தமிழ்த் தாயின் அதிசய புத்திரிகள்

இன்று நண்பர் ஒருவருடன் முகப்புத்தகத்தில் இருந்தபடியே ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்.  அவர் விரைவில் தொழில் நிமித்தம் நோர்வேயில் விரிவுரையாற்ற வருகிறார் என்பதாலும் அவரை மனதுக்கு பிடித்துப் போனதாலும் மிகவும் அன்னியோன்யமாக பேசிக்கொள்கிறோம். மகிழ்ச்சி. 

‌அவருடன்  பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு ஜேர்மனியப் பெண்ணைப் பற்றி மிகவும் சிறப்பாகவும், பெரும் மரியாதையுடனும் பேசினார். அவர் zu Koln என்னும் ‌ஜேர்மனியப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக தொழில் புரிகிறார் என்றும், மிக சாதாரணமாக தொல்காப்பியத்தில் இருந்து உதாரணங்களை எடுத்துக் காட்டுகிறார் என்றும் சொன்னார். மிக ஆச்சரியமாய் இருந்தது. அவரின் முகப்புத்தகத்தைப் பார்த்தேன். தமிழ் பெருக்கெடுத்து ஓடிக்‌கொண்டிருந்தது அங்கு.

எம்மில்எத்தனை பேர் தமிழைக் கற்கிறோம்? அதைப் பேசினாலே அவமானமாய் கருதும் கூட்டமும் இருக்கத் தானே செய்கிறது. எனக்குள் இன்று இருக்கும் தாகங்களில் தமிழ் மொழி மேலுள்ள தாகமே பெரியதாயிருக்கிறது. அந்தக் காலத்தில் ஒழுங்காய் படித்திருக்கலாம் என்று இப்போது தான் நினைக்கிறேன்.

ஏறத்தாள 1990ம் ஆண்டு என நினைக்கிறேன். ஓஸ்லோ நகரிலுள்ள பெரிய வாசிகசாலைக்குப் போயிருந்தேன். தமிழ் புத்தகப் பகுதியில் புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது கண்ணில் பட்டது ஒரு நோர்வேஐிய மொழியிலிருந்த விளம்பரம். இப்படி இருந்தது அதில்;
”எனக்கு தமிழ் கற்றுத் தந்தால் உனக்கு நோர்வேஐிய மொழி கற்றுத் தருவேன்”
தொலைபேசி இலக்கத்தை குறித்துக் கொண்டேன். கைத் தொலைபேசி இல்லாத கற்காலம் அது. எனவே வீதியோர தொலைபேசிப் பெட்டி ஒன்றின் மூலம் தொடர்பு கொண்டேன். அழகிய பெண் குரல் கேட்டது மறு பக்கத்தில். உங்கள் விளம்பரம் பார்த்தேன் மொழிகளை பரிமாறிக் கொள்ள எனக்குச் சம்மதம் உங்களுக்கு சம்மதமா? என்று கேட்டேன். மகிழ்ச்சியாய் ஒத்துக் கொண்டார்.

மாணவர்களுக்கான ஒரு விடுதியில் தங்கியிருந்தேன், அந் நாட்களில். ஒரு சிறிய அறை அது தான் எனது சாம்ராஜ்யத்தின் எல்லையாயிருந்தது. அறையை சுத்தப்படுத்தி அவருக்காய் காத்திருந்தேன். 20 வயதுக்குட்பட்ட பெண்ணொருவர் வந்தார். மிக அழகாய் இருந்தார். வணக்கம் என்று கைகூப்பினார். நானும் வணக்கம் என்றேன்.

தெற்கு நோர்வேயைச் சேர்ந்தவர் என்பது அவரது மொழியுச்சரிப்பில் இருந்து புரிந்தது. அங்கு வாழும் ஒரு தமிழ்க் குடும்பத்தை சந்தித்துப் பழகியிருக்கிறார். அக் குடும்பத்தில் வாழ்ந்திருந்த ஒரு மூதாட்டி மிகவும் அன்பாகப் பழகியிருக்கிறார், இவருடன். மொழிப்பிரச்சனை வர மூதாட்டி மொழி கற்பது சாத்தியமல்ல, தான் தமிழ் கற்றால் தான் உண்டு என்று இவர் தமிழ் கற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்.

