பெரியவருக்கும், மற்றும் அனைவருக்கும் எனது வணக்கங்கள்!

எங்கள் பேராசானை கௌரவித்து நடாத்தப்பட்ட விழாவின் போது நான் பகிர்ந்து கொண்ட அவர் பற்றிய ஞாபகங்கள்.
பார்க்க
www.facebook.com/mccbatticaloa
...............................................
எங்கள் புனிதப் பூமியில் எங்கள் பேரன்பு மிக்க ஆசானுக்கு பாராட்டு விழா.


தூரமாய் பனிவிளையும் பூமியில் இருந்து வாழ்த்தாமல்
அருகிலமர்ந்து
அவர் கைபிடித்து
வாழ்வை வளமாக்கியவரை
வாழத்தி வணங்க
அருள் புரிந்த இறைவனுக்கும் என் நன்றிகள்.


காட்மன் மண்டபம்... எனது போதிமரங்களில் முக்கியமானது.


இதன் பெருமை எம் பாடசாலையில் படித்த அனைவருக்கும் நன்றே ஞாபகமிருக்கும். எறும்புகள் போல் வரிசை வரிசையாய் ஒவ்வொரு திங்களும் நாம் வந்ததும்.. சல சல வென்று எம்மை மறந்து பேசிக் கொண்டிருக்கும் போது
ஒரு மந்திரவாதி உள்நுளைந்து எம்மை ஊமையாக்கிவிடுவது போலிருக்கும் பெருமைக்குரிய எமது பிரின்ஸ்சேர் காட்மன் ஹோலுக்குள் நுளையும் போது.


பசுமையான நினைவுகள் இவை.


இவரின் ”அடி” பற்றி பலரும் பேசுகிறார்கள் ஆனால் அடிக்காமலும் போதிக்க முடியும் அவரால்.


நான் இந்த மனிதரிடம் இருந்து என்னத்தை, எப்படி கற்றுக் கொண்டேன் என்பதையும் இந்த பெருமைக்குரியவர் பற்றிய சில நகைச்சுவையான சம்பவங்கயையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.


இந்த மனிதருக்கும் எனக்குமான உறவு 34 வருடங்களுக்கு முன்னானது.


என்னையும் ஓரளவு மனிதனாக்கியதில் இவருக்கும், புண்ணியமூர்த்தி சேருக்கும் பெரும் பங்குண்டு.
வழிதவறிய போதெல்லாம் ஒருவர் கன்னத்தை மெதுவாய்த் தடவி விடுவார்.. மற்றவர் சத்தமாய் பேசுவார்.


நமக்கு கணக்குப் பாடம் என்றால் ஒரு மாதிரித்தான் அந்தக் காலத்தில். ஒரு முறை செல்வகனேசன் சேர் எனது தகுதிக்கு அதிகமாக 17 மார்கஸ் போட்டார். நமக்கு பாடசாலையில் மட்டுமல்ல வீட்டிலும் கண்டிப்பு அதிகமாய் இருந்த காலம் அது. எனது அப்பா ஒரு போலீஸ் அதிகாரி. நம்மளையும் ஒரு கள்ளன் என்று நினைத்தாரோ என்னவோ.. அடி தாறு மாறாய் விழும்.
ரிப்போட் வீட்டில் கொடுத்து அப்பாவின் சைன் வாங்கிவரவேண்டும் என்பது பெரியவரின் கட்டளை. 70 மேல் எடுக்காட்டி வீட்ட வராதே என்பது மற்றவர் கட்டளை.
17 மார்க்ஸ் உடன் வீட்டில ரிப்போட்டை கொடுப்பது தற்கொலைக்குச் சமம்.
மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் அடி மாதிரி ஒரு பக்கம் பின்ஸ் சேர்.. மற்றப்பக்கம் செல்வமாணிக்கத்தார்..
எப்படி தப்பலாம் என்று பலமாய் போசித்தேன்.. இவர்களிடம் மாட்டுப்பட்டு சாவதை விட வீட்டை விட்டு ஓடலாம் போலிருந்தது.
எப்படித் தப்பலாம் என்று யோசித்த போது ஒரு புதிய ஐடியாவும் கிடைத்தது.
மெதுவாய் ஒரு பேனை எடுத்து 17 ஐ 77 என் மாற்றினேன். 12 வயதில் கள்ள வேலை ஒழுங்காக செய்ய வராது தானே..
தேவைக்கு அதிகமாக 7 என்பதை அமத்தி எழுதியிருந்ததை அப்பா கண்டார். என்னடா மாத்தியிருக்கிற மாதிரியிருக்கு என்றார்
நான் இல்யே என்றேன் அப்பாவியாய்.
போலீஸ் மூளையை பாவித்து எல்லா பாடங்களினதும் கூட்டுத் தொகையைப் பார்த்தார்.. அது 60 ஆல் பிழைத்தது..
பிறகு என்ன நடந்தது என்பது.. ஒரு சோகமான கதை.
அப்பா அடித்ததோடு விடிருந்தால் சந்தோசப்பட்டிருப்பேன. பொறு, நான் பிரின்ஸ்சேரிட்ட சொல்லுறன் என்று சொன்னார். அவர் அப்படிச் சொன்னதால் விடுமுறை முழுவதும் என்னால் நிம்மதியாய் விளையாட முடியவில்லை. பிரின்சேர் எனது சொக்கையை தடவுவது போலெல்லாம் கனவு வந்தது. தினமும் உயிர் போய் வந்தது.
லீவு முடிந்து பாடசாலை தொடஙகிய போது பிரின்சேருக்கு ஒரு கடிதம் போட்டார் அப்பா. ஒரு நாள் மதியம் போல் இன்விடேசன் வந்தது officeஇல் இருந்து. செல்லராஜா அண்ணண் தான் இன்விடேசனை கொண்டு வந்தார். நமக்கு இப்பவே செத்தால் என்ன என்ற மாதிரி இருந்தது.
ஒப்பிஸ் வாசலில் நிற்கிறேன்.
கை நடுங்குது..
கால் நடுங்குது..
இதயத் துடிப்பு வெளியில் கேட்டது...
தொண்டை வறன்டது,
கண் இருண்டது.


எனக்குப் பிறகு வந்தவனெல்லாரையும் உள்ளே கூப்பிட்டு அறைந்து அனுப்புகிறார் பெரியவர். நம்மளை மட்டும் கூப்பிடவே இல்லை.
கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்தின் பின் சஞ்சயன் நாளைக்கு மத்தியானம் வா என்றார் என்னைப் பார்க்காமலே
சரி சேர் என்று சொல்லிப் போனேன். அன்றைய தினம் எனக்கு நித்திரை வரவில்லை. இப்படி நாலு நாட்கள் என்னை அழைப்பதும் திருப்பி அனுப்புவதுமாய் இருந்தார் சேர். உயிர் போய் போய் வந்தது எனக்கு. ஐந்தாவது நாள் மாலை தனது வீட்டுக்கு வரக் கட்டளையிட்டார்.


நானும் போய் நின்றேன். வெளியில் வந்து உட்கார்ந்து மிகவும் அமைதியாய் கதைத்தார். என்னடா நாலு நாளும் உயிர் போயிருக்குமே என்றார் எல்லாவற்றையும் நேரில் பார்த்தவர் போல்.
பின்பு, மகன் களவு செய்யக்கூடாது என்று தொடங்கி கனக்க கதைகள் சொன்னார். கடைசியாhய் போய் உன்ட மனச்சாட்சிய கேள் நீ செய்தது சரியா என்றார். மனிதர் கொல்லப் போகிறார் என்று எதிர் பார்த்துப் போன எனக்கு அவர் அடிக்காமல் விட்டது பெரிய ஆச்சரியமாய் இருந்தது.
அன்றிரவு எனக்கு ஒருவித ஞானம் பிறந்திருந்தது.
அன்றில் இருந்து இன்று வரை களவு மூளை என்னிடம் வருவதேயில்லை. அப்படி வந்தாலும் அதை கொல்லும் வழி கற்றிருக்கிறேன்.. இவரால்.


வாழ்க்கையில் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை அறிவித்தவரும் நம்மட சேர் தான்.


நாம் ஹொஸ்டலில் வாழ்திருந்த காலம் அது..
77, 78ம் ஆண்டுகளாயிருக்கலாம், மூட்டைப் புச்சினளின் தொல்லை தாங்க ஏலாமல் இருந்தது.
ஒரு வெள்ளி இரவு வந்தார் எல்லோரையும் அழைத்தார். நாளையுடன் மூட்டை இருக்காதொன்றார். என்ன நம்ம சேர் ஜோக் அடிக்கிறாரோ என்று யோசித்தேன்.
நாளை காலை பாய், கட்டில்கள், பெட்சீட் எல்லாம் வெளியில் கொண்டு வரவேண்டும் என்றும் தான் நாளை காலை 8 மணிக்கு வருவதாயும் சொல்லிப்போனார்.
அந்த சனிக்கிழமை மூட்டைப்புச்சிகளுக்கு பயங்கரமாய் விடிந்தது.
மருந்து அடித்தார்.
இரும்பு பிரஸ் மாதிரி ஒன்றால் முட்டைகளை கிளீன் பண்ணிணார்,
சுடுதண்ணி காச்சி காச்சி ஊற்றினோம்.
பாய்களை சுருட்டி நிலத்தில் அடிக்க கொட்டுண்டு ஓடிய மூட்டைகளை செருப்பால் மிதித்து இழுத்துக் கொன்றோம்..
பெட்சீட் கழுவினோம்
சேர்.. எல்லோரையும் கலைத்து கலைத்து வேலைவாங்கினார்.
அன்றுடன் ஒழிந்தது மூட்டையின் தொல்லை
ஒன்றாய்ச் சேர்ந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை நான் அறிந்தது இங்கு தான்.


நீதி என்பது எல்லோருக்கும் சமம் என்பதையும் இவர் தான் கற்பித்தார். ராஜன் செல்வநாயகத்தின் மகனின் கதை இது.
நாம் மாணவர் தலைவர்களாக உலாவந்த காலத்தில்
ராஜன் செல்லநாயகத்தின் மகன் தினமும் இடைவேளையின் போது
வெளியில் போய் வருவது தெரியவர மெதுவாய் சேரின் காதில் போட்டு வைத்தேன்.
அடுத்த நாள் இன்னொருத்தனை வேவு பார்க்க அனுப்பி செய்தியை உறுதிப்படுத்திக் கொண்டார்.
பிறகு என்னையும், வேவு பார்க்க போனவனயும் (ராஜ்மேனன் என்று நினைக்கிறேன்) அழைத்து ராஜன் செல்லநாயகத்தின் மகனை அழைத்து வரச் சொல்கிறார்.
நாமும் அவனை அழைத்து வருகிறோம்..
அவன் வந்தவுடன் அண்ணண்மார் நீ வெளியில போறாய் என்று சொல்கிறார்கள் உண்மையா என்றார்.
அவனோ பரிதாபமாய் முகத்தை வைத்துக் கொண்டு இல்ல சேர் என்றான்.
சரி நீ போ என்றார் அவனைப் பார்த்து. எனக்கு அவன் இலகுவாய் தப்பியது கோபத்தை ஏற்படுத்தியது
அவரின் கந்தோரை விட்டு அவன் போகும் வரை சற்றே பொறுத்தவர்
ராஜன் செல்லநாயகத்தின் மகனை மிகவும் அன்பாக கூப்பிட்டு மிக பாசமாய் அப்பாவை பற்றி, அம்மா பற்றி, அவங்கட புதுக் கார் பற்றியெல்லாம விசாரித்து விட்டு சொன்னார்..
மகன்.....நாளைக்கு நீ வெளியில போகேக்க சப்பாத்து போட்டுட்டு போங்க
இல்லாட்டி அப்பா எனக்கு பேசுவார் என்று
ஆகா.. மனிசன் கொக்கி போடுது என்பது அப்ப தான் எனக்கு புரிந்தது
இல்ல சேர் நான் சப்பாத்தோட தான் போற நான் என்றான் கள்ளன்.
எம்மை பார்த்து வெற்றிச்சிரிப்பு சிரித்தவர் மெதுவாய் எழும்பி கள்ளனுக்கு ரெண்டு அறை விட்டார்
பிறகு ராஜன் செல்லநாயகத்துக்கு போன் போட்டு உன்ட பெடியன் ஒழுங்கா இருக்காட்டி வெளிய கலைச்சுப்போடுவன் என்றார் ஆங்கிலத்தில்...


டிசிப்ளின் என்பதற்கு எனது டிக்சனரியில் இன்னொரு பெயர் இருக்கிறது.....அது பிரின்ஸ் சேர்..


அது பற்றிய ஒரு கதை


நாம் விடுதியில் இருந்த காலத்தில் வெள்ளிக் கிழமைகளில் ஆனைப்பந்தி கோயிலுக்குப் போவோம். எம்மை அழைத்துப் செல்பவர்களில் வேணு கோபால் அண்ணண் முக்கியமானவர்.
அவர் அப்ப ப்ரீபெக்ட்
நாம் கோயிலில் இருந்து திரும்பும் போது எமக்கு முன்னால் வின்சன்ட் ஹொஸ்டலில் தங்கியிருக்கும் அக்காமாரும் எமக்கு முன்னால் வரிசையில் போவார்கள்.


வேணு அண்ணண் வயதுக் கோளாரால், நாம் ஹோஸ்டலுக்குள் திரும்பும் போது..
அக்காவ கொண்டுபோய் விடுறதோ எண்டு கேளுங்கோடா என்பார் எம்முடன் வரும் சிறுவர்களிடம் அக்காமாரும் சிரித்துவிட்டு போவார்கள்.


வேணு அண்ணணின் கஸ்டகாலம் யாரோ இதைப்பற்றி பெரியவரிடம் சொல்ல..
ஒரு வெள்ளிக்கிழமை ஹொஸ்டல் மதிலுக்கு பின்னால் ஒளிந்திருந்தார்.
வேணு அண்ணணும் அக்காமாரை கொண்டுபோய் விடுறதோ என்று நக்கலாய் கேட்க


வேணுகோபால்! அவங்களுக்கு வழி தெரியும் போக? நீங்க இங்கால வாங்க என்றார். என்ட பள்ளீல உன்ன மாதிரி ஒரு காவாலி என்று சொல்லிச் சொல்லி அடித்தார். அதற்குப் பிறகு வேணு அண்ணண் வின்சன்ட் பக்கம் தலைவைத்துப் படுப்பதில்லை.


சிரமதானத்தின் வியர்வை இனிக்கும் என்னும் இரகசியம் கற்பித்தவரும் இவர் தான்.
எத்தனை எத்தனை சிரமதானங்கள் செய்திருப்போம் சேரின் தலைமையில். ரோட்டில் குப்பை துப்பரவு செய்தலில் இருந்து மாந்தீவு தொழுநோயாளர் வைத்தியசாலை வரை சிரமதானம் செய்திருக்கிறோம்.
ஒரு சமுதாயத்தின் அடிப்படையே பொது நலம் என்பதையும் இவர் தான் கற்பித்தார் எனக்கு


நகைச்சுவையுனர்வையம் கற்பித்தது அவர் தான்
எங்களுடன் படித்த ரமேஸ் எதுக்கெடுத்தலும் ஒரு "டக்" போட்டுத்தான் கதைப்பான்.. டக் எண்டு வாறன். டக் எண்டு போறன். இப்படி ஏகப்பட்ட டக் போடுவான். ஒரு நாள் ஆங்கில வகுப்பு நடக்கிறது... பிரின்ஸ் சேர் ரமேஸ்ஐ எதையோ வாசிக்கச் சொல்ல. ஓம் சேர் டக்கெண்டு வாசிக்கிறன் என்றான்... மனிதர் கரும்பலனையில் duck என்று எழுதி இனி இது தான் உனக்கு பெயர் என்றார். அவன் சொன்ன டக் வேற இந்தாள் சொன்ன டக் வேற.. அனறிலிருந்து இன்று வரை ரமேஸ் என்றும் பெயர் மறக்கடிக்கப்பட்டு டக் என்று அழைக்கப்படுகிறான்
இப்படி குசும்பு வேலையும் செய்வார்..


1984. கள்ளனுக்கு பொலீஸ் வேல குடுக்குற மாதிரி எனக்கு சீனியா பீரீபெக்ட பதவியை தூக்கித் தந்தார்.
சீனியா ப்ரீபெக்ட் என்றால் கேக்கவா வேனும். சென்றல்ல சீணியர் ப்ரீபெக்ட் என்றால் மற்றைய பள்ளிக் கூடஙகளில் இருந்து விளையாட்டப் போட்டிக்கு, வேறு நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு வரும். கெப்பர் தலைக்கேறியது எனக்கு. சிறுசளை வெருட்டித் திரிந்தேன். அட்டகாசம் கொஞ்சம் கூடுலாக இருந்தது. சேர் இதை கவனித்திருக்கவேண்டும்.. வாழ்க்கையிலேயே மறக்க முடியா அதிர்ச்சி வைத்தியம் தந்தார் ஒரு நாள்.
ஒரு திங்கட் கிழமை.. அசம்பிளி தொடங்க முதல் சேர் வருவதை கவனிக்காமல் பலமாய் கதைத்துச் சிரித்ததை கண்டார் சேர்
இதைக் கண்டுவிட்டு காணாதது மாதிப் போய் அசம்பிளியை துடங்கினார்.
பிறகு இந்த பள்ளீல எல்லாருக்கும் ஒரே ரூல்ஸ் தான் என்றும் இப்ப நான் வரும் போது ப்ரீபெக்ட் அண்ணண் கதைத்துக் கொண்டிருந்தார் என்றும்
மற்றவர்களுக்கு முன்மாதிரியாய் இருக்கவேண்டியவர் இப்படி செய்வது பிழை என்றும் சொல்லி அப்ப அந்த அண்ணண் இந்த மேசையில ஏறப் போறார் நீங்கள் வடிவாகப் பார்க்கலாம் அவரை என்றார் சொல்லி என்று கீழே இருந்த மேவையகை; காட்டினார்.
நான் தலை குனிந்தபடியே ஏறி நின்றேன் அசம்பிளி முடியும் வரை.
வாழ்வில் நான் மறக்க விரும்பாத நாட்களில் அதுவும் ஒரு ஒன்று.


பதவி வரும் போது பணிவு வரவேண்டும் என்பதை மனிதர் எனக்கு உணர்த்திய விதம் என்றைக்கும் மறக்காது.
பல பொறுப்பான பதவிகள் வகித்திருக்கிறேன்.. பாராட்டுக்களும் கிடைத்திருக்கின்றன.. அவற்றிற்கெல்லாம் எனது மத்திய கல்லூரியும் இந்தப் பெரிய மனிதருமே காரணம்.


இறுதியாய்


சில நாட்களுக்கு முன் தொலைபேசியில் உரையாடிய போது சொன்னார்.. டேய் நீங்கள் செய்யும் உதவிகளை என்னால திருப்பிச் செய்ய முடியாது, என்னைக் கடனாளி ஆக்குகிறீர்கள் என்று.


அவருக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது இது தான்
கடனாளி நீங்கள் இல்லை.. நாங்கள் தான் கடனாளிகள்..
என்றென்றும்.இரக்கமில்லாத தெய்வத்தின் குழந்தைஊருக்கு போகும் சந்தோசத்தில் விமான நிலைய பரிசோதனைகள், கட்டுப்பாடுகள் எல்லாம் முடித்து விமானத்தினுள் ஏறி 30 சீ என்னும் இருக்கையை தேடிப்பிடித்து இருக்கையின் மேலிருந்த பகுதியில தோள்பையை வைக்க முயற்சிக்கும் போது ஹாய் என ஆங்கிலத்தில் யாரோ சொல்வது கேட்டு கண்களை குரல்வந்த திசை நோக்கித் திருப்பினேன்.

