சிவா - நோர்வே

நோர்வேக்கு வந்த பின் கிடைத்த உறவுகளைப் பற்றி இப்போதைக்கு எழுதுவதில்லை என்றே நினைத்திருந்தேன். இருப்பினும் ஏதோ சிவாவைப் பற்றி எழுதத் தோன்றியது.

1987 வைகாசி 16ம் நாளில் இருந்து 2006ம் ஆண்டின் ஆனி அல்லது ஆவணி மாதம் இறைவனடி சேரும் வரை கிடைத்த நண்பன் அவன் (அவர், இவர் என்று போலி மரியாதை கொடுக்கத் தேவையில்லை அவனுக்கு)

சிவா என்றால் முதலில் ஞாபகம் வருவது அவன் அடிக்கடி கூறும் ஒரு கூற்று ”பீரங்கி வாசலில் கூடு கட்டாதிங்க” என்பதாகும். பீரங்கி வாசலில் கூடு கட்டினா எப்படியிருக்கும் …. கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்….

முதலில் சிரிப்பு வரும், பின்பு பீரங்கி வெடித்தால் கூட்டின் நிலையையும், குருவியின் நிலையையும் யோசித்தால் சிரிப்பு மறைந்து பரிதாபம் மேலோங்கும்…. இப்படி கனக்க பழமொழி அடிக்கடி சொல்லுவான்…குரங்கிட்ட மூத்திரம் கேட்டமாதிரி என்று ஒன்றும் சொல்லுவான்.

யோசித்துப் பார்த்தால் அவன் நோர்வேயில் குடியேறியது அவனைப் பொறுத்தவரையில் பீரங்கி வாசலில் அவன் கூடுகட்டின மாதிரி இருக்கு….

தனிமை, நோய்கள், அவை தந்த மன உளைச்சல்கள், அவைகளில் இருந்து விடுதலை பெற நாடிய மது, மது கொடுத்த மீளமுடியாத போதை, வெறுப்பான, வெறுப்பேற்றிக் கொண்டேயிருந்த நெருங்கிய உறவுகள் (இலங்கையிலும்;;, வெளிநாட்டிலும்), அவனின் முறட்டுப் பிடிவாதம்….கூட்டிக் கழித்துப் பார்த்தால் அவனின் மரணத்திற்கான காரணங்கள் இவைகள் தான் என்று நினைக்கிறேன்.

அவனின் மரணத்தின் பின் அவனின் வீட்டில் இருந்து வெளியில் எடுத்த வெற்று வொட்கா போத்தல்களின் சத்தத்தையும், எண்ணிக்கையையும் மறக்க ஏலாது.

வொட்கா கொம்பனிக்காரன் சிவாவுக்கு சிலை வைத்தே ஆகவேனும்.. என்று முன்மொழிகிறேன்….

சிவாவுக்கு நாங்கள் செல்லமாக வைத்த பெயர் ”வெல்டர்” (அது ஒரு வித காரணஇடுகுறிப்பெயர்.. சிவா வெல்டர் ஆக வேலை செய்த காலமது, இரும்பை ஒட்டுவது போல தான் கூறும் கதைகளுடன் கிளைக் கதைகளையும் ஒட்டிக் ஒட்டிச் சொன்னதனால் சூட்டப்பட்ட பெயரது). அவன் கதைக்கத் தொடங்கினால் நாங்கள் ஒட்டுறான், ஒட்டுறான் என்பதுண்டு. ஒரு விடயத்தை சொல்வதென்றால் அதற்கு கை, கால், உடம்பு, தலை எல்லாம் வைத்து கதைவிடுவான் .. அவனை நாம் நன்கு அறிந்திருப்பதால் நாங்கள் கை, கால், உடம்பு, தலை எல்லாவற்றையும் கழித்துப் பார்க்கவும் பழகியிருந்தோம்.

எது எப்படியோ, அவன் கதைவிட்டாலும் ரசிக்கத்தக்க வகையில் நகைச்சுவையுடன், விறுவிறுப்பும் கலந்து கதைவிடக்கூடியவன். அவனது கதைகளில் வரும் பாத்திரங்களை அவன் பேச்சுத்தமிழில் வர்ணிக்கும் அழகு அலாதியானது.

அவனின் அஞ்சலிக்கூட்டத்தில் அஞ்சலி செலுத்திய எல்லோரும் அவனின் நகைச்சுவையுணர்வை நினைவுகூர்ந்ததை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.

சிவா உடனான ஞாபகங்களில் முக்கியமானது ”மீகோ” என்னும்அவனின் நாய். மீகோவை சந்தித்த முதல்நாள் அது என்னை வீட்டுக்குள் விடவே இல்லை. கள்ளனை கண்டதைப்போல குரைத்தது ….மீகோ என்ற சிவா கண்டிப்பான குரல் கேட்ட பின் தான் இந்த கள்ளனை உள்ளே விட்டது. ஆனாலும் அதன் சந்தேகம் போகவில்லை அதுக்கு. எனக்கு பின்னாலேயே வந்து எனக்கு முன்னாலேயே நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தது, அடிக்கடி உர்…உர் என்று தனது அதிருப்தியையும் காட்டிக் கொண்டிருந்தது…..

