ஒரு பாலமும் பால்யத்து திருவிளையாடல்களும்

மட்டக்களப்பில் பழைய கல்லடிப்பாலத்திற்கு அருகில் புதிய கல்லடிப்பாலத்தைக் கட்டியிருக்கிறார்கள். அது அண்மையில் பாவனைக்கு விடப்பட்டிருக்கிறது.

இந்தப் பாலத்திற்கும் எனக்கும் இடையில் நடந்த சம்பவம் பற்றியதே இந்தப்பதிவு.
 
1980களின் ஆரம்பத்தில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் கல்வி கற்ற காலமது, விடுதியில் தங்கியிருந்தேன். விடுதியின் தலமை மாணவர் தலைவராகவும் நியமிக்கப்பட்டிருந்தேன்.

விடுதி வாழ்க்கை என்பது இலகுவல்ல. சிறிய வகுப்பு மாணவர்களுக்கு அது மிகவும் கடுமையானது. அன்பு ஆதரவு இல்லாத இடம். பசியும் தன் பங்கிற்கு வீடுபற்றிய ஏக்கத்ததை தரும். எனவே சிலர் வீடுகளுக்கு தப்பி ஓடுவதுண்டு.
 
சில மாணவர்கள் கல்லடிப் பாலத்தைக் கடந்தே இவர்களின் வீடுகளுக்குச் செல்லுவேண்டும். அப்படி விடுதியி்ல் இருந்து வீடுகளுக்குத் தப்பியோடும் மாணவர்களை நாம் மடக்கிப்பிடிக்கும் இடம் கல்லடிப்பாலம்தான். 
 
மிகவும் விறுவிறுப்பான கள்ளன் போலீஸ் விளையாட்டு போன்றது, தப்பியோடும் மாணவர்களை மடக்கிப்பிடிப்பது.

ஒரு முறை ஒரு பொடிப்பயல் விடுதியில் இருந்து தப்பிவிட்டான் என்ப‌தை உளவுத்துறை செய்தியறிவித்தது. பேரூந்து நிலையத்திற்கு ஒரு போலீஸ் படை, தனியார் பேரூந்து நிலையத்துக்கு ஒருபடை, நான் தனியே பாலத்துக்கு என்று சென்றோம். தொலைத்தொடர்பு சாதங்கள் இல்லாத காலம். நான் பாலததின் பாதசாரிகள் நடக்கத்தொடங்கும்ஆரம்பத்தில் நின்றிருந்தேன்.
வெய்யிலின் அகோரம், அத்துடன் இந்தப் பொடிப்பயல் தப்பிய கதை அதிபருக்குத் தெரிந்தால் எனக்குக் கிடைக்கவிருக்கும் பூசை என்று எல்லாம் சேர்ந்து பொடிப்பயலின்மேல் எனக்கு கெட்டகோபம் வந்திருந்தது.
சற்று நேரமாய் பாலத்தின் வாயிலில் நின்றிருந்தேன். அவனைக் காணவில்லை.  ஒரு வேளை அவன் பாலத்தை கடந்துவிட்டிருப்பானோ என்ற எண்ணத்தில், நான் பாலத்தைக் கடந்துகொண்டிருந்த வெள்ளைச்சீருடை அழகிகளைப் பார்த்துக்கொண்டிந்த நேரததில் அவன் என்னைக் கடந்து பாதசாரிகள் நடக்கும் பகுதியினுள் நடப்பதை சற்று நேரத்தின் பின்பு தான் கண்டேன்.
நான் கடுங் கோவத்துடன் அவனின் பெயரைக் கூறிக் கத்தினேன்: கத்தியது மட்டுமல்லாது அவனைத் துரத்தவும் தொடங்கினேன். எனது குரலையும், என்னையும் கண்டவன் ஓடத் தொடங்கினாான். இருவரும் ஓடிக்கொண்டிருந்தோம். நான் அவனை நெருங்கிக்கொண்டிருந்தேன். திரும்பிப் பார்த்தபடியே ஓடியவன்,  தப்ப முடியாது என்று அறிந்துகொண்டான். ஓடுவதையும் நிறுத்திவிட்டு என்னைப் பார்த்தபடியே நின்றான்: அவன் ஓடியதை நிறுத்தியதும் நானும் மூச்சுவாங்கியபடியே ஓடியதை நிறுத்தி அவனை நோக்கி ஆறுதலாகத நடக்கலானேன்.
சட்டென்று பாதசாரிகள் நடக்கும் பகுதில் இருந்து வாகனங்கள் செல்லும் பகுதிக்கு பாலத்தின் மேல் ஏறி அங்கிருந்து இரும்புத் தூண்களை பற்றி பற்றி நகரத் தொடங்கினாான்.
அவனின் இந்த திடீர் தந்திரோபாயத்தினால் நான் தடுமாறியதல்லாமல் பயந்தும் போனேன். அவனோ ஒரு சிறுபையன். பாலத்தின்  நடுவே உள்ள கம்பிகளினான இடைவெளியை அவன் கடந்துசென்றால் வாகனங்கள் ‌செல்லும் பகுதி. அதைக் கடக்கும்போது இவன் வாவியினுள் விழுந்துவிடுவானெனின், வாவியின் பெரும் ஆழமான பகுதியில் விழுந்துவிடுவான். இவ்வாறு நான் பயந்திருந்த போது ஒரு குரங்கினைப் போன்ற லாகத்துடன் பாலத்தின் நடுப்பகுதியை கடந்து கொண்டான் அவன்.

