ஞானி என்றழைக்கப்பட்ட மனிதம்


1975இல் எனது 10வது வயதில் அறிமுகமாகிய துடிப்பான ஒரு மனிதருடனான என் ஞாபகங்கள் இவை.

நாம் பிபிலையில் வாழ்திருந்த காலம். பல்வைத்தியராக பெரதெனியா பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறி வந்து சேர்ந்தார் பிபிலைக்கு. பின் தங்கிய இடம் தான் அது ஆனாலும் அங்கிருந்த மனிதம் மட்டும் இன்றைய இலங்கையை விட அற்புதமாய் வாழ்ந்திருந்தது அன்று. மூவினங்களும் நிம்மதியாக வாழ்திருந்த காலம்.

அம்மாவுடன் பிபிலை வைத்தியசாலையில்தான் வேலை செய்தார். வேறு சில தமிழ் மாமாக்களுடன் ஒரு வீட்டில் தங்கியிருந்தார் பிபிலையில். மாலையில் எமது வீட்டில் தான் அந்தக் காலத்து இந்த இளசுகள் எல்லோரும் கூடுவார்கள்.

கரம் போட்ஐ சுற்றியிருந்து கதைத்து விளையாடி, பலமாய் சிரித்து, தேத்தனீர் குடித்து,
கணகணப்பில் வரும் எனது அப்பாவுடன் தனவிக் கொண்டிருப்பார்கள் இவர்கள். அவருக்கு இந்த இளசுகளின் குசும்பு புரியாமல் அவர் ஏகிறிய நாட்டகளுமுண்டு அந்த நேரங்களில் ஞானி மாமா தான் அப்பாவை சமாதானப்படுத்துவார் கூல் பண்ணுவார். நான் அந்தப் பக்கம் திரும்பியும் பார்க்கமாட்டேன். ஞானி மாமாவின் கதிரையின் கைபிடியில் உட்கார்ந்திருப்பேன் நான். அவரின் அருகாமையே அலாதியான மகிழ்ச்சியைத் தரும்.

குளப்படி ஒண்டும் செய்யேலலேயேடா என்பார் அடிக்கடி (நான் இன்னும் குழப்படி செய்யவேண்டும் என்று விரும்பினாரோ என்னவோ). அப்பா ஏதும் கதைத்தால் தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்பார் அவரிடம். பெரிசும் அடங்கிப்போனது அவரிடம். புதினமாய், எங்கள் வீட்டில் ”ஞானி” க்கென்றொரு மரியாதை இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். இப்போதும் அம்மாவின் நினைவில் இருக்கிறார்.

என் தாத்தா (அம்மாவின் அப்பா) விட்ட தவறின் காரணமாக எனக்கு ஒரே ஓரு மாமா தான் அம்மா வழியில் இருந்தார். தந்தை வழியிலும் அப்பாவின் அக்கா கணவர் மட்டுமே மாமாவாயிருந்தார். இவர்களில் முதலாமவர் கொழும்பிலும் மற்றவர் யாழ்ப்பாணத்திலும் இருந்ததால்.. மாமா என்னும் அற்புதச் சொல்லின் அருமை பலகாலம் தெரியாதிருந்தது எனக்கு.

யாரும் 20ஐக் கடந்திருந்தால் அவர் எனக்கும், தம்பிக்கும் மாமாவான காலம் அது. எனவே பலர் மாமாவாகவும், மாமேயாகவும் (சிங்களத்தில்) இருந்தனர் எங்கள் உலகத்தில்.

மெலிந்து நெடிந்துயர்ந்த தேகம். ஒடுங்கிய முகம், பெல்பொட்டம் மாதிரி ஒரு உடுப்பு. சேட் அதைவிட அலங்காரமோ, அகங்காரமோ இல்லாத மனிதர்தான் ஞானி மாமா. கர்ணணாகவும் இருந்தார் சிரிப்பிலும், குதூகலத்திலும்.

ஞானி மாமா தான் ”மாமா” என்றும் சொல்லின் இனிமையை எனக்குப் புரியவைத்தவர்.

சைக்கில் ஓட்டப் பழக்கினார். அது பழகியதும், ஓடிக் கொண்டிருக்கும் சைக்கிலில் (பார்) இருந்து பாய்ந்து இறங்க, பாய்ந்து ஏறி இருக்க, அதன் பின் டபிள் ஏத்தியோட, சிறு தடி கொண்டு களண்ட சைக்கில் செயின் பூட்ட

கட்டப்பொல் கட்டவும் அடிக்கவும், ரப்பர் கொட்டையில் ஐஸ்பழத் தடி வைத்து காற்றாடி செய்ய, ஆற்றில் குளிக்க வானில் பறக்கும் பலூன் செய்ய, இப்படி எத்தனையோ

ஒரு நாள்
”டேய், மாட்டின் வாலில் காய்ந்த தொன்னமோலை கட்டுடா மாடு ஒரு நாளும் எழும்பி நடக்காது” என்று கிண்டிவிட்டார் எனது ஆர்வத்தை. எங்கள் வீட்டருகில் இருந்த சந்தையில் பல சோம்பேறி மாடுகள் வாழ்ந்திருந்தன. நான் அருகில் சென்றால் நக்குமளவுக்கு நட்பாயுமிருந்தன.