என்னைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தாள் ஓரு சிறுமி....
அமைதியே உருவான சாந்தமான அழகிய முகம்
தோளளவு தலைமயிர். அது சுருண்டு அவள் தோளில் வழிந்துகொன்டிருந்தது.
பார்த்துதும் புரிந்தது இலங்கைப் பெற்றோர்களின் குழந்தை என
தாயுடன் வந்திருந்தாள்
வயது 8 அ;லலது 9 தான். அதற்கு அதிகமாயோ, குறைவாயோ இருக்க சந்தர்ப்பம் இல்லை.

என்னைப்பார்த்து ஹாய் என்றாள் மீண்டும்; புன்னகைத்த படியே
என்னையறியாமலே ஹாய் என்றது வாய்
உனக்கு என்ன பெயர் என்றாள் பெரிய மனிசி போல்
சற்றே தனவுவோம் என்று நினைத்து
என் பெயர் என்னவாய் இருக்கும் என்று நீயெ சொல் என்றேன்
தாடையில் விரலால் தட்டியபடியே போசித்தவள்
தெரியாது என்றாள் ஆங்கிலத்தில்

அவளின் தாயோ எமது சம்பாசனையை விரும்பாதவள் போலிருந்தாள்
தாயின் முகத்தில் ஏதோ ஒரு வித அசௌகரீயம் தெரிந்தது
மனம் எச்சரிக்கை மணியடித்ததால் அக் குழந்தையை பார்த்து புன்னகைத்தபடியே இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.

அவள் இப்போது, என்னருகில் இருந்த பெண்ணை ஹாய் என்றழைத்து பெயர் கேட்டுக் கொண்டிருந்தாள். அம்மனிசியும் அவளின் கேள்விகளுக்கு பதிளளிக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

டீவியை முடுக்கினேன்..சிங்களப் படமொன்றில் மனம் லயிக்கத்தொடங்கயது.
அடகு வைத்த குடும்பத்தின் காணியை மீட்பதற்காய் கொழும்பு சென்று வேலை செயயும் கதாநாயகன்... அவன் குடும்பம், அவனின் ஊமைத்தங்கை, அடவு பிடித்த கிராமத்து முதலாளி என கதை நகர்ந்து கொண்டிருந்தது. (அமைதியாய் ஆர்ப்பாட்டமின்றி படமாககி;யிருந்தனர்).. இறுதியில் முதலாளியின் உயிரைக் காப்பாற்றுகிறான் கதாநாயகன்.. அதற்கு நன்றிக்கடனாய் உறுதியை ஒப்படைக்கிறார் முதலாளி என படம் முடிந்து கொண்டிருக்கும் போது பின் இருக்கையில் இருந்து சத்தம் வந்தது..

அழுதாள், ஆர்ப்பாட்டம் பண்ணினாள் அச் சிறுமி. தாயோ உஷ் உஷ் என அவளை அதட்டிக் கொண்டிருந்தாள். ஆழுகை பெரிதாகி எனது இருக்கையை உலுப்பத் தொடங்கினாள் அச் சிறுமி. தன் பலம் கொண்டளவு ஆட்டினாள். நான் ஆடிக் கொண்டிருந்தேன். பேயாட்டம் ஆட்டினாள். திடீர் என்று அடங்கி அமைதியானாள்.
மனம் ஏதோ அச்சிறுமியையெ சுற்றிவந்தது...

தீடீர் என தன்னைக்கடந்து போன விமானப்பணிப்பெண்ணிடம் தனக்குப் பசிக்கிறது என்றாள் ஆங்கிலத்தில். அவளும் உனக்கு என்ன வேண்டும் என்ற போது அவள் பதில் சொல்லவில்லை. தாயோ சும்மாயிரு என்று சிறுமியை அடக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். விமானப் பணிப்பெண் உணவு கொணர்ந்து கொடுத்தாள் தாய் நன்றி எனச் சொன்னது கேட்டது எனக்கு.

அமைதியாய் சாப்பிட்டாள் பின்பு திடீர் என மீண்டுமொரு முறை ஆர்ப்பாட்டம் பண்ணி ஓய்ந்தாள்.
என்னுடன் கொண்டுவந்திருந்த சிலுவைராஜ் சரித்திரம் வாசிக்கத் தொடங்கினேன் மனம் அதில் லயிக்க மறுத்தது. எனது ஐம்புலன்களில் சில எனது இருக்கைக்கு பின்னால் இருக்கும் சிறுமியின் நடவடிக்கைகளையே கவனித்துக் கொண்டிருந்தன.

தாய் பெரும்பாடுபட்டுக்கொண்டிருந்தாள் அவளைக் கட்டுப்படுத்த. மாமா அடிப்பார் என்று சொன்னதும் கேட்டது.. புன்னகைத்துக் கொண்டேன்.
உணவு பரிமாறினார்கள்.. நான் அதை விழுங்கி முடிய முன் மீண்டுமொருமுறை உரு வந்து போனது அச் சிறுமியிடம். சற்று நேரத்தில் இடத்தை விட்டு எழும்பியவள் பெரிய மனிசி போர் நடந்து போய் விமானப் பணிப்பெண்ணிடம் ஏதோ கேட்டாள்... அவளுக்கு இவளை கவனிக்க நேரமிருக்கவில்லை. திரும்பி வந்து கொண்டிருந்தாள சிறுமி.

ஒரு குழந்தையைக் கண்டதும் சற்றே தயங்கியவள் குழந்தையுடன் ஏதோ விளையாடினாள். அதன் பின் தனது இருக்கையில் வந்தமர்ந்து தாயுடன் ஏதோ தர்க்கப்பட்டாள், ஆங்கிலத்தில்.
வார்த்தைகள் தெளிவாய் இருக்கவில்லை
சம்பந்தமில்லா வார்த்தைகளை கோர்த்து வசனமாக்கிக் கொண்டிருந்தாள்
தாய்க்கு அவை புரிந்தன போலிருந்தது
"படு" என்று தாய் சொன்னபோது தான் புரிந்தது
அவர்கள் தமிழர்கள் என்று.

அவள் அடங்குவதாய் இல்லை. அடிக்கடி கத்திக் கொண்டிருந்தாள் அல்லது பெரிதாய் அழுது தீர்த்தாள். பலரும் முகம் சுழித்தனர் விமானத்தின் அமைதி அவளிலேயே தங்கியிருந்தது. தாய் கட்டப்படுத்த முயற்சித்தாள். தாயின் கட்டுப்பாட்டை அவள் கவனித்ததாய் தெரிவில்லை.

உதவி.. உதவி!
என்னை விடு
தனிமையில் விடு
போகப் போகிறேன
உதவி உதவி
என்னை விடு
....
.......;
என்றாள் அச் சிறுமி ஆங்கிலத்தில்

எனக்கு அது கவிதை போலிருந்தது. தன் வலியைத் தான இப்படிக் கூறுகிறாளோ என்று யோசித்தேன்.

அலுத்திருக்குமோ அவளுக்கு வாழ்கை, அவளின் உலகத்தை புரிந்து கொள்ளாத எங்களைப் போன்றவர்களினால்?

என்னுடன் எதுவுமே பேசாமலே அவள் எனக்கு எதையோ போதித்துக் கொண்டிருந்தாள்.

நெஞ்சு கனத்து, மனம் முழுவதும் அசௌகரீயம் உணர்ந்தேன்.

கண்ணை மூடித் தூங்க முயற்சித்தேன்.. அத் தாயின் துயரம் எத்தகயது என்பதை மனது யோசித்துக் கொண்டிருந்தது. சித்தசுவாதீனமற்ற குழந்தையை பெறுவது எத்தனை வேதனையாய் இருக்கும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. தினம் தினம் வேதனையில் வெந்து போகும் நெஞ்சமாயிருக்கும் அத்தாயின் மனதும் தந்தையின் உயிரும். உயிரைப்பிழியும் சோகமது. எவருக்கும் அது கிடைக்காதிருந்தால் நன்றாயிருக்குமே என்று எண்ணியது மனது.

ஏன் இப்படி நடக்கிறது? குழந்தையின் பிழையா? அல்லது பெற்றோர்களின் பிழையா? அக்குழந்தை என்ன பாவம் செய்தது இப்படிப் பிறக்க? பாவ புண்ணியங்களின் நிலுவைவைத் தான் தெய்வம்; இப்படிக் காட்டுகிறதா?..
அது உண்மையெனில் அது தெய்வமேயில்லை, எனக்கு.

யோசனைகளை ஒதுக்கி கண்களை மூடி தூங்க முயற்சித்தேன்..
பின்னாலிருந்து அச் சிறுமி மெது குரலில் பாடிக் கொண்டிருந்தாள்
என்னைத் தாலாட்ட யோசித்தாளோ என்னவோ?

அயர்ந்து கொண்டு போகும் போது எனது கதிரை பலமாய் உசுப்புப்பட திடுக்கிட்டு முளித்தேன்.. மீண்டும் உரு வந்திருந்தது தேவதைக்கு.

மனது அவளுடன் பேசு என்றது. சற்று நேரம் ஒரே போராட்டமாய் இருந்தது மனதுக்குள்.. கதைப்பதா வேண்டாமா என்று.
மெதுவாய் எழுந்து.. மண்டியிட்டேன் அவளின் இருக்கைக்கருகில்
பார்த்து புன்னகைத்தவள், பூப்போன்ற கரங்களினால் தன் முகம் மூடி மெதுவாய் இருவிரல் நகர்த்தி நான் இன்னமும் இருக்கிறேனா என்று பார்த்தாள். நான் அப்போதும் அங்கு நின்றிருந்தேன்.

தாய் மன்னித்துக்கொள்ளுங்கள் உங்களை இவள் குழப்பியிருந்தால் என்றார். இல்லை என்று சொல்லிப் புன்னகைத்தேன. அவர் முகம் பார்க்காமலே. அவரின் கண்களைச் சந்திக்கும் தைரியம் என்னிடம் இருக்கவில்லை. அது ஏன் என்றும் புரியவில்லை

அய்யா உங்கட பெயர் என்ன என்றேன் தமிழில் சிறமியைப் பார்த்து
பதில் வரவில்லை
அவளின் பெயரை தாய் சொன்னார்
அழகான பெயர் என்றென்
சிரித்தாள்
இப்பவும் இரண்டு விரல்களுக்குள்ளால் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். உங்களுக்கு எத்தனை வயது என்றேன்..
நான்கு என ஆங்கிலத்தில் சொல்லி கல கலவென்று சிரித்தாள்..
பொய் என்றேன் நான்
8 வயது என்றார் தாய்.

தயக்கம் நீங்கி நீட்டிய என் கையைத் தொட்டாள். என் மூக்கை தொட்டு பின் விரலை இழுத்துக் கொண்டவள் பலமாய் சிரித்தாள். உஷ்ஷ் எல்லோரும் துங்குகிறார்கள் சத்தம் போடாமல் கதைப்போம் என்றேன். பலமாய் சிரித்தாள் இதற்கும். உஷ்ஷ் என்றாள் தாய் இப்ப.

சம்பாசித்தோம் மூவரும். கொழும்பிலுள்ள அப்பம்மாவிடம் போவதாயும், தாம் கனடாவாசிகள் என்றும் அறியக் கிடைத்தது. என்னிடமும் இரு இளவரசிகள் இருப்பதாயும், அவர்களில் ஒருவருக்கு கிட்டத்தட்ட உன் வயது தான். அவர் பெயர் பூக்குட்டி என்றேன். இப்பவும் புன்னகைத்தாள் அவள்
கொழும்பில் என்ன செய்யப்பொகிறாய் என்றேன் சிறுமியிடம்
சொக்லேட் என்ற வார்த்தை மட்டும் புரிந்தது அவளின:; நீண்ட பதிலில் இருந்து. புன்னகைத்து.. அப்ப ஐஸ்கிறீமும் விருப்பமா என்றேன்.. கண்களால் சிரித்து பலமாய் தலையாட்டினாள்.

இருப்பக் கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தாள். வாருங்கள் நடந்து போவோம் என்றேன்.. அதற்கும் சிரிப்பையே பதிலாய் தந்தாள்.

மெதுவாய் முதுகைத் தடவி ஆறதலாய் ததைத்துக் கொண்டிருந்த போது தாயின் மடியில் தூங்கிப் போனாள். உருவரவில்லை அவளுக்கு அப்போது.
தூங்கியிருக்குமோ அதுவும்?

என்னிருக்கையில் வந்தமர்ந்தேன்.. மனம் முழுக்க அச் சிறுமியே வியாபித்திருந்தாள்.. தூங்க முயற்சித்தேன் முடியவில்லை. கணணியை எடுத்து இதை எழுதி முடித்து கணணியை நிறுத்த யோசிக்கிறேன். நித்திரை குழம்பி உரு வந்திருந்திருந்தது அவளுக்கு. பெரிதாய் கத்திக் கொண்டிருந்தாள். மீண்டும் அருகிலமர்ந்து, கைபிடித்து, பெயர் சொல்லி அம்மா தூஙகுங்கள் என்றேன். கை அவள் முதுகை மெதுவாய் தட்டிக் கொண்டிருந்தது...தாய் அவளின் தலையைக் கோதிவிட்டார்.

வானத்தில் பறந்தபடியே தூங்கிப் போனாள் தெய்வங்கள் என்று அழைக்கப்படும் உயிரற்ற தெய்வங்களினால் சபிக்ப்பட்ட தேவதை.

மீண்டும் என்னிருக்கையில வந்தமர்ந்தேன்..
மனம் சற்று ஆறியிருந்தது. அவனை தூங்க வைத்ததாலா?

தூங்கி எழுந்து திரும்பிப் பார்த்தேன் அசாத்தியமான சாந்தத்தை கொண்டிருந்தது அவள் முகம். முகத்தில் களைப்பும் தூக்கமும் வழிந்தோட தாயின் மடியில் தலைவைத்து படுத்திருந்தாள். கம்பளி குளிரை உள்ளே விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் எழும்பியவள மீண்டும் ஒரு முறை உரு ஆடினாள. திரும்பிப் பார்ததேன் பார்த்துச் சிரித்துவிட்டு மீண்டும் ஆரம்பித்தாள் கத்த..
சில நிமிடங்களில் அடங்கியவள்... என் தோளைத் தட்டுவதும், நான் திரும்பினால் ஒளிவதுமாய் விளையாடிக் கொண்டிருந்தாள்.

ஏதோ பல நாள் பழகிவர்களைப் போல் விளையாடிக் கொண்டிருந்தோம். சுற்றியிருந்தவர்களின் கண்கள் எங்களையே பார்திருப்பது புரிந்தது. அவள் அவர்களைப் பற்றி கவலைப்பட்டதாய் தெரியவில்லை. உங்கள் பார்வையெல்லாம் பழகிவிட்டது என்று நக்கல் பண்ணுவது போலிருந்தது அவளின் நடவடிக்கைகள்.

என்னைக் காணும் போதெல்லாம் சிரிக்கிறாள், விளையாடுகிறாள், ஏதொவெல்லாம் சொல்கிறாள் ஆனால் அவள் மொழி மட்டும் புரியவில்லை. இருப்பினும் அவள் கண்களின் மொழி உணர்ந்து உயிர்த்திருக்கிறேன்.

இன்னும் சற்று நேரத்தில் பிரிந்துவிடப் போகிறோம். முன் பின் தெரியாத ஒரு சிறுமி தந்ததோர் இனிமையான பயணம் மனதில் பதிந்திருக்கிறது. எனக்கு அவள் எதையோ கற்பித்திருக்கிறாள் என்பது மட்டும் சர்வநிட்சயமாய்த் தெரிகிறது ஆனால் கற்றுத் தெளிந்தேனா இல்லையா என்பது தெளிவில்லாமல் இருக்கிறது வழமை போல்.

பிரியும் போது அவள தலைகோதி சென்று வாருங்கள் என்று சொல்ல நினைத்திருக்கிறேன்..

இன்றைய நாளும் நல்லதே.

ஒஸ்லோ விமான நிலையமும் சுவரில்லாத கதவு நிலையும்
ஒஸ்லோ விமான நிலையத்தில் லக்கேஜ் போடுமிடத்தில் லக்கேஜ் போட்டு, போடிங் டிக்கட் வாங்கி வலு ஆறுதலாக வந்து சேர்ந்தேன் பயணிகளை பரிசோதனை செய்யுமிடத்துக்கு.

இன்று நோர்வேயில் காவல் அல்லது பாதுகாப்புத் துறையில் (போலீஸ் அல்ல) வேலை செய்பவர்கள் ஸ்ரைக் செய்வதால் அதன் தாக்கம் நீண்டிருந்த மனிதர் நிரையில் தெரிந்தது.

எனக்கு பயணிக்கும் போது லக்கேஜ் காவுவது விசரைக்கிளப்பும் விடயம். எனவே முடிந்தளவு பாரங்களைத் தவிர்ப்பதுண்டு நான். எனது தோளில் போடும் பையில் குட்டிக்கணணியையும், சிலுவைராஜ் சரித்திரத்தையும் (நான் வாசித்துக்கொண்டிருக்கும் புத்தகம்), ஒரு தண்ணிப்போத்தலும், சில குளிசைகளுடனும் நிம்மதியாக நின்று கொண்டிருந்தேன்.

எனக்கு முன்னால் தகப்பனின் தோளில் தூங்கிக் கொண்டிருந்தாள் கிட்டத்தட்ட ஒரு வயதும் நிரம்பாத ஒரு நாட்டின் இளவரிசியொருத்தி. அக்குட்டி; முதுகினை தடவியபடியே நின்றிருந்தாள் அந் நாட்டின் மகாராணி.

தூங்கும் குழந்தைகளை உங்கள் அவசரங்களை ஒதுக்கித்தள்ளி வைத்துவிட்டு ஆறுதலாய் ரசியுங்கள். கடவுளுடன் பேசிய சுகமும் அமைதியும் கிடைக்கும். சத்தியமாக.

எங்கள் வரிசையில் நிற்க முடியாமல் நின்று கொண்டிருந்தார் பலமாய் பருத்த உடம்புடைய மனிதரொருவர்.. அவர் மூச்சு விட்டது எனக்குக் கேட்டது.
ஏதோ ஒரு விமானக் கொம்பனி இனிவரும் காலங்களில் குறிப்பிட்ட கிலோவுக்கு கூடுதலாக ஒருவர் இருந்தால் எக்ஸ்ரா ஒவ்வொரு கிலோவுக்கும் ஒரு குறிப்பட்ட கட்டணம் வாங்க திட்டமிட்டிருப்பதாக எங்கோ வாசித்திருந்தது ஞாபகம் வந்தது. உடனே முன்னால் நின்ற மனிதரின் எதிர்கால டிக்கட் விலையை நினைத்துப்பார்த்தேன். தலைசுற்றியது.

ஒரு சிறுவன் குறுக்கே சிரித்தபடியே திரும்பி திரும்பி பார்த்தபடியே ஓடிக்கொண்டிருந்தான். அவன் தந்தை பல்லை நெருமியபடி எங்களிடம் மன்னியுங்கள் என்று சொல்லி வரிசையில் இருந்து விலகி அவனைத் துரத்தினார். எனக்கு நம்ம அப்பர் நம்மள துரத்தியது ஞாபகம் வர புன்னகைத்துக் கொண்டேன்.

வளைந்து வந்து கொண்டிருந்த வரிசையில் காதல் வேகம் கொண்ட இருவர் இடைக்கிடை ஒருவரை ஒருவர் புசித்துக கொண்டிருந்தனர்.. (சத்தியமா நமக்கு எரிச்சல் வரவில்லை) நம்ம பாடசாலை பேஸ்புக்கில் காதல் கவிதை கவிதையாய் எழுதித் தீர்க்கும் தம்பிமார்களை நினைத்துக் கொண்டேன்.. (தம்பிகளா.. நீங்கள் செய்வது தப்பில்லை ராஜா...ஆனால் கடைசியாய் எங்கு வருவீர்கள் என்று அண்ணணுக்குத் நன்றாகவே தெரியுமே)

நாம் நின்றிருந்த வரிசை தீடீர் என கட கட என நகர்ந்து சோதனை பண்ணும் இடத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

எனது மனமெல்லாம் இந்த பருமனான மனிதர் அந்த சோதனை செய்யும் சுவரில்லாத கதவு நிலையினூடாக எப்படிப் போவார் என்று போசித்துக் கொண்டிருந்தது.

