாவின் மரணத்தின் பின் பெரியம்மா அன்டியுடன் சமாதானமாகினார். இருவரும் ஏறக்குறைய இரண்டுவருடங்கள் ஒரே வீட்டில் வாழ்ந்து இழந்த காலத்தை மீட்டுக் கொண்டனர். பெரியம்மா அதன்பின் இறந்து போனார். அதன்பின் தான்  இறக்கும் வரை தனது இரட்டைச் சகோதரியுடன் அதாவது எனது அம்மாவுடன் வாழ்ந்திருந்தார் அன்டி.

1960களின் இறுதியில் குடும்பங்களின் எதிர்ப்பை மறக்கவும் தங்கள் வாழ்க்கையை  தொடங்கவும் மாமாவும் அன்டியும் எத்தியோப்பியா நாட்டுக்கு ஆசிரியர்களாக புலம் பெயர்ந்தனர்.

அம்மாவும் அப்பாவும் குட்டி போட நானும், தம்பியும் , தங்கையும் இந்த உலகத்தில் வந்து விழுந்திருந்தோம். அன்‌டியும் மாமாவும் இலங்கை வந்தாலும் எங்கள் வீட்டுக்கு வரமுடியாது. அம்மா அன்டியை கொழும்பில் சந்திப்பார்.  பல ஆண்டுகளின் பின் அன்டி யாழ்ப்பாணம் போய் தனது இளைய அக்கா வீட்டுடன் சமாதானமாகினார்.  பெரிய பெரியம்மா தனது வீட்டு கேட்டுக்கு பெரீய பூட்டு போட்டு பூட்டினார் என்று சரித்திரம் ஆதாரத்துடன் சொல்கிறது. எங்கள் வீட்டில் அப்பர் வில்லனாக இருந்தார். ஆனால் அம்மா மூலமாக மாமாவும் அன்டியும் கொடுத்துவிட்ட பரிசுப் பொருட்களை மட்டும் சந்தோசமாகப் பாவித்தார்.

1970களின் நடுப்பகுதியில் அன்டி வந்த போது ஒரு ”டேப் ரெக்கோர்டர்” கொண்டு வந்து அம்மாவிடம் கொடுத்தார்.  அதை அம்மா அப்பாவிடம் கொடுக்க Maxell c 90 கசட் வாங்கி தனிய தனக்கு விருப்பமான ”உள்ளம் உருகுதய்யா” மாதிரியான பாட்டுக்களை போட்டுத் திரிந்தார் அப்பா. இடையிடையே கசட் சிக்கிக்கொள்ளும். மனிதர் குந்தியிருந்து ஒரு பேனையால் சுற்றி சுற்றி சிக்கினை எடுத்தபின் பாட்டைப் போடுவார். பாட்டு ஒரு மாதிரியான சத்தத்துடன் ஆரம்பித்து பிறகு ஒழுங்காய்ப் பாடும். அந்த டேப் ரெக்கார்டர் அவரால் பெரும் பாடுபட்டது.

அப்பா வேட்டைக்கு போவதற்காக ஒரு டோர்ச் லைட் உம் கிடைத்தது, அன்டியிடம் இருந்து.  அதில 12 பற்றரி போடலாம். லைட் அதிக தூரத்துக்கு அடிக்கும். வயலுக்கு இரவில போகும் போது அப்பா அதை ஸ்டைலாக ‌ஆட்டியபடியே போவார்.

ஆனாலும் அப்பாவின் கோவம் குறையவில்லை.  ஆனால் அன்டியை வீட்ட வர அனுமதித்தார். ஆனால் அவர் வந்தால் இவர் நிற்க மாட்டார்.

1980களின் ஆரம்பத்தில் அன்டியுடனும் மாமாவுடனும் சினேகமாகாமலே அப்பா போய்ச் சேர்ந்தார்.

1960 களின் இறுதியில் எத்தியோப்பியாவுக்கு போன மாமாவுக்கும் அன்டிக்கும் குழந்தைகள் கிடைக்கவில்லை. அதிக காலமாக குழந்தைகள் கிடைக்கவில்லை. கடைசிவரைக்கும் கிடைக்கவேயில்லை.

1980கள் வரைக்கும் எத்தியோப்பியாவிலேயே  வாழ்ந்திருந்தார்கள். அப்போது தான் அந்த பரம ரகசியம் நடந்தது. ஆபிரிக்காவைப் போல அதுவும்  இருட்டான ஒரு கதை. வலி நிறைந்தது.

மாமாவும் அன்டியும் அங்கு வாழ்ந்திருந்த காலங்களில் அவர்களின் வீட்டில் வேலைக்கு வந்திருந்த பெண்ணுக்கும் மாவுக்கும் மூன்று குழந்தைகள் பிறந்திருக்கின்றன. குழந்தைகள் மேல் பெரும் அன்புள்ள அன்டி அவர்களை மிகவும் அன்பாகவே நடாத்தியிருக்கிறார்.  அவருக்கு சந்தேகமே வரவில்லை.

காலம் உருண்டோட மாமா சுகயீனமுறுகிறார். தனது இறுதிக் காலத்தில் தனது இருண்ட  ஆபிரிக்க இரகசியத்தை அன்டியிடம் சொல்கிறார்.  அதே நேரத்தில் அவர்களின் வேலைக்கான உத்தரவு ரத்து செய்யப்பட பிஜி (Fuji) தீவுகளுக்கு வேலைக்குப் போக வேண்டியேற்படுகிறது. ஆனால் தன்னுடன் மாமாவின் அந்த ஆபிரிக்க மனைவி போன்றவரையும், அவர்களது மூன்று குழந்தைகளையும் அழைத்துப் போகிறார், அன்டி. தன்னுடனேயே தங்கவைத்துக் கொள்கிறார்.

மாமாவின் உடம்பு நிலை மோசமாக நியூசிலாந்தில் வைத்தியத்திற்காக போன இடத்தில் மாமா இறந்து போக அன்டி  தன்னுடனேயே அந்த மூன்று குழந்தைகளையும் அவர்களின் தாயாரையும் அழைத்துக் கொண்டு மீண்டும் பியூஜி (Fuji) தீவுக்கு போய் தள்ளாத வயதிலும் ஆசிரியராய் தொழில் புரிந்து அந்தக் குழந்தைகளை வளர்த்து கற்பித்து அமெரிக்காவில் கல்வி கற்ற வைக்கிறார்.

இன்னும் சில காலத்தின் பின் அக்குழந்தைகள் வளர்ந்து தங்கள் தாயை பார்த்துக் கொள்ள, தனது இறுதிக் காலத்தை தனது சகோதரிகளுகளுடன் கழிக்க இலங்கை வருகிறார் சந்திரா அன்டி.

இதற்கிடையில் அவரின் அண்ணணையும் (எனது மாமா), இளைய அக்காவையும்(எனது சின்ன பெரியம்மா), அத்தானையும்(எனது பெரியப்பா)
எனது அப்பாவையும் காலம் கரைத்துவிட்டிருந்தது.

பெரியம்மா தனது பெரீய வீட்டில் தனியே இருந்தார். இலங்கை வந்ததும் அவருடன் போய் தங்கினார்.  எனது அம்மாவும் அங்கு போய் வருவார். 2004ம் ஆண்டு விடுமுறைக்கு  நானும் எனது குடும்பத்துடன் அங்கு போய் தங்கியது ஒரு மறக்கமுடியாத இனிமையான அனுபவம். இந்தப் பதிவில் இருக்கும் படம் அந் நாட்களில் எடுக்கப்பட்ட்தே.

