கொள்ளைக்காரனுடன் கடவுள்

 எனக்கு அறிமுகமுள்ள ஒரு ஆபிரிக்க நண்பர் தனது கணணி திருத்த அழைத்தார். அங்கு போய் கதவைத் திறந்த போதே நிலமை சற்று சிக்கலாக இருப்பது போல இருந்தது, நமது நண்பருக்கும் அவரது நண்பருக்கும்.

வார்த்தைகள் தடித்தன. நண்பரின் நண்பரும் தடித்தவராகவே இருந்தார். ஆளையாள் தூசணத்தால் திட்டிக் கொண்டனர். என்ன பிரச்சனை என்பதே எனக்கு  தெரியாதிருந்தது.

”நீதான் காரணம்”
”நானில்லை,  உன் கவலையீனம்”
”உன்னை நம்பினேன்”
”....”
Fuck you man
Fuck you man

இப்படி பேச்சு சற்று சுடாக மாறிக்கொண்டிருக்கும் போது

தெரியாத்தனமாக Cool Cool என்று சொன்னேன்
நண்பரின் நண்பன் என்னைப் பிடித்துக் கொண்டான்

இவரை நம்பி எனது வியாபாரப் பொருட்களை கொடுத்துப்போனேன்.   இன்று அதைக் காணவில்லை. கேட்டால் தெரியாதென்கிறார் என்றான்.

நான் சற்று நிதானித்து நண்பரைப் பார்த்தேன்.
ஆம், இவர் இங்கு சாமான்கள் வைத்தது உண்மை. ஆனால் இப்போது அதைக் காணவில்லை என்றார்.
”இந்த வீட்டிற்குள் பல நேர்மையற்ற மனிதர்களும், திருட்டுத் தொழில் செய்பவர்களும் வருகிறார்கள்” என்றார் நண்பரின் நண்பர்.

நான் மறுபடியும் நண்பரின் பக்கம் திரும்பினேன்.

அனால் அவர்கள் என் வீட்டில் திருடமாட்டார்கள் என்றார் அவர்.
”திருடன் திருடன் தான் என்றார்”
நண்பரின் நண்பர். பிறகு அவரே தொடந்தார்
”நீ கவனமாயிருந்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது”
”நீ ஏன் இங்கு வைத்துப் போனாய்”
”....”
”...”

இப்படி மீண்டும் வார்த்தைகள் தடித்தன.
எனது நேரம் அநியாயமாகிக் கொண்டிருப்பதை அவர்கள் கவனிப்பதாயே இல்லை. எனது நேரத்தை வீணாக்காமல் ஏதும் பிரயோசனமாகக் கதையுங்கள் என்று சொல்ல நினைத்தேன்.

நண்பரின் நண்பரின் உடம்பு நன்றாகவே பெருத்து உருண்டு திரண்டிருந்தது. அவரை ஒரு மாமிச மலை எனலாம். அவர் என்னை பிடித்தால்  நொருங்கிய அப்பளம் மாதிரியாகிவிடுவேன் என்னும் பயம் காரணமாக எதுவும் சொல்லாமல்...

நண்பர்களே அமைதி அமைதி என்றேன்.

நண்பரின் நண்பர் அவரின் பையுக்குள் இருந்த பைபிளை எடுத்தார். அதன் மீது சத்தியம் செய்து தனது பொருட்களில் 300 டாலருக்கு பெறுமதியான பொருட்களை காணவில்லை என்றார். தான் ஒரு உண்மையான கிறீஸ்தவன் என்றும், ஞாயிறு தோறும் தேவாலயத்துக்கு போபவன் என்றும், தனக்கு பொய் பேசத் தெரியாது என்றும் பைபிளின் மீது சத்தியம் செய்தார்.

மற்றவர் எழுந்து புனிதக் குர்ஆன் எடுத்து அதில் கையை வைத்து அவர் நண்பரின் பணத்தை திருடவில்லை என்றார்.

மீண்டும் வார்த்தை தடித்து தூஷணத்தில் வந்து நின்ற போது பார்த்தேன் இருவருக்கருகிலும் பைபிளும், திருக்குர்ஆன்னும் கிடந்தன.