அந்த சுவரில்லாத நிலையை எப்ப கண்டாலும் அதை நான் சித்திரகுப்தனின் அலுவலக வாசலாயே நினைத்துக்கொள்வேன். பாவம் செய்யாதவர்களை அந்த சுவரில்லாத நிலை ஒன்றும் சொய்யாது. பாவம் செய்திருந்தீர்களோ துலைந்தீர்கள். திரும்ம திரும்ப சத்தம் போட்டு உங்கள் பாவத்தின் அளவைக் காட்டும் அது. அத்துடன் அரக்கர்களை அழைத்து இவனை உரிந்து பார் என்றும் கட்டளையிடும். அரக்கர்களும் ஒரு மாதிரியாக தடவிப் பார்த்து, இம்சை பண்ணி கடைசியாய் வெளியே அனுப்புவார்கள், எதையாவது தேடி எடுத்து (பாவங்களை) குப்பைக்குள் எறிந்த பின்.

நானும் அகப்பட்டிருக்கிறேன் அரக்கர்களிடம். ஒரு அரக்கியிடம் என்னை அனுப்பிருந்தால் சந்தோசப்பட்டிருப்பேனோ?

பருத்த மனிதரின் பாவ புண்ணியம் அளக்கும் நேரம் வந்தது.. போனார் மனிதர்.... சுவரில்லாத அந்த நிலை விட்டுக் கொடுத்தது போலிருந்தது எனக்கு. அது பீப் பீப் பீப் என்னும் சத்தமும் போட்டது.

மனிதர் பாவம் செய்திருக்கிறார் என்பதால் அரக்கன் அவரை மீண்டும் மீண்டும் இருதடவைகள் அனுப்பினான் சுவரில்லாத நிலையினூடாக. முதலில் சப்பாத்தை கழட்டினான். பின்பு இடுப்புப் பட்டியை கழட்டு என்றான்.. மூன்றாம் முறையும் சத்தம் கேட்க இரண்டு அரக்கர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள்.. எதையோ கையில் வைத்து அந்த மனிதனை அளப்பது போலிருந்தது எனக்கு.. (பாவம் அளக்கும் மெசினோ?)
அந்த மெசினும் அதிருப்தியை காட்டியது.. மனிதர் அளவில்லாத பாவம் செய்திருப்பாரோ? (முல்லைத்தீவில் வேலை செய்தீர்களா என்று கேட்க நினைத்தேன் அவரிடம்)

அழைத்துப் போயினர் அவரை. திரைச்சீலை மூடப்பட்டது. எனது கற்பனையில் அவரை எண்ணைக் கொப்பறையில் போடுவது போல இருந்தது... ஆனாலும் மனிதர் சிரித்தபடியே பாவங்களை கழுவி வெளிவந்தார்.. சந்தோசமாக இருந்தது எனக்கு.

இன்று நான் பாவம் செய்திருக்கவில்லை. சுவரில்லாத கழட்டி வைத்த நிலை நான் கடந்து வந்த போது... அடுத்தமுறை பார்ப்போம் என்று பாவமளக்கும் மெசின் கறுவியது கேட்டது. நக்கலாய் அதைப் பார்த்துப் புன்னகைத்தேன்.

நிம்மதியாய் புத்தகக் கடை, டியூட்டீ ப்றீ கடை என்று அலைய நினைத்தேன்.. இயற்கை.. மகனே நீர் முட்டி விட்டது வெளியேற்று என்று கட்டளையிட்டது. கழிப்பறை புகுந்து அப்பாடா என்று நிம்மதியாய் மூச்சு விடும் போது அசரீரி போல் கேட்டது எனது பெயர் தலைக்கு மேல்.

என்னடா கடவுள் கக்கூசுக்குள் வந்திருக்கிறாரோ என்று போசிக்க நேரமிருக்கவில்லை மீண்டும் சஞ்சயன் செல்வமாணிக்கம் என்னும் என்பெயரை "சங்ன்சசியன் செலுவமநிக்கும்" என்று அநாவசியமாக கொலை செய்தார்கள்.. அப்ப தான் புரிந்தது இது கடவுள் இல்லை விமானநிலைய கட்டுப்பாட்டு நிலையம் என்று.

நம்மளை உடனே வரும்படி கூறினார்கள். அவசர அவசரமாய் வந்த வேலை முடித்து, கைகழுவி, சுடுகாற்றில் கை காயவைத்து அவசர அவசரமாய் வெளிவந்தேன். மனசுக்குள் ஒரு பயம் ஓடிவந்து ஒட்டிக் கொண்டது.. அதை விளக்குவதற்கு ஒரு சின்னக்கதை சொல்ல வேண்டும்.

எனது தலைமயிரை அலங்கரிக்கும் பொறுப்பை (யாரது நக்கலாய் தலைமயிரா உனக்கா என்று முணுமுணுப்பது.. வேணா வலிக்கும்..) ஒரு பாலஸ்தீன நாட்டு மனிதரிடம் விட்டிருக்கிறேன். (நாம இன்டர்நசனல் ஆளய்யா). அவரின் பெயர் ஈட்ரீஸ் உசாமா (Idris Osama) ஒபாமா இல்ல.. உசாமா.

நான் உசாமாவுடன் தொடர்பு வைத்திருப்பதை கண்டு பிடித்து அதை நம்ம பெரிய உசாமாவுடன் கலந்து நம்மளையும் ஒரு பெரீரீரீய டெர்ரறிஸ்டாக நினைத்துவிட்டார்களோ என்று ஒரு கலக்கமாய் இருந்தது.

மனதுக்குள் ஐயா! தமிழன் இப்ப டெர்ரர்றிஸ் என்ற பதத்தில் இருந்து ஒதுக்கப்பட்டுவிட்டான் என்று சொல்லித்தப்பலாம் என்று மனம் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்து.

மீண்டும் மீண்டும் எனது பெயரைச் சொல்லி உடனே கேட் 50க்கு போ.. கேட் கதவு மூடப்படடுகிறது என்று அறிவித்தார்கள். என்னடா விமானம் கிளம்ப இன்னும் ஒரு மணிநேரம் இருக்கிறதே ஏன் இப்படிப் பறக்கிறார்கள் என்று யோசித்தேன். திடீர் என ஒரு சந்தேகம் வர சேட் பொக்கட்டில் இருந்த போர்டிங் கார்ட் ஐ எடுத்துப் பார்த்தேன்.. ஐயோ! விமானம் புறப்பட இன்னும் 15 நிமிடங்களே இருந்தது.

நம்ம ஞாபகசக்தியைப் பற்றி நோர்வேயில் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். ஒரு குசும்புக்கார நண்பர் என் பெயரை கஜனி என்று மாற்றி வைத்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

கிழிஞ்சுது போ என்று சொல்லிக்கொண்டு தோளில் போட்ட பையுடன் ஓடத் தொடங்கினேன்.
கேட் 50 கண்ணில் தெரியவேயில்லை. 30, 31, 32, தாண்டிக் கொண்டிருந்தேன் களைத்து வாயில் நுரைதள்ளும் வண்டில் மாடு போல
மூச்சு விட்டபடி
இதயத்துடிப்பு 150 தாண்ட
வேர்த்து ஒழுக

பொறுங்கய்யா .. கொஞ்சம் பொறுங்க என்று மனதுக்குள் கத்தியபடி ஓடி வந்து கொண்டிருந்தேன்.

எல்வோரும் என்னையே பார்ப்பது போலிருந்து..
அதுல என்ன பிழை? சுப்பர் ஸ்டார் ஓடினால் எல்லோரும் பார்ப்பாங்க தானே ஹி..ஹி
(யாரது குனிந்து கல்லு தேடுறது.. வேணாம் ராஜா.. அண்ணண் பாவமில)

50 தூரத்தில் தெரிந்தது. அதற்கு முன்னால் ஒரு கூட்டுககுள் போலீசும் குந்தியிருந்தது. (இவனுக்கும் நம்ம சிகையலங்கார நண்பரை தெரிந்திருக்குமோ?)
என்ன இப்படி ஓடி வருகிறாய் லண்டனுக்கு ஓடியா போகப்போகிறாய் என்றார் நக்கலாய் போலீஸ் அதிகாரி.
சிரித்து வைத்தேன் பெயருக்காய்.
பாஸ்போட்ஐ வாங்கிப் பார்த்தார்..
என்னையும் தான்.. வடிவாகப் பார்த்தார்
கலியாணம் "கிலி"யாணம் ஏதும் பேசப்போகிறாறோ?..
(நம்ம பர்சனாலிடி அப்படி... சரி சரி கல்லைத் தூக்காதீர்கள்.. நானே அடங்கிக்கொள்கிறேன்... சே..உண்மையைக் கூட கதைக்க விடுகிறார்கள் இல்லை.. எரிச்சலாயிருக்குமோ?)

சரி போ.. என்றார்...
நன்றி ஒன்றை அவருக்கு கொடுத்து 50வது கேட்டை நெருங்கினேன்.

காதலனைக் கண்ட காதலி போல் வா வா உனக்காகத் தான் காத்திருக்கிறேன் என்றாள் குந்தியிருந்தவள் (ஆகா! என்றார் வடிவேலு அண்ணண் காதுக்குள்)

ஆனால் மனதுக்கள் "கறுப்புச் சனியன் எங்கேயோ வாய்பார்த்திருந்துவிட்டு லேட்டா வந்து என் கழுத்தை அறுக்கிறாய்” என்று முணுமுணுப்பது தெளிவாய் கேட்டது.

விமானத்தில் இருவருக்கு நடுவில் இடம் கிடைத்தது.. அதில் ஒருவர் தானாகவே நான் நடுசீட்டில் இருக்கவா என்றார். ஓ தாராளமாய் என்றேன்.

கதிரையில் இருந்து, என்னை ஆசுவாசப்படுத்தி, கொண்டு வந்த சிலுவைராஜ் சரித்திரம் என்னும் புத்தகத்தை எடுத்து விரித்தேன்.. சிலுவை தனது நண்பர்களுடன் களவெடுக்கப் போய் தனது வாத்தியாரிடம் மாட்டுப்பட்டு முளித்துக்கொண்டிருந்தான். மனதில் பால்ய காலத்து நினைவுகள் வந்து போயின. நானும் தேங்காய் களவெடுத்து மாட்டிய கதையொன்றிருக்கிறது.. (பிறகு சொல்கிறேன்)

வெளியில் விமானம் மேகங்களை மெதுவாய்த் தடவிக்கொண்டிருந்தது.

.

Go go Nigeria . கமோன் நைஜீரியா


நைஜிரியா நாட்டு மனிதரொருவர்க்கு கணணி திருத்திக் கொண்டிருக்கிறேன்

நைஜரியாவுக்கும் கிரேக்கத்துக்கும் World Cup match தொடங்கிவிட்டது..

புதியதோர் அனுபவத்தில் நான் திளைத்துக் கொண்டருப்பதால் அதைத் உங்களுடன் பகிர நினைக்கிறேன்..

Bob Marley ஸ்டைலில் தலைவளர்த்த இருவரும், என் தலை போல் அழகான மொட்டையுடன் ஒருவரும், உருண்டு திரண்ட கட்டையான ஒரு பெண்ணும் இருக்கிறார்கள். அவர்களுடன் நானும் இருக்கிறேன் கணணிக்கருகில் (சத்தியமாக கணணிக்கருகில் தான் இருக்கிறேன்).

Go go Nigeria என்று பாடுகிறார்கள்
கமோன் நைஜீரியா என்கிறார்கள்
ஆடுகிறார்கள் ஆனந்தக்கூத்து
மேசையில் தட்டுகிறார்கள் தாளலயத்துடன்
விசில் பறக்கிறது
நான் ஒருவன் இருப்பதை மறந்து விட்டார்கள் போலிருக்கிறது அவர்கள் நடவடிக்கை.

எனக்கும் எல்லாம் புதினமாய் இருக்கிறது.. ஆனாலும் ரசிக்கிறேன் இம் மனிதர்களை. கவலை மறந்த கூட்டம் இது.. எப்படித்தான் இவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்க முடிகிறது இவர்களால்? நான் பழக வேண்டியது கொட்டிக் ‌கிடக்கிறதே இவர்களிடம்.

திடீர் என நாமிருக்கும் அறை வெடித்துச் சிதறியது போலிருக்கிறது.. காட்டுக் கூச்சல் போட்டு கத்துகிறார்கள்.. கட்டிப்பிடித்து முத்தமிடுகிறார்கள்...
என்னையும் கட்டிப்பிடித்து தூக்கி கவனமாய் இறக்கி வைத்தார்கள். ஆடத் தொடங்குகிறாள் அந்தப் பெண். பெருத்த குண்டியை பின்னுக்குத் தள்ளி, அதை ஆட்டி ஆட்டி வாயால் ஏதோ சத்தம் வைத்து ஆடுகிறாள்..

அதை கைதட்டி ரசிக்கிறார்கள் ஆண்கள்.. சற்று சங்கடமாய் தான் இருக்கிறது எனக்கு... (அதற்காக கண்களை மூடிக் கொள்வதா.. ச்சீ.. அப்படி எல்லாம் சொல்லாதீர்கள்)

ஆம், நைஜீரியா கோல் அடித்துவிட்டது.

குழந்தையாய் மாறி நிற்கும் வளர்ந்த இம் மனிதர்களை பார்க்கும் போது மகிழ்ச்சியாய் இருக்கிறது.

நானும் அவர்களுக்காய் கைதட்டினேன். மனதுக்கள் இவர்கள் வெல்ல வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறேன்.

நேரம் சற்று போகிறது.. பரியாத மொழியில் ஏதோவெல்லாம் பேசுகிறார்கள்
சந்தோசமாய் போய்க் கொண்டிருக்கிறது நேரம்

திடீர் என ஒரு நைஜீரிய வீரர் சிவப்பு கார்ட் காட்டப்பட்டு வெளியனுப்ப படுகிறார்.
நடுவரின் தீர்ப்பு சரியானதே.. ஆனாலும் ரசிகர்களால் தாங்கமுடியவில்லை

நடுவர் fucking guy என்றும் கறுப்பர்களை வெறுப்பவர் என்றும் அன்பாய் அழைக்கப்படுகிறார். கிரேக்கத்து வீரனும் திட்டுப்படுகிறான்.

அந்த பெண் மட்டும் தலையில் கைவைத்து நிலத்தில் குந்தி ஏதொதோ சொல்லிப் புலம்புகிறாள் தன் மொழியில். அவளின் தலையில் தடவுகிறார்கள் மற்றவர்கள்.. ஆனாலும் பலம்பல் அடங்கவில்லை. பாவமாயிருக்கிறது எனக்கு.

மேலும் சில நிமிடங்கள் நகருகின்றன.. இன்னும் சில மனிதர்கள் வந்து சேர்கிறார்கள். மை ப்றென்ட் என்று என் கையும் குலுக்கப்படுகிறது.. என் நண்பர்களின் பட்டியலில் இன்னும் சிலர்.

இடைவேளை விடப்பட்டிருக்கிறது, இப்போது
அப் பெண் சற்றே ஆசுவாசப்பட்டிருப்பதாய் தெரிகிறது. நடுவரின் தீர்ப்பு சரியானதா பிழையானதா என்று பட்டிமன்றம் சாலமன் பாப்பையாவை நடுவராக வைக்காமலே, நடாத்தப்பட்டு தீர்ப்பு நடுவருக்கு பாதகமானதாகவே அளிக்கப்படுகிறது.

விளையாட்டு தொடங்கிவிட்டது.
நைஜீரியா சிறப்பாக விளையாடுகிறது.. மகிழ்ச்சியில் மனிதர்கள்
திடீர் என்று வைஜீரிய வீரர் கோல் நோக்கி லாவகமாக பந்தை கொண்டு செல்கிறார். ஆரவாரம் வானைப்பிழக்கிறது. டீவீயை நோக்கி சிலர் ஓடுகிறர்ர்கள்.
நூலிழையில் கோல் தப்பிப் போகிறது.

பந்தை தவறவிட்டவன் பரம்பைரை திட்டப்படுகிறது பல மொழிகளால். எனக்கும் அவன் அந்த பந்தை தவற விட்டதை தாங்கமுடியாடமல் தான் இருந்தது. அதே பேச்சாயிருக்கிறது அடுத்த 5 நிமிடங்கள். அந்த கோல் அடித்திருந்தால் வெற்றி நிட்சயம் என்றும், கிரேக்கம் கெலிச்சுப்போயிருக்கும் என்றும் அறிக்கை விடுகிறார்கள்.

அடுத்ததாய் கிரேக்கம் ஒரு கோல் அடிக்கிறது. சோகத்தின் அலறல் அந்த அறையின் முகத்தில் அறையப்படுகிறது. மீண்டும் நிலத்தில் குந்திவிட்டாள் அப் பெண். பலம்பவும் தொடங்கிவிட்டாள்

நேரம் 80 நிமிடங்களை தாண்டிக் கொண்டிருக்க.. அம்மனிதர்களின் பொறுமை காற்றில் பறக்க.. நைஜீரியா நாட்டு மனேஜர் சந்திக்கு இழுக்கப்படுகிறார்.

நாம் ஆபிரிக்கர்கள்.. நமக்கு ஏன் வௌ்ளைகள் மனேஜராக இருக்கவேண்டும் என்று சரித்திர முக்கியம் வாய்ந்த கேள்வி முன்வைக்கப்படுகிறது. அவர்கள் ஒழுங்காய் வேலை செய்ய மாட்டார்கள் என்று பாராட்டப்படுகிறார் சுவீடன் நாட்டு மனிதரொருவர். பலரும் அதை ஆமோதிக்கிறார்கள்

நேரம் 85 நிமிடங்கள்

இன்னொருவர் டீவியைப் பார்த்தபடி.. ஆபிரிக்காவில் விளையாடும் வீரனுக்கு டேய் அந்த மூலைக்கு பந்தைக் குடு என்றபோது பந்து வைத்திருந்தவரும் அதையே செய்ய மனிதர் பெருமையில் பூத்துப் போகிறார். அடுத்த கட்டளையையும் இடுகிறார்.. அது மறுக்கப்படுகிறது.. ஆங்கிலத்தில்பச்சைத் தூசணத்தில் கத்துகிறார்.

அவரின் கட்டளைகள் மிகச் சரி என்றும்.. விளையாடுபவர்கள் களைத்துவிட்டார்கள் என்றும் அவருக்கு ஆறுதல் சொல்கிறார் இன்னொருவர்.

நேரம் 88 நிமிடங்களாதனால் நிம்மதியை இழந்து நகம் கடிக்கிறார் அந்தப் பெண்.
தோளில் கைபோட்டு சோகம் பகிர்கின்றனர் மூவர்

93 நிமிடங்களின் பின் கிரேக்கத்வர்கள் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட
வேறெந்த ஆபிரிக்க நாடுகள் மிச்சமிருக்கின்றன என்ற ஆராயப்பட்டு
”கனா” தான் ஆபிரிக்காவின் மானத்தை காப்பாற்றும் என்றம் எதிர்வு கூறப்படுகிறது.

தேத்தண்ணி ஊற்றப்பட்டு சோகம் குறைக்கப்பட்ட பின்னால் ஓய்ந்து போனார்கள் இவர்கள்.

அடுத்ததாய் இன்னுமொரு மட்ச் தொடங்குகிறது...
பழையபடி தொடங்கிவிட்டார்கள்
மகிழ்ச்சியாய் வாழ...

