ஐம்பது வளைக்கிறது ஐந்து வளைகிறது

ஒரு நெட்கபேயில் தான் அப் பெண்ணை முதன் முதலில் சந்தித்தேன். அதன்பின் வந்த மாதங்களில் நான் அக்கடையில் நிற்‌கும் போதெல்லாம் அவர் வந்தார் அல்லது அவர் அங்கு நிற்கும் போதெல்லாம் நான் அங்கு போனேன். இவை இரண்டும் தற்செயலானவையே. கடை உரிமையாளரிடம் விசாரித்தேன். அடிக்கடி தனது கடைக்கு வருபவர் என்றார்.

அவரின் ந‌டையுடை பாவனை என்னை அவரிடம் ஈடுபாடு கொள்ள வைக்கவில்லை மாறாக ‌வெறுக்க வைத்தது. அதிகாரமான அடாவடித்தனமான குரல், கண்களில் எனக்கு பிடிக்காத ஏதோ ஒரு பார்வை, வயதுக்கு தகாத உடை, பேச்சில் கபடமும், சக மனிதனை மதிக்காத எளனமும் என எனக்கு பிடிக்காத எல்லாம் அவரிடம் இருந்தது.

பணம், கள்ளப் பொருட்கள், கள்ள வாகனங்கள் பற்றியே அவர் பேசினார். அவரின் சுவாசம் கூட பணம் பணம் என்று தான் வெளிவருவது போலிருந்தது எனக்கு. அவரை  கண்ட முதல் நிமிடத்திலிருந்தே எனக்கு அவருடன் ஆகாது என மனம் சொல்லிவிட்டது.

ஆனால் என்னுள் இருக்கும் ஒரு பலவீனத்தினால் அவருடன் இன்றுவரை உறவாட வேண்டியிருக்கிறது. ஆம், எனக்கு மனிதர்களுடனான உறவை முறித்துக்கொள்ளும் தன்மை இல்லாதிருக்கிறது. இதனால் பல தடவைகள் பல சிக்கல்களுக்கு உள்ளாகிய பின்னும் நான் திருந்துவதாயில்லை. நாய் வால் மாதிரி....

இங்கு குறிப்பிட்ட மனிதரால் எனக்கு சிக்கல் ஏதும் வரவில்லை, இன்னும். ஆயினும் அவரை சந்திக்கும் போதெல்லாம் அசௌகர்யம் உணர்கிறேன். நான் பேசாது இருந்தாலும் அவர் பேச்சை தொடங்குகிறார். நான் பேச வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறேன்.

அன்றும் அப்படித்தான் நான் அந்தக் கடைக்கு வேலை நிமித்தமாக போயிருந்தேன். கடை பூட்டும் நேரம் அவரும் உள்ளே வந்தார். ஒரு பையில் சில ஆவணங்களுடன் வந்தார். கணணியில குந்தி அவ்வாவணங்களைப் போல் சில ஆவணங்கள் தயாரித்தார். அதேவேளை விற்பனைக்கென சில குளிர்கால ஜக்கட்கள் கொண்டுவந்திருந்தார். அவை மிக மிக விலையுயர்ந்தவை 500 டாலர்களில் இருந்து 1000 டாலர் வரை விலைமதிப்புடயவை.

என்னிடமும் அவற்றைக் காட்டி அரை விலைக்குவாங்குகிறாயா என்றார்? நான் மெளனித்தேன். ஏய்.. உன்னைத் தான் கேட்கிறேன்.. சிறந்த ஜக்கட் இருக்கிறது வாங்குகிறாயா என்றார். நான் இல்லை வேண்டாம் என்றேன். இல்லை போட்டுப் பார் என்று வற்புறுத்தினார்.

இவை எப்படி உனக்கு கிடைத்தது என்றேன். தனக்கு ஒரு கடைக்காரர் பணம் தரவேண்டியிருந்ததாகவும், அதற்குப் பதிலாக இவற்றை தந்ததாகவும் என்று நம்பமுடியாத ஒரு பொய்யைச் சொன்னார். நானும் தலையை ஆட்டி அதை நம்பியது மாதிரி காட்டிக் கொண்டேன்.