மீகோவின் இனத்திற்கும் எனக்கும்சமாதானமான உறவு ஒரு போதும் இருந்தது இல்லை (ஊரிலும் கூட), நான் சமாதானம் விரும்பினாலும் அவை என்னுடன் சமாதானமாவதில்லை…

தனது நாய் எனவும், அது கடிக்காது சாது (?)என்றும் அறிமுகப்படுத்தினான். அது தனது சொல்லை மட்டும் தான் அது கேட்கும் என்றான். மீகோவை வா, போ, இரு, எழும்பு, திறப்பை எடுத்து வா என்று எல்லாவற்றையும் செய்வித்து காட்டினான். மீகோ காலைத்தூக்கி எனக்கு கைதந்தது. உயிரைக்கையில் பிடித்தபடி கையைக் கொடுத்தேன் (கைகொடுக்காவிட்டால் சிவா விடமாட்டான்) மீகோவும் எஐமானனை ஏமாற்றாமல் எல்லாம் செய்தது. ஆனால் என்னில் ஒரு கண் வைத்தபடியே.சில காலத்தின் பின் ”பாடு மீகோ, பாடு” என்றால் ஒரு வித ஊளையிட்டு கத்தவும் பழக்கியிருந்தான் சிவா.

சம்மர் நேரத்தில் சிவாவின் காரின் முன் சீட்’இல் மீகோ இருக்கும். கார் கண்ணாடியை சிவா இறக்கியிருப்பான். ஜன்னலுக்கால் முகத்தை வெளியே போட்டுக் கொண்டு புதினம் பார்த்தபடி வரும். என்னைக் கண்டால் மட்டும் குரைக்கும் (என் பிரமையோ?). ஏன்டா என்னைக் கண்டால் மட்டும் ஏன் குரைக்குது என்று கேட்டதற்கு இரண்டு பதில் சொன்னான். முதலாவது, இனம் இனத்தோடதான் சேருமாம் என்றான் நக்கல் சிரிப்புடன், மற்றது, அது உன்னை நண்பனாக நினைக்கிறது என்றான் வலு சீரியசான முகத்தடன். (மீகோ என்ட நண்பனா? நடக்கிற கதையா அது?… எதிர்த்துக் கதைத்தால் அவன் தன் கூற்றை நிரூபிக்க தொடங்குவான் என்பதால் அடக்கி வாசித்தேன்)

மீகோவின் மரணம் சிவாவை பெரிதும் பாதித்தது. அது சுகயீனமாக இருந்த காலத்தில் அதை பிள்ளை போல பார்த்துக் கொண்டார்கள் (சிவா ஏறத்தாள 18 வருடங்கள், அவன் மரணிக்கும் வரை ஐன்னா என்னும் நோர்வேஐpய பெண்ணுடன் ஒன்றாய் வாழ்ந்தவன் என்பதை சொல்ல மறந்து விட்டேன்)சிவா சேட் இல்லாமல் மீகோவை தூக்கிவைத்த படி ஒரு படம் எடுத்து வைத்திருந்தான். கடைசிவரை அவனின் வீட்டில் தொங்கவிடப்பட்டிருந்த படங்களில் ஒன்று அது. மீகோவின் ”ஆஸ்தியும்” (சாம்பல்) கடைசிவரை அவனின் வீட்டில் வைக்கப்பட்டிருந்ததை அவனுடன் பழகிய எல்லோரும் அறிந்திருப்பார்கள். ……………….கல்லுக்குள்ளும் ஈரமிருக்கும்

திறமையான விளையாட்டுக்காரன். நன்றாக விளையாடுவான் என்பதால் கட்டாயம் தன்னை டீம்’இல் (அணி) போடுவார்கள் என்பது அவனுக்குத் தெரியும். இதை வைத்துக்கொண்டு அவன் செய்த இம்சை கொஞ்சநஞ்சமல்ல.

மட்ச் நெருங்கும் போது அவன் சொல்லும்
, காலுக்குள் உழுக்கீட்டுதுமச்சான்,
நான் லண்டன் போறன் (லண்டன் பாபா இவனது நண்பர்.. அதை வைத்து அவன் காட்டின கூத்தையும் சொல்ல ஏலாது.. அப்பப்பா என்ன கடி கடிப்பான் தெரியுமா?)
எனக்கு சுகமில்லை, மச்சான், ஏலாமல் இருக்கு,

இப்பிடி அலுப்புத்தருவான். அப்பவெல்லாம் அவனை கொல்ல வேணும் போல இருக்கும் (எனக்கு மட்டுமல்ல, எம்முடன் விளையாடிய எல்லோருக்கும் அப்படி இருந்தது). டேய் வாடா, வாடா வந்து விளையாடுடா என்று நாங்கள் கெஞ்சவேண்டும் என்பதால் தான் அப்படி செய்வான்.