காதல் ஆசிரியர்கள்

கணிதவாத்தியார் முத்தம்
ஒன்றும் ஒன்றும் ஒன்றாகவே இருக்கிறது
எனவே கணக்குப்பண்ணியது பிழை

கெமிஸ்ட்ரி வாத்தியார்
இதயங்களுக்கிடையிலான கெமிஸ்ரி ஒத்துப் போவதால் இது சரி

பொருளாதார வாத்தியார்
நுகர்வோர் மிக அதிகம் பொருட்கள் குறைவு.. அதனால் கள்ளச்சந்தை

உயிரியல் ஆசிரியர்
உடல்கள் இரண்டு ஒன்றாய்.. புதிய உயிர்

விளையாட்டு ஆசிரியர்
இந்த விளையாட்டுக்கு விதிகள் இல்லை

சமய பாடம் கற்பிக்கும் ஆசிரியர்
மொட்சத்திற்கான வழி

தமிழாசிரியர்
எத்தனை பேர் எழுதியும் முடியாத காவியம்

.

ஆபிரிக்காவுல ஒரு உருண்டையை 22 பேர் திரத்த பூலோகமே வேடிக்கை பார்க்கிறது.. மொக்க பசங்க (நானும் தான்)


கூத்து தொடங்கிவிட்டது.. இனி ஒரு மாதத்திற்கு பல குடும்பகளுக்குள் பிரச்சனை தான்..
அப்பா மெய்மறந்திருப்பார் டீவியில்
அம்மாவுக்கு நாடகம் பார்க்க டீவீ இருக்காது
மகளுக்கு மானாட மசிராட ச்சீ..சீ மயிலாட பார்க்க டீவி இருக்காது
குந்தியிருக்கும் கிழவிக்கு சுப்பரபாதம் கேக்க டீவி இருக்காது


இது தான் சாட்டு என்று டீவீ விக்கிறவன் சந்துல சிந்து பாடி 40, 50 டீவி வித்துடுவான் ஊருக்குள்ள..

அதைலயும் பிரச்சனை வரும் வீட்டில பிறகு..
அப்பா உங்கட டீவியில மட்டும் தான்
மானும் மயிலும் ஆடுது
நமீதா குலுக்குறா.. அசின் ஆடுறா
சுகி சிவம் கதைக்கிறார் என்பார்கள்

அப்பர் தானே பிரச்சன அந்த தீர்க்கனும்
இன்னொரு கனேக்கசன் எடுக்கனும்
அது பூட்ட யாரின்ட கால்லயும் விழனும்
அதை விட மாதா மாதம் கட்டித் தொலைக்கனும்
பாவம்டா சாமி ..அப்பன்
ஒரு உருண்டை உருள்ரதை பார்க்கப் போய் அவரின் தலையே உருள்கிறது..

நானும் இந்த உருண்டையை கிட்டத்தட்ட 35 வருடங்கள் உருட்டித் திரிந்தவன் தான்.. ஆனால் சற்று அடங்கியிருக்கிறது ஆர்வம் தற்போது. ஆயினும் கடந்து போகும் போது எதிர்பாராமல் இளசுகள் விளையாடும் பந்து அருகில் வந்தால் குழந்தையாய் நான்.. இன்றும்.

இப்படி என்ன தான் இருக்கிறது இந்த உருண்டையில்..? உலகமே அடங்கிப்போகிறதே அதற்குள்..
பூமியும் உருண்டை...பந்தும் உருண்டை எதும் சம்பந்தம் இருக்குமோ இவர்களுக்குள்? ஒன்னுமே புரியுதில்லப்பா.

இந்த உருண்டைக்கும் மனித வர்க்கத்துக்கும் அப்படியென்ன தொடர்பிருக்கிறது என்று யோசித்துப்பார்த்தேன்.. எனக்கென்னமோ எல்லாமே இந்த உருண்டைக்குள் இருப்பதாகவே படுகிறது..
சமுதாயம், அன்பு, ஆக்ரோஷம், வலி, இன்பம், துன்பம், பொறாமை, தேடல், பணம், பிணம், வாழ்வு, வெற்றி, தோல்வி, காழ்ப்புணர்ச்சி, இப்படி இல்லாதது என்று ஒன்றுமில்லை இந்த உருண்டையினுள் என்பேன் நான். ஆக மனிதர்கள் இதற்கு ஆட்பட்டு இருப்பதில் தவறில்லை.

கால்பந்திற்கு அவராற்றிய சேவைக்காக Sir பட்டம் பெற்ற Bob Paisley அய்யா அவர்கள் 70களில் Liverpool FC மனேஜராக இருந்த போது இப்படிச் சொன்னார் ஒரு தரம்
"Kevin was quicker off the mark, but Kenny runs the first five yards in his head." Kevin Keegan இன் விளையாட்டையும், Kenny Dalglish இன் விளையாட்டையும் அறிந்தவர்களுக்கு இக் கூற்றின் சூட்சுமம் புரியும்.

Bob Paisleyஅய்யாவின் குரு Bil Shankly அய்யா ஒரு படி மேலே போய் இப்படிக் கூறியிருக்கிறார்:
“Football's not a matter of life and death ... it's more important than that,”

உண்மை தான்...

எனக்கும் அந்த பந்துக்குமான உறவு எப்போ தொடங்கியது என்பது ஞாபகமில்லை. அப்பர் பந்தைமிகச் சிறப்பாக உருட்டித்திரிந்தாராம் வன்ஸ் அபோன் அ டைம். போலீஸ் விளையாட்டுக் குழுவில் இருந்தாராம் என்றேல்லாம் கதை உலாவுகிறது அப்பரின் தாய் வீட்டில்.
ஒரு நாள் அவருடன் பந்தடித்த ஞாபகமும் இருக்கிறது எனக்கு. அவரின் பூட்ஸ், ஸ்டொக்கிங்ஸ் எல்லாம் இருந்தது என்னிடம் ஒரு காலத்தில். ஆக அப்பா தான் நம்ம முதல் குருவாய் இருந்திருக்க வேணும்.

ஏறாவூர் அரசியல்வாதியொருவர் சொல்லுவார் உன் தந்தையிடம் தான் நான் கால்பந்து பழகினேன் என்று.. நம்பவும் முடியவில்லை.. நம்பாமலும் இருக்கமுடியவில்லை அரசியல்வாதியின் விளையாட்டப் பார்த்த பிறகு.

தென்ஆபிரிக்கா லஞ்சம் கொடுத்து இந்தத் திருவிழாவை வாங்கியதாம் என்றெல்லாம் கதைத்தார்கள். ஆரம்பத்தில்.. மறந்துவிட்டார்கள் அதை இப்ப. பெருசுகளுக்கும் மறதி வரும் தானே.

ஒரு வருசத்து முன் நடந்த நரபலித் திருவிழாவையே மறந்து விட்டார்கள்....இது நாலைந்து வருடங்களுக்கு முன் நடந்த விடயமல்லவா.. எப்படி ஞாபகம் இருக்கும்?

எது எப்படியோ

இன்னும் ஒரு மாதத்திற்கு உலகமே மெய் மறந்திருக்கும்
நண்பர்கள் தங்களுக்குள் அடிபட்டுக்கொள்வார்கள்
மறந்து சேர்ந்தும் கொள்வார்கள்

பைன்ட் பைன்ட் ஆக நொதித்த தரவம் வாயால் உட்புகுந்து மூத்திரமாய் வெளிவரும்
மூத்திரம் போற நேரம் பார்த்து தான் கோல் அடிப்பார்கள் விளையாடுபவர்கள்
கோல்ல்ல்
ல்ல்ல் என்ற சத்தம் கேட்டு மூத்திரம் போனவன் ” ஷிப்” பூட்டமறந்தும் ஓடிவருவான்


நொந்து நூலாய்ப் போவார்கள் சில ஆதரவாளர்கள்
கொலையிலும் முடியலாம்

பனால்டி அடிப்பதை கோட்டை விட்டதால் தூற்றப்படுவான் வீரனொருவன்
அதே பனால்டியை பிடித்தற்காய் கோயிலும் கட்டுவார்கள் கீப்பருக்கு
மனேஜர் வாழ்த்தப்படலாம், திட்டப்பலாம் ஏன் மாற்றப்படவும் கூடும்

பல ஆயிரம் கோடி விலை பேசுவார்கள் சிலருக்கு

ஆனால் அந்த உருண்டை மட்டும்
உருண்டையாயே இருக்கும்
எதையும் கண்டுகொள்ளாதது போல...


அன்புறவே!

நெதர்லான்ட்க்கும், டென்மார்க்கும் மட்ச் தொடங்கப் போகிறது
மொக்க எழுத்து எழுதுவதை விட அது பார்க்கலாமில்லயா?

வாருங்கள் உருண்டையுடன் நாமும் உருள்வோம் நாம்
--------------------------------------------------
மேலேயிருக்கும் படம் Vinnie Jones
என்னும் இங்கிலாந்து வீரர் Paul Gascoigne என்னும் இங்கிலாந்து வீரரை கிளப் மட்ச் ஒன்றில் இம்சைபண்ணிய போது எடுக்கப்ப ட்டது.

ஞானி என்றழைக்கப்பட்ட மனிதம்


1975இல் எனது 10வது வயதில் அறிமுகமாகிய துடிப்பான ஒரு மனிதருடனான என் ஞாபகங்கள் இவை.

நாம் பிபிலையில் வாழ்திருந்த காலம். பல்வைத்தியராக பெரதெனியா பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறி வந்து சேர்ந்தார் பிபிலைக்கு. பின் தங்கிய இடம் தான் அது ஆனாலும் அங்கிருந்த மனிதம் மட்டும் இன்றைய இலங்கையை விட அற்புதமாய் வாழ்ந்திருந்தது அன்று. மூவினங்களும் நிம்மதியாக வாழ்திருந்த காலம்.

அம்மாவுடன் பிபிலை வைத்தியசாலையில்தான் வேலை செய்தார். வேறு சில தமிழ் மாமாக்களுடன் ஒரு வீட்டில் தங்கியிருந்தார் பிபிலையில். மாலையில் எமது வீட்டில் தான் அந்தக் காலத்து இந்த இளசுகள் எல்லோரும் கூடுவார்கள்.

கரம் போட்ஐ சுற்றியிருந்து கதைத்து விளையாடி, பலமாய் சிரித்து, தேத்தனீர் குடித்து,
கணகணப்பில் வரும் எனது அப்பாவுடன் தனவிக் கொண்டிருப்பார்கள் இவர்கள். அவருக்கு இந்த இளசுகளின் குசும்பு புரியாமல் அவர் ஏகிறிய நாட்டகளுமுண்டு அந்த நேரங்களில் ஞானி மாமா தான் அப்பாவை சமாதானப்படுத்துவார் கூல் பண்ணுவார். நான் அந்தப் பக்கம் திரும்பியும் பார்க்கமாட்டேன். ஞானி மாமாவின் கதிரையின் கைபிடியில் உட்கார்ந்திருப்பேன் நான். அவரின் அருகாமையே அலாதியான மகிழ்ச்சியைத் தரும்.

குளப்படி ஒண்டும் செய்யேலலேயேடா என்பார் அடிக்கடி (நான் இன்னும் குழப்படி செய்யவேண்டும் என்று விரும்பினாரோ என்னவோ). அப்பா ஏதும் கதைத்தால் தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்பார் அவரிடம். பெரிசும் அடங்கிப்போனது அவரிடம். புதினமாய், எங்கள் வீட்டில் ”ஞானி” க்கென்றொரு மரியாதை இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். இப்போதும் அம்மாவின் நினைவில் இருக்கிறார்.

என் தாத்தா (அம்மாவின் அப்பா) விட்ட தவறின் காரணமாக எனக்கு ஒரே ஓரு மாமா தான் அம்மா வழியில் இருந்தார். தந்தை வழியிலும் அப்பாவின் அக்கா கணவர் மட்டுமே மாமாவாயிருந்தார். இவர்களில் முதலாமவர் கொழும்பிலும் மற்றவர் யாழ்ப்பாணத்திலும் இருந்ததால்.. மாமா என்னும் அற்புதச் சொல்லின் அருமை பலகாலம் தெரியாதிருந்தது எனக்கு.

யாரும் 20ஐக் கடந்திருந்தால் அவர் எனக்கும், தம்பிக்கும் மாமாவான காலம் அது. எனவே பலர் மாமாவாகவும், மாமேயாகவும் (சிங்களத்தில்) இருந்தனர் எங்கள் உலகத்தில்.

மெலிந்து நெடிந்துயர்ந்த தேகம். ஒடுங்கிய முகம், பெல்பொட்டம் மாதிரி ஒரு உடுப்பு. சேட் அதைவிட அலங்காரமோ, அகங்காரமோ இல்லாத மனிதர்தான் ஞானி மாமா. கர்ணணாகவும் இருந்தார் சிரிப்பிலும், குதூகலத்திலும்.

ஞானி மாமா தான் ”மாமா” என்றும் சொல்லின் இனிமையை எனக்குப் புரியவைத்தவர்.

சைக்கில் ஓட்டப் பழக்கினார். அது பழகியதும், ஓடிக் கொண்டிருக்கும் சைக்கிலில் (பார்) இருந்து பாய்ந்து இறங்க, பாய்ந்து ஏறி இருக்க, அதன் பின் டபிள் ஏத்தியோட, சிறு தடி கொண்டு களண்ட சைக்கில் செயின் பூட்ட

கட்டப்பொல் கட்டவும் அடிக்கவும், ரப்பர் கொட்டையில் ஐஸ்பழத் தடி வைத்து காற்றாடி செய்ய, ஆற்றில் குளிக்க வானில் பறக்கும் பலூன் செய்ய, இப்படி எத்தனையோ

ஒரு நாள்
”டேய், மாட்டின் வாலில் காய்ந்த தொன்னமோலை கட்டுடா மாடு ஒரு நாளும் எழும்பி நடக்காது” என்று கிண்டிவிட்டார் எனது ஆர்வத்தை. எங்கள் வீட்டருகில் இருந்த சந்தையில் பல சோம்பேறி மாடுகள் வாழ்ந்திருந்தன. நான் அருகில் சென்றால் நக்குமளவுக்கு நட்பாயுமிருந்தன.

அவற்றில் ஒன்றுக்கு காய்‌ந்த தென்னமோலை கட்டினேன் (ஞானி மாமாவும் வந்திருந்தார், அவரின் கொடுப்புக்குள் ஒரு குசும்புச் சிரிப்புமிருந்தது அதனர்த்தம் அப்போது புரியவில்லை எனக்கு)

மாடும் வாலை நீட்டிப் மிகவும் ஆசுவாசமாகப் படுத்திருந்தது. காய்ந்த தென்னமோ‌லையை கயிற்றின் ஒரு நுனியில் கட்டி மறு நுனியை மாட்டின் வாலில் கட்டினேன்.

மாடு அசையவில்லை, ஆனால் திரும்பி என்னை நக்கியது
5 நிமிடம் பொறுத்துப் பார்தேன் மாடு மாமா சொன்னமாதிரி எழும்பவேயில்லை

”நீங்கள் சொன்னது சரி தான் மாமா” என்றேன் சந்தோசத்தில்
”ம்”  என்றுவிட்டு சொன்னார்
”நீ உதைத்தாலும் எழும்பாது” என்று
மடையன் நான்... உதைத்துப் பார்‌த்தேனே அந்த மாட்டை

துடித்து எழும்பியது மாடு, எழும்பிய வேகத்தில் ஓலை சர சரக்க பயத்தில் வேகமாக ஓடத் தொடங்கியது
வெடித்துச் சிரித்தபடியே, ”என்னடா மாடு எழும்பீட்டுது” என்றார் நக்கலாய் (அப்போதுதான் புரிந்தது அவர் திருகுதாளம்)

மாடு மார்க்கட்டை கடந்துகொண்டிருந்தது.  அவசரசிகிச்சை வண்டிக்கு இடம் விட்டுக்கொடுக்கும் வாகனங்கள்போல் மனிதர்கள் விலக, மாட்டின் வேகம் கூடியது.
”ஏறுடா சைக்கிலில்” என்றார் ஞானி மாமா. பாய்ந்து ஏறி‌னேன் ”நானும் வரட்டாவில்” (துவிச்சகரவண்டி)
மாடு சந்தையின் இடது பக்கம் திரும்பி பதுளையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.

மாமா மாடு மாதிரி துவிச்சக்கரவண்டியினை மிதித்துக்கொண்டிருந்தார்.

நான் காற்றில் இருந்தேன்.

மாடு ஓட, மாமா உளக்க, நான் சிரிக்க
அன்றைய நாள் வாழ்வில் மறக்க முடியாத நாளாக மாறிக்கொண்டிருந்தது.

மாலை அம்மாவிடம் நடந்ததை போது, காது திருகி மாடு பாவமடா.. என்றார் அன்பாய்
புதினமாய் வெடித்துச் சிரித்தார் அப்பா, ஞானி மாமாவை கடைக்கண்ணால் பார்த்தபடி.

மாடு மாதிரி நாய்க்கு பெற்றோல் ஊத்தினாலும் ஓடுமடா என்று சொல்லியும் தந்தார் மற்றோரு நாள்
(அதையும் செய்து பார்த்திருக்கிறேன்.. எனக்கு அதுவும் ஒரு அற்புதமான அனுபவம், ஆனால் பாவம் நாய் )

அப்பாவின் துவிச்சக்ரவண்டியில் மின்ஊக்கியினுள் (டைனமோ) காந்தம் இருக்கிறது என்னும் அற்புதமான அறிவுரை தந்த என்னை ஒரு விஞ்ஞானியாக்கியதும்.

கடைக்குப் போனால் மிட்டாயும் ஐஸ்பழமும், மார்கட்டுப் போனால் தும்பு முட்டாஸ், நிறம் நிறமாய் தொங்கும் நைஸ் வாங்கித்தந்தும், கிழமைக்கு ஒரு காமினி பொன்சேகா படம், விடுமுறைகளின் போது சிறு சிறு பயணங்கள் என்று அன்பான மாமாவாய் வியாபித்திருந்தார் என்னை அடுத்து வந்த பல வருடங்கள்.

77ம் ஆண்டு தேர்தலின்போது ”ஆண்ட பரம்பரை மீண்டுமொரமுறை ஆள நினைப்பதில் என்ன குறை?” என்று சொல்லித்திரியுவும் சொல்லித்தந்தது அவர் தான். (காசிஆணந்தனின் சுலோகம் இது)

1978 இல் ஏறாவூருக்கு இடம் பெயர்ந்த போது குறைந்து போனது அவர் அருகாமை. நானும் சற்றே வளர்ந்திருந்ததாலும் வௌ்ளைச்சட்டைத் தேவதைகள் கவனத்தை ஈர்த்தாலும் ஞானி மாமாவின் பிரிவு பெரிதாய் பாதிக்கவில்லை என்னை இருப்பினும் அடிக்கடி ஞாககத்தில் வந்து போனார், வீட்டுக்கும் வந்து போனார்.

1983 இன் ஆரம்பத்தில் என்று நினைக்கிறேன் கொழும்பில் அவர் வீடு தேடிப் போய் சந்தித்த போது
அடிக்காத குறையாய், பேசிக் கலைத்தார் என்னை வாழ்க்கையே வெறுத்திருந்தது அன்று மாலை வரை

அன்று மாலை இருட்டியபின், நாம் தங்கியிருந்த வீடு வீடு தேடி வந்து (ஏறத்தாள மாறு வேடத்தில்) அருகிலமர்த்தி இப்படிச் சொன்னார்.

தான் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தொழில் புரிவதாயும் குட்டிமணி, தங்கத்துரை மற்றும் பலருக்கு பல்வைத்தியம் பார்த்த போது அவர்கள் தந்த கடிதங்களை வெளியிடத்துக்கு பரிமாறியதாகவும் அதை அறிந்த சிறைக்காவலர் தன்னை போலீசிடம் பிடித்துக்கொடுக்க சில காலம் 4ம் மாடியில் அரச விருந்தினராக தங்கி இருந்தாரென்றும், தற்போது தன்னை அவர்கள் பின்தொடர்வதாலேயே தான் என்னை வாசலில் வைத்தே திருப்பி அனுப்பினார் என்றும் சொன்னார்.

