பெரியம்மாவின் பெரிய வீடும், பெரியப்பாவின் ”ஓடாத மொரீஸ் மைனர்” காரும்

செல்வவில்லா, எனது பெரிய பெரியம்மாவின் வீடு. மருதனாமடத்தில் (காங்கேசன்துரை வீதியில்) இராமநாதன் மகளீர் பாடசாலையுடனான மதிலுடன் அமைந்திருக்கும் வீடு. இந்த வீட்டுச் சுவர்களுடன் எனக்கு பெரும் பரீச்சயமில்லை என்றாலும், மட்டக்களப்பில் இருந்து வருடத்துக்கு ஒரு முறை விடுமுறையில் போகும் போது எனது நினைவில் படிந்துவிட்ட நினைவுகளின் நிழல்களையே பதிய நினைத்திருக்கிறேன் இன்று.

குமாரவேலர் தான் வீட்டின் அதிபதியும் எனது பெரிய பெரியப்பாவும். அந்தக்காலத்து சிங்கப்பூர் பென்சனீயர். சிங்கப்பூரில் இருந்து பெரியப்பா காசு அனுப்ப மாணிக்கராகிய எனது தாத்தா கட்டினாராம் அந்த வீட்டை. பெரியப்பா ஆகக் குறைந்தது 6 அடி உயரமிருப்பார். வெள்ளைத் தும்பு முட்டாஸ் போன்ற தலைமயிர், வெள்ளை சேட், வெள்ளை வேட்டி தவிரித்து வேறு ஏதும் நிறங்கள் அவரின் உடையில் நான் கண்டதில்லை.

செல்வராணி, எனது பெரியப்பாவின் அதிபதி,  எனது பெரிய பெரியம்மா. அவரின் பெருடன் "villa"வை சேர்த்து வைத்த பெயர் தான் அவர்களின் வீட்டின் பெயர்.

பெரியம்மாவுக்கும் எனது அம்மாவுக்கும் ஏறத்தாள 23 வயது வித்தியாசம். பெரியம்மா குடும்பத்திடம் எல்லாம் இருந்து குழந்தைகளைத் தவிர. அவர்களின் வீட்டுக்கு போகும் நேரமெல்லாம் பெரியம்மாவின் அன்புத் தொல்லை ஒரு இதமான இம்சையாகவே இருக்கும். இரவு நித்திரையில் இருக்கும் போது 11 மணிபோல் எழுப்பி பால் குடிச்சிட்டு படுடா என்பார், கையில் சீனி போட்ட பாலுடன் வந்து. மூக்குப்பேணியை நான் கண்டதும் அங்குதான்.

அவர்களின் வீட்டில் பல வினோதமான பொருட்கள் இருந்தன. அதில் ஒன்று ரேடியோ. அந்த ரேடியோ மிகப் பெரியது. அதன் முன் பக்க கண்ணாடியில் கிழக்காசிய நாடுகளின் பல நகரங்களின் பெயர் எழுதப்பட்டிருந்தது. 6 வெள்ளை நிற கட்டைகள் இருந்தன. அது எப்படி இயங்கியது என்று எனக்குத் தெரியாது. ஆனால் பல நாட்கள் அதை திருகிப் பார்த்திருக்கிறேன். யாருமில்லாத போது.

அவர்களின் வீட்டின் முன் பகுதியில் பெரியதோர் போர்டிக்கோ இருந்தது. அதற்கு இரு பக்கங்களிலும் வாகனம் நுளையுமளவுக்கான இரும்பிலான பலத்த கேட்களுமிருந்தன. கேட்டுக்கும் போட்டிக்கோவுக்குமிடையில் பெரியம்மாவின் ரோசாப்பூத் தோட்டமிருந்தது. அதில் இல்லாத நிறங்களில்லை.  அதற்கங்கால் பெரியப்பாவின் ”ஓடாத மொரீஸ் மைனர்” கார் நிற்கும் கறாஜ் இருந்தது.

