
நைஜிரியா நாட்டு மனிதரொருவர்க்கு கணணி திருத்திக் கொண்டிருக்கிறேன்
நைஜரியாவுக்கும் கிரேக்கத்துக்கும் World Cup match தொடங்கிவிட்டது..
புதியதோர் அனுபவத்தில் நான் திளைத்துக் கொண்டருப்பதால் அதைத் உங்களுடன் பகிர நினைக்கிறேன்..
Bob Marley ஸ்டைலில் தலைவளர்த்த இருவரும், என் தலை போல் அழகான மொட்டையுடன் ஒருவரும், உருண்டு திரண்ட கட்டையான ஒரு பெண்ணும் இருக்கிறார்கள். அவர்களுடன் நானும் இருக்கிறேன் கணணிக்கருகில் (சத்தியமாக கணணிக்கருகில் தான் இருக்கிறேன்).
Go go Nigeria என்று பாடுகிறார்கள்
கமோன் நைஜீரியா என்கிறார்கள்
ஆடுகிறார்கள் ஆனந்தக்கூத்து
மேசையில் தட்டுகிறார்கள் தாளலயத்துடன்
விசில் பறக்கிறது
நான் ஒருவன் இருப்பதை மறந்து விட்டார்கள் போலிருக்கிறது அவர்கள் நடவடிக்கை.
எனக்கும் எல்லாம் புதினமாய் இருக்கிறது.. ஆனாலும் ரசிக்கிறேன் இம் மனிதர்களை. கவலை மறந்த கூட்டம் இது.. எப்படித்தான் இவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்க முடிகிறது இவர்களால்? நான் பழக வேண்டியது கொட்டிக் கிடக்கிறதே இவர்களிடம்.
திடீர் என நாமிருக்கும் அறை வெடித்துச் சிதறியது போலிருக்கிறது.. காட்டுக் கூச்சல் போட்டு கத்துகிறார்கள்.. கட்டிப்பிடித்து முத்தமிடுகிறார்கள்...
என்னையும் கட்டிப்பிடித்து தூக்கி கவனமாய் இறக்கி வைத்தார்கள். ஆடத் தொடங்குகிறாள் அந்தப் பெண். பெருத்த குண்டியை பின்னுக்குத் தள்ளி, அதை ஆட்டி ஆட்டி வாயால் ஏதோ சத்தம் வைத்து ஆடுகிறாள்..
அதை கைதட்டி ரசிக்கிறார்கள் ஆண்கள்.. சற்று சங்கடமாய் தான் இருக்கிறது எனக்கு... (அதற்காக கண்களை மூடிக் கொள்வதா.. ச்சீ.. அப்படி எல்லாம் சொல்லாதீர்கள்)
ஆம், நைஜீரியா கோல் அடித்துவிட்டது.
குழந்தையாய் மாறி நிற்கும் வளர்ந்த இம் மனிதர்களை பார்க்கும் போது மகிழ்ச்சியாய் இருக்கிறது.
நானும் அவர்களுக்காய் கைதட்டினேன். மனதுக்கள் இவர்கள் வெல்ல வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறேன்.
நேரம் சற்று போகிறது.. பரியாத மொழியில் ஏதோவெல்லாம் பேசுகிறார்கள்
சந்தோசமாய் போய்க் கொண்டிருக்கிறது நேரம்
திடீர் என ஒரு நைஜீரிய வீரர் சிவப்பு கார்ட் காட்டப்பட்டு வெளியனுப்ப படுகிறார்.
நடுவரின் தீர்ப்பு சரியானதே.. ஆனாலும் ரசிகர்களால் தாங்கமுடியவில்லை
நடுவர் fucking guy என்றும் கறுப்பர்களை வெறுப்பவர் என்றும் அன்பாய் அழைக்கப்படுகிறார். கிரேக்கத்து வீரனும் திட்டுப்படுகிறான்.
அந்த பெண் மட்டும் தலையில் கைவைத்து நிலத்தில் குந்தி ஏதொதோ சொல்லிப் புலம்புகிறாள் தன் மொழியில். அவளின் தலையில் தடவுகிறார்கள் மற்றவர்கள்.. ஆனாலும் பலம்பல் அடங்கவில்லை. பாவமாயிருக்கிறது எனக்கு.
மேலும் சில நிமிடங்கள் நகருகின்றன.. இன்னும் சில மனிதர்கள் வந்து சேர்கிறார்கள். மை ப்றென்ட் என்று என் கையும் குலுக்கப்படுகிறது.. என் நண்பர்களின் பட்டியலில் இன்னும் சிலர்.
