நோர்வேக்கு வந்த பின் கிடைத்த உறவுகளைப் பற்றி இப்போதைக்கு எழுதுவதில்லை என்றே நினைத்திருந்தேன். இருப்பினும் ஏதோ சிவாவைப் பற்றி எழுதத் தோன்றியது.
1987 வைகாசி 16ம் நாளில் இருந்து 2006ம் ஆண்டின் ஆனி அல்லது ஆவணி மாதம் இறைவனடி சேரும் வரை கிடைத்த நண்பன் அவன் (அவர், இவர் என்று போலி மரியாதை கொடுக்கத் தேவையில்லை அவனுக்கு)
சிவா என்றால் முதலில் ஞாபகம் வருவது அவன் அடிக்கடி கூறும் ஒரு கூற்று ”பீரங்கி வாசலில் கூடு கட்டாதிங்க” என்பதாகும். பீரங்கி வாசலில் கூடு கட்டினா எப்படியிருக்கும் …. கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்….
முதலில் சிரிப்பு வரும், பின்பு பீரங்கி வெடித்தால் கூட்டின் நிலையையும், குருவியின் நிலையையும் யோசித்தால் சிரிப்பு மறைந்து பரிதாபம் மேலோங்கும்…. இப்படி கனக்க பழமொழி அடிக்கடி சொல்லுவான்…குரங்கிட்ட மூத்திரம் கேட்டமாதிரி என்று ஒன்றும் சொல்லுவான்.
யோசித்துப் பார்த்தால் அவன் நோர்வேயில் குடியேறியது அவனைப் பொறுத்தவரையில் பீரங்கி வாசலில் அவன் கூடுகட்டின மாதிரி இருக்கு….
தனிமை, நோய்கள், அவை தந்த மன உளைச்சல்கள், அவைகளில் இருந்து விடுதலை பெற நாடிய மது, மது கொடுத்த மீளமுடியாத போதை, வெறுப்பான, வெறுப்பேற்றிக் கொண்டேயிருந்த நெருங்கிய உறவுகள் (இலங்கையிலும்;;, வெளிநாட்டிலும்), அவனின் முறட்டுப் பிடிவாதம்….கூட்டிக் கழித்துப் பார்த்தால் அவனின் மரணத்திற்கான காரணங்கள் இவைகள் தான் என்று நினைக்கிறேன்.
அவனின் மரணத்தின் பின் அவனின் வீட்டில் இருந்து வெளியில் எடுத்த வெற்று வொட்கா போத்தல்களின் சத்தத்தையும், எண்ணிக்கையையும் மறக்க ஏலாது.
வொட்கா கொம்பனிக்காரன் சிவாவுக்கு சிலை வைத்தே ஆகவேனும்.. என்று முன்மொழிகிறேன்….
சிவாவுக்கு நாங்கள் செல்லமாக வைத்த பெயர் ”வெல்டர்” (அது ஒரு வித காரணஇடுகுறிப்பெயர்.. சிவா வெல்டர் ஆக வேலை செய்த காலமது, இரும்பை ஒட்டுவது போல தான் கூறும் கதைகளுடன் கிளைக் கதைகளையும் ஒட்டிக் ஒட்டிச் சொன்னதனால் சூட்டப்பட்ட பெயரது). அவன் கதைக்கத் தொடங்கினால் நாங்கள் ஒட்டுறான், ஒட்டுறான் என்பதுண்டு. ஒரு விடயத்தை சொல்வதென்றால் அதற்கு கை, கால், உடம்பு, தலை எல்லாம் வைத்து கதைவிடுவான் .. அவனை நாம் நன்கு அறிந்திருப்பதால் நாங்கள் கை, கால், உடம்பு, தலை எல்லாவற்றையும் கழித்துப் பார்க்கவும் பழகியிருந்தோம்.
எது எப்படியோ, அவன் கதைவிட்டாலும் ரசிக்கத்தக்க வகையில் நகைச்சுவையுடன், விறுவிறுப்பும் கலந்து கதைவிடக்கூடியவன். அவனது கதைகளில் வரும் பாத்திரங்களை அவன் பேச்சுத்தமிழில் வர்ணிக்கும் அழகு அலாதியானது.
அவனின் அஞ்சலிக்கூட்டத்தில் அஞ்சலி செலுத்திய எல்லோரும் அவனின் நகைச்சுவையுணர்வை நினைவுகூர்ந்ததை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.
