கலைந்து போன ஒப்பனைகள்

இன்று காலை நிலக்கீழ் தொடருந்தில் பயனித்தேன்.  குளிரின் அகோரம் தொடரூந்தில் இருந்த எல்லோரினது முகத்திலும் அப்பியிருந்தது, எனக்கு முன் இருக்கையில் இருந்த பெண்ணைத் தவிர.

அவர் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் அவரின் கறுப்புக் கண் மையை கரைத்துக் கொண்டு வந்து, அழும் பெண்ணின் சித்திரம் போல கன்னத்தில் கறுப்பாய் காய்ந்து போய் இருந்தது. தலையை பின்னால் முட்டுக் கொடுத்தபடி தொடரூந்தின் முகட்டை பார்த்தபடி இருந்தார். கண்கள் கலங்கியிருந்ததும் தெரிந்தது. முகம் கல்லாயிருந்து.

அவருக்கு வயது 30க்கு உள்ளிருக்கும். நீண்ட கறுத்த தலைமயிர். நிட்சயமாய் நோர்வேஜீய நாட்டவரில்லை. வடக்கு ஆபிக்க, மத்தியகிழக்கு நாட்டவராயிருக்கலாம் என ஊகித்தேன்.

ஒரு பெண்ணை நேரடியாக பார்ப்பது நாகரீகமல்ல என்று தெரிந்திருந்தாலும் இவரின் முகத்தை ஏனோ நாலைந்து  தடவைகள் பார்த்துவிட்டேன். அதை அவர் கவனிக்கும் மனநிலையில் இல்லை போலிருந்தார்.  அ. மு வின் உண்மை கலந்த நாட்குறிப்புகள் என்னும் புத்தகத்தை விரித்து வாசிக்க முற்பட்டாலும் மனம் புத்தகத்தில் லயிக்க மறுத்தது.

அவரின் முகத்தில் இருந்த ஒப்பனை பல மணிநேரங்களுக்கு முன் போடப்பட்டது போலிருந்தது. நேற்‌றிரவு போட்ட ஒப்பனையாயிருக்கலாம். தலை கலைந்திருந்தது. கண் இமையில் பூசப்பட்டிருந்த மையில் சற்று மிச்சமிருந்தது, முகத்தில் சோகமும், களைப்பும் தெரிந்தன. கண்கள் கண்ணீரில் மினுங்கிக் கொண்டிருந்தன.

கன்னத்தில் காய்ந்து போயிருந்த கண்ணீரின் கறுப்புநிற அடையாளம் வெள்ளையான அவர் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. அதை அவருக்கு சொன்னால் என்ன என்று யோசித்தேன். எனினும் ஏனோ மனம் அதை செய்யத் ‌துணியவில்லை.

வாழ்வில் நாம் பலரும் கடந்து போகும் கடினமான ஒரு நாளை அல்லது ஒரு காலத்தை அவர் கடந்து கொண்டிருக்கிறார் என்பது மட்டும் புரிந்தது. அது எதுவாயிருக்கும் என்று சிந்திக்கத் தொடங்கியது மனது.
வயதைப் பார்த்தால் காதலாயிருக்கலாம் என்று தோன்றிற்று. அல்லது குடும்பப் பிரச்சனையாயிருக்கலாம். அதைவிட ஒருவரை இவ்வளவு வீரியமாக தாக்கக் கூடியது எது? நெருங்கிய ஒருவரின் மரணம்? எனது சிந்தனை கட்டுக்கடங்காமல் ஓடிக் கொண்டிருந்தது.

நானும் இப்படியான கணங்களை கடந்திருக்கிறேன். மிகவும் கொடிய தருணங்கள் அவை. இந்த பிரபஞ்சத்தில் நாம் மட்டுமே இருப்பது போல தனிமையாய் இருக்கும். சுயஇரக்கம் ஊறி ஊறி வேதனைகளின் பாரத்தை கனமாக்கியபடியே இருக்கும். கண்கள் எங்கோ நிலைகுத்தியிருக்க மனம் மட்டும் நடந்ததையே சிந்தித்திருக்கும். கண்ணீர் வற்றாமல் வழிந்துதோடும். அழுது ஓயும் வரை அக் கணங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

வாழ்வின் கனம் கொண்ட கணங்களை தனிமையில் கடந்து செல்வது என்பது இலகுவானதல்ல. உண்மையான நண்பர்களைக் கொண்டவர்களும், கசப்பான உண்மைகளை உணர்ந்து ஏற்றுக் ‌கொண்டவர்களும், யதார்த்தமான சிந்தனைகளையும், தெளிவான முடிவுகளையும் எடுப்பவர்களுமே கனமான கணங்களை ஓரளவு இலகுவாக கடந்து கொள்கிறார்கள்.

வாழ்வு என்னை புரட்டிப் பந்தாடிய காலங்களில் ஒரு மனநல ஆலோசகரை சந்திக்க நேர்ந்தது.  எனக்கு அவர் தந்த அறிவுரைகளுள் எனக்குப் பிடித்தது என்னவென்றால் உனது பிரச்சனைகள் எல்லாவற்றையும் ஒரு ”பிரமிட்” போல நீ பார்க்கிறாய். அவற்றை ஒரு நேர் கோட்டில் அவற்றின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் பிரித்து ஒவ்வொன்றாக அவற்றை தீர்க்க முயற்சி செய். ஆனால் உனது முடிவுகள் சுய பரிதாபத்தை அடிப்படையாக இருத்தலாகாது என்றார். எத்தனை உண்மையான வார்த்தைகள் அவை என்பதை அதன் பின்னான காலங்களில் உணர்ந்து கொண்டேன்.

இன்றும் நான் கனமான காலங்களைக் கடந்து கொண்டு விட்டேனா என்பது  தெளிவில்லாமல் இருக்கிறது. ஆனால் வீட்டுக்கு வீடு வாசல் படி என்பது மட்டும் மிகத் தெளிவாகப் புரிந்திருக்கிறது..

5 comments:

 1. இப்பிடிப் பினாத்திறதே மனசுக்கு நல்லது விசரன்.நீங்களே சொல்லிட்டீங்கள்.
  வீட்டுக்கு வீடு வாசல்படிதான் !

  ReplyDelete
 2. உலகில் உள்ள அனைவருமே மனப்பிறழ்வு ஏற்பட்டவர்கள் தான்... அது எந்த அளவிற்கு என்பதுதான் ஒருவருக்கு ஒருவர் வேறுபடுகிறது...

  ReplyDelete
 3. இப்பத்தான் உங்க எழுத்தை முதல் முறையா பார்க்குறேன்..

  ரொம்ப ரொம்ப வித்தியாசமா, தனி பானியில இருக்கு... சூப்பர்

  ReplyDelete
 4. மனதின் நொந்த கணங்களை மிக நுணுக்கமாக ஆராய்ந்திருக்கிறீர்கள். மற்றவர் துயரை உணர்ந்து விசனப்படுவது எல்லோருக்கும் முடிவதில்லை.

  உணர்வுகளுக்கு அப்பால், இறுதியில் வரும் மனநல ஆலோசகர் பற்றிய குறிப்பு மிக முக்கியமானது.

  ReplyDelete
 5. உங்கள் பதிவில் பயனுள்ள பல கருத்துக்கள் கண்டேன்!!!

  ReplyDelete

பின்னூட்டங்கள்