இப்போ எம்மால் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள முடிகிறது. ஆனால் அவனை என்‌னால் பிடிக்க முடியாதிருக்கிறது. நான் ஒரு பக்கம் ஓடினால் அவன் மறுபக்கமாய் ஓடினான். அவன் பக்கமாய் ஓடினால் மறுபக்கமாய் ஓடினான்.
சரி இவனை அவன் ஊர் பக்கமாக விட்டால்தானே பிரச்சனை என்பதால் அவன் ஊர்ப்பக்கமாய் ஓடத்தொடங்கினேன். அப்போ அவன் என்னை சற்றுத் தூரம் ஓடவிட்டவன் மீண்டும் பாலத்தால் நடைபாதைப் பகுதிக்கு பாலத்தினை கடந்து வந்தான். என்னைப் பார்த்தபடியே நின்றீருந்தான்.

எனவே நானும் பாலத்தின் மறுகரையின் எல்லையிலேயே நின்றுகொண்டேன். இப்போ அவனால் எப்பகுதியாலும் என்னைக் கடக்கமுடியாது.  ஒரு மணிநேரம் கடந்திருக்கும் அவன் பாலத்தின் நடுவில் நின்றுகொண்டிருக்க நான் பாலத்தின் எதிர்க்கரையில் நின்றிருந்தேன்.
எனது அதிஸ்டத்துக்கு என்னைத் தேடி பேரூந்து நிலையத்திற்கு சென்ற மாணவர்கள் வந்தார்கள். அவர்களைக் கண்டதும் பொடிப்பயல் மீண்டும் பாலத்தில் ஏறி வாகனங்கள் கடக்கும் பகுதிக்குள் பாய்ந்து கொண்டான்.
நாம் இரு குழுக்களாகப் பிரிந்து இரு பகுதிகளினாலும் சென்றுபோது அவன் தனது திருவிளையாடல் முடிவடையும் நேரம் வந்துவிட்டதையுணர்ந்து அழத்தொடங்கினான்

அவன் அழ அழ வீதியால் அவனை இழுத்துவந்து, அவனை பாடசாலை விடுதிக்குள் அழைத்து வந்ததும் எனது கோபம் அனைத்தையும் சேர்த்து அவனின் முகத்தில் அறைந்தேன். அவனை சில மாணவர்கள் பொறுப்பெடுத்துக்கொண்டார்கள்.

அன்று மாலையே விசாரனைக் கமிஷன் ஆரம்பித்ததது அதிபரின் தலைமையில். நான் வெற்றிபெற்ற போர்வீரனைப்போல் நெஞ்சை நிமிர்த்தி நின்றிருந்தேன். அவன் கூனிக்குறுகி நின்றிருந்தான்
விசாரணையின் பின் அவனுக்கும் பேச அனுமதி கிடைத்தது. பசியினாலும், அம்மாவை பார்க்கவேண்டும் என்பதாலும் தான் ஓடியதாகச் சொன்னான்.
அத்துடன் சஞ்சயன் அண்ணண்
நான் அறைந்ததையும் சொன்னான்.
அதிபர் அவனை கடுமையாக எச்சரித்து முகத்தில் இரண்டு அறைவிட்டு அவனை அனுப்பினார்.
பின்பு எனக்கு இரண்டு அறைவிட்டார். பின்பு இப்படிக் கூறினாா்.
உனக்கு மாணவர்களை அடிப்பதற்கு உரிமையில்லை. உன்னைப் பார்த்து மற்றவர்களும் பழகுவார்கள்.
அவன் பாலத்தை குறுக்காகக் கடந்த போது நீ அவனை துரத்துவதை நிறுத்தியிருக்கவேண்டும்.அவனுக்கு ஏதும் ஆபத்து நடந்திருந்தால் யார் பொறுப்பு என்பதாயும் இருந்தது  அதிபரின் வாதம்.
பொடிப்பயலை எதிர்வரும் வாரவிடுமுறைக்கு வீட்டுக்கு அனுப்பவும் உத்தரவிட்டார்.  மனதுக்குள்  ‌பொடிப்பயலைக் கறுவியபடியே, பெரியவருக்கு தலயைாட்டியபடியே வெளியேறினேன்.
அடுத்து வந்த வாரவிடுமுறையில் அவன் வீடு சென்றபோது என்னைப்பார்த்து சிரித்தது, என்னை கிண்டல் பண்ணுவது போலிருந்தது.
பி.கு: 
சஞ்சயன் அண்ணணுக்கு விடுதியிலும், பாடசாலையிலும் பலத்த செல்வாக்கு இருந்தது. அதனால் ஒரு ஆயுதமற்ற விசுவாசிகளின் குழுவும் இருந்தது. அந்த விசுவாசிகளைக் கொண்டு அந்தப் பயலை அவன் விடுமுறையால் வந்தபின் நான் சில நாட்கள் கவனித்துக்கொண்டேன்.
விசுவாசத்தைக் காட்டிய விசுவாசிகளுக்கு பாடசாலைக்கு அருகில் இருந்து வீ்ட்டுக்கோழிகள் விருந்தாகின.
30 ஆண்டுகளின் பின்பான ஒரு நாள் அதிபரைச் சந்தித்து பேசிக்கொண்டிருந்த போது இது பற்றிக் கூறிய போது ”நீ  இவ்வளவு மோசமான ஆள் என்று எனக்குத் தெரியாதே” என்று கூறிச் சிரித்தார்.
உங்களுக்குத் தெரியாதது எவ்வளவோ இருக்கு சேர், என்று எனக்குள்ள சொல்லிக்கொண்டேன்.முதுமையின் தனிமையை சந்திக்கக்கிடைத்தது

வெள்ளிக்கிழமையின் பின் மாலைப்பொழுது மெதுவாய் நெருங்கிக்கொண்டிருந்தது. அநியாயத்துக்கு எனது நண்பர்கள் கூட்டம் திருந்திவிட்டது போலிருந்தது அவர்களின் அமைதி. புதுவருடம் பிறந்து 3 கிழமைகள் ஆகியிருந்தும் அநியாயத்துக்கும் நல்லவர்களாய் இருக்கிறார்களே இவனுகள் என்று நினைத்தபடியே இருந்தேன்.

