ஒரு Printer ஒரு முட்டாள் ஒரு பெண்

 ஏறக்குறைய 10 - 12 ஆண்டுகளுக்கு முன் வடமேற்கு நோர்யில் உள்ளதோர் பெரிய கப்பல் கட்டும் தொழிற்சாலையில் கணணித்துறையில் தொழில் புரிந்திருந்தேன். ஒரு நாள் குளிர் காலத்து நாள் காலை எழும்பும் போதே காலதாமதமாய் எழும்பினோம். அவசர அவசரமாய் வெளிக்கிடும் போது புரிந்தது இரவு பனி கொட்‌டோ கொட்டு என்று  கொட்டி காரை மூடியிருப்பது.

அவசர அவரமாய்  பனியை வெட்டி எறியும் ”சவள்”ஐ எடுத்தக் கொண்டு ஓடிப்போய் பனியை வெட்டி எறியத்தாடங்கி ஏறக்குறைய 20 நிமிடங்களின் பின் கார் பாதைக்கு வந்தது. வீட்டுக்குள் ஓடி மகளை தூக்கிக் கொண்டு காருக்குள் ஓடும் போது அந்தக் காலத்து  கைத்தொலைபேசி ஒலித்தது. காருக்குள் இருந்து தொலைபேசியை இயக்கினேன். வேலைத்தளத்தில் இருந்து முகாமையாளரின் காரியதரிசி பேசினார்.

”சஞ்சயன், உன் உதவி தே‌வை உடனே எனது கந்தோருக்கு வா”

”உடனே வர இயலாது, 20 நிமிடங்கள் தேவை. என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள்”

”முகாமையாளரின் அறிக்கையொன்றை நான் ”பிரின்ட்” எடுக்க முயற்சிக்கிறேன், ஆனால் பிரின்டர் வேலை செய்யுது இல்லை”

”கெதியில் வருகிறேன்”

”நன்றி”

மகளை சிறுவர்பள்ளியில் விட்டுவிட்டு அவசர அவசரமாய் வேலைக்கு ஓடினேன். நேரம் நான் ஒரு மணிநேரம் தாமதமாய் வந்திருப்பதை அறிவித்தது.
 
அவசரமாய் காரியதரிசியின் கந்தோருக்குள் ஓடினேன்.
வா.. வா உனக்காக முகாமையாளர் காத்திருக்கிறார் என்றார். முகாமையாளர் வந்து கெதியில் இதை பிரின்ட் எடுத்துத் தா என்றார்.
இன்னுமொரு பிரின்டரில் அவரின் ஆவணத்தை பிரன்ட் எடுத்துக் கொடுத்தேன்.
அதெப்படி நீ மட்டும் இவ்வளவு கெதியாய் பிரின்ட் எடுக்கிறாய் என்றார் முகாமையாளர்.
அதற்காகத்தான் எனக்கு சம்பளம் தருகிறீர்கள் என்றேன்.
மூவரும் சேர்ந்து சிரித்தோம்.

முகாமையாளர் போனதும் அவரின் பிரின்டர் ஏன் இயங்கவில்லை என ஆராய அரம்பித்தேன். காரியதரிசி அருகில் இருந்து நேற்று மாலை தான் குடும்பத்துடன் பனிச்சறுக்கு போன விடயத்தை படம் போல விளக்கிக் கொண்டிருந்தார். நானும் கதைத்தபடியே வேலை செய்து கொண்டிருந்தேன்.

காரியதரிசியின் கந்தோருக்கு வெளியில் சுத்திகரிப்பு வேலை செய்யும் ஒரு வயதான பெண் நிலத்தை கழுவிக்கொண்டும், பூமரங்களுக்கு நீர் ஊற்றிக்கொண்டும் நின்றார். வெளியில் பனி கொட்டிக் கொண்டிருந்தது.

நான் எதைச் செய்தாலும் பிரின்டர் இயங்க மறுத்தது. கிட்டத்தட்ட அந்த பிரின்டரை அக்குவேறாக ஆணிவேறாக களட்டியும் பூட்டியாயிற்று... அப்போதும் பிரின்டர் இயங்கமாட்டேன் என்று அடம் பிடித்தது.

காரியதரிசி தனர் கணவர் பனியில் சறுக்கும் போது விழுந்ததை சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தார். அதை ரசிக்கும் மனநிலையில் நான் இருக்கவில்லை. நோரம் போய்க் கொண்டிருந்தது.

அந்த பிரினஇடைரை திருத்தத் தொடங்கி ஏறத்தாள ஒன்றரை மணிநேரமாக பிரின்டருக்கு உயிர் வரவில்லை. எனக்குள் மெதுவாய் எரிச்சல் குடிவரத்தொடங்க பொறுமையும் காற்றில் பறக்கத் தொடங்கியது.

