செல்வமாணிக்கத்தார் ஒரு போலீஸ் அதிகாரி தான் ஆனால் வீட்டில் இருந்த வாரிசுடன் அவருக்கும், அவருடன் அவரின் வாரிசுக்கும் ”அலைவரிசை” (அதிகமாக) ஒத்துவருவதில்லை. நான் வளர்ந்த போது அவர் இல்லை. ஒரு வேளை தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்று நண்பனாய் மாறி இருப்பாரோ என்னவோ?
அக்கரைப்பற்றில் இருந்த காலத்தில் அப்பாவுடன் மாலையில் மீன் பிடிக்க போவேன் என்னுடன் தலைமயிர் மிகவும் ஐதான ஒரு உமை நண்பனும் (பெயர் ஞாபகத்தில் இல்லை) வருவதுண்டு. கடலுடனான என் உறவு ஏற்பட அப்பா தான் காரணம். ராவணன் மீசை, அடம்பன் கொடி, மணல் வீடு, நண்டு பிடிக்க என்று எல்லாவற்றையும் அப்பாதான் அறிமுகப்படுத்தினார். ஏங்கள் ஒப்பந்தத்தின் படி கடற் கரையில் அப்பா மீன் பிடிக்க நான் பக்கத்தில் இருக்கலாம், அவரின் கண்ணின் எல்லைக்குள் இருத்தல் வேண்டும். (திறந்த வெளிச் சிறைச்சாலை போல). ஓரு நாள் நானும் அந்த நண்பனும் தூரம் போய்விட, அப்பாவோ எங்களை கடல் இழுத்துக் கொண்டது என நினைத்து பல மணிநேரம் ஆட்களை வைத்து தேடி வீட்ட வரும் போது நானும் அந்த நண்பனும் ஆமை பிடித்து அதன் மேல் மெழுகுவர்த்தி கொழுத்திவிளையாடிக் கொண்டிருந்தோம்.
அவரின் மனவேதனையும், துக்கமும், ஆற்றாமையும் என்னைக் கண்டவுடன் கோபமாக மாற….டேய் பெரியதம்பி இங்க வாடா என்றார் லவுட்ஸ்பீகர் சவுண்டில். அவரின் கத்தல் கேட்டு சமாதானம் பேச அம்மாவும், எம்மியும் வெளியே ஓடி வரவும் நான் இனி அங்கு இருந்தால் உயிருக்கு உத்தரவாதமில்லை என எண்ணி ஓடத்துவங்கவும் சரியாய் இருந்தது. (அன்று ஓடிய ஓட்டத்தை நினைத்தால் இன்றும் களைக்கிறது) அப்பா என்னை பிடித்தது வேறு கதை.
அப்பா அக்கரைப்பற்றில் இருந்த காலத்தில் கிட்டத்தட்ட தினமும் மீன் பிடிக்கப் போவார் ஆனால் ஒரே ஒரு நாள் மட்டும் ஒரு மீன் கிடைத்தது. அதுவும் அவர் கடைசியாய் மீன்பிடித்த நாள். அந்த மீனை உடனே வெட்டி இரையாய் போட்டார்… கடல் பதிலே சொல்லவில்லை. நான் இயற்கைக்கும் ரோஷம் வரும் என்றறிந்தது அன்று தான்.
பிற்காலத்தில் அப்பா தனது மீன்பிடி project பற்றி ஒரு நாளும் வாய்திறக்கவேயில்லை. (நான் நோர்வேயில் மீன் பிடிக்கும் போதெல்லாம் அப்பாவின் நிலமை தான் எனக்கும்… இளைய மகள் எனக்கு மீன் பிடிக்கத் தெரியாதென்கிறாள்… (அவ மீன் பிடிக்கும் பொது என்ன நடக்குமோ?)
ஒரு நாள் போலீஸ்நாய் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதை பார்க்க கூட்டியும் போனார். அந்த நாய் குரைத்த ஒலி உடம்பையே உலுக்கியது, செஞ்சு அதிர்ந்தது. பின்பு பல தடவை எனக்கும் அப்படி ஒரு நாய் வேணும் என்று கேட்டும் நாய் கிடைக்கவில்லை. ஒரு வீட்டில ரெண்டு நாய் எதற்கு என்று நினைத்தாரோ என்னவோ? 1980 களின் ஆரம்பத்தில் தம்பி ஒரு நாய் வளர்த்தான்… கிட்டத்தட்ட அதுவும் போலீஸ்நாய் தான்… ஆனால் என்ன வெடிச்சத்தம் கேட்டால் வீட்டுக்குள் வந்து கடடிலின் கீழ் படுத்துவிடும். சூழல் அமைதியானதும் வெளியே வரும் (அமைதி விரும்பிய போலீஸ்நாய் என்று நினைக்கிறேன்) பின்பொருநாள் பாம்பு கடித்து இறந்து போனது அமைதி விரும்பிய போலீஸ்நாய்.