நத்தார் பரிசாக கிடைத்தவொரு திராட்சைப்பழரச போத்தல் மேசையில் இருந்தது. அதைப் பார்த்ததும் மனது குஷியாயிற்று. அப்போது தான் வந்தது அந்த தொலைபேசி.

தொலைபேசியில் அழைத்தார் ஒரு பெண்மணி, மிகவும் வயதானவர்.

”நான் கணிணி பற்றி நன்கு அறிந்தவள். 1970 இல் இருந்து கணிணி பாவித்துவருபவள். எனது நண்பிகளுக்கு நான் தான் கணிணி திருத்துவேன்.
ஆனால் இன்று என்னால் சமாளிக்க முடியவில்லை. உடனே வா!” என்று அதிகாரம் கலந்த அன்பான கட்டளையிட்டார் அவர்.

சற்று அவருடன் பேசி கணிணியின் பிரச்சனை என்ன என்று அறிந்துகொண்டேன். வெள்ளி இரவு .. நே‌ரம் இல்லை என்று சற்று பிகு பண்ணினேன். கெஞ்சினார், நான் வயதானவள் என்றார், கணிணி இன்றி எதுவும் இயங்காது என்றார்.

மனது இரங்கியது போல் நடித்தேன். சரி வருகிறேன். ஆனால் ... என்று கூறி விலையை பேசிக்கொண்டேன். அது பிரச்சனை இல்லை உடனே வா என்றார்.

வெளியே குளிர் -14 எனவே குளிருக்கான கம்பளி ஆடைகளை அணிந்து கொண்டு புறப்பட்டேன். பனி வாகனத்தை மூடியிருந்தது. கை விறைக்க விறைக்க பனியைத்  தட்டிவிட்டு, உறைபனியைச் சுறண்டியெடுத்த பின் வாகனத்தினுள் ஏறிக்கொண்டேன். குளிர் முள்ளந்தண்டை சில்லிடவைத்துக்கொண்டிருந்தது.

ஒஸ்லோவின் செல்வச்செ‌ழிப்புள்ள பகுதியில் அவர் வீடு அமைந்திருந்து. மாலை 08:00 க்கு அவர் வீட்டை அடைந்த போது வீதியில் எவரும் இல்லை. அனைவரையும் குளிர் விரட்டியடித்திருந்து. நான் அவர் வீட்டையடைந்து என்னை அறிமுகம் செய்து கொண்டேன். எனது பெயரை நான்கு முறை உச்சரிக்க முயற்சித்தார். நல்லவேளை என் அம்மா அவ்விடத்தில் இருக்கவில்லை.

கணிணியைக் காட்டினார். கணிணிக்கு அருகில் அமர்ந்துகொண்டேன். நான் கணிணியை இயக்கினேன். அவர் தனக்கு 80களில் இருந்து கணிணியுடன் பரீட்சியம் இருப்பதாயும், தனக்கு கணிணி பற்றி அதிகம் தெரியும் என்றார்.

ம்ம் கொட்டினேன்.

தான் மிகப்பெரிய ஒரு பெற்றோலிய கம்பனியில் உயர்ந்த பதவியில் இருந்ததாகவும், அங்கு தான் பயின்ற, பாவனையில் இருந்த மென்பொருட்களின் ஒரு நெடும் பட்‌டியலைக் கூறி இவை உனக்கு தெரிந்திருக்காது என்றும் கூறினார்.

இல்லை, தெரியும் என்றால் வேலியில் ‌நின்றிருந்த ஓனாணை  எடுத்து வேட்டிக்குள் விட்ட கதையாகிவிடும் என்பதால் தெரியாது என்றேன்.

அப்போது அவர் உனக்கு பூனை என்றால் பயமா என்றார். இல்லை என்றேன். எனக்கும் பூனைக்கும் ஜன்மமப்பகை உண்டு என்பதை அடக்கியே வாசித்தேன். தனது பூனை தூங்கிக்கொண்டிருக்கிறது. அது விழித்ததும் உன்னிடம் வரும் என்று ஒரு போடு போட்டார். என்னிடம் வந்தால் பூனைக்கு ராகுகாலம் என்று நினைத்துக்கொண்டே. அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தேன்.

அவர் கணிணி தனது இயக்கத்தை நிறுத்தியிருந்து. அதன் harddisk பழுதடைந்திருந்ததை கண்டுகொண்டேன். அதை அவரிடம் கூறிய போது ”சரி ..பணம் தருகிறேன் போய் வாங்கி வா” என்றார். ஏதோ கடையில் பால் வாங்கி வா என்பது போல.

வயதானவர் என்பதால் மிகவும் மரியாதையாக ”இல்லை இதை விற்கும் கடை இப்போது பூட்டியிருக்கும்” என்றேன்.

”என்ன செய்யலாம்?” என்றார்

எனக்குத் தெரிந்த பாக்கிஸ்தான் நண்பரின் கடையில் பழைய Hard disk இருக்கலாம் அல்லது எனது வாகனத்தினுள் உள்ள ஒரு பெட்டியினுள்ளும் இருக்கலாம் என்றேன்.

”உனது வாகனத்தினுள் பார்” என்றார்.

அவரின் அதிஸ்டம், என்னிடம் ஒரு பழைய Hard disk இருந்தது.

அதை  கணிணியினுள் பூட்டி வேலையைத் தொடங்கினேன்.

அவரோ தனது வாழ்க்கை பற்றி என்னுடன் பேசிக்கொண்டிருந்தார். தனியே வாழ்கிறாராம், காதலர்கள் இருந்தார்களாம். ஆனால் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று தான் கவலைப்படவில்லை என்றும் கூறினார்.

