எனக்கு மிக நெருங்கிய நண்பர்கள் என்று சொல்லக் கூடியவர்களை இரண்டு மூன்று விரலுக்குள் அடக்கிவிடலாம். ஆனால் நண்பர் மாதிரி என்று சொல்வதற்கு சிலர் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்கள் பல மாதிரியான உருவத்தில், நிறத்தில், குணத்தில், பாரத்தில், தலைமுடியுடனும், இல்லாமலும் இருக்கிறார்கள். ஊர், நகரம், நாடு, கண்டங்கள் எனவும் இவர்களைப் பிரிக்கலாம். ஆனால் எல்லோரும் என்னுடன் நட்பாகவே இருக்கிறார்கள். நானும் அதையே முயற்சிக்கிறேன்.
நேற்றிரவு இவர்களைப் பற்றி மனம் சிந்தித்துக் கொண்டிருந்தது. இவர்களில் பலருக்கு ஏதாவது விநோதமான, விசேடமான பழக்கவழக்கங்கள், திறமைகள் இருந்து கொண்டே இருக்கிறது. உதாரணமாக மூக்கை தோண்டி வாயில் வைப்பது, என்னுடன் தொலைபேசியில் கதைத்தபடியே தூங்குவது, பகிரங்கமாக சொறியக் கூடாத இடங்களில் கவலையின்றி கண்மூடிச் சொறிவது இப்படி பலதைச் சொல்லலாம்.
ஊரில் ஒருவன் இருந்தான். அப்போது நாம் விடுதியில் இருந்தோம். அவன் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன். நான் விடுதியில் தலைமை மாணவர் தலைவனாக இருந்தேன். அவனால் மரத்தில், நிலத்தில் எதைக் கண்டாலும் கல்லெறியாமல் இருக்க முடியாது. விடுதிக்கு பின்னாலிருந்த வீட்டு கோழிகள் ஒரு மரத்தில் தான் இரவில் தங்குவதற்குப் பழகியிருந்தன. அந்த மரத்தின் கிளைகள் எங்கள் கிணத்தடிப் பக்கமாக நீண்டு வளர்ந்திருந்ததால் கோழிகள் எங்கள் பகுதியில் அவர்களின் மரத்தில் தூங்கும். எனது நண்பனோ கல்லெறிவதில் மகா கில்லாடி. இரவில் நாம் படிக்கும் போது இவன் அடிக்கடி காணாமல் போவதை கண்ட நான் ஒரு நாள் இரகசியமாக அவனைப் பின் தொடர்ந்தேன். கிணத்தடிக்கு வந்தவன் குளிந்து ஒரு கல்லெடுத்து ஒரு கோழியை ஒரே கல்லில் விழுத்தினான். பொத் என்று சத்தம் கேட்டது. அடுத்து வந்த ஐந்து நிமிடத்தில் கோழியை உரித்து கழிவுகளை வாழைமரத்தருகில் கிடங்கு கிண்டி தாட்டான். கோழியுடன் குசினிக்குள் புகுந்த போது நானும் குசினிக்குள் போனேன். அன்று முதல் எனக்கு வாரத்தில் ஒரு நாள் இரவில் கோழிக்கறியும் பாணும் கிடைத்தது. நானும் அவனின் கல்லெறியும் திறமையை தடைசெய்யவில்லை.
நாம் இந்தியாவில் வாழ்திருந்த காலங்களில் எனது நண்பர்கள் புகைத்தலையும், மதுவையும் ருசிக்கத் தொடங்கியிருந்தார்கள். இவர்களில் சிலர் குடித்தால் ஊருக்கே நாம தான் ராஜா மாதிரி குதித்தாடி, மற்றவர்களை திட்டி, வாந்தியெடுத்து ஓய்வார்கள். இவர்களால் எனக்கேதும் பிரச்சனை இருக்கவில்லை. ஆனால் ஒரு நண்பனுக்கு மட்டும் போதை ஏறும் போதே ”டேய்.. எங்கடா அந்த ஊத்தையன் என்று எனது பட்டப் பெயரை பாவித்து அன்பாக அடாவடிகளை ஆரம்பிப்பான். போதை ஏறிவிட்டால் எனது மடியல் படுத்தபடியே அழுவான். அழுதழுது கதை சொல்லுவான். நான் எழும்பவே முடியாதபடி பிடித்திருப்பான். விடிய விடிய அவனின் அழுகையையும், தொலைந்த காதல் கதையையும் கேட்டு காது புளித்துப் போகும் போது ”உவாக்” ”உவாக்” என்று சாப்பிட்ட சாப்பாட்டை மொட்டைமாடியில் வாந்தியாய் கொட்டிவிட்டு அதன் மேலேயே நிம்மதியாய் படுப்பான். அவனை எழுப்பி, குளிப்பாட்டி, புதிய சாரம் கட்டி படுக்கவைத்தால் காலையில் எழும்பியவுடன் பாத்தியாடா நான் குடிச்சாலும் கீழ இறங்கி வந்து குளித்துவிட்டு தான் படுத்திருக்கிறேன் என்பான். நான் மொட்டை மாடியை களுவிக் கொண்டிருப்பேன்.
