தீரா வலி தின்றவர்கள்

இன்று ஒரு கடைக்குப் போயிருந்தேன். பெரியதொரு கடை. ஆயிரக்கணக்கில் மக்கள் கடைக்குள் தம் விருப்பத்துடன் தொலைந்து போய்க்கொண்டிருந்தார்கள். எனக்கு கடை என்றாலே ஒரு வித அலர்ஜி பல காலமாய் இருந்து வருகிறது. ஆனால் இன்று அந்த அலர்ஜியை என்னால் உணரமுடியவில்லை. குழந்தைகளுடன் கடைக்குள் மகிழ்ச்சியாய் அலைந்து கொண்டிருந்தேன்.

எல்லோரும் புன்னகைக்க கூட நேரமில்‌லாமல் கடந்து போயினர். நானும் தான். இறுதியில் ஒரு இடத்தில் நின்றிருந்தேன், என்னைச் சுற்றிப் பார்த்தபடியே. அப்போது தான் கண்ணில் பட்டது அந்த விளம்பரம்.

இரு ஆண்களின் படங்கள் போடப்பட்டிருந்தது. அவர்களுக்கு 25- 30 வயதிருக்கலாம். விளம்பரத்தில், இவர்களைக் கண்டீர்களா? இவர்களை தேட உதவுங்கள் என்றிருந்தது. திடீர் என மனம் எல்லாம் கனத்துப் போனது. ஊரே நத்தாருக்கு தயாராகிக் கொண்டிருக்கும் போது எங்கோ ஒரு இடத்தில் ஓரு தாய், மனைவி, குழந்தைகள், சகோதரங்கள் என யாரோ மெதுவாய் தங்களின் இழப்பை மென்று தின்று கொண்டிருக்கிறார்கள். இழப்புக்களின் நெருக்க்தைப் பொறுத்து அவை செரிக்கும் காலமும் நீண்டு போகும்.

தொலைந்தவரும், தொலைத்தவரும் ஒருவரை ஒருவர் தேடிக் கொண்டிருக்க, அவர்களின் வாழ்க்கையில் இழப்பின் வழி ஒரு நூலைப்போல் எஞ்சியிருக்கும் காலமெல்லாம் மெலிந்து, நீண்டு வந்து கொண்டேயிருக்கும். காலம் மட்டும் சகலதையும் அறிந்திருந்தாலும் மெளனமாய் வழிந்தோடிக் கொண்டிருக்கும்.

சிலருக்கு  தொலைந்தவர் மீண்டும் கிடைக்கலாம். பலருக்கு இந்தப் புதிரின் முடிவு கிடைப்பதில்லை அவர்களும் இழப்பின் பிசு பிசுப்பை வாழ்க்கை முழுவதும் உணர்ந்தபடியே அலைந்துகொண்டிருப்பார்கள்.

இப்படியான வலிகளை அதிகமாக மனிதர்களே மற்ற மனிதர்களுக்குக் கொடுக்கப்படுகிறது என்பது தான் விசித்திரமானது.  எப்படி ஒரு மனிதனால் இது இயலுகிறது? இதற்கு என்ன காரணம் என்றெல்லாம் சிந்தித்தாலும் தீர்க்கமான ஒரு பதில் ஒன்றும் இன்று வரை எனக்குக் கிடைக்கவில்லை.

எனக்கு இன்று வரை இப்படியான வேதனைகள் ஏற்பட்டதில்லை. ஏற்படக் கூடாதென்பதே எனது விருப்பமும். ஆனால் எனது வாழ்வில் சில மணிநேரங்களே வந்து போன தற்காலிக இழப்புக்கள் நிரந்தர இழப்பின் வீரியத்தை காட்டிப் போயிருக்கின்றன.