சிவா உடனான ஞாபகங்களில் முக்கியமானது ”மீகோ” என்னும்அவனின் நாய். மீகோவை சந்தித்த முதல்நாள் அது என்னை வீட்டுக்குள் விடவே இல்லை. கள்ளனை கண்டதைப்போல குரைத்தது ….மீகோ என்ற சிவா கண்டிப்பான குரல் கேட்ட பின் தான் இந்த கள்ளனை உள்ளே விட்டது. ஆனாலும் அதன் சந்தேகம் போகவில்லை அதுக்கு. எனக்கு பின்னாலேயே வந்து எனக்கு முன்னாலேயே நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தது, அடிக்கடி உர்…உர் என்று தனது அதிருப்தியையும் காட்டிக் கொண்டிருந்தது…..
மீகோவின் இனத்திற்கும் எனக்கும்சமாதானமான உறவு ஒரு போதும் இருந்தது இல்லை (ஊரிலும் கூட), நான் சமாதானம் விரும்பினாலும் அவை என்னுடன் சமாதானமாவதில்லை…
தனது நாய் எனவும், அது கடிக்காது சாது (?)என்றும் அறிமுகப்படுத்தினான். அது தனது சொல்லை மட்டும் தான் அது கேட்கும் என்றான். மீகோவை வா, போ, இரு, எழும்பு, திறப்பை எடுத்து வா என்று எல்லாவற்றையும் செய்வித்து காட்டினான். மீகோ காலைத்தூக்கி எனக்கு கைதந்தது. உயிரைக்கையில் பிடித்தபடி கையைக் கொடுத்தேன் (கைகொடுக்காவிட்டால் சிவா விடமாட்டான்) மீகோவும் எஐமானனை ஏமாற்றாமல் எல்லாம் செய்தது. ஆனால் என்னில் ஒரு கண் வைத்தபடியே.சில காலத்தின் பின் ”பாடு மீகோ, பாடு” என்றால் ஒரு வித ஊளையிட்டு கத்தவும் பழக்கியிருந்தான் சிவா.
சம்மர் நேரத்தில் சிவாவின் காரின் முன் சீட்’இல் மீகோ இருக்கும். கார் கண்ணாடியை சிவா இறக்கியிருப்பான். ஜன்னலுக்கால் முகத்தை வெளியே போட்டுக் கொண்டு புதினம் பார்த்தபடி வரும். என்னைக் கண்டால் மட்டும் குரைக்கும் (என் பிரமையோ?). ஏன்டா என்னைக் கண்டால் மட்டும் ஏன் குரைக்குது என்று கேட்டதற்கு இரண்டு பதில் சொன்னான். முதலாவது, இனம் இனத்தோடதான் சேருமாம் என்றான் நக்கல் சிரிப்புடன், மற்றது, அது உன்னை நண்பனாக நினைக்கிறது என்றான் வலு சீரியசான முகத்தடன். (மீகோ என்ட நண்பனா? நடக்கிற கதையா அது?… எதிர்த்துக் கதைத்தால் அவன் தன் கூற்றை நிரூபிக்க தொடங்குவான் என்பதால் அடக்கி வாசித்தேன்)
மீகோவின் மரணம் சிவாவை பெரிதும் பாதித்தது. அது சுகயீனமாக இருந்த காலத்தில் அதை பிள்ளை போல பார்த்துக் கொண்டார்கள் (சிவா ஏறத்தாள 18 வருடங்கள், அவன் மரணிக்கும் வரை ஐன்னா என்னும் நோர்வேஐpய பெண்ணுடன் ஒன்றாய் வாழ்ந்தவன் என்பதை சொல்ல மறந்து விட்டேன்)சிவா சேட் இல்லாமல் மீகோவை தூக்கிவைத்த படி ஒரு படம் எடுத்து வைத்திருந்தான். கடைசிவரை அவனின் வீட்டில் தொங்கவிடப்பட்டிருந்த படங்களில் ஒன்று அது. மீகோவின் ”ஆஸ்தியும்” (சாம்பல்) கடைசிவரை அவனின் வீட்டில் வைக்கப்பட்டிருந்ததை அவனுடன் பழகிய எல்லோரும் அறிந்திருப்பார்கள். ……………….கல்லுக்குள்ளும் ஈரமிருக்கும்
திறமையான விளையாட்டுக்காரன். நன்றாக விளையாடுவான் என்பதால் கட்டாயம் தன்னை டீம்’இல் (அணி) போடுவார்கள் என்பது அவனுக்குத் தெரியும். இதை வைத்துக்கொண்டு அவன் செய்த இம்சை கொஞ்சநஞ்சமல்ல.
மட்ச் நெருங்கும் போது அவன் சொல்லும்
, காலுக்குள் உழுக்கீட்டுதுமச்சான்,
நான் லண்டன் போறன் (லண்டன் பாபா இவனது நண்பர்.. அதை வைத்து அவன் காட்டின கூத்தையும் சொல்ல ஏலாது.. அப்பப்பா என்ன கடி கடிப்பான் தெரியுமா?)
