நெருப்பணைத்த கதைகள்

சில மாதங்களுக்கு முன்பொருநாள் நோர்வே வெளிநாட்டவர்  திணைக்களத்தினருகில் நடந்து கொண்டிருந்தேன். வழியெங்கும் போலீஸ், தீயணைப்புப்படை, அவசர வைத்திய உதவி வாகனங்கள் நிறுத்தப்பட்டுக் கொண்டிருந்தன. தீயணைப்புப்படை வீரர்கள் விரைந்து செயல்பட்டார்கள். தண்ணீரை பாய்ச்சும் குழாய்கள் வீதியெங்கும் இழுத்து விடப்பட்டன. ஒரே பரபரப்பாக இருந்தது சுற்றாடல்.

ஆனால் அசம்பாவிதம் ஏதும் நடந்ததற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. ஏ‌தும் பயிற்சியாக இருக்கும் என்று நினைத்தபடியே நடக்கத் தொடங்கும் போது ஒரு மனிதர் இருட்டான பகுதியில் இருந்து மிக வேகமாக ஓடிவந்தபடியே தனது மொழியில் ஏதோ உரக்கச் சொல்லியடியே தனக்குத் தானே தீவைத்துக்கொண்டார்.

அவர் ஓடி வருவதை கண்டு தீயணைப்புப்படை வீரர்களும், பொலீசாரும் அவரை மடக்கிப் பிடிப்பதற்குள் தனக்குத் தானே தீவைத்துக்கொண்டார் அவர்.  அருகிலேயே தீயணைப்புப்படையினர் இருந்ததால் சில கணப்பொழுதுகளுக்குள் தீயணைக்கப்பட்டு,  எரிந்த நிலையிலிருந்த மேலாடைகள் களைப்பட்டு கம்பளியினால் போர்க்கப்பட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச்சொல்லப்பட்டார்.

மறுநாள் பத்திரிகையில் தற்கொலை முயற்ச்சியொன்று பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசாரும், தீயணைப்புப்படையினரும் இணைந்து இயங்கியதில் உயிரிழப்பு இன்றி தவிர்க்கப்பட்டது என்றிருந்தது.

தீ எனது வாழ்விலும் பல முக்கிய சம்பவங்களை தந்து போயிருக்கிறது. ஏனோ அந் நிகழ்வுகள் இந்த தற்கொலை முயற்சியை கண்ணுற்ற பின் மனதில் அலைமோதின. அவை சம்பந்தமான நினைவுகளே இனி வருபவை.

சிறுவயதில் தீயின் ஆபத்து புரியாத காலங்களில் அது ஒரு விளையாட்டுப்பொருளாய், ஆர்வத்தைத் தூண்டும் மர்மப்பொருளாய் இருந்திருக்கிறது, எனக்கு. பேப்பரில்  சுற்றிய சிகரட்டில் ஆரம்பித்தது தீயுடனான விளையாட்டு. ஒரு முறை இதற்காகவே எனது தந்தையார் என்னை குற்றுயிராக்கினார். அதன் பின் பேப்பர் சிகரட் நினைவில் இருந்து மறந்து போனது. அதனாலோ என்னவோ இன்றுவரை சிகரட் என்னுடன் நட்பாகாமலே இருக்கிறது.

எனக்கு 12 வயதாயிருக்கும் போது எமது வீட்டில் ஒரு களஞ்சிய அறையிருந்தது. நெல், அரிசி, ஏனைய உணவுப்பொருட்கள் ஆகியவை அங்கிருந்தன. அக்காலங்களில் மண்ணெண்ணை ஒரு வித தகரத்திலான ஒரு கொள்கலனில் விற்கப்பட்டடது. (கலன் என்று அதை அழைத்தார்கள்). அப்படியானதொரு கலன் எமது களஞ்சிய அறையில் இருந்தது. விளையாட்டாக கலனின் மூடியைக் களற்றி நெருப்புக்குச்சியை பற்றவைத்து அதனுள் போட்டேன். கண்மூடி முளிப்பதற்குள் தீப்பிடித்துக்கொண்டது. பயத்தில் அதை தட்டிவிட்டேன். களஞ்சிய அறைமுழுவதும் மண்ணெண்ணை வழிந்தோட தீயும் பரவ வீட்டை விட்டு ஓடி காட்டுக்குள் ஒளிந்துகொண்டேன்.

