கடந்து போகவும் கற்றுக் கொள்

நேற்றிரவின் அமைதியில் உறங்கிப் போவதற்காய் மின் விளக்குகளை அணைத்த பின் கட்டிலில் சாய்ந்து கொண்டேன். இருள் மெது வாய் கண்ணுக்குப் பழகிய பின் இருளையும் ஊடுருவிப்பார்க்க முடிந்தது. இருளின் இருளை மனதும் நுகர்வதாய் உணரத் தொடங்கினேன். எங்கும் இருள் எதிலும் இருள். இருண்ட காற்றும் சுவாசத்தினூடே உடலினுட் சென்று உயிர் வரை இருளை உணர்த்திற்று. என்றுமே இருளை நான் இவ்வளவு அருகாமையில் ரசிக்கவில்லையோ என்று எண்ணுமளவிற்கு அந்த அனுபவம் அமைந்திருந்தது. தொடுகைக்கு அப்பாற்பட்டதாய் இருள் இருப்பினும் கூட இருளை மனதால் நுகரமுடிந்தது.

இருள் சுகமானது, கனமானது, ரகசியமானது. இருள் நாம் பேசும், செய்யும் அனைத்தையும் தனக்குள் விழுங்கிக் கொள்கிறது. அது ரகசியங்களின் களஞ்சியம். கனமான மனதிற்கு போதிமரம்.

கட்டிலில் சாய்ந்திருந்த படியே இருளைப் பார்த்திருந்தேன். ஏதேதோ எண்ணங்கள் வந்து போயின. அழகான காட்சிகள் தொடக்கம் அசிங்கமான நினைவுகள் வரை. அம்மா, குழந்தைகள், தங்கை, தம்பி, நெருங்கிய நட்புகள், விரும்பத்தகாதவர்கள் என்று இருள் எனக்குள் மிகுதியாய் இருக்கும்
நினைவுகளை மீட்டிக் கொண்டிருந்தது. நான் கடந்திருக்கும் 46 வருடங்களில் இடங்கள், மனிதர்கள், நாடுகள் என்று தொடங்கி காதல், வாழ்க்கை, குழந்தைகள், வீட்டுக்கு வீடு வாசற்படிப் பிரச்சனைகள் என்று அனைத்தையும் கடந்த களைப்பில் கட்டிலில் படுத்திருப்பது போலிருந்தது.

மனதின் அயர்ச்சி என்பது உடலின் அயர்ச்சி போன்றதன்று. உடலின் அயர்ச்சியை உணவும், இளைப்பாறுதலும் போக்கிவிடுகிறது. ஆனால்  மனதின் அயர்ச்சியை கடந்து செல்வதென்பது அவ்வளவு எளிதானதன்று. சாண் ஏற முழம் சறுக்கும் விதியின் விசித்திரமான விளையாட்டு அது. ஆண்டுகள் பல கடந்த பின்பும் மன அயர்ச்சியை கடக்காதவர்கள் பலர் இருக்கிறார்கள்.

அண்மையில், எனது பதிவு ஒன்றிற்கு ஒரு நண்பர் ”கடந்து போகவும் கற்றுக் கொள்” என்று பின்னூட்டம் இட்டிருந்தார். கட்டிலின் மேல் சிந்தனைகளுடன் இருந்திருந்த எனக்கு அந்த வசனம் நினைவில் வந்த போது அறையின் இருளின் மத்தியிலும் வெளிச்சத்தை பிரஞ்ஞைபூர்வமாக உணரக்கூடியாதாய் இருந்தது. மிகவும் இலகுவான வசனம் ”கடந்து போகவும் கற்றுக் கொள்”. அதன் உள்ளர்த்தத்தின் வீரியம் எத்தகையது என்பதை அதை அனுபவித்தால் மட்டுமே உணரமுடிகிறது.

கடந்து போவது என்பது இலகுவானது அன்று. இருப்பினும் அதற்கு பல வழிமுறைகள் இருக்கின்றன. பிரஞ்ஞைபூர்வமாக சுயவிமர்சனத்துடன் இறந்த காலங்களை கடந்து கொள்வதே புத்திசாலித்தனமாக இருக்கும் என்பது எனது கருத்து. உணர்ச்சிகளின் கொந்தளிப்பினாலும், கலாச்சாரத்தின் தளைகளினாலும், சுய இரக்கத்தினாலும் எம்மில் பலர் வாழ்வினை எமது விருப்பத்திற்கு அப்பால் வாழ்ந்து வாழ்க்கையைத் தொலைத்துக்கொண்டிருக்கிறோம் என்பதையும் மறுப்பதற்கில்லை. கடந்து காலத்தை கடந்து கொள்ள அசாத்திய மனத்துணிவும், மனத்திடமும்
வேண்டும்.

