இக்கரைக்கு அக்கரை பச்சை இல்லை

தனது கணணிக்கு உதவிதேவை என்றழைத்வரின் வீட்டுக்கு மைனஸ் 10 குளிரில் நிலக்கீழ் சுரங்க ரயில் எடுத்து, பஸ் பிடித்து நடந்து போய் வீட்டு  மணியை அழுத்தினேன். காத்திருக்க வைக்காமல் வந்து தனது தொடர் மாடி வீட்டினுள் அழைத்துப் போனார். வீட்டின் வெப்பநிலை மனதுக்கும் உடலுக்கும் இதமாயிருந்தது.

வீடு  மிக நேர்த்தியாகவும் வெளிச்சமாகவும் மிக அழகாக இருந்தது. வயதான பெண்மணி. வயது 70 இருக்கும். அவரின் கணணிப்பிரச்சனையை விளக்கினார். நான் வேலையை ஆரம்பித்தேன். சற்று நேரத்தில் தேத்தண்ணியுடன் வந்தார். வேலை செய்தபடியே தேனீர் குடித்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தோம்.

தனியே வாழ்கிறார். கணவர் காலமாகிவிட்டதாகவும், குழந்தைகள் வேறு ஊரில் வசிப்பதாயும், நத்தாருக்கு தனது குழந்தைகளை பார்க்கப் போவதாயும் கூறினார்.

என்னைப் பற்றியும் விசாரித்தார். இதுவா உன் தொழில்? என்றார். இல்லை நான் நோர்வேயின் வெளிநாட்டமைச்சகத்தில் கணணிப்பிரிவில் முகாமையாளராக தொழில் புரிவதாகக் கூறியதும், தானும் வெளிநாட்டமைச்சகத்தில் 22 வருடங்களாக தொழில் புரிந்ததாகவும், பல நாடுகளில் நோர்வே தூதராலயங்களில் விசா வழங்குனராக தொழில் புரிந்ததாகவும், இறுதிக் காலங்களில் மக்கடோனியா நாட்டின் ஸ்கொப்ய நாட்டில் பல வருடங்கள் தொழில் புரிந்த பின், தற்போது ஓய்வு பெற்று நிம்மதியாய் வாழ்வதாகவும் குறிப்பிட்டார்.

எமது பேச்சு கொசோவோ நாட்டின் பிரச்சனை பற்றிப் போனது. தூதுவராலயத்தில் தொழில் புரியும் போது பல மனிதர்களின் வாழ்க்கைச் சோகங்களை கண்டிருப்பதாகவும் சொன்னார். பலரின் வீசா பிரச்சனைகள் பல நாட்கள் தனது தூக்கத்தை கெடுத்திருப்பதாகவும், சட்டங்களுக்கு உணர்வுகள் இல்லையாதலால் பலருக்கு தான் வீசா மறுத்திருப்பதாகவும் கூறினார்.

பலருக்கும் வீசா மறுக்கப்படும் போது வேதனையாயிருக்குமென்றும் ஆனால் தான் ஒருவருக்கு விசா மறுத்த சம்பவம் தனக்கு இன்றும் மகிழ்ச்சியைத் தருவதாகவும் சொன்னார்.

தான் மக்கடோனியாவில் தொழில் புரிந்த நாட்களில் ஒரு நாள் ஒரு கோசோவோ நாட்டிலிருந்து ஒரு பெண் விசா எடுப்பதற்காக இவர் தொழில் புரிந்த தூதுவராலயத்திற்கு வந்திருக்கிறார். அவரின் விண்ணப்பத்தை பரீசிலீப்பதற்கான அதிகாரியாகவும், நேர்முகத் தேர்வாளராகவும் இவர் இருந்திருக்கிறார். அப் பெண்ணை அவளின் இரு உறவினர்களே அழைத்து வந்ததாகவும் அவர்கள் தாங்களும் நேர்முகத்தேர்வில் பெண்ணிண்  சார்பில் மொழிபெயர்க்க வருவதாகவும் அடம் பிடித்திருக்கிறார்கள். இவரும் அதற்கு சம்மதித்திருக்கிறார்.

நேர்முகத் தேர்வின் போது பல கேள்விகளுக்கு பதில் அப் பெண் சொல்ல முதலே வந்திருந்த உறவினர் சொல்லியதாகவும், அந்தப் பெண்ணுடன் அவர் வாதித்தது போல தான் உணர்ந்ததாகவும், அந்தப் பெண் மிகவும் சோகமாக அமர்ந்திருந்ததாகவும் சொன்னார்.

அப் பெண்ணின் சோகமான முகம், அன்று தனது தூக்கத்தைக் கெடுத்ததால் மீண்டும் அப்பெண்ணை நேர்முகத்தேர்வுக்கு முடிவு செய்து, அவரை நேர்முகத் தேர்வுக்கு அழைத்து கடிதம் போட்ட போது அப் பெண்ணிண் உறவினர் அவளை அழைத்து வந்து, இம் முறையும் அவரே மொழிபெயர்க்க முட்பட்டபோது தான் தனது அலுவலகத்தில் உள்ள ஒரு ஊழியரைக் கொண்டு மொழிபெயர்த்துக் கொண்டுதாகவும், அப்போது அப் பெணிடம் நீ திருமணம்  செய்யப்போகிறாயே பிறகேன் சோகமாயிருக்கிறாய் என கேட்ட போது... எனக்கு எனது கிராமத்தையும், பெற்றோரையும், சகோதரங்களையும், எங்கள் தோட்டத்தையும்ணள விட்டு வெளியேற விருப்பமில்லை எனவும், கலியாணத்தின் பின் தான் ஒரு வேலைக்காரி போல நடத்தப்படும் சந்தர்ப்பமே அதிகம் என்றிருக்கிறார்.

ஏன் அப்படிக் கூறுகிறாய்? கணவர் நல்லவராகவும் இருக்கலாமே என்ற போது  என்னுடன் வந்திருக்கும் உறவினர் பெருந்தொகை பணத்தைப் பெற்றுக் கொண்டு கணவராகப்போபவரின் குடும்பத்தினை கவனித்துக் கொள்ள ஒரு வேலைகாறியையே அங்கு அனுப்புவதாகவும், அதற்காக திருமண ஒப்பந்தம் முலம் விசா எடுக்கிறார்கள் என்றும் சொல்லியிருக்கிறார்.

மணப்பெண்ணுக்கு விசா கொடுக்கப்பட வேண்டியது சட்டம்.சட்டத்ற்கு தேவையான எல்லாவிதமான பத்திரங்களும், ஆவணங்களும் இருக்கின்றன. விசாவை சட்டத்தினை காரணம் காட்டி மறுக்கமுடியாது. நீதிமன்றத்திலும் பெண்ணுக்கு விசா கொடுங்கள் என தீப்பாகலாம். எனவே அப் பெண் தனக்கு விசா வேண்டாம் என அறிவித்தால் தாங்கள் விசாவை ரத்துச் செய்யலாம் என்று அப் பெண்ணுக்கு கூறிய போது, அப் பெண் மறு பேச்சில்லாமல் தனக்கு விசா வேண்டாம் என எழுதித் தந்து போனதாகவும். ஆனால் தனது உறவினருக்கு இது பற்றி சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகவும் சொன்னார்.

தான் விசா மறுத்த போது அந்தப் பெண்ணின் உறவினர் தாம் தூம் என்று துள்ளிக் குதித்த போது பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் அவரை வெளியேற்றி அனுப்பும் போது அப் பெண்ணின் கண்களில் தெரிந்த நன்றியுணர்வு இன்றும் தனது மனதுக்கு இதமாக இருக்கிறது என்றார்.

எனக்கேதோ அந்தப் பெண் மிக முக்கியமானதோர் முடிவை எடுத்திருப்பதாகவே பட்டது. அதே வேளை விசா கொடுக்கும் அதிகாரிகளும் மனச்சாட்சியுள்ள மனிதர்களே என்றும் புரிந்தது.

இப்படியான சந்தர்ப்பங்கள் ஆயிரத்தில் ஒன்றாகவோ அல்லது பத்தாயிரத்துக்கு ஒன்றாகவோ நடக்கும். ஆனால் கணணி திருத்த வந்தவனோடு இப்படியானதோர் கதையை ஒரு விசா வழங்குனர் பகிர்வது லட்சத்தில் ஒன்றாக அல்லது பத்து லட்சத்தில் ஒன்றாக இருக்கலாம்.

ஆனால் நான் லட்சத்தில் ஒருவனோ அல்லது பத்து லட்சத்தில் ஒருவனோ அல்ல.. மிகச் சாதாரணமானவன்.


இன்றைய நாளும் நல்லதே..

கற்று மறந்த களவு

 1980 களின் ஆரம்பத்தில் நடந்த கதையிது.

அப்போ நான் ஏறாவூரில் வாழ்ந்திருந்தாலும் நட்புவட்டம் செங்கலடியிலிருந்தது (3 கி.மீ தூரம்). நெருங்கிய நண்பனும் அங்கு தானிருந்தான். அத்துடன் மனசுக்குள் பட்டாம் பூச்சிகளை பறக்கவைத்த ஒருத்தியும் அங்கிருந்தாள். ஆகவே ஒரு நாளில் அதிகமான நேரங்கள் செங்கலடியிலேயே கழிந்தன.

அம்மா வைத்தியராகத் தொழில் புரிந்ததால் நான் என்ன ஊருக்குள் செய்தாலும் அது நான் வீட்டுக்கு போக முதல் அம்மாவின் காதுக்கு போய்விடும். அந்தக் காலத்தில் இந்த மெபைல் போன் எல்லாம் இல்லை. ஆனால் வீடு தேடிப்போய் பத்தவைக்கும் எட்டப்ப பரம்பரையைச் சேர்ந்த சில தீவெட்டிப் பசங்களும், வேலை வெட்டி இல்லாத பல பழசுகளும் இருந்தார்கள் எங்களூரில்.

நண்பர்களுடன் சேர்ந்து இங்கிலீஸ் படிப்பதற்காக சாந்தி தியட்டரில் ஒரு இங்கிலீஸ் படத்தைப் பார்த்தால் நான் வீட்ட வர முதல்
”அம்மா தம்பி சாந்தி தியட்டரில படம் பார்க்கேக்க கண்டன்” என்று பத்த வைத்துவிட்டு போகும் பலரும் என்னுடன் தியட்டரில் படம் பார்த்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களுக்கு நாங்கள் இங்கிலீஸ் படிக்கவே தியட்டருக்கு போனோம் என்றால் அவர்கள் நம்ப மாட்டார்கள். ஏன் நீங்களும் நம்பவா போகிறீர்கள்? 

எனது குளப்படிகளை அறிந்தால் அம்மா பெரிதாய் சீன் எல்லாம் எடுக்க மாட்டார். தம்பி யோசிச்சு நடவுங்கோ என்பார். ஓம் ஓம் அம்மா என்று விட்டு போகும் போது நான் அதை மறந்துவிடுவேன். அம்மாவும் அடுத்த முறை யாரும் பத்திவைக்கும் வரை அதை மறந்து விடுவார்.

எனக்கும், எனது நண்பனுக்கும் இன்னுமொரு நெருங்கிய நண்பன் இருந்தான். அவர் ஊருக்குள் கடை வைத்திருந்த ஒருவரின் மகன். அவனே கடைக்கு பொறுப்பாயிருந்தான், அவனின் அப்பா இல்லா நேரங்களில். அதனால் கடையிலேயே அவனுக்கென்று ஒரு அறையிருந்தது. கையில் தாராளமாய் காசுமிருந்தது.

தினம் ஒரு படம் பார்க்காவிட்டால் எமக்கு தூக்கம் வர மறுத்த காலம் அது.  நாங்கள் சிறுவர்களாக இருந்த போது

”பாலா, படம் பார். பாடம் படி”

என்று சொல்லித்  தந்தார்கள். நாங்கள் கற்றதை மறக்க விரும்பாதவர்களாக இருந்தோம், இந்த விடயத்தில் மாத்திரம்.
ஆகவே தினம் ஒரு படம் பார்த்தோம்.

படம் முடிய நண்பனின் கடையில் குந்தியிருந்து அரட்டை அடித்து வீடு போக மணி பத்தரையாகிவிடும். செகன்ட் சோ என்றால் சாமம் தாண்டிவிடும். இந்த காலத்தில் கடைக்கார நண்பன் சிகரட் புகைக்கப் பழகிக் கொண்டான். எனது நண்பணும் நானும் தவிர்த்துக் கொண்டோம். சில காலத்தின் பின் சிகரட்டுடன் மதுவும் சேர்ந்த போதும் நாம் அதை தவிர்த்துக் கொண்டோம்.