மாமா மாறவில்லை என்பது போதுமானதாயிருந்தது யிருந்தது எனக்கு

மாமாவின் பூர்வீகம் திருகோணமலை. ஒரு அண்ணணும் இரண்டு சகோதரிகளும் இருந்தனர் அவருக்கு. தாயார் மட்டுமே உயிருடன் இருந்தார்.

ஈழத்தமிழர்களின் விடுதலையின்பால் ஆர்வம் கொண்டிருந்தார். இந்து இளைஞர் மன்றம் அது இது என ஓடித்திரிந்தார் என்றும் ஞாபகமிருக்கிறது. ஏதோவொரு இயக்கத்திலும் இருந்தார் என்று நினைக்கிறேன்.

ஒரு முறை அம்மாவிடம் அடம்பிடித்து ஞானி மாமாவுடன் திருகோணமலைக்குச் சென்றேன். அவர் போகுமிடமெல்லாம் நானும் சைக்கிலில் தொத்தி்க் கொண்டேன். கடற்கரை, சுடுதண்ணிக் கிணறு, கோயில், தியட்டர் என எல்லாம் காட்டினார். ”ராவணண்வெட்டை”க் காட்டி இந்தக் கதைகளை நம்பாதே, உருப்படமாட்டாய் என்றும் போதித்தார்.

எப்போதும் ஒரு ரொலெக்ஸ் கமரா (கறுப்பு வெள்ளை) வைத்திருப்பார் எப்பவும். என்னையும் தம்பியையும் அதிகமாய் படமெடுப்பார். தேவைக்கு அதிகமாய் பௌடர் பூசி வரும் எங்களை படம் எடுப்பார். எனக்கு புகைப்படக் கலையில் எனக்கு ஆர்வ‌மேற்பட அவர்தான் காரணம்.

எனக்கு அவரிடம் பிடிக்காததது அவர் சிவாஜி ரசிகன் என்பது மட்டுமே. எம்.ஜி.ஆருக்கு நடிக்கத்தெரியாதென்பார். அவருடன் சிவாஜிக்கு சண்டைபிடிக்க தெரியாது என்பேன் நான். சிரித்து, தலையைக் கலைத்து விடுவார். அனால் எம்.ஜி.ஆரின் ஒரு பாடல் அவருக்கு மிகப்பிடித்திருந்தது.

திருமணமாகாதவர் அவர். அடிக்கடி ”கட்டித் தங்கம் வெட்டியெடுத்து காதல் என்னும் சாறுபிழிந்து ” என்ற எம்.ஜி.ஆரின் பாடலைப் படிப்பார். கையால் தங்கம் வெட்டுவது போல நடித்துக்காட்டுவாா். அவருக்கு காதல்தோல்வி ஆகியிருக்மோ என்னமோ என்று நானும்  யோசித்திருக்கிறேன், பதில் கிடைக்கவேயில்லை கடைசிவரை.
காலங்கள் ஓடின, காட்சிகளும் மாறின,  மாமாவின் தொடர்பறுந்துபோனது மெதுவாய். பதின்மக்காலத்தின் கவர்ச்சியில் நானும் மாமாவை மறந்து தான் திரிந்திருந்தேன். இந்தியா சென்று பின்பு நோர்வே வந்தபின்னான காலத்தில் செய்தி கிடைத்தது. செய்‌தி எப்போது கிடைத்து என்பது மறந்து விட்டது. ஆனால் கனமாய் மனதில் பதிந்துவிட்டது அச் செய்தி.

EROS இயக்கத்தினரால் 1980 இன் நடுப்பகுதியில் திருகோணமலையில் ஒரு மலசலகூடத்தினுள்  வைத்துப்பூட்டப்பட்டு, பட்டினி போடப்பட்டு கொலைசெய்யப்பட்டாராம்.

காரணம்:
இரண்டே இரண்டுதான். முதலாவது,  பொதுப் பணத்தை இவர்களுக்குக் கொடுக்க மறுத்தாரம்.

பரிசுத்தமானவர்களே!

நீங்கள் அவரை வளமைபோன்று சுட்டுத் தள்ளியிருக்கலாமே. உங்களின் கொலைப்பசிக்காக அதற்காக ஒரு மனிதத்தை பட்டினி போட்டுக் கொல்வதா?

இவை தான் மாமாவின் ஞாபகங்கள். அவ‌ரெடுத்த படங்கள் சில அம்மாவிடம் உண்டு. எடுத்து வர வேண்டும் அடுத்தமுறை.எனதன்பு ஞானி மாமாவுக்கு இது அர்ப்பணம்

இவை தான் மாமாவின் ஞாபகங்கள். அவ‌ரெடுத்த படங்கள் சில அம்மாவிடம் உண்டு. எடுத்து வர வேண்டும் அடுத்தமுறை.எனதன்பு ஞானி மாமாவுக்கு இது அர்ப்பணம்
 

சஞ்சயன்
11.06.10
ஒஸ்லோ

இந்தக் கணம்

மனம்
கனம்
ரணம்
வாழ்வு

தூரமாய் நான்
எல்லோருக்கும்
ஏன், எனக்கும் தான்

இருப்பதில்
இருப்பில்லை

இறப்போமென்றால்
பிடிப்பில்லை

குரங்காய்
மனது

வழமை போல்
வாழ்கிறது
வாழ்வு

பாசமும் பாரமும்


இதை எழுதத் தூண்டிய எனது பூகுட்டிக்கும், வேறு சிலருக்கும் எனது நன்றிகள்
..........................................................

இனி கதைக்குப் போவோம்...

மதிய வெய்யிலும், இளவேனில் கால குளிரும் தங்களுக்குள் ‌யார் பெரியவன் என போட்டி போட்டுக் கொண்டிருந்தன. என் காதை சூடேற்றிக் கொண்டிருந்த சூரியனை குழப்பாமல் காதை மேலும் சூடேற்றுவதற்கு வசதியாய் சூரியனை நோக்கி காதை திருப்பி வைத்துக் கொண்டு, வேலியில் சாய்ந்து கொண்டேன். என்னைச் சுற்றியிருந்த பலரும் கறுப்பு கண்ணாடிகளுடன் சூரியனின் சூட்டை அனுபவித்தபடி என்னைப் போலவே காத்திருந்தார்கள்.

நான் மணியைப் பார்த்தேன்
15.04 என்றது கைத்தொலை பேசியில் இருந்த மணி.

ஒடுங்கிய அந்த பாதையின் இருமருங்கிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுக் கொண்டிருந்தன.
பல வித வயதிலும், உருவத்திலும், இனத்திலும், நிறத்திலுமானவர்கள் நான் நின்ற இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர். எல்லோர் முகத்திலும் ஒரு எதிர்பார்ப்புக் குடியிருந்தது.

ஒரு கை தாயின் கையை பிடிக்க, மறு கையில் கரடிப் பொம்மை அசைந்தாட, தத்தி நடைபயின்று வந்து கொண்டிருந்தாள் ஐரோப்பா கண்டமும் ஆபிரிக்கா கண்டமும் கலந்து செய்ததொரு குழந்தை. சுறுள் சுறுளான செம்பட்டை முடி காற்றில் அசைந்தாட, பழுப்பு நிறமான முகத்தில் நீலமான கண்களுடன் நான் தான் உலகின் முழு அழகும் என்று சொல்வது போல் வந்து கொண்டிருந்தாள். அவளின் கண்களிலும் ஆர்வம் தெரிந்தது.

நிறைமாத கற்பிணியொருவர் நடக்க முடியாமல் ஓய்வெடுத்து ஓய்வெடுத்துப் பெருமூச்செடுத்தபடியே வந்து கொண்டிருந்தார்.

வயது போன தடியூண்றிய தாத்தாவின் கையுடன் தனது கையைக் கோர்த்தபடி வந்து கொண்டிருந்தார் ஒரு பாட்டி.
கையுக்குள் இருந்த ஒரு குமிழியை அசைத்து, திருப்பி தனது சக்கர நாற்காலியை நகர்த்திக் கொண்டு வந்து கொண்டிருந்தார் நடுத்தர வயதுடைய ஒரு பெண்மணி.
தமக்குள் பேசியபடியே வந்தனர் ஒரு தம்பதியினர்.
கண்கள் மட்டும் தெரியக் கூடிய புர்க்கா அணிந்தபடி வந்து கொண்டிருந்தார் வயது என்ன என்று குறிப்பிட்டுக் கூற முடியாத ஒரு பெண்.
தலைப்பாகையுடன் வந்தார் ஒரு சீக்கியர்.
தாடி வளர்த்து தொப்பி போட்ட இஸ்லாமியர் இருவர்.

தவிர

தனித்தனியே வந்தனர் பலர்.
தெரிந்தவர்கள் பேசிக் கொண்டனர்.
சிலர் புன்னகைத்துக் கொண்டனர்.
கடந்து போனார் ஒரு தமிழ்ப் பெண். புன்னகைத்துக் கொண்டோம்.

மீண்டும் மணியைப் பார்த்தேன்
மணி 15.15 நெருங்கிக் கொண்டிருந்தது.

வந்தவர்களும் ஆர்வமாய் காத்திருந்தனர்.
சில குழந்தைகள் சில நிமிடங்களுக்குள் நட்பாகிக் கை கோர்த்து விளையாடினார்கள்.

நேரம் 15.15

டிரீரீரீரீரீங், டிரீரீரீரீரீங் என Wimbledon Primary School என்னும் ஆரம்ப பாடசாலையில் மணியடித்தது.

எல்லோரினது கவனமும் பாடசாலையின் கதவுகளை நோக்கி திரும்ப பாலர் வகுப்புக்குள் பூத்திருந்த பூக்கள் எல்லாம் ஓடி வந்து கொண்டிருந்தார்கள் தத் தம் செடிகளை நோக்கி.

அந்த முகங்களில் தான் எத்தனை எத்தனை ஆனந்தம்.
தாயிடம் ஓடும் றோசாக்கள்!
தந்தையிடம் ஓடும் சூரிய்காந்திகள்!
குனிந்து முழங்காலிட்டு தன் கழுத்தில் தொங்கும் பேத்தியை தூக்கும் முதிர்ந்த மரம் ஒன்று.
தலை கலைத்து சிரிக்கும் குனிந்து தன் மகளை தூக்க முடியாத கர்ப்பிணியாய் கனிந்திருந்த இள மரம் ஒன்று.
தனது சக்கர நாற்காலியில் குழந்தையின் புத்தகப்பையை வாங்கி வைத்து குழந்தையின் கை தடவும் சக்கர நாற்காலிச் செடியும்
ஓடிவரும் தன் பெண்குழந்தையை தூக்கி காற்றி லெறிந்து பிடிக்கும் ஒரு கம்பீர ஆண்மரமும்
தன் பெற்றோரை காணாமல் விம்ம தயாராகும் பிஞ்சு மொட்டும்
ஓடி வந்த வேகத்தில் விழுந்து பெருங்குரலெடுக்கும் சிறு மழலை ஒன்றும் அவனை நோக்கியோடும் தாய்மரமும் சிறு மொட்டைப் பார்த்துக் கையசைக்கும் சிறுமலருமமாக,

அந்த சில நிமிடங்களில் அவ் இடம் ஆனந்தங்களால் நிரம்பிய பூங்காவாக மாறியிருந்தது.

மற்றவர்களின் மட்டற்ற மகிழ்ச்சியை நேரில் பார்த்ததும் எனக்குள்ளும் மகிழ்ச்சி தொற்றிக கொள்ள. புன்னகை முகத்தில் கேக்காமலே வந்தமர்ந்தது.

எனது சிறு மலரைத் தேடினேன். அணைத்து முத்தமிட துருதுருத்தது
கையும் மனமும். எனது மலர் சற்றே வளர்ந்து விட்டதால் இன்னும் 5 நிமிடமெடுக்கும் அவள் வெளியே பறந்து வர.

சுற்றிலும் நோக்கலானேன்.

அருகில் நின்றிருந்த சிறுவன் தந்தையின் கையில் இருந்தபடி மூச்சு விட மறந்து தன்னை ஆசிரியை good boy என்று பாராட்டியதை சொல்லிக் கொண்டிருந்தான். ஆச்சரியப்பட்டு விரிந்த தந்தையின் கண்களில் இருந்த பெருமை கண்டு புன்னகைத்தான் சிறுவன். இறுக அணைத்துக் கொண்டார் தந்தை.

கையிலிருந்த அஜந்தா ஓவியத்தை பாட்டியிடம் காட்டிக் கொண்டிருந்தாள் ஒரு குட்டித் தேவதை. கறுப்பு கண்ணாடி கழட்டி, வாசிக்கும் கண்ணாடி போட்டு vonderfull என்று பாராட்டி உச்சிமோர்ந்தார் பாட்டி. மறக்காமல் பக்கத்தில் நின்றிருந்தவருடன் பேசிக் கொண்டிருந்த தாத்தாவுக்கும் காட்டி பெருமைப் பட்டுக் கொண்டார்.

காலையில் பாடசாலை போன தனது அண்ணணை தாயின் கையிலிருந்து குனிந்து முத்தமிட்டுக் கொண்டிருந்தது ஒரு சிறு ‌குழந்தை.

சற்றுத் தொலைவில் கர்ப்பிணித் தாயின் வயிற்றை தடவியபடியே ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள் ஒரு தேவதை.

சொல்லிவைத்தால் போல் எல்லா பெற்றோரும் குழந்தைகளின் பாடசாலை பையை வாங்கிக் கொண்டார்கள் போலிருந்தது எனக்கு.
இலகுவான இரு கைகளையும் வீசி கதை கதையாய் சொல்லும் சிறுசுகளும் ஆச்சரியமாய் கதை கேக்கும் பெரிசுகளும்...
எனக்கு தெரியாதது உனக்கு தெரிந்திருக்கிறதே என்று சொல்லி
அறிஞர்கள் அவையில் அறிவாளியாவதை விட குழந்தைகளின் சாம்ராஜ்யத்தில் முட்டாளாயிருப்பதே மட்டற்ற மகிழ்ச்சியைத் தரும் என்பதை நிருபித்துக் கொண்டிருந்தார்கள் சிலர்.

எத்தனை, எத்தனை கதைகளுடன் ஓடி வருகிறார்கள், சொல்கிறாகள் சொல்கிறார்கள்.. ‌சொல்லி முடியுதில்லை.. வீட்ட போயும் முடியாது..
பாடசாலைக்கு சென்ற களைப்பே தெரியவில்லையே இவர்களிடம்.
வேலையால் வரும் என்னையும், பாடசாலை முடிந்து வரும் இவர்களையும் ஒப்பிட்டுப் பார்த்தேன்.ஏதோ புரிந்தும் பரியாதது போலிருந்தது. குழந்தையும் கடவுளும் ஒன்று என்பதன் உண்மையும் புரிந்தது.

தனது புதிய கறுப்பு நண்பனை தன் தந்தையிடம் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தான் ஒரு வெள்ளைப் பாலகன்.
அவரும் முழங்காலிட்டு குந்தி அவன் கைபற்றிக் குலுக்கினார்.
தன் பெயர் முகமட் என்று பெரிய மனிதன் மாதிரி சொல்லி கை குலுக்கினான் அந்தச் சிறுவன்.

உச்சி பிரித்து
இரண்டு பின்னல் போட்டு
சிவப்பு ரிபன் கட்டி
பொட்டு வைத்து
சிவப்பில் வெள்ளை
அல்லது
வெள்ளையில் சிவப்பு
சதுரமிட்ட சட்டை
காற்றில் அசைந்தாட
வந்து
தன் தாயின் கழுத்தை கட்டிக் கொண்டாள்
சற்று முன் என்னைக்கடந்து போன தமிழ்த்தாயின் சொந்தப் பூ..

அம்மா நாளைக்கு சுவிம்மிங் இருக்கு என்று சொன்ன போது நாளைய நாளின் மகிழ்ச்சி தெரிந்தது
அந்த தமிழ் பூவின் குரலில்.

தாயிடம் புத்தகப் பையை கொடுத்துவிட்டு,
ஊஞ்சலுக்கு ஓடி...
ஊஞ்சல் பறித்து
வேகமாய் ஊஞ்சலாடிக்
காட்டிய சிறுவனைப் பார்த்துக் கவனம் மெதுவாய் ஆடு என்றார் தாய்.
அவனோ ஏறத்தாள 180 பாகையில் ஆடிக்கொண்டிருந்தான்.
தாயிடம் பெருமையையும், பயத்தையும் கண்டேன்.

டவுன்ஸ் சின்றொம் குழந்தையைக் கைப்பற்றி அழைத்து வந்து அக் குழந்தையின் தாயிடம் அவனை ஒப்படைத்து
திரும்பிப், திரும்பிப் பார்த்து கையசைத்தபடியே, தன் தாயிடம் ஓடினான் உண்மையான தேவதூதனொருவன்.

கதவருகில் தெரிந்தாள் என் மலர். எனக்குக் கை காட்டிய படியே பக்கத்தில் ஒரு நண்பியிடத்தில் ஏதோ சொல்லிச் சி‌ரித்தாள். நண்பியும் சிரித்தாள்.என்னைப் பற்றித் தான் ஏதோ சொல்லி சிரிக்கிறார்கள் என்றது பேய் பிடித்த, பெரியவர்களின் உலகத்தில் வாழும் என் மனது.

காக்க வைத்து அருகில் வந்து அணைத்துக் கொண்டாள்.
பிறவிப்பயனடைந்தேன் நான்.

பாடசாலைப் பையை வாங்கிக் கொண்டேன்.
சற்றே தண்ணி குடித்தவள்... கண்களினால் வேணுமா என்றாள்
‌சிரித்து வேணாம் என்றேன்.
கைகோர்த்த படி புறப்பட்டோம்.
திடீர் என ஊர் ஞாபகம் வந்தது.

யுத்தத்தின் எச்சத்தினால் பெற்றோரை இழந்து தவிக்கும் பிஞ்சுகளின் மனதும், பிச்சைக்காரர்களே இல்லாத என்னூரில் இன்று கையேந்தி நிற்கும் பிஞ்சு விரல்களும்..திருநெல்வேலிக்கே அல்வா குடுத்தவன்

இதை வாசிக்க முதல் நீங்கள் கீழுள்ள கதையை வாசித்திருந்தால் மட்டுமே இக்கதையின் லொள்ளு விளங்கும்.

இத்தால் சகல சோமாலிய நாட்டவருக்கும் ஏறாவூரைச் சேர்ந்த சஞ்சயன் என்னும் நான் அறியத்தருவது என்னவென்றால்

புதிய கதை தொடங்குகிறது....

சனிக்கிழமை காலை சிவனே என்று நிம்மதியாய்
படுத்தெழும்பி
மெயில் பார்த்து
ப்ளாக் வாசித்து
எழுதி
ஜாலியாக குளித்து
பிளேன் டீயை வாயில வைக்கிறன்...அடித்தது நாசமாபோன தொல்லபேசி

குரலைக் கேட்டவுடனேயே மற்றப் பக்கத்தில் கதைத்தவர் கண்முன் தெரிந்தார் (சத்தியமா சார்)
வேறு யார் இப்படி தங்கள் நாட்டு மொழியின் ஒலிகளைக் கலந்து இந்நாட்டு மொழியை வற்புணர்ச்சி செய்வது?

இவர்கள் யேமன் நாட்டுக்கு தெற்காககவும், ஏத்தியோப்பியாவுக்கும் கென்யாவுக்கும் கிழக்காகவும் இருக்கும் ஒரு நாட்டவர்கள்.. நீண்ட கடலோத்தைக்கொணட நாட்டவர்கள்

வேற மாதிரி சொன்னால் என்னை தங்கள் நாட்டவர் என்று நினைக்கும் பெருந்தன்மை நாட்டுக்காரர்.
இதவிடவா விளக்கிச் சொல்லனும்.....

பச்சையாகச் சொன்னால் சோமாலியா நாட்டவன் ஒருத்தன்.