பலர் கூடி தீயை அணைத்தார்கள். எனது விஞ்ஞான ஆராட்சியை எனது தாயார் கண்டிருக்கிறார். அதை நான் காணவில்லை. தீயை அவர்கள் அணைத்த பின் ஏதுமறியாதவன் போல் வீடு திரும்பியபோது அம்மா காதைத்திருகி  அப்பாவிடம் சொல்வேன் என்றதும் ”குற்றத்தை ஏற்றுக்கொண்டேன்”.  ஆனால் அம்மா பொய் சொல்கிறார் என்று அப்பா எப்படியோ கண்டுபிடித்து என்னை ஓட ஓட கலைத்துக் கலைத்துஅடித்தார். அதன் பின் தீயுடன் நான் விளையாடுவது நின்று போனது.

எனது தந்தையார் கரும்புத் தோட்டம் வைத்திருந்தார். அவர் தனது கரும்புத் தோட்டத்திற்கு பசறை என்னும் இடத்தில் இருந்து திருச்செல்வம் என்னும் ஒரு இளைஞனை காவலுக்கு அமர்த்தியிருந்தார்.  திருச்செல்வம் மிகவும் சுறு சுறுப்பானவர். கரும்புத் தோட்டத்தின் எல்லையில்  இருந்த ஒரு உயரமான மரக்கிளையில் ஒரு கொட்டிலை அமைத்து அங்கிருந்தபடியே கரும்புத் தோட்டத்தை கவனித்துவந்தார். நானும் விடுமுறை நாட்களின் போது அந்தக் கொட்டிலிலேயே காலம் கடத்திவந்தேன். அவர் ஒரு கதாநாயகனாகவே எனக்குத் தெரிந்தார். பயம் என்பது என்ன என்பதை அறியாதவராய் இருந்தார். இரவினில் பந்தமெரித்து யானைகளிடம் இருந்து கரும்புக்காட்டை பாதுகாப்பதாய் திருச்செல்வம் கூறுவார். நான் வாயைப் பிளந்தபடியே அவரின் கதைகளைக் கேட்டுக்கொண்டிருப்பேன்.

ஓர் நாள் மாலை நேரம் திருச்செல்வம் உயிர் போகிறது போன்ற வேகத்துடன் ஓடிவந்தார்.  கரும்புத்தோட்டம் எரிகிறது என்றார். அப்பா என்னை வாடா என்றபடியே திருச்செல்வத்தின் பின்னால் ஓடினார். திருச்செல்வத்தின் வேகத்துக்கு அப்பாவால் ஈடுகொடுக்க முடியவில்லை.  மூச்சிரைத்தபடியே பெருத்த உடலை தாங்கிய படி அவர் ஓடியது எனக்கு சிரிப்பாய் இருந்தது.

வேறு பலரும்  எம்முடன் இணைந்து கொள்ள  கரும்புத் தோட்டத்தின் அருகில் ஆரம்பித்த காட்டுத்தீயை எல்லோருமாக  ‌மரக்கொப்புகளை ஒடித்து அவற்றின் உதவியினால் தீயினை அணைத்தோம். காட்டுத்தீயின் வேகமும், அகோரத்தையும் அன்றுதான் அறிந்துகொண்டேன். திருச்செல்வம் இல்லாதிருந்தால் அன்று அப்பாவின் கரும்புத்தோட்டம்  சாம்பலாகியிருக்கும் என்று அப்பாவே சொல்லக்கேட்டேன். அதன் பின் திருச்செல்வத்திற்கு பலத்த சலுகைகள் அப்பாவிடம் கிடைத்தது.

இதன் பின் தீயுடனான நெருக்கம் எனக்கு கிடைக்க பல வருடங்களாகியது. 1983ம் ஆண்டு  மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் விடுதியில் தங்கயிருந்து கல்விகற்ற காலம். நான் விடுதியின் சிரேஸ்ட மாணவர் தலைவனாய் நியமிக்கப்பட்டிருந்தேன். ஒரு நாள் நள்ளிரவில் தூக்கத்தில் தட்டி எழுப்பப்பட்டேன். ”அண்ணை பள்ளிக்கூடம் எரியுது” என்றார்கள். வெளியே வந்த போது  தென்னையோலையினால் அமைக்கப்பட்டிருந்த  பல வகுப்பறைகள் தீயிடப்பட்டிருந்தன. பாடசாலையதிபருக்கு செய்தியனுப்பி, சிரமத்தின் மத்தியில் மேசை, வாங்குகளை காப்பாற்றிக்கொண்டிருந்த போது அதிபர் வந்தார். எல்லோரும் சேர்ந்து தீயை அணைத்தாலும் வகுப்பறைகள் எரிந்து போயிருந்தன. இரவிரவாய் அவற்றை அகற்றினோம்.

