ஒஸ்லோ விமான நிலையமும் சுவரில்லாத கதவு நிலையும்




ஒஸ்லோ விமான நிலையத்தில் லக்கேஜ் போடுமிடத்தில் லக்கேஜ் போட்டு, போடிங் டிக்கட் வாங்கி வலு ஆறுதலாக வந்து சேர்ந்தேன் பயணிகளை பரிசோதனை செய்யுமிடத்துக்கு.

இன்று நோர்வேயில் காவல் அல்லது பாதுகாப்புத் துறையில் (போலீஸ் அல்ல) வேலை செய்பவர்கள் ஸ்ரைக் செய்வதால் அதன் தாக்கம் நீண்டிருந்த மனிதர் நிரையில் தெரிந்தது.

எனக்கு பயணிக்கும் போது லக்கேஜ் காவுவது விசரைக்கிளப்பும் விடயம். எனவே முடிந்தளவு பாரங்களைத் தவிர்ப்பதுண்டு நான். எனது தோளில் போடும் பையில் குட்டிக்கணணியையும், சிலுவைராஜ் சரித்திரத்தையும் (நான் வாசித்துக்கொண்டிருக்கும் புத்தகம்), ஒரு தண்ணிப்போத்தலும், சில குளிசைகளுடனும் நிம்மதியாக நின்று கொண்டிருந்தேன்.

எனக்கு முன்னால் தகப்பனின் தோளில் தூங்கிக் கொண்டிருந்தாள் கிட்டத்தட்ட ஒரு வயதும் நிரம்பாத ஒரு நாட்டின் இளவரிசியொருத்தி. அக்குட்டி; முதுகினை தடவியபடியே நின்றிருந்தாள் அந் நாட்டின் மகாராணி.

தூங்கும் குழந்தைகளை உங்கள் அவசரங்களை ஒதுக்கித்தள்ளி வைத்துவிட்டு ஆறுதலாய் ரசியுங்கள். கடவுளுடன் பேசிய சுகமும் அமைதியும் கிடைக்கும். சத்தியமாக.

எங்கள் வரிசையில் நிற்க முடியாமல் நின்று கொண்டிருந்தார் பலமாய் பருத்த உடம்புடைய மனிதரொருவர்.. அவர் மூச்சு விட்டது எனக்குக் கேட்டது.
ஏதோ ஒரு விமானக் கொம்பனி இனிவரும் காலங்களில் குறிப்பிட்ட கிலோவுக்கு கூடுதலாக ஒருவர் இருந்தால் எக்ஸ்ரா ஒவ்வொரு கிலோவுக்கும் ஒரு குறிப்பட்ட கட்டணம் வாங்க திட்டமிட்டிருப்பதாக எங்கோ வாசித்திருந்தது ஞாபகம் வந்தது. உடனே முன்னால் நின்ற மனிதரின் எதிர்கால டிக்கட் விலையை நினைத்துப்பார்த்தேன். தலைசுற்றியது.

ஒரு சிறுவன் குறுக்கே சிரித்தபடியே திரும்பி திரும்பி பார்த்தபடியே ஓடிக்கொண்டிருந்தான். அவன் தந்தை பல்லை நெருமியபடி எங்களிடம் மன்னியுங்கள் என்று சொல்லி வரிசையில் இருந்து விலகி அவனைத் துரத்தினார். எனக்கு நம்ம அப்பர் நம்மள துரத்தியது ஞாபகம் வர புன்னகைத்துக் கொண்டேன்.

வளைந்து வந்து கொண்டிருந்த வரிசையில் காதல் வேகம் கொண்ட இருவர் இடைக்கிடை ஒருவரை ஒருவர் புசித்துக கொண்டிருந்தனர்.. (சத்தியமா நமக்கு எரிச்சல் வரவில்லை) நம்ம பாடசாலை பேஸ்புக்கில் காதல் கவிதை கவிதையாய் எழுதித் தீர்க்கும் தம்பிமார்களை நினைத்துக் கொண்டேன்.. (தம்பிகளா.. நீங்கள் செய்வது தப்பில்லை ராஜா...ஆனால் கடைசியாய் எங்கு வருவீர்கள் என்று அண்ணணுக்குத் நன்றாகவே தெரியுமே)

நாம் நின்றிருந்த வரிசை தீடீர் என கட கட என நகர்ந்து சோதனை பண்ணும் இடத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

எனது மனமெல்லாம் இந்த பருமனான மனிதர் அந்த சோதனை செய்யும் சுவரில்லாத கதவு நிலையினூடாக எப்படிப் போவார் என்று போசித்துக் கொண்டிருந்தது.

அந்த சுவரில்லாத நிலையை எப்ப கண்டாலும் அதை நான் சித்திரகுப்தனின் அலுவலக வாசலாயே நினைத்துக்கொள்வேன். பாவம் செய்யாதவர்களை அந்த சுவரில்லாத நிலை ஒன்றும் சொய்யாது. பாவம் செய்திருந்தீர்களோ துலைந்தீர்கள். திரும்ம திரும்ப சத்தம் போட்டு உங்கள் பாவத்தின் அளவைக் காட்டும் அது. அத்துடன் அரக்கர்களை அழைத்து இவனை உரிந்து பார் என்றும் கட்டளையிடும். அரக்கர்களும் ஒரு மாதிரியாக தடவிப் பார்த்து, இம்சை பண்ணி கடைசியாய் வெளியே அனுப்புவார்கள், எதையாவது தேடி எடுத்து (பாவங்களை) குப்பைக்குள் எறிந்த பின்.