ஆனாலும் இந்த சிகரட் எனது மனசுக்குள் ஒரு ஆசையை தூண்டிவிட்டதை மறுப்பதற்கில்லை. நண்பணுக்கும் அப்படியே.

ஒரு நாள் சிகரட் குடித்துப் பார்ப்பதாக முடிவு பண்ணிணோம். பயங்கர இராணுவமுகாமை தகர்க்கும் திட்டம் தீட்டுபவர்கள் போல இரண்டு நாள் நித்திரை இன்றி திட்டம் போட்டோம்.

5 கி.மீ தொலைவில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் சிகரட் வாங்குவதாகவும். அதுவும் ”கோல்ட் லீவ்” தான் வாங்குவதாகவும் முடிவு செய்யப்பட்டது. (அப்ப தான் தொண்டை நோகாதாம்) இரண்டு தடவை கடையை வேவு பார்க்கப் போனோம். அம்மாவுக்கு தெரிந்தவர்கள் நடமாடுகிறார்களா என அவதானித்தோம்.

அடுத்து எங்கு வைத்து சிகரட் குடிப்பது என்ற பிரச்சனை வந்தது. நண்பனின் கடை வசதியான இடம் தான் ஆனால் அவன் எம்மை சிகரட் குடியுங்கள் என்று கேட்ட போது மறுத்த மானஸ்தர்களல்லவா நாம். எனவே அந்த இடம் தவிர்க்கப்படவேண்யதாயிற்று. கறுத்தப்பாலத்துக்கு கீழ் நின்று குடிக்கலாம் என்றால் அது நண்பனின் தகப்பனார் வாகனமோடும் பாதை என்பதால் அதையும் தவிர்த்தோம். இறுதியாக கடற்கரைக்கு (5 கிமீ) போகும் ‌பாதையில் வரும் ஓரு சிறிய கோவிலுக்கு பின்னாலுள்ள காட்டுப் பகுதியை தேர்ந்தெடுத்து முடிவு செய்து அதையும் போய் பார்த்து வந்தோம்.

தாக்குதலுக்கான நாளும் நேரமும் குறித்தாயிற்று. நண்பன் சிகரட் வாங்குவது என்றும் யாரும் தெரிந்தவர்கள் வந்தால் நான் சைக்கில் பெல் அடித்து சிக்னல் கொடுப்பதாக முடிவாயிற்று. நண்பன் சிகரட் வாங்கப்போனபோது என்னைக் கடந்த எல்லோரும் என்னையே பார்த்துப் போனது போல் இருந்தது.  நெஞ்சு தேவைக்கு அதிகமாகவே அடித்தது.

நண்பண் 2பக்கட் சிகரட் வாங்கி ஒளித்துக் கொண்டான். 2 ஏவுகணைகளை ஆமி செக் பொயின்ட்க்குள்ளால் ஒளித்துக் கொண்டுவருபவர்கள் போல எமது ம‌னநிலை இருந்தது. கோயிலடி காட்டுக்கு போகும் போது நான் சைக்கில் ஓடினேன். நண்பன் பெடல்போட்டு உதவினான். அடிக்கடி வாங்கிய சிகரட் இருக்கிறதா இல்லையாயா என தொட்டம் பார்த்துக் கொண்டான். நானும் ”இருக்குதாடா”,  ”இருக்குதாடா” கேட்டுக் கொண்டிருந்தேன்.

ஒரு விதமாய் 2 சிகரட் பெட்டிகளையும் காப்பாற்றி கொண்டுவந்தாயிற்று. சைக்கிலை கோயிலடியில் வைத்து புட்டி விட்டு காட்டுக்குள் நடக்கலானோம். நீண்டு பெருத்து வளர்ந்திருந்த ஒரு மரத்தின் கீழ் குந்தியிருந்து சுற்றாடலை நோட்டம் விட்டோம். சிகரட குடிக்க வந்த குரங்களை தவிர அந்தப்பிரதேசத்தில் வேறு குரங்குகளோ மனிதர்களோ இருக்கவில்லை. ஆனால் உயரத்தில் ஆள்காட்டி பறவை ஒன்று பறந்து கொண்டிருந்தது. கொண்டிருந்து மனதுக்குள் ஏதோ செய்தது.

மெதுவாய் ஆளுக்கொரு சிகரட் எடுத்து வாயில் வைத்துக் கொண்டபோது ”மூன்று முடிச்சு” ரஜனி ஞாகத்தில் வர சிகரட்ஐ கையால் எறிந்து வாயால் பிடிக்கப் பார்த்தேன். சிகரட் வாயைத் தவிர எல்லா இடங்களுக்கும் போனது.

அதற்கிடையில் நண்பண் சிகரட்ஐ பத்தவைத்து அனுபஸ்தன் மாதிரி ‌எரியும் நெருப்புக் குச்சியை ஒரு கையால் பிடித்து மறுகையால் காற்றை மறைத்து எனக்கு நீட்ட நானும் குனிந்து பற்றவைத்துக்கொண்டு முதல் தரம் உள்ளே இழுத்தேன். வந்த இருமலில் வாயில் இருந்த சிகரட் 2 மீட்டர் தள்ளிப் போய் விழுந்தது. நண்பனும் இருமினான். கடைக்கார நண்பனின் அறிவுரைகள் ஞாபகத்தில் வர மெதுவாய் புகையை உறுஞ்சினோம். இருமல் நின்றது. வட்டமாய் புகைவிட்டுப் பார்த்தோம். புகை, புகை மாதிரியே போனது. வட்டமாய் போகவே இல்லை.

இப்படியே இரண்டு மணிநேரங்கள் தொடர்ந்து பத்தியதில் தொண்டை கம்மிப் போனது. கதைத்தால் ஏம். ஆர் ராதா அல்லது கருணாநிதி கதைப்பது மாதிரி இருந்து எங்கள் குரல். இந்தப் பிரச்சனை, நாம் எதிர் பாராதது. என்ன செய்வது என்று தெரியால் குழம்பிய போது நண்பன் சொன்னான் விளையாட்டின் போது கத்தி தொண்டையடைச்சுட்டுது என்று சொல்லுவம் என்று.

இருவரின் வாய்யில் சிகரட் மணத்த்தது. இதை நாம் எதிர்பார்த்தால் வரும் போதே சின்ன வெங்காயம் கொண்டுவந்திருந்தோம்ம். அதையும் சப்பி சாப்பிட்டாயிற்று.

மெதுவாய் வீடுவந்து ஏதும் பேசாமல் இருப்போம் என்றால் தங்கை (4-5 வயதிருக்கும்) விளையாடக் கூப்பிட்டாள், அம்பத்தெட்டு கேள்விகள் கேட்டு வாயைக் கிண்டிணாள்.
பேசிக் கலைத்ததும் அவள் அழுதபடியே அம்மாவிடம் போக...
அம்மா ”டேய் அவளுக்கு என்னடா சொன்ன நீ” என்றபடி தங்கையுடன் வர
நான் கரகரத்த தொண்டையால் பதில் சொல்ல...
என்ன தொண்டை கட்டிக்கிடக்குது, வெங்காயம் மணக்குது என்று அம்மா கேட்க...
நான்  முழுச...
அந்த நேரம் பார்த்து சிகரட் குடித்த நண்பனின் அம்மா எங்கள் வீட்டுக்குள் நுளைய...
அம்மா அவருடன் கனநேரமாக குசு குசு வென்று ஏதொ கதைத்துக் கொண்டிருந்தார்...
பெரும் பயம் பிடித்துக் கொண்டது என்னை...
வெளியில் பாய்ந்தோடி, விளையாடி, படம் பார்த்து, ஊர் சுற்றி சாமம் போல வீட்டுக்குள் புகுந்து படுத்து கண்ணை மூடுகிறேன்...
டேய்... என்ன உன்னைய களுவன்கேணி போற ரோட்டில இருக்கிற கோயில் பக்கம் கண்டதா ஒரு ஆள் வந்து சொல்லீட்டு போகுது என்றார் அம்மா.

நான் பதில் சொல்லாமல் போர்வையால் தலையை மூடிக் கொண்டேன்... அம்மாவும் ஏதும் கேட்கவில்லை.

அன்றிரவு அப்பா ”கனகலி்ங்கம் சுருட்டு” குடிப்பது போலவும், வானத்தில் பறந்த அந்த ஆள்காட்டி பறவையையும் கனவு கண்டேன்.பி.கு
நண்பனின் அம்மா வந்தது அம்மாவிடம் மருந்தெடுக்க.

அந்த 10 சிகரட்டுக்கள் மட்டுமே இந்த 45 வருடங்களில் எனது வாயில் குந்தியிருந்திருக்கின்றன. சத்தியமாக.


களவும் கற்று மற என்று இதற்காகத் தானோ சொன்னார்கள்?


.

ஒரு இளிச்சவாயனும் ஒரு சுத்தத் தமிழனும்


சில நாட்களுக்கு முன் நேரம் நடுநிசியைத் நெருங்கிக் கொண்டிருந்தது. வெளியில் பனி விளைந்து கொண்டிருக்க,  பலத்த பனிக் காற்றும் வீசிக் கொண்டிருந்தது. அதை ரசித்தபடியே அ.முத்துலிங்கத்தின் ”உண்மை கலந்த நாட்குறிப்புகள்” வாசித்துக் கொண்டிருந்தேன். சற்று நேரத்தின் பின் மெதுவாய் உறக்கம் வந்தது. படுத்துக்கொண்டேன். சற்று நேரத்தில் தூங்கியும் போனேன்.

கனவில் வீட்டு மணி அடிப்பது போலிருந்தது. நித்திரையும் சற்றுக் கலைந்தது. நேரத்தைப் பார்த்தேன் சாமம் 2 மணி. தி‌டீர் என எனது ஜன்னல் கண்ணாடியும் தட்டுப்பட நித்திரைகலைந்த எரிச்சலில் யா‌ராய் இருக்கும் என்ற எண்ணத்துடன் ஜன்னலால் எட்டிப் பார்த்தேன்.

தொடர்மாடிக்கு வெளியில் பனியில் புதைந்தவாறு எனது வீட்டுக்கு அண்மையில் உள்ள  தமிழர் ஒருவர் நின்றிருந்தார். (நண்பரல்ல)

அவர் கணணி திருத்த வந்திருப்பதாக நினைத்து ”இப்ப கொம்பியூட்டர் திருத்த ஏலாது” நாளைக்கு வாங்கோ என்று சைகையில் காட்டிவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டேன்.

கட்டிலில் படுத்ததுதான் தாமதம் ஒரு பெரிய Snow கட்டி ஒன்று ஜன்னலில் ”டமார்” மோதி விழுந்தது. என்னிடம் இருந்த பொறுமை காற்றில் பறக்க...

ஜன்னலைத் திறந்து ”எத்தன மணி என்று தெரியாதோ?, இப்படியா தொல்லைப்படுத்துவது” என்று கத்தினேன். அப்போது தான் கவனித்தேன் அவர் நின்றிருந்த விதம் சற்று வித்தியாசமாயிருந்தது. இரண்டு கால்களையும் நெருக்கிப்பிடித்தபடி முதுக்கு கீழே உள்ள சதைப்பிடிப்பான பகுதியை பின்னுக்குத் தள்ளி, கண்கள் வெளியேவந்து விழுந்துவிடும் போலிருந்த நிலையில் நின்றிருந்தார்.

”கதவைத் திறவுங்கோ” என்றார்.. குரல் அடிவயிற்றில் இருந்து மிகவும் சிரமத்துடன் வந்தது.

மனதுக்குள் அவருக்கும் ஏதும் சுகயீனமாயிருக்குமோ என்று யோசனை ஓடியதால் அவசர அவசரமாய் கதவைத் திறந்தேன். உள்ளே வந்தார்.

காலில் சொக்ஸ் இல்லை, தலையில் தொப்பி இல்லை, சாரத்துடனும், இரவு படுக்கையுடுப்புடனும் ஒரு துண்டை போர்த்தியபடி நின்றிருந்தார். நான் அவரைப் பார்த்து என்னய்யா பிரச்சனை என்று கேட்பதற்கு யோசிக்குமுன் மனிதர் எனது கழிப்பறைக்குள் பூகுந்து கொண்டார். கதவைப் பூட்டக் கூட மறந்தார். கழிப்பறைக்குள் பல்குழல் ஏவுகனை தாக்குதல் நடப்பது சத்தங்கள்  stereo ஒலியில் வந்து போயின.

