சொத்துக்கணக்கும் ஒரு சிக்கலும்
இடப் பெயர்வு ஏற்பட்ட போது சிறிய பயணப்பை ஒன்றில் எனக்குத் தேவையான உடைகள் மற்றும் சில பொருட்களுடன் ஒஸ்லோ வந்து சேர்ந்தேன்.
எனது சொத்துக்களை இரு கைகளாலும் காவித்திரியுமளவுக்கு அவை சிறியதாயிருந்தது ஏதோ நான் மோட்சநிலையை அடைந்தது போல மகிழ்ச்சியைத் தந்தது.
எனக்குக் கிடைத்த அறையில் எனது உடைகள், இரு சோடிச் சப்பாத்துகள், மருந்துவகைகள், மடிக்கணணி, குழந்தைகளின் படங்கள் இவற்றைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை, கிட்டத் தட்ட ஒரு வருடத்திற்கு முன்பு.
எல்லாம் எனது கட்டுப்பாட்டுக்குள் இருப்பது போலிருந்தது அந் நாட்களில். எதிர்பாராத விதமாக எனக்கு ஏதும் நடந்தாலும் மற்றவருக்கு சிரமமில்லாமல் இருக்கும் என்றும் நான் நினைத்ததுண்டு.
நான் ஒஸ்லோவில் காலடி எடுத்து வைத்த போது கடுங் குளிர் காரணமாக முதலில் ஒரு கையுறையும், தொப்பியும், பெரியதொரு குளிர் தாங்கும் ”கோட்”உம் வாங்கினேன். வேலைக்கு போவதற்காக சப்பாத்தும் வாங்க வேண்டியேற்பட்டது. இதனால் எனது சப்பாத்துக்களின் வீதம் 100 வீதத்தால் அதிகரித்தது.
எனக்கு கிடைத்த அறையில் கட்டிலையும் ஒரு ஜன்னலையும் தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. உடுப்புகளை traveling bag இல் வைத்து எடுப்பது சிரமமாயிருந்ததனால் ஒரு சிறிய அலுமாரி ஒன்று வாங்க வேண்டியேற்பட்டது. அதில் 4 அகலமான லாச்சிகள் இருந்தன. மேல் லாச்சி மட்டும் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. மேல் லாச்சியின் ஒரு பகுதியில் மருந்துகளையும், திறப்புகள் போன்ற சில பொருட்களையும், மற்றைய பகுதியில் கடிதங்கள், ஆவணங்கள் போன்றவற்றையும் வைத்துக் கொண்டேன். உடைகளை 2ம், 3ம் லாச்சிககளில் அடுக்கிக் கொண்டேன். 4ம் லாச்சியில் கணணி சம்பந்தமான பொருடக்கள், மற்றும் சில பொருட்களையும் வைத்துக் கொண்டேன். அலுமாரியின் மேல் கையில் இருந்த புத்தகங்களை அடுக்கினேன். குழந்தைகளின் படங்களையும் அங்கு வைத்தேன்.
எல்லாவற்றையும் வைத்த பின் இன்னுமொரு அலுமாரிக்கு தேவையான அளவு பொருட்கள் இல்லாவிட்டாலும் சில பொருட்கள் மிஞ்சியிருந்தன. மலிவு விற்பனையில் மிக ஒடுக்கமான ஆனால் உயரமான அலுமாரி ஒன்றை வாங்கிக் கொண்டேன். ஜக்கட், காற்சட்டைகள் என்பவற்றை வைக்க அது வசதியாய் இருந்தது. அதில் இன்னும் கொஞ்சம் இடம் இருக்கிறது.
இந்தளவு பொருட்கள் காணும் என்று நினைத்த பொழுது கண்முன்னே பெரும் பிரச்சனையாய் மேசை இல்லையே என்ற சிக்கல் வந்தது. கணணி திருத்துவதற்கு மேசை தேவைப்பட அதையும் வாங்கி வைத்துக் கொண்டேன். அந்த மேசையின் கீழ் திருத்த வரும் கணணிகளும். மேசையின் மேல் திருத்தும் கணணிகளும், எனது மை காய்ந்து போன பிரின்டரும் இருக்கின்றன.
இப்போது எனது அறைக்குள் நான் உள்ளே போகவும், போன வழியே திரும்பி வரவும் மட்டுமே இடம் இருக்கிறது. படுத்தெழும்பி காலை நீட்டி அலுப்பு முறிக்கக் கூட இடமில்லாமலிருக்கிறது. அதனால் அலுப்பு முறிப்பதை விட்டுவிட்டேன்.
இதற்கிடையில் உடுமலை.கொம் மூலமாக கொஞ்சம் புத்தகங்கள் வாங்கினேன். அவை ஒரு சிறிய பெட்டியில் வந்து சேர்ந்தன. அதை ஒரு மாதிரி மேசையின் கீழ் வைத்துக் கொண்டிருக்கிறேன். அந்தப் பெட்டியினுள் எனக்கு பிடித்தமான எஸ். ராமகிருஸ்ணன் வேறு சில எழுத்தாளர்களுடன் ஒளிந்திருக்கிறார்.
