பூலோகத்தில் (f)பேஸ்புக் காய்ச்சல்

கடந்த சில வருடங்களாக இந்த பேஸ்புக் காய்ச்சல் பூலோகமெங்கும் பரவிவருகிறது. இதற்கு தடுப்பு மருந்து கிடைக்காது போலிருக்கிறது அல்லது தடுப்புமருந்து தயாரிக்க பஞ்சிப்படுகிறார்கள் பூலோகவாசிகள் போலிருக்கிறது எனக்கு.

கடவுளுக்கம் பேஸ்புக் இருக்கிறது என்றால் நம்பவா போகிறீர்கள். (என்னை சில, பலர் நம்புவதில்லை.. அந்த வரிவையில் உங்களையும் இணைத்துவிடுகிறேன்.. இதெல்லாம் அண்ணணுக்கு சகஜமப்பா)

அம்மா சத்தியமாக கடவளுக்கு பேஸ்புக் இருக்கிறது. கோயிலுக்கு போகாமலே புண்ணிணயம் தேடும் சில பக்தகேடிகளும் இணையத்தில் உலாவருகிறார்கள். அவர்கள் தமது இஸ்டதெய்வத்துக்கு அல்லது தமது ஊர் கோயிலுக்கு பேஸ்புக் பக்கத்தை திறந்து விடுவதால் சாமியும் இன்டர் நெட்டில் உலாவருகிறார். (சாமிக்கு வைரஸ் பிடிக்குமா என்றெல்லாம் விசர்க்கேள்விகள் கேக்கப்படாது).

அர்ச்சனையை பேஸ்புக்கில் இருந்து விசா கார்ட் பாவித்து செய்யும் காலம் கனதூரத்தில இல்லை. சர்வமும் இன்னடர்நெட் மயம் ஆகிவிட்டது.

சிறிது நாட்களுக்கு முன் நம்ம ஊர் மட்டக்களப்பில் உள்ள தம்பிலுவில் என்னும் இடத்தில் உள்ள அம்மன் ஆலய உற்சவம்.. தேர் ஊர் உலா வரும் போது பேஸ்புக்இல் நேரடி வர்ணணை நடந்தது.. அம்மனின் ஒரு பக்த கோடி இப்படி எழுதியிருந்தார்..

”தம்பிலுவில் அம்மன் ஊர்வலம் , தற்போது ஆலயத்தில் இருந்து எமது ஊரை நோக்கி செல்கின்றது”
அதற்கு சில பக்கதர்கள் கொமன்ட் பண்ணி புண்ணியம் தேடிக் கொண்டார்கள்

அதற்கு முதல் இப்படியும் எழுதியிருந்தார் அவர்
”தம்பிலுவில் இல் உள்ள ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் தற்போது நடைபெற்று கொண்டிருகின்றது ....
ஞாயிறு ஊர்வலம் .
திங்கள் பொங்கல் , குளிர்த்தி....
அனைவரும் வருக அம்மன் இன் அருள் பெருக”
ஊரில் டக்ரர் பெட்டியில் கட்டப்பட்டு வரும் ஒலி பெருக்கியின் சத்தம் உலகம் முழுவதும் கேக்க வேண்டுமானால் பேஸ்புக் தான் தேவைப்படுகிறது.

இது ஒரு கோயில்.. இப்படி பல கோயில்கள், தேவாலங்கள், மற்றைய மத வழிபாட்டுத்தளங்கள் பேஸ்புக்இல் இருக்கின்றன.
வருங்காலங்களில் இன்டர்நெட் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று நாம் சொல்லிக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நம்ம அம்மாவுக்கு 75 வயது தாண்டிவிட்டது. மனிசியும் இன்டர் நெட்டில். பேஸ்புக் பக்கம் செய்து கொடுத்தால் என்ன என்று யோசிக்கிறேன்.. சில வேளை அவவுக்கு ஏற்கனவே பேஸ்புக் பககம் இருக்கலாம்.. யார் கண்டது?

இந்த நாட்களில் எங்கும் இதே பேச்சாயிருக்கிறது. எனக்கும் அது பரவியுள்ளதை நான் மறுத்தாலும் பேஸ்புக் காட்டிக்குடுத்துவிடும் என்பதால் ஒத்துக்கொள்கிறேன். ஆரம்பத்தில் எனக்கும் இதில் நாட்டமிருக்கவில்லை.. இருந்த நாட்டமும் சிலரின் நாட்டாமைத்தனத்தால் இல்லாது போயிற்று. எனினும் மலேரியா காய்ச்சல் மாதிரி விட்டு விட்டு வந்த படியே தான் இருக்கிறது.