நித்திரை கலைந்த நான் கடுப்புடன் அவருக்காய் காத்திருந்தேன் (வெளியில்). சற்றுநேரத்தின் பின் ”அப்பாடா” என்று வயிற்றைத் தடவியபடியே வெளியே வந்தார். இப்போது கால்களும், முதுக்கு கீழே உள்ள சதைப்பிடிப்பான பகுதியும் வளமையாய் இருக்கும் இடத்தில் இருந்தன. மனிதர் நிமிர்நது நிமிர்ந்து நின்றார். அடிவயிற்றால் கதைக்காமல் வழமைபோல் கதைத்தார்.

எனக்கு நித்திரை கலைந்திருந்தாலும் எரிச்சல் எல்லையில்லாத அளவுக்கு கூடியிருந்தது.

என்னய்யா இப்படியா மற்றவர்களுக்கு இம்சை தருவது என்றேன்.

தனது வீட்டு கழிப்பறை கடந்த 3 கிழமைகளாக பழுதடைந்திருப்பதாயும், தனது வீட்டுக்கு முன் வீட்டு நண்பரின் கழிப்பறையைத் தான் தனது தாங்கள் பாவிப்பதாயும் ஆனால் இது நடுச்சாமம் என்பதால் அவரை எழுப்பி கஸ்டப்படுத்த விரும்பவில்‌லை என்றும், அதனாலேயே வேறு பல வீடுகளைத் தான் தட்டியதாகவும் இருவர் தன்னை திட்டி கலைத்ததாகவும் ஏனைய எவரும் திறக்கவில்லை என்றும் நான் தான்  தனக்கு உதவி செய்ததாகவும் சொல்லி பதிலை எதிர்பாராமல் தமிழன் என்றால் ”இப்படித்தான் இருக்கோணும், சந்திப்போம் என்ன” என்றபடியே வெளியேறினார்.

நன்றி என்ற வார்த்தையை அவர் நினைக்கவே இல்லை. என்பதுதான் கொடுமை.

எனது மனம் அவரை நீ சுத்தத்தமிழனய்யா என்று அவரைத் திட்டினாலும், நான் ஒரு இளிச்சவாயன் என்று எப்படி அவர் அறிந்துகொண்டார் என்று சிந்தித்துக் கொண்டிருந்தது. அதற்கு இன்னும் பதில் கிடைத்தபாடில்லை.

அவர் சொன்ன ”சந்திப்போம்” என்ற சொல் அன்றிரவும் அடுத்து வந்த சில இரவுகளிலும் என்னை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. அடிக்கடி சாமத்தில் பயந்து பயந்து ஜன்னலால் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

பி.கு. அந்த நபரிடம் கார் இருக்கிறது. எங்கள் வீட்டில் இருந்து 2 நிமிட கார் பயணத்தில் 24 மணிநேரமும் திறந்திருக்கும் எரிபொருள் விற்பனை நிலையம் இருக்கிறது. அங்கு இரண்டு கழிப்பறைகளும் இருக்கிறது. இவ்வளவு வசதியிருக்க சாமம் 2 மணிக்கு என்னை எழுப்பவேண்டிய அவசியம் என்ன? நீங்களே சொல்லுங்கள்....

25.11.2010
.

ஒரு Printer ஒரு முட்டாள் ஒரு பெண்

 ஏறக்குறைய 10 - 12 ஆண்டுகளுக்கு முன் வடமேற்கு நோர்யில் உள்ளதோர் பெரிய கப்பல் கட்டும் தொழிற்சாலையில் கணணித்துறையில் தொழில் புரிந்திருந்தேன். ஒரு நாள் குளிர் காலத்து நாள் காலை எழும்பும் போதே காலதாமதமாய் எழும்பினோம். அவசர அவசரமாய் வெளிக்கிடும் போது புரிந்தது இரவு பனி கொட்‌டோ கொட்டு என்று  கொட்டி காரை மூடியிருப்பது.

அவசர அவரமாய்  பனியை வெட்டி எறியும் ”சவள்”ஐ எடுத்தக் கொண்டு ஓடிப்போய் பனியை வெட்டி எறியத்தாடங்கி ஏறக்குறைய 20 நிமிடங்களின் பின் கார் பாதைக்கு வந்தது. வீட்டுக்குள் ஓடி மகளை தூக்கிக் கொண்டு காருக்குள் ஓடும் போது அந்தக் காலத்து  கைத்தொலைபேசி ஒலித்தது. காருக்குள் இருந்து தொலைபேசியை இயக்கினேன். வேலைத்தளத்தில் இருந்து முகாமையாளரின் காரியதரிசி பேசினார்.

”சஞ்சயன், உன் உதவி தே‌வை உடனே எனது கந்தோருக்கு வா”

”உடனே வர இயலாது, 20 நிமிடங்கள் தேவை. என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள்”

”முகாமையாளரின் அறிக்கையொன்றை நான் ”பிரின்ட்” எடுக்க முயற்சிக்கிறேன், ஆனால் பிரின்டர் வேலை செய்யுது இல்லை”

”கெதியில் வருகிறேன்”

”நன்றி”

மகளை சிறுவர்பள்ளியில் விட்டுவிட்டு அவசர அவசரமாய் வேலைக்கு ஓடினேன். நேரம் நான் ஒரு மணிநேரம் தாமதமாய் வந்திருப்பதை அறிவித்தது.
 
அவசரமாய் காரியதரிசியின் கந்தோருக்குள் ஓடினேன்.
வா.. வா உனக்காக முகாமையாளர் காத்திருக்கிறார் என்றார். முகாமையாளர் வந்து கெதியில் இதை பிரின்ட் எடுத்துத் தா என்றார்.
இன்னுமொரு பிரின்டரில் அவரின் ஆவணத்தை பிரன்ட் எடுத்துக் கொடுத்தேன்.
அதெப்படி நீ மட்டும் இவ்வளவு கெதியாய் பிரின்ட் எடுக்கிறாய் என்றார் முகாமையாளர்.
அதற்காகத்தான் எனக்கு சம்பளம் தருகிறீர்கள் என்றேன்.
மூவரும் சேர்ந்து சிரித்தோம்.

முகாமையாளர் போனதும் அவரின் பிரின்டர் ஏன் இயங்கவில்லை என ஆராய அரம்பித்தேன். காரியதரிசி அருகில் இருந்து நேற்று மாலை தான் குடும்பத்துடன் பனிச்சறுக்கு போன விடயத்தை படம் போல விளக்கிக் கொண்டிருந்தார். நானும் கதைத்தபடியே வேலை செய்து கொண்டிருந்தேன்.

காரியதரிசியின் கந்தோருக்கு வெளியில் சுத்திகரிப்பு வேலை செய்யும் ஒரு வயதான பெண் நிலத்தை கழுவிக்கொண்டும், பூமரங்களுக்கு நீர் ஊற்றிக்கொண்டும் நின்றார். வெளியில் பனி கொட்டிக் கொண்டிருந்தது.

நான் எதைச் செய்தாலும் பிரின்டர் இயங்க மறுத்தது. கிட்டத்தட்ட அந்த பிரின்டரை அக்குவேறாக ஆணிவேறாக களட்டியும் பூட்டியாயிற்று... அப்போதும் பிரின்டர் இயங்கமாட்டேன் என்று அடம் பிடித்தது.

காரியதரிசி தனர் கணவர் பனியில் சறுக்கும் போது விழுந்ததை சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தார். அதை ரசிக்கும் மனநிலையில் நான் இருக்கவில்லை. நோரம் போய்க் கொண்டிருந்தது.

அந்த பிரினஇடைரை திருத்தத் தொடங்கி ஏறத்தாள ஒன்றரை மணிநேரமாக பிரின்டருக்கு உயிர் வரவில்லை. எனக்குள் மெதுவாய் எரிச்சல் குடிவரத்தொடங்க பொறுமையும் காற்றில் பறக்கத் தொடங்கியது.

அப்போது அந்தக் கந்தோரை சுத்தப்படுத்தும் அந்த வயதான பெண்மணி வர காரியதரிசி அவரிடம் தனது பனிச்சறுக்கு விளையாட்டைப் பற்றி புளுகத் தொடங்கினார்.

நான் பிரின்டருக்கு உயிர்வராததால் அதை திருத்த அனுப்பவேண்டும் என்று சொல்லிவிட்டு எனது கந்தோருக்குள் புகுந்து கொண்டேன். அன்று மாலை எனது கந்தோரை சுத்தப்படுத்த வந்தார் அந்த வயதான பெண்மணி.

வந்தவர் நேரே என்னருகே வந்து, உனது வேலை போகப்போகிறது என்றார். பதறிப்போய்.. ஏன் என்றேன். உனக்கு அந்த பிரின்டரை திருத்தத் தெரியவில்லையே அதனால் தான். என்றார்.

”அந்த பிரின்டர் பழுதாகிவிட்டது அது தான் அது இயங்கவில்லை” என்றேன்.
”இல்லை, அதை நான் திருத்திவிட்டேன், தற்பொது இயங்குகிறது” என்றார்

நம்பாமல், காரியதரிசிக்கு போன் பண்ணிக்கேட்டேன்.. ஆம் அந்த வயதான பெண் மிகவும் திறமைசாலி, உன்னிலும் சிறப்பாய் திருத்த வேலைகள் செய்கிறார் என முகாமையாளரே ‌தனக்குச் சொன்னதாச் சொன்னார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை.. ஆனால் முகாமையாளருக்கு .அந்தப் பெண் பிரின்டரை திருத்திய விடயம் தெரிந்திருப்பது ஒரு மாதிரி இருந்தது.

”எப்படித் திருத்தினீர்கள் பிரின்டரை?” என்றேன்.

”மிக இலகுவான வேலை அது. வா உனக்கு சொல்லித் தருகிறேன்” என்று சொல்லி அழைத்துப் போனார்.

பின்னால் போனேன்
கந்தோருக்குள் புகுந்தார் அந்தப்  பெண்.
காரியதரிசியோ.. எங்கள் புதிய கணணித்துறை ஊழியர் வந்திருக்கிறார் என்ற போது முகாமையளரும் தனது கந்தோரில் இருந்து வெளியே வந்தார். அவரின் முகத்தில் குறும்புச் சிரிப்பு குடியிருந்தது.
வயதான பெண்மணியோ இவர் நான் கணணியை எப்படி திருத்தினேன் என அறிய விரும்புகிறார் என்றும் அதனாலேயே என்னை அழைத்துவந்திருப்பதாகவும் சொன்னார்.

அந்தப் பெண்யையே பார்த்திருந்தேன் நான்.  நான் செய்வதை கவனமாகக் கவனி, ஒரு தரம் மட்டுமே காட்டித்தருவேன் என்று பீடிகையும் போட்டார்.
பிறகு குனிந்து மின்சார இணைப்பை களட்டினார். பிறகு அதை மீண்டும் இணைத்தார்.

எனக்குப் புரிந்தது என்ன நடந்திருக்கிறது என்று. எனது முட்டாள்தனங்களுக்கு எல்லையே இல்லை என்தை நான் புரிந்து கொண்டதும் இங்கு தான்.

இக் கதை மின்னஞ்சல் மூலாக  அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும் பரவி, அவர்கள் என்னைக்  பண்ணிய கிண்டலுக்கும் அளவேயில்லை.

அந்த வருடத்து நத்தார் தின விழாவிலும் இந்த கதையை நாடகமாகப் போட்டு என்னை கவுரவித்ததையும் நான் சொல்லித்தான் ஆகவேண்டும்.

இதை வைத்து நீங்க என்னிடம் காமடி கீமடி பண்ணக்கூடாது... ஆமா.


.

நண்பரின் பீபீசி கேட்கும் அன்டனாவும் ஒரு செய்தியும்

 இது 1990  இல் நடந்த கதை.
வட மேற்கு நோர்வேயில் ஒரு பாடசாலையில் கல்விகற்றுக்கொண்டிருந்த நேரம். இன்னும் பல தமிழர்களுடன் விடுதி மாதிரியானதோர் இடத்தில் வசித்திருந்தேன்.

பாடசாலை 5 - 6 மணிநேரங்களே நடக்கும். மிகுதிநேரத்தை என்னவென்று செலவழிப்பது என்னும் பிரச்சனை இருந்த காலம். மாலையில் பந்தடியும், முன்னிரவில் சீட்டுக்கட்டும், பின் இரவில் WWF ரெஸ்லிங்உம் என காலம் உருண்டோடிக் கொண்டிருந்தது. இன்டர் நெட், கூகில், முகப்புத்தகம் என்று உலகம் முன்னேறியிருக்காத நாட்களவை.