பெரியம்மா இறந்ததும் எனது அம்மாவுடன் வந்து தங்கினார். அடிக்கடி தனது குழந்தைகளுடன் தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் பேசிக் கொண்டார்.  அந்த மூன்று குழந்தைகளை விட இத்தியோப்பியாவில் இன்னுமொரு குழந்தையின் கல்விக்கும் அவரின் வாழ்க்கைக்கும் உதவியிருந்தார் என்பதை பல வருடங்களுக்கு முன் என்னிடம் சொல்லியிருந்தார்.

அவரின் மிடுக்கான உடையும், மிடுக்கான நடையும், அன்பான பழக்கமும் அவருக்கு பல நண்பர்களை தேடிக் கொடுத்தது. வாழ்க்கை பற்றிய அவரது பார்வை விசாலமானது. அம்மாவுடன்  சிறு சிறு சண்டைகள் பிடிப்பாராம் என்பார் அம்மா. அம்மாவை சோதியக்கா என்றே அழைத்தார்.

சில ஆண்டுகளுக்கு முன் அம்மாவின் தொலைபேசி அழைப்பின் ஊடாக அவருக்கு மார்ப்புப் புற்றுநோய் என அறியக் கிடைத்தது. மருத்துவம் நடந்தது. திடீர் என ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அம்மா வந்து பார்த்துப் போ என்றார்.

புறப்பட்டுப் போய் நேரே களுபோவில ஆஸ்பத்திரிக்குப் போனேன். நான் அவரைத் தேடிய போது எனக்கு முதல் அவர் என்னைக் கண்டு கையை மேல் தூக்கி ஆட்டி ஆட்டி என்னை அழைத்தார். சிரித்தபடியே அருகில் அழைத்து கட்டிலில் உட்கார் என்று சைகை காட்டினார். ஒட்சிசன் உட் போய்க் கொண்டிருந்தது. பேச முடியவில்லை அவரால்.

வேறு ஆஸ்பத்திரிக்கு மாற்றும் வேலைகள் நான் வரமுதலே நடந்து கொண்டிருந்தது. அன்று மாலை மாற்றப்படுவதாக அறிந்தேன்.

தனக்கு வேர்க்கிறது விசிறியால் விசுக்கி விடச் சொன்னார். விசுக்கிக் கொண்டிருந்த போது கஸ்டப் பட்டு ஒட்சிசன் செல்லும் பிளாஸ்டிக் கருவியை அகற்றி ”எப்படி இருக்கிறார்கள் உன் குழந்தைகள்” என்று கேட்க முதலே களைத்துச் சரிந்தார். அருகில் இருந்து கையை தடவியபடியே இருந்தேன்.  அம்மா வந்தார். அருகில் அமர்ந்து கொண்டார். அப்பா இறக்கும் போதும் நான் அம்மாவின் அருகில் நின்றிருக்கிறேன். அம்மாவின் முகம் அன்று இருந்ததைப் போலிருந்தது.

புதிய ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அம்மாவிடம் கோப்பி வேணும் என்றாராம். அம்மா எடுத்துப் போன போது மயக்கமாகியிருந்தார்.  அடுத்த நாள் காலை அவரிடம் சென்ற போது இன்னும் சற்று நேரம் தான் என்றார் டாக்டர். அன்டி மயக்கத்திலும் அழகாயிருந்தார்.

அவரருகில் தனியே அமர்ந்திருக்கும் சந்தப்பம் கிடைத்தது. அவரின் முகத்தில் ஒரு வித அசாத்திய அமைதியிருந்தது.  அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது உண்மை தான். எனது சிந்தனை அவரின் வாழ்க்கையைப் பற்றியதாயிருந்தது.

மதியம் போல் பலரும் சுற்றி நிற்க மெதுவாய் தனது பாரத்தை இறக்கி விடைபெற்றுக் கொண்டார். அம்மா சற்று நேரம் அருகிலேயே நின்றிருந்தார்.

எத்தனை வலி மிகுந்த வாழ்க்கையை அவர் கடந்திருக்கிறார். குடும்பத்தை எதிர்த்து கல்யாணம், உறவுகளுடனான பிரிவு. இவற்றை சாதாரணமெனலாம். ஆனால் தனது கணவரின் பச்சைத் துரோகத்தை அதை எப்படித் தாங்கினார்? என்பதே எனது கேள்வியாய் இருந்தது. எப்படி தனக்கு துரோகம் செய்தவளையும் அவரின் குழந்தைகளையும் தன் குழந்தைகளாக வரித்துக் கொள்ள முடிந்தது? ஏன் கணவரை உதறித் தள்ளவில்லை? எமது அழைப்பையும் மறுத்து அந்தக் குழந்தைகளைகளுக்கு பல ஆண்டு காலம் வழிகாட்டிய பின்பே எம்மிடம் வந்தார்.  ஏன் இப்படி எல்லாம் செய்ய வேண்டும்? என்னால் அவரைப் போல் செய்ய முடியுமா எனக் கேட்டுக் கொண்டேன். இல்லை, நிட்சயமாய் இல்லை என்றே பதில் வந்தது.

கணவரை தண்டிக்கவும், தனது சோகம் மறக்கவும் அன்பெனும் ஆயுதத்தை கையிலெடுத்தாரோ அவர்? எத்தனையோ நாட்கள் இது பற்றி யோசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அவரின் மேலான மரியாதை கூடிக் கொண்டே போகிறது.

மரணச்சடங்கின் போது மாமாவின் வீட்டாரையும் பல ஆண்டுகளின் பின் காணக்கிடைத்தது. அவர்களுக்கு இது பற்றி ஏதும் தெரிந்திருக்கலாம் என்றே நம்புகிறேன்.  அதுவே எனது விருப்பமாயும் இருக்கிறது.

 எல்லாம் முடிந்து வீடு வந்த போது மேசையில் இருந்த ஒரு படத்தில் மிக அழகாய் சிரித்துக் கொண்டிருந்தார், சந்திரா அன்டி. முகத்தில் என்றுமில்லாத சாந்தமிருந்தது. இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்.


மேலிருக்கும் படத்தில் இடமிருந்து வலமாக எனது அம்மா, பெரிய பெரியம்மா, சந்திரா அன்டி.


இது எனது சந்திரா அன்டிக்குச் சமர்ப்பணம்..

நோபல் பரிசும் எனது உரிமைப்போரும்

இன்று காலை விடியும் போதே நல்லதாய் விடியவில்லை. ஒருவர் தந்த கணணியை திருத்தி வேறொருவருக்கு கொடுத்திருக்கிறேன் எனது பிரபல்யமான மறதியால். கணணியைத் தந்தவர் வந்து கணணியைத் தா என்ற போது அரின் கணணியாக்கும் என்று நான் நினைத்த கணணியை தூக்கிக் கொண்டு போனேன். மனிதர் அது தனது கணணி இல்லை என்றதும் இன்னொன்றைக் காட்டினேன். இப்படி 4 கணணி காட்டியபின்பு அவருக்கு சற்று எரிச்சல் வந்தது. எனக்கு என்மேலேயே எரிச்சலாய் இருந்தது. உனக்கு வேறு கணணி தருகிறேன் என்று சமாதானம் செய்து அனுப்பினேன் அவரை. மொட்டையன், கறுப்பன், சனியன் என்று திட்டிக்கொண்டு போயிருப்பார் என்று தான் நினைக்கிறேன். அதுக்காக நான்  மறதியை மறந்ததாக நீங்கள் நினைக்கப்படாது ..ஆமா.