நாங்கள் கெஞ்சினால் சரி சரி
இப்ப கொஞ்சம் பறவாய் இல்லை,
லண்டன் பாபா இந்தியாவில் சூட்டிங்கில இருக்கிறதால பிறகு வரட்டாம், இப்ப விளையாடுற அளவுக்கு சுகம்

என்று சொல்லி விளையாட வருவான். விளையாட்டில் எப்பவும் அதிஸ்டம் அவனின் பக்கம் தான்… நாம் வெற்றி பெற அவனின் விளையாட்டு தான் காரணமாய் இருக்கும்.. பிறகு என்ன… அதை வைத்து அடுத்த மாட்ச் வரும்வரைக்கும் எங்களை கடித்து, சப்பி, துப்பிவிடுவான்.. ஒரு முறை அவன் இறுதிப்போட்டியின் போது இரண்டு கோல் அடித்ததால் நாங்கள் முதன் முறையாக 7-8 வருடங்களின் பின் வெற்றிக்கிண்ணத்தை பெற்றுக் கொண்டோம்.

அப் போட்டியினை வீடியோ எடுத்தவனை கண்டால் (கொண்ணுபுடுவன், கொண்னு) காரணத்தை கீழே எழுதியிருக்கிறேன்.

தான் அடித்த கோல்களை மட்டும் வீடியோவில் இருந்து எடுத்து எடிட் பண்ணி 2 நிமிடம் மட்டும் ஓடும் படமாக மாற்றி டேய் பார்டா, பார்டா, சிவா அண்ணணின் அடியப் பார்டா… மரடோனாட விளையாட்டு மாதிரி இல்லையா, என்ன மாதிரி விளையாடுறான், பார்த்து பழகுங்கடா, என்று அவன் தந்த இம்சை கொஞ்சநஞ்சமல்ல (இதை வீடியோவை மரடோனா பார்த்திருந்தால் என்ன ஆகியிருக்குமோ? முருகா)

எங்கள் எல்லோருக்கும் வாகனம் ஓட்ட கற்றுத்தந்து, வாகனம் வாங்க கொன்சல்டிங் (அறிவுரை)தந்து, வாகனங்களை திருத்தி இப்படி கனக்க நல்ல வேலைகளும் செய்திருக்கிறான்.

நல்லா மீன் பிடிப்பான், ஒரு முறை அவனுடன் மீன் பிடித்து எம்முடன் இருந்த 40க்கும் மேற்பட்டவர்களுக்கு கறிவைத்ததை எம்முடன் இருந்த அனைவரும் அறிவார்கள்…

நோர்வேயில் நாங்கள் இருந்த சிறிய கிராமத்தில் இருந்த எல்லோரையும் அவனுக்கு தெரிந்திருந்தது. இது யார்? இவர்ட மனிசி யார்? அவரின் மாஜி மனிசி யார்? அவரின் சொந்த பந்தங்கள் யார் எல்லாம் தெரிந்திருந்தது…. எப்படி இவ்வளவையும் தெரிந்து வைத்திருந்தான் என்பது ஆச்சரியமான விடயம்.ஊரில் நடக்கும் எல்லா விடயங்களும் அவனின் database இல் update பண்ணி இருக்கும்.

அவனின் விருந்தோம்பல் அன்பான இம்சை. அவனிடம் போய் வயிருமுட்டாமல் வர ஏலாது.

குழந்தைகளின் நண்பன் அது மிகையாகாது. எல்லா குழந்தைகளும் அவனுடன் ஒட்டிக்கொள்ளும். அப்படி ஒரு ராசி அவனுக்கு… குட்டிராசா, சொக்கம்மா, சொக்கிச்சி இப்படியெல்லாம் குழந்தைகளுக்கு பெயர் வைத்திருந்தான். (என் குழந்தைகள் அவனை சொக்கா மாமா என்றே அழைத்தனர்) கண்டதும் சொக்லட் வாங்கிக் கொடுப்பான். வேண்டாம் என்றால் எம்முடன் ஒரு மாதத்திற்கு கதைக்க மாட்டான். பிறகு எல்லாம் சரியாகிவிடும்.

சின்ன சின்ன விடயத்துக்கெல்லாம் கோபித்துக் கொள்வான். இதனாலோ என்னவோ பலருடன் பலதடவைகள் கோபித்துக் கொண்டிருக்கிறான்.

கொண்டாட்டங்களின் போது கமராவை கொளுவிக்கொண்டு நிற்பான், தண்ணிப்பார்ட்டி என்றால் அவனுக்கு முக்கிய இடமுண்டு. அங்கு நாங்கள் சிரிக்க சிரிக்க அவன் சொல்லும் கதைகளின் கற்பனையும் நகைச்சுவையும் கூடிக்கொண்டே போகும்..