அந்நாட்களில் எம்முடன் இருந்தவர் ஒருவர் எங்கு 49 குரோணருக்கு குறைவாக எந்த சாமானைக் கண்டாலும் வாங்குவார். யாரும் தலையிடி 49 குறோணர்களுக்கு விற்றிருந்தாலும் வாங்கியிருப்பார் அவர். அவர் கடைத்தெருவிற்கு போனால் திரும்பிவரும் போது ஏதையாவது வாங்கி வராவிட்டால் அவருக்கு இருப்புக் கொள்ளாது. இப்படி அவர் வாங்கிய பொருட்களுக்குள் ஒரு பெரிய அன்டனாவும் அடக்கம். அதை நீட்டி விட்டால் கிட்டத் தட்ட  2 - 3 மீற்றர் நீளம் வரும். அதை டீ.வீ அல்லது ரேடியோ அன்டனாவுடன் கொளுவிடும் வசதியும் இருந்தது.

நண்பர் பீபீசி கேட்கும் போது அதைக் கொளுவுவார். அன்டனா பீபீசீயை நண்பரின் அறைக்கு அழைத்து வந்தது தினமும்.

இந்த நண்பரின் அறை எனது அறைக்கு பக்கத்தில் இருந்தது. நண்பரின் கடமைகளில், தினமும் காலையில் எழுந்தவுடன் காலைக்கடன் முடிப்பது மிகவும் முக்கியமானது. அதுவும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் ”அது”க்கு போகவேணும் அவருக்கு. நாம் வேண்டுமென்றே கழிப்பறைக்குள் குந்தியிருந்து கொண்டு அவரை கலவரப்படுத்துவதுமுண்டு.

ஒரு நாள் காலை நான் துக்கத்தில் இருக்கிறேன் எனது யன்னல் கண்ணாடி தட்டப்பட்டது. எனது அறை இரண்டாம் மாடியில் இருந்ததால் இப்படி திடமாக ஒரே சீராக யாரால் எனது யன்னல் கண்ணாடியை தட்டமுடியும் என்று சிந்தித்தவாரே யன்னல் சீலையை விலக்கினேன். நண்பரின் அன்டனா வந்து எனது யன்னல் கண்ணாடியை தட்டிக் கொண்டிருந்தது. மெதுவாய் யன்னலை திறந்து பார்த்தேன். நண்பர்தான் தட்டிக் கொண்டிருந்தார். நான் எட்டிப் பார்த்ததும் மகவும் மெதுவாய் அறைக்க வெளியே போகாதீர்கள். ஒருத்தனுக்கு விசர் வந்திருக்கு என்று சொன்னார். எனக்கு நித்திரை கலக்கத்தில் ஏதும் புரியவில்லை. எனவே மீண்டும் கேட்டேன். சொன்னதையே சொன்னார்.

எனக்கிருந்த நித்திரைக்கலக்கம் போய் பயம் பற்றிக் கொண்டது. என்ன நடக்குது என்ற போது. ஒருவரின் பெயரைக்கூறி அவருக்கு விசர் வந்திருப்பதாயும், அறைக்கு வெளியே அவர் கம்புடன் நடமாடுவதாயும், வெளியே போகும் எல்லோருக்கும் அடிக்கிறார் என்றம் சொன்னார்.

உங்களுடன் அவன் நல்லா கதைக்கிறவன் தானே. நீங்க ஒருக்கா என்னைய கக்கூசுக்கு போக விடச் சொல்லுங்கோ என்றார் நண்பர். அவரைப் பார்த்தால் எதையே  அடக்கமுடியாமல் அடக்கிக் கொண்டிருப்பது போலிருந்தார்.

சரி பார்க்கிறேன் என்று சொல்லிய பின் எனது அறைக் கதவை மெதுவாய் திறந்தேன். டேய் உள்ளுக்குப் போடா, வெளிய வந்தால் துலைந்தாய் என்றபடி கதவில் ஒரு பெரிய கம்பால் ஒரு அடி போட்டார் சுகயீனமுற்றிருந்தவர். மெதுவாய் அழைத்தேன் அவரை. சாகப்போறியே என்றார். அவர்  கேட்டதில் எனக்கு உடன்பாடு இல்லாதால் அறைக்கதவை மூடி நண்பரிடம் நடந்ததைச் சொன்னேன். நண்பர் தனது அன்டனாவை தந்து எனது பக்கத்து அறை நண்பரின் கண்ணாடியை தட்டி விபரத்தை சொல்லப் பணித்தார். இப்படியே அவரின் அன்டனா மூலமாக எங்கள் பகுதியில் இருந்த நண்பர்களுக்கு செய்தியை பரிமாறிக் கொண்டோம். 

இறுதியில் விடுதிப் பொறுப்பாளர் வந்த போதும் சுகயீனமுற்றவர் எமக்கு சொன்னதையே சொல்லி அவரையும் விடுதிக்கு வெளியே நிப்பாட்டி வைத்திருந்தார். போலீஸ், மன நல மருத்துவர்கள் என பலர் வந்து சுகயீனமுற்றவரை அழைத்துப்போனதும்  எனது நண்பர் மிக வேகமாக ஓடிப்போய் கழிப்பறை கதை மூடிக்கொண்டார்.

சுகயீனமுற்றிருந்தவர் ஒரு தமிழரே. அவர் முன்பும் தானே தன்னுடன் பேசிக் கொள்வார். எம்முடன் இலகுவில் பேச மாட்டார். தனிமை‌யையே நாடுவார்.

அவரை மனநல மருத்தவமனையில் சேர்த்து சிகிச்சையளித்த பின், அவர் தான் தனது பெற்றோரிடம் செல்ல விரும்புவதாகக் கூறியதால் அவர் இலங்கைக்கு அனுப்பப்பட்டார்.

எனது நண்பரோ, தன் அன்டனாவால் தான் நீங்கள் அடி வாங்காமல் தப்பினீர்கள் என்றும், இனிமேல் தன்னை நாம் நக்கலடிக்கக் கூடாது என்றும் எம்மை கலாய்த்துக் கொண்டிருந்தார். நாமும் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டியதாயிற்று.

சில மாதங்கிளின் பின் இலங்கைக்கு அனுப்பப்பட்ட சுகயீனமுற்றவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும், யுத்தத்தின் காரணமாக அவர் சில குடும்ப அங்கத்தவர்களை இழந்திருந்ததாகவும், அதனாலேயே அவர் மனநிலை பாதிக்கப்படிருந்ததாகவும் கிடைத்த செய்திகள் கூறின.

நெருங்கிய நண்பனாக இல்லாது விட்டாலும் சல காலம் பழகிய நட்பு துலைந்து போனது  பலரின் மனதையும் கனக்க வைத்தது.

அதனாலோ என்னவோ அந்த  மலிவு விலைஅன்டனா இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. எது எப்படியோ ... ஒரு செய்தியை அந்த அன்டனா  இன்னொருவருக்கு பரிமாறியிருக்கிறது என்பது மட்டும் உண்மை.


.

கொள்ளைக்காரனுடன் கடவுள்

 எனக்கு அறிமுகமுள்ள ஒரு ஆபிரிக்க நண்பர் தனது கணணி திருத்த அழைத்தார். அங்கு போய் கதவைத் திறந்த போதே நிலமை சற்று சிக்கலாக இருப்பது போல இருந்தது, நமது நண்பருக்கும் அவரது நண்பருக்கும்.

வார்த்தைகள் தடித்தன. நண்பரின் நண்பரும் தடித்தவராகவே இருந்தார். ஆளையாள் தூசணத்தால் திட்டிக் கொண்டனர். என்ன பிரச்சனை என்பதே எனக்கு  தெரியாதிருந்தது.

”நீதான் காரணம்”
”நானில்லை,  உன் கவலையீனம்”
”உன்னை நம்பினேன்”
”....”
Fuck you man
Fuck you man

இப்படி பேச்சு சற்று சுடாக மாறிக்கொண்டிருக்கும் போது

தெரியாத்தனமாக Cool Cool என்று சொன்னேன்
நண்பரின் நண்பன் என்னைப் பிடித்துக் கொண்டான்

இவரை நம்பி எனது வியாபாரப் பொருட்களை கொடுத்துப்போனேன்.   இன்று அதைக் காணவில்லை. கேட்டால் தெரியாதென்கிறார் என்றான்.

நான் சற்று நிதானித்து நண்பரைப் பார்த்தேன்.
ஆம், இவர் இங்கு சாமான்கள் வைத்தது உண்மை. ஆனால் இப்போது அதைக் காணவில்லை என்றார்.
”இந்த வீட்டிற்குள் பல நேர்மையற்ற மனிதர்களும், திருட்டுத் தொழில் செய்பவர்களும் வருகிறார்கள்” என்றார் நண்பரின் நண்பர்.

நான் மறுபடியும் நண்பரின் பக்கம் திரும்பினேன்.

அனால் அவர்கள் என் வீட்டில் திருடமாட்டார்கள் என்றார் அவர்.
”திருடன் திருடன் தான் என்றார்”
நண்பரின் நண்பர். பிறகு அவரே தொடந்தார்
”நீ கவனமாயிருந்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது”
”நீ ஏன் இங்கு வைத்துப் போனாய்”
”....”
”...”

இப்படி மீண்டும் வார்த்தைகள் தடித்தன.
எனது நேரம் அநியாயமாகிக் கொண்டிருப்பதை அவர்கள் கவனிப்பதாயே இல்லை. எனது நேரத்தை வீணாக்காமல் ஏதும் பிரயோசனமாகக் கதையுங்கள் என்று சொல்ல நினைத்தேன்.

நண்பரின் நண்பரின் உடம்பு நன்றாகவே பெருத்து உருண்டு திரண்டிருந்தது. அவரை ஒரு மாமிச மலை எனலாம். அவர் என்னை பிடித்தால்  நொருங்கிய அப்பளம் மாதிரியாகிவிடுவேன் என்னும் பயம் காரணமாக எதுவும் சொல்லாமல்...

நண்பர்களே அமைதி அமைதி என்றேன்.

நண்பரின் நண்பர் அவரின் பையுக்குள் இருந்த பைபிளை எடுத்தார். அதன் மீது சத்தியம் செய்து தனது பொருட்களில் 300 டாலருக்கு பெறுமதியான பொருட்களை காணவில்லை என்றார். தான் ஒரு உண்மையான கிறீஸ்தவன் என்றும், ஞாயிறு தோறும் தேவாலயத்துக்கு போபவன் என்றும், தனக்கு பொய் பேசத் தெரியாது என்றும் பைபிளின் மீது சத்தியம் செய்தார்.

மற்றவர் எழுந்து புனிதக் குர்ஆன் எடுத்து அதில் கையை வைத்து அவர் நண்பரின் பணத்தை திருடவில்லை என்றார்.

மீண்டும் வார்த்தை தடித்து தூஷணத்தில் வந்து நின்ற போது பார்த்தேன் இருவருக்கருகிலும் பைபிளும், திருக்குர்ஆன்னும் கிடந்தன.

"நீ வெளியே போ"
என்றார் என் நண்பர் தனது நண்பரைப் பார்த்து.
நண்பருக்கு ரோஷம் வந்திருக்க வேண்டும். தனது சாமான்களை எடுக்கத் தொடங்கினார்.

அந்நேரம் எனது நண்பர் ஒரு சிகரட்டை எடுத்த படி வெளியில் போனார்.

தனது பொருட்களை அடுக்கியவர் என்னருகில் வந்து தான் மிகவும் கஸ்டப்பட்டவன் என்றும். தனது குடும்பம் மிகப் பெரியது என்றும், அவர்கள் கம்பியா நாட்டில் வசிப்பதாயும், தான் கம்பிய நாட்டவரின் கலாச்சார உடைகளையும், மற்றும் பல ஆபிரிக்க நாட்டவர்களின் கலாச்சார உடைகளை விற்கும் தொழில் புரிபவன் என்றும் சொல்லி, இதைத் தவிர தனது பொருளாதாரக் கஸ்டங்களையும் சொன்ன போது எனது மனம் அவன் பக்கம் சாய்ந்திருந்தது. எனது நண்பர் சற்று கவனமாக இருந்திருக்கலாம் என்றேன்.

எனது கையை பிடித்து குலுக்கி
”நீ நல்லவன், மே கோட் பிளஸ் யூ மை ப்ரெண்ட்” என்றபடி தனது பைபிளை ஒரு கையிலும் தோளில் பையுமாக வெளியேறினார்.