அதன் பின் ஒருவர் கணணி திருத்த அழைத்தார். அவரிடம் போவதற்காக நிலக்கீழ் ரயில் நிலயம் போனேன். கண் முன்னேயே ரயில் போனது. அடுத்த ரயிலுக்கு 15 நிமிடங்கள் கடும் குளிரில் காத்திருந்தேன். அந்த ரயில் வருவதற்கு 3 நிமிடத்து முன் ஏதோட்சையாக எனது டிக்கட் இருக்கிறாதா என காட்சட்டைப் பையினுள் பார்த்தேன். அது நான் எடுத்து வைத்திருந்தால் தானே அது அங்கிருக்கும். அதை வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்திருந்தது புரிய, அதையெடுத்து வந்து மீண்டும் குளிரில் நின்று ரயில் பிடித்து அழைத்தவரின் வீட்டுக்குப் போனேன். அவரின் கணணியை திருத்தும் போது எனது ”தொல்லை” பேசி அழைத்தது. இன்றைய காலைப் பொழுதைப் போல அந்த தொலைபேசி அழைப்பும் சந்தோசத்தை தரவில்லை. மாறாக எரிச்சலை கிளப்பிவிட்டது.

கணணியை திருத்தும் போது தான் இன்று மாலை நோபல் பரிசு பெற்றவரை பாராட்டி நடைபெறும் இசைநிகழ்ச்சிக்கு டிக்கட் எடுத்திருக்கிறேன் என கைத்தொலைபேசி ஞாபகமூட்டியது. கணணியை திருத்திக் கொடுத்து இசைநிகழ்சிக்கு போகும் வழியில் ஒரு சோடாவும், பணிஸ் ஒன்றும் வாங்கி வைத்துக் கொண்டேன்.

ஒல்லோவின் மிகப் பெரிய Spektrum அரங்கில் இசை நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்தார்கள். மெதுவாய் அரங்கை நெருங்கினேன். கூட்டம் அலைமோதியது.  எனது உள்புகு வழி இலக்த்தை தேடியலைந்த போது எனக்கு முன்னால் நின்றிருந்த பெண் திடீர் என பனியில் சறுக்கி நிலத்தை முத்தமிட்டார். அவரின் கணவரால் அவரைத் தூக்கி நிறுத்த முடியவில்லை.  நானும் அவருமாய் விழுந்தவரை தூக்கி நிறுத்தினோம். நன்றி என்றார் என்னைப் பார்த்து. அவரின் வாயில் இருந்து வந்த மதுபான நெடியில் எனக்கு தலை சுற்றியது போலிருந்தது. அவர் விழுந்ததன் காரணம் புரிந்தது.

வரிசையில் நின்று உள்ளே புகுகிறேன் ஒரு வெள்ளையின பெண் பாதுகாப்பதிகாரி கதவருகில் நின்று எல்லோரையும் கவனித்துக் கொண்டிருந்தார். நான் அவரைக் கடந்ததும் திடீர் ஓடிவந்து என்னைப் பிடித்துக் கொண்டார்.  என்ன பிரச்சனை என்றேன்? உனது தோளில் இருக்கும் பையை சோதிக்க வேண்டும் என்றார். ஏற்கனவே இன்றைய பொழுதின் அடாவடித்தனங்களினால் எரிச்சலில் இருந்த எனக்கு இவர் என்னை மட்டும் நிறுத்துவது மிகுந்த எரிச்சலை  தரத்தொடங்கியிருந்தது.

எனது பையினுள் இருந்த சோடாவையும், பணிஸ்சையும்  உள்ளே கொண்டு போக விடமாட்டார் என்றார். என்னிடமிருந்த கொஞ்ச நஞ்ச நிதானமும் காற்றில் பறக்க, ”ஏன் அதற்குள் குண்டு இருக்கிறதா?” என்றேன் மிகவும் சூடாக.  அதற்கு அவர் உணவும், குடி வகைகளும் உள்ளேதான் வாங்க வேண்டும் என்றார். எனக்கு கோவம் கண்ணையும் புத்தியையும் மறைக்கத் தொடங்க அவருடன் பெருஞ் சத்தத்தில் வாதாட, அவருக்கு உதவியாய் அவரின் சகாக்கள் வந்தனர்.

உங்கள் சட்டத்தைப் பற்றி நுகர்வாளன் எனக்கு நீங்கள் அறிவிக்காமல் எவ்வாறு நீங்கள் சட்டத்தை அமுல் படுத்தலாம் என்பது எனது வாதமாயிருந்தது. அவரோ எனக்கிடப்பட்ட கட்டளையை நான் நிறைவேற்றுகிறேன் என்றார். உனக்கு கட்டளையிட்டவனை அழைத்துவா என்று கத்தினேன் பெருஞ்சத்தத்தில். கடந்து போனவர்கள் என்னை தற்கொலைகுண்டுதாரியாக நினைத்திருப்பார்களோ என்னவோ அடிக்கடி திரும்பி திரும்பி பார்த்தபடியே கடந்து போனார்கள்.

இறுதியில் மேலதிகாரியை அழைத்தார்கள். அவரும் வந்தார். எனது நியாயத்தை கேட்டேன். நீங்கள் சோடாவையும் பணிஸ்ஐயும் கொண்டு போங்கள் என்றார் பெரு மரியாதையுடன். அந்தப் பெண்ணை ஏதோ ஒரு அற்பப் பிரணியைப் பார்ப்பது போல  நக்கலாய் பார்த்தபடியே நகர இன்னொருவர் (வெள்ளைக்காரன்) என்னைப் போல் ஒரு பையை காவிக்கொண்டு உள்ளே போனார். அவள் அவரை நிறுத்தாதது எனது எரிச்சலை மீண்டும் கிளப்பியது.

நான் மீண்டும் அந்த பெண்ணிடம் போய் நீ என்ன நிறக்குறுடா? எனக் கேட்டேன். அவளுக்கு புரிய வில்லை. என்ன என்றாள்?. நீ நான் கறுப்பன் என்பதால் தானே என்னை நிறுத்தினாய். ஆனால் வெள்ளை இனத்தவரை பரிசீலிக்காமல் அனுப்புகிறாய் என்று கத்த அருகில் இருந்த மேலதிகாரி நாம் நிற பேதம் பார்ப்பதில்லை என்று சொல்ல... நான் அப்ப ஏன் அவரை சோதிக்கவில்லை என்று கேட்க.....அந்த  மேலதிகாரி அப் பெண்ணுக்கு ”டோஸ்” விட அப் பெண் ஓடிப் போய் அந்த வெள்ளைக்காரனையும் அழைத்து வந்தாள். மீண்டும் நக்கலாய் சிரித்து எனது கூரூரத்தை அவளுக்கு காட்டினேன். அதன் பின் பையுடன் வந்த எல்லோரையும் அவள் பாய்ந்து பாய்ந்து நிறுத்திக் கொண்டிருந்தாள்.

எனக்குள் இருந்த சீற்றம் அடங்க அதிக நேரமெடுத்தது. இன்னும் அதிகமாக அந்தப் பெண்ணை திட்டியிருக்க வேண்டுமென்றது மனம்.

கடந்த இரண்டு நாட்களாக என்னத்தை எடுதுவது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இன்றைய நாள் மிகவும் மனக்கிலேசத்தை தந்திருந்தாலும் எழுதுவதற்கு ஒரு கதையைத் தந்ததினால் இன்றைய நாளும் நல்லதே...


.

விசரன் ஓட்டிய கார்


தலையங்கம் பார்த்து ஏதும் திரில்ஆன விடயம் என்று நீங்கள் வந்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.

நான் கார் ஓட்டுவதற்குப் பழகிய கதையைத்தான் எழுத நினைத்திருக்கிறேன், இன்று. உனக்கு உண்மையில விசர் தான் என்று நீங்கள் திட்டலாம்.  அண்ணணுக்கு இதெல்லாம் சகஜமப்பா.