என்னடா இது... நம்மள கண்டால் தானே கலைத்து கலைத்து கதைப்பான்கள்.. இப்ப எப்படி தொலைபேசியில் என்னைக் கண்டு பிடித்தான் என்று பலமாய் யோசித்துக் கொண்டிருந்தேன். அவனோ காதுக்கே சகிக்காத ஒலிகளுடன் எனது ஒரு காதைக் குடைந்து கொண்டு மற்ற காதுக்குள்போக முயற்சித்துக் கொண்டிருந்தான்.

நண்பா, என் நிறத்தவனே! தொலைபேசி எடுத்தால் முதலில் உன் பெயர் சொல்லி நான் தான் கதைக்கிறேன் என்றும் இன்னாருடன் கதைக்கமுடியுமா என்றும் கேட்க வேண்டும் என்பது கூட தெரியாதவனா நீ..
என்று
எனது மனம் சொல்லிக் கொண்டிருந்தது.

அவன் அடுத்தமுறை மூச்சு எடுப்பதற்காக சம்பாசணையை நிறுத்தும் வரை காத்திருந்தேன்... சற்றே ஓய்ந்தான்.
மை ப்ரென்ட் என்றேன்

மீண்டும் நிறுத்தாமல் தொடங்கினான். சற்று கடுமை கலந்து ”நிறுத்து” என்ற போது நிறுத்தினான்.
தயை செய்து மிக ஆறுதலாக, மெதுவாக பிரச்சனையைச் சொல் என்றேன் (எனக்கு ஓரளளவு பிரச்சனை விளங்கியிருந்தது காதில் விழுந்த ஓரிரு சொற்களால்)

சொன்னான் இப்படி

நான் ஒரு சோமாலிய நாட்டவனாம் (நமக்கு தெரியுமுல அது)
கணணி திருத்தப்பட வேண்டும் என்றான். சரி என்றேன்
என்ன பிரச்சனை என்றேன்
மை ப்ரெணட்... நோ பிக்கசர் கம்மிங் என்றான்
ம் கொட்டினேன்
யு கம் நவ் என்றான்.
சற்று யோசித்தேன்.... நமக்கும் அங்காலப்பக்கம் போற வேலை இருந்தது..
சரி இன்னும் 30 நிமிடத்தில் ஒரு இடத்தைக் குறிப்பிட்டு அங்கு வா என்றான். சரி என்று சொல்லி
25வது நிமிடத்தில் அவனுக்கு போன் பண்ணி வந்துவிட்டேன் என்றேன். பொறு 2 நிமிடத்தில் வருகிறேன் என்றான்
2..நாலாகியது, 4 எட்டாகியது, 8 பதினாறாய் போனது. ”ஆப்ரிக்கன் டைம்” என்று ஒரு சொற்றொடர் இருக்கிறது கேள்விப்பட்டதுண்டா நீங்கள்? அதற்கு அர்த்தம் சொல்லித்தந்தது அவனின் நடவடிக்கை.

எனக்குள் எரிச்சல் குடிவந்து குரல் வழியே அவனை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது.
காத்திருக்கிறேன் உனக்காக என்றேன் (காதலில் அல்ல)

ஒரு கடையின் பெயரைச் சொல்லி கணணி அங்கிருப்பதாகச் சொன்னான்.
அய்யா.. நீர் வந்து அதை எடுத்துத்தாரும்..தவிர உம்மிடம் பேச வேண்டியும் உள்ளது என்றேன்.

இல்லை நீ அந்த கடையில் வைத்துத்தான் கணணியைத் திருத்த வேண்டும் என்றான்.

எனக்கு கொதி வரத்தொடங்கி அது அரைவாசித்தூத்தை கடந்து கொண்டிருந்தது.

நீ வராவிட்டால் போய் விடுவேன் என்று வெருட்டினேன்
நீ காசு வாங்கியிருக்கிறாய் திருத்தியே ஆக வேண்டும் என்றான்.

வெள்ளிக்கிழமை இரவு அடித்த தண்ணி இன்னும் முறியவில்லையோ இவனுக்கு என்று யோசிக்கலானேன்.

நான் மௌனித்ததை "சம்மதம்" என்று நினைத்துவிட்டான் பாவிப்பயல்

காசு வாங்கினால் வேலை செய்து தரவேண்டியது முக்கியம் என்றான்
அத்துடன் கடந்த ஒரு வாரமாக எனக்காக காத்திருக்கிறானாம் என்றும் ஒரு போடு போட்டான்..

தலை சுற்றத் தொடங்கியிருந்தது எனக்கு.
நண்பரே! நீங்கள்சொல்வது எதுவும் எனககுப் புரியவில்லை. எதற்கும் நீங்கள் சொல்லும் கடைக்கு வாருங்கள் பேசித்தீர்ப்போம் என்றேன்.

நீ அங்கு போய் கடை முதலாளியை என்னுடன் பேசச் சொல் என்றான் (நம்மள பார்த்தா எல்லாருக்கும் இளிச்சவாயனா தெரியுது போல)

சரி என்று கடைக்குப் போய் இங்கு இரண்டு (ஒன்றல்ல இரண்டு) கணணிகள் இருப்பதாகவும், அவை எங்கிருக்கின்றன என்றும் கேட்டேன். அந்தக் கடை ஒருசோமாலியன் கொமினிகேசன் சென்டர். கடை முழுவதும் நிறைந்திருந்த என்நிறத்தவர்கள் யார் இந்த புதிய உறவு என்று என்னை அளவெடுத்துக் கொண்டிருந்தார்கள். புன்னகையை அன்பளிப்பாய் கொடுத்துக் கொண்டிருந்தேன் அவர்களுக்கு நான்..

கடைக்காரன் என்னை ஏற இறங்கப் பார்த்து வாயைப் பிதுக்கினான்.

இல்ல ராஜா... இங்க ரெண்டு கொம்பியூட்டர் இருக்கு என்றுசொல்லி நிமிர்ந்த போது அவனின் மேசையில் எனது விசிட்டிங் கார்ட் இருந்தது. (முன்பு ஒரு நாள் நான் (இப்ராஹீம்) ஒரு உண்மையான சோமாலிய ஜீவனிடம் சில விசிட்டிங் காட்ஜ கொடுத்து உங்கள் நாட்டு கடைகளில் வைத்துவிடு என்றது நினைவில் வந்தது. (இப்ராஹீம் சொன்னதை நீ செய்ததற்காய் உன்னை வணங்குகிறேன்.ஆயிரத்தில் ஒருவனய்யா நீ)

விசிட்டிங் கார்ட்ஜ காட்டி இது நான் தான் என்றேன்... அது யாராய் இருந்தால் என்ன இருந்துவிட்டு போ என்பது போல் பார்த்தான் என்னை.

எரிச்சல் உச்சியை பிளக்க... போன் பண்ணினேன் முதலாமவனுக்கு. நான் கடையில் நிற்பதாயும் முதலாளியுடன் நீயே கதைத்துக்கொள் என்று சொல்லி முதலாளியிடம் தெலைபேசியைக் கொடுத்தேன். இரண்டு சேவல்கள் மோதிக்கொண்டன போலிருந்தது அவர்களின் மொழி. ஐந்து நிமிடத்தின் பின் ”பக் யூ மான்” என்று அவனுக்குச் சொல்லி தொலைபேசியை என்னிடம் நீட்டியவன்

எரிச்சலில் தலையை வலது இடது பக்கம் என ஆட்டியவன் நொர்வேஜிய மொழியில் அவன் விசரன் என்று சொல்லி தொலைசியைத் தந்தான். (அண்ணண் வடிவேலு காதுக்குள் "ஆகா" என்று சொன்னது மாதிரி இருந்தது எனக்கு)

தொலைபேசி அடங்கப்போயிருந்தது மறுபக்கத்தில்.

கடை முதலாளி பேசத் தொடங்கினார். (கவனமாய் கேட்டுக் கொள்ளுங்கள் அவர் சொல்வதை.. எனக்கு நாலைந்து தரம் ஒரு விடயத்தை கதைப்பது பிடிக்காது)

நண்பரே! என்றான்என்னைப் பார்த்து (புன்னகைக்கிறேன் நான்)
உட்காருங்கள்என்றான் (உட்கர்ந்தேன்)

உங்களுக்கு போன் போட்டவர் தமது நாட்டவர் என்றார்; (அது தான் நமக்கு நல்லாவே தெரியுமே)
தனது கடையில் ஒரு ப்ராடு மனிதர் கடந்த ஒரு வாரமாக வேலை பார்த்ததாயும். தான் தற்போது அவரைத் தேடிவருவதாயும் சொன்னார் (அண்ணண் வடிவேலு மீண்டும் காதுக்குள் "ஆகா" சொல்லிப் போனார்)

அவன் உங்களோடு தொலைபேசியில் பேசியவனிடம் 2 கணணி திருத்தித் தருவதாக 500 குறோணர்கள் வாங்கிவிட்டு உங்கள் தொலைபேசி இலக்கத்தை குடுத்து இவரிடம் தொடர்புகொள் என்றிருக்கிறான். அத்துடன் கணணியை கடையில் வைத்துத்த்தான் திருத்துவதாகவும் நம்பிப்கையூட்டியிருக்கிறான். தற்போது அவரின் இரண்டு கணணிகளுடனும் இன்னும் சில பல பொருட்களுடனும் ஆள் மாயமாய் மறைந்து விட்டான் என்றார்..
(நம்ம வடிவேலண்ணண் எனது தோளில் கைபோட்டு தம்பீ!”ரொம்ப பீல்” பண்ணுறீங்களா என்றார்)

எனக்கு அவனின் சாதூர்யம் சிரிப்பதைத்தந்திருந்தது. மற்றவனின் மேலிருந்த கோபம் போய் பரிதாபம் ஏற்பட்டது.. கணணி திருத்தப் போய் தனது 2 கணணிகளையும் இழந்து, காசையும் இழந்து ...... கொடுமடா சாமி.

சிவா என்றொரு குசும்புக்கார நணபர் ஒருவர் இருந்தார் எனக்கு (இப்ப அவர் எமனிடம் குசும்பு பண்ணுகிறார்). அவர் அடிக்கடி சொல்லும் ஒரு சொற்றொடர் ஞாபகத்தில் வந்தது அப்போது ”விதி கிழிந்த குருவி பீரங்கி வாசல்ல கூடு கட்டிச்சாம்” என்பது தான் அது. (குருவியின் நிலையை போசித்துப் பாருங்கள் மிச்சம் தானே புரியும்) நம்ம சிவாவைப்பற்றி வாசிக்க இங்க போங்கள்.

அடுத்து கடைக்காரனிpன் நிலையை யோசித்துப் பார்த்தேன்.
நாளைக்கு கணணியை திருத்தக் கொடுததவன் உன்னிடம் தந்த கணணிகளைத் திருப்பித் தா என்று கேட்டால்....அல்லாவே!
(எடுத்திட்டு ஓடினவன் ரிசீட் வேற கொடுத்தானாம்... தெய்வமய்யா அவன்)... நம்மள விட நொந்து நூலாப் போனவர்கள் அதிகமானவர்கள் இருக்கிறார்கள் போலிருக்கிறது இந்தப் பூலோகத்தில்.

ஒரு குறுஞ்செய்தியில் எனக்கு ஒரு கடைகளுடனும் கணணி திருத்தும் ஒப்பந்தம் இல்லை என்றும் தேவை எனின் நேரில் தொடர்பு கொள் என்றும் எழுதி அனுப்பினேன் முதலாமவனுக்கு. பதிலே வரவில்லை சகோதரத்திடமிருந்து..
நொந்த மனதுதல்லவா அது...

திருநெல்வேலிக்கே அல்வா குடுத்தவனை தேடுகிறேன்.. சிஸ்யனாய் சேர்த்துக் கொள் தலிவா என்று கேட்பதற்காய்..
கண்டால் சொல்லியனுப்புங்கள்.

பி.கு. ஆனால் முக்கியமானது:
பலர் வந்து போகிறீர்கள் எனது ப்ளாக் பார்க்க.. மிக்க மகிழ்ச்சி.
திரும்பிப் போகும் போது ஒரு கொமன்ட் அடிச்சிட்டு போறது (பயங்கரமா தண்ணி அடிக்கிறீங்க.. ஆனா ஒரு கொமன்ட் அடிக்க மாட்டென்கிறீர்கள்.. நியாயமா இது? அண்ணண் வடிவேலு இப்படிச் சொல்லச் சொன்னார்... வெர்ர்ர்ரி பாட்.

அன்புடன்
இந்த சோமாலிய நாட்டு நண்பர்களால் தொடந்தும்
இம்சைக்குள்ளாக்கப்படும்
City Of ஏறாவர் ஐச் சேர்ந்த
சஞ்சயன்

.

புத்தகமாய் நினைத்துப் பார்க்கிறேன் என்னை


சற்றே பழசு தான்
இருப்பினும்

அன்பாய் படித்து
நெஞ்சோடு அணைத்து முத்தம்தரும் இரு இளவரசிகளும்
தென்றலாய் தொட்டுப் பேசிப் போகும் நட்புகளும்

அலுக்காத புத்தகம் என்று பதிப்பத்தாரும்

மிதிபடும் போதெல்லாம் தூக்கி கவனமாய் வைக்கும்
பனிவிளை பூமி நண்பர்களும்

பால்யத்தில் தொலைத்து
தற்போதும் தேடுபவர்களும்

கடந்து போகும் போது
புத்தகத்தின் அட்டையை
கடைக்கண்ணால் பார்ப்பவர்களும்

வாங்கிப் படித்தவர்களும்
விற்றுப் பிழைத்தவர்களும்
விலைபேசிவிட்டுப் போனவர்களும்
கையில் தூக்கிப் பார்ப்பவர்களும்
தூக்கி வீசுபவர்களும்
ஓரிரு பக்கங்கள் புரட்டுபவர்களும்

இது ”முடிந்து” தொலையாதா என ஏங்குபவர்களும்

படித்த பின் பரணில் தூக்கிப்போடுபவர்களும்
அல்லது கிழித்து கடலை சுற்றுபவர்களும்
அதையும் தாண்டி
அலுத்து விலை பேசுபவர்களும்
இது சகதி என்ருரைத்து
தம்மைச் சுத்தமாக்கிக் கொள்பவர்களும்
கிழித்து குண்டி துடைப்பவர்களும்

ஆகா! வாசிப்பதில் தான் எத்தனை வகை

என் தலையும், உடலும்
ஏனைய பாகங்களும்
சிதைக்கப்பட்டு, கிழித்தெறியப்பட்டிக்கலாம்
இனி மேலும்
சிதைக்கப்படலாம்

ஆனாலும்
உங்கள் வாசிப்பின் புண்ணியத்தில்
கனமான புத்தகமாக
நான்

நன்றும் தீதும்
இங்குமுண்டு
எங்குமுண்டு
... ... ...

முகமிழந்த மனிதர்கள்


முகமிழந்த ஒரு சமுதாயத்தின் கதையிது.

பல தடவைகள் கடந்து போயிருக்கிறேன் இவர்களை. பல கதைகள் கேட்டிருக்கிறேன் இவர்களைப் பற்றி. இருப்பினும் கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு சம்பவத்தின் பின் இவர்களைப் பற்றி அறிந்து கொள்ளவேண்டும் என்னும் ஆவல் அதிகரித்திருக்கிறது.

சில வாரங்களுக்கு முன்பொருநாள் ஒஸ்லோ புறநகர்ப்பகுதியான குரோன்லான்ட் என்னும் இடத்தி்ல் அமைந்திருக்கும் ஒரு கொமினிகேசன் சென்டருக்கு மாலை 8 மணிபோல் போயிருந்தேன்.
நான் அங்கு நின்றிருந்த போது அங்கு வந்தனர் சில மனிதர்கள்
வயது 30 ஐ தாண்டியிருக்கும் எல்லோருக்கும்
பேரன், தகப்பன், மகள் போலிருந்தனர் அவர்கள் வயதில்
களைத்த, சவரம் செய்யாத முகம் ஆண்களுக்கு
ஊத்தை திட்டுத்திட்டாய் பெண்கள் முகத்தில்
வருடக்கணக்கில் தண்ணியை கண்டறியாத உடைகள்
அந்த மனிதர்களும் அப்படியே போலிருந்தது
முகத்தில் வந்தடித்த துர்வாடை

அவர்கள் உள்ளே வந்ததும் முகம் சுளித்தது உள்ளேயிருந்த மனிதர் கூட்டம்
சிலர் ஏதொ முணுமுணுத்தனர்
வந்திட்டாங்கள்.. கவனம் சாமான்கள் என்றனர் வேறு சிலர்
விரைவாய் வெளியேறினர் இன்னும் சிலர்

அவர்களோ மற்றவர்களை கவனிக்கவில்லை. தங்கள் மொழியில் ஏதோ சொன்னார்கள் அந்த கடைக்காருக்கு அவரும் அதை புரிந்தவர் போல் தலையாட்டினார்.

ஒரு சிறிய காகிதத்தில் ஒரு தொலைபேசி இலக்கத்தை எழுதி அதை கடையுரிமையாளரிடம் கொடுத்தனர். அவரும் இலக்கம் 3 என்று அவர்கள் மொழியில் சொல்ல 3ம் இலக்க அறைக்குள் புகுந்து கதவைச்சாத்தி கதைக்கத் தொடங்கினார் ஒருவர். மற்றவர் ஒருவர் வேறு இலக்க அறைக்குள் புகுந்து கொண்டார். அவர்களுள் மிகவும் வயதானவர் அங்கிருந்த ஒரு கதிரையில் கோழித்தூக்கம் போட்டுக் கொண்டிருந்தார். மற்வர்கள் இருவரும் மிகவும் சத்தமாய் புரியாத மொழியில் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.

அந்தக் கடை முழுவதும் ஒரு வித துர்நாற்றம் பரவிக் கொண்டிருந்தது. பலரும் முகம் சுளித்தனர், நான் உட்பட. என் மனம் முழுவதும் ஏன் இவர்கள் இப்படி மணக்கிறார்கள் என்ற கேள்வியாயிருந்தது.

கதைத்து முடிந்து மிகவும் சில்லறையாயிருந்த காசுகளை கொடுத்து, கடனும் சொல்லி, கோழித்தூக்கம் போட்டுக் கொண்டிருந்த பெரியவரை பலவந்தமாக எழுப்பி அழைத்துப் போயினர் அவர்கள்.

கடைக்காறர் கதவுகளை நன்றாய் திறந்துவிட்டார், வாசனைத்திரவியம் தெளித்தார், ஸ்பிரிட் கொண்டு தொலைபேசியை கழுவினார். இப்படிச் செய்யாவிட்டால் அவரின் பாவனையானர்களை இழக்க நேரிடும் என்றார். ஒத்துக்கொள்ள வேண்டியதாயிருந்தது நான் கண்ட காட்சியும் அது தந்திருந்த வாசனையும்.

இது இப்படியிருக்க உங்களுக்கு 4 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கதையையும் சொல்ல வேண்டிய அவசியமேற்படுகிறது.

தொழில் நிமித்தம் ஸ்சுலோவாக்கியா (பழைய செக்கொசுலோவாக்கியாவில் இருந்து பிரிந்த நாடு) போயிருந்தேன். ஒரு சிறிய நகரத்தில் வேலை. ஒரிரு நாட்களாக வேலை செய்து கொண்டிருந்தேன். வேலை செய்யும் இடத்தின் கீழ் மாடியில் ஒரு கடையிருந்தது. என்னுடன் வேலை செய்யும் ஒருவருடன் வெளியில் இருந்து மதிய உணவு அருந்திக் கொண்டிந்தேன் அக்கடைக்கருகில் இருந்த ஒரு கடையில். திடீர் என குய்யோ முறையோ என்று சத்தம் கேட்டது. அவலக்குரல் தோளுக்கு பின்னால் கேட்க திரும்பிப் பார்த்தேன். ஒரு கர்ப்பிணிப் பெண்ணை மலைபோல் இருந்த ஒரு மனிதன் (பக்கத்துக் கடைக்காரன்) தர தரவென இழுத்து வந்து விசிறி எறிந்தான்.பின்பு கம்பொன்றினால் அடிக்கத் தொடங்கினான்
.
கேட்பார் எவருமில்லை.
பலர் புதினம் பார்த்தனர்.
சிலர் தலைகுனிந்திருந்தனர்.
பொறுக்கவில்லை எனக்கு. நன்பனிடம் சொன்னேன் வா போய் அந்த மனிதனிடம் பேசி அடிப்பதை நிறுத்தச் சொல்வோம் என்று. கதிரையில் இருந்து எழும்பிப் போன போது கையைப்பிடித்து பலவந்தமாய் இருந்தினான் செக்கோசுலாவாக்கியா நண்பன்.