இன்னொருவர் இருந்தார் எம்முடன். வயதில் பெரியவர். அவரிடம் இருந்த பிரச்சனை என்னவென்றால் ஒரு இடத்தில் படுப்பார். ஆனால் விடிவதற்கிடையில் எமது அறையை கோயிலை சுற்றி அங்கப்பிரதட்சனை செய்வது போல உருண்டு திரிவார். அதை ஓரளவுக்கு மன்னிக்கலாம். ஆனால் உருளும் போது அவரின் சாரம் கால் வழியாகக் கழண்டு அரை வழியில் நின்றுவிடும். அதிகமான காலைகளில் நான் முழித்தது அண்ணணின் பலான அவையவங்களில் தான். காலையில் எழும்பியவுடன் ஏதோ கற்பு பறிபோனது போல ஓடிப் போய் சாரத்தை தேடி எடுத்து உடுத்துவார். அன்றிரவு மீண்டும், நாம் செக்கன்ட் சோ வரும்போதே அண்ணணின் சாரம் மீண்டும் தனியே தூங்கியிருக்கும். அண்ணணும் தனியே தூங்கியிருப்பார். அந்த கண்றாவி காட்சியை தவிர்ப்பதற்காக நாம் எவ்வளவோ முயற்சித்தோம் ஆனால் அண்ணண் திருந்தவே இல்லை. அவரின் சாரமும் திருந்தவில்லை.
நோர்வேக்கு வந்த புதிதில் ஒரு நண்பர் இருந்தார். அவருக்கு இங்கிருந்த கழிப்பறைகளின் தத்தவங்கள் புரியாதிருந்தன. ஊரில் குந்தியிருந்தே பழக்கப் பட்டவருக்கு இங்கு கதிரையில் இருப்பது மாதிரி உட்கார முடியவில்லை. இரகசியமாக என்னிடம் சிக்கலைச் சொன்னார். நானும் உங்கள மாதிரித்தான் கதிரை மாதிரி நினைத்துக் கொண்டு குந்தியிருந்து முக்குங்கோ என்றேன். முடியாது என்று அடம் பிடித்தார். சரி இதுக்கு மேல ஏறி குந்துங்கோ என்றேன். அதயும் செய்து பார்த்திட்டேன். நிம்மதியா இருக்க ஏலாமல் இருக்கு என்றார். பின்பு ஒரு விதமாக மேலே குந்தியிருக்க பழகிக் கொண்டார். 4- 5 வருடங்கிளின் பின் ஒரு இடத்தில் அவரை சந்திக்க நேர்ந்தது. இப்ப எப்படி பிரச்சனை தீர்ந்து விட்டதா என்ற போது, அப்போதும் தான் கதிரையில் இருக்க முடியாமல் மேலேயே குந்தியிருப்பதாக.சொன்னார். இப்ப 20 வருடங்களாகி விட்டன. இப்பவும் குந்திக் கொண்டுதானிப்பார் என நினைக்கிறேன். குந்துவதிலும் ஒரு சந்தோசம் இருக்குத் தானே.
இவரின் இம்சை பறவாயில்லை. இன்னொருவர் இருக்கிறார். தொலைபேசி எடுத்தால் வைக்கவே மாட்டார். நான் கழிப்பறைக்கு போகவேணும் என்பேன். பறவாயில்லை அங்கிருந்து கதையுங்கள் என்பார். சில நேரங்களில் அவரின் பேச்சு முடிவது போலிருக்கும். எனக்கும் மகிழ்ச்சியாய் இருக்கும். ஆனால் பேச்சு முடியும் போது புதிய கதையொன்றைத் தொடங்குவார். கைத்தெலைபேசி பற்றறி முடிகிறது என்றால் உடனேயே மின்சாரத்தை இணையுங்கள் நான் காத்திருக்கிறேன் என்பார். அமெரிக்க உளவுத்துறையிடம் இருந்து தப்பலாம் ஆனால் இவரிடம் இருந்து தப்பவே முடியாது.
இன்னொருவர் இருந்தார். அவருடன் நேரே நின்று கதைக்கமுடியாது. மனிதர் எப்போது பேசினாலும் பன்னீர் தெளித்து ஆசீர்வதிப்பது போல எச்சிலை தெளித்துக் கொண்டே இருப்பார். அவரால் எச்சில் தெளிக்காமல் பேசவே முடியாது.
இவர் பறவாயில்லை. இன்னொருவருடன் முன் நின்று பேச முடியாது. அதற்கான காரணம் அறிய விரும்புபவர்கள் ”மன்மதன் அம்பு” படத்தில் கமலஹாசன் எழுதிப் படித்திருக்கும் கவிதையைப் பாருங்கள் உங்களுக்கு பதில் புரியும். (புரியாதவர்கள் மின்னஞ்சல் அனுப்புங்கள்)
இன்னுமொருவரின் இம்சை வேறுமாதிரியானது. அவரை நான் சந்திக்கும் போது எங்களைச் சுற்றி எப்போதும் சனக்கூட்டமாயிருக்கும். அதாவது தமிழ் நிகழ்ச்சிகளிலேயே சந்திக்கும் சந்தர்ப்பம் அமையும். அவர் என்னைக் கண்டவுடன் பெருஞ் சத்தமாய் சஞ்சயன்.. அண்டைக்கு கடன் வாங்கின சீப்பு எங்கடா என்பார்? ஊரே திரும்பிப் பார்க்கும் எனது தலையை. அங்கு சீப்புக்கு என்ன வேலையிருக்கப்போகிறது?