அவற்றில் ஒன்றுக்கு காய்‌ந்த தென்னமோலை கட்டினேன் (ஞானி மாமாவும் வந்திருந்தார், அவரின் கொடுப்புக்குள் ஒரு குசும்புச் சிரிப்புமிருந்தது அதனர்த்தம் அப்போது புரியவில்லை எனக்கு)

மாடும் வாலை நீட்டிப் மிகவும் ஆசுவாசமாகப் படுத்திருந்தது. காய்ந்த தென்னமோ‌லையை கயிற்றின் ஒரு நுனியில் கட்டி மறு நுனியை மாட்டின் வாலில் கட்டினேன்.

மாடு அசையவில்லை, ஆனால் திரும்பி என்னை நக்கியது
5 நிமிடம் பொறுத்துப் பார்தேன் மாடு மாமா சொன்னமாதிரி எழும்பவேயில்லை

”நீங்கள் சொன்னது சரி தான் மாமா” என்றேன் சந்தோசத்தில்
”ம்”  என்றுவிட்டு சொன்னார்
”நீ உதைத்தாலும் எழும்பாது” என்று
மடையன் நான்... உதைத்துப் பார்‌த்தேனே அந்த மாட்டை

துடித்து எழும்பியது மாடு, எழும்பிய வேகத்தில் ஓலை சர சரக்க பயத்தில் வேகமாக ஓடத் தொடங்கியது
வெடித்துச் சிரித்தபடியே, ”என்னடா மாடு எழும்பீட்டுது” என்றார் நக்கலாய் (அப்போதுதான் புரிந்தது அவர் திருகுதாளம்)

மாடு மார்க்கட்டை கடந்துகொண்டிருந்தது.  அவசரசிகிச்சை வண்டிக்கு இடம் விட்டுக்கொடுக்கும் வாகனங்கள்போல் மனிதர்கள் விலக, மாட்டின் வேகம் கூடியது.
”ஏறுடா சைக்கிலில்” என்றார் ஞானி மாமா. பாய்ந்து ஏறி‌னேன் ”நானும் வரட்டாவில்” (துவிச்சகரவண்டி)
மாடு சந்தையின் இடது பக்கம் திரும்பி பதுளையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.

மாமா மாடு மாதிரி துவிச்சக்கரவண்டியினை மிதித்துக்கொண்டிருந்தார்.

நான் காற்றில் இருந்தேன்.

மாடு ஓட, மாமா உளக்க, நான் சிரிக்க
அன்றைய நாள் வாழ்வில் மறக்க முடியாத நாளாக மாறிக்கொண்டிருந்தது.

மாலை அம்மாவிடம் நடந்ததை போது, காது திருகி மாடு பாவமடா.. என்றார் அன்பாய்
புதினமாய் வெடித்துச் சிரித்தார் அப்பா, ஞானி மாமாவை கடைக்கண்ணால் பார்த்தபடி.

மாடு மாதிரி நாய்க்கு பெற்றோல் ஊத்தினாலும் ஓடுமடா என்று சொல்லியும் தந்தார் மற்றோரு நாள்
(அதையும் செய்து பார்த்திருக்கிறேன்.. எனக்கு அதுவும் ஒரு அற்புதமான அனுபவம், ஆனால் பாவம் நாய் )

அப்பாவின் துவிச்சக்ரவண்டியில் மின்ஊக்கியினுள் (டைனமோ) காந்தம் இருக்கிறது என்னும் அற்புதமான அறிவுரை தந்த என்னை ஒரு விஞ்ஞானியாக்கியதும்.

கடைக்குப் போனால் மிட்டாயும் ஐஸ்பழமும், மார்கட்டுப் போனால் தும்பு முட்டாஸ், நிறம் நிறமாய் தொங்கும் நைஸ் வாங்கித்தந்தும், கிழமைக்கு ஒரு காமினி பொன்சேகா படம், விடுமுறைகளின் போது சிறு சிறு பயணங்கள் என்று அன்பான மாமாவாய் வியாபித்திருந்தார் என்னை அடுத்து வந்த பல வருடங்கள்.