எல்லோராலும் தங்களின் கடந்த காலங்களை முற்றிலுமாகக் கடந்து கொள்ள முடிவதில்லை. காலம் என்பது எம்முடன் எப்போதும் வாழ்ந்துகொண்டிருப்பது போலவே உணர்கிறேன். கடந்த காலத்தின் சில செயல்கள், எச்சங்கள், நினைவுகள், உறவுகள் என்று பலவும் ஒரு மெல்லிய நூலைப் போன்று வாழ்க்கைக்காலம் முழுவதும் தொடர்ந்து கொண்டேயிருக்கும். அவை சுவையானதாயும் சுமையானதாயும்
இருக்கும். வாழ்க்கை முடியும் போது அந் நூலும் அறுந்து போகிறது.

இலங்கையில் நான் இருந்த காலங்களில் ஒரு வயதான பெண் ஒருவர் இருந்தார். அவருக்கும் கணவருக்கும் பல பல ஆண்டுகளுக்கு மேலாக பேச்சுவார்த்தை அற்றுப்போயிருந்தது. ஒரே வீட்டில் வாழ்ந்தார்கள். கணவருக்கு நேரத்துக்கு உணவு, தேனிர் கொடுப்பார். அவர் சாய்மனைக்கதிரையில் இருந்தபடியே பத்திரிகையை மேலிருந்து கீழாகவும் பின்பு கீழிருந்து மேலாகவும் படித்துக்கொண்டிருப்பார். அவர்களின் குழந்தைகள் மணமுடித்து வெளியேறி இருந்தனர். இருவரும் நேருக்கு நேர் சந்திப்பதையும் தவிர்த்தார்கள்.

ஒரு நாள் அவரிடம் என்ன பிரச்சனை உங்களுக்கிடையில் என்றேன். இவை விளங்கும் காலம் உனக்கும் வரலாம் என்றார். இப்போது புரியாது என்றார். ஒன்றும் புரியாது நின்றிருந்தேன் நான். ஆனால் தற்போது அவர் பேச்சின் ஆழம் புரியும் ஞானம் கிடைத்திருக்கிறது. அவரும் அவரின் மனைவியும் அந் நாட்களில் தனது கடந்த காலத்தைக் கடந்துகொள்ள முடியாது தடுமாறிக்கொண்டிருந்தார்கள் என்பது இப்போது தான் புரிகிறது.

"திறன் அல்ல தன் - பிறர் செய்யினும், நோ நொந்து,
அறன் அல்ல செய்யாமை நன்று"

எம்மில் எத்தனைபேருக்கு இந்தக் குறளின் அர்த்தம் உணர்ந்து வாழ்கிறோம். பலரும் கடந்த காலத்தை ஈரமான துணிமூட்டை போன்று காலமெல்லாம் தோளில் சுமந்து திரிகிறோம். அதை உலர்த்தி வாழ்வின் பாரத்தை குறைத்துக்கொள்ளும் நோக்கமற்று. சாண் ஏற முளம் சறுக்கும் இந்த விளையாட்டில் தினமும் தோற்றுக்கொண்டிருப்பதாகவே உணர்கிறேன் பலரைப் போலவே.

”கடந்து போகவும் கற்றுக் கொள்” என்பது இலகு, அதை கடந்து போவது என்பது கடினம். அறையின் இருட்டினூடே இதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். தூரத்தே வெளிச்சமாய் ஏதோ தெரிவது போலிருந்தாலும் அது கானல் நீராயிருக்குமோ என்றும் அஞ்சவேண்டியிருக்கிறது. நானும் மனிதனல்லவா.

இன்றைய நாள் நல்லதாயும் இருக்கலாம்

நெருப்பணைத்த கதைகள்

சில மாதங்களுக்கு முன்பொருநாள் நோர்வே வெளிநாட்டவர்  திணைக்களத்தினருகில் நடந்து கொண்டிருந்தேன். வழியெங்கும் போலீஸ், தீயணைப்புப்படை, அவசர வைத்திய உதவி வாகனங்கள் நிறுத்தப்பட்டுக் கொண்டிருந்தன. தீயணைப்புப்படை வீரர்கள் விரைந்து செயல்பட்டார்கள். தண்ணீரை பாய்ச்சும் குழாய்கள் வீதியெங்கும் இழுத்து விடப்பட்டன. ஒரே பரபரப்பாக இருந்தது சுற்றாடல்.