என்னிடம் வந்த போது தமிழ் எழுத்துக்களை உச்சரிக்கவும் வாசிக்கவும் தெரிந்திருந்தது. மிகவும் புத்திசாலியாய் இருந்தார்.  அந்த மூதாட்டி கிழமைக்கோர் கடிதம் போட்டபடியே இருந்தார். மிகவும் குறைவான  எனது உதவியுடன் வாசிக்கவும் பழகியிருந்தார், ஓரிரு வாரங்களில். பதில் எழுதுவதே அவருக்கு பிரச்சனையாய் இருந்தது. நோர்வேஐிய மொழிக்கட்டுமானத்தில் தமிழை அவர் எழுதுவதே முக்கிய பிரச்சனையாய் இருக்கிறது என்ற போது இலக்கணம் கற்பி என்று பெரியதொரு கல்லைத் தூக்கிப் போட்டார்.

எனக்கு எங்கு முற்றுப்புள்ளி, காற்புள்ளி, அரைப்புள்ளி வைப்பது என்று தடுமாறும் ஆள் நான், தவிர எனக்கு தமிழ் கற்பித்த பெருமைக்குரிய சர்மாசேரே எனக்குள் இலக்கணத்தை ஏற்றிவிட முடியாது தவித்தவர், பரீட்சையில் சாதாரண சித்தி பெற்றவன் என்னும் பல பெருமைகளைக் கொண்டவன் நான். இவர் என்னிடம் இலக்கணம் கற்பிக்கக் கேட்டது என்னை பயமுறுத்தியது.

தெரிந்தளவில் எழுவாய், பயனிலை, செயற்படுபொருள் கற்பித்தேன். அடுத்த கிழமை அவர் கேட்ட கேள்விகளுக்கு என்னிடம் பதில் இருக்கவில்லை. பூசி மெழுகிச் சமாளித்தேன். வாரம் 1 மணி நேரம் என்று 8மணி நேரங்கள் மட்டுமே என்னிடம் கற்றுக் கொண்டார். அவரின் வேகம் கட்டுக்கடங்காதிருந்தது. தமிழ் அவரின் வாயிலும் கையிலும் நர்த்தனமாடியது. அவ்வளவு வேகமாக ஒரு மொழியைக் கற்றுக் கொள்ள முடியாது என்பது எனது கருத்தாயிருந்தது. ஆனால் அது பிழை என்பதை அவர் நிரூபித்தார். தமிழ் அவரைக் காதலித்ததா அல்லது அவர் தமிழைக் காதலித்தாரா என்று எனக்குப் புரியவில்லை. தமிழும் அவரும் அவ்வளவுக்கு ஒருவரை ஒருவர் அந்தளவுக்கு புரிந்திருந்தார்கள்.

ஒன்றைத் தவிர எல்லாம் புரிந்தது அவருக்கு, அந்த மூதாட்டியின் கடிதத்தில் இருந்து.  முதாட்டி கடிதம் போட முதல் கடிதத்தின் மேற் பகுதியில் போடும் ”உ” என்பது  ஏன் என்பது அவருக்குப் புரியவில்லை.  ஓரளவு விளக்கினேன். பின்பு இது மதம் கலந்த கலாச்சார பிரச்சனை என்று பெரிய வார்த்தையினைப் பாவித்து சமாளித்துக் கொண்டேன்.

இறுதியாய் சந்தித்த போது அவரே  முதாட்டிக்கு ”அன்புள்ள பாட்டி அம்மாவுக்கு” என்று தொடங்கி அன்புடன் மகளின் மகள் என்று முடித்து அருமையானதொரு கடிதம் எழுதியிருந்தார். ல ழ, ர ற, ன ண பிரச்சனைகளைத் தவிர பெரிய பிழைகள் இருக்கவில்லை.

அவரின் தமிழ் ஆர்வததால் நான் ‌நோர்வேஜிய மொழி கற்றுக் கொள்வது மறந்து போயிருந்தது. அதற்கு அவரின் அழகும் ஒரு காரணமாயிருக்கலாம்.

எது எப்படியோ தமிழ் என்னால் சற்று வளர்ந்திருக்கிறது என்றால் அதில் தப்பே இல்லை.


