ஒரு தாதாவும் சாதாரணமானவனும்
நான் சொல்லப்போகும் மனிதரை இந்த வருட இளவேணில் காலத்தில் சந்தித்தேன். முதல் சந்திப்பை ஒரு பதிவாக எழுதியுமிருந்தேன் (பார்க்க Go go Nigeria . கமோன் நைஜீரியா )
இன்றும் அவர் வீட்டில் கணணி திருத்திக் கொண்டிருக்கிறேன். இதற்கு முன்னும் ஓரிரு நாள் வந்து போயிருக்கிறேன். இந்த மனிதரிடம். அந்த நாட்களிலும், இன்றும் நடந்த சம்பவங்களைப் பார்த்தால் இவர் ஒஸ்லோவில் வாழும் சில ஆபிரிக்க இனங்களுக்கு ஒரு (மனிதாபிமானமுள்ள) தாதா மாதிரி நடந்து கொள்கிறார். அவரின் வீடு எப்போதும் பிரச்சனைகளினால் நிரம்பிய மனிதர்களால் நிரம்பியிருக்கிறது.
இன்றும் இப்படித்தான் தங்களை வீட்டு உரிமையாளர் வீட்டால் கலைத்துவிட்டார் என்று சொல்லியபடி 3 பெண்கள் வந்திருந்தார்கள். நீங்கள் வீட்டு வாடகை கொடுக்கவில்லை என்று அறிகிறேன் என்றார்.
தலைகுனிந்திருந்தனர் பெண்கள்.
”ஏன் வாடகை கொடுக்கவில்லை”
”அம்மாவுக்கு அனுப்பினேன்”
”வேலை இல்லை”
முன்றாமவள் மெளனமாய் இருந்திருந்தாள்
உங்களால் ஒரே தொல்லையாகிவிட்டது. வீட்டு உரிமையாளன் மனம் வைத்தால் மட்டுமே நீங்கள் இங்கு வாழலாம் என்றார்
அவர்கள் தலைகுனிந்து மௌனமாய் இருந்தார்கள்.
இடையில் 4 தொலைபேசி அழைப்புக்களுக்கு பதிலளித்தார்.
அவற்றில் ஒருவருக்கு நாளெழுத்து ஆங்கில சொல்லால் உரத்துத் திட்டி, நாளை மாலை வா என்றார்.
அதற்கப்புறம் அந்த பெண்களை வெளியேறுங்கள் என்றார். அவர்கள் கெஞ்சினார்கள். திட்டி அனுப்பினார் அவர்களை.
அவர்கள் போனதும் இவளவவைக்கு சொகுசான வீடு தேவைப்படுகிறது என்று திட்டிய படியே யாருடனோ கதைத்து ஒரு வீட்டை ஒழுங்கு பண்ணினார்.
பிறகு அந்தப் பெண்களை தொலைபேசியில் அழைத்தார். அவர்களில் அழகானவள் அவரின் மடியில் குந்தினாள். அவளின் முதுகைத் தடவியபடியே ” எனக்கு மனைவிருக்கிறாள்” தள்ளி இரு என அதிகாரம் கலந்து கட்டளையிட்டார். அவளும் விலகிக் கொண்டாள். பிறகு புதிய வீட்டைப்பற்றி கூறி ஒழுங்காய் வாடகையை செலுத்துங்கள் என்றார். அவர்கள் நன்றி என்றபடி எழுந்து போயினர்.
முன்பொருநாள் ஒரு பெண் இவரின் வீட்டில் அழுதபடி நின்றிருந்தாள். நோர்வேக்கு வந்து 2 நாட்கள் என்றாள். அவளை போலிசுக்கு அனுப்பி, அகதியாகப் பதிந்து அவளுக்கு தேவையானதை தனது நண்பர்களினூடாகச் செய்தார்.
இவரின் வீட்டில் தன் கணணியை திருத்தி வாங்கிய பின் எனக்கு பணம் தரமால் தண்ணி காட்டியவனைப் பற்றிச் சொன்னேன். இரண்டுதரம் தொலைபேசி எடுத்தார். பணம் வந்தது. கொணர்ந்தவர் மன்னிப்பும் கேட்டார், தனது நடத்தைக்கு.
அவருக்கு ஒரு தம்பியிருக்கிறார். ஒரு நோர்வேஜிய பெண்ணை திருமணமுடித்திருக்கிறார். ஆனால் ”பஞ்ச தந்திரம்” படத்தில் வரும் கமலஹாசன் மாதிரி நாளுக்கொரு பெண்ணுடன் திரிகிறார். என்னால் இவனை திருத்தமுடியாதிருக்கிறது என்று அங்கலாய்த்தார் ஒரு நாள். குடும்பத்தின் மரியாதையை கெடுக்கிறான் என்றும் மனவருத்தப்பட்டார்.
அழகிய கிளாஸ் குடுக்கைகளை வடிவமைக்கும் தொழில் செய்கிறார். மிகவும் எளிமையாய் வாழ்கிறார். ஒபாமாவில் இருந்து உசாமா வரை அலசுகிறார்.
ஒரு நாள் உங்கள் விடுதலைப்போராட்டத்துக்கு என்ன நடந்தது என்றார். புன்னகைத்தேன்.. வேறு என்னத்தை செய்யலாம்.
ஒரு பெரிய பாத்திரத்தில் சமைத்த உணவிணை கொட்டி சுற்றியிருந்து உண்பார், மற்றவர்களும் சேர்ந்து கொள்வார்கள் அவருடன். என்னையும் அழைத்தார் ஒரு நாள். மெதுவாய் மறுத்தேன். பெரியதொரு ஆபிரிக்கச் சிரிப்பு சிரித்தார். அன்றிலிருந்து எனக்கு தேன் கலந்த இஞ்சி தேத்தண்ணியையே தருகிறார். சாப்பிட அழைப்பதில்லை.
God help help these people என்பார் அடிக்கடி. விடைபெறும் போது ”Listen to your heart”... man.. என்பார்.
அவர் சொன்னது போல், எனது மனது எனக்குச் சொன்னதை எழுதியிருக்கிறேன். அவ்வளவு தான்.
இன்றைய நாளும் நல்லதே
.
Subscribe to:
Post Comments (Atom)
இடுகை ரசிக்கச் செய்கிறது...வாழ்த்துக்கள்
ReplyDelete