இப்போது கர்ப்பிணியின் முகத்தில் அருந்து இரத்தம் வரத்தொடங்கியிருந்தது. ஒரு பெரியவர் ஏதோ புரியாத மொழியில் ஏதோ கத்தினார். அவருக்கும் அந்த மலை போன்ற மனிதன் ஏதோ சொல்லி திட்டியதது போலிருந்தது. பெரிசும் அடங்கிப் போனது. அவனும் அடிப்பதை நிறுத்தி தனது கடைக்குள் புகுந்து கொண்டான்.

சற்று நேரத்தில் தானே எழும்பி கடைக்காரனை திட்டியபடியே மறைந்து போனாள் அந்தக் கர்ப்பிணி. ஸ்செக்கோசுலாவாக்கிய நன்பன் மௌனித்து, தலைகுனிந்திருந்தான். ஏதும் பேசவில்லை. ஏன் நீ பக்கத்துக்கடைக்காறன் அவளை அடித்த போது தடுக்கமுன்வரவில்லை என்றேன். பிறகு கதைப்போம் என்றான். எனக்கும் அமைதி வேண்டியிருந்ததால் நானும் ஏதும் பேசவில்லை. அனால் அந்த கர்ப்பினியின் ஓலம் காதுக்குள் கேட்டுக் கொண்டிருந்தது.

அடுத்த வந்த பல மணி நேரங்களில் என்னால் சாதாரணமாக இருக்க முடியவில்லை. அந்தக் கர்ப்பினியின் காயம் எப்படிப்பட்டதோ, ஏதும் மருந்து போட்டிருப்பாளா என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.
வேலைமுடிந்த போது காரில் என்னை ஏற்றி ஒரு அழகான ஆற்றங்கரையில் இறக்கி இருகில் இருந்த வாங்கு ஒன்றில் இருக்கப் பணித்தான் அந்த நண்பன்.

நீ பார்த்த காட்சி எமது ஊரில் மிகச் சாதாரணமானது. அதை யாரும் தடுப்பதுமில்லை, தட்டிக் கேட்பதுமில்லை என்றான்.

ஏன் என்ற போது..

அந்தப் பெண் ஜிப்சி இனத்தைச் சேர்ந்தவள் என்றும், அவர்கள் திருடியே பிழைப்பவர்கள் என்றும், இன்றும் திருடும் போது பிடிபட்டதால் அடிவாங்கினாள் என்றும் சொன்னான். இவர்களுக்கு அரசு எத்தனையோ சலுகைகளை செய்திருந்தாலும், தொழில் வசதிகளை ஏற்படுத்தியிருந்தாலும் இவர்கள் திருடுவதையே தொழிலாகக் கொண்டுள்ளார்கள் என்றும் சொன்னான்.

நம்ப முடியவில்லை என்னால்.

நண்பன் மேலும் இவர்கள் படிப்பறிவற்றவர்கள், அடிக்கடி இடம் பெயர்பவர்கள் என்றும், புரிந்து கொள்ள முடியாத ஒரு இனம் என்றும் இவர்களை எவரும் மதிப்பதில்லை என்ற போது வேதனையாயிருந்தது.

இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா அல்லது மற்றவர்கள் தான் அவர்களை புரியாமல் பாடாய் படுத்துகிறார்களோ என்று கேட்கத் தொடங்கியிருந்தது மனம்.

இத்துடன் பழைய கதை முடிகிறது. புதிய கதை தொடர்கிறது.

அன்று அந்த கொமினிகேசன் கடைக்குள்ளும் வந்து போனவர்கள் அதே ஜிப்சி இனத்தைச் சேர்ந்தவர்களே.
பலருக்கும் இவர்களை ஜிப்சி இனத்தவர்கள் என்றால் தான் புரியும் என்பதால் எழுதினேன். ஆனால் அம் மக்களுக்கு தங்களை அப் பெயர் கொண்டு அழைப்பது பிடிப்பதில்லை என்றும் தங்களை உரொம்மானி இனத்தவர் என்று அழைப்பதையே விரும்புகிறார்கள் என்று அறிகிறேன். எனவே நானும் இனி அவர்கள் உரோமானி மக்கள் (Romani people) என்று அழைக்கிறேன்.

உரோமானி மக்கள் (Romani people) அல்லது ரோமா மக்கள் என்பவர்கள் தெற்காசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு இனக்குழு ஆகும். இவர்கள் பொதுவாக ஜிப்சிகள் என அழைக்கப்படுகின்றனர். ரோமானி மக்கள் உலகெங்கும் பரந்து வாழும் ஓர் இனக்குழுவாகும். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இவர்கள் செறிந்து வாழ்கின்றனர் என்று உரோமானி மக்கள் (Romani people)பற்றி கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியா சொல்கிறது.

இவர்களின் இடம்பெயர் வாழ்வு ஏறக்குறை 1000 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டதாம். பழைய காலத்து இமிகிரன்ட்ஸ் (immigrants) இவர்களாத்தான் இருக்குமோ?

இவர்களுக்கென்று ஒரு நாடில்லை. ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளிலும் இவர்கள் பரந்து வாழ்கிறார்கள்.இவர்களின் சனத்தொகை ஏறக்குறைய 15 மில்லியன் என கணக்கெடுக்கப்பட்டிருக்கிறது. ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் அதிகமாக வாழ்கிறார்களாம். அவர்களின் முன்னோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. இவர்களுக்கென்று ஒரு கொடியும் இருக்கின்றது

உலகப் பிரபல்யமடைந்த ஸ்பானிய நாட்டு பிளமன்கோ (Flamenco) நடனம் இவர்களுடையதே. இவர்களின் இசையும் மிகப் பிரபல்யமானது. Jean Baptiste "Django" Reinhardt (1910-1953) என்னும் உருமானியர் ஐரோப்பாவின்முதலாவது உண்மையான ஜாஸ் இசைக் கலைஞன் என அழைப்படுகின்றார்.

இவர்கள் செப்பு, பித்தளை கைவினைப் பொருட்கள் தயாரிப்பதில் பிரபல்யமானவர்கள்.

இவர்களின் சமயம் ”ரொமானிப்பென்” என்று அழைக்கப்பட்டாலும் இவர்களில் பலர் கத்தோலிக்கர்கள், கிறீஸ்தவர்கள், முஸ்லீம்கள், இந்துக்கள் என பல சமயங்ளை பின்பற்றுகின்றனராம்.

இரண்டாம் உலக மகா யுத்த்தத்தின் போது 500 000 க்கும் அதிகமான ஊரோம்மானி மக்கள் வதைமுகாம்களில் கொல்லப்பட்டார்களாம். ஸ்கன்டிநேவிய நாடுகள் இவர்களுக்கு தங்கள் நாட்டின் சிறுபான்மையினம் என அதிகாரபூர்வமாக அறிதித்திருக்கிறது. சுவீடன் உரொம்மானி மொழியை அரச மொழியாவும் அங்கிகரித்திருக்கிறது.

எவ்வளவு சிறப்பான அம்சங்களையும், அங்கீகாரங்களையும் கொண்டதோர் சமுதாயம் இவ்வாறு கூனிக்குறுகி, மிதிபட்டு வாழவேண்டியதன் அவசியமென்ன? பலர் பலவிதமான கருத்துக்களைச் சொல்கிறார்கள். முக்கியமானது விழிப்புணர்வின்மையும், கல்வியறிவின்மையும் என்பது பலரது வாதம். ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் அந்தக் கருத்தையும்.

பல அரசுகள் செய்த கொடுத்த வதிகளையும், உரிமைகளையும் உதறித்தள்ளி விட்டு இடம்பெயர் வாழ்வினையும், கூட்டுவாழ்வினையும் மீண்டும் மீண்டும் தெரிவு செய்கிறார்கள் எனின் அதற்கும் ஏதொவொரு காரணம் இருக்கத்தானே வேண்டுமென்கிறது எனது மனம். அது எது?

பல நாடுகள் பழங்குடியினரை நாங்கள் ”மனிதர்களாக்குகிறோம்” என்று முகாம்களில் வைத்து பண்ணிய கொடுமைகள் பற்றி நாமறிவோம். உரொம்மானி மக்களும் அதற்கு விதிவிலக்கல்ல.

எனக்கு ஏதோ இது மனிதமிழந்தவர்கள் மனிதர்களை மனிதர்களாக்கப்போகிறோம் என்று சொல்வது போலிருக்கிறது இந்தமுகாம்களில் மக்களை அடைத்து மனிதம் பழக்குவது.

நமக்குத் தான் எல்லாம் தெரியும் என்ற தன்னடக்கமில்லாதவர்களே ஏனைய மக்களின் கருத்துக்களை, வாழ்வுமுறையைகளையும் மதி்க்காதிருக்கின்றனர் என்பவன் நான். இப்படிப்ட்டவர்களின் கையில் தான் அளவற்ற அதிகாரங்களும் இருக்கின்றன என்பது தான் வேதனையிலும் வேதனை.

சில வேளைகளில் உரொம்மானி மக்களின் வாழ்வியலமைப்பு இன்றைய உலகிற்கு பொருந்தாதிருக்கின்றதோ என்ற சந்தேகம் வருவதையும் மறுக்க முடியாது. அந்த சந்தேகத்திற்கும் பல வலுவான காரணங்களம் இருக்கின்றன.

எது எப்படியோ, உலகத்தில் இன்னுமொரு இனம் அழிந்து கொண்டிருக்கிறது.
இறுதியாய் மனிதம் மறந்த மனிதர்கள் மட்டுமே மிஞ்சப்போகிறார்கள்..
வாழ்த்துக்கள் அவர்களுக்கு.

பூலோகத்தில் (f)பேஸ்புக் காய்ச்சல்

கடந்த சில வருடங்களாக இந்த பேஸ்புக் காய்ச்சல் பூலோகமெங்கும் பரவிவருகிறது. இதற்கு தடுப்பு மருந்து கிடைக்காது போலிருக்கிறது அல்லது தடுப்புமருந்து தயாரிக்க பஞ்சிப்படுகிறார்கள் பூலோகவாசிகள் போலிருக்கிறது எனக்கு.

கடவுளுக்கம் பேஸ்புக் இருக்கிறது என்றால் நம்பவா போகிறீர்கள். (என்னை சில, பலர் நம்புவதில்லை.. அந்த வரிவையில் உங்களையும் இணைத்துவிடுகிறேன்.. இதெல்லாம் அண்ணணுக்கு சகஜமப்பா)

அம்மா சத்தியமாக கடவளுக்கு பேஸ்புக் இருக்கிறது. கோயிலுக்கு போகாமலே புண்ணிணயம் தேடும் சில பக்தகேடிகளும் இணையத்தில் உலாவருகிறார்கள். அவர்கள் தமது இஸ்டதெய்வத்துக்கு அல்லது தமது ஊர் கோயிலுக்கு பேஸ்புக் பக்கத்தை திறந்து விடுவதால் சாமியும் இன்டர் நெட்டில் உலாவருகிறார். (சாமிக்கு வைரஸ் பிடிக்குமா என்றெல்லாம் விசர்க்கேள்விகள் கேக்கப்படாது).

அர்ச்சனையை பேஸ்புக்கில் இருந்து விசா கார்ட் பாவித்து செய்யும் காலம் கனதூரத்தில இல்லை. சர்வமும் இன்னடர்நெட் மயம் ஆகிவிட்டது.

சிறிது நாட்களுக்கு முன் நம்ம ஊர் மட்டக்களப்பில் உள்ள தம்பிலுவில் என்னும் இடத்தில் உள்ள அம்மன் ஆலய உற்சவம்.. தேர் ஊர் உலா வரும் போது பேஸ்புக்இல் நேரடி வர்ணணை நடந்தது.. அம்மனின் ஒரு பக்த கோடி இப்படி எழுதியிருந்தார்..

”தம்பிலுவில் அம்மன் ஊர்வலம் , தற்போது ஆலயத்தில் இருந்து எமது ஊரை நோக்கி செல்கின்றது”
அதற்கு சில பக்கதர்கள் கொமன்ட் பண்ணி புண்ணியம் தேடிக் கொண்டார்கள்

அதற்கு முதல் இப்படியும் எழுதியிருந்தார் அவர்
”தம்பிலுவில் இல் உள்ள ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் தற்போது நடைபெற்று கொண்டிருகின்றது ....
ஞாயிறு ஊர்வலம் .
திங்கள் பொங்கல் , குளிர்த்தி....
அனைவரும் வருக அம்மன் இன் அருள் பெருக”
ஊரில் டக்ரர் பெட்டியில் கட்டப்பட்டு வரும் ஒலி பெருக்கியின் சத்தம் உலகம் முழுவதும் கேக்க வேண்டுமானால் பேஸ்புக் தான் தேவைப்படுகிறது.

இது ஒரு கோயில்.. இப்படி பல கோயில்கள், தேவாலங்கள், மற்றைய மத வழிபாட்டுத்தளங்கள் பேஸ்புக்இல் இருக்கின்றன.
வருங்காலங்களில் இன்டர்நெட் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று நாம் சொல்லிக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நம்ம அம்மாவுக்கு 75 வயது தாண்டிவிட்டது. மனிசியும் இன்டர் நெட்டில். பேஸ்புக் பக்கம் செய்து கொடுத்தால் என்ன என்று யோசிக்கிறேன்.. சில வேளை அவவுக்கு ஏற்கனவே பேஸ்புக் பககம் இருக்கலாம்.. யார் கண்டது?

இந்த நாட்களில் எங்கும் இதே பேச்சாயிருக்கிறது. எனக்கும் அது பரவியுள்ளதை நான் மறுத்தாலும் பேஸ்புக் காட்டிக்குடுத்துவிடும் என்பதால் ஒத்துக்கொள்கிறேன். ஆரம்பத்தில் எனக்கும் இதில் நாட்டமிருக்கவில்லை.. இருந்த நாட்டமும் சிலரின் நாட்டாமைத்தனத்தால் இல்லாது போயிற்று. எனினும் மலேரியா காய்ச்சல் மாதிரி விட்டு விட்டு வந்த படியே தான் இருக்கிறது.

முதலில் தங்கை மட்டும் எனது பேஸ்புக் பக்கத்தில் இருந்தாள் பல நாட்களாக. பின் பொருநாள் வேலை செய்யுமித்து நண்பன், அடுத்து தங்கையின் நண்பன், அதற்கடுத்து பால்ய சினேகம் என்று இருந்தது எனது உலகம் அழகாய். சட்டென்று
நண்பனின் நண்பன்
அவனின் நண்பன்
அவனின் நண்பனின் நண்பன்
இப்படி எனது நட்புவட்டம் நான் விரும்பியோ விரும்பாமலோ அதிகத்து இப்போ 124 நண்பர்களுடன் வாழ்ந்து வருகிறேன். சில நட்புகளையும், சில உறவுகளையும் நண்பர்கள் பட்டியலில் இருந்து அடித்துத்துரத்தியுமிருக்கிறேன். அடாவடித்தனம் பண்ணுபவன் நண்பனில்லை என்பது கருத்து.(தண்ணியடித்துவிட்டு பண்ணும் அடாவடித்தனம் வேறு இது வேறு)

பலர் வந்து பலதையும் கதைப்பார்கள். பலதையும் பரிமாறிக் கொள்கிறார்கள். ஒரு வித பண்டமாற்று தான் இதுவும். நமது கருத்துக்கு அதிகம் கொமன்ட்ஸ் வரும் போது மனம் குதூகலிப்பதையும் மறுப்பதற்கில்லை. புகைப்படங்கள், வீடீயோக்கள், சுட்டிகள் பரிமாறப்படுகின்றன. எனக்கு விரும்பியதை நான் பிரசுரிக்கலாம் அங்கு.. தனிநபரின் பத்திரிகை போல் இயங்குகிறது பேஸ்புக்.

சிலர் ஆயிரக்கணக்கில் நண்பர்கள் வைத்திருக்கிறார்கள். (அதுக்கெல்லாம் ஒரு டலன்ட் வேணுமய்யா). எனது வட்டத்திற்குள் யார் வருவது .என்பதில் மிக அவதானமாக இருக்கிறேன். (நிஜ வாழ்க்யைப்போல் யாரையும் நம்பமுடிவதில்லை இந்த பேஸ்புக்இலும்). சிலர் நட்பாய் இருக்கிறார்கள். உண்மை பேசினால் ”ஊர்ப்புத்தியை காட்டிவிட்டான்” என்று சொல்லி வெட்டிவிடுகிறார்கள். இந்த ”ஊர்ப்புத்தி” என்பதில் எனக்கு ஏற்பு இல்லை... ஊருக்கு புத்தியிருக்கிறதா என்ன...?

எனது பாடசாலைக்கு என்று ஒரு பேஸ்புக் பக்கம் தொடங்கினேன். தகரத்தில் விழுந்து சத்தமெழுப்பும் மாரிகாலத்து மழைத்துளிபோல் சட சட வென ஓரிரு நாளில் 200ஐ தாண்டிவிட்டது நட்புவட்டம். அன்பாய் குசலம் விசாரித்தும், குசும்பு பண்ணியும், விடலைப்பருவத்தை அசைபோட்டபடியும் ஒரே கும்மாளமாயிருக்கிறது அங்கு. அன்புக்குரிய ஆசிரியர்களும் அங்கு வந்திருக்கிறார்கள். சாட் பண்ணுகிறார்கள்.ஏதோ மீண்டும் பாடசாலைக்குள் போன மாதிரியிருக்கிறது மனது. களைத்திருக்கும் மனதுக்கு ஆறுதலாயுமிருக்கிறது. எனது நண்பனொருவன் ஐந்து பிள்ளை பெற்றிருக்கிறான்... தகப்பனாரின் ரெகோர்ட் உடைப்பது என்று சபதம் செய்தொனோ என்னவோ..? இப்படி பல கொசுருத் தவகல்களும் பேஸ்புக்கின் புண்ணியத்தில் கிடைக்கின்றன.

பிறந்தநாள்கள், நிகழ்ச்சி அழைப்புக்கள், என பல பல தேவையான, தேவை இல்லாத விடயங்களும் இருக்கின்றன. சாத்திரமும் பார்க்கிறார்கள். பொன் மொழிகள் சொல்கிறார்கள்...ஒரு பெரிய உலகமே அங்கு இயங்குகிறது.

விளம்பரம் பண்ணுவதற்கு தான் எத்தனை எத்தனை வசதிகள்..எந்த நாடு, எந்த ஊர், என்ன பால், எத்தனை வயது என்று பாகுபடுத்தி அந்ததந்த மக்களை நோக்கி தங்கள் பொருட்களை விளம்பரம செய்கிறார்கள். கடைகள், நிறுவனங்கள், அரச அலுவலகங்கள், ஒலி, ஒளிபரப்பு நிலையங்கள் எல்லாம் இந்த பேஸ்புக் உலகத்துக்குள் வந்திருக்கின்றன.
ஆனால் சிலர் நாங்கள் வலு சீரியசான ஆக்கள் என்று சொல்லி பேஸ் புக் பக்கம் வராமலும் இருக்கிறார்கள்... :-D. எனக்கு அந்த தியரியில் ஏற்பு இல்லை. நான் சீரியஸ் இல்லாதவனாயே இருந்து விட்டு போகிறேன்...