நண்பர் உள்ளே வந்தார். போய்விட்டானா என்றார்.
”ம்” என்றேன்.
”அவன் கள்ளன்” என்றார்
”அப்படித் தெரியவில்லையே” என்றேன்
”அவனை நம்பாதே” என்றார்.

அதன் பின் நண்பரின் கணணி திருத்தி வீடு போனேன்.

அதற்கடுத்து வந்த ஒரு நாளில் என்னை ஒரு நெட்கபே உரிமையாளர் வேலைக்கு அழைத்திருந்தார். அங்கு போய் வேலைசெய்து கொண்டிருந்த போது ஆபிரிக்க ஆங்கிலத்தில் ஒருவர் அந்தக் கடை உரிமையாளருடன் சற்று சூடாக கதைத்தக் கொண்டிருக்க அந்தக் குரலை எங்கோ கேட்டது போலிருக்கிறதே என்ற நினைத்தபடி எட்டிப் பார்த்தேன். அந்த ஆபிரிக்க நண்பரின் நண்பர் நின்றிருந்தார் அங்கு.

கண்டால் பிரச்சனையாகிவிடும் என்பதால் ஒளிந்து கொண்டேன். கடையுரிமையாளர் ஓருவழியாக அவரை வெறியேற்றினார்.

நண்பரின் நண்பரைப் பற்றி கடையுரிமையாளரிடம் விசாரித்தேன்.
பச்சைக் கள்ளன். கனக்க காசு தரவேணும். பொய்க் கணக்கு காட்டுகிறான். களவு தான் இவனின் தொழில் என்றார்.

அடப்பாவி.. பைபிளை வைத்து என்னை விசரனாக்கியிருக்கிறானே என்று நினைத்துக் கொண்டேன். இவனின் கதையைக் கேட்டு எனது நண்பரையும் குற்றம் சுமத்தியதையிட்டு வருந்தினேன்.

அன்று மாலை நிலக்கீழ் சுரங்க ரயில் நிலையத்தில் நின்ற போது மீண்டும் நண்பரின் நண்பனைக் கண்டேன். பைபிளை கையில் வைத்திருந்தபடியே ஒருவருடன் மிகவும் பண்பாக பேசிக் கொண்டிருந்தான்.

”கண்ணால் காண்பதெல்லாம் பொய், தீரவிசாரித்தறிவதே மேல்” என்று ஒரு அசரீரி கேட்டது.

இன்றைய  நாளும் நல்லதே.


.

ரெண்டு குச்சியும் ஒரு கோழி சூப்பும்

இன்று பல மாதங்களின் பின் எனக்குள் இருக்கும் சாப்பாட்டு ராமன் விளித்துக்கொண்டான். பல நாள் தூங்கியதாலோ என்னமோ வாயெல்லாம் ஊறி, வயிற்றுக்குள் அமிலத்தை சுரந்து பலத்த இம்சை பண்ணிக் கொண்டிருந்ததான். காலையில் இருந்து இனிப்பு வேணும் இனிப்பு வேணும் என்று கத்திக் கொண்டிருந்தது வாயும் வயிறும்.

டாக்டரின் பலத்த எச்சரிக்கையை மீறாமல் பெரும் பாடு பட்டு என்னை அடக்கிக் கொண்டேன் மாலை நான்கு மணிவரை. அதற்கு பிறகு பெருங்கஸ்டமாய் போய்விட்டது. கடைத்தெருவில் நடந்து போன போது எதிர்பட்ட கடைகளுக்கெல்லாம் எனது அனுமதியின்றியும், கடைக்காரனின் அனுமதியின்றிம் எனது கண்களையும் துணைக்கழைத்துக் கொண்டு பேயாட்டமாடியது எனது கெலி. இடைக்கிடை எனது காலையும் சேர்த்துக் கொள்ளப் பார்த்தாலும் கால் பெரிய மனது பண்ணி நான் சொன்னதை கேட்டது.


கேபாப் கடை, பிட்சா கடை, ஜஸ்கிறீம் கடை என மேய்ந்து கொண்டு போன போது தான் அந்தக் கடை கண்ணில் பட்டது. கடையைக் கண்டதும் அந்தக் கடையில் கிடைக்கும் இனிப்புப் பண்டம் ஞாபகத்தில் வர, டாக்டர் மறந்து போனார். அந்த இனிப்புப் பண்டம் பற்றி பிறகு சொல்லுகிறேன்.

போய் ஜக்கட்டை கழட்டி வைக்க முதலே பீக்கு முந்திய குசு மாதிரி என் மேசையில் மெனு கார்ட்ஜ போட்டுவிட்டு நான் கதிரையில் குந்த முதலே அடுத்த மேசைக்கு ஓடினார் உபசரிப்பாளர்.

நானும்  மெனு கார்ட்ஜ பார்த்தபடி எனக்கு பிடித்தது ஏதும் இருக்கிறதா என்று தேடினேன். கோழிக்குஞ்சு சூப், சிறிய சோளன், காளான், மற்றும் தாய்லாந்து மரக்கறிகளுடனான சூப் என்றிருந்ததை  தெரிவு செய்த பின் தான் அதன் விலையைப் பார்த்தேன். விலையைப் பார்த்ததும் வந்த பசி ஆளைவிட்டால் காணும் என்று ஓடப் பார்த்தது. பொறு பொறு விலை குறை குறைந்த சூப் இருக்கும், அதன் பிறகு அந்த இனிப்பு பண்டமும் இருக்கும் என்று சொல்லி பசியை என்னுடன் தங்கவைத்துக் கொண்டேன்.

மெனுக்கார்ட்ஜ தலைகீழாகவும் பிரட்டிப் பார்த்தேன். ஆனால் எப்படித் தேடினாலும் எனது பசிக்கேற்ற விலையுள்ள சூப் அங்கு இருக்கவில்லை.

வெளியில் எழும்பிப் போவது மரியாதைக்கு சவாலாக இருந்தது. இதற்கிடையில் உபசரிப்பாளர் மூன்று தரம் வந்து பார்த்துவிட்டு போனார். கடைசியாக போன போது நக்கலாக சிரிப்பது போல இருந்தது எனக்கு. பிரமையோ என நினைத்துக் கொண்டேன்.


ஒரு மாதிரியாக அங்கிருந்த சூப்களில் விலைகுறைந்த சூப்பை (30 டொலர்) தெரிவு செய்தேன். அத்துடன் எனக்கு இந்த பூலோகத்திலேயே மிகவும் பிடித்தமான இனிப்புப்பண்டமாகிய ”வாழைப்பழத்தை மாவில் நனைத்து பொரித்த வாழைப்பழமும் அதனுடன் ஜஸ்கிறீமையும்” ஆடர் கொடுப்பதற்கு கையை தூக்க நினைக்கிறேன் உபசரிப்பாளர் தவறவிடப் போகும் பஸ்ஸை பிடிக்க ஓடிவரும் வேகத்துடன் மூச்சு வாங்க ஓடிவந்தார்.

எதைக் காட்டினாலும் யா, யா என்று யானைமாதிரி தலையாட்டிக் கொண்டிருந்தார். ஒரு சந்தேகத்தில் எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று
நோர்வேஜிய மொழியில் சொன்னேன். அதற்கும் யா, யா என்றார். அப்போது தான் புரிந்தது அவருக்கு எனது நோர்வேஜிய மொழி புரியவில்லை என்று. அதன் பின்பு புரிந்தது எனக்கு அவரின் சீனப்பாசை புரியவில்லை என்றும்.


சாப்பாடு வர முதல் சீனமக்கள் உணவு உட்கொள்ளும் குச்சிகளை கொண்டு வந்து வைத்தார். இந்த குச்சிகள் முன்புபொருதரம் எனது மரியாதையை சுவீடன் நாட்டு தலைநகரத்தில் வைத்து காற்றில் பறக்க வைத்தது ஞாபகம் வந்தது. ‌தொழில் நிமித்தமாய் ஸ்டொக்ஹொல்ம் போயிருந்தேன் 3 நோர்வேஜியர்களுடன். அங்கு மதிய உணவிற்காய் எம்மை ஒரு சீன உணவகத்து அழைத்துப் போனார்கள். புதியாய் எம்முடன் 2 சுவீடன் நாட்டுக்காரர்களும் சேர்ந்து கொள்ள எல்லோருமாய் ”சூசி” என்னும் உணவை தெரிவு செய்தோம். அப்போது தான் நான் எதிர்பார்த்திராத அந்த பிரச்சனையும் வந்தது.

எனக்கு சாப்பாடு என்றால் எனது விரல்களினால் வாய்க்குள் போவது தான் பிடிக்கும். சாப்பிட்டு முடிய விரல்களை சூப்பியே கழுவிக் கொள்ளும்  திறமையும் என்னிடமுள்ளது. ஆனால் தற்போது முள்ளுக் கரண்டியும் கத்தியும் ஓரளவு பழகிவிட்டது. ஆனால் இந்த குச்சி விசயம் மட்டும்  அடங்க மறுக்கும் குதிரை மாதிரி துள்ளிக் கொண்டிருக்கிறது விரல்களுக்கிடையில்.

அன்றும் அப்படித்தான் முள்ளுக்கரண்டியை வைக்காமல் குச்சியை வைத்தார்கள். மற்றவர்கள் எல்லாம் ஏதோ சீனாவில் பிறந்து வளர்ந்தவர்கள் மாதிரி குச்சியால் சாப்பிடத் தொடங்கி அவர்கள் அரைவாசியைக் கடந்த பிறகும் எனது விரலுக்குள் குச்சிகள் நிற்காமல் தலைகெட்ட வெறியில் ஆடி ஆடி விழும் மனிதர்களைப் போல் எனது இரண்டு விரல்களுக்கும் நடுவில் நிற்காமல் விழுந்து கொண்டிருந்தது. எனது நண்பர்கள் கடைக்கண்ணால் பார்த்தபடி தங்களின் ”சூசியை” விழுங்கிக் கொண்டிருந்தார்கள். ஒரு வழியாய் குச்சியளை விரல்களால் பிடித்து ஒரு ”சூசியை” பிடித்து  மெதுவாய் துக்கி வாய்கருகில் கொண்டு போய் வாயை திறக்கிறேன் அந்த சூசி குச்சியில் இருந்து மேசையில் விழுந்து பக்கத்து நண்பரின் பக்கம் உறுண்டோடி கீழே விழுந்தது. நண்பரோ
”என்ன சஞ்சயன், சூசியில இருக்கிற மீன் இன்னும் சாகேல்ல போல” என்றார்.
நானும் விடாமல்
”பொறுங்கள் நான் அதை குத்தி சாப்பிட்டால் அது செத்துவிடும்”
என்று சொல்லி முள்ளுக் கரண்டி எடுத்து வந்து ஒரு மாதிரி சாப்பிட்டு முடித்தேன். அன்று ஒரு சபதமெடுத்தேன். இனிமேல் இந்த குச்சியை தொடுவதில்லை என்று.

ஆனால் இன்று மீண்டும் இந்த குச்சி என் முன்னே கிடக்கிறது. உபசரிப்பாளனை அழைத்து எனக்கு இந்த குச்சி சரிவராது முள்ளுக்க‌ரண்டி தா என்றேன். அவனும் யா, யா என்று குச்சியை எடுத்துப் போனான். அப்பாடா, பிரச்சனை முடிந்தது என்று நினைக்க முதல் வேறு குச்சியை கொண்டு வந்து வைத்துவிட்டு  என்னைப் பார்த்து ”ஓகே?” என்று கேட்டான். அவன், நான் புதிய குச்சிகள் வேண்டும் என்று கேட்டதாக நினைத்திருக்கிறான் என்று அப்போது தான் புரிந்தது. ஒரு மாதிரி புரியவைத்து முள்ளுக் கரண்டியினை பெற்றுக் கொண்டேன்.

உபசரிப்பாளர் சாப்பாட்டினை தூக்கினால முறிந்துவிடும் அளவுக்கு மெல்லியவராய் இருந்தார். அவர்  சாப்பாடு கொண்டு வந்த போது அவர் முறிந்து விடுவாரோ என்று பயந்தேன். எனது நல்ல நேரம் அப்படியொன்றும் நடக்கவில்லை.

சூப் வந்தது. மெதுவாய் சுவைத்தேன். சுட்டது. சற்று தேசிக்காய் பிளிந்து விட்டுப் பார்த்தேன். சுவை அதிகரித்திருந்தது போல் இருந்தது எனக்கு. அந்த சூப்இன் சுவை கற்புரவெள்ளியின் சுவையுடன் யூகலிப்டஸ் மர இலையின் வாசனையை கலந்துவிட்டால் கிடைக்கும் சுவை போலிருந்தது. சுப்புடன் உண்ணுவதற்காய் ஒரு வித இலையும், ஒருவித பயறு முளையும், ஒரு ‌சிவப்பு கொச்சிக்காயும் தந்திருந்தார்கள்.