பிபிலையில் 1977இல் அவரின் சைக்கில் டைனமோவை நான் எனது மேதாவித்தனமான விஞ்ஞான ஆராய்ச்சிக்காக உடைத்த போதும் அப்பா என்னைத் துரத்திப் பார்த்தார். ஆனால் அன்று நான் தான் வென்றேன். ஆனால் இரவு படுக்கைக்கு வீடு திரும்பிய போது வாசலில் அவர் வில்லன் போல் நின்றிருந்ததால் சமாதான ஒப்பந்தம் அம்மாவின் முன் கைச்சாத்திடப்பட்டது. பின்பு பல வருடங்கள் அந்த சைக்கிலுக்கு டைனமோ இருக்கவே இல்லை, இப்பவும் என் சைக்கிலுக்கு டைனமோ இல்லை. அப்பா ஏதும் சாபம் போட்டாரோ என்னவோ…..
1977 இல் சூராவளி அடித்த போது தம்பியை தேடி பிபிலையில் இருந்து மட்டக்களப்புக்கு நடந்து போய் வந்தார்.
ஒரு முறை முள்ளுக்காவடி எடுத்தார் பயமாய் இருந்தது, அம்மா திருநீறு பூசிவிட்டார்.
மறு முறை கதிர்காமத்தில் பறவைக்காவடி எடுத்தார், பார்த்ததும் மயங்கி விழுந்தேன். தண்ணீர் தெளித்து, அப்பாவிடமே திருநீறு வாங்கி வந்து பூசிவிட்டார்கள்
வீட்டில் கந்தசஸ்டிகவசம் பாடமாக்கு என்று இம்சை தந்தார், தம்பி புத்தகம் பார்க்காமல் மனனம் செய்து பாடினான். தன் வாரிசுகளில் 50% உருப்படும் போல தெரிகிறது என்று திருப்பதிப்பட்டிருப்பார்.
ஒரு முறை தவனைப்பரீட்சையில் கணிதத்திற்கு 18 மார்க்ஸ் எடுத்து போது வீட்டில் பூசைவிழும் என்பதால் 18 ஐ 78 என்று ரிபோட்இல் மாற்றினேன். அப்பாவுக்கு சந்தேகம் வந்து எல்லா பாடங்களினதும் கூட்டுத்தொகையைப் பார்த்தார் அது 70 ஆல் பிழைத்தது. பிறகு என்ன பூசைதான்….
பந்தடிக்க, கிறிக்கட் பந்து போட, கீப்பருக்கு நிற்க என்றெல்லாம் பழக்கியதும், டேய்! விளையாடு ஆனா படிக்கோணும் என்று சொல்லியதும் அவர் தான்.
தியட்டருக்குள் அவரிடம் பிடிபடாமல் ஒரு முறை அருந்தப்பு தப்பியிருக்கிறேன்.
ஒரு முறை சைக்கிலுக்கு புதிய ரிம், டயர், செயின்,அது இது என எல்லாவற்றையும் மாற்றித்தந்தார். ஆன்று தான் முதன் முதலில் அவரை டபிள் ஏற்றிப் போனேன். அன்று சைக்கிலில் அவர் இருந்தபோதிலும் சைக்கில் பஞ்சு போல போனது.
கனகலிங்கம் சுருட்டு மட்டும் தான் குடிப்பார். தண்ணி அடித்தால் மட்டும் சிகரட் வாய்க்குவரும். காலையில் கனகலிங்கம் சுருட்டு இல்லாவிடில் கக்கூஸ் போகவராது. அங்குமிங்குமாய் அலைவார்.
அந்தக் காலத்தில் தான் யாழ்ப்பாணத்தில் மரதன் ஒட்ட சம்பியன் என்றார், நம்ப முடியவில்லை லொள்லு கேள்வி கேட்டால் ஆபத்து என்பதால் ஒன்றும் கேட்கவில்லை. பின்பொருநாள் மாமியிடம் கேட்டேன் அது உண்மையா என்று. ஓம், ஓம் அவன் அப்ப நல்லா ஓடுவான் என்றார். பாட்டியும் அதையே சொன்னார் எனவே அவர் யாழ்ப்பாணத்தில் மரதன் ஒட்ட சம்பியன் தான். நானும் ஓரளவு மரதன் ஓடியதற்காண காரணம் அது தான் போலிருக்கிறது.