கிட்டடியில் பிராண்ஸ் நாட்டில் பேஸ்புக் அபிமானிகள் கொஞ்சம் அளவுக்கு அதிகமாக (ரூம் போட்டு) யோசித்து, உணர்ச்சிவசப்பட்டு ”உடனடி பார்டி (Instant party)" என்று ஒரு கலாச்சாரத்தை உருவாக்கியதால் பாரீஸ் நகரத்து மேயர் திண்டாடிப் போனாராம். உடனடி பார்டி என்றால் பேஸ்புக் இல் இன்று மாலை 5 மணிக்கு இன்ன இடத்தில் பார்ட்டி என்று எழுதிவிட்டால் இந்த செய்தி உங்களையும், உங்களின் நண்பரையும், அவரின் நண்பரையும் கணப் பொழுதில் போய் சேருகிறது. பலர் குடிதண்ணியுடனும், மற்றத் தண்ணியுடனும் குறிப்பிட்ட இடத்தில் கூட...அவனவன் ஏ.ஆர் தகுமான் ரேஞ்சில் மியூசிக் போட, கஞ்சா விக்கிறவன் கஞ்காவிக்க, கள்ளுவிக்குறவன் தவறனை திறக்க இப்படி ஒரு சந்தோச சாம்ராஜ்ஜியம் உருவாகிறது. அதனால் போலீசுக்கும், ஆட்சியானர்களுக்கும் தலையிடி. எங்கு எப்ப என்ன நடக்கும் என்று தெரியால் திண்டாடிப் போனார்களாம் பாரிஸ் நகரத்து பாதுகாவலர்கள். இறுதியாய் ஒருவழியாய் ”உடனடி பார்டி” க்கு தடை விதித்து சிக்கலை தீர்த்துக் கொண்டதாம் பாரீஸ்.

இன்னொரு இடத்தில் நல்ல காரியத்துக்கு பணம் சேர்த்து உயிரையும் காப்பாற்றியிருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் சந்தித்து கலியாணம்முடித்தவர்களுக்கும் பஞ்சமில்லை. கலியாணம் முடித்து விவாகரத்துப் பெற்றவர்களும் நிறையப் பேர் இருப்பார்கள்.

இப்படி நன்றும் தீதும் அங்கு முண்டு.

பேஸ்புக் குழுமம் என்று ஒரு சுவராசியமான விடயமிருக்கிறது. உங்களுக்கு எது பிடிக்கிறதோ அல்லது பிடிக்கவில்லையோ அதற்கு ஒரு குழுமம் அமைத்து பல சகாக்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்.
உதாரணமாக:
பக்கத்துவீட்டுக்காரனை பிடிக்காதோர் சங்கம்.
காதலித்து தோற்றோர் சங்கம் (நாட்டுக்கு இது ரொம்ப அவசியம்)
பூக்களை விரும்புவோர் சங்கம் என்று சிலரும்

குளிக்காதவர் Of The Day
தத்துவம் சொல்வோர் சங்கம் என்ற சிலரும் உலாவுகிறார்கள்.
தத்துவம் சொல்வோர் சங்கததினுள் எட்டிப்பார்த்தேன். இப்படியும் எழுதியிருந்தார்கள்
என்ன தான் maths ல 100 மார்க்ஸ் எடுத்தாலும் ஓம்லெட் வேணும்ன்னா 0(முட்டை ) தான் எடுக்கணும் விசர்தனமாய் குசும்பு பண்ணும் இவர்களை எனக்குப் ஏதொ பிடித்திருக்கிறது..

இந்த பேஸ்புக் மாதிரி ட்வீட்டர் என்றும் ஒரு காச்சல் பரவிவருகிறது.. உடன்பிறப்பே கவனம்.

அன்புடன்
பேஸ்புக் காச்சலில் இருந்து மீள விரும்பாத
சஞ்சயன் என்னும் நான்.கடவுளுடன் வாழ்ந்த ரணமற்ற நாள்

தலையங்கம் பார்த்து பயப்படாதீர்கள்.

மனைவியும், மூத்த மகளும் ஒஸ்லோவுக்கு அரங்கேற்றம் ஒன்றிற்காகப்போயிருக்கிறார்கள். நானும் அட்சயாவும் வீட்டில் இருப்பதாக முடிவாகியது.

அவர்களை விமான நிலையத்தில் விட்டு வெளிக்கிட்டதும்......

பப்பாஆஆ என்றார் (இப்படி
கடவுள் அழைத்தால் பக்தன் உருகிவிடுவான் என்பதுகடவுளுக்கு நன்றாகவே தெரியும்)
என்னய்யா? என்றேன்
கண்ணால் சிரித்து, பக்தனை உருக்கிய படியே மீண்டும் பப்பாஆஆ என்றார்
சொல்லுங்கம்மா என்றார்...
அது, அது, அது என்று பத்து அது போட்டு நீ எனக்கு ஒருசொக்காகடன் (மீளத்) தரவேணும் ஞாபகம் இருக்கா? என்றார் நோர்வே மொழியில்
அப்படியா? எப்போ கடன் வாங்கினேன் என்றேன்?
அது, அது, அது போன மாதம் என்றார்
கடவுளின் தந்திரம் புரிந்தது...
எனக்கு சுகர் ப்ரி சோடாவும் வாங்கி, அவரின் கடனையும் அடைத்தேன்.
வரும் வழி முழுக்க காரை தமிழாலும், நொஸ்க்காலும், கல கல வென்றமுத்துக்களாலும் கொட்டி நிறைத்தார்

சோடா குடித்து பெரிதாய் நீண்டதோர் ஏவறை விட்டேன்
அப்பாஆஆ! என்றார் மிகக் கடுமையாய்
கண்ணை சிமிட்டியபடியே என்ன? என்றேன்
உனக்குத் தெரியும்! என்றார் பெரிய மனிசி போல
மீண்டும் ஏவறை விட்டேன்
நிறுத்து!! என்றார் நொஸ்க மொழியில்.

உலகிலேயே ஆழமான கடல் கீழ் சுரங்கம் எங்கள் இடத்திற்கு அருகில் உண்டு. அது தாண்டித் தான் வீட்ட வரவேணும். சுரங்கத்தில் நாம் கடல் நீர் மட்டத்தின் கீழ்போகுமிடத்தை நீலமானலைட் ஆல் மார்க் பண்ணியிருக்கிறார்கள்.

பப்பாஆ, நீந்து, நீந்து கடலினுள் போய் விட்டோம் என்றார்.
தானும் நீந்துவது போல் கையை ஆட்டினார்.
அந்தா மீன் போகுது என்றார்...
சேர்ந்து சிரித்தோம்

(சம்பாசனை தமிழிலும், நொஸ்க்கிலும் நடக்கிறது)

இதுதான் உலகிலேயே நீளமான சுரங்கமா? என்றார்
இல்லை, ஆழமானது என்றேன்
அப்ப நீளமான சுரங்கம் எவ்வளவு நீளம்?
தெரியாது... கிட்டத்தட்ட 40 கி.மீ என்று அறிந்ததாக ஞாபகம் என்றேன்
அது எவ்வளவு தூரம்?
உனது வீட்டில் இருந்து 40 தரம் உனது பாடசாலைக்குப் போகும் தூரமிருக்கும்என்றேன்
அவ்வளவு தானா? என்று அலுத்துக் கொண்டார்

பிறகு முன்னுக்கு போன காரை ஓவர்டேக் பண்ணு என்றார்...
வேண்டாம் என்றேன்
அதிசயமாய் ஓகே என்றார்.

சுரங்கம் முடிந்து வெளியே வந்ததும். முகில்களற்ற வானமும், பச்சையானஉயரமான மலைகளும், நீலமான கடலும் எங்ளை வரவேற்றன.

பப்பாஆ! உலகத்தில் வடிவான இடமெது என்றார்
எனன சொல்வது என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போது
பதில் சொல்! என்றார் நொஸக் மொழியில்
நீ தான் என்றேன்
இல்ல, எந்த இடம்? என்று கேள்வியை தெளிவுபடுத்தினார்
தனக்கு, நாம் வாழும் ஊரின் பெயரைக் கூறி அதுதான் வடிவு என்றார்..
பெருமையாக இருந்தது

கடந்து போகும் மலைகளைக் காட்டிய படியே
அந்த மலை ஏறியிருக்கிறாயா? இந்த மலை ஏறியிருக்கிறாயா என்று கொண்டேவந்தவர் திடீர் என தனக்கு தலைஇழுக்க பிரஸ் வாங்கனும், ஜக்கட் வாங்கனும், உடம்புக்கு போட கிறீம், சொக்கா வாங்கனும் என்றார்...

சுதாரித்துக் கொண்டு என்ன சொக்காவா என்றேன்.. கல கல என்றுமுத்துக்களைக் கொட்டினார். அவரின் கண்ணும் சிரித்தது.

திடீர் என காரி்ல் இருந்த எல்லா பட்டன்களையும் போட்டு விளையாடிக்கொண்டிருந்தார்....
பிறகு அவற்றையெல்லாம் நிறுத்தி விட்டு ஸ்டியரிங்கை பிடித்து என்னுடன்சேர்ந்து காரோடினார்.
ஸ்டியரிங்கை வலப்பக்கமும், இடப்பக்கமும் (ஷிக் ஷாக் போல) ஆட்டி ஆட்டிதானும் அதே போல் ஆடினார்.
வேண்டாம், பின்னுக்கு கார் வருது என்றேன். நிறுத்தினார்.

தலையிழுக்கும் பிரஸ் வாங்கும் கடையினுள் சாதாரணமாய் நடந்து போய்தனக்கு ப்ரஸ் வாங்க வேனும். எங்க இருக்கு என்றார்?
விற்பனையாளர் வந்து காட்டினார்.
இது தான் வேணும் என்றும், தன்னிடம் இப்படி யொன்று இருந்ததாகவும் அதுதுலைந்ததால் புதிது வாங்குவதாகவும் விற்பனையாளருக்கு சரித்திரம்வளக்கினார்.
அவரும் தலையாட்டி கேட்டுக் கொண்டிருந்தார்
சரி காசைக் குடு என்னும் தொனியில் பார்வையால் கட்டளையிட்டார்
கார்ட்ஐ இழுத்தேன்

கையை பிடித்த படி, பையை சுற்றியபடியே துள்ளித் துள்ளி வந்தார் காருக்கு

உன் நண்பின் வீடு வருகிறது.. அவள் வெளியில் நின்றாள்ஹோன்அடிப்பமாஎன்றேன்
துள்ளலுடன்யாஎன்றார்
நண்பின் வீட்டிற்கு வெளியில் அவர்களின் நண்பிகள் கூட்டமே நின்றிருந்தது
.. யெஸ் என்றார்
காரை நிறுத்தக் கட்டளையிட்டார்
நிறுத்தினேன்
இறங்கியோட எத்தனித்த போது
ஜக்கட், கிறீம் வாங்க வில்லையா? என்ற போது
அதை மற! என்னும் தொனியில் பதில் வந்தது
சரி என்றேன்
நின்று கொஞ்சம் யோசித்தவர், இல்ல கடைக்கு விடு காரை கடைக்கு என்றார்
கெதியா போ என்றார் நொஸ்க் மொழியில்
நீ 60 வேகத்தில் இல் போறாய் 100வேகத்துக்கு க்கு போ என்றார்
இல்லை என்றேன்
போ போ என்று விரட்டினார்
கடையில் அவசர அவசரமாய் ஜக்கட், கிறீம் வாங்கினார்.
அதற்கிடையில் நண்பின் தந்தையுடன் என்னை ஒப்பந்தம் செய்யச் சொன்னார்
செய்தேன்
ப்பாஸ்ட், ப்பாஸ்ட் என்று நொஸ்க் மொழியில் உட்சாகமாய் துள்ளியபடியேகாரில் வந்தார்.

காரை நிறுத்தியதும் கழுத்தை கட்டி லஞ்சம் தந்தார்
கண நேரத்தில் என்னை மறந்து காற்றில் பறந்தார்

ஒப்பந்த நேரம் வந்தது.. கூப்பிடப் போனேன்
கடவுளின் நண்பியின் தங்கை சிட்டாய் பறந்து வந்து கழுத்தைக் கட்டிக் கொண்டுதூக்கு என்றாள். பக்திப்பரவசத்தில் அள்ளி எடுத்தேன்...
கடவுள் சற்றுத்தள்ளிஎன்னை ஓரக்கண்ணால் அவதானிப்பது தெரிந்தது.

வாரீங்களா ஐயா? என்றேன்
பப்பாஆ, ப்பப்பாஆஆஆ என்றார்
புரிந்தது கடவுளின் எண்ணம்
அங்கு வந்ததிருந்த இன்னொரு நண்பியின் வீட்ட போகவா என்றார்.
ஐம்பதெட்டு பப்பாஆ க்கள் காற்றில் வந்த வண்ணமிருந்தன
அந்த நண்பியோ, எனது பதிலை எதிர்பாக்காமல் தனது தாய்க்கு தெலைபேசியில்இலக்கங்களை தடடிக் கொண்டிருந்தாள்.
அங்கிருந்து பதில் வரவில்லை.
கடவுள்களுக்கிடையில் ரகசிய பேச்சு வார்த்தை நடந்தது
சமாதானத் தூதும் (கட்டளையாய்) வந்தது

அதாவது நண்பியை அவரின் வீட்டில் இறக்கிவிட வேண்டுமாம்.
சரி என்றேன்
இரண்டு
கடவுள்களுடன் உள் ரோட்டு ஒன்றில் பயனித்தேன்
புதிய கடவுளின் பளிங்கு போன்ற நீலக் கண்களும், காற்றில் அசைந்தாடியசுருட்டை முடியையும் கொள்ளை அழகாயிருந்தது (அவளின் பெயர்ஆர்ல”. நான்பர்லஎன்றே அழைப்பேன் (பர்ல என்றால் முத்து என்று பொருள் படும்)
எனது
கடவுள், அப்பா ஷிக் ஷாக் ஆக காரை ஓட்டுங்கள் என்றார்.
ஓடினேன்
கார் போன போன போக்கில் கல கல என சிரித்து, ஆடினார்கள். எனதுநெஞ்சையும், காரையும் பெருமைப்படுத்தினார்கள்
முஸ்பாத்தியாய் இருந்ததாகவும், நன்றி என்றும் சொன்னார்கள்

முத்தின் வீடு வந்தது
முத்துக்
கடவுள் சிட்டாய் பறந்து போய், அனுமதி பெற்று வந்தார்
எனது கடவுளை கைகோத்து அழகாய் அழைத்துச் சென்றார்.
வீட்டுக் கதவை பூட்ட முதல் மறக்காமல் கை காட்டினார்கள்
கடவுள்கள்..
பூக்கள் சையசைப்பது போலிருந்தது

மீண்டும் வீடட வந்தேன்.
ரீவியில் புட்போல் மாட்ச் ஓடிக்கொண்டிருந்தது....

திடீர் என தொலைபேசில்
கடவுள் வந்தார்
என்னய்யா என்றேன்
தனது பொம்மைகள் உடனடியாக வேணும் என்றார்
என்னஎன்றேன் சிறுது எரிச்சலில்
தனது பொம்மைகள் உடனடியாக வேணும் என்றார், எனது எரிச்சலை சற்றும்கவனிக்காமல்
தவிர, பப்பாஆ! நண்பி என்னை இன்றிரவு தங்குமாறுகேட்கிறாள் என்றார்
புரிந்தது சகலமும்..
பொறு, பெரிய இடத்திற்கு போன் பண்ணி கேட்டு சொல்கிறேன் என்றாள்
லவ் யூ என்றாள் நொஸ்க் இல்

போண் பண்ணினேன் பெரிய இடத்திற்கு... வேண்டாம் என்றார்
பாவம்
கடவுள் என்றேன். வாதாடியதனால்.. சரி ஓகே என்றார்

போண் பண்ணி முத்துக் கடவுளின் தாயாரிடம் பேசி
எனது கடவுளிடமும் சொன்னேன்
அவரின் துள்ளல் தெலைபேசியினூடாகத் தெரிந்தது

சிகக்ல் ஒன்று இருந்தது.. (கடவுளின் பொம்மைகள் எல்லாம் ஒரு பெட்டியில்போட்டு கட்டி வைக்கப்பட்டிருந்தது)
சொன்னேன் சிக்கலை கடவுளுக்கு
அந்த பார்பி, கறுப்பு பார்பி, அந்த சின்ன பார்பிஐ மட்டும் கொண்டு வா என்றுஅடுக்கிக் கொண்டே போனார்
இறுதியாக எல்லாத்தையும் கொண்டு வா என்றார்
ஐயா! என்று இழுத்தேன்
பாய்! என்று சொல்லி தொலைபேசி இணைப்பை துண்டித்தார்
கடவுள்

இரவு உடுப்பு, அவரின் கடடிப்பிடித்து படுக்கும்உடுப்பு போடட கரடிப் பொம்மை”, அவர் தடவிக்கொண்டே படுக்கும் அம்மாவின் பழைய டெனிம் ஜீன்ஸ, பல்துலக்க பிரஸ் எல்லாம் எடுத்து வைத்தேன்.
கட்டிவைத்த பொம்மை பெட்டியை இறக்கினேன்.
பொம்மைகளின் நிறங்களும் வடிவங்களும்
கடவுள் சென்ன மாதிரிஇருக்கவில்லை. தலை சுத்தியது.
கடவுளுக்கு போன் பண்ணினேன்...
என்ன? என்றார் (‌போன் பண்ணியதை அவர் விரும்பவில்லை என்பது மட்டும்புரிந்தது)
ஐயா! பார்பிகள் கனக்க இருக்கு என்று இழுத்தேன்...
மீண்டும் அந்த பார்பி, கறுப்பு பார்பி, அந்த சின்ன பார்பிஐ மட்டும் கொண்டு வாஎன்று அடுக்கிக் கொண்டே போனார்
கஸ்டம் அம்மா என்றேன்..
அப்பா, அப்ப அந்த பெட்டியை பொண்டுவாங்கோ என்றார்
வெடித்துச் சிரித்து ஓகே என்றேன்

முத்துக் கடவுளின் வீட்டில் கார் நிற்க முதலே
கடவுள்கள் ஓடிவருவது தெரிந்தது
பெட்டியைக் கிண்டி இது தான், இது தான் என்று எடுத்தார்
உடுப்பு பையில் கரடி பொம்மை இருக்கா, அம்மாட டெனிம் இருக்கா என்றார்?
ஓம் என்று சொல்லி... ஐயா போன் பண்ணுங்கோ, காலமைக்கு புட்போல் மாட்ச்இருக்கு, வெள்ளன வருவேன் என்றேன்... அதற்கிடையில்
கடவுள்கள் கல, கலமுத்துக்களை சிந்தியபடியே வீட்டுக் கதவை மூடிக்கொண்டிருப்பது தெரிந்தது.

வீட்ட வந்தேன்...
கடவுளில்லா இரவு என்முன் விரிந்து கிடந்தது
கடவுள் எது செய்தாலும் அதில் ஒரு அர்த்தமிருக்கும்..

இவ்வளவும் எழுதிவிட்டு பிழை திருத்திக் கொண்டிருக்கும் போது தொலைபேசிஅழைத்தது

மறுபக்கத்தில்
கடவுள்
என்னய்யா? என்றேன்
வாங்கோ என்று தழுதழுத்தார்
ஏனய்யா என்றேன்
வாங்கோ எனக் கட்டளையிட்டார்

அங்கு போன போது
முத்துக்கடவுளின் கண்ணகளில் ஏமாற்றமும், நித்திரைவழிந்தோடிக்கொண்டிருந்தது

எனது
கடவுள் காரில் ஏறியதும்
பப்பாஆ என்றார்
ஏன்னய்யா என்ற போது
கண நேரம் முழித்திருக வேண்டினார்
மறுக்கமுடியுமா?
சரி என்றேன் (நாளை ஞாயிறு என்பதால்)

இப்ப
கடவுள் என்னருகிலிருக்கிறார்
இல்லை இல்லை
நான் தான் கடவுளுக்கருகிலிருக்கிறேன்

கடவுள் எது செய்தாலும் அதில் அர்த்தமிருக்கும்.