நாம தின்னாத கொச்சிக்காயா? என்று நினைத்தபடி அதை எடுத்து நுனியில் மெதுவாய் கடித்தேன் மெதுவாய் உறைத்தது. அடுத்தமுறை சற்று அதிகமாய் கடித்தேன். வாய்க்குள் யாரோ எ‌ரிகுண்டு போட்டது போல் உறைக்கத் தொடங்கியது. கண்களில் கண்ணீர் வழிந்தது. சற்று நேரம் எனது உயிரே ஆடிவிட்டது. தமிழனைவிட உறைப்புத் தின்னும் மனித ஜாதிகள் இருப்பது அப்போது தான் புரிந்ததெனக்கு.

பெரும்பாடுபட்டு சூப்பை அழுதழுது குடித்து முடித்தேன். உபசரிப்பாளர் எனது இனிப்புப் பண்டத்தை கொண்டுவர உள்ளே போனார். எனது வாயில் உமிழ்நீர் நீர் ஊறும் கிணறு போல் ஊறிக் கொண்டிருந்தது. கடவுளே பொரித்த வாழைப்பழம் பெரிதாய் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

உபசரிப்பாளர் வந்தார்.
வைத்தார்.
போனார்.

நான் எதிர்பாத்தளவு பெரிதாயிருக்கவில்லை பொரித்த வாழைப்பழம். என்றாலும் பறவாயில்லை என்று கண்களை மூடி உலகை மறந்து சுவைத்துக் கொண்டிருந்தேன்.

சில நாட்களுக்கு முன் டாக்டர், தம்பி உமக்கு சீனி தேவைக்கு மிக அதிகமாய் இருக்கிறது. இனி இனிப்பு சாப்பிடக் கூடாது, உடற்பயிட்சி  செய்ய வேணும், 3 தரம் குளிசை போடவேணும் என்று சொன்னதெல்லாம் எனது ஞாகத்தில் இருந்து மறந்து போயிருந்தது. (மன்னியுங்கள்  டாக்டர்...)

வாய்குள் வாழைப்பழும் ஜஸ்கிறீமும் என்னை சொர்க்கத்துக்கு அழைத்துக் கொண்டு போய்க்கொண்டிருக்கும் போது எனது ”பில்லை” கொண்டு வந்து வைத்தான் உபசரிப்பாளன். பில்லை பார்த்தேன். சொர்க்கத்தில் இருந்த நான் நரகத்துக்குள் விழுந்த மாதிரி இருந்தது அதில் இருந்த தொகை.

பணம் செலுத்தி வெளியில் வந்து மெதுவாய் ஜக்கட் பொக்கட்டுக்குள் கையை விட்டு ஒளித்து வைத்த குச்சி இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டேன். அது அங்கு இருந்தது

வெளியில் வந்தேன். முகத்தில் மைனஸ் 7 குளிர் அடித்தது. மனதோ பொரித்த வாழைப்பழத்தை நினைத்தது.

என்னை நோக்கி ஒருவர் என்னை நோக்கி நடந்து வருவது போல இருந்தது. நிமிர்ந்து பார்த்தேன். டாக்டர் போலிருந்தார் அவர்.
இதுவும் பிரமையாயிருக்கும்.

இன்றைய நாளும் நல்லதே


.

உண்மை கலந்த சொற்கள்


எங்கள் அ. முத்துலிங்கம் அய்யாவின் உண்மை கலந்த நாட்குறிப்புகள் வாசித்துக் கொண்டிருக்கிறென். அதில் அவர் இப்படி எழுதியிருக்கிறார்: ”

”இந்த நாவலில் இருப்பது அத்தனையும் என் மூளையில் உதித்த கற்பனை. அதிலே நீங்கள் ஏதாவது உண்மையை கண்டுபிடித்தால் அது தற்செயலானது. அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன்”.

அதே போல் கீ‌ழ் உள்ள சொற்களும் எனது கற்பனையில் உதித்தவையே. அதிலே நீங்கள் ஏதாவது உண்மையை கண்டுபிடித்தால் அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன்.
................................


மணல் கலந்த மண்
உப்புக் காற்று

பள்ளி
நட்பூ
காதல்

இளங்கன்று
பயணம்
பெயர்வு

வாழ்வு
நட்பு
கல்வி
இருப்பு

இணைவு
ஜனனம்
மகிழ்வு

வாழ்வு
வலி
பணம்

வலி
வலி
வலி

மனம்
வெறுமை
அழுத்தம்

அழிவு
பேரழிவு

பெயர்ச்சி
போர்
அழிவு
மறுப்பு
தவிப்பு
கண்ணீர்

நட்பு

ஆறுதல்
காலம்
உயிர்ப்பு

உலகம்
அழகு

வாழ்க்கை.


.

சந்ததிகளின் சங்கதிகள்

இன்று பல நாட்களின் நிலக்கீழ் தொடரூந்தில் பயணிக்க நேர்ந்தது. யன்னலருகில் இடம் பிடித்து அமர்ந்து கொண்டேன். கண்கள் எதையோ பார்த்திருக்க மனம் எங்கோ சுற்றுலா போயிருந்தது, வழமை போல்.

திடீர் என்று என் முன்னால் ஒரு முக்காடு போட்டிருந்த தாயும், அழகே உருவான ஒரு பெண் குழந்தையும் அப் பெண் குழந்தையின் தம்பியும் வந்தமர்ந்தனர். அப் பெண் குழந்தக்கு நான்கு அல்லது ஐந்து வயதிருக்கலாம்.
அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்ருந்தேன். எனது காவியாவினதும், அட்சயாவினதும் குழந்தைப்பிராயம் நினைவில் நிழலாடியது.

அவர்களுக்கும் இவளுக்கும் பெரிய வித்தியாசமிருப்பதாய்  தெரியவில்லை எனக்கு.

இவளுக்கும் நீண்டு வளர்ந்த தலைமுடி
அழகிய குறும்பு கலந்த கண்கள்
ஒற்றைப் பின்னல்
கையில் ரோஸ் நிறத்திலும், இன்னும் பல நிறங்கள்  பதித்த கல்லுக் காப்பு
தலையில் உடைக்குப் பொருத்தமான கிளிப்
அதற்குப் பொருத்தமாய் சப்பாத்து
ஒரு கையில் அழகிய கரடிப்படம் போட்ட கைப்பை
மறு கையில் சொக்லேட்
வாயிலே ஆயிரம் கேள்விகள்

இவளுக்கும் என்னவள்களுக்கும் துளியேனும் வித்தியாசமில்லை.
காலம் மாறியிருந்தாலும், கடந்து போயிருந்தாலும்
அந்த இனிமையான பருவத்தின் வாசனை எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. இனிமேலும் இருந்து கொண்டே  இருக்கும்.

அந்த நாட்களில் ‌வேலை நிமித்தம் அடிக்கடி பயணப்பட வேண்டி வரும். உள்நாடு, வெளிநாடு என்று எங்கு போனாலும் முதலில் தேடி ஓடுவது உடுப்புக்கடையாய் இருக்கும்.

விதம் விதமாய் உடுப்புக்கள், அலங்காரப் பொருட்கள், தலைக்கு கிளிப்கள், ரப்பர் பட்டிகள், காப்புகள், பொம்மைகள், ஸ்டிக்கர்கள் என பெண்குழந்தைகளின் உலகத்திலேயே வாழ்ந்திருந்தேன். ஆரம்பத்தில் எதைக் கொண்டு போனாலும் துள்ளிக் குதித்தார்கள். கட்டியணைத்து மூச்சு முட்ட முத்தம் தந்தார்கள். சுற்றியிருக்கும் உலகமே மறந்து போகும் எனக்கு.

அவர்களுக்கு வயதாக வயதாக விருப்பங்களும், தேவைகளும், ஆர்வங்களும், நிறங்களும் மாறிப்போயின. இது புரியாமல் நானும் பல தடவைகள் அவர்களை இன்னும் குழந்தைகள் என்று நினைத்து எனக்கு அழகாயிருப்பதை கொண்டு போய் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறேன்.

தற்போதெல்லாம் ஏதும் வாங்குவது எனின் பலமாய் யோசிக்க வேண்டியிருக்கிறது.
un common ஆக இருக்கவேண்டும்
நிறம் பொருந்த வேண்டும்
புதிய டிசைன் ஆக இருக்க வேண்டும்
காலத்திற்கு ஏற்றதாக இருத்தல் வேண்டும்
வயதுக்கு ஏற்றதாயிருக்க வேண்டும்

கடைக்குள் போனதுமே எனக்குள் ஆயிரம் கேள்விகள்.
இதை வாங்குவதா, அதை வாங்குவாதா இல்லது மற்றதையா?
என்று யோசித்தே மண்டை காய்ந்து போகும்.

நீங்களே உங்களுக்கு வாங்குங்கோ என்று கடைக்கழைத்துப் போனால்
இந்த அப்பாவுக்கு ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது என்றும்
அன்பளிப்பு என்றால் நீங்கள் தான் தெரிவு செய்ய வேண்டும் என்றும் கதைவரும்.

மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் அடி மாதிரி
பிழையான பரிசை தெரிவு செய்தாலும் பேச்சு
பரிசை தெரிவு செய்யாவிட்டாலும் பேச்சு


ஆனால் பூவால் அடித்தது போலிருக்கும் அவர்களின் அடி
வலிக்கவே வலிக்காது.

என் முன்னாலிருந்த  பெண் குழந்தையும் வளர்ந்து
நான் பட்ட அவஸ்தையை தனது பெற்றோருக்கும் குடுப்பாள்.
காலம் மட்டும் அதை கண்டு கொள்ளாமல் தன்பாட்டில் போய்க் கொண்டேயிருக்கும். வழமைபோல்.

எல்லாம் நன்மைக்கே.

.

அடக்கத்தின் இருப்பிடமும் தளும்பாத நிறைகுடமும்

 சில வாரங்களுக்கு முன் நடந்த கதையிது.

அன்று காலை தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு தனது பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டார். எனக்கு அந்தப் பெயரை எங்கோ கேட்டது போலிருந்தாலும் அப்போது அதைப் பற்றி கேட்பது அநாகரீகம் என்பதால் அமைதியாயிருந்தேன். தனக்கு கணணி சம்பந்தமாக உதவி தேவைப்படுவதாயும் என்னை அவரின் இருப்பிடத்திற்கு வருமாறும் அழைத்தார்.

அவர் கூறிய இடத்திற்குப் போய் இறங்கிய போது இலையுதிர்கால நேரமாகையால் வழி எங்கும் பலவண்ண நிறங்களில் உதிர்ந்த இலைகள் இரைந்து கிடந்தன. மழை பெய்து கொண்டிருந்தது.

அவரின் வீட்டு மணியை அழுத்தினேன். வீடியோவில் பார்த்து 6ம் மாடிக்கு வா என்றார். Lift ஐ தேடிப் போனேன். அதனருகில் ”Lift பழுது” என்றிருந்து. எனது வி‌தியை நொந்தபடி 6மாடிகளும் ஏறி மூச்சு வாங்கியபடி நின்ற போது கதவைத் திறந்தார். நான் மூச்சு வாங்குவதை கண்டதும்
”என்ன உடற்பயிட்சி செய்தாயா” என்றார் குசும்பு கலந்த குரலில்.
”Lift வேலை செய்யவில்லை” என்றேன்
 வெடித்துச் சிரித்தார்
பின்பு என்தோளில் கைபோட்டு என்னை Lift வாசலுக்கு அழைத்துச் சென்றார். அங்கும் ”Lift பழுது” என்று எழுதியிருந்தது.
என்னை அதனை வாசிக்கச் சொன்னார்.
நானும் வாசித்தேன்.
அதனருகில் உள்ள கடைசிச் சொல்லை வாசி என்றார்
அது மிக மிகச் சிறிய எழுத்துக்களினால் எழுதப்பட்டிருந்தது.
அது என்ன என்றார்.
”இல்லை” என்று எழுதியிருக்கிறது என்றேன்.
இப்ப அந்த மூன்று சொற்களையும் சேர்த்து வாசி என்றார்.
புரிந்தது எனக்கு..
”Lift பழுது இல்லை” என்றேன் எனது முட்டாள் தனத்தை நொந்தபடி

தான் தான் அதை ஒட்டி வைத்திருப்பதாகச் சொன்னார்.  ”Lift” இல் ஏறி வருவதை விட படியில் ஏறி இறங்குவது உடலுக்கு நல்லம் என்றார்.