அவர் வீடு முழுவதும் பூனைகளின் படங்கள், சிற்பங்கள், ஓவியங்கள் என்று எங்கும் பூனை மயமாக இருந்தது. அவரின் ஒரே ஒரு துணை அந்தப் பூனைதான் என்றும், ஒரு முறை தான் இரண்டாவது மாடிப்படியில் இருந்து கீழிறங்கும் போது விழுந்து, காயமுற்று மயக்கமுறுவதற்கு முன் ”அய்யோ நான் இப்போ இறக்கப்போகிறேன், வீட்டில் இருக்கும் பூனையை யார் காப்பாற்றப்போகிறார்கள்” என்று நினைத்ததையும் கூறினார்.

அவருக்கு முதுகெலும்பில் ஒரு நோய் இருக்கிறது. அதனால் பல மருந்துகள், களிம்புகள், குளிசைகள் பாவிக்கிறார். அவையெல்லாம் மேசையெங்கும் பரவிக்கிடந்தன. மிகவும் அதிகமாகப் புகைத்தார். பாரதிராஜாவின் படங்களில் வரும் கனவுக்காட்சிகள் போன்று சிகரட்டின் புகை அவரது வீட்டுக்குள்  வெள்ளை வெள்ளையாய் உலாவிக்கொண்டிருந்தது. தான் புகைப்பதில் எனக்கேதும் ஆட்சேபனை உண்டா என்றார்.  இல்லை என்று தலையை ஆட்டினேன்.

அவருக்கு பேச்சுத்துணை இல்லை, அதனாலோயே என்னை வதக்கி எடுக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. முதுமையில், தனிமை கொடியது என்பதை நான் அவர் மூலமாயும் உணர்ந்துகொண்டிந்தேன்.

நேரம் கடந்துகொண்டிருந்தது.  தேநீர், பிஸ்கட் தந்தார். ஒரு சிகரட் முடிய முதல் அ‌திலேயே  அடுத்ததை பற்றவைத்துக்கொண்டார்.  இடையிடையே தனது வாழ்க்கைப் பிரச்சனைகளையும், அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார். பூனை இன்று அதிகமாய் தூங்குகிறது என்றார். பூனை தொடர்ந்து தூங்கவேண்டும் என்று ஒஸ்லோ முருகனை வேண்டிக்கொண்டேன்.

அவரது ஒரே சகோதரியான தங்கை, அதீத மதுப்பழக்கத்தின் காரணமாய் குறைந்த வயதில் இறந்திருக்கிறார். அவருக்கு ஒரு மகன் இருக்கிறார். இவரினதும்,  சகோதரியினதும் தாயார் இறந்த பின், சொத்துக்களை பிரித்தெடுப்பதில் இவரின் தங்கையின் மகனுடன் மனக்கசப்பு ஏற்பட்டதால், தனது  சொத்துக்களில் ஒரு சதத்தையேனும்  அவருக்கு எழுதவில்லை என்றும், தனது ஒன்று விட்ட சகோதரியின் மகனுக்கே எழுதியுள்ளதாயும் குறிப்பிட்டார். அவரின் பேச்சில் அவர் ஏமாற்கப்பட்டிருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்ளமுடிந்தது.

இடையிடையே என்னைப் பார்த்து  ”உன்னால் எனது கணிணி உயிர்தப்பியது ” என்று கூறினார். நான் தலையை ஆட்டியபடியே, அதிகமாய் புகழ்கிறீர்கள் என்றேன். விழுந்து விழுந்து சிரித்தபடியே ”உன்னால் எனது கணிணி உயிர்தப்பியது” என்றார் மீண்டும். நான் தலையையும் ஆட்டவில்லை. வாயையும் திறக்கவில்லை.

நேரம் நடுநிசியை நெருங்கிக்கொண்டிருந்தது. அப்போதும் பூனை தூங்கிக்கொண்டேயிருந்தது. நானும் கணிணியை திருத்திமுடிக்கும் நிலையில் இருந்தேன். அவரை அழைத்து கணிணியை ஒரு முறை இயக்கிப் பார்க்க வேண்டினேன். வந்தார், இருந்தார், இயக்கினார். தலை ஆட்டினார், ”உன்னால் எனது கணிணி உயிர்தப்பியது என்றார், மீண்டும். நான் வாயைத் திறக்கவே இல்லை.

அவரிடம் இருந்து கைகுலுக்கி விடைபெற்ற போது அவர் காலருகில் பூனை ”மியாவ்வ்” என்றது.ஒரு கடவுளும் ஒரு கதைசொல்லியும்

http://eathuvarai.net/  இல் வெளியான எனது பத்தி.
--------------------------------------------
வயதுக்குமீறிய ஆசையின் காரணமாக, கால்ப்பந்து விளையாடி கால் முறிந்து சில வாரங்களாக  எனது குறுநிலத்தினுள் முடங்கிக்கிடக்கிறேன். 
தனியே வாழ்வதால் நண்பர்களின் உதவியுடனேயே நாட்கள் நகருகின்றன. கடந்து போக மறுக்கும் பொழுதுகளை சிரமப்பட்டே கடந்துகொள்ளவேண்டியிருக்கிறது. எனவே அருகில் உள்ள நண்பரின் அலுவலகத்திற்குச் சென்று பொழுதினை அவ்வப்போது கடந்துகொள்கிறேன். 
கடந்த வெள்ளிக்கிழ‌மையும் அப்படித்தான், நண்பரின் அலுவலகத்தில்  இருந்தபோது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
மறுபுறத்தில் கடவுள் பேசினார்.
”எங்கே நிற்கிறாய்?
"நான் உன்னைப் பார்க்க வந்திருக்கிறேன்"
"உன் வீட்டிற்கு முன் நிற்கிறேன். வீட்டில் நீ இல்லை"
"கடுமையாகக் குளிர்கிறது” 
என்று  சற்று கோபம் கலந்த குரலில் பேசினார், கடவுள்.
உடனேயே எனது நண்பரின் நண்பரிடம் கூறி, கடவுளை அழைத்து வரவேண்டினேன். கடவுளை மீண்டும் அழைத்து, “பச்சை நிறமான சற்றே பழைய கார். காரைப் போலவே சற்றுப் பழையவர் சாரதி, மஞ்சல் நிற உடையணிந்த ஒரு நடுவயதுப்பெண்மணி அவர். அவருடன் என்னிடத்துக்கு வாருங்கள்“ என்றேன்.
”ம்” என்றார் கடவுள். நான் வரவில்லை என்ற அதிருப்தி தெரிந்தது அவர் குரலில்.