நானும் அகப்பட்டிருக்கிறேன் அரக்கர்களிடம். ஒரு அரக்கியிடம் என்னை அனுப்பிருந்தால் சந்தோசப்பட்டிருப்பேனோ?

பருத்த மனிதரின் பாவ புண்ணியம் அளக்கும் நேரம் வந்தது.. போனார் மனிதர்.... சுவரில்லாத அந்த நிலை விட்டுக் கொடுத்தது போலிருந்தது எனக்கு. அது பீப் பீப் பீப் என்னும் சத்தமும் போட்டது.

மனிதர் பாவம் செய்திருக்கிறார் என்பதால் அரக்கன் அவரை மீண்டும் மீண்டும் இருதடவைகள் அனுப்பினான் சுவரில்லாத நிலையினூடாக. முதலில் சப்பாத்தை கழட்டினான். பின்பு இடுப்புப் பட்டியை கழட்டு என்றான்.. மூன்றாம் முறையும் சத்தம் கேட்க இரண்டு அரக்கர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள்.. எதையோ கையில் வைத்து அந்த மனிதனை அளப்பது போலிருந்தது எனக்கு.. (பாவம் அளக்கும் மெசினோ?)
அந்த மெசினும் அதிருப்தியை காட்டியது.. மனிதர் அளவில்லாத பாவம் செய்திருப்பாரோ? (முல்லைத்தீவில் வேலை செய்தீர்களா என்று கேட்க நினைத்தேன் அவரிடம்)

அழைத்துப் போயினர் அவரை. திரைச்சீலை மூடப்பட்டது. எனது கற்பனையில் அவரை எண்ணைக் கொப்பறையில் போடுவது போல இருந்தது... ஆனாலும் மனிதர் சிரித்தபடியே பாவங்களை கழுவி வெளிவந்தார்.. சந்தோசமாக இருந்தது எனக்கு.

இன்று நான் பாவம் செய்திருக்கவில்லை. சுவரில்லாத கழட்டி வைத்த நிலை நான் கடந்து வந்த போது... அடுத்தமுறை பார்ப்போம் என்று பாவமளக்கும் மெசின் கறுவியது கேட்டது. நக்கலாய் அதைப் பார்த்துப் புன்னகைத்தேன்.

நிம்மதியாய் புத்தகக் கடை, டியூட்டீ ப்றீ கடை என்று அலைய நினைத்தேன்.. இயற்கை.. மகனே நீர் முட்டி விட்டது வெளியேற்று என்று கட்டளையிட்டது. கழிப்பறை புகுந்து அப்பாடா என்று நிம்மதியாய் மூச்சு விடும் போது அசரீரி போல் கேட்டது எனது பெயர் தலைக்கு மேல்.

என்னடா கடவுள் கக்கூசுக்குள் வந்திருக்கிறாரோ என்று போசிக்க நேரமிருக்கவில்லை மீண்டும் சஞ்சயன் செல்வமாணிக்கம் என்னும் என்பெயரை "சங்ன்சசியன் செலுவமநிக்கும்" என்று அநாவசியமாக கொலை செய்தார்கள்.. அப்ப தான் புரிந்தது இது கடவுள் இல்லை விமானநிலைய கட்டுப்பாட்டு நிலையம் என்று.

நம்மளை உடனே வரும்படி கூறினார்கள். அவசர அவசரமாய் வந்த வேலை முடித்து, கைகழுவி, சுடுகாற்றில் கை காயவைத்து அவசர அவசரமாய் வெளிவந்தேன். மனசுக்குள் ஒரு பயம் ஓடிவந்து ஒட்டிக் கொண்டது.. அதை விளக்குவதற்கு ஒரு சின்னக்கதை சொல்ல வேண்டும்.

எனது தலைமயிரை அலங்கரிக்கும் பொறுப்பை (யாரது நக்கலாய் தலைமயிரா உனக்கா என்று முணுமுணுப்பது.. வேணா வலிக்கும்..) ஒரு பாலஸ்தீன நாட்டு மனிதரிடம் விட்டிருக்கிறேன். (நாம இன்டர்நசனல் ஆளய்யா). அவரின் பெயர் ஈட்ரீஸ் உசாமா (Idris Osama) ஒபாமா இல்ல.. உசாமா.

நான் உசாமாவுடன் தொடர்பு வைத்திருப்பதை கண்டு பிடித்து அதை நம்ம பெரிய உசாமாவுடன் கலந்து நம்மளையும் ஒரு பெரீரீரீய டெர்ரறிஸ்டாக நினைத்துவிட்டார்களோ என்று ஒரு கலக்கமாய் இருந்தது.