வாழ்க தமிழ்


.

8 comments:

  1. ஒரு கிழவி கேட்டிருந்தா தமிழ் படிக்க, உடனே சொல்லிருபியல் கட்டையேல் போகபோகிற உனக்கு எதுக்கு தமிழ் என்று .

    ReplyDelete
  2. எழுவாய், பயனிலை, செயற்படுபொருள் இன்னும்தான் எனக்குப் பிடிபடவில்லை.
    நீங்கள் நிச்சயம் பெரிரிரிரிய.... தமிழாசிரியர்தான்.

    ReplyDelete
  3. டாக்டரய்யா... நான் என்ன விளங்கியா சொல்லிக் கொடுத்த நான்.. ஒரு குத்த மதிப்பில அள்ளி விட்டது தான்...

    ReplyDelete
  4. எனக்கு தெரிந்த ஒரு அன்பர் கூறியிருந்தார் நமது தமிழ் ஒரு புலமை மிக்க மொழி என்று .ஆனால் அது வியாபார மொழி ஆக்கப்படவில்லை அதனால் அது இன்று வளரும் மொழிகளில் பின்னுக்கு போய் விட்டதாம், இதில் தமிழ் நாட்டின் பங்கு பெரியதாம். உண்மைதான் அங்கு ஆங்கில மோகம் அதிகம். அத்துடன் ஆங்கில கலப்பு அளவு வரையறை அற்றது. அதுவும் இப்படி சோப்பு என்று தமிழில் சொல்லு என்று கூறிய சென்னை கடைக்காரரை இன்னும் நினைவு இருக்கிறது அதுவம் இன்னொருதடவை போஸ்ட் ஆபீசில் முத்திரை வேண்டும் என்று கேட்ட என்னை அங்கு கடமையில் இருந்த அம்மா இவர் ஏதோ கேட்கிறார் யாரவது இவர் என்னகேட்கிரர்ர் என்று கேட்டு சொல்லுங்கள் என்றபோது ஒரு வயோதிபர் வந்து அவருக்கு ஸ்டாம்பு கொடுங்க என்ன்றபோது அந்த அம்மா ஆ இப்படி ஸ்டாம்பு என்று தமிழில் சொல்லப்பா என்றபோது அந்த வயோதிபர் முத்திரைதான் சரியான தமிழ் என்று அந்த ஆபீசருக்கு உரைக்க சொன்னார் இப்படி அங்கு தமிழ் செத்து கொண்டு இருந்தது அப்போது அப்ப இப்ப எப்படி இருக்கும்.

    ReplyDelete
  5. தம்பி நீ எழுவாய் இங்கிருப்பது பயநிலை, இதை ஆசிரியர்கள் தமிழ் கற்கும் போது நகை சுவையாக சொல்ல்வார்கள்.

    ReplyDelete
  6. தமிழ் வாழ்ந்து கொண்டிருப்பது பற்றி மிகவும் சந்தோசம்..........பகிர்வுக்கு நன்றி ...

    ReplyDelete
  7. மனதிற்கு இதமான பதிவு. ஒருமுறை தொ. பெ. மீனாட்சி சுந்தரனார் படம் நடத்திக் கொண்டிருந்த பொழுது ஒரு மாணவனால் எழுவாய், பயனிலை ,செயப்படுபொருள்குறித்த வின ஒன்றை தொடுக்க , அதற்கு அந்த மாணவன் தவறாக பதிலளிக்க , உடனே அவனைப் பார்த்து , "எழுவாய், பயனிலை, செல் " என்றாராம். அந்த மாணவர் உடனே தன்னக்கு கற்பித்து பயன் இல்லை எனவே எழுந்து வெளியே போகச் சொல்கிறார் என்று , மௌனமாக வகுப்பறை விட்டு வெளியேறினாராம்.
    தமிழ், தமிழ், தமிழ் என்று தொடர்ச்சியாக சொல்லிப் பாருங்களேன்.. அமிழ்து அமிழ்து என்று ஒலிக்கும்.

    ReplyDelete
  8. வாத்தியார் வேலையும் செய்திருக்கின்றீர்கள் சந்தோசம்.

    ReplyDelete

பின்னூட்டங்கள்