எனது இளைய மகளுக்கு 3 வயதிருக்கும் போது ஒரு தடவை டென்மார்க் போயிருந்தோம். ஒரு கடையினுள் நாம் அனைவரும் எங்கள் கவனத்தை கடையில் இருந்த உடைகளில் செலுத்தியிருந்த போது காணாமல் போனாள் எனது பூக்குட்டி. அவளைக் காணவில்லை என்றறிந்து தேடத் தொடங்கும் போதே மனதுக்குள் ஒரு வித பாரம் மெதுவாய் பரவத் தொடங்கியது. கடையினுள் இல்லை. ஓடும் படிகளில் கீழ் இறங்கியிருப்பாளோ என்று கீழிறங்கி ஓடினேன். அங்குமில்லை. மனதின் கனம் அதிகரித்துக் கொண்டே போனது. கற்பனை என்னை விட வேகமாக ஓடித்திரிந்தது. வெளியில் ஓடினேன். அங்குமில்லை. மனம் துடி துடிக்க மேலே‌ போன போது மனைவியும், மூத்தமகளும் கூட அவளைத் தேடியலைந்து கொண்டிருந்தார்கள். எமக்கருகில் ”க்ளுக்” என்னும் சிரிப்புச் சத்தம் கேட்ட அருகில் இருந்த உடைகளை அகற்றி அதற்குள் பார்த்தேன். கடவுள் குந்தியிருந்து என்னைப் பார்த்து கண்களால் சிரித்துக் கொண்டிருந்தார். அள்ளி எடுத்த போது இழப்பின் வலியும், உறவின் அருகாமையும், பிரிவின் வலியும் புரிந்திருந்தது.

இதே போல் இன்னுமோர் நாள் மனைவியும் , மூத்த மகளும் பயணம் போயிருந்தனர். நானும் பூக்குட்டியுமே வீட்டில் இருந்தோம். வெளியில் விளையாட என சொல்லிப் போன பூக்குட்டியை காணவில்லை. எங்கு தேடியும் அவள் கிடைக்கவில்லை. அரை மணிநேரமாகியது, அதுவே இரண்டு மணிநேரமாகிய போது என்னால் சிந்திக்கவே முடியவில்லை. எனவே நண்பர் ஒருவரை அழைத்தேன். அவரும் தேடத் தொடங்கினார். மாயமாய் மறைந்து போயிருந்தாள் பூக்குட்டி. இன்னும் சில நண்பர்களையும் அழைத்தேன். என் எமது குடியிருப்புப் பகுதிக்குள் நடந்த படியே தேடிக் கொண்டிருந்தேன். திடீர் என எனக்கு முன்னால் நடந்து வந்து கொண்டிருந்தாள். அம்மா என்று  பெருஞ்சத்தமாய் அழைத்தபடியே ஓடிப்போய் அள்ளி எடுத்துக் கொண்டேன். என் கண்களில் கண்ட கண்ணீரை கண்டு ”ஏன் அழுகிறாய் என்றாள்” உன்னைக் காணவில்லை என்று பயந்து விட்டதாகக் கூறிய போது சிரித்தபடியே தான் அக்காவின் நண்பியுடன் அருகில் இருந்த வீட்டில் இருக்கும் முயலுக்கு இலைகளை சாப்பிடக் கொடுத்துக் கொண்டிருந்ததாகச் சொன்னாள்.

அன்றிரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை. முன்று மணி நேரப் பிரிவு தான் ஆயினும் அதன் வீரியம் பயங்கரமானது.  அவளை அணைத்தபடியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். இடையிடையே மனம் நடுங்கிக் கொண்டிருந்தது.

என்னைப் போலவே நான் விளம்பரத்தில் கண்டவர்களையும் அவர்களின் குடும்பத்தினர் தேடித்திரிவார்கள். ஒரு பதில் கிடைக்கும் வரை அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என என்னால் நன்றாகவே புரிந்து கொள்ளக்கூடியதாயிருக்கிறது.

இவர்களைப் போலத்தானே  எமது நாட்டிலும் காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் அலைந்து கொண்டிருப்பார்கள். எம்மினத்தில் மட்டும்மல்ல பெரும்பான்மையினத்தவர்களிடையேயும் காணாமல் போனவர்கள் அதிகமாய் இருக்கலாம். வலி என்பது இனம் பார்த்து வருதில்லையே. அது எல்லோருக்கும் பொதுவானது.

நாம் வலிகளால் ஒற்றுமையாயிருந்தாலாவது ..அது எமக்கு பெருமை தான்.


இது தொலைந்தவர்களுக்கும் தொலைத்தவர்களுக்கும் சமர்ப்பணம்.


.

3 comments:

  1. தீராத வலி .....

    எனக்கு மொருதடவை இப்படி ஏற்பட்டது. வலிகளை விட நமது கற்பனை வலிகள் மிக மிக அதிகம்.

    ReplyDelete
  2. பிரிவின் வலி மிகக்கொடுமையானது. எனது மகளை ஒரு முறை கோயிலில் தொலைத்து விட்டு அழுதுகொண்டு தேடியது இன்னும் நான் மறக்கவில்லை.

    ReplyDelete

பின்னூட்டங்கள்