மறதியின் பரிசும் வாழ்க்கையும்

நண்பர் ஒருவர் தெலைபேசியில் அழைத்து ”இன்று மாலை நீந்தப் பழகுவதற்கான வகுப்பு இருக்கிறது, ஞாபகம் இருக்கு தானே” என்ற போது தான் நான் அதை மறந்து போனது ஞாபகம் வந்தது. மறதியும் நானும் நகமும் சதையும் போல ஒன்றாயே இருந்து வருகிறோம், பல காலமாய். எனது நண்பர் ஒருவர் என்னை ”கஜனி” என்று அன்பாய் அழைப்பதையும் நான் உங்களுக்கு ‌கூறத்தான் வேண்டும்.

நீந்துவதற்குரிய காற்சட்டை என்னிடமில்லை. பெண்கள் ”பிகீனி” போடுவது போல ஆண்களும் மிகவும் குறைந்தளவு உடையுடன் நீந்தலாம் என்பதை நான் அறிவேன். இருப்பினும் எனது கட்டுமஸ்தான வண்டியுடன் அதிகுறைந்த உடையை வண்டிக்கு கீழே போட்டுக் கொண்டு அந்த நீச்சல் குளத்தில் செக்சியாக ஒரு ”கட்வோக்” நடக்க நான் மனதளவில் தயாராக இல்லை.

எனவே எனக்கு நீந்துவதற்கு ஒரு காற்சட்டை அவசியமாயிருக்கிறது. அதுவும் இன்று மாலைக்குள் தேவையாயிருக்கிறது. வேலை முடிந்ததும் அவசர அவசரமாய் அருகில் இருந்த Sports கடை ஒன்றை நோக்கி நடக்கலானேன். குளிர் -20ஐ நெருங்கிக் கொண்டிருக்க மூக்காலும் வாயாலும் வெளிவரும் காற்று புகையாய் மாறி காற்றில் கலந்து கொண்டிருந்தது.

கடைக்குள் புகுந்து காற்சட்டை தேடினேன். விலைப்பட்டியலைப் பார்த்தேன். 420 குறோணர்கள் (70 டாலர்கள்) என்றிருந்தது. இதை வாங்குவதை விட உடுப்பில்லாமலே நீந்தப்பழகலாம் போலிருந்தது. அடுத்த கடைக்குப் போனேன் அங்கு ஒரு காற்சட்டை 140 குறோணர்கள் (20 டாலர்) என்றிருந்தது. இதை விட மலிவாக காற்சட்டை கிடைப்பது நோர்வேயில் சாத்தியமில்லை என்பது புரிந்ததால் அதை எடுத்தக் கொண்டு பணம் செலுத்துமிடத்துமிடத்துக்குப் போனேன். நத்தார் நாட்கள்  நெருங்குவதால் கடையில் திருவிழா போல் சனக்கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருக்க நான் வரிசையில் நின்று பணத்தை செலுத்த முற்படும் போது தான் அவதானித்தேன் எனது தொப்பியை நான் எங்கோ மறந்து விட்டிருப்பதை. வெளியில்  -20 குளிர். தொப்பி இல்லாவிட்டால் காதுக்குத்து தொடங்கிவிடும். எனவே தொப்பியை தேடி ஓடலானேன். கடையின் கீழ் மாடி தேடியாயிற்று அங்கு இல்லை. ஓடும் படியில் ஓடி ஓடி ஏறினேன். மேல் மாடியும் தேடியாயிற்று அங்குமில்லை. மீண்டும் ஒரு முறை தேடு என்றது மனம். தேடி அலுத்து நிமிர்ந்த போது என்னருமை தொப்பி ஒரு இடத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. யாரோ ஒரு புண்ணியவான் கீழே கிடந்த எனது தொப்பியை எடுத்து கண்ணுக்குத் தெரியும் படி வைத்திருந்தார்.

ஓடும் படியில் ஓடி ஓடி இறங்கி, மீண்டும் நீண்ட வரிசையில் நின்று, பணம் கொடுத்து அவள் தந்த பையை வாங்கிக் கொண்டு வெளியில் வந்தேன் குளிரின் அகோரம் தாங்க முடியாதிருந்தது. மெதுவாய் நடக்கத் தொடங்கினேன்.

சற்றுத் தூரம் நடந்திருப்பேன், எனக்குப் பின்னால் யாரோ ”ஹலோ ஹலோ” என அழைப்பது கேட்டு திரும்பினேன். கடையில் என்னிடம் பணத்தை வாங்கிய பெண் என்னை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தாள்.

நான் கடையிலிருந்து எதையும் மறந்து போய் எடுத்து வந்துவிட்டேனோ? அது தான் கள்ளனை பிடிக்க ஓடி வருகிறாளோ என யோசனை போனதனால் எனது கையையும், பையையும் பார்த்தேன். நான் எதையும் மறந்து போய் எடுத்து வந்ததாகத் தெரியவில்லை. இதற்கிடையில் அவள் என்னருகில் மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க வந்து நின்று
”இனி மேல் இப்படி கடும் குளிரில் ஒட வைக்காதீர்கள்” என்று ‌சொல்லி ” இந்தாருங்கள் உங்கள் "பணப்பை” என்று எனது பணப்பைஐ (wallet) தந்தாள்.
என்னையறியாமலே ” மிக்க நன்றி” மிக்க நன்றி” சொன்னேன். தேவதை போல் சிரித்தபடியே திரும்பியோடினாள்.