யாழ்பாணம் போனால் அவரின் நண்பர் ஒருவர் பனை மரத்துப் பால் எடுத்துவருவார் ஒரு பெரிய பிளாஸ்டிக் கொள்கலனில். பனைமரத்துப் பால் குடித்தால் வெறிக்கும் என நானறிந்தது அங்கு தான்.
தமிழில் அரைகுறையாய் எழுவார், ஆங்கில பாடதிட்டத்தில் படித்த பாதிப்பு . எழுத்து வேலை எல்லாம் ஆங்கிலத்தில் தான் இருக்கும். கோழி கிழறியது போல எழுத்து. ஒன்றும் புரியாது.
1981 இல் யாழ்ப்பாணம் போயிருந்தேன். திடீர் என அப்பாவின் மூத்த அக்காவுக்கும் எனக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் முறிய அன்றிறவே ஏறாவூருக்கு வெளிக்கிட்டு அடுத் நாள் வீடு வந்து சேர்ந்த போது அப்பாவை மாரடைப்பு என மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தார்கள். நான் அங்கு போன போது அப்பா மயக்கத்தில் நெஞ்சை உயர்த்தி உயர்த்தி காற்றைத் தேடிக் கொண்டிருந்தார். அருகில் இருந்த அம்மா என்னை அணைத்துக் கொண்டார். அப்பா விடைபெற்றிருந்தார்.
அப்பாவின் கையெழுத்தில் ஒரு கடிதம் கூட இன்று என்னிடமில்லை என்பது நெஞ்சை நெருடுகிறது. அவரின் எழுத்துரு ஞாபகத்தில் இருக்கிறது. ஆனால் அம்மாவிடம் கட்டாயம் இருக்கும்.
இறப்பதற்கு சிறிது காலத்திற்கு முன் அம்மாவிடம் இவனுக்கு என்னை மாதிரியே கோவம் வருது என்றாராம். நான் அவரிடமிருந்து பழகிய நல்லபழக்கம் அது வொன்று தான் போலிருக்கிறது. அவரின் தண்ணியடியையும், சுருட்டையும் ஏன் பழகாமல் விட்டேன் என்பதற்கு என்னிடம் பதிலிருக்கிறது. பதிலில் அப்பா இருக்கிறார்.
ஏறக்குறைய 30 வருடங்களுக்கு முன்னான நினைவுகளிவை….இதை எழுதும் எழுத்தில் வர்ணிக்கமுடியாததோர் சுகமான உணர்வு என்னை ஆட்கொள்கிறது. அருகில் உட்கார்த்தி, கதைத்துப் பேசி, இம்சை பண்ண ஆசையிருந்தால் மட்டும் காணுமா? அதற்கு அப்பாவுமல்லவா இருக்க வேண்டும்.
உங்களின் அப்பாவின் நினைவுகளை ஆறுதலாக மீட்டுப்பாருங்கள் உங்களுக்கும் புரியும். அப்பா இருந்தால் அவரை அருகில் அமர்த்தி ஞாபகங்களை அவருடன் சேர்ந்து பகிர்ந்து பாருங்கள் வாழ்வின் இரகசியம் புரியும்.
.
அருமை.
ReplyDeleteதமிழ் உங்களுக்கு நன்றாக நெகிழ்ந்து கொடுக்கிறது.
உணர்வு மிக்க பதிவு.
நல்லா இருக்கு.மென்மையான எழுத்துக்கள்
ReplyDeleteஅப்பாவின் நினைவுகளில் மனம் நெகிழச் செய்த நல்ல பதிவு. பொலிஸ் நாய், உங்கள் மீன் பிடிப்பிற்கு மகளின் விமர்சனம் என இடையிடையே நகைச்சுவை நன்றாக இருக்கிறது
ReplyDeleteஅருமையான பதிவு.உணர்வுபூர்வமாக இருந்தது.
ReplyDeleteஇயல்பும் எள்ளலுமாக தமிழ் துள்ளி விளையாடுது. கடற்கரையில் கொஞ்சம் நிலக்காட்ச்சி landscape வந்து அழகும் அர்த்தமும் சேர்க்கிறது. இதை நிலமும் உறவுகளும் இன்னும் அதிகமாக்கி மீழ எழுதினால் தமிழுக்கு ஈழத்தவரின் பங்களிப்பில் ஒன்றாக இருக்கும். - வ.ஐ.ச.ஜெயபாலன்
ReplyDeleteGREAT! PLEASE WRITE MORE ABOUT ALL YOU KNEW IN YOUR LIFE...MOTHER,UNCLES,TEACHERS,FRIENDS,UNFORGETTABLE FIGURES ETC! YOU SHD PUBLISH A COLLECTION OF SHORT STORIES SOON!
ReplyDelete