வீட்டினுள் போய் கணணிக்கருகில் அமர்ந்ததும் அவரின் பெயர் பற்றிய விடயம் ஞாபகம் வர
”உங்கள் பெயரை எங்கோ கேட்டிருக்கிறேன் போலிருக்கிறது” என்றேன்
”இருக்கலாம்” என்றார்
அந்தப் பெயரில் ஒரு பெரிய நடிகர் இருந்தாக ஞாபகம் வந்தது. அவரா நீங்கள் என்றேன்.
”இல்லை, இந்த அறையில் உள்ள படங்களைப் பார் புரியும். அது வரை நான் தேனிர் கலந்து வருகிறேன்” என்று சொல்லி வெளியில் போனார்.
படங்களைப் பார்க்கலானேன்.
பெரிய பெரிய அரசியல்வாதிகளின் படங்கள், நோர்வே அரசனின் ”சிறந்த சேவையாளர்” விருது, பிரபல பிரதமராகவும், ஐக்கியநாடுகள் சபையின் சுகாதாரப்பிரிவுக்கு தலைவியாகவும் இருந்த Gro Harlem Brundtland இன் படமும் இருந்தன. ஆனால் இவர் யார் என்பது மட்டும் பிடிபடவில்லை.
அந்த அறை முழுக்க ஒரே புத்தகங்கள் இரைந்து கிடந்தன. வைப்பதற்கு இடமின்றி நிலத்திலும் அடுக்கியிருந்தார்.

கையில் தேத்தண்ணியுடன் வந்து
”இது எனது தேத்தண்ணி தயைவு செய்து குறையிருப்பின் பொறுத்துக்கொள்” என்றார் மிகவும் பணிவுடன்.
”எனது தேத்தண்ணியை நீங்கள் குடித்தால் இப்படி பேச மாட்டீர்கள்” என்றேன்.
”அப்ப நாமிருவரும் பிரபலமான சமையல்காரர்கள்” எனறு சொல்லிச் சிரித்தார்.

அவரைப்பற்றி நான் கேட்ட கேள்வியை அவர் மறந்து போயிருந்தாகத் தெரிந்தது. மீண்டும் கேட்டேன்.
”பெரிதாய் ஒன்றுமில்லை என்னைப் பற்றி சொல்ல” என்றார்.
பின்பு தானே ”நான் அரசியலில் இருந்தேன் என்றும். அந்த நாட்களில் சில பதவிகள் வகித்தேன்” என்றும் சொன்னார்.
எனது ஆவர்வம் அதிகமாக ”என்ன பதிவகள் என்றேன்”
தனது அரசியல் வாழ்வு 1960ம் ஆண்டுகளில் தொடங்கியதாகவும்
தொழிற்கட்சின் இளைஞர் அணியின் தலைவராக தான் அரசியலில் புகுந்து

தொழிற்கட்சியின் வடக்குநோர்வே மாகாணத்தின் பொறுப்பாளராகவும், பின்பு இன்னொரு மாகாணத்தில் தொழிற்கட்சியின் பொறுப்பாளராகவும், அதன் பின்பு நோர்வே தொழிற்கட்சியின் நிர்வாகசபை உறுப்பினராகவும், அதன் பின்னர் தொழிற்கட்சியின் பிரதம தலைவராகவும் இருந்தாக சொன்னார்.  சற்றே ஆறியவர் மிகவும் அடக்கமான குரலில் 70களின் இறுதியில் தான் போக்குவரத்து அமைச்சராவும் இருந்ததாகவும் சொன்னார்.

இவரைப் பற்றி பெரிதாய் அறிந்திருக்காவிடினும் நோர்வே அரசியலில் முக்கிய புள்ளி ஒருவரை சந்தித்திருக்கிறேன் என்பது புரிய, எழும்பி அவரின் கைகளைப் பற்றியபடி உங்களை சந்தித்ததில் மிக்கு மகிழ்ச்சி என்றேன். நானும் அதையே சொல்கிறேன் என்றார் முதுகில் ஒரு தட்டு தட்டி.

அவருக்கு வயது 70 - 75 இருக்கலாம். மனைவி வேலைக்கு போகிறார். தனக்கு முன்பைப் போல் ஓடியாட முடியாதிருக்கிறது என்றார். தனக்கு மூட்டு நோ இருப்பதாகவும் குளிர்காலத்தில் உடல் உபாதைகள் அதிக கஸ்டத்தை தருவதாகவும் சொன்னார்.  மெளனமாய் தலையாட்டிக் கொண்டிருந்தேன். எனக்கு வரப்போகும் வயோதிபம் மனதுக்குள் ஏதோ செய்தது.

அவரின் நாய் ஓடிவந்து என்னை முகர்ந்து பார்த்தது.
இவன் இப்படித்தான் யார் வந்தாலும் முகர்ந்து பார்ப்பான். மிகவும் சாது. எனது நண்பன். இவனுக்கு 3 வயதாகிறது என்று தனது நண்பனை அறிமுப்படுத்தினார். அவரின் நண்பரும் என்னை மணந்து பார்த்துவிட்டு, திருப்பதிப்பட்டவராய் எங்களருகில் படுத்துக் கொண்டார்.

கணணியை திருத்திக் கொண்டு அவருடன் கதைத்துக் கொண்டிருந்தேன். அவர் பல புத்தகங்கள் எழுதியிருக்கிறார் என்றார்.  முக்கியமான புத்தகமாகக் ”சார்ஜன்ட்” என்னும் புத்தகத்தைக் குறிப்பிட்டார். அதில் கம்யூனிசம், வேவுபார்த்ததல் பற்றி எழுதப்பட்டிருந்ததாகவும், அது பலத்த சர்ச்சையை அந்தக்காலத்தில் எழுப்பியிருந்ததாகவும் சொன்னார். அவர் பல புத்தகங்கள் எழதியிருப்பதாகவும், தற்போதும் எழுதிக் கொண்டிருப்பதாகவும் அறியக்கிடைத்தது.

இவ்வளவு பெரிய ‌மனிதர் இந்தளவு அமைதியாக, அடக்கமாக இருப்பது ஆச்சரியமாக இருந்தது. நம்மூர் அரசியல்வாதிகளை ஞாபகத்தில் வந்தார்கள். என்னையறிமல் எனக்கு சிரிப்பு வந்தது.

கணணி திருத்தி முடிய எதிர்காலத்தில் ஏதும் கணணிப்பிரச்சனை என்றாலும் வந்து உதவி செய்வாயா என்றார் மிகவும் பணிவாக. அவர் கைபற்றி ”நிட்சயமாக” என்று சொல்லி வெளிக்கிட்டேன். வெளியில் வந்து Liftஐ தேடிப் போனேன். அங்கு ”Lift பழுது” என்றிருந்தது. எனக்குள் சிரித்தபடி படிகளில் இறங்கத் தொடங்கினே். கதவருகில் நின்றபடி என்னைப் பார்த்து கைகாட்டி விடைபெற்றார் பெரியவர்.

இன்றைய நாளும் நல்லதே.

.

ஒரு தாதாவும் சாதாரணமானவனும்


நான் சொல்லப்போகும் மனிதரை இந்த வருட இளவேணில் காலத்தில் சந்தித்தேன். முதல் சந்திப்பை ஒரு பதிவாக எழுதியுமிருந்தேன் (பார்க்க Go go Nigeria . கமோன் நைஜீரியா ) 

இன்றும் அவர் வீட்டில் கணணி திருத்திக் கொண்டிருக்கிறேன். இதற்கு முன்னும் ஓரிரு நாள் வந்து போயிருக்கிறேன். இந்த மனிதரிடம். அந்த நாட்களிலும், இன்றும் நடந்த சம்பவங்களைப் பார்த்தால் இவர் ஒஸ்லோவில் வாழும் சில ஆபிரிக்க இனங்களுக்கு ஒரு (மனிதாபிமானமுள்ள) தாதா மாதிரி நடந்து கொள்கிறார். அவரின் வீடு எப்போதும் பிரச்சனைகளினால் நிரம்பிய மனிதர்களால் நிரம்பியிருக்கிறது.

இன்றும் இப்படித்தான் தங்களை வீட்டு உரிமையாளர் வீட்டால் கலைத்துவிட்டார் என்று சொல்லியபடி 3 பெண்கள் வந்திருந்தார்கள்.  நீங்கள் வீட்டு வாடகை கொடுக்கவில்லை என்று அறிகிறேன் என்றார்.
தலைகுனிந்திருந்தனர் பெண்கள்.

”ஏன் வாடகை கொடுக்கவில்லை”
”அம்மாவுக்கு அனுப்பினேன்”
”வேலை இல்லை”
முன்றாமவள் மெளனமாய் இருந்திருந்தாள்

உங்களால் ஒரே தொல்லையாகிவிட்டது. வீட்டு உரிமையாளன் மனம் வைத்தால் மட்டுமே ‌நீங்கள் இங்கு வாழலாம் என்றார்

அவர்கள் தலைகுனிந்து மௌனமாய் இருந்தார்கள்.
இடையில் 4 தொலைபேசி அழைப்புக்களுக்கு பதிலளித்தார்.
அவற்றில் ஒருவருக்கு நாளெழுத்து ஆங்கில சொல்லால் உரத்துத் திட்டி, நாளை மாலை வா என்றார்.

அதற்கப்புறம் அந்த பெண்களை வெளியேறுங்கள் என்றார். அவர்கள் கெஞ்சினார்கள். திட்டி அனுப்பினார் அவர்களை.

அவர்கள் போனதும் இவளவவைக்கு சொகுசான வீடு தேவைப்படுகிறது என்று திட்டிய படியே யாருடனோ கதைத்து ஒரு வீட்டை ஒழுங்கு பண்ணினார்.
பிறகு அந்தப் பெண்களை தொலைபேசியில் அழைத்தார். அவர்களில் அழகானவள் அவரின் மடியில் குந்தினாள். அவளின் முதுகைத் தடவியபடியே ” எனக்கு மனைவிருக்கிறாள்” தள்ளி இரு என அதிகாரம்  கலந்து கட்டளையிட்டார். அவளும் விலகிக் கொண்டாள். பிறகு புதிய வீட்டைப்பற்றி கூறி ஒழுங்காய் வாடகையை செலுத்துங்கள் என்றார். அவர்கள் நன்றி என்றபடி எழுந்து போயினர்.

முன்பொருநாள் ஒரு ‌பெண் இவரின் வீட்டில் அழுதபடி நின்றிருந்தாள். நோர்வேக்கு வந்து 2 நாட்கள் என்றாள். அவளை போலிசுக்கு அனுப்பி, அகதியாகப் பதிந்து அவளுக்கு தேவையானதை தனது நண்பர்களினூடாகச் செய்தார்.

இவரின் வீட்டில் தன் கணணியை திருத்தி வாங்கிய பின் எனக்கு பணம் தரமால் தண்ணி காட்டியவனைப் பற்றிச் சொன்னேன். இரண்டுதரம் தொலைபேசி எடுத்தார். பணம் வந்தது. கொணர்ந்தவர் மன்னிப்பும் கேட்டார், தனது நடத்தைக்கு.

அவருக்கு ஒரு தம்பியிருக்கிறார். ஒரு நோர்வேஜிய பெண்ணை திருமணமுடித்திருக்கிறார். ‌ஆனால் ”பஞ்ச தந்திரம்” படத்தில் வரும் கமலஹாசன் மாதிரி நாளுக்கொரு பெண்ணுடன் திரிகிறார். என்னால் இவனை திருத்தமுடியாதிருக்கிறது என்று அங்கலாய்த்தார் ஒரு நாள். குடும்பத்தின் மரியாதையை கெடுக்கிறான் என்றும் மனவருத்தப்பட்டார்.

அழகிய கிளாஸ் குடுக்கைகளை வடிவமைக்கும் தொழில் செய்கிறார். மிகவும் எளிமையாய் வாழ்கிறார்.  ஒபாமாவில் இருந்து உசாமா வரை அலசுகிறார்.

ஒரு நாள் உங்கள் விடுதலைப்போராட்டத்துக்கு என்ன நடந்தது என்றார். புன்னகைத்தேன்.. வேறு என்னத்தை செய்யலாம்.