எனக்கு தாங்க முடியாத எரிச்சலை தரும் நண்பர் ஒருவர் இருக்கிறார். அவரின் இம்சை தாங்கவே முடியாதது. தொலைபேசி எடுப்பார். எப்போதும் இரவிலேயே எடுப்பார். அதுவும் அவரின் கட்டிலில் படுத்திருந்தே எடுப்பார். பேச்சு சுவராசியமாக ஆரம்பிக்கும். இடையிடையே அமைதியாகி விடுவார். திடீர் என்று என்று சொன்னீர்கள் என்பார். பிறகு சிறிய குறட்டைச் சத்தம் கேட்கும் திடீர் என்று என்ன சொன்னீர்கள் என்பார். அல்லது அவரின் கதையைத் தொடர்வார். இறுதியாக அவரின் குறட்டை மெதுவாய் சத்தம் அதிகரித்து சீரான ஒலியுடன் உச்சஸதாயிக்கு போனதும் நான் தொலைபேசியை வைத்துவிடுவேன். சில நாட்களில் நான் தொலைபேசியை வைத்த சற்று நேரத்தில் எனக்கு தொலைபேசி எடுத்து ஏன் வைத்தீர்கள் என்று டோஸ் விடுவார். பிறகு மீண்டும் குறட்டை. இவர் தான் எனக்கு இம்சை அரசன்.
இப்படி பலர் பல விதமாக எனக்குள் தங்கள் நினைவுகளை பதித்திருக்கிறார்கள். இவையெல்லாம் அன்பான இம்சைகளே.
அது சரி.. இவர்களுக்கு நான் எப்படியான இம்சைகளை கொடுக்கிறேன்? கேட்டுச் சொல்லுங்களேன் ப்ளீஸ்.
.
vadai
ReplyDeleteயதார்த்தங்களில் நீர் மன்னரையா ???
ReplyDeleteசும்மா சாதரணம நடந்த நிகழ்வுக்கு உரு கொடுகிரிங்க
சூப்பர் !!!!
உண்மையில் அசத்தல் கதை வாசிக்கும் போது ஒரே சிரிப்பாய் இருந்தது
ReplyDeleteசந்திரா அன்ரியை பற்றி ஒரு சீரியசான பதிவை தந்து எங்களை நாடியில் கை வைத்து சோகமாக இருத்திப்போட்டு போனீர்கள். மீண்டும் கல கல. அதுதான் சஞ்சயன். உங்கள் நண்பர்கள் உங்களை பற்றி என்ன சொல்லபோகின்றார்கள் என்று விடுப்பு பார்க்க ஆவலுடன் உள்ளேன். சஞ்சயனின் மின்னஞ்சல் கிடைக்குமா?
ReplyDeleteபதிவுலகில் யாரையோ வம்பிலுத்திருக்கீங்கன்னு நெனைச்சு பயந்துட்டேன்...
ReplyDelete//அது சரி.. இவர்களுக்கு நான் எப்படியான இம்சைகளை கொடுக்கிறேன்? கேட்டுச் சொல்லுங்களேன் //
ReplyDeleteஅடியேனும் அறிய ஆவல்.
என் கற்பனை- "இவனை நம்பி அதுவும் கதைக்க முடியாது. கதைத்தால், அதுக்குக் கை, கால், மூக்கு எல்லாம் வைத்து இன்டர்நெட் இல் இழுத்திப் போடுவான்." பிறகு இது நான் தானோ , நான் தானோ என்று யோசிக்க வேண்டும். ஒருக்கா அவசரத்துக்குக் கக்கூஸ் பாவித்ததையே படுபாவி எழுதிப் போட்டான்"
ReplyDeleteஅவன்/இவன் என்று எழுதியதிற்கு மன்னிப்பீர்களாக. அவர்/இவர் என்று எழுதினால் யதார்த்தமாக இருக்காது.
குறிப்பு: சத்தியமாக நான் நோர்வேப் பக்கம் இன்னும் வரவில்லை. எனவே அந்தக் கக்கூஸ் இரவல் பாவித்த நபர் நான் அல்ல.
குறிப்பு 2 : அனானியாகத்தான் பதிய முடிகிறது. பெயரைப் பாவிக்க உங்கள் ப்ளாக் அனுமதிக்குதில்லை.
எஸ் சக்திவேல்:
கிளம்பீட்டாய்ங்கய்யா கிளம்பீட்டாய்ங்க...
ReplyDeleteஇப்படி சக்திவேல் மாதிரி எத்தனை பேர் அய்யா கிளம்பியிருக்கிறீஙக...
நான் மட்டும்தான் :-)
ReplyDelete