முதலில் தங்கை மட்டும் எனது பேஸ்புக் பக்கத்தில் இருந்தாள் பல நாட்களாக. பின் பொருநாள் வேலை செய்யுமித்து நண்பன், அடுத்து தங்கையின் நண்பன், அதற்கடுத்து பால்ய சினேகம் என்று இருந்தது எனது உலகம் அழகாய். சட்டென்று
நண்பனின் நண்பன்
அவனின் நண்பன்
அவனின் நண்பனின் நண்பன்
இப்படி எனது நட்புவட்டம் நான் விரும்பியோ விரும்பாமலோ அதிகத்து இப்போ 124 நண்பர்களுடன் வாழ்ந்து வருகிறேன். சில நட்புகளையும், சில உறவுகளையும் நண்பர்கள் பட்டியலில் இருந்து அடித்துத்துரத்தியுமிருக்கிறேன். அடாவடித்தனம் பண்ணுபவன் நண்பனில்லை என்பது கருத்து.(தண்ணியடித்துவிட்டு பண்ணும் அடாவடித்தனம் வேறு இது வேறு)

பலர் வந்து பலதையும் கதைப்பார்கள். பலதையும் பரிமாறிக் கொள்கிறார்கள். ஒரு வித பண்டமாற்று தான் இதுவும். நமது கருத்துக்கு அதிகம் கொமன்ட்ஸ் வரும் போது மனம் குதூகலிப்பதையும் மறுப்பதற்கில்லை. புகைப்படங்கள், வீடீயோக்கள், சுட்டிகள் பரிமாறப்படுகின்றன. எனக்கு விரும்பியதை நான் பிரசுரிக்கலாம் அங்கு.. தனிநபரின் பத்திரிகை போல் இயங்குகிறது பேஸ்புக்.

சிலர் ஆயிரக்கணக்கில் நண்பர்கள் வைத்திருக்கிறார்கள். (அதுக்கெல்லாம் ஒரு டலன்ட் வேணுமய்யா). எனது வட்டத்திற்குள் யார் வருவது .என்பதில் மிக அவதானமாக இருக்கிறேன். (நிஜ வாழ்க்யைப்போல் யாரையும் நம்பமுடிவதில்லை இந்த பேஸ்புக்இலும்). சிலர் நட்பாய் இருக்கிறார்கள். உண்மை பேசினால் ”ஊர்ப்புத்தியை காட்டிவிட்டான்” என்று சொல்லி வெட்டிவிடுகிறார்கள். இந்த ”ஊர்ப்புத்தி” என்பதில் எனக்கு ஏற்பு இல்லை... ஊருக்கு புத்தியிருக்கிறதா என்ன...?

எனது பாடசாலைக்கு என்று ஒரு பேஸ்புக் பக்கம் தொடங்கினேன். தகரத்தில் விழுந்து சத்தமெழுப்பும் மாரிகாலத்து மழைத்துளிபோல் சட சட வென ஓரிரு நாளில் 200ஐ தாண்டிவிட்டது நட்புவட்டம். அன்பாய் குசலம் விசாரித்தும், குசும்பு பண்ணியும், விடலைப்பருவத்தை அசைபோட்டபடியும் ஒரே கும்மாளமாயிருக்கிறது அங்கு. அன்புக்குரிய ஆசிரியர்களும் அங்கு வந்திருக்கிறார்கள். சாட் பண்ணுகிறார்கள்.ஏதோ மீண்டும் பாடசாலைக்குள் போன மாதிரியிருக்கிறது மனது. களைத்திருக்கும் மனதுக்கு ஆறுதலாயுமிருக்கிறது. எனது நண்பனொருவன் ஐந்து பிள்ளை பெற்றிருக்கிறான்... தகப்பனாரின் ரெகோர்ட் உடைப்பது என்று சபதம் செய்தொனோ என்னவோ..? இப்படி பல கொசுருத் தவகல்களும் பேஸ்புக்கின் புண்ணியத்தில் கிடைக்கின்றன.

பிறந்தநாள்கள், நிகழ்ச்சி அழைப்புக்கள், என பல பல தேவையான, தேவை இல்லாத விடயங்களும் இருக்கின்றன. சாத்திரமும் பார்க்கிறார்கள். பொன் மொழிகள் சொல்கிறார்கள்...ஒரு பெரிய உலகமே அங்கு இயங்குகிறது.