”எனக்கு பசிக்குது” என்றார் கடவுள்.
”ம் முதலில் வாருங்கள்” என்று கூறி தொலைபேசி அழைப்பைத் துண்டித்துக்கொண்டேன்.

சற்று நேரத்தின் பின் எனது நண்பருடன் கடவுள் உரையாடியபடியே வருவது கேட்டது. என்னால் நடமாட முடியாததால் அவரை வாசல்வரை சென்று அழைத்து வரமுடியவில்லை.

நான் நின்றிருந்த அறைக்குள் வந்தார் கடவுள். என்னைக் கண்டதும் கையில் இருந்த பையை மேசையில் வீசியெறிந்து விட்டு வந்து என் கழுத்தைக்கட்டிக்கொண்டு முத்தம் தந்தார். பின்பு மெதுவாய் ”Appa! I miss you” என்றார் மடியில் அமர்ந்தபடியே. என் கண்கள் கலங்க, குரல் தழுதளுக்க ” நீங்க அப்பாட செல்லமய்யா” என்று சொல்வதற்குள் பெரும்பாடுபட்டுப்போனேன்.

அவளுக்கு இப்போ 12 வயதாகிறது. 5 வருடங்களுக்கு முன் அவளே எனக்கு யாதுமாய் இருந்தாள். அப்பாவாய், நண்பனாய், விளையாட்டுத்தோழனாய், வேலைக்காரனாய், ஒப்பனைக்கலைஞனாய், விளையாட்டுப்பயிற்சியாளனாய், விகடகவியாய், கதைசொல்லியாய் இப்படி எத்தனையோ பாத்திரங்களை ஏற்றபடியே வாழ்ந்திருந்த பெருநாட்கள் அவை.

வாழ்க்கை என்பதன் யதார்த்தம் உணர்ந்து, கடந்து, நிமிரும்போது இப்போது அவளுக்கு 12 வயதாயும் எனக்கு 47 வயதாயும், நாம் இருவரும் இருவேறு நாடுகளில் வாழ்பவர்களாயும் இருக்கிறோம். முன்பிருந்த தொடர்புகள் இல்லை. இருப்பினும் மனதில் உள்ள நெருக்கம் கூடியிருக்கிறதே தவிர குறையவில்லை.

”என்ன நடந்தது?“ என்றார் கடவுள்.
காலைக் காட்டினேன். கண்கள் விரிய Plaster of paris ஜை தொட்டுப்பார்த்தார். கால் விரல்களைத் தடவிவிட்டார். தடவும்போது “வலிக்கிறதா“ என்றார்.
“இல்லை“ என்றேன். சற்று அழுத்தமாகத் தடவினார். கண்களால் வலிக்கிறதா என்றார். நானும் தலையால் இல்லை என்றேன். மெதுவாய் எனது காலைத் தட்டினார். என்னைப் பார்த்தார். நான் இல்லை என்பது போலத் தலையாட்டினேன். சற்று பலத்துடன் தட்டினார். நான்  ஆஆ வலிக்கிறது என்று தமாசுக்காகக் கத்தினேன். கடவுள் பயந்துபோனார். “மன்னித்துக்கொள் ‌ மன்னித்துக்கொள்“  என்று என்னை கட்டிக்கொண்டார். இலவசமாய் இரண்டு முத்தங்கள் கிடைத்தன.
”பசிக்கிறதா உனக்கு” என்றேன். இல்லை என்றபடியே எனது ஊன்றுகோல்களை எடுத்து ஊன்றி ஊன்றி நடந்து பார்த்தார். அவரால் முடியவில்லை. ஊன்று கோலின் நீளத்தை சற்றுக் குறைத்துத்தரக் கட்டளையிட்டார். குறை‌த்துக்கொடுத்தேன். நான் ஒருவன் இருப்பதையே மறந்துபோனார் கடவுள். ஊன்றி ஊன்றி நடந்தலுத்தபின் என்னைப் பார்த்து ”பசிக்கிறது” என்றார்.
உணவினை முடித்த பின்பு, நண்பர் எம்மை எனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். வீட்டினுள் செல்லும் போது எனது உடமைகளைக் கடவுளே காவினார். என்னிடம் தர மறுத்தார். கதவினைத் திறந்து விட்டார். எனது சப்பாத்தினைக்  கழற்றுவதற்கு உதவினார். நான் எனது கட்டிலில் சாய்ந்து கொண்டேன். கடவுளும் என்னருகில் சாய்ந்து கொண்டார்.

”ஏன் நீ விளையாடப்போனாய்?” என்று தனது விசாரணையை ஆரம்பித்தார் கடவுள்.
”ஆசையாய் இருந்து”
”நீ கிழவன். விளையாடலாமா?” என்றார்.
பரிதாபமாக முகத்துடன்  தனது எஜமானனை பார்க்கும் நாயைப் போன்று அவரைப்பார்த்தேன்.மிகக் கடுமையான குரலில் ”இனி நீ விளையாடக்கூடாது” என்றார்.
”நாய் வாலை நிமிர்த்த முடியாதடீ” என்றேன். கடவுளுக்கு அது புரியவில்லை. என்ன என்றார். விளக்கிக் கூறிய போது விழுந்து விழுந்து சிரித்தார். கடவுள் முன்பைப்போலவே இப்போதும் மிகவும் உரத்த குரலில் சிரிப்பதை அவதானித்தேன்.