77ம் ஆண்டு தேர்தலின்போது ”ஆண்ட பரம்பரை மீண்டுமொரமுறை ஆள நினைப்பதில் என்ன குறை?” என்று சொல்லித்திரியுவும் சொல்லித்தந்தது அவர் தான். (காசிஆணந்தனின் சுலோகம் இது)

1978 இல் ஏறாவூருக்கு இடம் பெயர்ந்த போது குறைந்து போனது அவர் அருகாமை. நானும் சற்றே வளர்ந்திருந்ததாலும் வௌ்ளைச்சட்டைத் தேவதைகள் கவனத்தை ஈர்த்தாலும் ஞானி மாமாவின் பிரிவு பெரிதாய் பாதிக்கவில்லை என்னை இருப்பினும் அடிக்கடி ஞாககத்தில் வந்து போனார், வீட்டுக்கும் வந்து போனார்.

1983 இன் ஆரம்பத்தில் என்று நினைக்கிறேன் கொழும்பில் அவர் வீடு தேடிப் போய் சந்தித்த போது
அடிக்காத குறையாய், பேசிக் கலைத்தார் என்னை வாழ்க்கையே வெறுத்திருந்தது அன்று மாலை வரை

அன்று மாலை இருட்டியபின், நாம் தங்கியிருந்த வீடு வீடு தேடி வந்து (ஏறத்தாள மாறு வேடத்தில்) அருகிலமர்த்தி இப்படிச் சொன்னார்.

தான் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தொழில் புரிவதாயும் குட்டிமணி, தங்கத்துரை மற்றும் பலருக்கு பல்வைத்தியம் பார்த்த போது அவர்கள் தந்த கடிதங்களை வெளியிடத்துக்கு பரிமாறியதாகவும் அதை அறிந்த சிறைக்காவலர் தன்னை போலீசிடம் பிடித்துக்கொடுக்க சில காலம் 4ம் மாடியில் அரச விருந்தினராக தங்கி இருந்தாரென்றும், தற்போது தன்னை அவர்கள் பின்தொடர்வதாலேயே தான் என்னை வாசலில் வைத்தே திருப்பி அனுப்பினார் என்றும் சொன்னார்.

மாமா மாறவில்லை என்பது போதுமானதாயிருந்தது யிருந்தது எனக்கு

மாமாவின் பூர்வீகம் திருகோணமலை. ஒரு அண்ணணும் இரண்டு சகோதரிகளும் இருந்தனர் அவருக்கு. தாயார் மட்டுமே உயிருடன் இருந்தார்.

ஈழத்தமிழர்களின் விடுதலையின்பால் ஆர்வம் கொண்டிருந்தார். இந்து இளைஞர் மன்றம் அது இது என ஓடித்திரிந்தார் என்றும் ஞாபகமிருக்கிறது. ஏதோவொரு இயக்கத்திலும் இருந்தார் என்று நினைக்கிறேன்.

ஒரு முறை அம்மாவிடம் அடம்பிடித்து ஞானி மாமாவுடன் திருகோணமலைக்குச் சென்றேன். அவர் போகுமிடமெல்லாம் நானும் சைக்கிலில் தொத்தி்க் கொண்டேன். கடற்கரை, சுடுதண்ணிக் கிணறு, கோயில், தியட்டர் என எல்லாம் காட்டினார். ”ராவணண்வெட்டை”க் காட்டி இந்தக் கதைகளை நம்பாதே, உருப்படமாட்டாய் என்றும் போதித்தார்.

எப்போதும் ஒரு ரொலெக்ஸ் கமரா (கறுப்பு வெள்ளை) வைத்திருப்பார் எப்பவும். என்னையும் தம்பியையும் அதிகமாய் படமெடுப்பார். தேவைக்கு அதிகமாய் பௌடர் பூசி வரும் எங்களை படம் எடுப்பார். எனக்கு புகைப்படக் கலையில் எனக்கு ஆர்வ‌மேற்பட அவர்தான் காரணம்.

எனக்கு அவரிடம் பிடிக்காததது அவர் சிவாஜி ரசிகன் என்பது மட்டுமே. எம்.ஜி.ஆருக்கு நடிக்கத்தெரியாதென்பார். அவருடன் சிவாஜிக்கு சண்டைபிடிக்க தெரியாது என்பேன் நான். சிரித்து, தலையைக் கலைத்து விடுவார். அனால் எம்.ஜி.ஆரின் ஒரு பாடல் அவருக்கு மிகப்பிடித்திருந்தது.