1994ம் ஆண்டு வடமேற்கு நோர்வேயில் வாழ்திருந்த காலமது. அந்த ஊரில் போக்குவரத்து வசதிகள் மிகவும் குறைவு. கார் இருந்தால் தான் சமாளிக்கலாம்.  காலை, மதியம், இரவு என்று வைத்தியர் மருந்து தரவது போலவே அங்கு பேரூந்து ஓடியது.

வீட்டில் ஆலோசனை மகாநாடு நடந்தது. நான் கார் ஒடப் பழகுவது என்றும் அதுவும் நாளையில் இருந்து என்றும், பணத்தையும் நானே செலுத்தவேண்டும் என்று அவர்களே தீர்மானமெடுத்து, எனக்கு அறிவித்தார்கள். சர்வதிகாரியை எதிர்க்கும் திரானி அந்தக்காலத்தில் என்னிடம் இருக்கவில்லை. எனவே தலையை ஆட்டினேன்.

கார் பழகுவது என்றால் சில சிக்கல்கள் இருந்தன.
முதலாவது ஒரு கார் இருக்க வேண்டும். அதன் பின் ஆசிரியர் வேண்டும் அதுவும் ஆசிரியர் 5 வருடங்களாக சாரதிப்பத்திரம் வைத்திருப்பவராக இருக்க வேண்டும்.மூன்றாவது சனநடமாட்டமில்லாத இடமாக இருக்க வேண்டும்.
நான்காவது  சாரதிப்பயிட்சி பாடசாலையில் தியரி படிக்க வேண்டும்.

இப்படி பல சிக்கல்கள் இருந்தாலும் எனக்கு இருந்த பெரிய பிரச்சனை கார். எங்கள் பரம்பரையிலேயே கார் இருந்ததில்லை. என்னிடம் மட்டும் இருக்குமா என்ன? தவிர, என்னை நம்பி தங்கள் காரை தருமளவுக்கு எனது நண்பர்கள் முட்டாள்களும் இல்லை.

இந்த நேரத்தில்தான், தற்பொது பரலோகத்தில் வசிக்கும் நண்பர் சிவா எனக்கு கார் வாங்கும் பணியை ஏற்றுக் கொண்டார். சிவா மிகச் சிறந்த சாரதி. இலங்கையில் இருந்து வரும்போதே வாகனம் ஓட்டத் தெரிந்தது அவருக்கு. அவர் இயக்கம் ஒன்றிற்கு வாகனம் ஓடியவர். அவர் 7 வருடங்களாக சாரதிப் பத்திரம் வைத்திருந்தார். அதைவிட வாகனம் பற்றி ஆதியில் இருந்து அந்தம்வரை அவருக்கு தெரிந்திருந்தது. எனவே எனது பிரச்சனைகளில் மூன்றை அவர் தீர்த்து வைத்தார்.

டேய்! உனக்கு ஒரு டொயோடா கொராலா 1983ம் ஆண்டு மொடல் தான் சரி என்றார். அது நிற்காமல் ஓடும் என்றார். நான் ”நிற்காமலா” என்ற போது டேய் பழுதாகாமல் ஓடும் என்று சொல்ல வந்தேன் என்றார்.

எனக்கு காரில் ஏறவும் இறங்கவும் மட்டுமே தெரிந்திருந்த காலமது. சிவா எதைச் சொன்னாலும் தலையாட்டினேன். உள்ளூர்ப் பத்தி‌ரிகையில் தேடத் தொடங்கினோம்.  கார்கள் இருந்தளவுக்கு எனது கஜானாவில் பணம் இருக்கவில்லை. நான் அமைதியாய் இருந்தாலும் சிவா அமைதியாய் இருக்கவில்லை. ஓரிரு வாரங்களில் ஒரு கார் இருக்கிறது  என்று என்னை அழைத்துப் போனான்.

அங்கு இருந்தது காரா அல்லது உக்கிப் போன இரும்பா என்று எனக்கு பெரும் சந்தேகம் வர மெதுவாய் சிவாவைக் கேட்டேன். அவனுக்கும் அந்த சந்தேகம் வந்திருக்க வேண்டும் என்னைப் பார்த்து வாயைப் பிதுக்கினான். வெறுங்கையோடு திரும்பினோம்.

அடுத்து வந்த ஒரிரு நாட்களில் மீண்டும் அழைத்தான். இப்போது ஒரு டொயோடா கோரோலா 1983ம் ஆண்டுக் கார். சிவா சொன்ன அதே நிற்காமல் ஓடும் கார். மஞ்சல் நிறமானது.

உரிமையாளருடன் ஏதோ பேசினான். அவர் திறப்பைக் கொடுத்தார். முதலில் காரை மூன்று முறை சுற்றி வந்தான். டயருக்கு உதைத்துப் பார்த்தான். எதையோ அமத்திப் பார்த்தான் அவனின் முகம் திருப்பதியாய் இருந்தது. பின்பு காரின் முன்பகுதியை திறந்து அதன் மேல் படுத்துக்கிடந்து எதையே பார்த்த பின்பு என்னையும் ஏற்றிக் கொண்டு காரை ஓடிப் பார்க்க புறப்பட்டான்.

ஒடி முடித்து, விலைபேசி, எனது பெயரில் காரை பதிவு செய்து காப்புறுதியும் செய்ய சில நாட்களாயின.

அதன்பின்னான சில வருடங்களின் பின், ஒரு குளிர்காலத்தில், ரேடியேட்டர் தண்ணி உறைந்து வெடித்து அந்தக் கார் செத்துப்போகும் என்று எனக்கு அன்று தெரிந்திருக்கவில்லை.

சிவா கார் பழக்கத் தொடங்கும் நாளும் வந்தது. ஒரு குளத்தின் பின்னால் உள்ள வழியில் நிறுத்தி என்னை சாரதி இருக்கையில் இருத்தினான்.

”டேய்..  இது கிளட்ச்”
”அது பிறேக்”
சைக்கில் ஞாபகத்தில் நான் முன் பிறேக்ஆ, பின் பிறேக்ஆ என்ற போது ”இதென்ன உன்ட கொப்பரின்ட சைக்கிலே.. டேய் இது கார்” என்றான்
”அது அக்சிலேட்டர்”
”இது கியர்”
இப்ப‌டிப் போனது முதல் நிமிடங்கள்

இப்ப கிளட்ச்ல இருந்த காலை எடுத்து அக்சிலேட்டர அமத்து என்றான்
காலை எடுத்தேன்
கார் லோங்ஜம்ப் பாய்வது மாதிரி பாய்ந்து நின்றது.

அய்யோ.. என்ற படி தலையில் அடித்துக் கொண்டான்
மெதுவாய் நுணுக்கங்கள் பிடிபட கார் ஓடத் தொடங்கியது.
தூரத்தில் எதிரே ஒரு கார் வர பயத்தில் என்னடா செய்யுறது என்றேன். ரோடு என்றால் வாகனம் வரத்தான் செய்யும், அதற்கேற்ற மாதிரி ஓட வேணும் என்று சொல்லி ஸ்டியரிங்ஐ பிடித்து திருப்பி அந்தக் காருக்கு வழிவிட்டான்.

இப்படி சிவாவும், குமார் என்று இன்னொரு நண்பரும் எனக்கு கார் ஓட்டப் பழக்கினார்கள். நானும் தியரி எல்லாம் படித்து ஆசிரியருடன் ஓடவேண்டிய நாட்களை நெருங்கிக் கொண்டிருந்தேன்.