யார் பாடசாலையை எரித்தார்கள் என்பதை கண்டுபிடிக்கும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டது. சந்தேகப்படும்படும்படியாக  திருச்செல்வம் என்னும் மாணவனே இருந்தான். அவனும் நானுமே விடுதியைச் சுற்றயிருக்கும் வீடுகளில் இருந்து இராப்பொழுதுகளில் கோழிகளை திருடி எமது நள்ளிரவு உணவாக்கிக் கொண்டிருந்தோம் என்பது எமக்கும் இன்னும் மிகச் சிலருக்கும் மட்டுமே இன்றுவரை தெரிந்திருந்த பரமரகசியம்.

அவனிடம் அதிபருக்கு நம்பிக்கை இருக்கவில்லை. பாடசாலை எரிவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் அவன் வீடு செல்ல அனுமதி கேட்டு அதிபர் மறுத்திருந்தார். எனவே அவனே பாடசாலையை எரித்தான் என்பது அதிபரின் கணிப்பு. எனினும் ஆதாரம் இல்லையாதலால் என்னை ஆதாரத்தை கண்டுபிடிக்க நியமித்தார்.

அனைத்து மாணவர்களையும் அழைத்து ” எனக்கு யார் பாடசாலையை எரித்தது என்று தெரியும்” அவர்கள் என்னுடன் தனிப்புட்ட முறையில்  உடனேயே தொடர்பு கொண்டால் அதிபரின் தண்டனையில் இருந்து தப்பிக்கலாம் என்று கதையளந்தேன். சற்று நேரத்தில் ஒருவன் ” அண்ணை நான் தான் நெருப்புப்பெட்டி வாங்கி வந்தேன் என்றான்”. யார் எரித்தது என்றேன். திருச்செல்வம் என்றான் அவன். திருச்செல்வத்தை அழைத்த போது என்னைக் காட்டிக்கொடுக்காதே, எனது சீட்டு கிளிந்துவிடும். என்னைக் காப்பாற்று என்றான்.

ஒரு புறம் நண்பன். மறுபுறம் அதிபர். அதிபரிடம் சேட்டைவிடுவது தற்கொலைக்குச் சமம் என்பதை பாடசாலை மாணவர்கள், ஆசியர்களில் இருந்து முழு மட்டக்களுப்புமே அறிந்திருந்தார்கள். நண்பனை காட்டிக்கொடுத்தால் நண்பனின் பாடசாலைவாழ்க்கை அன்றுடன் முடிந்தது என்பதை உணர்ந்ததால் முக்கிய நண்பர்களை அழைத்து மந்திராலோசனை நடாத்தினோம். என்ன பதிலை அதிபரிடம் சொல்வது என்று எமக்குப்புரியாதிருந்த போது ஒரு நண்பன் ” இரவில் ”இராணுவத்தினரின் வாகனம்” இவ் வழியால் ரோந்து போவதுண்டு், எனவே அவர்களே வந்து எரித்தார்கள் என்றும் ”இராணுவத்தினரின் வாகனம்”  ஒன்று பாடசாலை எரியும் போது பாடசாலையருகில் நின்றிருந்ததை சில மாணவர்கள் கண்டிருக்கிறார்கள் என்றும் அதிபரிடம் கூறச்சொன்னான். அதுவே நண்பனைக்காப்பாற்ற சிறந்த வழியாய் தெரிந்ததால் அதையே அதிபரிடம் கூறினேன்.  அதிபர் என் நெஞ்சினை ஊடுருவிப் பார்த்தார். தலைகுனிந்திருந்தேன். திருச்செல்வம் உயிர்தப்பி வாழ்ந்திருந்தான்.

சில மாதங்களின் பின் திருச்செல்வம் ஒரு இயக்கத்தில் சேர்ந்து அதன் பி்ன்னான காலங்களில் ஒரு நாள் இராணுவத்தின் ஸ்னைப்பர் தாக்குதலில்  உயிரிழந்தான் என்று ஒரு நாள் அதிபரே எனக்குக் கூறினார். அத்தோடு மட்டுமல்ல நான் அவனை காப்பாற்றிய கதையும் தனக்குத் தெரியும் என்றார், ஒரு விதமான கண்டிப்பான புன்னகை கலந்த குரலில். தலையை குனிந்தபடியே நின்றிருந்தேன் நான், அவரருகில்.

தீயுடன் எனக்கு ஏற்பட்ட இரு சம்பவங்களிலும் ”திருச்செல்வம்” என்னும் பெயரே சம்பத்தப்பட்டிருப்பதன் காரணம் தற்செயலானது என்றே நம்புகிறேன்.