ஆனால் அசம்பாவிதம் ஏதும் நடந்ததற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. ஏ‌தும் பயிற்சியாக இருக்கும் என்று நினைத்தபடியே நடக்கத் தொடங்கும் போது ஒரு மனிதர் இருட்டான பகுதியில் இருந்து மிக வேகமாக ஓடிவந்தபடியே தனது மொழியில் ஏதோ உரக்கச் சொல்லியடியே தனக்குத் தானே தீவைத்துக்கொண்டார்.

அவர் ஓடி வருவதை கண்டு தீயணைப்புப்படை வீரர்களும், பொலீசாரும் அவரை மடக்கிப் பிடிப்பதற்குள் தனக்குத் தானே தீவைத்துக்கொண்டார் அவர்.  அருகிலேயே தீயணைப்புப்படையினர் இருந்ததால் சில கணப்பொழுதுகளுக்குள் தீயணைக்கப்பட்டு,  எரிந்த நிலையிலிருந்த மேலாடைகள் களைப்பட்டு கம்பளியினால் போர்க்கப்பட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச்சொல்லப்பட்டார்.

மறுநாள் பத்திரிகையில் தற்கொலை முயற்ச்சியொன்று பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசாரும், தீயணைப்புப்படையினரும் இணைந்து இயங்கியதில் உயிரிழப்பு இன்றி தவிர்க்கப்பட்டது என்றிருந்தது.

தீ எனது வாழ்விலும் பல முக்கிய சம்பவங்களை தந்து போயிருக்கிறது. ஏனோ அந் நிகழ்வுகள் இந்த தற்கொலை முயற்சியை கண்ணுற்ற பின் மனதில் அலைமோதின. அவை சம்பந்தமான நினைவுகளே இனி வருபவை.

சிறுவயதில் தீயின் ஆபத்து புரியாத காலங்களில் அது ஒரு விளையாட்டுப்பொருளாய், ஆர்வத்தைத் தூண்டும் மர்மப்பொருளாய் இருந்திருக்கிறது, எனக்கு. பேப்பரில்  சுற்றிய சிகரட்டில் ஆரம்பித்தது தீயுடனான விளையாட்டு. ஒரு முறை இதற்காகவே எனது தந்தையார் என்னை குற்றுயிராக்கினார். அதன் பின் பேப்பர் சிகரட் நினைவில் இருந்து மறந்து போனது. அதனாலோ என்னவோ இன்றுவரை சிகரட் என்னுடன் நட்பாகாமலே இருக்கிறது.

எனக்கு 12 வயதாயிருக்கும் போது எமது வீட்டில் ஒரு களஞ்சிய அறையிருந்தது. நெல், அரிசி, ஏனைய உணவுப்பொருட்கள் ஆகியவை அங்கிருந்தன. அக்காலங்களில் மண்ணெண்ணை ஒரு வித தகரத்திலான ஒரு கொள்கலனில் விற்கப்பட்டடது. (கலன் என்று அதை அழைத்தார்கள்). அப்படியானதொரு கலன் எமது களஞ்சிய அறையில் இருந்தது. விளையாட்டாக கலனின் மூடியைக் களற்றி நெருப்புக்குச்சியை பற்றவைத்து அதனுள் போட்டேன். கண்மூடி முளிப்பதற்குள் தீப்பிடித்துக்கொண்டது. பயத்தில் அதை தட்டிவிட்டேன். களஞ்சிய அறைமுழுவதும் மண்ணெண்ணை வழிந்தோட தீயும் பரவ வீட்டை விட்டு ஓடி காட்டுக்குள் ஒளிந்துகொண்டேன்.

பலர் கூடி தீயை அணைத்தார்கள். எனது விஞ்ஞான ஆராட்சியை எனது தாயார் கண்டிருக்கிறார். அதை நான் காணவில்லை. தீயை அவர்கள் அணைத்த பின் ஏதுமறியாதவன் போல் வீடு திரும்பியபோது அம்மா காதைத்திருகி  அப்பாவிடம் சொல்வேன் என்றதும் ”குற்றத்தை ஏற்றுக்கொண்டேன்”.  ஆனால் அம்மா பொய் சொல்கிறார் என்று அப்பா எப்படியோ கண்டுபிடித்து என்னை ஓட ஓட கலைத்துக் கலைத்துஅடித்தார். அதன் பின் தீயுடன் நான் விளையாடுவது நின்று போனது.