ஒரு பெரிய பாத்திரத்தில் சமைத்த உணவிணை கொட்டி சுற்றியிருந்து உண்பார், மற்றவர்களும் சேர்ந்து கொள்வார்கள் அவருடன். என்னையும் அழைத்தார் ஒரு நாள். மெதுவாய் மறுத்தேன். பெரியதொரு ஆபிரிக்கச் சிரிப்பு சிரித்தார். அன்றிலிருந்து எனக்கு தேன் கலந்த இஞ்சி தேத்தண்ணியையே தருகிறார். சாப்பிட அழைப்பதில்லை.

God help help these people என்பார் அடிக்கடி.  விடைபெறும் போது ”Listen to your heart”... man.. என்பார்.

அவர் சொன்னது போல், எனது மனது எனக்குச் சொன்னதை எழுதியிருக்கிறேன். அவ்வளவு தான்.

இன்றைய நாளும் நல்லதே


.

பெரியம்மாவின் பெரிய வீடும், பெரியப்பாவின் ”ஓடாத மொரீஸ் மைனர்” காரும்

செல்வவில்லா, எனது பெரிய பெரியம்மாவின் வீடு. மருதனாமடத்தில் (காங்கேசன்துரை வீதியில்) இராமநாதன் மகளீர் பாடசாலையுடனான மதிலுடன் அமைந்திருக்கும் வீடு. இந்த வீட்டுச் சுவர்களுடன் எனக்கு பெரும் பரீச்சயமில்லை என்றாலும், மட்டக்களப்பில் இருந்து வருடத்துக்கு ஒரு முறை விடுமுறையில் போகும் போது எனது நினைவில் படிந்துவிட்ட நினைவுகளின் நிழல்களையே பதிய நினைத்திருக்கிறேன் இன்று.

குமாரவேலர் தான் வீட்டின் அதிபதியும் எனது பெரிய பெரியப்பாவும். அந்தக்காலத்து சிங்கப்பூர் பென்சனீயர். சிங்கப்பூரில் இருந்து பெரியப்பா காசு அனுப்ப மாணிக்கராகிய எனது தாத்தா கட்டினாராம் அந்த வீட்டை. பெரியப்பா ஆகக் குறைந்தது 6 அடி உயரமிருப்பார். வெள்ளைத் தும்பு முட்டாஸ் போன்ற தலைமயிர், வெள்ளை சேட், வெள்ளை வேட்டி தவிரித்து வேறு ஏதும் நிறங்கள் அவரின் உடையில் நான் கண்டதில்லை.

செல்வராணி, எனது பெரியப்பாவின் அதிபதி,  எனது பெரிய பெரியம்மா. அவரின் பெருடன் "villa"வை சேர்த்து வைத்த பெயர் தான் அவர்களின் வீட்டின் பெயர்.

பெரியம்மாவுக்கும் எனது அம்மாவுக்கும் ஏறத்தாள 23 வயது வித்தியாசம். பெரியம்மா குடும்பத்திடம் எல்லாம் இருந்து குழந்தைகளைத் தவிர. அவர்களின் வீட்டுக்கு போகும் நேரமெல்லாம் பெரியம்மாவின் அன்புத் தொல்லை ஒரு இதமான இம்சையாகவே இருக்கும். இரவு நித்திரையில் இருக்கும் போது 11 மணிபோல் எழுப்பி பால் குடிச்சிட்டு படுடா என்பார், கையில் சீனி போட்ட பாலுடன் வந்து. மூக்குப்பேணியை நான் கண்டதும் அங்குதான்.

அவர்களின் வீட்டில் பல வினோதமான பொருட்கள் இருந்தன. அதில் ஒன்று ரேடியோ. அந்த ரேடியோ மிகப் பெரியது. அதன் முன் பக்க கண்ணாடியில் கிழக்காசிய நாடுகளின் பல நகரங்களின் பெயர் எழுதப்பட்டிருந்தது. 6 வெள்ளை நிற கட்டைகள் இருந்தன. அது எப்படி இயங்கியது என்று எனக்குத் தெரியாது. ஆனால் பல நாட்கள் அதை திருகிப் பார்த்திருக்கிறேன். யாருமில்லாத போது.

அவர்களின் வீட்டின் முன் பகுதியில் பெரியதோர் போர்டிக்கோ இருந்தது. அதற்கு இரு பக்கங்களிலும் வாகனம் நுளையுமளவுக்கான இரும்பிலான பலத்த கேட்களுமிருந்தன. கேட்டுக்கும் போட்டிக்கோவுக்குமிடையில் பெரியம்மாவின் ரோசாப்பூத் தோட்டமிருந்தது. அதில் இல்லாத நிறங்களில்லை.  அதற்கங்கால் பெரியப்பாவின் ”ஓடாத மொரீஸ் மைனர்” கார் நிற்கும் கறாஜ் இருந்தது.

யாழ்ப்பாணத்திலேயே ”ஓடாத மொரீஸ் மைனர்” வைத்திருந்தது எனது பெரியப்பா தான். பெயர்தான் ”ஓடாத மொரீஸ் மைனர்” ஆனால் கார் ஓடும். அவர் அந்தக் காரை மாதத்தில் ஒரு தரம் மட்டும் வெளியில் எடுப்பார். வங்கியில் இருந்து பென்சன் காசு எடுக்கப் போகும் போகுமன்று மட்டும் கார்
காராஜ்ஐ விட்டு வெளியில் வரும். 3 கிலோமீட்டர் போய் வங்கியில் காசு எடுத்து திரும்ப 3 கிலோ மீட்டர் ஓடி வருவார். கேட் திறக்க ஆள் நிற்கும் அப்படியே கராஜ்க்குள் விடுவார் காரை. பிறகு ஓரு மாதமாகும் கார் வெளியில் வர. இது தான் அந்தக் காருக்கு ”ஓடாத மொரீஸ் மைனர்” என்று பெயர் வரக் காரணம். 2004 ம் ஆண்டு வரை அந்தக் கார் 44000 மைல்களே ஓடியிருந்தது.
1962 ம் ஆண்டு 3000 ரூபாய்கு வாங்கிய கார் அது என்று செல்லக் கேட்டிருக்கிறேன். அது வாங்கியது பற்றியும் ஒரு சுவராசியமான கதையிருக்கிறது. 1962ம் ஆண்டு ஒரு நாள் பெரியப்பா தனது சைக்கிலில் யாழ்ப்பாணம் போய் மொரீஸ்மைனர் விற்கும் கடையில் கார் பார்த்திருக்கிறார். கார் பிடித்துப் போக மனிதர் விற்பனையாளரிடம் விலையைக் கேட்க.. விற்பனையாளர் பெரியப்பாவின் ரலி சைக்கிலையும், வெள்ளை சேட், வெள்ளை வேட்டியையும் பார்த்து நக்கலாய் உன்னால உத வாங்ககேலாது அவ்வளவு விலை என்று எளனப்படுத்தியிருக்கிறார் பெரியப்பாவை. அது பெரியப்பாவின் மானப் பிரச்சனைாயக மாற, உடனடியாக வங்கிக்குப் போய் காசு எடுத்துவந்து காரை வாங்கினாராம் என்றார் பெரியம்மா ஒரு நாள்.

அந்த வீட்டின் அமைப்பே அலாதியானது. நான்கு பெரிய அறைகள். ஜன்னல்களுக்கு பலவண்ணணக் கண்ணாடிகள். மாடியில் சாமியறை, நீண்டகல்ந்த விறாந்தைகள், விறாந்தையில் இரண்டு பிரம்பிலான சாய்மனைக் கதிரைகள். அவற்றில் கட்டாயம் ரகுநாதய்யர் பஞ்சாங்கமிருக்கும். கொமேட் வைத்த கக்கூஸ்சும் குளியலறையும். இரண்டு குசினிகள் அதற்கங்கால் மாட்டு-ஆட்டுக் கொட்டில் அதற்கருகில் கிணறும், தண்ணீர்த் தொட்டியும். அதற்கங்கால் குளியலறை, அதற்கு மேல் சீமெந்திலான தண்ணீர் டாங்க், அருகில் தண்ணீர் பம்ப் இருக்கும் அறை. இவற்றின் கீழ், தண்ணீர் வெளியேற சீமெந்துக் கான். அதற்கங்கால் வாழைகள் பிறகு தோட்டம் தொடங்கும் எல்லை.

வீட்டின் முன்னால் ஜிம்மியும், வீரனும். பின்னால் இன்னும் 4 நாய்கள். வைக்கோல்போரடியில் இன்னுமொன்று. விறைந்தையில் 3 கிளிகள் (களுத்தில் சிவப்புக் கோடு இருக்கும்), அதிலொன்று  ராணி, ராணி என்று பெரியம்மாவை அழைக்கும். அவரும் அருகில் போய்க் கதைப்பார். இதை விட 2 மைனாக்கள், வீட்டின் பின்னாலிருந்த கொட்டிலில் நாலைந்து மாடுகளும், ஆடுகளும், தோட்டத்துக்குள் இருந்த கோழிக் கூட்டினுள் 20 - 25 கோழிகளும் சில சேவல்களும்.

இந்த சேவல்களில் ஒன்றுக்கும் எனக்கும் எட்டாப் பொருத்தமாக இருந்து. என்னைக் கண்டால் திரத்தி வந்து கொத்தும். நான் வரும் போதெல்லாம் அதற்கு சிறைத்தண்டணை விதித்தார் பெரியம்மா. பின்பொருநாள் அண்ணண் ஒருவனின் போர்க்கோழி (சேவல்) ஒன்றை வைத்து நான் எனது கொலைவெறியை தீர்துக் கொண்டது, பெரியம்மா அறியாத கதைகளில் ஒன்று.

பெரியப்பாவின் சைக்கிலும் அலாதியானது. எப்பொழுதும் தேர் மாதிரியே வைத்திருப்பார் அதை. அழகிய கைபிடி, அதில் குஞ்சம் தொங்கும். பாருக்கு வயர் சுற்றியிருப்பார், அழகிய சத்தத்துடனான மணி, டைனமோ, முன்னுக்கு பெரிய லைட், பின்னால் சிவப்பு லைட். பெரிய கரியர், பெரிய ஸ்டான்ட். ரிம்முக்கு மஞ்சல் நிற பூ போட்டிருப்பார். ஐப்பான் செயினும் பிறேக் கட்டையும், செயின் வெளியே தெரியாத மாதிரி செயின் பொக்ஸ். அதுவும் அவரின் காரைப் போல ஊருக்குள் பிரபல்யமானது தான்.

வீட்டுத் தோட்டம் பெரியது என்பதை விட, அது மிகப் பெரியது என்பதே சரி. காலையில் ஒரு கையில் வேப்பம் குச்சியுடனும், மறுகையில் குத்தூசியுடனும் உலாவருவார் பெரியப்பா. பழுத்த பலா இலைகளை குத்தூசியில் குத்திக் கொண்டே முழுத் தோட்டத்தையும் உலாவருவார். அவரின் தோட்டத்தில்தான் நான் முதன் முதலில் ”வேரிலே பழுத்த பலா” கண்டேன். மா, பலா தோடை, மாதுளை, தென்னை, பனை என பலவிதமான மரங்களிருந்தன. மாவிலும், பலாவிலும் வித விதமான ருசியில் பல மரங்களுமிருந்தன.

அவர்கள் வீட்டில் பலர் வளர்ந்தார்கள். அவர்கள் பெரியவர்களாகியதும் திருமணம் முடித்துக் கொடுத்தார்கள். எங்கள் சின்னப்பெயரிம்மாவின் கடைசி மகனும் அங்கு தான் வளர்ந்தான். பெரியம்மாவினதும், பெரியப்பாவினதும் செல்லம் தான் அவனை கெடுத்தது என்று யாரும் சொன்னால் நான் அதை மறுக்க மாட்டேன். பெரியப்பாவிற்கு அவனின் மேல் அப்படியோர் பாசமிருந்தது. அவனின் சொல்லுக்கு மனிதர் மகுடியாய் ஆடினார். இவனும் ஆட்டுவித்தான். பெரியப்பா விரும்பியபடியே அவருக்கு கொள்ளி வைத்ததும் அவன் தான்.

பெரியப்பா 95 வயது தாண்டி வாழ்ந்திருந்தார். பெரியம்மாவும் கிட்டத்தட்ட அப்படித்தான். இன்று எனது சின்னப் பெரியம்மாவின் மகன் அந்த வீட்டில் வாழ்கிறார்.

இறுதியாய் அங்கு போய் வந்த பின் மனது ஏனோ இந்த முறை செல்வவில்லாவின் சுவர்கள் என்னுடன் பேசவில்லை என்றது. அது கசந்தாலும் உண்மையை மறுப்பதற்கில்லை.

‌செல்வவில்லாவுக்கு இது சமர்ப்பணம்..