இடைவேளை விடப்பட்டிருக்கிறது, இப்போது
அப் பெண் சற்றே ஆசுவாசப்பட்டிருப்பதாய் தெரிகிறது. நடுவரின் தீர்ப்பு சரியானதா பிழையானதா என்று பட்டிமன்றம் சாலமன் பாப்பையாவை நடுவராக வைக்காமலே, நடாத்தப்பட்டு தீர்ப்பு நடுவருக்கு பாதகமானதாகவே அளிக்கப்படுகிறது.
விளையாட்டு தொடங்கிவிட்டது.
நைஜீரியா சிறப்பாக விளையாடுகிறது.. மகிழ்ச்சியில் மனிதர்கள்
திடீர் என்று வைஜீரிய வீரர் கோல் நோக்கி லாவகமாக பந்தை கொண்டு செல்கிறார். ஆரவாரம் வானைப்பிழக்கிறது. டீவீயை நோக்கி சிலர் ஓடுகிறர்ர்கள்.
நூலிழையில் கோல் தப்பிப் போகிறது.
பந்தை தவறவிட்டவன் பரம்பைரை திட்டப்படுகிறது பல மொழிகளால். எனக்கும் அவன் அந்த பந்தை தவற விட்டதை தாங்கமுடியாடமல் தான் இருந்தது. அதே பேச்சாயிருக்கிறது அடுத்த 5 நிமிடங்கள். அந்த கோல் அடித்திருந்தால் வெற்றி நிட்சயம் என்றும், கிரேக்கம் கெலிச்சுப்போயிருக்கும் என்றும் அறிக்கை விடுகிறார்கள்.
அடுத்ததாய் கிரேக்கம் ஒரு கோல் அடிக்கிறது. சோகத்தின் அலறல் அந்த அறையின் முகத்தில் அறையப்படுகிறது. மீண்டும் நிலத்தில் குந்திவிட்டாள் அப் பெண். பலம்பவும் தொடங்கிவிட்டாள்
நேரம் 80 நிமிடங்களை தாண்டிக் கொண்டிருக்க.. அம்மனிதர்களின் பொறுமை காற்றில் பறக்க.. நைஜீரியா நாட்டு மனேஜர் சந்திக்கு இழுக்கப்படுகிறார்.
நாம் ஆபிரிக்கர்கள்.. நமக்கு ஏன் வௌ்ளைகள் மனேஜராக இருக்கவேண்டும் என்று சரித்திர முக்கியம் வாய்ந்த கேள்வி முன்வைக்கப்படுகிறது. அவர்கள் ஒழுங்காய் வேலை செய்ய மாட்டார்கள் என்று பாராட்டப்படுகிறார் சுவீடன் நாட்டு மனிதரொருவர். பலரும் அதை ஆமோதிக்கிறார்கள்
நேரம் 85 நிமிடங்கள்
இன்னொருவர் டீவியைப் பார்த்தபடி.. ஆபிரிக்காவில் விளையாடும் வீரனுக்கு டேய் அந்த மூலைக்கு பந்தைக் குடு என்றபோது பந்து வைத்திருந்தவரும் அதையே செய்ய மனிதர் பெருமையில் பூத்துப் போகிறார். அடுத்த கட்டளையையும் இடுகிறார்.. அது மறுக்கப்படுகிறது.. ஆங்கிலத்தில்பச்சைத் தூசணத்தில் கத்துகிறார்.
அவரின் கட்டளைகள் மிகச் சரி என்றும்.. விளையாடுபவர்கள் களைத்துவிட்டார்கள் என்றும் அவருக்கு ஆறுதல் சொல்கிறார் இன்னொருவர்.
நேரம் 88 நிமிடங்களாதனால் நிம்மதியை இழந்து நகம் கடிக்கிறார் அந்தப் பெண்.
தோளில் கைபோட்டு சோகம் பகிர்கின்றனர் மூவர்
93 நிமிடங்களின் பின் கிரேக்கத்வர்கள் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட
வேறெந்த ஆபிரிக்க நாடுகள் மிச்சமிருக்கின்றன என்ற ஆராயப்பட்டு
”கனா” தான் ஆபிரிக்காவின் மானத்தை காப்பாற்றும் என்றம் எதிர்வு கூறப்படுகிறது.
தேத்தண்ணி ஊற்றப்பட்டு சோகம் குறைக்கப்பட்ட பின்னால் ஓய்ந்து போனார்கள் இவர்கள்.
அடுத்ததாய் இன்னுமொரு மட்ச் தொடங்குகிறது...
பழையபடி தொடங்கிவிட்டார்கள்
மகிழ்ச்சியாய் வாழ...
I like your narration style. Thanks.
ReplyDeleteThanks Arun
ReplyDeleteI thought to write a comment.Oh that was already commented by Arun!.Realy I like your way of style!keep it up!expect more.
ReplyDelete