எனக்கு சுகமில்லை, மச்சான், ஏலாமல் இருக்கு,
இப்பிடி அலுப்புத்தருவான். அப்பவெல்லாம் அவனை கொல்ல வேணும் போல இருக்கும் (எனக்கு மட்டுமல்ல, எம்முடன் விளையாடிய எல்லோருக்கும் அப்படி இருந்தது). டேய் வாடா, வாடா வந்து விளையாடுடா என்று நாங்கள் கெஞ்சவேண்டும் என்பதால் தான் அப்படி செய்வான்.
நாங்கள் கெஞ்சினால் சரி சரி
இப்ப கொஞ்சம் பறவாய் இல்லை,
லண்டன் பாபா இந்தியாவில் சூட்டிங்கில இருக்கிறதால பிறகு வரட்டாம், இப்ப விளையாடுற அளவுக்கு சுகம்
என்று சொல்லி விளையாட வருவான். விளையாட்டில் எப்பவும் அதிஸ்டம் அவனின் பக்கம் தான்… நாம் வெற்றி பெற அவனின் விளையாட்டு தான் காரணமாய் இருக்கும்.. பிறகு என்ன… அதை வைத்து அடுத்த மாட்ச் வரும்வரைக்கும் எங்களை கடித்து, சப்பி, துப்பிவிடுவான்.. ஒரு முறை அவன் இறுதிப்போட்டியின் போது இரண்டு கோல் அடித்ததால் நாங்கள் முதன் முறையாக 7-8 வருடங்களின் பின் வெற்றிக்கிண்ணத்தை பெற்றுக் கொண்டோம்.
அப் போட்டியினை வீடியோ எடுத்தவனை கண்டால் (கொண்ணுபுடுவன், கொண்னு) காரணத்தை கீழே எழுதியிருக்கிறேன்.
தான் அடித்த கோல்களை மட்டும் வீடியோவில் இருந்து எடுத்து எடிட் பண்ணி 2 நிமிடம் மட்டும் ஓடும் படமாக மாற்றி டேய் பார்டா, பார்டா, சிவா அண்ணணின் அடியப் பார்டா… மரடோனாட விளையாட்டு மாதிரி இல்லையா, என்ன மாதிரி விளையாடுறான், பார்த்து பழகுங்கடா, என்று அவன் தந்த இம்சை கொஞ்சநஞ்சமல்ல (இதை வீடியோவை மரடோனா பார்த்திருந்தால் என்ன ஆகியிருக்குமோ? முருகா)
எங்கள் எல்லோருக்கும் வாகனம் ஓட்ட கற்றுத்தந்து, வாகனம் வாங்க கொன்சல்டிங் (அறிவுரை)தந்து, வாகனங்களை திருத்தி இப்படி கனக்க நல்ல வேலைகளும் செய்திருக்கிறான்.
நல்லா மீன் பிடிப்பான், ஒரு முறை அவனுடன் மீன் பிடித்து எம்முடன் இருந்த 40க்கும் மேற்பட்டவர்களுக்கு கறிவைத்ததை எம்முடன் இருந்த அனைவரும் அறிவார்கள்…
நோர்வேயில் நாங்கள் இருந்த சிறிய கிராமத்தில் இருந்த எல்லோரையும் அவனுக்கு தெரிந்திருந்தது. இது யார்? இவர்ட மனிசி யார்? அவரின் மாஜி மனிசி யார்? அவரின் சொந்த பந்தங்கள் யார் எல்லாம் தெரிந்திருந்தது…. எப்படி இவ்வளவையும் தெரிந்து வைத்திருந்தான் என்பது ஆச்சரியமான விடயம்.ஊரில் நடக்கும் எல்லா விடயங்களும் அவனின் database இல் update பண்ணி இருக்கும்.
அவனின் விருந்தோம்பல் அன்பான இம்சை. அவனிடம் போய் வயிருமுட்டாமல் வர ஏலாது.
குழந்தைகளின் நண்பன் அது மிகையாகாது. எல்லா குழந்தைகளும் அவனுடன் ஒட்டிக்கொள்ளும். அப்படி ஒரு ராசி அவனுக்கு… குட்டிராசா, சொக்கம்மா, சொக்கிச்சி இப்படியெல்லாம் குழந்தைகளுக்கு பெயர் வைத்திருந்தான். (என் குழந்தைகள் அவனை சொக்கா மாமா என்றே அழைத்தனர்) கண்டதும் சொக்லட் வாங்கிக் கொடுப்பான். வேண்டாம் என்றால் எம்முடன் ஒரு மாதத்திற்கு கதைக்க மாட்டான். பிறகு எல்லாம் சரியாகிவிடும்.