"நீ வெளியே போ"
என்றார் என் நண்பர் தனது நண்பரைப் பார்த்து.
நண்பருக்கு ரோஷம் வந்திருக்க வேண்டும். தனது சாமான்களை எடுக்கத் தொடங்கினார்.

அந்நேரம் எனது நண்பர் ஒரு சிகரட்டை எடுத்த படி வெளியில் போனார்.

தனது பொருட்களை அடுக்கியவர் என்னருகில் வந்து தான் மிகவும் கஸ்டப்பட்டவன் என்றும். தனது குடும்பம் மிகப் பெரியது என்றும், அவர்கள் கம்பியா நாட்டில் வசிப்பதாயும், தான் கம்பிய நாட்டவரின் கலாச்சார உடைகளையும், மற்றும் பல ஆபிரிக்க நாட்டவர்களின் கலாச்சார உடைகளை விற்கும் தொழில் புரிபவன் என்றும் சொல்லி, இதைத் தவிர தனது பொருளாதாரக் கஸ்டங்களையும் சொன்ன போது எனது மனம் அவன் பக்கம் சாய்ந்திருந்தது. எனது நண்பர் சற்று கவனமாக இருந்திருக்கலாம் என்றேன்.

எனது கையை பிடித்து குலுக்கி
”நீ நல்லவன், மே கோட் பிளஸ் யூ மை ப்ரெண்ட்” என்றபடி தனது பைபிளை ஒரு கையிலும் தோளில் பையுமாக வெளியேறினார்.

நண்பர் உள்ளே வந்தார். போய்விட்டானா என்றார்.
”ம்” என்றேன்.
”அவன் கள்ளன்” என்றார்
”அப்படித் தெரியவில்லையே” என்றேன்
”அவனை நம்பாதே” என்றார்.

அதன் பின் நண்பரின் கணணி திருத்தி வீடு போனேன்.

அதற்கடுத்து வந்த ஒரு நாளில் என்னை ஒரு நெட்கபே உரிமையாளர் வேலைக்கு அழைத்திருந்தார். அங்கு போய் வேலைசெய்து கொண்டிருந்த போது ஆபிரிக்க ஆங்கிலத்தில் ஒருவர் அந்தக் கடை உரிமையாளருடன் சற்று சூடாக கதைத்தக் கொண்டிருக்க அந்தக் குரலை எங்கோ கேட்டது போலிருக்கிறதே என்ற நினைத்தபடி எட்டிப் பார்த்தேன். அந்த ஆபிரிக்க நண்பரின் நண்பர் நின்றிருந்தார் அங்கு.

கண்டால் பிரச்சனையாகிவிடும் என்பதால் ஒளிந்து கொண்டேன். கடையுரிமையாளர் ஓருவழியாக அவரை வெறியேற்றினார்.

நண்பரின் நண்பரைப் பற்றி கடையுரிமையாளரிடம் விசாரித்தேன்.
பச்சைக் கள்ளன். கனக்க காசு தரவேணும். பொய்க் கணக்கு காட்டுகிறான். களவு தான் இவனின் தொழில் என்றார்.

அடப்பாவி.. பைபிளை வைத்து என்னை விசரனாக்கியிருக்கிறானே என்று நினைத்துக் கொண்டேன். இவனின் கதையைக் கேட்டு எனது நண்பரையும் குற்றம் சுமத்தியதையிட்டு வருந்தினேன்.

அன்று மாலை நிலக்கீழ் சுரங்க ரயில் நிலையத்தில் நின்ற போது மீண்டும் நண்பரின் நண்பனைக் கண்டேன். பைபிளை கையில் வைத்திருந்தபடியே ஒருவருடன் மிகவும் பண்பாக பேசிக் கொண்டிருந்தான்.

”கண்ணால் காண்பதெல்லாம் பொய், தீரவிசாரித்தறிவதே மேல்” என்று ஒரு அசரீரி கேட்டது.

இன்றைய  நாளும் நல்லதே.


.

1 comment:

  1. உங்கள் வாழ்கையில் எத்தனை விதமான மனிதர்களை சந்திக்கிறீர்கள். இப்பிடியான வாய்ப்பு எல்லோருக்கும் அமைவதில்லை. இன்னும் பல புதிய மனிதர்களை சந்திக்க எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete

பின்னூட்டங்கள்