எனது தந்தையார் கரும்புத் தோட்டம் வைத்திருந்தார். அவர் தனது கரும்புத் தோட்டத்திற்கு பசறை என்னும் இடத்தில் இருந்து திருச்செல்வம் என்னும் ஒரு இளைஞனை காவலுக்கு அமர்த்தியிருந்தார்.  திருச்செல்வம் மிகவும் சுறு சுறுப்பானவர். கரும்புத் தோட்டத்தின் எல்லையில்  இருந்த ஒரு உயரமான மரக்கிளையில் ஒரு கொட்டிலை அமைத்து அங்கிருந்தபடியே கரும்புத் தோட்டத்தை கவனித்துவந்தார். நானும் விடுமுறை நாட்களின் போது அந்தக் கொட்டிலிலேயே காலம் கடத்திவந்தேன். அவர் ஒரு கதாநாயகனாகவே எனக்குத் தெரிந்தார். பயம் என்பது என்ன என்பதை அறியாதவராய் இருந்தார். இரவினில் பந்தமெரித்து யானைகளிடம் இருந்து கரும்புக்காட்டை பாதுகாப்பதாய் திருச்செல்வம் கூறுவார். நான் வாயைப் பிளந்தபடியே அவரின் கதைகளைக் கேட்டுக்கொண்டிருப்பேன்.

ஓர் நாள் மாலை நேரம் திருச்செல்வம் உயிர் போகிறது போன்ற வேகத்துடன் ஓடிவந்தார்.  கரும்புத்தோட்டம் எரிகிறது என்றார். அப்பா என்னை வாடா என்றபடியே திருச்செல்வத்தின் பின்னால் ஓடினார். திருச்செல்வத்தின் வேகத்துக்கு அப்பாவால் ஈடுகொடுக்க முடியவில்லை.  மூச்சிரைத்தபடியே பெருத்த உடலை தாங்கிய படி அவர் ஓடியது எனக்கு சிரிப்பாய் இருந்தது.

வேறு பலரும்  எம்முடன் இணைந்து கொள்ள  கரும்புத் தோட்டத்தின் அருகில் ஆரம்பித்த காட்டுத்தீயை எல்லோருமாக  ‌மரக்கொப்புகளை ஒடித்து அவற்றின் உதவியினால் தீயினை அணைத்தோம். காட்டுத்தீயின் வேகமும், அகோரத்தையும் அன்றுதான் அறிந்துகொண்டேன். திருச்செல்வம் இல்லாதிருந்தால் அன்று அப்பாவின் கரும்புத்தோட்டம்  சாம்பலாகியிருக்கும் என்று அப்பாவே சொல்லக்கேட்டேன். அதன் பின் திருச்செல்வத்திற்கு பலத்த சலுகைகள் அப்பாவிடம் கிடைத்தது.

இதன் பின் தீயுடனான நெருக்கம் எனக்கு கிடைக்க பல வருடங்களாகியது. 1983ம் ஆண்டு  மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் விடுதியில் தங்கயிருந்து கல்விகற்ற காலம். நான் விடுதியின் சிரேஸ்ட மாணவர் தலைவனாய் நியமிக்கப்பட்டிருந்தேன். ஒரு நாள் நள்ளிரவில் தூக்கத்தில் தட்டி எழுப்பப்பட்டேன். ”அண்ணை பள்ளிக்கூடம் எரியுது” என்றார்கள். வெளியே வந்த போது  தென்னையோலையினால் அமைக்கப்பட்டிருந்த  பல வகுப்பறைகள் தீயிடப்பட்டிருந்தன. பாடசாலையதிபருக்கு செய்தியனுப்பி, சிரமத்தின் மத்தியில் மேசை, வாங்குகளை காப்பாற்றிக்கொண்டிருந்த போது அதிபர் வந்தார். எல்லோரும் சேர்ந்து தீயை அணைத்தாலும் வகுப்பறைகள் எரிந்து போயிருந்தன. இரவிரவாய் அவற்றை அகற்றினோம்.