யாழ்ப்பாணத்திலேயே ”ஓடாத மொரீஸ் மைனர்” வைத்திருந்தது எனது பெரியப்பா தான். பெயர்தான் ”ஓடாத மொரீஸ் மைனர்” ஆனால் கார் ஓடும். அவர் அந்தக் காரை மாதத்தில் ஒரு தரம் மட்டும் வெளியில் எடுப்பார். வங்கியில் இருந்து பென்சன் காசு எடுக்கப் போகும் போகுமன்று மட்டும் கார்
காராஜ்ஐ விட்டு வெளியில் வரும். 3 கிலோமீட்டர் போய் வங்கியில் காசு எடுத்து திரும்ப 3 கிலோ மீட்டர் ஓடி வருவார். கேட் திறக்க ஆள் நிற்கும் அப்படியே கராஜ்க்குள் விடுவார் காரை. பிறகு ஓரு மாதமாகும் கார் வெளியில் வர. இது தான் அந்தக் காருக்கு ”ஓடாத மொரீஸ் மைனர்” என்று பெயர் வரக் காரணம். 2004 ம் ஆண்டு வரை அந்தக் கார் 44000 மைல்களே ஓடியிருந்தது.
1962 ம் ஆண்டு 3000 ரூபாய்கு வாங்கிய கார் அது என்று செல்லக் கேட்டிருக்கிறேன். அது வாங்கியது பற்றியும் ஒரு சுவராசியமான கதையிருக்கிறது. 1962ம் ஆண்டு ஒரு நாள் பெரியப்பா தனது சைக்கிலில் யாழ்ப்பாணம் போய் மொரீஸ்மைனர் விற்கும் கடையில் கார் பார்த்திருக்கிறார். கார் பிடித்துப் போக மனிதர் விற்பனையாளரிடம் விலையைக் கேட்க.. விற்பனையாளர் பெரியப்பாவின் ரலி சைக்கிலையும், வெள்ளை சேட், வெள்ளை வேட்டியையும் பார்த்து நக்கலாய் உன்னால உத வாங்ககேலாது அவ்வளவு விலை என்று எளனப்படுத்தியிருக்கிறார் பெரியப்பாவை. அது பெரியப்பாவின் மானப் பிரச்சனைாயக மாற, உடனடியாக வங்கிக்குப் போய் காசு எடுத்துவந்து காரை வாங்கினாராம் என்றார் பெரியம்மா ஒரு நாள்.

அந்த வீட்டின் அமைப்பே அலாதியானது. நான்கு பெரிய அறைகள். ஜன்னல்களுக்கு பலவண்ணணக் கண்ணாடிகள். மாடியில் சாமியறை, நீண்டகல்ந்த விறாந்தைகள், விறாந்தையில் இரண்டு பிரம்பிலான சாய்மனைக் கதிரைகள். அவற்றில் கட்டாயம் ரகுநாதய்யர் பஞ்சாங்கமிருக்கும். கொமேட் வைத்த கக்கூஸ்சும் குளியலறையும். இரண்டு குசினிகள் அதற்கங்கால் மாட்டு-ஆட்டுக் கொட்டில் அதற்கருகில் கிணறும், தண்ணீர்த் தொட்டியும். அதற்கங்கால் குளியலறை, அதற்கு மேல் சீமெந்திலான தண்ணீர் டாங்க், அருகில் தண்ணீர் பம்ப் இருக்கும் அறை. இவற்றின் கீழ், தண்ணீர் வெளியேற சீமெந்துக் கான். அதற்கங்கால் வாழைகள் பிறகு தோட்டம் தொடங்கும் எல்லை.

வீட்டின் முன்னால் ஜிம்மியும், வீரனும். பின்னால் இன்னும் 4 நாய்கள். வைக்கோல்போரடியில் இன்னுமொன்று. விறைந்தையில் 3 கிளிகள் (களுத்தில் சிவப்புக் கோடு இருக்கும்), அதிலொன்று  ராணி, ராணி என்று பெரியம்மாவை அழைக்கும். அவரும் அருகில் போய்க் கதைப்பார். இதை விட 2 மைனாக்கள், வீட்டின் பின்னாலிருந்த கொட்டிலில் நாலைந்து மாடுகளும், ஆடுகளும், தோட்டத்துக்குள் இருந்த கோழிக் கூட்டினுள் 20 - 25 கோழிகளும் சில சேவல்களும்.

இந்த சேவல்களில் ஒன்றுக்கும் எனக்கும் எட்டாப் பொருத்தமாக இருந்து. என்னைக் கண்டால் திரத்தி வந்து கொத்தும். நான் வரும் போதெல்லாம் அதற்கு சிறைத்தண்டணை விதித்தார் பெரியம்மா. பின்பொருநாள் அண்ணண் ஒருவனின் போர்க்கோழி (சேவல்) ஒன்றை வைத்து நான் எனது கொலைவெறியை தீர்துக் கொண்டது, பெரியம்மா அறியாத கதைகளில் ஒன்று.