சின்ன சின்ன விடயத்துக்கெல்லாம் கோபித்துக் கொள்வான். இதனாலோ என்னவோ பலருடன் பலதடவைகள் கோபித்துக் கொண்டிருக்கிறான்.
கொண்டாட்டங்களின் போது கமராவை கொளுவிக்கொண்டு நிற்பான், தண்ணிப்பார்ட்டி என்றால் அவனுக்கு முக்கிய இடமுண்டு. அங்கு நாங்கள் சிரிக்க சிரிக்க அவன் சொல்லும் கதைகளின் கற்பனையும் நகைச்சுவையும் கூடிக்கொண்டே போகும்..
ஒரு முறை யாழ்ப்பாணம் போன போது அவன் தந்த அன்பளிப்புக்களை அவனின் தாயாரிடமும், சகோதரியிடமும் கொடுக்க அவன் (அன்பு) கட்டளையிட்டிருந்ததால் அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. (சிவாவின் ஒரு அண்ணன் டெலோ இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான பீட்டர் என சிவா மூலம் அறிந்திருந்தேன்) அதை அவனின் சகோதரியாரும் உறுதி செய்தார்.தாயார், சகோதரி, அவரின் மகன் அகியோரின் பொருளாதாரச் செலவினை அவனே பொறுப்பேற்றிருந்தான். மனிதாபிமானமுள்ள இதயம்….
மரணச் செய்தியை அவனின் சகோதரியாரிடம் தொலைபேசியில் அறிவித்த போது….தம்பி அவனுக்கு அங்க ஒருத்தரும் இல்லை, வடிவா எல்லாத்தையும் செய்யுங்கோ என்றார். இறுதி ஊர்வலத்தை அவனின் சகோதரியார் கேட்டுக் கொண்டதைப் போல் சிறப்பாய் நடாத்த உதவிய மனிதம் நிறைந்த நெஞ்சங்களை மறத்தலாகாது.
இறுதியாய் சிறிய கண்ணாடி ஓட்டையினூடாக பார்த்த போது நிம்மதியாய் எரிந்து கொண்டிருந்தான். கனடாவில் இருந்து வந்த அண்ணன் அவன் நித்திரை கொள்ளுற மாதிரி இருக்கிறான் தம்பி என்றார் நெஞ்சில் கைவைத்தபடியே.
காற்றில் கலந்து வரும் பூவின் வாசனை போல் என் வீட்டில் இன்னும் சொக்கா மாமா பற்றிய கதைகள் அவ்வப்போது வந்தபடியே இருக்கின்றன.
.
இப்போது தான் உங்கள் பக்கத்தை கண்ணுறேன்.
ReplyDeleteமிகவும் உயிர்ப்போடு ஒரு மனிதரின் வாழ்வைப் பகிர்ந்திருக்கிறீர்கள்.
'நன்றும் தீதும் பிறர் தர வாரா'நண்பரே!
ஆனாலும்,மனது கனப்பதைத் தவிர்க்க முடிய வில்லை.அவரது ஆத்மா சாந்தியடையட்டும்!
உங்கள் பதிவுகள் ஆர்வத்தைத் தூண்டுவனவாக உள்ளன.மிகுதியைப் படித்து விட்டுப் பின்னூட்டமிடுகிறேன்.
ஒரு நண்பனுடைய மரணத்தின் வலியை நானும் அநுபவித்திருக்கிறேன்.ஒரே நாளில் இரு நண்பர்களை இனவாதப்போரில் இழந்திருக்கிரேன்.உங்கள் பதிவை படித்தபோது அந்த வலி மீண்டும் என் மனதில் அந்த வலி.உங்கள் நண்பரின் ஆத்மா சாந்தியடையட்டும்.
ReplyDeleteமனது கனக்கிறது சிவாவின் மறைவைப் படித்தபோது. அறிமுகமில்லாத போதும் உங்கள் எழுத்தினூடே எங்களுக்கும் நட்பாகிவிட்டான்.
ReplyDeleteநீங்கள் தந்த லிங்க் மூலம் உங்கள் வலயம் வந்து சேர்ந்தேன்.உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது.அப்படியே உங்கள் நண்பனை கண்முன் கொண்டு வந்து காட்டியிருக்கிறீர்கள்
ReplyDeleteஉணர்வு பூர்வமான எழுத்து வாசித்து முடிந்த போது என் நண்பனை இழந்தது போல் வலித்தது!
ReplyDelete