யார் பாடசாலையை எரித்தார்கள் என்பதை கண்டுபிடிக்கும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டது. சந்தேகப்படும்படும்படியாக  திருச்செல்வம் என்னும் மாணவனே இருந்தான். அவனும் நானுமே விடுதியைச் சுற்றயிருக்கும் வீடுகளில் இருந்து இராப்பொழுதுகளில் கோழிகளை திருடி எமது நள்ளிரவு உணவாக்கிக் கொண்டிருந்தோம் என்பது எமக்கும் இன்னும் மிகச் சிலருக்கும் மட்டுமே இன்றுவரை தெரிந்திருந்த பரமரகசியம்.

அவனிடம் அதிபருக்கு நம்பிக்கை இருக்கவில்லை. பாடசாலை எரிவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் அவன் வீடு செல்ல அனுமதி கேட்டு அதிபர் மறுத்திருந்தார். எனவே அவனே பாடசாலையை எரித்தான் என்பது அதிபரின் கணிப்பு. எனினும் ஆதாரம் இல்லையாதலால் என்னை ஆதாரத்தை கண்டுபிடிக்க நியமித்தார்.

அனைத்து மாணவர்களையும் அழைத்து ” எனக்கு யார் பாடசாலையை எரித்தது என்று தெரியும்” அவர்கள் என்னுடன் தனிப்புட்ட முறையில்  உடனேயே தொடர்பு கொண்டால் அதிபரின் தண்டனையில் இருந்து தப்பிக்கலாம் என்று கதையளந்தேன். சற்று நேரத்தில் ஒருவன் ” அண்ணை நான் தான் நெருப்புப்பெட்டி வாங்கி வந்தேன் என்றான்”. யார் எரித்தது என்றேன். திருச்செல்வம் என்றான் அவன். திருச்செல்வத்தை அழைத்த போது என்னைக் காட்டிக்கொடுக்காதே, எனது சீட்டு கிளிந்துவிடும். என்னைக் காப்பாற்று என்றான்.

ஒரு புறம் நண்பன். மறுபுறம் அதிபர். அதிபரிடம் சேட்டைவிடுவது தற்கொலைக்குச் சமம் என்பதை பாடசாலை மாணவர்கள், ஆசியர்களில் இருந்து முழு மட்டக்களுப்புமே அறிந்திருந்தார்கள். நண்பனை காட்டிக்கொடுத்தால் நண்பனின் பாடசாலைவாழ்க்கை அன்றுடன் முடிந்தது என்பதை உணர்ந்ததால் முக்கிய நண்பர்களை அழைத்து மந்திராலோசனை நடாத்தினோம். என்ன பதிலை அதிபரிடம் சொல்வது என்று எமக்குப்புரியாதிருந்த போது ஒரு நண்பன் ” இரவில் ”இராணுவத்தினரின் வாகனம்” இவ் வழியால் ரோந்து போவதுண்டு், எனவே அவர்களே வந்து எரித்தார்கள் என்றும் ”இராணுவத்தினரின் வாகனம்”  ஒன்று பாடசாலை எரியும் போது பாடசாலையருகில் நின்றிருந்ததை சில மாணவர்கள் கண்டிருக்கிறார்கள் என்றும் அதிபரிடம் கூறச்சொன்னான். அதுவே நண்பனைக்காப்பாற்ற சிறந்த வழியாய் தெரிந்ததால் அதையே அதிபரிடம் கூறினேன்.  அதிபர் என் நெஞ்சினை ஊடுருவிப் பார்த்தார். தலைகுனிந்திருந்தேன். திருச்செல்வம் உயிர்தப்பி வாழ்ந்திருந்தான்.

சில மாதங்களின் பின் திருச்செல்வம் ஒரு இயக்கத்தில் சேர்ந்து அதன் பி்ன்னான காலங்களில் ஒரு நாள் இராணுவத்தின் ஸ்னைப்பர் தாக்குதலில்  உயிரிழந்தான் என்று ஒரு நாள் அதிபரே எனக்குக் கூறினார். அத்தோடு மட்டுமல்ல நான் அவனை காப்பாற்றிய கதையும் தனக்குத் தெரியும் என்றார், ஒரு விதமான கண்டிப்பான புன்னகை கலந்த குரலில். தலையை குனிந்தபடியே நின்றிருந்தேன் நான், அவரருகில்.

தீயுடன் எனக்கு ஏற்பட்ட இரு சம்பவங்களிலும் ”திருச்செல்வம்” என்னும் பெயரே சம்பத்தப்பட்டிருப்பதன் காரணம் தற்செயலானது என்றே நம்புகிறேன்.

