இன்று பல நாட்களின் நிலக்கீழ் தொடரூந்தில் பயணிக்க நேர்ந்தது. யன்னலருகில் இடம் பிடித்து அமர்ந்து கொண்டேன். கண்கள் எதையோ பார்த்திருக்க மனம் எங்கோ சுற்றுலா போயிருந்தது, வழமை போல்.
திடீர் என்று என் முன்னால் ஒரு முக்காடு போட்டிருந்த தாயும், அழகே உருவான ஒரு பெண் குழந்தையும் அப் பெண் குழந்தையின் தம்பியும் வந்தமர்ந்தனர். அப் பெண் குழந்தக்கு நான்கு அல்லது ஐந்து வயதிருக்கலாம்.
அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்ருந்தேன். எனது காவியாவினதும், அட்சயாவினதும் குழந்தைப்பிராயம் நினைவில் நிழலாடியது.
அவர்களுக்கும் இவளுக்கும் பெரிய வித்தியாசமிருப்பதாய் தெரியவில்லை எனக்கு.
இவளுக்கும் நீண்டு வளர்ந்த தலைமுடி
அழகிய குறும்பு கலந்த கண்கள்
ஒற்றைப் பின்னல்
கையில் ரோஸ் நிறத்திலும், இன்னும் பல நிறங்கள் பதித்த கல்லுக் காப்பு
தலையில் உடைக்குப் பொருத்தமான கிளிப்
அதற்குப் பொருத்தமாய் சப்பாத்து
ஒரு கையில் அழகிய கரடிப்படம் போட்ட கைப்பை
மறு கையில் சொக்லேட்
வாயிலே ஆயிரம் கேள்விகள்
இவளுக்கும் என்னவள்களுக்கும் துளியேனும் வித்தியாசமில்லை.
காலம் மாறியிருந்தாலும், கடந்து போயிருந்தாலும்
அந்த இனிமையான பருவத்தின் வாசனை எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. இனிமேலும் இருந்து கொண்டே இருக்கும்.
அந்த நாட்களில் வேலை நிமித்தம் அடிக்கடி பயணப்பட வேண்டி வரும். உள்நாடு, வெளிநாடு என்று எங்கு போனாலும் முதலில் தேடி ஓடுவது உடுப்புக்கடையாய் இருக்கும்.
விதம் விதமாய் உடுப்புக்கள், அலங்காரப் பொருட்கள், தலைக்கு கிளிப்கள், ரப்பர் பட்டிகள், காப்புகள், பொம்மைகள், ஸ்டிக்கர்கள் என பெண்குழந்தைகளின் உலகத்திலேயே வாழ்ந்திருந்தேன். ஆரம்பத்தில் எதைக் கொண்டு போனாலும் துள்ளிக் குதித்தார்கள். கட்டியணைத்து மூச்சு முட்ட முத்தம் தந்தார்கள். சுற்றியிருக்கும் உலகமே மறந்து போகும் எனக்கு.
அவர்களுக்கு வயதாக வயதாக விருப்பங்களும், தேவைகளும், ஆர்வங்களும், நிறங்களும் மாறிப்போயின. இது புரியாமல் நானும் பல தடவைகள் அவர்களை இன்னும் குழந்தைகள் என்று நினைத்து எனக்கு அழகாயிருப்பதை கொண்டு போய் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறேன்.
தற்போதெல்லாம் ஏதும் வாங்குவது எனின் பலமாய் யோசிக்க வேண்டியிருக்கிறது.
un common ஆக இருக்கவேண்டும்
நிறம் பொருந்த வேண்டும்
புதிய டிசைன் ஆக இருக்க வேண்டும்
காலத்திற்கு ஏற்றதாக இருத்தல் வேண்டும்
வயதுக்கு ஏற்றதாயிருக்க வேண்டும்
கடைக்குள் போனதுமே எனக்குள் ஆயிரம் கேள்விகள்.
இதை வாங்குவதா, அதை வாங்குவாதா இல்லது மற்றதையா?
என்று யோசித்தே மண்டை காய்ந்து போகும்.
நீங்களே உங்களுக்கு வாங்குங்கோ என்று கடைக்கழைத்துப் போனால்
இந்த அப்பாவுக்கு ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது என்றும்
அன்பளிப்பு என்றால் நீங்கள் தான் தெரிவு செய்ய வேண்டும் என்றும் கதைவரும்.
மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் அடி மாதிரி
பிழையான பரிசை தெரிவு செய்தாலும் பேச்சு
பரிசை தெரிவு செய்யாவிட்டாலும் பேச்சு
ஆனால் பூவால் அடித்தது போலிருக்கும் அவர்களின் அடி
வலிக்கவே வலிக்காது.
என் முன்னாலிருந்த பெண் குழந்தையும் வளர்ந்து
நான் பட்ட அவஸ்தையை தனது பெற்றோருக்கும் குடுப்பாள்.
காலம் மட்டும் அதை கண்டு கொள்ளாமல் தன்பாட்டில் போய்க் கொண்டேயிருக்கும். வழமைபோல்.
எல்லாம் நன்மைக்கே.
.
எமது குழந்தை செல்வங்களுக்கு ஆசையாய் பார்த்துபார்த்து, ஓடி ஓடி உடுப்புகள் வேண்டுவது ஒரு சுகம், அதை அவர்கள் போட்டுக்கொண்டு எம் கண்முன்னே சுற்றிவருவது அதை விட சுகம். எல்லாமே அவர்கள் குழந்தைகளாக இருக்கும் மட்டும் தான். அதன் பின் அவர்களின் ரசனையே மாறி விடுகிறது சாப்பாடு உட்பட. நாங்கள் சந்தோசமாக நின்று வேடிக்கை தான் பார்க்க முடியும்.
ReplyDeleteஇந்தபதிவில் இருக்கும் ஓவியம் நீங்கள் வரைந்ததா? அழகாக உள்ளது.
ReplyDeleteஓவியம் நான் வரைந்தது தான்.
ReplyDeleteஎன்று சொல்ல விருப்பம் தான். ஆனால் வரைந்தவர் இதை வாசித்தால் பிரச்சனையாகிவிடும். எனது பதிவுலகத்தில் உள்ள படங்கள் எல்லாம் ஆங்காங்கே சுட்டவை என்பதை மறுத்தால் கூகில் என்னை மன்னிக்காது.