ஒரு முறை யாழ்ப்பாணம் போன போது அவன் தந்த அன்பளிப்புக்களை அவனின் தாயாரிடமும், சகோதரியிடமும் கொடுக்க அவன் (அன்பு) கட்டளையிட்டிருந்ததால் அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. (சிவாவின் ஒரு அண்ணன் டெலோ இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான பீட்டர் என சிவா மூலம் அறிந்திருந்தேன்) அதை அவனின் சகோதரியாரும் உறுதி செய்தார்.தாயார், சகோதரி, அவரின் மகன் அகியோரின் பொருளாதாரச் செலவினை அவனே பொறுப்பேற்றிருந்தான். மனிதாபிமானமுள்ள இதயம்….

மரணச் செய்தியை அவனின் சகோதரியாரிடம் தொலைபேசியில் அறிவித்த போது….தம்பி அவனுக்கு அங்க ஒருத்தரும் இல்லை, வடிவா எல்லாத்தையும் செய்யுங்கோ என்றார். இறுதி ஊர்வலத்தை அவனின் சகோதரியார் கேட்டுக் கொண்டதைப் போல் சிறப்பாய் நடாத்த உதவிய மனிதம் நிறைந்த நெஞ்சங்களை மறத்தலாகாது.

இறுதியாய் சிறிய கண்ணாடி ஓட்டையினூடாக பார்த்த போது நிம்மதியாய் எரிந்து கொண்டிருந்தான். கனடாவில் இருந்து வந்த அண்ணன் அவன் நித்திரை கொள்ளுற மாதிரி இருக்கிறான் தம்பி என்றார் நெஞ்சில் கைவைத்தபடியே.

காற்றில் கலந்து வரும் பூவின் வாசனை போல் என் வீட்டில் இன்னும் சொக்கா மாமா பற்றிய கதைகள் அவ்வப்போது வந்தபடியே இருக்கின்றன.

 .

அப்பா

செல்வமாணிக்கத்தார் ஒரு போலீஸ் அதிகாரி தான் ஆனால் வீட்டில் இருந்த வாரிசுடன் அவருக்கும், அவருடன் அவரின் வாரிசுக்கும் ”அலைவரிசை” (அதிகமாக) ஒத்துவருவதில்லை. நான் வளர்ந்த போது அவர் இல்லை. ஒரு வேளை தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்று நண்பனாய் மாறி இருப்பாரோ என்னவோ?

அக்கரைப்பற்றில் இருந்த காலத்தில் அப்பாவுடன் மாலையில் மீன் பிடிக்க போவேன் என்னுடன் தலைமயிர் மிகவும் ஐதான ஒரு உமை நண்பனும் (பெயர் ஞாபகத்தில் இல்லை) வருவதுண்டு. கடலுடனான என் உறவு ஏற்பட அப்பா தான் காரணம். ராவணன் மீசை, அடம்பன் கொடி, மணல் வீடு, நண்டு பிடிக்க என்று எல்லாவற்றையும் அப்பாதான் அறிமுகப்படுத்தினார். ஏங்கள் ஒப்பந்தத்தின் படி கடற் கரையில் அப்பா மீன் பிடிக்க நான் பக்கத்தில் இருக்கலாம், அவரின் கண்ணின் எல்லைக்குள் இருத்தல் வேண்டும். (திறந்த வெளிச் சிறைச்சாலை போல). ஓரு நாள் நானும் அந்த நண்பனும் தூரம் போய்விட, அப்பாவோ எங்களை கடல் இழுத்துக் கொண்டது என நினைத்து பல மணிநேரம் ஆட்களை வைத்து தேடி வீட்ட வரும் போது நானும் அந்த நண்பனும் ஆமை பிடித்து அதன் மேல் மெழுகுவர்த்தி கொழுத்திவிளையாடிக் கொண்டிருந்தோம்.

அவரின் மனவேதனையும், துக்கமும், ஆற்றாமையும் என்னைக் கண்டவுடன் கோபமாக மாற….டேய் பெரியதம்பி இங்க வாடா என்றார் லவுட்ஸ்பீகர் சவுண்டில். அவரின் கத்தல் கேட்டு சமாதானம் பேச அம்மாவும், எம்மியும் வெளியே ஓடி வரவும் நான் இனி அங்கு இருந்தால் உயிருக்கு உத்தரவாதமில்லை என எண்ணி ஓடத்துவங்கவும் சரியாய் இருந்தது. (அன்று ஓடிய ஓட்டத்தை நினைத்தால் இன்றும் களைக்கிறது) அப்பா என்னை பிடித்தது வேறு கதை.

அப்பா அக்கரைப்பற்றில் இருந்த காலத்தில் கிட்டத்தட்ட தினமும் மீன் பிடிக்கப் போவார் ஆனால் ஒரே ஒரு நாள் மட்டும் ஒரு மீன் கிடைத்தது. அதுவும் அவர் கடைசியாய் மீன்பிடித்த நாள். அந்த மீனை உடனே வெட்டி இரையாய் போட்டார்… கடல் பதிலே சொல்லவில்லை. நான் இயற்கைக்கும் ரோஷம் வரும் என்றறிந்தது அன்று தான்.