விளம்பரம் பண்ணுவதற்கு தான் எத்தனை எத்தனை வசதிகள்..எந்த நாடு, எந்த ஊர், என்ன பால், எத்தனை வயது என்று பாகுபடுத்தி அந்ததந்த மக்களை நோக்கி தங்கள் பொருட்களை விளம்பரம செய்கிறார்கள். கடைகள், நிறுவனங்கள், அரச அலுவலகங்கள், ஒலி, ஒளிபரப்பு நிலையங்கள் எல்லாம் இந்த பேஸ்புக் உலகத்துக்குள் வந்திருக்கின்றன.
ஆனால் சிலர் நாங்கள் வலு சீரியசான ஆக்கள் என்று சொல்லி பேஸ் புக் பக்கம் வராமலும் இருக்கிறார்கள்... :-D. எனக்கு அந்த தியரியில் ஏற்பு இல்லை. நான் சீரியஸ் இல்லாதவனாயே இருந்து விட்டு போகிறேன்...

கிட்டடியில் பிராண்ஸ் நாட்டில் பேஸ்புக் அபிமானிகள் கொஞ்சம் அளவுக்கு அதிகமாக (ரூம் போட்டு) யோசித்து, உணர்ச்சிவசப்பட்டு ”உடனடி பார்டி (Instant party)" என்று ஒரு கலாச்சாரத்தை உருவாக்கியதால் பாரீஸ் நகரத்து மேயர் திண்டாடிப் போனாராம். உடனடி பார்டி என்றால் பேஸ்புக் இல் இன்று மாலை 5 மணிக்கு இன்ன இடத்தில் பார்ட்டி என்று எழுதிவிட்டால் இந்த செய்தி உங்களையும், உங்களின் நண்பரையும், அவரின் நண்பரையும் கணப் பொழுதில் போய் சேருகிறது. பலர் குடிதண்ணியுடனும், மற்றத் தண்ணியுடனும் குறிப்பிட்ட இடத்தில் கூட...அவனவன் ஏ.ஆர் தகுமான் ரேஞ்சில் மியூசிக் போட, கஞ்சா விக்கிறவன் கஞ்காவிக்க, கள்ளுவிக்குறவன் தவறனை திறக்க இப்படி ஒரு சந்தோச சாம்ராஜ்ஜியம் உருவாகிறது. அதனால் போலீசுக்கும், ஆட்சியானர்களுக்கும் தலையிடி. எங்கு எப்ப என்ன நடக்கும் என்று தெரியால் திண்டாடிப் போனார்களாம் பாரிஸ் நகரத்து பாதுகாவலர்கள். இறுதியாய் ஒருவழியாய் ”உடனடி பார்டி” க்கு தடை விதித்து சிக்கலை தீர்த்துக் கொண்டதாம் பாரீஸ்.

இன்னொரு இடத்தில் நல்ல காரியத்துக்கு பணம் சேர்த்து உயிரையும் காப்பாற்றியிருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் சந்தித்து கலியாணம்முடித்தவர்களுக்கும் பஞ்சமில்லை. கலியாணம் முடித்து விவாகரத்துப் பெற்றவர்களும் நிறையப் பேர் இருப்பார்கள்.

இப்படி நன்றும் தீதும் அங்கு முண்டு.

பேஸ்புக் குழுமம் என்று ஒரு சுவராசியமான விடயமிருக்கிறது. உங்களுக்கு எது பிடிக்கிறதோ அல்லது பிடிக்கவில்லையோ அதற்கு ஒரு குழுமம் அமைத்து பல சகாக்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்.
உதாரணமாக:
பக்கத்துவீட்டுக்காரனை பிடிக்காதோர் சங்கம்.
காதலித்து தோற்றோர் சங்கம் (நாட்டுக்கு இது ரொம்ப அவசியம்)
பூக்களை விரும்புவோர் சங்கம் என்று சிலரும்

குளிக்காதவர் Of The Day
தத்துவம் சொல்வோர் சங்கம் என்ற சிலரும் உலாவுகிறார்கள்.
தத்துவம் சொல்வோர் சங்கததினுள் எட்டிப்பார்த்தேன். இப்படியும் எழுதியிருந்தார்கள்
என்ன தான் maths ல 100 மார்க்ஸ் எடுத்தாலும் ஓம்லெட் வேணும்ன்னா 0(முட்டை ) தான் எடுக்கணும் விசர்தனமாய் குசும்பு பண்ணும் இவர்களை எனக்குப் ஏதொ பிடித்திருக்கிறது..