மனதுக்குள் ஐயா! தமிழன் இப்ப டெர்ரர்றிஸ் என்ற பதத்தில் இருந்து ஒதுக்கப்பட்டுவிட்டான் என்று சொல்லித்தப்பலாம் என்று மனம் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்து.

மீண்டும் மீண்டும் எனது பெயரைச் சொல்லி உடனே கேட் 50க்கு போ.. கேட் கதவு மூடப்படடுகிறது என்று அறிவித்தார்கள். என்னடா விமானம் கிளம்ப இன்னும் ஒரு மணிநேரம் இருக்கிறதே ஏன் இப்படிப் பறக்கிறார்கள் என்று யோசித்தேன். திடீர் என ஒரு சந்தேகம் வர சேட் பொக்கட்டில் இருந்த போர்டிங் கார்ட் ஐ எடுத்துப் பார்த்தேன்.. ஐயோ! விமானம் புறப்பட இன்னும் 15 நிமிடங்களே இருந்தது.

நம்ம ஞாபகசக்தியைப் பற்றி நோர்வேயில் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். ஒரு குசும்புக்கார நண்பர் என் பெயரை கஜனி என்று மாற்றி வைத்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

கிழிஞ்சுது போ என்று சொல்லிக்கொண்டு தோளில் போட்ட பையுடன் ஓடத் தொடங்கினேன்.
கேட் 50 கண்ணில் தெரியவேயில்லை. 30, 31, 32, தாண்டிக் கொண்டிருந்தேன் களைத்து வாயில் நுரைதள்ளும் வண்டில் மாடு போல
மூச்சு விட்டபடி
இதயத்துடிப்பு 150 தாண்ட
வேர்த்து ஒழுக

பொறுங்கய்யா .. கொஞ்சம் பொறுங்க என்று மனதுக்குள் கத்தியபடி ஓடி வந்து கொண்டிருந்தேன்.

எல்வோரும் என்னையே பார்ப்பது போலிருந்து..
அதுல என்ன பிழை? சுப்பர் ஸ்டார் ஓடினால் எல்லோரும் பார்ப்பாங்க தானே ஹி..ஹி
(யாரது குனிந்து கல்லு தேடுறது.. வேணாம் ராஜா.. அண்ணண் பாவமில)

50 தூரத்தில் தெரிந்தது. அதற்கு முன்னால் ஒரு கூட்டுககுள் போலீசும் குந்தியிருந்தது. (இவனுக்கும் நம்ம சிகையலங்கார நண்பரை தெரிந்திருக்குமோ?)
என்ன இப்படி ஓடி வருகிறாய் லண்டனுக்கு ஓடியா போகப்போகிறாய் என்றார் நக்கலாய் போலீஸ் அதிகாரி.
சிரித்து வைத்தேன் பெயருக்காய்.
பாஸ்போட்ஐ வாங்கிப் பார்த்தார்..
என்னையும் தான்.. வடிவாகப் பார்த்தார்
கலியாணம் "கிலி"யாணம் ஏதும் பேசப்போகிறாறோ?..
(நம்ம பர்சனாலிடி அப்படி... சரி சரி கல்லைத் தூக்காதீர்கள்.. நானே அடங்கிக்கொள்கிறேன்... சே..உண்மையைக் கூட கதைக்க விடுகிறார்கள் இல்லை.. எரிச்சலாயிருக்குமோ?)

சரி போ.. என்றார்...
நன்றி ஒன்றை அவருக்கு கொடுத்து 50வது கேட்டை நெருங்கினேன்.

காதலனைக் கண்ட காதலி போல் வா வா உனக்காகத் தான் காத்திருக்கிறேன் என்றாள் குந்தியிருந்தவள் (ஆகா! என்றார் வடிவேலு அண்ணண் காதுக்குள்)

ஆனால் மனதுக்கள் "கறுப்புச் சனியன் எங்கேயோ வாய்பார்த்திருந்துவிட்டு லேட்டா வந்து என் கழுத்தை அறுக்கிறாய்” என்று முணுமுணுப்பது தெளிவாய் கேட்டது.

விமானத்தில் இருவருக்கு நடுவில் இடம் கிடைத்தது.. அதில் ஒருவர் தானாகவே நான் நடுசீட்டில் இருக்கவா என்றார். ஓ தாராளமாய் என்றேன்.

கதிரையில் இருந்து, என்னை ஆசுவாசப்படுத்தி, கொண்டு வந்த சிலுவைராஜ் சரித்திரம் என்னும் புத்தகத்தை எடுத்து விரித்தேன்.. சிலுவை தனது நண்பர்களுடன் களவெடுக்கப் போய் தனது வாத்தியாரிடம் மாட்டுப்பட்டு முளித்துக்கொண்டிருந்தான். மனதில் பால்ய காலத்து நினைவுகள் வந்து போயின. நானும் தேங்காய் களவெடுத்து மாட்டிய கதையொன்றிருக்கிறது.. (பிறகு சொல்கிறேன்)

வெளியில் விமானம் மேகங்களை மெதுவாய்த் தடவிக்கொண்டிருந்தது.

.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்