இவை தவிர நான் நோர்வே வந்த ஆரம்ப காலங்களில் ஒரு நாள் நள்ளிரவு நேரம் கடைத்தெருவழியாக நடந்து கொண்டிருந்தேன். ஒரு கடையினுள் இருந்து புகை வருது போல் தெரிந்தது. உடனேயே அருகில் இருந்து தொலைபேசி பெட்டிக்குள் புகுந்து தீயணைக்கும் படைக்கு அறிவித்து 5 நிமிடங்களில் தீயணைப்பப்படை  ஒலி, ஒளி சகிதம் வாகங்களில் வந்திறங்கி யார் தொலைபேசியில் தொடர்பு கொண்டது என்ற போது ”நான் தான்” என்றேன் பெரும் பெருமிதத்துடன். எங்கே தீ என்றார்கள். கடையையும் புகை வரும் இடத்தையும் காட்டினேன்.

சற்று நேரம் புகையை உற்று நோக்கியவர்கள் தமக்குள் எதையோ பேசிக்கொண்டார்கள். பின்பு என்னை பார்த்தபடியே சிரித்தார்கள்.  ஒன்றும் புரியாததால் ஏன் சிரிக்கிறீர்கள் என்றேன்.  அப்போது ஒரு தீயணைப்புப் படைவீரர் உனது விளிப்புணர்வை பாராட்டுகிறோம் ஆனால் அது தீயில்லை என்றார். நெருப்பில்லாமல் புகையா என்னும் தொனியில் கேள்வி கேட்டேன்.

அது ஒரு நீராவி இயந்திரம். காற்றின் ஈரப்பதனை தக்கவைப்பதற்காக பயன்படுத்தப்படும் இயந்திரம் எனவே தான் அந்தப் புகை வெளிவருகிறது. அது உண்மையில் புகையல்ல, நீராவி என்றார்.

வெட்கித் தலை குனிந்து கொண்டேன். மீண்டும் உனது விளிப்புனர்வை மெச்சுகிறோம் என்று கூறி அங்கிருந்து அகன்றனர் தீயணைப்புப் படைவீரர்கள்.

அதன் பின் இன்று வரை தீ என்னுடன் நெருங்கிய உறவினை ஏற்படுத்திக்கொள்ளவில்லை. நானும் தள்ளியே நின்றுகொள்கிறேன். இனிமேலும் தீ என்னை நெருங்காதிருக்கட்டும் எனக்கடவதாக!

இன்றைய நாளும் நல்லதே!

உயிர்த்தலுக்கான வழி

நகரும் பாம்பின் ஒலியோடு
மெதுவாய் ஊர்ந்து
உன்னுள் படர்ந்து
உன் சக்தியை உறுஞ்சி
அநாதர உணர்வை உணர்த்தும்
அந்தத் தனிமையுணர்வினைப் பற்றி
நீ எவருடனும் பேசிக்கொள்வதில்லை
நாங்கள் அறிவதையும் நீ விரும்பியதில்லை

உன் வாழ்வினுள்
பிறழ்வுகளை அனுமதித்து இருப்பாயேயானால்
அவற்றை சந்திக்கவும், எதிர்கொள்ளவும்
ஏன் கடந்து போகவும்
கற்றுக்கொள்
அப்போது தான்
நீ காற்றாகி
மீண்டும் உயிர்க்கலாம்
 

ஈழத்தின் சோகமும் ஈழத்தமிழனின் அலட்சியமும்

நமது வாழ்க்கையின் வேதனைகள் தான் பெரியவை என்று நினைத்திருப்போம் நாம் அனைவரும். ஆனால் இன்னொருவரின் வேதனைகளை அறியக்கிடைக்கும் போது தான் எமது பிரச்சனைகள் அவர்களுடைய பிரச்சனைகளுடன் ஒப்பிடும் போது மிகவும் சிறியவையாகத் தோன்றும். இருப்பினும் காலப் போக்கில் மற்றவரின் பிரச்சனை மறந்து போய் எமது பிரச்சனை மீண்டும் பூதாகாரமாய் இருக்கும் இல்லையா?