இந்த பேஸ்புக் மாதிரி ட்வீட்டர் என்றும் ஒரு காச்சல் பரவிவருகிறது.. உடன்பிறப்பே கவனம்.

அன்புடன்
பேஸ்புக் காச்சலில் இருந்து மீள விரும்பாத
சஞ்சயன் என்னும் நான்.4 comments:

 1. //அர்ச்சனையை பேஸ்புக்கில் இருந்து விசா கார்ட் பாவித்து செய்யும் காலம் கனதூரத்தில இல்லை. சர்வமும் இன்னடர்நெட் மயம் ஆகிவிட்டது.//

  சூப்பர் ஐடியா. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு வெப் பேஜ் ஓபன் பண்ணி, பேபால் அக்கவுன்டும் ஓபன் பண்ணீட்டா எவ்வளவு சௌகரியமா இருக்கும். கடவுள் கண் திறப்பாரா?

  ReplyDelete
 2. நண்பரே உங்களுக்கு என்ன வயதாகிறது?
  என்னை பொருத்தவரைக்கும் , நீங்கள் உங்கள் வலைப்பதிவின் பெயருக்கு ஏற்றா போல் உள்ளிர்கள் ,

  நண்பரே உங்களுக்கு என்ன வயதாகிறது?
  என்னை பொருத்தவரைக்கும் , நீங்கள் உங்கள் வலைப்பதிவின் பெயருக்கு ஏற்றா போல் உள்ளிர்கள் ,

  உங்கள் வலை பதிவும் பார்த்தேன் , அந்த பேஸ்புக்கில் உள்ள அதையும் பார்த்தேன் , எனக்கு விளங்க வில்லை , உங்களை கருத்துக்கள் .
  அவர் அந்த ஆலய நிகழ்வு பற்றி தெரிவித்திருந்தார் . வெளிநாடுகளில் வாழும் எமது மக்கள் , அந்த நேரத்தில் சற்று ஞாபக படுத்தி இருப்பார்கள் , எமது ஊரிலே இந்த நிகழ்வு இடம் பெறுகிறது என .

  அவர் இப்படியான நிகழ்வையே தெரிவித்தார் . தன்னை பற்றி பெருமையாக எதுவும் எழுதவில்லையே ..
  இப்போதெல்லாம் , எதுக்காக ப்ளாக் பயன் படுத்துற என விளங்குதில்ல .
  நான் அங்க போயிருந்தான் , இப்படி செய்தான் அது இது என தன்னை பற்றி பெருமையாக விளம்பரம் செய்கின்றனர் .. இத என்ன என சொல்லுவது?
  அதாவது சிலர் இருகின்றனர் . தான் எதுவும் செய்ய மாட்டார்கள் , வேறு ஒருத்தன் என்ன செய்றான் , என்பதையும் , அதற்கு ஏதவாது ஒரு நோட்டைக் கதை சொல்றதும் , இப்படியே போகுது ... அதுதான் தமிழன் இப்படி இருக்கான் ..

  இப்படியான பதிவுகளை விட்டிட்டு . நல்ல ஒரு காரியம் செய்ய பாருங்கள் . ஐயா

  ReplyDelete
 3. அர்ச்சனையை பேஸ்புக்கில் இருந்து விசா கார்ட் பாவித்து செய்யும் காலம் கனதூரத்தில இல்லை. சர்வமும் இன்னடர்நெட் மயம் ஆகிவிட்டது.//


  வதன நூல் பற்றிய தங்களின் பார்வை அருமை. நகைச்சுவை கலந்து நல்ல விடயங்களைத் தொகுத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் தோழா!

  இது இல்லாத இடமே இனி இல்லைத் தான்.

  ReplyDelete
 4. அன்புடன் அனாமதேய நண்பருக்கு!

  நான் என்ன யாரையும் தாக்கி எழுதுகிறேனா அல்லது அவர் எழுதியது பிழை என்றேனா?
  ஒரு இடத்தில் இப்படி எழுதியிருக்கிறார்கள் என்று தானே எழுதினேன். அதில் என்ன தவறு இருக்கிறது? (விரும்பினால் தர்க்கியுங்கள்)

  வயதுக்கும் பெயருக்கும் உள்ள சம்பந்தம் பற்றிய உங்கள் கருத்துக்குத்துக்கும் நன்றி.

  அன்புடன்
  சஞ்சயன் (விசரன்)

  ReplyDelete

பின்னூட்டங்கள்