நான் அயர்ச்சியாக இருக்கிறேன். சற்று தூங்கப்போகிறேன் என்று என்னருகிலேயே சரிந்துகொண்டார். அப்போது சற்று  அதிகமாக இருமியதால் என்னிடம் இருந்த மருந்தினைக் கொடுத்தேன். முகத்தைச் சுளித்துபடியே குடித்தார். இருமல் சற்று அடங்கியது.  ஆனால் கடவுளுக்கு ஜூரம் ஆரம்பித்திருந்தது.அப்போது நான் கால் முறிவின் காரணமாக தினமும் போடவேண்டிய ஊசியை போட ஆயத்தமானேன். ” நான் ஊசியை போடுகிறேன்”, என்றார். கொடுத்தேன். ”இல்லை இல்லை, நீயே போடு“  என்று திரும்பத் தந்தார்.  “இல்லை நீங்களே போடுங்கள்“ என்று கூறி அவருக்குச்  சற்று உதவினேன். ஊசியைப் போட்டார். ”வலிக்குதா” என்ற போது இல்லை என்றேன். கண்களால் சிரித்தார் கடவுள்.

 முன்னைய  நாட்களில் கடவுள் தான் வளர்ந்து வைத்தியரானால் உனக்கு ஊசிபோடமாட்டேன் என்று அவர் கூறியதை நினைவு கூர்ந்தார்.
”நீ வைத்தியராகப் போகிறாயா” என்றேன்.
”இல்லை நான் ஒரு ஒரு தொல்லியற்துறை விற்பன்னராக” வர விரும்புவதாகச் சொன்னார்.
“அது மிகவும் சிறப்பானதுறை“ என்றேன். அனாசியமாக ”தெரியும்” என்றார்.  என் மனதிற்குள் ஒரு வித மகிழ்ச்சியை உணர்ந்தேன்.இருவரும் சற்றுநேரம் உறங்கிப்போனோம். திடீர் என்று எனது தூக்கம் கலைந்து நான் விழித்துக்கோண்டபோது கடவுள் மெதுவாய் குறட்டைவிட்டபடியே என்னருகில் தூங்கிக்கொண்டிருந்தார். அவர் தூங்கும் அழகினை ரசித்துக்கொண்டிருந்தேன். இடையிடையே இருமினார்.  அவர் இருமியபோது எனக்குள் அசௌகரீயத்தை உணர்ந்தேன்.கடவுள் தூக்கம் கலைந்து எழுந்துகொண்டார்.  என்னைப் பார்த்து ”உன்னருகில் தூங்கமுடியவில்லை, பெருஞ்சத்தமாய் குறட்டை விடுகிறாய்” என்றார், ஆங்கிலத்தில். கடவுள் தேவைக்கு அதிகமாகவே நோர்வே மொழியை மறந்திருந்தது நெஞ்சை நெருடியது. தலையை ஆட்டியபடி அவரது குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டேன்.

கடவுளுக்கு மீண்டும் பசித்தது. அவருக்குப் பிடித்த பாண், பதப்படுத்திய இறைச்சி என்பவற்றை ரசித்து உண்டபடியே என்னுடன் பேசிக்கொண்டிருந்தார். அவருக்கு நான் ஊன்றுகோலுடன் நடப்பது பலத்த இரக்கத்தை கொடுத்தது. நான் எதை எடுக்க முயன்றாலும் ”நீ இரு, நான் எடுத்துத்தருகிறேன்” என்றபடியே இருந்தார்.கடந்த இரு வாரங்களும் எவரின் உதவியின்றியும் வாழ்ந்துகொண்டிருந்ததால் கடவுளின் உதவி மனதுக்கும் உடலுக்கும் பெரிதும் ஆதரவாக இருந்தது. கடவுள் 6 வயதில் ஒரு முறை தனது கையை முறித்துக்கொண்ட காலத்தில் நானே அவருக்கு யாதுமாய் இருந்தேன். அந் நாட்களை நினைவு கூர்ந்தார். அவர் கையில் போட்டிருந்த plaster of paris இன்னும் என்னிடம் இருக்கிறது என்ற போது கடவுள் ஆச்சர்யமாக ” உண்மையாகவா” என்றார். ஆம் உங்கள் நினைவாக என்னிடம் பல நினைவுப்பொருட்கள் இருக்கின்றன. அதில் உன் பற்களும் அடக்கம் என்றேன். அவர் 3 வயதில் பாவித்த  ஒரு சோடிச் சப்பாத்துக்களை எடுத்துக் காட்டினேன். ஆச்சர்யமாக என்னைப் பார்த்து கண்களால் சிரித்தார். அச்சிரிப்பில் எத்தனையோ அர்த்தங்களிருந்தன.நாம் பேசிக்கொண்டிருந்தோம்.

கடவுள் பாடசாலையால் பாரீஸ் நகரத்திற்குச் செல்வதாகவும், தனது iPod இல் பாட்டுக்களை சேமித்துத் தரும்படி கேட்டுக்கோண்டார். மறுக்கமுடியுமா, கடவுளின் வேண்டுகோளை?ரிகானா, நிக்கி மீனாஜ், டெய்லர் ஸ்விவ்ட், வன் டைரக்ஷன், கங்னம் இப்படி எல்லாம் பாட்டுபடிப்பவர்கள் இருக்கிறார்களாம். அவர்களின் பாட்டுக்களை யுடீயூப் இல் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றார். எனது இசையறிவு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. அங்கு டி.எம். எஸ்,  பாலசுரமணியம், எம். எஸ் விஸ்வநாதன்  ஆகியோர் மட்டுமே குடியிருந்தனர். எனவே கடவுளின் இசையறிவு என்னிலும் மேம்பட்டது என்று அறிந்து கொண்டேன்.இருவருமாய் கடவுளுக்குத் தேவையான பாட்டுக்களை சேமித்துக்கொண்டிருந்தோம். நேரம் பின்னிரவாகிக்கொண்டிருந்தது.