அந்த ஆசிரியரைப் பற்றி ஊருக்குள் ஒரு வித கதை இருந்தது. பெண்கள் என்றால் வடிவாக சொல்லிக் கொடுப்பாராம், அதோடு தேவைக்கு அதிகமாகவே கதைப்பாராம் என்று.  எனக்கு அவர் என்னோடு கதைக்காவிட்டாலும் பறவாயில்லை ஆனால் தன்னிடம் இவன் கார் ஓடப் பழகினான் என்று சேர்டிபிகேட்  தந்தா காணும் என்னும் நிலையில் நான் இருந்தேன். அவரும் சில ஆயிரம் குறோணர்களை பிடுங்கிக்கொண்டு எனக்குப் பழக்கத் தொடங்கினார்.

எங்களுக்கு முதல் நாளே பிரச்சனை வந்தது. அவர் நான் எப்படி ஸ்டியறிங்கை பிடித்து திருப்ப வேணும் என்று  சொன்னவிதம்கற்பித்த முறை சிவா கற்பித்த முறையில்இருந்து மாறுபட்டிருந்தது. கையுக்கும் ஸ்டியரிங்க்கும் இடையில் 90 பாகையில் கோணம் இருக்க வேண்டும் என்றார். சிவா சீட்டை நன்கு பின்னுக்கு தள்ளி கையை ஸ்டியரிங்க்கு மேலே வைத்து ஓடுவதை நான் பார்த்ததால் நான் அப்படியே ஓடினேன். கையுக்கும் ஸ்டியரிங்க்கும் இடையில் 150 பாகையில் கோணம் இருந்தது. ஆசிரியருக்கு, அவரை விட நான் 60 பாகை அதிகமாக வைத்தது பிடிக்கவில்லை. சீட்டை பின்னுக்குத் தள்ளிய போது.. என்ன நீ படுக்கப் போகிறாயா என்றார் நக்கலாய். அடுத்தநாள் ரெண்டுபே‌ரும் பேரம் பேசி 120 பாகையில் நான் ஸ்டியரிங் பிடிக்கலாம் என்று சாமாதான ஒப்பந்தம் செய்து கொண்டோம்.

அன்றே இன்னொரு பிரச்சனை வந்தது. ஆசிரியர் வலது பக்கம் திரும்பு என்றால் நான் இடது பக்கமும், இடது பக்கம் திரும்பு என்றால் நான் வலது பக்கமும் திரும்பியபோது மனிதருக்கு கடும் கடுப்பு வந்து, வாகனத்தை நிறுத்து என்றார்.

 நானும் நிறுத்தி அவருக்கு எனது பெரிய பிரச்சனையை இப்படி விளக்கினேன். ஆசிரியரே எனக்கு தமிழிலேயே இந்த பாழாய்ப்போன வலது, இடது பெரிய பிரச்சனையாயிருக்கிறது,  நீங்களோ ‌நோர்வேஐிய மொழியில் சொல்கிறீர்கள் எனவே எனக்கு இருமடங்கு தடுமாற்றமாய் இருக்கிறது என்றேன். அன்றிலிருந்து ஆசிரியர் வலதுக்கு இடம் என்று சொல்லியும் இடதுக்கு வலது என்று சொல்லியும் என்னை சிறப்பாகக் கார் ஓட்டப் பழக்கினார்.

இறுதியாக தியரிப் பரீட்சை நடந்தது. பாஸ்பண்ணினேன். அடுத்த நாள் நான் ‌அரசஅதிகாரி ஒருவருக்கு  கார் ஓடிக் காட்ட வேண்டும். கா‌லையிலேயே வீட்டில் பெரிய பூசை எல்லாம் நடந்தது. ஊருக்கு போன் பண்ணி நேர்த்தியும் வைத்தார்கள். நானோ எனது வலது, இடது பிரச்சனையை எப்படி சமாளிப்பது முழுசிக் கொண்டிருந்தேன்.

அதிகாரி வந்தார். காரில் ஏறி இருந்தோம். பரீட்சைமுறையை விளக்கினார். கார் நேரே ஓடத் தொடங்கியதும் எனக்கு ஞானம் பிறப்பது போல ஒரு ஐடியா உதயமாகியது காரை நிறுத்தினேன். என்ன நான் சொல்லாமலே நிறுத்துகிறாய் என்றார் அதிகாரி.

ஐயா! நான் நோர்வேஐியன் இல்லை என்பது உங்களுக்குத் தொரியும் என்றேன். ஆமாம் உனது நிறமே ஒரு மாதிரித்தான் இருக்கிறது என்பது போல தைலையாட்டினார். எனக்கு இந்த வலது இடது என்பது தெரியாது. எனவே கையால காட்டுறீங்கள் நான் ஓடுகிறேன் என்றேன்

மெதுவாய் சிரித்து, முதுகில் தட்டி கையை இடது பக்கம் காட்டினார். கார் அவர் சொன்ன பக்கம் திரும்பி ஓடிக் கொண்டிருந்தது.

பி.கு:

அன்று லைசன்ஸ் எடுத்து வீட்ட வந்த போது தான் வைத்த நேர்த்தி தான் நான் பாஸ் பண்ண காரணம் என்றார் ஒருவர். அவருக்கு தெரியுமா நான்  பாஸ் பண்ண ஆசிரியரின் கை தான் காரணம் என்று.

இது பற்றி உரையாடி மகிழ நண்பன் சவா உயிரடன் இல்லை என்பது மனதை ஏனோ நெருடுகிறது.

விசா பிள்ளையாரும், வெளிநாட்டுப் பிள்ளையாரும்

கொழும்பில் வெள்ளவத்ததைக்கு பின்புறமாக  கடற்கரை வீதியில்
ஆட்டோவில் போய்க் கொண்டிருந்தேன். ஒரு சந்தியில் இருந்த வீட்டு  வளவுக்குள் காவலில் வைக்கப்பட்டிருந்தார் நம்மட பிள்ளையார்.

சிறிய கோயில் மாதிரி பில்ட்அப்பும் கொடுத்திருந்தார்கள்.
பிள்ளையாருக்கும் டெர்ரரிஸ்ட் அட்டாக் நடக்கும் என்ற பயத்தில் மதில் எல்லாம் கட்டி மிகவும் பாதுகாப்பாய்த் தான் வைத்திருந்தார்கள் ஆனால் துணைக்குத்தான் எவருமிருக்கவில்லை. ஒரு சொறி நாய் மட்டும் நித்திரையில் பிள்ளையாருக்கு பாதுகாப்பு தந்துகொண்டிருந்தது.

திருநீறு, சந்தனம் இத்தியாதி எல்லாம் முன்னுக்கு இருந்தது. பெரிதாய் ஒரு உண்டியலும் அதில் ஒரு மஞ்சல் துணி கட்டி அதன் முக்கியத்தை இன்னும் அதிகப்படுத்தியிருந்தார்கள்.

ஏதோ .. ஒரு உணர்ச்சிவசப்பட்ட பக்தனின் வீடாக்கும் என்று ‌நினைத்தபடியே கடந்து போனேன். (இது நடந்த போது ஒரு மதியம் 2-3 மணியிருக்கும்).

மாலை மீ்ண்டும் அதே வழியால் போன போது அந்த இடம் பரபரப்பாய் இருந்தது. அழகாகக் கூட்டப்பட்டு, தண்ணீர் தெளித்து, காவலுக்கிருந்த நாய் கலைக்கப்பட்டு  பக்தி, முத்திக்கொண்டிருந்தது.

சிலர் வந்து கும்பிட்டு போனார்கள், வந்தவர் சிலர் மதிலோரமாக நின்றுகொண்டார்கள், கூட்டம் கூடத்துவங்கியது. மணியடித்தார்கள், தீபம் காட்டினார்கள்

எனக்கு இது புதினமாயிருந்தது. கூத்தைப்பார்ப்போம் என்றால் நேரம் போதாதிருந்தது.