பெரியப்பாவின் சைக்கிலும் அலாதியானது. எப்பொழுதும் தேர் மாதிரியே வைத்திருப்பார் அதை. அழகிய கைபிடி, அதில் குஞ்சம் தொங்கும். பாருக்கு வயர் சுற்றியிருப்பார், அழகிய சத்தத்துடனான மணி, டைனமோ, முன்னுக்கு பெரிய லைட், பின்னால் சிவப்பு லைட். பெரிய கரியர், பெரிய ஸ்டான்ட். ரிம்முக்கு மஞ்சல் நிற பூ போட்டிருப்பார். ஐப்பான் செயினும் பிறேக் கட்டையும், செயின் வெளியே தெரியாத மாதிரி செயின் பொக்ஸ். அதுவும் அவரின் காரைப் போல ஊருக்குள் பிரபல்யமானது தான்.

வீட்டுத் தோட்டம் பெரியது என்பதை விட, அது மிகப் பெரியது என்பதே சரி. காலையில் ஒரு கையில் வேப்பம் குச்சியுடனும், மறுகையில் குத்தூசியுடனும் உலாவருவார் பெரியப்பா. பழுத்த பலா இலைகளை குத்தூசியில் குத்திக் கொண்டே முழுத் தோட்டத்தையும் உலாவருவார். அவரின் தோட்டத்தில்தான் நான் முதன் முதலில் ”வேரிலே பழுத்த பலா” கண்டேன். மா, பலா தோடை, மாதுளை, தென்னை, பனை என பலவிதமான மரங்களிருந்தன. மாவிலும், பலாவிலும் வித விதமான ருசியில் பல மரங்களுமிருந்தன.

அவர்கள் வீட்டில் பலர் வளர்ந்தார்கள். அவர்கள் பெரியவர்களாகியதும் திருமணம் முடித்துக் கொடுத்தார்கள். எங்கள் சின்னப்பெயரிம்மாவின் கடைசி மகனும் அங்கு தான் வளர்ந்தான். பெரியம்மாவினதும், பெரியப்பாவினதும் செல்லம் தான் அவனை கெடுத்தது என்று யாரும் சொன்னால் நான் அதை மறுக்க மாட்டேன். பெரியப்பாவிற்கு அவனின் மேல் அப்படியோர் பாசமிருந்தது. அவனின் சொல்லுக்கு மனிதர் மகுடியாய் ஆடினார். இவனும் ஆட்டுவித்தான். பெரியப்பா விரும்பியபடியே அவருக்கு கொள்ளி வைத்ததும் அவன் தான்.

பெரியப்பா 95 வயது தாண்டி வாழ்ந்திருந்தார். பெரியம்மாவும் கிட்டத்தட்ட அப்படித்தான். இன்று எனது சின்னப் பெரியம்மாவின் மகன் அந்த வீட்டில் வாழ்கிறார்.

இறுதியாய் அங்கு போய் வந்த பின் மனது ஏனோ இந்த முறை செல்வவில்லாவின் சுவர்கள் என்னுடன் பேசவில்லை என்றது. அது கசந்தாலும் உண்மையை மறுப்பதற்கில்லை.

‌செல்வவில்லாவுக்கு இது சமர்ப்பணம்..

3 comments:

 1. தாயகமும் அதன் நினைவுப் பதிவுகளும் அருமை மறக்க முடியுமா?

  ReplyDelete
 2. நல்லதொரு பகிர்வு அழகான படங்களுடன். வாழ்த்துக்கள்.
  அன்புடன் மங்கை

  ReplyDelete
 3. சுவையான பதிவு.
  எனக்கு இரட்டை ஆனந்தம். எனது பருத்தித்துறை டிஸ்பன்சரியுடன் கூடிய வீடு அசப்பில் இதே தோற்றம்தான்.
  என்னிடமும் ஒரு மொரிஸ் மைனர் கார் 1979 80 காலப்பகுதியில் இருந்தது. ஆனால் அது ஓடும்.

  ReplyDelete

பின்னூட்டங்கள்