கடவுள் குளித்து உடைமாற்றி வந்தார். தலையை வாரிவிடவா என்றேன். கண்களைச் சுருக்கி என்னை  செல்லக் கடுமையுடன் பார்த்தார். நான் பேபி இல்லை என்றார். என்னால் அதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. இருப்பினும் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று உணர்ந்து கொண்டேன்.  கடவுளுக்கு ஒற்றைப்பின்னல், இரட்டைப்பின்னல், குதிரைவால் கொண்டை, உச்சி பிரித்துகட்டுதல் போன்றவற்றில் எனக்கு பலத்த தேர்ச்சி இருந்தது. “அப்பா நீ தான் நோகாமல் சிக்கெடுப்பாய்“ என்று கடவுள் என்னிடம் வந்த நாட்களின் வாசனை நினைவில் வந்து போனது.

கடவுள் தூங்குவதற்கு முன் அவரின் பாதங்களைத் தடவிவிடவேண்டும். அதை அவர் மிகவும் விரும்பினார், அந்நாட்களில். எனவே இன்றும் அவரின் காலைத் தடவிவிட்டேன். அவரின் பாதங்களை முத்தமிட்டேன். தூக்கக் கலக்கத்துடன் புன்னகைத்தார் கடவுள். சற்று நேரத்தில் மெது குறட்டை எனது அறையை நிரப்பிக்கொண்டிருந்தது. சற்று நேரத்தில் நானும் கடவுளின் அருகே சரிந்துகொண்டேன். எனது மனம் முழுவதும் நிரம்பியிருந்து. இடையிடையே கடவுளின் கையை எடுத்து முகர்ந்து கொண்டேன். கடவுளின் முகமும் எனது மனமும் மிகுந்த அமைதியில் ஆழ்ந்திருந்தது,

”அப்பா! ‌அப்பா குளிர் தண்ணி வேணும் என்னும் கடவுளின் ”வழமையான  வார்த்தைகளுடன் எனது தூக்கம் கலைந்தது. 5 ஆண்டுகளுக்கு முன்னும் அப்பா குளீர் குளீர் குளீர் தண்ணீர் வேண்டும் என்பார் கடவுள். அவருக்கு குளிர் நீர் குடிப்பதென்றால் அலாதிப்பிரியம். நீர் எடுத்து வந்தேன். குடித்தார். நேரத்தைப் பார்த்தேன் அதிகாலை 4 மணியாருந்தது.எனது நெஞ்சில் சாய்ந்து கொண்டார் கடவுள். அப்பா ஒரு கதை சொல் என்றார். கடவுளுக்கு மிகவும் பிடித்த கதைசொல்லி நான் என்பதில் எனக்கு ஏகத்துக்கும் பெருமையுண்டு.

முன்பெல்லாம் எத்தனையோ கதைகளை புனைந்து புனைந்து சற்று விறுவிறுப்பூட்டி, சிரிப்புக் கலந்து கூறும் போது கடவுள் இன்னொரு உலகில் சஞ்சரித்திருப்பார். அந்நேரங்களில் அவர் கண்களில் ஒருவித ஒளி தெரியும்.மனதில் தோன்றிய இரண்டு கதைகள‌ைக் கூறத் தொடங்கியதும் கடவுள் அப்பா! Childish கதை சொல்கிறாய் .. boring என்றார். கடவுள் வளர்ந்துவிட்டார் என்பதை நான் உணராதிருக்கிறேன் என்பதை உணர்ந்துகொண்டேன்.

அதன் பின் நாம் வாழ்திருந்த வீடு, எம்முடன் வாழ்ந்திருந்த ”பூனை”, அவரின் நண்பிகள், நான் அவருக்கு‌ சைக்கில் ஓட்டப்பழக்கியது, எமது பயணங்கள் என்று பேசிக்கொண்டிருந்தோம். எங்கள் தூக்கம் கலைந்து போயிற்று, நினைவுகள் உயிர்பெற்று எம்முடன் நடமாடின. பலவருடங்களின் பின் ஒரு அதிகாலைப்பொழுது தனிமையுணர்வற்று மிக அழகாய் வி‌டிந்துகொண்டிருப்பதை உணர்ந்தேன். கடவுள் 5.30 மணிபோல்என் மார்பில் தூங்கிப்போனார். அவரை பார்த்தபடியே நானும் தூங்கிப்போனேன்காலையில் நான் விழித்துக்கொண்ட போது கடவுள் தூங்கிக்கொண்டிருந்தார்.

அவர் விழித்துக்கொண்ட போது நான் காலை உணவுடன் தயாராகவிருந்தேன். அவருக்கு விருப்பமான டோஸ்ட் பண்ணிய பாண், வதக்கிய இறைச்சி, பானுக்குப் பூசும் சாக்லேட் என்று கடவுள் ஒரு பிடி பிடித்தார். அவ்வப்போது தனது பாடசாலை பற்றியும் நண்பிகள் பற்றியும் கூறிக்கொண்டிருந்தார். அக்காவைப் பற்றி சில குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தார்.தி‌டீர் என்று எனது “முகத்திலும் பின்னந்தலையிலும் பல வெள்ளை மயிர்கள் இருக்கின்றன“ என்றார். “இருக்கட்டுமே“ என்றேன். கண்ணைச் சுருக்கி, உதட்டை உள்ளிளுத்து தனது அதிருப்தியைக் காட்டினார். சரி மழித்துவிடுகிறேன் என்றேன். கண்களால் சிரித்தார்  கடவுள்.

