மறந்து, மறைந்து போகும் கதை

ஈழத்து முற்றத்தில் ஃபஹீமாஜஹான் எழுதிய ”மாய்வெல ஊரின் வரலாற்றுத் தகவல்கள்” என்னும்  பதிவை வாசிக்கக்கிடைத்தது.  அதை வாசிப்பதற்கு சில நாட்களுக்கு முன் தான் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ”யாமம்” வாசித்து முடித்திருந்தேன். அப் புத்தகத்தின் முன்னுரையில் எஸ். ரா ”எல்லா நகரங்களும் ஏதோ சில கதைகளைச் சுமந்து கொண்டிருக்கின்றன” என்கிறார்.
எவ்வளவு உண்மையான வார்த்தைகள் அவை.

அவ் வார்த்தைகளின் அர்த்தத்தை ஃபஹீமாஜஹான் இன் பதிவின் ஊடாகவும் உணரக்கூடியதாக இருந்தது. ஃபஹீமாஜஹான்  சொல்லியிருப்பதோ ஒரு ஊரின் சுயசரிதம். எஸ். ரா பேசுவதோ ஒவ்வொரு ஊரின் வெளிகளிலும், சாலைகளிலும், வீடுகளிலும், தோட்டங்களிலும், மயானங்களிலும், கோயில்களிலும், பாடசாலைகளிலும், அவ்வூரின் காற்றிலும் அலைந்து திரியும் கதைகளைப் பற்றியது. உலகில் எழுதப்படும் கதைகளின் ஆரம்பம் எங்கோ ஒரு ஊரின் ஒரு மூலையில் இருந்தே ஆரம்பிக்கிறது போலிருக்கிறது எனக்கு.

நான் முன்பு வட மேற்கு நோர்வேயின் ஒரு மிகச் சிறிய தீவில் வாழ்ந்திருந்தேன். எமது நகரசபையில் ஏறத்தாள 4000 மக்களே வசித்தனர். எமது நகரசபையில் எறத்தாள 4 கிராமங்கள் இருந்தன. அவற்றில் ஒன்று பாரம்பரியமாக வடதுருவத்தில் திமிங்கிலம், கடற்சிங்கம், துருவக்கரடி ஆகிய மிருகங்களை வேட்டையாடும் கடலோடிகள் வாழ்ந்திருந்த கிராமம்.

இன்றோ இந்தக் கிராமத்தில் அத் தொழிலில் ஈடுபடுபவர்கள் எவருமில்லை. அத்துடன் அந்தக் கிராமத்தில் 130 வீடுகளுக்கு மேல் நிட்சயமாக இல்லை. ஆனால் இன்று அவர்களின் பழமைவாய்ந்த வேட்டையாடும் கப்பல் ஒன்றை தரைக்கிழுத்து அதைச் சுற்றி மண்டபம் எழுப்பி அத்துடன் அதற்கருகே அருங்காட்சியகம் ஒன்றையும் நிறுவியிருக்கிறார்கள் அம் மக்கள். அருங்காட்சியகத்தில் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையையும் சுற்றாடலையும் அப்படியே புகைப்படங்களாகவும், கானொளிகளாகவும், பத்திரிகைகள், ஆவணங்கள், உடைகள், பொருட்கள், பதப்படுத்தப்பட்ட மிருகங்கள் என அது இரு மாடிகளைக் கொண்டிருக்கிறது. தங்கள் ஊரின் சுயசரிதத்தில் பெருமை கொண்ட மக்கள் இவர்கள்.

இந்தக் கிராமத்தில் ஒரு பௌதீகவியல் ஆசிரியர் ஒருவர் இருக்கிறார். அவரின் பொழுது போக்கு கிராமத்தின் சுயசரிதத்தை ஆவணப்படுத்துவதே. 4 - 5 வருடங்களுக்கு ஒரு முறை ”கிராமத்தின் புத்தகம்” என்னும் புத்தகத்தை வெளியிடுவார். அதில் அக் கிராமத்தில் வாழும் அனைவரின் சரிதமும் இருக்கும்.  உதாரணமாக ஒருவரின்  பெயரை எடுத்துக் கொண்டால் அன்னாரின் துணைவரின் பெயர், குழந்தைகளின் பெயர், குழந்தைகளின் துணைவர்களின் பெயர், ‌பேரக் குழந்தைகளின் பெயர் என சகல விபரங்களும் இருக்கும். தவிர கிராமத்தில் நடந்த முக்கிய மாற்றங்கள் பற்றியும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும்.

இதைத் தவிர 4 - 5 வருடங்களுக்கு ஒரு முறை ”குடிபெயர்ந்தவர்களின் புத்தகம்” என்றும் ஒரு புத்தகம் வெளியிடுகிறார். அதில் குடி பெயர்ந்தவர்களின் பெயர்கள், எங்கு குடிபெயர்ந்தார்கள் என்னும் விபரமும் இருக்கும்.