பிற்காலத்தில் அப்பா தனது மீன்பிடி project பற்றி ஒரு நாளும் வாய்திறக்கவேயில்லை. (நான் நோர்வேயில் மீன் பிடிக்கும் போதெல்லாம் அப்பாவின் நிலமை தான் எனக்கும்… இளைய மகள் எனக்கு மீன் பிடிக்கத் தெரியாதென்கிறாள்… (அவ மீன் பிடிக்கும் பொது என்ன நடக்குமோ?)

ஒரு நாள் போலீஸ்நாய் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதை பார்க்க கூட்டியும் போனார். அந்த நாய் குரைத்த ஒலி உடம்பையே உலுக்கியது, செஞ்சு அதிர்ந்தது. பின்பு பல தடவை எனக்கும் அப்படி ஒரு நாய் வேணும் என்று கேட்டும் நாய் கிடைக்கவில்லை. ஒரு வீட்டில ரெண்டு நாய் எதற்கு என்று நினைத்தாரோ என்னவோ? 1980 களின் ஆரம்பத்தில் தம்பி ஒரு நாய் வளர்த்தான்… கிட்டத்தட்ட அதுவும் போலீஸ்நாய் தான்… ஆனால் என்ன வெடிச்சத்தம் கேட்டால் வீட்டுக்குள் வந்து கடடிலின் கீழ் படுத்துவிடும். சூழல் அமைதியானதும் வெளியே வரும் (அமைதி விரும்பிய போலீஸ்நாய் என்று நினைக்கிறேன்) பின்பொருநாள் பாம்பு கடித்து இறந்து போனது அமைதி விரும்பிய போலீஸ்நாய்.

பிபிலையில் 1977இல் அவரின் சைக்கில் டைனமோவை நான் எனது மேதாவித்தனமான விஞ்ஞான ஆராய்ச்சிக்காக உடைத்த போதும் அப்பா என்னைத் துரத்திப் பார்த்தார். ஆனால் அன்று நான் தான் வென்றேன். ஆனால் இரவு படுக்கைக்கு வீடு திரும்பிய போது வாசலில் அவர் வில்லன் போல் நின்றிருந்ததால் சமாதான ஒப்பந்தம் அம்மாவின் முன் கைச்சாத்திடப்பட்டது. பின்பு பல வருடங்கள் அந்த சைக்கிலுக்கு டைனமோ இருக்கவே இல்லை, இப்பவும் என் சைக்கிலுக்கு டைனமோ இல்லை. அப்பா ஏதும் சாபம் போட்டாரோ என்னவோ…..

1977 இல் சூராவளி அடித்த போது தம்பியை தேடி பிபிலையில் இருந்து மட்டக்களப்புக்கு நடந்து போய் வந்தார்.

ஒரு முறை முள்ளுக்காவடி எடுத்தார் பயமாய் இருந்தது, அம்மா திருநீறு பூசிவிட்டார்.

மறு முறை கதிர்காமத்தில் பறவைக்காவடி எடுத்தார், பார்த்ததும் மயங்கி விழுந்தேன். தண்ணீர் தெளித்து, அப்பாவிடமே திருநீறு வாங்கி வந்து பூசிவிட்டார்கள்

வீட்டில் கந்தசஸ்டிகவசம் பாடமாக்கு என்று இம்சை தந்தார், தம்பி புத்தகம் பார்க்காமல் மனனம் செய்து பாடினான். தன் வாரிசுகளில் 50% உருப்படும் போல தெரிகிறது என்று திருப்பதிப்பட்டிருப்பார்.

ஒரு முறை தவனைப்பரீட்சையில் கணிதத்திற்கு 18 மார்க்ஸ் எடுத்து போது வீட்டில் பூசைவிழும் என்பதால் 18 ஐ 78 என்று ரிபோட்இல் மாற்றினேன். அப்பாவுக்கு சந்தேகம் வந்து எல்லா பாடங்களினதும் கூட்டுத்தொகையைப் பார்த்தார் அது 70 ஆல் பிழைத்தது. பிறகு என்ன பூசைதான்….

பந்தடிக்க, கிறிக்கட் பந்து போட, கீப்பருக்கு நிற்க என்றெல்லாம் பழக்கியதும், டேய்! விளையாடு ஆனா படிக்கோணும் என்று சொல்லியதும் அவர் தான்.

தியட்டருக்குள் அவரிடம் பிடிபடாமல் ஒரு முறை அருந்தப்பு தப்பியிருக்கிறேன்.

ஒரு முறை சைக்கிலுக்கு புதிய ரிம், டயர், செயின்,அது இது என எல்லாவற்றையும் மாற்றித்தந்தார். ஆன்று தான் முதன் முதலில் அவரை டபிள் ஏற்றிப் போனேன். அன்று சைக்கிலில் அவர் இருந்தபோதிலும் சைக்கில் பஞ்சு போல போனது.

கனகலிங்கம் சுருட்டு மட்டும் தான் குடிப்பார். தண்ணி அடித்தால் மட்டும் சிகரட் வாய்க்குவரும். காலையில் கனகலிங்கம் சுருட்டு இல்லாவிடில் கக்கூஸ் போகவராது. அங்குமிங்குமாய் அலைவார்.