மாலை, மெதுவாய் விடயத்தை எடுத்துவிட்டேன் சற்று சாமிப்போக்காய் இருக்கும் எனது அக்கா ஒருவரிடம்.

டேய் அது விசா பிள்ளையார்டா... (எனக்கு முதலில் விசர்ப் பிள்ளையார் என்று தான் கேட்டது.. பிறகு தான் விசயம் விளங்கியது)

இப்ப அவர்ட கோயில் தான் இந்த ஏரியாவிலயே விசேசமான கோயில் என்றும். ‌
தினமும் காலையும், மாலையும் பயங்கரமாய் கூட்டம் அலைமோதும்
மாதத்தில் ஒரு நாள் விசேட பூஜை நடக்கும்
ரெண்டாயிரம் ரூபா தாளில் மாலை போடுவார்கள்
சிங்களவர்களும் வந்து கும்பிடுவார்கள்
என்றும் கோயிலின் வீக்கீபீடியா தகவல்களைச் சொன்னார்.

உந்த பிள்ளையார் சும்மா தான் இருந்தவர்.. ஆனா திடீர் என்று ஆக்களுக்கு விசா விடயத்தில அருள் குடுத்ததால இப்ப அவருக்கு விசா பிள்ளையார் என்று பேர் வைச்சிருக்கிறாங்கள் என்றும் சொன்னார். (பிள்ளையாரப்பா! நமக்கும் அந்த விசா எடுக்குற டெக்னிக்க சொல்லக்கூடாதா? நானும் ஏதோ நாலு காசு பார்க்கலாம்)

பிள்ளையார் இருக்கும் வீட்டக்காரர் தான் பூசாரியாம். டக் டக் என்று விசா கிடைக்குதாம்.. (ஷ்சப்பா.. தாங்க முடியலியே) என்றவர்
இதே மாதிரி யாழ்ப்பாணத்திலயும் ஒரு பிள்ளையார் இருக்கிறார் என்றும் அவருக்கு வெளிநாட்டு பிள்ளையார் என்று பெயராம்.. அவரும் பயங்கர பேமஸ்சாம் என்று நம்ம பிள்ளையாரின் பிராஞ்ச் ஒபிஸ் பற்றியும் விளக்கம் தந்தார்.

மீண்டும் மாலை 9மணிபோல் விசா பிள்ளையாரை கடந்து போகும் போது ஒரு வயதானவர் கண்மூடி.. பயங்கரமாய் கும்பிட்டுக் கொண்டிருந்தார்

என்னடா இது வில்லங்கமா போச்சு.. இந்த வயசிலயும் வெளி நாடு போக விரும்புகிறாறோ அப்பு..(ஏர்போட் வரை கூட தாங்கமாட்டார் போலிருந்தார் அவர்)

என நினைத்தது மனம்

பிறகு மீண்டும் பிள்ளையாரின் பெயர் ஞாபகம் வர... எனது சந்தேகம் தீர்ந்தது..

பெரிசு விசா தான் கேட்குது ஆனால் வெளிநாட்டுக்கு அல்ல....வேற இடத்துக்கு என்று.

விசா பிள்ளையாரே! நான் உன்னை நக்கல் பண்ணியதாக நினைத்து எனது விசாவை ரத்துப்பண்ணிவிடாதே
நீ அப்படி செய்தாலும் ..... இருக்கவே இருக்கிறது யாழ்ப்பபாணத்தில் வெளிநாட்டுப் பிள்ளையார் கோயில்.

புரிந்ததா மை லோட்?


பிள்ளையாரை நக்கல் பண்ணுகிறேன் என்று சொல்லி  கீபோர்ட்ஐ தூக்காதீர்கள்.. திட்டுவதற்கு. எனது பிள்ளையார் இப்படியானவர் அல்லர். சந்திலே சிந்து பாடி காசு பார்க்கும் மனிதரல்ல அவர்.  நான் கண்ட யதார்த்தத்தை சற்று நகைச்சுவை கலந்து பதிந்தேன் அவ்வளவு தான்.

வாழ்க லோட் கணபதி

மறதியின் பரிசும் வாழ்க்கையும்

நண்பர் ஒருவர் தெலைபேசியில் அழைத்து ”இன்று மாலை நீந்தப் பழகுவதற்கான வகுப்பு இருக்கிறது, ஞாபகம் இருக்கு தானே” என்ற போது தான் நான் அதை மறந்து போனது ஞாபகம் வந்தது. மறதியும் நானும் நகமும் சதையும் போல ஒன்றாயே இருந்து வருகிறோம், பல காலமாய். எனது நண்பர் ஒருவர் என்னை ”கஜனி” என்று அன்பாய் அழைப்பதையும் நான் உங்களுக்கு ‌கூறத்தான் வேண்டும்.

நீந்துவதற்குரிய காற்சட்டை என்னிடமில்லை. பெண்கள் ”பிகீனி” போடுவது போல ஆண்களும் மிகவும் குறைந்தளவு உடையுடன் நீந்தலாம் என்பதை நான் அறிவேன். இருப்பினும் எனது கட்டுமஸ்தான வண்டியுடன் அதிகுறைந்த உடையை வண்டிக்கு கீழே போட்டுக் கொண்டு அந்த நீச்சல் குளத்தில் செக்சியாக ஒரு ”கட்வோக்” நடக்க நான் மனதளவில் தயாராக இல்லை.

எனவே எனக்கு நீந்துவதற்கு ஒரு காற்சட்டை அவசியமாயிருக்கிறது. அதுவும் இன்று மாலைக்குள் தேவையாயிருக்கிறது. வேலை முடிந்ததும் அவசர அவசரமாய் அருகில் இருந்த Sports கடை ஒன்றை நோக்கி நடக்கலானேன். குளிர் -20ஐ நெருங்கிக் கொண்டிருக்க மூக்காலும் வாயாலும் வெளிவரும் காற்று புகையாய் மாறி காற்றில் கலந்து கொண்டிருந்தது.

கடைக்குள் புகுந்து காற்சட்டை தேடினேன். விலைப்பட்டியலைப் பார்த்தேன். 420 குறோணர்கள் (70 டாலர்கள்) என்றிருந்தது. இதை வாங்குவதை விட உடுப்பில்லாமலே நீந்தப்பழகலாம் போலிருந்தது. அடுத்த கடைக்குப் போனேன் அங்கு ஒரு காற்சட்டை 140 குறோணர்கள் (20 டாலர்) என்றிருந்தது. இதை விட மலிவாக காற்சட்டை கிடைப்பது நோர்வேயில் சாத்தியமில்லை என்பது புரிந்ததால் அதை எடுத்தக் கொண்டு பணம் செலுத்துமிடத்துமிடத்துக்குப் போனேன். நத்தார் நாட்கள்  நெருங்குவதால் கடையில் திருவிழா போல் சனக்கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருக்க நான் வரிசையில் நின்று பணத்தை செலுத்த முற்படும் போது தான் அவதானித்தேன் எனது தொப்பியை நான் எங்கோ மறந்து விட்டிருப்பதை. வெளியில்  -20 குளிர். தொப்பி இல்லாவிட்டால் காதுக்குத்து தொடங்கிவிடும். எனவே தொப்பியை தேடி ஓடலானேன். கடையின் கீழ் மாடி தேடியாயிற்று அங்கு இல்லை. ஓடும் படியில் ஓடி ஓடி ஏறினேன். மேல் மாடியும் தேடியாயிற்று அங்குமில்லை. மீண்டும் ஒரு முறை தேடு என்றது மனம். தேடி அலுத்து நிமிர்ந்த போது என்னருமை தொப்பி ஒரு இடத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. யாரோ ஒரு புண்ணியவான் கீழே கிடந்த எனது தொப்பியை எடுத்து கண்ணுக்குத் தெரியும் படி வைத்திருந்தார்.