இவரைப் போன்றே ஒவ்வொரு கிராமத்திலும் யாரோ ஒருவர் தங்கள் ஊரின் சுயசரிதத்தை ஆவணப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அரசின் மக்கள் பதிவுத் திணைக்களத்தின் ஆதரவும், எழுத்தாளர்களின் ஆர்வமும்,  புத்தகங்களின் விற்பனையும் இந்த ஆவணப்படுத்தை சாத்தியமாக்குகின்றன. அந்தச் சிறிய கிராமத்தின் சரித்திரத்தில் சில காலங்கள் அங்கு வாழ்ந்து வெளியேறிய எனது பெயரும் அப் புத்தகங்களினூடாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது எனக்கு மகிழ்ச்சியே.

அண்மையில் நேர்வேயின் உள்ளூர் சரித்திர நிறுவனம் என்னும் அரச நிறுவனம் ஒன்றின் ”குடிபெயர்ந்தவர்களின் சரித்திரம்” என்னும் திட்டத்தில் சேர்ந்து பணியாற்ற அழைக்கப்பட்டிருந்தேன். சம்பளமற்ற வேலைதான் என்றாலும் மனதுக்கு இதமாய் இருந்ததால் ஒப்புக்கொண்டேன். ”நோர்வேக்கு தமிழர்களின் வருகையும் வாழ்வும்” என்னும் தலைப்பில் ஒரு திட்டம் தொடங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் நாம் நோர்வேக்கு வந்த பொழுது எப்படி வாழ்ந்தோம், என்ன என்ன பொருட்களை கொண்டு வந்தோம், கடிதங்கள், புகைப்படங்கள்,கானொளிகள், ஒலி நாடாக்கள், கதைகள், கவிதைகள், இலக்கிய இதழ்கள், உடைகள் போன்றவற்றை தமிழர்களிடம் இருந்து சேகரித்து அரச செலவில் மிகவும் உயர்ந்த பாதுகாப்புடன் பாதுகாக்கப்படும். அவை எனது குழந்தைகளின் குழந்தைகளுக்கு அல்லது அவர்களின் குழந்தைகளுக்கு பல கதைகள் சொல்லும். நம் ஊரில் காணாமல் போன கதைகளைப் போலிருக்காது இவை.

எமது ஊரின் சரித்தரத்தையும் கதைகளையும் நாம் ஆவணப்படுத்தாததால் தொலைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் புலம் பெயர்ந்து வந்த நாட்டில் அந் நாட்டினர் தமது சரித்திரத்தை ஆவணப்படுத்தி பாதுகாப்பதாக எமது சரித்திரத்தையும் சேர்த்தல்லவா ஆவணப்படுத்துகிறார்கள்.

நாம் கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது.


இந்தப் பதிவுக்கு கரு தந்த தம்பி கானா பிரபாவின் ஈழத்து முற்றத்துக்கு எனது நன்றிகள்.

.

6 comments:

 1. "எஸ். ரா ”எல்லா நகரங்களும் ஏதோ சில கதைகளைச் சுமந்து கொண்டிருக்கின்றன”

  எனது ஞாபகத்தில் அவரது வார்த்தைகள் இன்னமும் உலராது இருக்கின்றபோது உங்கள் பதிவு மகிழ்ச்சியளிக்கிறது.

  ReplyDelete
 2. வண்ணநிலவனின் 'தாமிரபரணி கதைகள்' படித்த பிறகு எனக்கும் 'நகரமொன்றை 'மையமாக வைத்து கதைகள் எழுதும் ஆசை ஏற் பட்டது.உங்கள் ஆதங்கம் நியாயமானது.

  ReplyDelete
 3. இந்தப் பதிவுக்கு கரு தந்த தம்பி கானா பிரபாவின் ஈழத்து முற்றத்துக்கு எனது நன்றிகள்.//

  முதலில் அது என்னுடையது அல்ல குழுமம் என்பதை அண்ணனுக்கு சொல்லி வைக்கிறேன் ;)

  உங்கள் பதிவை முன்வைத்து நானும் ஏதாவது எழுத வேண்டும் என்பதைத் தூண்டிவிட்டது

  ReplyDelete
 4. ”கிராமத்தின் புத்தகம்” படிக்கும்போதே சந்தோசமாக இருக்கிறது.

  நல்ல விடயங்களை அறியத் தந்துள்ளீர்கள்.

  ReplyDelete
 5. பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி. நீங்கள் செய்து வரும் சமூகசேவைகளும் மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து இனிதே பயணியுங்கள்.

  ReplyDelete
 6. தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  ReplyDelete

பின்னூட்டங்கள்