அந்தக் காலத்தில் தான் யாழ்ப்பாணத்தில் மரதன் ஒட்ட சம்பியன் என்றார், நம்ப முடியவில்லை லொள்லு கேள்வி கேட்டால் ஆபத்து என்பதால் ஒன்றும் கேட்கவில்லை. பின்பொருநாள் மாமியிடம் கேட்டேன் அது உண்மையா என்று. ஓம், ஓம் அவன் அப்ப நல்லா ஓடுவான் என்றார். பாட்டியும் அதையே சொன்னார் எனவே அவர் யாழ்ப்பாணத்தில் மரதன் ஒட்ட சம்பியன் தான். நானும் ஓரளவு மரதன் ஓடியதற்காண காரணம் அது தான் போலிருக்கிறது.

யாழ்பாணம் போனால் அவரின் நண்பர் ஒருவர் பனை மரத்துப் பால் எடுத்துவருவார் ஒரு பெரிய பிளாஸ்டிக் கொள்கலனில். பனைமரத்துப் பால் குடித்தால் வெறிக்கும் என நானறிந்தது அங்கு தான்.


தமிழில் அரைகுறையாய் எழுவார், ஆங்கில பாடதிட்டத்தில் படித்த பாதிப்பு . எழுத்து வேலை எல்லாம் ஆங்கிலத்தில் தான் இருக்கும். கோழி கிழறியது போல எழுத்து. ஒன்றும் புரியாது.

1981 இல் யாழ்ப்பாணம் போயிருந்தேன். திடீர் என அப்பாவின் மூத்த அக்காவுக்கும் எனக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் முறிய அன்றிறவே ஏறாவூருக்கு வெளிக்கிட்டு அடுத் நாள் வீடு வந்து சேர்ந்த போது அப்பாவை மாரடைப்பு என மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தார்கள். நான் அங்கு போன போது அப்பா  மயக்கத்தில்  நெஞ்சை உயர்த்தி உயர்த்தி காற்றைத் தேடிக் கொண்டிருந்தார். அருகில் இருந்த அம்மா என்னை அணைத்துக் கொண்டார். அப்பா விடைபெற்றிருந்தார். 


அப்பாவின் கையெழுத்தில் ஒரு கடிதம் கூட இன்று என்னிடமில்லை என்பது நெஞ்சை நெருடுகிறது. அவரின் எழுத்துரு ஞாபகத்தில் இருக்கிறது. ஆனால் அம்மாவிடம் கட்டாயம் இருக்கும்.

இறப்பதற்கு சிறிது காலத்திற்கு முன் அம்மாவிடம் இவனுக்கு என்னை மாதிரியே கோவம் வருது என்றாராம். நான் அவரிடமிருந்து பழகிய நல்லபழக்கம் அது வொன்று தான் போலிருக்கிறது. அவரின் தண்ணியடியையும், சுருட்டையும் ஏன் பழகாமல் விட்டேன் என்பதற்கு என்னிடம் பதிலிருக்கிறது. பதிலில் அப்பா இருக்கிறார்.

ஏறக்குறைய 30 வருடங்களுக்கு முன்னான நினைவுகளிவை….இதை எழுதும் எழுத்தில் வர்ணிக்கமுடியாததோர் சுகமான உணர்வு என்னை ஆட்கொள்கிறது. அருகில் உட்கார்த்தி, கதைத்துப் பேசி, இம்சை பண்ண ஆசையிருந்தால் மட்டும் காணுமா? அதற்கு அப்பாவுமல்லவா இருக்க வேண்டும்.


உங்களின் அப்பாவின் நினைவுகளை ஆறுதலாக மீட்டுப்பாருங்கள் உங்களுக்கும் புரியும். அப்பா  இருந்தால் அவரை அருகில் அமர்த்தி ஞாபகங்களை அவருடன் சேர்ந்து பகிர்ந்து பாருங்கள் வாழ்வின் இரகசியம் புரியும்.

.

சித்தாண்டி-அப்பு














அப்பாவின் நெருங்கிய நண்பர், கந்தப்போடியார். அவருக்கு நாங்கள் வெத்த பெயர் சித்தாண்டி-அப்பு (காரண இடுகுறிப்பெயர்).

உருண்டு திரண்ட தேகம், மங:கிய வேள்ளைவேட்டி, சந்தனம் புசிய மறைக்காத மேல் உடம்பு, காதிலே சிவப்புக் கடுக்கன், வெற்றிலைப் பெட்டி, அவவப்போது சுருட்டு, வாயிலே முருகன் தேவாரம் இது தான் சித்தாண்டியப்பு. காசைக் கூட வேட்டியில் தான் முடிஞ்சு வைத்திருப்பார். தமிழ் படங்களில் வரும் பண்ணையார்கள் மாதிரி இருப்பார் அவர்.