ஓடும் படியில் ஓடி ஓடி இறங்கி, மீண்டும் நீண்ட வரிசையில் நின்று, பணம் கொடுத்து அவள் தந்த பையை வாங்கிக் கொண்டு வெளியில் வந்தேன் குளிரின் அகோரம் தாங்க முடியாதிருந்தது. மெதுவாய் நடக்கத் தொடங்கினேன்.

சற்றுத் தூரம் நடந்திருப்பேன், எனக்குப் பின்னால் யாரோ ”ஹலோ ஹலோ” என அழைப்பது கேட்டு திரும்பினேன். கடையில் என்னிடம் பணத்தை வாங்கிய பெண் என்னை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தாள்.

நான் கடையிலிருந்து எதையும் மறந்து போய் எடுத்து வந்துவிட்டேனோ? அது தான் கள்ளனை பிடிக்க ஓடி வருகிறாளோ என யோசனை போனதனால் எனது கையையும், பையையும் பார்த்தேன். நான் எதையும் மறந்து போய் எடுத்து வந்ததாகத் தெரியவில்லை. இதற்கிடையில் அவள் என்னருகில் மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க வந்து நின்று
”இனி மேல் இப்படி கடும் குளிரில் ஒட வைக்காதீர்கள்” என்று ‌சொல்லி ” இந்தாருங்கள் உங்கள் "பணப்பை” என்று எனது பணப்பைஐ (wallet) தந்தாள்.
என்னையறியாமலே ” மிக்க நன்றி” மிக்க நன்றி” சொன்னேன். தேவதை போல் சிரித்தபடியே திரும்பியோடினாள்.

பணப்பையை எடுத்த ஜக்கட்டினுள் வைத்துக் கொண்டேன். மனம் சகஜ நிலைக்கு திரும்பவில்லை. அப் பெண்ணின் நேர்மையை யோசித்துக் கொண்டிருந்தது.  எனது பணப்பையில் 300 டாலர் பெறுமதியான பணம், கிரடிட் கார்ட், லைசன்ஸ், மற்றும் பல முக்கிய ஆவணங்கள் என்பன இருந்தன. அப் பெண் நினைத்திருந்தால் பணத்தை எடுத்திருக்கலாம், கிரடிட் கார்ட்ஐ இணையத்தில் பாவித்து என்னை ஆண்டியாக்கி இருக்கலாம். எனது லைசன்ஸ் இல் எனது நோர்வேபதிவிலக்கம் இருக்கிறது. அதை வைத்து பல தில்லுமுள்ளுகள் செய்திருக்கலாம்.  அவை எதையும் அவள் செய்யவில்லை. தவிர கடையை விட்டு வெளியேறி சன சமுத்திரத்தில் கலந்து விட்ட என்னை -20 குளிரில் தேடிப்பிடித்து, பணப்பையை ஒப்படைத்து, எனது நன்றியைக் கூட எதிர்பாராமல் திரும்பியோடிய அப் பெண்ணின் நேர்மையை வார்த்தைகளால் எப்படிச் சொல்வேன்?

ஏன் இப்படி நடந்தது என்று சிந்தித்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தேன். இதை அதிஸ்டம் என்று சொல்லலாமா? எனக்கென்னமோ இது அதிஸ்டம் இல்லை என்றே சொல்லத்தோன்றுகிறது. ஏன் என்று நீங்கள் கேட்கலாம்? அதற்கான பதிலை எழுதுவதாயின் நான் எனது சுயசரிதத்தை எழுதவேண்டியிருக்கும். (அந்த கன்றாவியை வாசிக்கும் அவஸ்தையை நான் இப்போதைக்கு தரப்போவதில்லை).

ஆனால் எனது ”தொலைந்து போகாமல் போகும் பாதை” என்றும் ஆக்கத்தை வாசித்திருந்தால் நான் ஏன் இன்று நடந்த விடயத்தை ”எனது அதிஸ்டம் இல்லை” என்று என்று சொல்கிறேன் என்று உங்களுக்கு சில வேளைகளில் புரியலாம். தவிர ”விடை தெரியாத வினாவும், ஏகாந்தமும்” என்றும் ஆக்கத்தில் எனக்கு உபதேசம் பண்ணிய அந்தப் பெரியவரின் வார்த்தைகளாகிய ”உன்ட நெஞ்சுக்கு உண்மையாயிரு, மற்றவனுக்கு அள்ளி வைக்காதே, உதவி செய்” என்னும் வாத்தைகளுக்கும் இன்றைய நிகழ்ச்சிக்கும் மிக மிக நெருங்கிய தொடர்பிருக்கிறது என்பது எனக்கு மிகத் தெளிவாகப் புரிகிறது.

எஞ்சியிருந்த இன்றைய நாளின் பொழுதுகளெல்லாம் மிகவும் ஏகாந்தமாயிருந்தது ஊர், பேர் தெரியாத அப் பெண்ணின் செயலால்.

கடந்து வந்த காலங்கள் தந்திருந்த வேதனைகளும், சோதனைகளும் மனிதர்களின் மேல் நம்பிக்கையினை  தருவதை விட நம்பிக்கையீனத்தையே தந்திருந்தன. ஆனால் நான் கடந்து கொண்டிருக்கும் நாட்கள் மனிதர்கள் மீதான நம்பிக்கையை மீண்டும் தருபவனவாகவே இருக்கின்றன.

இறுதியாக...
என்றோ ஓர் நாள் தான் யார் என்பதை மறந்து ஒருவன் இப் பூலோகத்தில் அலைவதை நீங்கள் கண்டால்.. சந்‌தேகமேயில்லை அது நான் தான்.

வாழ்க மறதி......!


.

சொத்துக்கணக்கும் ஒரு சிக்கலும்


இடப் பெயர்வு ஏற்பட்ட போது சிறிய  பயணப்பை ஒன்றில் எனக்குத் தேவையான உடைகள் மற்றும் சில பொருட்களுடன் ஒஸ்லோ வந்து சேர்ந்தேன்.

எனது சொத்துக்களை இரு கைகளாலும் காவித்திரியுமளவுக்கு அவை சிறியதாயிருந்தது ஏதோ நான் மோட்சநிலையை அடைந்தது போல மகிழ்ச்சியைத் தந்தது.

எனக்குக் கிடைத்த அறையில் எனது உடைகள், இரு சோடிச் சப்பாத்துகள், மருந்துவகைகள், மடிக்கணணி, குழந்தைகளின் படங்கள் இவற்றைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை, கிட்டத் தட்ட ஒரு வருடத்திற்கு முன்பு.

எல்லாம் எனது கட்டுப்பாட்டுக்குள் இருப்பது போலிருந்தது அந் நாட்களில். எதிர்பாராத விதமாக எனக்கு ஏதும் நடந்தாலும் மற்றவருக்கு சிரமமில்லாமல் இருக்கும் என்றும் நான் நினைத்ததுண்டு.

நான் ஒஸ்லோவில் காலடி எடுத்து வைத்த போது கடுங் குளிர் காரணமாக முதலில் ஒரு கையுறையும், தொப்பியும், பெரியதொரு குளிர் தாங்கும் ”கோட்”உம் வாங்கினேன். வேலைக்கு போவதற்காக சப்பாத்தும் வாங்க வேண்டியேற்பட்டது. இதனால் எனது சப்பாத்துக்களின் வீதம் 100 வீதத்தால் அதிகரித்தது.