இவை தவிர நான் நோர்வே வந்த ஆரம்ப காலங்களில் ஒரு நாள் நள்ளிரவு நேரம் கடைத்தெருவழியாக நடந்து கொண்டிருந்தேன். ஒரு கடையினுள் இருந்து புகை வருது போல் தெரிந்தது. உடனேயே அருகில் இருந்து தொலைபேசி பெட்டிக்குள் புகுந்து தீயணைக்கும் படைக்கு அறிவித்து 5 நிமிடங்களில் தீயணைப்பப்படை  ஒலி, ஒளி சகிதம் வாகங்களில் வந்திறங்கி யார் தொலைபேசியில் தொடர்பு கொண்டது என்ற போது ”நான் தான்” என்றேன் பெரும் பெருமிதத்துடன். எங்கே தீ என்றார்கள். கடையையும் புகை வரும் இடத்தையும் காட்டினேன்.

சற்று நேரம் புகையை உற்று நோக்கியவர்கள் தமக்குள் எதையோ பேசிக்கொண்டார்கள். பின்பு என்னை பார்த்தபடியே சிரித்தார்கள்.  ஒன்றும் புரியாததால் ஏன் சிரிக்கிறீர்கள் என்றேன்.  அப்போது ஒரு தீயணைப்புப் படைவீரர் உனது விளிப்புணர்வை பாராட்டுகிறோம் ஆனால் அது தீயில்லை என்றார். நெருப்பில்லாமல் புகையா என்னும் தொனியில் கேள்வி கேட்டேன்.

அது ஒரு நீராவி இயந்திரம். காற்றின் ஈரப்பதனை தக்கவைப்பதற்காக பயன்படுத்தப்படும் இயந்திரம் எனவே தான் அந்தப் புகை வெளிவருகிறது. அது உண்மையில் புகையல்ல, நீராவி என்றார்.

வெட்கித் தலை குனிந்து கொண்டேன். மீண்டும் உனது விளிப்புனர்வை மெச்சுகிறோம் என்று கூறி அங்கிருந்து அகன்றனர் தீயணைப்புப் படைவீரர்கள்.

அதன் பின் இன்று வரை தீ என்னுடன் நெருங்கிய உறவினை ஏற்படுத்திக்கொள்ளவில்லை. நானும் தள்ளியே நின்றுகொள்கிறேன். இனிமேலும் தீ என்னை நெருங்காதிருக்கட்டும் எனக்கடவதாக!

இன்றைய நாளும் நல்லதே!

7 comments:

  1. 'நான் நெருப்பு மாதிரி' என்று பின்நவீனத்துவமாகச் சொல்லுகிறீர்களோ?

    ReplyDelete
  2. நெருப்பின் நினைவுகளை மீட்டிச் சூடு காய்ந்திருக்கிறீர்கள்.எங்களுக்கும் இப்படியான நினைவுகள் எத்தனயோ இருந்தும் உங்களைப்போல எழுதவரேல்லையெண்டுதான் கவலை எனக்கு !

    ReplyDelete
  3. நெருப்புடன் உங்கள் ஞாபக மீட்டில் ஊடே பிரிவின் வலியை உணர முடிகின்றது.

    ReplyDelete
  4. நெருப்புடன் சூடுகாய முடியும். குளித்து விளையாட முடியுமா???

    ReplyDelete
  5. ///அவனும் நானுமே விடுதியைச் சுற்றயிருக்கும் வீடுகளில் இருந்து இராப்பொழுதுகளில் கோழிகளை திருடி எமது நள்ளிரவு உணவாக்கிக் கொண்டிருந்தோம் என்பது எமக்கும் இன்னும் மிகச் சிலருக்கும் மட்டுமே இன்றுவரை தெரிந்திருந்த பரமரகசியம்.///

    சின்ன சின்ன தவறுகள் கடந்து வந்து பார்க்கும் போது ரசிக்க கூடியதாக இருக்கிறது.............

    ReplyDelete
  6. நான் அவனை காப்பாற்றிய கதையும் தனக்குத் தெரியும் என்றார், ஒரு விதமான கண்டிப்பான புன்னகை கலந்த குரலில். தலையை குனிந்தபடியே நின்றிருந்தேன் நான், அவரருகில். /// எதுவும் சொல்வதற்கில்லை

    ReplyDelete
  7. நெருப்புக்கும் உங்களுக்கும் உள்ள தொடர்பை அனல் கக்க சொல்லியிருக்கிறீர்கள்…நண்பனை காப்பாற்றிய விதம் உங்கள் மனிதாபிமானத்தை காட்டுகிறது…. பகிர்வுக்கு நன்றி….வாழ்த்துக்கள்

    ReplyDelete

பின்னூட்டங்கள்