அண்மையில் ஒரு நாள் இணையத்தில் மட்டக்களப்பில் உள்ள ஒரு நண்பருடன் உரையாடியோது ”இங்கே பல முன்னாள் போராளிகள், காயப்பட்டவர்கள் வாழ்வாதாரம் இன்றி இருக்கிறார்கள், உதவிசெய்ய யாரும் இருந்தால் கூறுங்கள்” என்றார் எனது நண்பர். விபரங்களை அனுப்புங்கள் முயற்சிக்கிறேன் என்றேன். மறுநாளே விபரங்கள் மின்னஞ்சலில் வந்திருந்தன.

முன்னாள் பெண்போராளிகள் முவர். ஒருவர் விதவை, 4 வயதுக்குழந்தையுடன் அகதிமுகாம் ஒன்றில் வாழ்கிறார். மற்றயவர் 3 குழந்தைகளின் தாய், கணவரால் நடமாட முடியாது. வருமானம் இல்லை. மூன்றாமவர் கணவர் முள்ளிவாய்க்காலில் காணாமல் போனவர், 3 வயதுக் குழந்தையின் தாய்.

மற்றைய போராளிகளில் ஒருவர் முதுகெலும்பு பகுதியில் செல் துண்டுகள் இருப்பதனால் முதுகெலும்புப் பகுதி பாதிக்கப்பட்டிருக்கிறார். அடிக்கடி வலிப்பு வருகிறது இவருக்கு. இன்னொருவரும் முதுகெலும்பு பாதிப்படைந்ததால் இயங்க முடியாதிருக்கிறார். இன்னும் ஒருவர் யுத்த காலத்தின் போது கை ஏலும்புகள் முறிந்து போனதால் கை இயங்காதிருப்பவர், இரண்டு குழந்தைகளின் தந்தை.

இப்படி பல சோகங்களை பட்டியலிட்டிருந்தது அந்த மின்னஞ்சல். மின்னஞ்சலை வாசித்தும் சற்று நேரம் மனது ஸ்தம்பித்துப்போனது.

முன்பும் ஒரு முறை உடல் அவயவங்களை விற்று வாழ்வாதாரத்தை தேடும் போராளிகளைப் பற்றி எடுதியிருந்தேன். அண்மையில் வாழ்வாதாரமின்றி தற்கொலை செய்து கொண்ட இரு முன்னாள் போராளிகளைப் பற்றி  இணையத்தில் செய்தி வந்திருந்ததை எம்மில் பலர் அறிவார்கள்.

இவை தவிர அடுத்த நேர உணவு என்ன என்று தெரியாது வாழும் எத்தனையோ குடும்பங்கள், குழந்தைகள் ஊரில் இருக்கிறார்கள்.

அண்மையில் முல்லைத்தீவிற்கு சென்றிருந்த நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது இங்கு பல சக்கரநாட்காலிகள் தேவை என்றார். அவரும் விபரங்களை அனுப்பியிருந்தார். 18.000 ருபா இருப்பின் ஒரு சக்கரநாட்காலி ஒழுங்கு செய்து கொடுக்கமுடியும் என்கிறார் அவர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 2010ம் ஆண்டின் புள்ளிவிபரப்படி ஏறத்தாள 50000 குடும்பங்கள் மாதாந்தம்1000க்கு ரூபாய்க்கு  உட்பட்ட வருமானத்தில் வாழ்கிறார்கள் என்றிருந்தது. 1000 ரூபாய் என்பது எவ்வளவு? 15 டொலர், 7பவுன்ஸ், 8யூரோ, 50 குறோணர்கள்
நாம் விரும்பினால் அங்குள்ள ஒரு குடும்பத்தின் வருவாயை 15 டொலர், 7பவுன்ஸ், 8யூரோ, 50 குறோணர்கள். மூலமாக இரட்டிப்பாக்கலாம். வெளிநாடுகளில் வாழ்பவர்களின் ஒருநாள் கைச்செலவு கூட இதை விட பல மடங்கு அதிகமாக இருக்கும் அல்லவா? 

ஒரு பெரும் தளபதியின் மனைவி ஏழ்மையின் காரணமாக, தயவு செய்து எனது குழந்தைகளையாவது தத்தெடுங்கள் என்று வெளிநாட்டு அமைப்பாளர்களை கேட்ட கதையும் இருக்கிறது. அவர்களுக்குக் கூட சிறு உதவி கூட சென்றடையவில்லை என்பதே உண்மை.