ஆவரிடம் வெற்றிலை கேட்டால் ”நீ சின்னப்பிள்ளை கூடாதுடா தம்பி” என சித்தாண்டித்தமிழில்* சொல்லி வெற்றிலைக் காம்பை மட்டும் தருவார்.

எக்கச்சக்கமான பிள்ளைகள், வயல், காணி, வீடு, பண்ணை மாடுகள்… இப்படி எல்லாமே எக்கச்சக்கம் அவருக்கு. நாம் பிபிலையில், அக்கரைப்பற்றில் இருந்த காலத்தில் திடீர் திடீர் என தோன்றுவார், சில நாட்கள் தங்கியிருப்பார் பின்பு திரும்பிவிடுவார். அவர் வீட்ட போனால் சாப்பிட்டு முடியாது. அவ்வளவு அன்புத் தொல்லை.

அப்பாவும், அவரும் கதிர்காமம் நடந்து போன ஞாபகம் உண்டு. காட்டில் யானையைக் கண்டதாகவும் நெருப்பெரித்து பந்தம் காட்டி யானையை கலைத்தாராம் என்று சொன்னார். பயங்கரமான முருகபக்த்தர்..

2005 இல் சித்தாண்டி போய் அவரைச் சந்தித்த போது முதுமை தன் அதிக்கத்தை அவரின் மேல் காட்டியிருந்தது. ஆயினும் சித்தாண்டிஅப்புவில் அத்தனை மாற்றம் தெரியவில்லை. அருகில் அழைத்து தம்பி உண்ட அப்பாவைப் போல இருக்கிறாய் என்றார்.

தம்பி வயது பெயித்துது, இதிலையே கிடக்கன், முருகன் கூப்பிரான் இல்லை என்றார் சித்தாண்டி முருகன் கோயில் இருந்த திசையை பார்த்து கும்பிட்டபடி.

நான் அங்கிருந்த போது அவரின் பேரன் ஒருவர் விடுதலைப்போரில் விதையான செய்தி வந்தது. மகனின் மேலிருந்த கோவத்தினால் செத்த வீட்டுக்கு போகவில்லையாம். ஆனால் இழப்பின் வேதனையை அவரால் மறைக்க முடியவில்லை. ஏதோ அவர் அங்கே போயிருக்கலாம் என்று தோன்றியது எனக்கு.

நான் வெளிக்கிட்ட போது வெத்திலை மடித்துத் தந்தார் (வளர்ந்துவிட்டேன் என நினைத்தார் போல), புகையிலை வேணுமா என்று கேட்ட போது வேண்டாம் என்றேன், பல்லில்லா தன் சிவந்த வாயினால் எச்சில் தெறிக்க வெடித்துச் சிரித்தார்……

கிட்டக்கூப்பிட்டு தம்பி காலம் கெட்டுகிடக்கு கவனமா பெயித்து வா என்றார்.

அடுத்த முறையும் போய் பார்க்க வேண்டும்.

....................................
* சித்தாண்டித் தமிழ் கேட்டிருக்கிறீர்களா? மட்டக்களப்புத்தமிழின் இனிமையான ஒலிப்பிரிவுகளில் ஒன்று அது.
என்னென்று அதை எழுத்தில் கூறுவது என்று தெரியவில்லை.. என்றாலும் முயற்சிக்கிறேன்: என்னடா தம்பியை …. என்ன்றாரம்ம்பி என்பார்கள் (அதற்கொரு ராகமுண்டு)

.சித்தாண்டித்தமிழில் ”பு” என்ற தூஷன வார்த்தை அடிக்கடி பாவிக்கப்படுவதாக பேசக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் சித்தாண்டிஅப்பு அப்படிக் கதைப்பதில்லை.

.

2. - பொன்னையா

முதலில் ஞாபகம் வருபவர் பொன்னையா, அப்பாவின் நண்பரா அல்லது அவ்வப்போது உதவி செய்ய வருபவரா என்பது ஞாபகமில்லை. பீடி பிடிப்பார், மெலிந்த உடம்பு, அடிக்கடி இருமுவார், அவரின் சைக்கிலைத்தான் அப்பா வாங்கியதாக ஞாபகம். பட்டம் கட்டித் தருவார், சைக்கிலில் ஏற்றித் திரிவார்.

இவருடன் காளி கோயிலுக்கு போய் வந்த ஞாபகங்கள் உண்டு. காளி கோயிலில் உரு ஆடுபவர்களை பார்த்தால் பயமாய் இருக்கும் ஆனால் பொன்னையாவின் கையைப்பிடித்திருந்தால் பயம் குறைந்து, துணிந்து அவர்களைப் பார்க்கலாம். உரு ஆடுபவர்கள் வாழைப்பழம் தீத்த கூப்பிட்டால் பொன்னையா வந்தால் தான் போவேன். இல்லா என்றால் பயத்தில் தொண்டை வறண்டுவிடும்.