எனக்கு கிடைத்த அறையில் கட்டிலையும் ஒரு ஜன்னலையும் தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. உடுப்புகளை traveling bag இல் வைத்து எடுப்பது சிரமமாயிருந்ததனால் ஒரு சிறிய அலுமாரி ஒன்று வாங்க வேண்டியேற்பட்டது. அதில் 4 அகலமான லாச்சிகள் இருந்தன. மேல் லாச்சி மட்டும் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. மேல் லாச்சியின் ஒரு பகுதியில் மருந்துகளையும், திறப்புகள் போன்ற சில பொருட்களையும், மற்றைய பகுதியில் கடிதங்கள், ஆவணங்கள் போன்றவற்றையும் வைத்துக் கொண்டேன். உடைகளை 2ம், 3ம் லாச்சிககளில் அடுக்கிக் கொண்டேன். 4ம் லாச்சியில் கணணி சம்பந்தமான பொருடக்கள், மற்றும் சில பொருட்களையும் வைத்துக் கொண்டேன். அலுமாரியின் மேல் கையில் இருந்த புத்தகங்களை அடுக்கினேன். குழந்தைகளின் படங்களையும் அங்கு வைத்தேன்.

எல்லாவற்றையும் வைத்த பின் இன்னுமொரு அலுமாரிக்கு தேவையான அளவு பொருட்கள் இல்லாவிட்டாலும் சில பொருட்கள்  மிஞ்சியிருந்தன. மலிவு விற்பனையில் மிக ஒடுக்கமான ஆனால் உயரமான அலுமாரி ஒன்றை வாங்கிக் கொண்டேன். ஜக்கட், காற்சட்டைகள் என்பவற்றை வைக்க அது வசதியாய் இருந்தது. அதில் இன்னும் கொஞ்சம் இடம் இருக்கிறது.

இந்தளவு பொருட்கள் காணும் என்று நினைத்த பொழுது கண்முன்னே பெரும் பிரச்சனையாய் மேசை இல்லையே என்ற சிக்கல் வந்தது. கணணி திருத்துவதற்கு மேசை தேவைப்பட அதையும் வாங்கி வைத்துக் கொண்டேன். அந்த மேசையின் கீழ் திருத்த வரும் கணணிகளும். மேசையின் மேல் திருத்தும் கணணிகளும், எனது மை காய்ந்து போன பிரின்டரும் இருக்கின்றன.

இப்போது எனது அறைக்குள் நான் உள்ளே போகவும், போன வழியே திரும்பி வரவும் மட்டுமே இடம் இருக்கிறது. படுத்தெழும்பி காலை நீட்டி அலுப்பு முறிக்கக் கூட இடமில்லாமலிருக்கிறது. அதனால் அலுப்பு முறிப்பதை விட்டுவிட்டேன்.

இதற்கிடையில் உடுமலை.கொம் மூலமாக கொஞ்சம் புத்தகங்கள் வாங்கினேன். அவை  ஒரு சிறிய பெட்டியில் வந்து சேர்ந்தன. அதை ஒரு மாதிரி மேசையின் கீழ் வைத்துக் கொண்டிருக்கிறேன். அந்தப் பெட்டியினுள் எனக்கு பிடித்தமான எஸ். ராமகிருஸ்ணன் வேறு சில எழுத்தாளர்களுடன் ஒளிந்திருக்கிறார்.

‌ஆனி மாதமளவில் இருவர் கணணி திருத்த இரண்டு கணணிகள் தந்தனர். அவைகளை திருத்தியாயிற்று என்று பல தடவைகள் தொலைபேசியில் அறிவித்தாயிற்று. அவர்கள் அதை மறந்து விட்டதாகவே தெரிகிறது. அதை வெளியில் எறியவும் முடியாதிருக்கிறது. எனது விதிப்ப‌டி நான் அவற்றை எறிந்து சில நிமிடங்களுக்குள் அவர்கள் தங்கள் கணணியை திரும்பக் கேட்கும் சந்தப்பம், அவர்கள் கணணியை எடுக்காமல் விடும் சந்தர்ப்பத்தை அதிகமாக இருக்கும் என நான் நன்கு அறிவேன். ஆதலால் அவற்றை வெளியில் தூக்கி எறிய முடியாது. ஆகையால் அவற்றை மேசையின் கீழ் வைத்திருக்கிறேன்.

நண்பர் ஒருவர் தனது தர்மபத்தினிக்கு தெரியாமல் சில ”சந்தோச மருந்துகளை” பாதுகாத்துத் தரும் படி கேட்டதனால் அவற்றிற்கும் எனது மேசைக்கு கீழ்  அடைக்கலம் கொடுத்திருக்கிறேன்.

ஊத்தைஉடுப்புப் பெட்டியும்,  traveling bagஉம் கூட மேசைக்கு கீழ் தான் இருக்கிறது.

எனது மேசையின் கீழ்பகுதி நான் எதை அங்கு வைத்தாலும் எதிர்த்துப் பேசாமல் மௌனமாக இருக்கிறது என்பதில்  எனக்கு பலத்த பெருமையிருக்கிறது. வள்ளுவனுக்கு வாசுகி வாய்த்தது போல எனக்கு அது வாய்த்திருக்கிறது போல.

அண்மையில் எனது கம்பனிக்கான விளம்பரப் பொருட்கள் வந்தன. அவற்றை உயரமான அலுமாரியின் கீழ்ப்பக்கத்தில் வைத்துக் கொண்டேன். இந்த ஒரு வருடத்தில் வந்த கடிதங்கள், ஆவணங்கள் வாங்கிய புத்தகங்கள்,  சஞ்சிகைகளை சின்ன அலுமாரியின் மேல்பகுதி தாங்கிக் கொள்கிறது.

திடீர் என கால்பந்து விளையாடும் ஆசை வந்தது. அதற்கும் ஒரு சப்பாத்து தேவைப்பட்டது. பயந்து பயந்து அதையும் மேசைக்கு கீழேயே வைத்தேன். இம் முறையும் மேசை எதிர்ப்பு காட்டவில்லை.

எனக்கு முக்கியமாக ஒரு உடுப்பு மினுக்கி (Iorn box) தேவைப்படுகிறது. அதை வாங்கலாம் ஆனால் எங்கே வைப்பது? (யாரது மேசைக்கு கீழே என்று சொல்வது... வேணாம் அழுதுடுவன்)

பாட்டு கேட்டு பல காலமாகிறது. எனவே ஒரு ரேடியோ மாதிரி ஒன்று இருந்தாலும் நல்லம். மற்றவர்களை குழப்பாமல் எனக்கு விரும்பிய படம் பார்க்க ஒரு 50 அங்குல டீவியும் தூரத்தில் ‌மங்கலாய் தெரிகிறது.

”ஆறில் இருந்து அறுபது வரை” படத்தில் ரஜனி புத்தகங்கள் எழுதும் போது ஒரு சாய்வு நாட்காலியில் இருந்து எழுதுவார். அக் கதிரை மெதுவாய் ஆடிக் கொண்டிருக்கும். அப்படியானதோர்  ”ஆடும்” கதிரையில் இருந்து ஆடி ஆடி எழுதவும் ஆசையாய் இருக்கிறது.

இப்படியெல்லாம் கனவுகள் பல இருக்கின்றன எனக்கு. ஆனால்  இவற்றையெல்லாம் எனது மேசையைப் போல மௌனமாய் எனது அறை தாங்கிக் கொள்ளுமா? சில வேளைகளில் தாங்கிக் கொள்ளலாம்... ஆனால் என்னை அறையை விட்டு வெளியேறு என்று சொன்னால்........?

அய்யோ!!!


என் மேசைக்கு இது சமர்ப்பணம்..
.