அன்று நாம் இருவரும் கடைகளுக்குச் சென்றோம். என்னை மிக அவதானமாகப் கவனித்துக்கொண்டார் கடவுள். எனது முதுகுப்பையை அவரே காவினார். முன்பெல்லாம் கடவுள் முதலில் தேடுவது இனிப்புப் பண்டமாய் இருக்கும் அல்லது ஐஸ்கிறீமாக இருக்கும். இப்போதெல்லாம் கடவுள் முதலில் உடுப்புக்கடைகளுக்குள்ளேயே செல்கிறார்.  அவரே அவரது உடைகளை தெரிவு செய்கிறார். எனக்கு எல்லாமே அதிசயமாக இருந்தது. எனினும் உள்ளார அதை ரசித்துக்கொண்டிருந்தேன். கடவுள் வளர்ந்துவிட்டார் என்பதை ஜீரணிப்பதே பெருங்கஸ்டமாய் இருக்கிறது எனக்கு. இன்றும் அவர் ஒரு குழந்தையாகவே எனக்குள் இருக்கிறார். அவர் வளர்ந்துவிட்டார். ஆனால் நான் தான் வளரவில்லை போல் இருக்கிறது.

என் கால் வலித்ததால் ஒரு தேனீர்க்கடையில் அமர்ந்து கொண்டேன்.கடவுள் கடைகளுக்குள் செல்வதும், வருவதும், என்னைப்பார்த்துச் சிரிப்பதுமாய் நேரம் கடந்து போனது. மீண்டும் வீடு வந்த போது கடவுள் பெரிதாய் எதையும் வாங்கியிருக்கவில்லை. அக்காவுக்கு என சில பொருட்கள் வாங்கியிருந்தார்.

பலவருடங்களின் பின் கடவுளுடன் இரு நாட்கள் கழிந்திருக்கின்றன. நாளை கடவுள் மீண்டும் என்னைப் பிரிந்துவிடுவார். அய்யா, அம்மா, செல்லம், அம்மணி, பூக்குட்டி என்று அழைத்து அழைத்து எனது ஆசையை தீர்த்துக்கொள்கிறேன். அவரும் அப்படியே போலிருக்கிறது. என்னருகிலேயே இருக்கிறார், பேசுகிறார், தூங்கிப்போகிறார். யதார்த்தவாழ்க்கை இவ்வளவு வீரியமாக இருக்கும் என நான் கனவிலும் நினைத்துப்பார்த்திருக்கவில்லை. ஆனால் அதை ஒரு தந்தையாக வாழ்ந்து கடக்கும் போது வாழ்க்கை இலகுவாய் இல்லை என்பதும் எதிர்காலமும் இலகுவாய் இருக்கப்போவதில்லை என்பதும் புரிகிறது.

மறுநாள் மாலை கடவுள் தனது பயணப்பொதிகளுடன் விமானநிலையத்தில் என்னை அணைத்தபடியே நின்றிருந்தார். இருவரும் எதுவும் பேசும் நிலையில் இருக்கவில்லை. நான் தழுதழுத்து போய்வாருங்கள் அம்மா என்றேன். “கால் கவனம், பனியில் நடக்கும் போது வழுக்கும் கவனமாய் நட, மருந்துகளைப் போடு“என்று பல கட்டளைகளையிட்டுக்கொண்டிருந்தார் கடவுள். கண்ணீர் கண்களை மறைக்க தலையை ஆட்டிக்கொண்டிருந்தேன். கடவுள் உணர்ச்சிகளை மிகவும் திறமையாக கட்டுப்படுத்திக்கொண்டிருந்தார், என்னால் அது முடியாதிருந்தது. கடவுள் என்னை அணைத்து முத்தமிட்டுவிட்டு விமானநிலைய பாதுகாப்புப்பிரிவினுள் புகுந்துகொண்டார்.

நான் அவரை பார்த்தபடியே நின்றிருந்தேன். திரும்பிப் பார்த்தபடியே கையைக்காட்டுவார். சற்று முன்னோக்கி நகருவார். மீண்டும் என்னை திரும்பிப்பார்த்து கையைக்காட்டுவார். இப்படியே பாதுகாப்புச் சோதனைகளை கடக்கும்வரை என்னை பார்த்தபடியே இருந்தார்.

பாதுகாப்புச் சோதனை முடிந்ததும், என்னைப் பார்த்து கையசைத்தார். காற்றில் பல முத்தங்களை பரிமாறிக்கொண்டோம். அதன் பின் கடவுள், அங்கிருந்த பலருக்குள் ஒருவராய் மறைந்துபோனார். சற்று நேரம் காத்திருந்து கடவுள் கண்களில் தென்படுகிறாரா என்று பார்த்தேன். கடவுள் உண்மையிலேயே போய்விட்டிருந்தார்.

நான் வீடு நோக்கி நண்பரின் வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்தேன். சற்று நேரத்தில் தொலைபேசி வந்தது, தான் விமானத்தினுள் இருப்பதாயும் விமானம் புறப்பட ஆயத்தமாக உள்ளதால் ”உன் மீது பேரன்பு வைத்திருக்கிறேன்” என்று ஆங்கிலத்தில் கூறி தொலைபேசியை வைத்தார்.

கடவுளை நினைத்துப்பார்த்தேன். அவர் மேக மூட்டத்தினூடே பறந்துகொண்டிருப்பது போல் தோன்றியது எனக்கு. அதில் காட்சிப்பிழை எதுவுமே இல்லை.

கடவுள் மீண்டும் ஒரு நாள் என் முன் தீடீர் என்று தோன்றலாம். இல்லை, இல்லை தோன்றுவார்.

பூக்குட்டியாய் என் வாழ்வினை அழகுபடுத்தும் எனது கடவுளுக்கு இது சமர்ப்பணம்.