உரு ஆடுபவர்களை அருகிலிருந்து பார்த்திர்க்கிறீர்களா? ருத்ரம், ஆவேசம், குருரம், வேகம், அன்பு ஆகியவை கலந்து செய்யப்பட்ட கலவையாக காணப்படுவார்கள். (அந்த நேரத்தில் மட்டும்) 1980 களில் சிங்களவர்களும், இஸ்லாமியர்களும் கூட உரு ஆடியதைக் கண்டிருக்கிறேன்.

மீண்டு வருமா அந்தப் பொற்காலம்……?

வரலாம்…

இல்லை, இல்லை.. வர விடமாட்டார்கள், மனிதம் மறந்த மனிதக்கூட்டம்.

அன்பான பொன்னைவுக்கு 80களில் ஒரு அழகிய பேத்தி இருக்கப்போகிறாள் என்றும், 1980 களில் அவளாள் என்ளைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் தோன்றம், உலகம் அர்த்தப்படும், ராத்திரியின் நீளம் விளங்கும்,உனக்கும் கவிதை வரும்…உன் கையெழுத்து அழகாகும்… இப்படி வைரமுத்து சொல்லும் இரசாயன மாற்றங்கள் நடந்த விடயங்களை பின்பு பார்ப்போம்.

இவருக்கும் எங்களுடன் வாழ்ந்த ஏம்மிக்கும் எட்டாப் பொருத்தம். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக் கூட மாட்டார்கள். எம்மி பொன்னையாவை கண்டால் திட்டிக் கொண்டே இருக்கும். ஏன் என்பது இன்று வரை புரியாத ஒரு புதிர்............ புரியாமலே இருக்கட்டும்.

அப்பாவின் இறுதிக்கிரிகைகளின் போது வீட்டின் ஒரு ஓரத்தில் நின்றிருந்தார்.

விடலையாய் சுற்றிய காலத்தில் அப்பாவின் மரணத்தின் பின் சில நோங்களில் அவருடன் உரையாடும் போது தான் சுகயீனமாய் உள்ளதாக கூறிய ஞாபகம் உண்டு.

வெளிநாடு வந்து சில வருடங்களில் அவர் இறந்த செய்தி கிட்டியது. எமக்குள் நெருங்கிய தொடர்புகள் இல்லாவிடினும், ஏனோ என் நினைவுகளில் அவர் ஒரு மறக்க முடியாத பாத்திரம்.

1. - ஏறாவூர்

எனக்குள் எந்த ஆண்டு நினைவுகள் முதலில் வருகிறது என்று பார்த்தால் 1970 – 1971 போல இருக்கிறது….
ஏறாவுர் போலீஸ் உத்தியோகஸ்தர் வீடுகள் உள்ள தொடர் வீடுகளில் முதல் வீடு,
சுருட்டு சுத்தும் கடைக்கு முன்னால்,
காளிகோயில் பக்கத்தில்…
நண்பர்கள் பற்றி ஞாபகங்கள் இல்லை.

71 இல் முதலாம் வகுப்பில் சேர்ந்திருந்தேன். பல ஆண்டுகளின் (1980)பின் மீண்டும் ஏறாவுர் திரும்பிய பின் ரட்ணராஜா மாஸ்டரின் கணித ரியுசனில் சேர்ந்த முதல் நாள் ஒருவன்(ர்)(விமல்ராஜ); என்னுடன் முதலாம் வகுப்பு படித்ததாகவும், என்னை ஞாபகம் இருப்பதாகவும் சொன்னான். ஆச்சரியமாக இருந்தது… ஏன் என்னை ஞாபகம் வைத்திருந்தான்?

பல தடவைகள் இதைப்பற்றி யோசித்திருக்கிறேன், ஒவ்வொரு முறையும் மனதினுள் ஒரு ஏகாந்தமான உணர்வை ஏற்படுத்தும் நினைவு இது.

சில சம்பவங்களுக்கான காரணங்களைத் தேடக்கூடாது, அதில் இதுவும் ஒன்று.

விமல்ராஜ் பற்றி இன்னும் கனக்க எழுத இருக்கு… ;-)

என்னுள் உள்ள ஞாபகங்களுக்குள்ளான என் பயணம்

நான் கடந்து வந்த கிட்டத்தட் 16750 நாட்களில் (இன்று வரை 10.01.09) என்னினைவில் உள்ள, என்னில் ஏதோவொரு பாதிப்பை ஏற்படுத்தியவர்களைப்; பற்றி என்னுள் உள்ள ஞாபகங்களுக்குள்ளான என் பயணம் பற்றிய திட்டப்பணி இது. (அது என்ன திட்டப்பணி ஹி.. ஹி.. ”project” (கிளம்பிட்டாங்கய்யா…. கிளம்பிட்டாங்க))
ஞாபகங்களை ரீவைண்ட் பண்ண முதல் அந்த மனிதர்கள் யார் யார் என நினைத்துப் பார்க்க முயல்கிறேன். ஆனால் ” Alzheimer's disease” என்னை இப்பவே ஆக்கிமித்துள்ளது போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது. ஒருவரும் ஞாபகம் வருகிறார்கள் இல்லை.