பின்பொரு நாள் ஒரு கார் விற்க இருப்பதாகவும் அதை வாங்குகிறாயா? எனவும் கேட்டார். நான் என்னிடம் ஒரு வாகனம் இருப்பதாகச் சொன்னேன். அதை தான் வாங்குவதாகவும் என்னை அவரின் வாகனத்தை வாங்கும் படியும் கேட்டார். மறுத்தேன். மீண்டும் மீண்டும் மறுத்த பின் ஓய்ந்தார்.

அண்மையில் அவரைக் காணக் கிடைத்த போது 13 -.14 வயது நிரம்பிய பையன் ஒருவனை தன்னுடன் அழைத்து வந்திருந்தார். கடைக்காரர் அவர் யார் என கேட்டபோது தனது காதலன் என்றும், இன்னும் அருவருக்கத் தக்க மொழியில் ஏதோ சொன்னார். அவனுக்கும் அது புரியும் வயது என்பதால் அந்தச் சிறுவனும் சிரித்தான். இவரின் பொருட்களை காவித்திரிந்தான், அவரின் கட்டளைகளை நிறைவேற்றினான், ஏனை நேரங்களில் கடைக்குள் நடந்து திரிந்தான்.

அவன் என்னருகில் வந்த போது நாளை பாடசாலையல்லவா நேரம் இரவு 11 ஆகிறதே.. வீட்டுக்கு போகவில்லையா என்றேன்.. அப் பெண் தூரத்தில் இருந்து எங்களைப் பார்ப்பது தெரிந்தது. அவன் நாளை பாடசாலை இல்லை என்றான். அப் பெண்ணோ, அவன் பாடசாலைக்கு போவதில்லை என்று கத்திச் சொன்னாள்.

என்னய்யா..  உன்னைப் பார்த்தால் சிறிய பையனாக இருக்கிறாயே.. கல்வி முக்கியமல்லவா என்றேன். தனக்கு பாடசாலை அலுப்படிப்பதால் அங்கு போவதில்லை என்றும், இந்தப் பெண்ணிடம் வேலை செய்வதாயும் முணுமுணுத்தான். பெற்றோருக்கு தெரியுமா என்ற போது தலையை ஒருவிதமாய் ஆட்டினான். ஆது ”ஆம்” மாதிரியும் இருந்தது ”இல்லை” மாதிரியும் இருந்தது.  நான் அதற்குப் பிறகு ஏதும் கேட்கவில்லை. மனம் ஏனோ கனத்துப் போனது.

அப் பெண் பொருட்களை பையில் மடித்து வைக்கச் சொன்னாள். செவ்வனே செய்து முடித்தான். வெளிக்கிடு போவோம் என்றாள். குளிர் கலந்த கும்மிருட்டில் தொழிற்கல்விக்காய் அவளின் பின்னால் போனான்.

நஞ்சு விதைக்கப்படுகிறது என்று உணர்ந்தாலும் ஏதுவும் செய்ய முடியவில்லை என்னால். என் மீது எனக்கே எரிச்சலாயிருந்தது. அடுத்து வந்த சில நாட்கள் அவன் அடிக்கடி என் நினைவில் வந்து போனான். இப்போது நினைவில் அவன் வருவதில்லை....

2 comments:

 1. நச்சு விதைப்பதை தடுக்க முடியாது தவிக்கும் உங்கள் இயல்பைப் புரிந்துகொள்ள முடிகிறது.

  நிற்க
  http://suvaithacinema.blogspot.com
  http://hainallama.blogspot.com
  மற்றும்
  http://stethinkural.blogspot.com
  யாவும் எனது புளக்குகள்தான்.
  நான்தான் தினமும் உங்கள் புளக் பக்கம் வருகிறேனே.

  ReplyDelete
 2. டாக்டர்! நான் அங்கு வராததற்கு நீங்கள் விட்ட பெரீரீரீரீய பிழை தான் காரணம்.

  என்னைப் போன்ற Alzheimer வியாதிக்காறனுக்கு ஒரு விசயத்தை பத்து தரம் சொல்லணும் என்ற விடயதை மறந்துவிட்டீர்களே.

  நாளைக்கு இதை நான் மறந்தாலும் அதுக்கம் Alzheime தான் காரணம். நான் இல்லை.

  ReplyDelete

பின்னூட்டங்கள்