ஆனி மாதமளவில் இருவர் கணணி திருத்த இரண்டு கணணிகள் தந்தனர். அவைகளை திருத்தியாயிற்று என்று பல தடவைகள் தொலைபேசியில் அறிவித்தாயிற்று. அவர்கள் அதை மறந்து விட்டதாகவே தெரிகிறது. அதை வெளியில் எறியவும் முடியாதிருக்கிறது. எனது விதிப்படி நான் அவற்றை எறிந்து சில நிமிடங்களுக்குள் அவர்கள் தங்கள் கணணியை திரும்பக் கேட்கும் சந்தப்பம், அவர்கள் கணணியை எடுக்காமல் விடும் சந்தர்ப்பத்தை அதிகமாக இருக்கும் என நான் நன்கு அறிவேன். ஆதலால் அவற்றை வெளியில் தூக்கி எறிய முடியாது. ஆகையால் அவற்றை மேசையின் கீழ் வைத்திருக்கிறேன்.
நண்பர் ஒருவர் தனது தர்மபத்தினிக்கு தெரியாமல் சில ”சந்தோச மருந்துகளை” பாதுகாத்துத் தரும் படி கேட்டதனால் அவற்றிற்கும் எனது மேசைக்கு கீழ் அடைக்கலம் கொடுத்திருக்கிறேன்.
ஊத்தைஉடுப்புப் பெட்டியும், traveling bagஉம் கூட மேசைக்கு கீழ் தான் இருக்கிறது.
எனது மேசையின் கீழ்பகுதி நான் எதை அங்கு வைத்தாலும் எதிர்த்துப் பேசாமல் மௌனமாக இருக்கிறது என்பதில் எனக்கு பலத்த பெருமையிருக்கிறது. வள்ளுவனுக்கு வாசுகி வாய்த்தது போல எனக்கு அது வாய்த்திருக்கிறது போல.
அண்மையில் எனது கம்பனிக்கான விளம்பரப் பொருட்கள் வந்தன. அவற்றை உயரமான அலுமாரியின் கீழ்ப்பக்கத்தில் வைத்துக் கொண்டேன். இந்த ஒரு வருடத்தில் வந்த கடிதங்கள், ஆவணங்கள் வாங்கிய புத்தகங்கள், சஞ்சிகைகளை சின்ன அலுமாரியின் மேல்பகுதி தாங்கிக் கொள்கிறது.
திடீர் என கால்பந்து விளையாடும் ஆசை வந்தது. அதற்கும் ஒரு சப்பாத்து தேவைப்பட்டது. பயந்து பயந்து அதையும் மேசைக்கு கீழேயே வைத்தேன். இம் முறையும் மேசை எதிர்ப்பு காட்டவில்லை.
எனக்கு முக்கியமாக ஒரு உடுப்பு மினுக்கி (Iorn box) தேவைப்படுகிறது. அதை வாங்கலாம் ஆனால் எங்கே வைப்பது? (யாரது மேசைக்கு கீழே என்று சொல்வது... வேணாம் அழுதுடுவன்)
பாட்டு கேட்டு பல காலமாகிறது. எனவே ஒரு ரேடியோ மாதிரி ஒன்று இருந்தாலும் நல்லம். மற்றவர்களை குழப்பாமல் எனக்கு விரும்பிய படம் பார்க்க ஒரு 50 அங்குல டீவியும் தூரத்தில் மங்கலாய் தெரிகிறது.
”ஆறில் இருந்து அறுபது வரை” படத்தில் ரஜனி புத்தகங்கள் எழுதும் போது ஒரு சாய்வு நாட்காலியில் இருந்து எழுதுவார். அக் கதிரை மெதுவாய் ஆடிக் கொண்டிருக்கும். அப்படியானதோர் ”ஆடும்” கதிரையில் இருந்து ஆடி ஆடி எழுதவும் ஆசையாய் இருக்கிறது.
இப்படியெல்லாம் கனவுகள் பல இருக்கின்றன எனக்கு. ஆனால் இவற்றையெல்லாம் எனது மேசையைப் போல மௌனமாய் எனது அறை தாங்கிக் கொள்ளுமா? சில வேளைகளில் தாங்கிக் கொள்ளலாம்... ஆனால் என்னை அறையை விட்டு வெளியேறு என்று சொன்னால்........?
அய்யோ!!!
என் மேசைக்கு இது சமர்ப்பணம்.
.
.
Subscribe to:
Post Comments (Atom)
வெற்று மனத்தின் சொத்து யாத்திரை எனக்கும் மூன்று தடவைகள் வாய்த்தது.
ReplyDeleteநீங்கள் ஒன்றுடன் தப்பிவிட்டீர்களே என கோபமாக இருக்கிறது.
டாக்டர்! எரிச்சல், கோபம் ஆகியன இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.என கேள்விப்பட்டிருக்கிறேன். கவனமாயிருங்கோ!!!
ReplyDeleteஅப்போ இது அரசியல் சம்பந்தப்பட்ட பதிவு இல்லையா...
ReplyDeleteசஞ்சயன் உங்கட கட்டிலுக்கு கீழ இடமில்லையா? உடுப்பு மினுக்கியை கட்டிலுக்கு கீழ வையுங்கோவன்:))))))
ReplyDeleteஉங்களின் பின்னூக்கங்களுக்கு நன்றி நண்பர்களே.
ReplyDeletephilosophy prabhakaran @ அந்தளவு நான் இன்னும் முன்னேறவில்லை.
yarl @ கட்டிலுக்கு கீழே ஏறகனவே சில பொருட்கள் இருக்கின்றன...