பணப்பையை எடுத்த ஜக்கட்டினுள் வைத்துக் கொண்டேன். மனம் சகஜ நிலைக்கு திரும்பவில்லை. அப் பெண்ணின் நேர்மையை யோசித்துக் கொண்டிருந்தது.  எனது பணப்பையில் 300 டாலர் பெறுமதியான பணம், கிரடிட் கார்ட், லைசன்ஸ், மற்றும் பல முக்கிய ஆவணங்கள் என்பன இருந்தன. அப் பெண் நினைத்திருந்தால் பணத்தை எடுத்திருக்கலாம், கிரடிட் கார்ட்ஐ இணையத்தில் பாவித்து என்னை ஆண்டியாக்கி இருக்கலாம். எனது லைசன்ஸ் இல் எனது நோர்வேபதிவிலக்கம் இருக்கிறது. அதை வைத்து பல தில்லுமுள்ளுகள் செய்திருக்கலாம்.  அவை எதையும் அவள் செய்யவில்லை. தவிர கடையை விட்டு வெளியேறி சன சமுத்திரத்தில் கலந்து விட்ட என்னை -20 குளிரில் தேடிப்பிடித்து, பணப்பையை ஒப்படைத்து, எனது நன்றியைக் கூட எதிர்பாராமல் திரும்பியோடிய அப் பெண்ணின் நேர்மையை வார்த்தைகளால் எப்படிச் சொல்வேன்?

ஏன் இப்படி நடந்தது என்று சிந்தித்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தேன். இதை அதிஸ்டம் என்று சொல்லலாமா? எனக்கென்னமோ இது அதிஸ்டம் இல்லை என்றே சொல்லத்தோன்றுகிறது. ஏன் என்று நீங்கள் கேட்கலாம்? அதற்கான பதிலை எழுதுவதாயின் நான் எனது சுயசரிதத்தை எழுதவேண்டியிருக்கும். (அந்த கன்றாவியை வாசிக்கும் அவஸ்தையை நான் இப்போதைக்கு தரப்போவதில்லை).

ஆனால் எனது ”தொலைந்து போகாமல் போகும் பாதை” என்றும் ஆக்கத்தை வாசித்திருந்தால் நான் ஏன் இன்று நடந்த விடயத்தை ”எனது அதிஸ்டம் இல்லை” என்று என்று சொல்கிறேன் என்று உங்களுக்கு சில வேளைகளில் புரியலாம். தவிர ”விடை தெரியாத வினாவும், ஏகாந்தமும்” என்றும் ஆக்கத்தில் எனக்கு உபதேசம் பண்ணிய அந்தப் பெரியவரின் வார்த்தைகளாகிய ”உன்ட நெஞ்சுக்கு உண்மையாயிரு, மற்றவனுக்கு அள்ளி வைக்காதே, உதவி செய்” என்னும் வாத்தைகளுக்கும் இன்றைய நிகழ்ச்சிக்கும் மிக மிக நெருங்கிய தொடர்பிருக்கிறது என்பது எனக்கு மிகத் தெளிவாகப் புரிகிறது.

எஞ்சியிருந்த இன்றைய நாளின் பொழுதுகளெல்லாம் மிகவும் ஏகாந்தமாயிருந்தது ஊர், பேர் தெரியாத அப் பெண்ணின் செயலால்.

கடந்து வந்த காலங்கள் தந்திருந்த வேதனைகளும், சோதனைகளும் மனிதர்களின் மேல் நம்பிக்கையினை  தருவதை விட நம்பிக்கையீனத்தையே தந்திருந்தன. ஆனால் நான் கடந்து கொண்டிருக்கும் நாட்கள் மனிதர்கள் மீதான நம்பிக்கையை மீண்டும் தருபவனவாகவே இருக்கின்றன.

இறுதியாக...
என்றோ ஓர் நாள் தான் யார் என்பதை மறந்து ஒருவன் இப் பூலோகத்தில் அலைவதை நீங்கள் கண்டால்.. சந்‌தேகமேயில்லை அது நான் தான்.

வாழ்க மறதி......!


.

5 comments:

  1. ”உன்ட நெஞ்சுக்கு உண்மையாயிரு, மற்றவனுக்கு அள்ளி வைக்காதே, உதவி செய்”

    Thank god, God is with.

    ReplyDelete
  2. மறதியில் எனக்கு நிங்கள் அண்ணனா? தம்பியா?

    http://stethinkural.blogspot.com/search/label/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BF

    ReplyDelete
  3. நல்லதையே செய், நல்லதையே நினை, நல்லதே நடக்கும் இதற்கமையவே உங்கள் வாழ்கையும் பயணிக்கிறது என்று நினைக்கிறேன். பதிவின் முற்பகுதி சிரிக்கவும் இறுதிப்பகுதி சிந்திக்கவும் வைக்கிறது. வாழ்த்துக்கள் சஞ்சயன்.

    ReplyDelete
  4. நீங்கள் எதை மறந்தாலும் இனி வாழ் நாளில் அந்தப் பெண்ணை மறக்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். .bag ஐ விட்டு ,விட்டு வருவது அருமையான உத்தி. 'அப்பனுக்கே பாடம் சொல்லும் இப்படியான சுப்பையன்கள்' எனக்கு நண்பர்களாகக் கிடைத்திருப்பதற்கு நான் முற் பிறவியில் தவம் செய்திருக்க வேண்டும்.

    ReplyDelete
  5. நன்றி நண்பர்களே.

    டாக்கடர் @.. நீங்க மறக்கிறத கெதியில மறக்க வாழ்த்துகிறேன்.

    உமா அண்ணண் @... பாம்பின் கால் பாம்பறியுமாமே... உண்மைபோலிருக்கிறதே....

    ReplyDelete

பின்னூட்டங்கள்