அப்போது அந்தக் கந்தோரை சுத்தப்படுத்தும் அந்த வயதான பெண்மணி வர காரியதரிசி அவரிடம் தனது பனிச்சறுக்கு விளையாட்டைப் பற்றி புளுகத் தொடங்கினார்.

நான் பிரின்டருக்கு உயிர்வராததால் அதை திருத்த அனுப்பவேண்டும் என்று சொல்லிவிட்டு எனது கந்தோருக்குள் புகுந்து கொண்டேன். அன்று மாலை எனது கந்தோரை சுத்தப்படுத்த வந்தார் அந்த வயதான பெண்மணி.

வந்தவர் நேரே என்னருகே வந்து, உனது வேலை போகப்போகிறது என்றார். பதறிப்போய்.. ஏன் என்றேன். உனக்கு அந்த பிரின்டரை திருத்தத் தெரியவில்லையே அதனால் தான். என்றார்.

”அந்த பிரின்டர் பழுதாகிவிட்டது அது தான் அது இயங்கவில்லை” என்றேன்.
”இல்லை, அதை நான் திருத்திவிட்டேன், தற்பொது இயங்குகிறது” என்றார்

நம்பாமல், காரியதரிசிக்கு போன் பண்ணிக்கேட்டேன்.. ஆம் அந்த வயதான பெண் மிகவும் திறமைசாலி, உன்னிலும் சிறப்பாய் திருத்த வேலைகள் செய்கிறார் என முகாமையாளரே ‌தனக்குச் சொன்னதாச் சொன்னார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை.. ஆனால் முகாமையாளருக்கு .அந்தப் பெண் பிரின்டரை திருத்திய விடயம் தெரிந்திருப்பது ஒரு மாதிரி இருந்தது.

”எப்படித் திருத்தினீர்கள் பிரின்டரை?” என்றேன்.

”மிக இலகுவான வேலை அது. வா உனக்கு சொல்லித் தருகிறேன்” என்று சொல்லி அழைத்துப் போனார்.

பின்னால் போனேன்
கந்தோருக்குள் புகுந்தார் அந்தப்  பெண்.
காரியதரிசியோ.. எங்கள் புதிய கணணித்துறை ஊழியர் வந்திருக்கிறார் என்ற போது முகாமையளரும் தனது கந்தோரில் இருந்து வெளியே வந்தார். அவரின் முகத்தில் குறும்புச் சிரிப்பு குடியிருந்தது.
வயதான பெண்மணியோ இவர் நான் கணணியை எப்படி திருத்தினேன் என அறிய விரும்புகிறார் என்றும் அதனாலேயே என்னை அழைத்துவந்திருப்பதாகவும் சொன்னார்.

அந்தப் பெண்யையே பார்த்திருந்தேன் நான்.  நான் செய்வதை கவனமாகக் கவனி, ஒரு தரம் மட்டுமே காட்டித்தருவேன் என்று பீடிகையும் போட்டார்.
பிறகு குனிந்து மின்சார இணைப்பை களட்டினார். பிறகு அதை மீண்டும் இணைத்தார்.

எனக்குப் புரிந்தது என்ன நடந்திருக்கிறது என்று. எனது முட்டாள்தனங்களுக்கு எல்லையே இல்லை என்தை நான் புரிந்து கொண்டதும் இங்கு தான்.

இக் கதை மின்னஞ்சல் மூலாக  அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும் பரவி, அவர்கள் என்னைக்  பண்ணிய கிண்டலுக்கும் அளவேயில்லை.

அந்த வருடத்து நத்தார் தின விழாவிலும் இந்த கதையை நாடகமாகப் போட்டு என்னை கவுரவித்ததையும் நான் சொல்லித்தான் ஆகவேண்டும்.

இதை வைத்து நீங்க என்னிடம் காமடி கீமடி பண்ணக்கூடாது... ஆமா.


.

4 comments:

  1. கடைசியில் உங்கள் வேலைக்கு உலை வைத்தார்களா...? இல்லையா...?

    ReplyDelete
  2. philosophy prabhakaran@
    அவய்ங்க ரொம்ப நல்லவய்ங்க...
    தொடந்து ஏறத்தாள பத்து வருடம் அங்கு தொழில் புரிந்தேன். கடைசிவரைக்கும் அவங்க அத மறக்கலியே......... படுபாவிய்ங்க.

    ReplyDelete
  3. ஐயோ!!!ஐயோ!!! சஞ்சயன்:)))))))

    ReplyDelete
  4. அடிக்கடி உண்மை பேசும் ( உள்ளதை உள்ளபடி எழுதும் ) உங்களுக்கு நன்றி .நல்ல வெள்ளை உள்ள்மப்பா

    ReplyDelete

பின்னூட்டங்கள்