பெரும் பொருளாதார வசதி படைத்த பல அமைப்புக்கள் கூட வாய் மூடி இருப்ப‌து பெரும் சோகம்.
மேற் கூறியவற்றைப் பற்றி சிந்தனையோடிய போது,  எனக்கே என்னில் கோபம் வந்தது. அடுத்ததாக தகவல் அறிந்தவர்கள், போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புக்கள் என்ற அனைவரின் மீதும் தார்மீகமான கோபம் இருக்கிறது, எனக்கு.
வறட்டுக் கொளரவத்துடன், வறட்டு அரசியலுடன், யதார்த்தம் மறந்து, பதவிகளுக்காகவும், பணத்துக்காகவும் முன்னாள் போராளிகளைத் தானும் கவனிக்காதவர்களை என்னென்று சொல்வது?  
மூன்றாவதாக எதுவுமே தெரியாதவர்கள் போல் ஊரையும், அதன் வேதனைகளையும் மறந்திருப்பவர்களும் விமர்சிக்கப்படவேண்டியவர்களே.

எத்தனை காலம் தான் இப்படியே இருக்கப்போகிறோம். வெளிநாடுகளில் வாழும் குடும்பங்களில் 50 வீதமான குடும்பங்கள் இலங்கையில் உள்ள ஒரு குடும்பத்திற்கு மாதாந்தத உதவியாக, அல்லது தொழில் அபிவிருத்தி உதவியாக ஒரு சிறு உதவியினைச் செய்தால் ஏறத்தாள 350.000 குடும்பங்களை முன்னேற்ற முடியதா?

நான் ஏதோ யதார்த்தம் உணராமல் கதைப்பதாக நீங்கள் நினைக்கலாம். இல்லவே இல்லை. யுத்தகாலத்தில் புலம் பெயர் மக்களிடையே இருந்த கட்டமைப்புக்கள் எல்லாம் இன்று அவர்களின் நம்பகத்தன்மையை இழந்து, வலுவிழந்துகொண்டு வருவதை நாம் அவதானிக்கக் கூடியதாகவே இருக்கிறது. இதற்கான  காரணங்கள் என்ன? இவற்றைப் பற்றி திறந்த மனதுடன் எவரும் பேசத் தயாராய் இல்லை. போலிக் கௌரவங்களும், பதவிகளும், பணத்தாசையும் சுயவிமர்சனம் செய்து கொள்ளவதை மறுக்கிறது. 
இப்படியான சிக்கல்களை களைவோம் எனின்  எம்மால் எமது மக்களுக்கு உதவ முடியும். அவர்களின் வாழ்வையும் ஓரளவாவது வளமுறச் செய்ய முடியும்.

கடந்த காலங்களை படிப்பினையாகக் கொண்டு முன்நோக்கி நகர வேண்டிய அவசியம் எமக்கு இருக்கிறது. இனியாவது யதார்த்தம்
எது?அரசியற் பிரச்சாரம் எது? என்பதை நாம் அறிந்து கொண்டு, சுயவிமர்சனத்துடன் நகரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எதிர்காலச் சந்ததியிடம் புலத்தின் தொடர்புகளை கையளித்து அவர்களை வழிநடாத்த வேண்டிய கடமை எமக்கிருக்கிறது.

வாழ்வாதாரமே இல்லாதிருப்பவனிடம் எதைப் பேசினாலும் அவனது சிந்தனை முழுவதும் அன்றைய உணவினைப் தேடிக்கொள்வதில்  மட்டுமே இருக்கும் என்பதை நான் கூற வேண்டிய அவசியமில்லை. 
எனவே வெளிநாடுகளில் அரசியலை முன்னெடுப்பவர்கள் அதை முன்னெடுக்கட்டும். 
ஆனால் மிக மிக முக்கியமாக உதவிகளை முன்னெடுப்பவர்கள், ஒருங்கிணைப்பவர்களின் தேவையும், உழைப்புமே இன்று எமது மக்களுக்கு இன்றியமையாதவை. 
அவையே எமது சந்ததிகள் வளமுள்ளதாய், கல்வியறிவுள்ளதாய்  உருவாகுமா என்பதனைத் தீர்மானிக்கும். வாழ்வாதாரமுள்ள, கல்வியறிவுள்ள சமுதாயத்தை உருவாக்குவதன் முலம் எமது விடுதலைக்கான பாதையையும் நான் வடிவமைத்துக்கொள்ளலாம்.

நாம் ஒற்றுமையாய் இணைந்து செயற்பட வேண்டிய காலம் இது. என்பதை நாம் மறத்தலாகாது.