திருமணமாகாதவர் அவர். அடிக்கடி ”கட்டித் தங்கம் வெட்டியெடுத்து காதல் என்னும் சாறுபிழிந்து ” என்ற எம்.ஜி.ஆரின் பாடலைப் படிப்பார். கையால் தங்கம் வெட்டுவது போல நடித்துக்காட்டுவாா். அவருக்கு காதல்தோல்வி ஆகியிருக்மோ என்னமோ என்று நானும்  யோசித்திருக்கிறேன், பதில் கிடைக்கவேயில்லை கடைசிவரை.
காலங்கள் ஓடின, காட்சிகளும் மாறின,  மாமாவின் தொடர்பறுந்துபோனது மெதுவாய். பதின்மக்காலத்தின் கவர்ச்சியில் நானும் மாமாவை மறந்து தான் திரிந்திருந்தேன். இந்தியா சென்று பின்பு நோர்வே வந்தபின்னான காலத்தில் செய்தி கிடைத்தது. செய்‌தி எப்போது கிடைத்து என்பது மறந்து விட்டது. ஆனால் கனமாய் மனதில் பதிந்துவிட்டது அச் செய்தி.

EROS இயக்கத்தினரால் 1980 இன் நடுப்பகுதியில் திருகோணமலையில் ஒரு மலசலகூடத்தினுள்  வைத்துப்பூட்டப்பட்டு, பட்டினி போடப்பட்டு கொலைசெய்யப்பட்டாராம்.

காரணம்:
இரண்டே இரண்டுதான். முதலாவது,  பொதுப் பணத்தை இவர்களுக்குக் கொடுக்க மறுத்தாரம்.

பரிசுத்தமானவர்களே!

நீங்கள் அவரை வளமைபோன்று சுட்டுத் தள்ளியிருக்கலாமே. உங்களின் கொலைப்பசிக்காக அதற்காக ஒரு மனிதத்தை பட்டினி போட்டுக் கொல்வதா?

இவை தான் மாமாவின் ஞாபகங்கள். அவ‌ரெடுத்த படங்கள் சில அம்மாவிடம் உண்டு. எடுத்து வர வேண்டும் அடுத்தமுறை.எனதன்பு ஞானி மாமாவுக்கு இது அர்ப்பணம்

இவை தான் மாமாவின் ஞாபகங்கள். அவ‌ரெடுத்த படங்கள் சில அம்மாவிடம் உண்டு. எடுத்து வர வேண்டும் அடுத்தமுறை.எனதன்பு ஞானி மாமாவுக்கு இது அர்ப்பணம்
 

சஞ்சயன்
11.06.10
ஒஸ்லோ

7 comments:

 1. Your writing style is very good, simple, elegant and sharp. in everything you wrote you have something to say at the end like

  " யுத்தத்தின் எச்சத்தினால் பெற்றோரை இழந்து தவிக்கும் பிஞ்சுகளின் மனதும், பிச்சைக்காரர்களே இல்லாத என்னூரில் இன்று கையேந்தி நிற்கும் பிஞ்சு விரல்களும்.."

  "உங்களுக்கு கொலைப்பசி.... அதற்காக ஒரு மனிதத்தை பட்டினி போட்டுக் கொல்வதா? "

  சத்தியமான உண்மைகள்.

  Mano

  ReplyDelete
 2. நன்றி அய்யா!என் மனதை கலங்கடித்த உண்மைகள் அவை.
  உங்கள் வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 3. if he was a lawyer and dentist, he was kidnaped by EROS that had the IPKF' blessings . IAs I heard he worked with EROS earlier. The problem came because of his NGO funding. He was part of YMHA too.
  Hope you did not leave this information gap purposely

  ReplyDelete
 4. I can say one thing. He was a wonderful man. we missed him
  Sanjayan your a good man,
  Ranjan.c

  ReplyDelete
 5. @ Anonymous: அவர் வழக்கறிஞராகவும் இருந்தார் என்பது எங்கோ கேட்டமாதிரி இருக்கிறது. மற்றய விடயங்களும் எனக்குப் புதியவை. ஏதோ ஒரு இயக்கத்தில் இருந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
  தகவல்களுக்கு மிக்க நன்றி.

  @Devi (ரஞ்சன்):நம்மள நல்லவன் என்கிறீர்கள்.. நீங்க ரொம்ப நல்லவர்ண்ணே..

  ReplyDelete
 6. GREAT...PLEASE CONTINUE YOUR WRITINGS...YOU HAVE A GREAT WRITER IN YOU..!!!

  ReplyDelete
 7. ஞானி மாமா நினைவுகள் சுவையாக இருக்கின்றன.
  அவரது இழப்பு போல எத்தனை இழப்புகளை எமது சமூகம் காண நேர்ந்தமை துர்ப்பாக்கியமே.

  ReplyDelete

பின்னூட்டங்கள்