இன்று பல மாதங்களின் பின் எனக்குள் இருக்கும் சாப்பாட்டு ராமன் விளித்துக்கொண்டான். பல நாள் தூங்கியதாலோ என்னமோ வாயெல்லாம் ஊறி, வயிற்றுக்குள் அமிலத்தை சுரந்து பலத்த இம்சை பண்ணிக் கொண்டிருந்ததான். காலையில் இருந்து இனிப்பு வேணும் இனிப்பு வேணும் என்று கத்திக் கொண்டிருந்தது வாயும் வயிறும்.
டாக்டரின் பலத்த எச்சரிக்கையை மீறாமல் பெரும் பாடு பட்டு என்னை அடக்கிக் கொண்டேன் மாலை நான்கு மணிவரை. அதற்கு பிறகு பெருங்கஸ்டமாய் போய்விட்டது. கடைத்தெருவில் நடந்து போன போது எதிர்பட்ட கடைகளுக்கெல்லாம் எனது அனுமதியின்றியும், கடைக்காரனின் அனுமதியின்றிம் எனது கண்களையும் துணைக்கழைத்துக் கொண்டு பேயாட்டமாடியது எனது கெலி. இடைக்கிடை எனது காலையும் சேர்த்துக் கொள்ளப் பார்த்தாலும் கால் பெரிய மனது பண்ணி நான் சொன்னதை கேட்டது.
கேபாப் கடை, பிட்சா கடை, ஜஸ்கிறீம் கடை என மேய்ந்து கொண்டு போன போது தான் அந்தக் கடை கண்ணில் பட்டது. கடையைக் கண்டதும் அந்தக் கடையில் கிடைக்கும் இனிப்புப் பண்டம் ஞாபகத்தில் வர, டாக்டர் மறந்து போனார். அந்த இனிப்புப் பண்டம் பற்றி பிறகு சொல்லுகிறேன்.
போய் ஜக்கட்டை கழட்டி வைக்க முதலே பீக்கு முந்திய குசு மாதிரி என் மேசையில் மெனு கார்ட்ஜ போட்டுவிட்டு நான் கதிரையில் குந்த முதலே அடுத்த மேசைக்கு ஓடினார் உபசரிப்பாளர்.
நானும் மெனு கார்ட்ஜ பார்த்தபடி எனக்கு பிடித்தது ஏதும் இருக்கிறதா என்று தேடினேன். கோழிக்குஞ்சு சூப், சிறிய சோளன், காளான், மற்றும் தாய்லாந்து மரக்கறிகளுடனான சூப் என்றிருந்ததை தெரிவு செய்த பின் தான் அதன் விலையைப் பார்த்தேன். விலையைப் பார்த்ததும் வந்த பசி ஆளைவிட்டால் காணும் என்று ஓடப் பார்த்தது. பொறு பொறு விலை குறை குறைந்த சூப் இருக்கும், அதன் பிறகு அந்த இனிப்பு பண்டமும் இருக்கும் என்று சொல்லி பசியை என்னுடன் தங்கவைத்துக் கொண்டேன்.
மெனுக்கார்ட்ஜ தலைகீழாகவும் பிரட்டிப் பார்த்தேன். ஆனால் எப்படித் தேடினாலும் எனது பசிக்கேற்ற விலையுள்ள சூப் அங்கு இருக்கவில்லை.
வெளியில் எழும்பிப் போவது மரியாதைக்கு சவாலாக இருந்தது. இதற்கிடையில் உபசரிப்பாளர் மூன்று தரம் வந்து பார்த்துவிட்டு போனார். கடைசியாக போன போது நக்கலாக சிரிப்பது போல இருந்தது எனக்கு. பிரமையோ என நினைத்துக் கொண்டேன்.
ஒரு மாதிரியாக அங்கிருந்த சூப்களில் விலைகுறைந்த சூப்பை (30 டொலர்) தெரிவு செய்தேன். அத்துடன் எனக்கு இந்த பூலோகத்திலேயே மிகவும் பிடித்தமான இனிப்புப்பண்டமாகிய ”வாழைப்பழத்தை மாவில் நனைத்து பொரித்த வாழைப்பழமும் அதனுடன் ஜஸ்கிறீமையும்” ஆடர் கொடுப்பதற்கு கையை தூக்க நினைக்கிறேன் உபசரிப்பாளர் தவறவிடப் போகும் பஸ்ஸை பிடிக்க ஓடிவரும் வேகத்துடன் மூச்சு வாங்க ஓடிவந்தார்.
எதைக் காட்டினாலும் யா, யா என்று யானைமாதிரி தலையாட்டிக் கொண்டிருந்தார். ஒரு சந்தேகத்தில் எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று
நோர்வேஜிய மொழியில் சொன்னேன். அதற்கும் யா, யா என்றார். அப்போது தான் புரிந்தது அவருக்கு எனது நோர்வேஜிய மொழி புரியவில்லை என்று. அதன் பின்பு புரிந்தது எனக்கு அவரின் சீனப்பாசை புரியவில்லை என்றும்.
சாப்பாடு வர முதல் சீனமக்கள் உணவு உட்கொள்ளும் குச்சிகளை கொண்டு வந்து வைத்தார். இந்த குச்சிகள் முன்புபொருதரம் எனது மரியாதையை சுவீடன் நாட்டு தலைநகரத்தில் வைத்து காற்றில் பறக்க வைத்தது ஞாபகம் வந்தது. தொழில் நிமித்தமாய் ஸ்டொக்ஹொல்ம் போயிருந்தேன் 3 நோர்வேஜியர்களுடன். அங்கு மதிய உணவிற்காய் எம்மை ஒரு சீன உணவகத்து அழைத்துப் போனார்கள். புதியாய் எம்முடன் 2 சுவீடன் நாட்டுக்காரர்களும் சேர்ந்து கொள்ள எல்லோருமாய் ”சூசி” என்னும் உணவை தெரிவு செய்தோம். அப்போது தான் நான் எதிர்பார்த்திராத அந்த பிரச்சனையும் வந்தது.
எனக்கு சாப்பாடு என்றால் எனது விரல்களினால் வாய்க்குள் போவது தான் பிடிக்கும். சாப்பிட்டு முடிய விரல்களை சூப்பியே கழுவிக் கொள்ளும் திறமையும் என்னிடமுள்ளது. ஆனால் தற்போது முள்ளுக் கரண்டியும் கத்தியும் ஓரளவு பழகிவிட்டது. ஆனால் இந்த குச்சி விசயம் மட்டும் அடங்க மறுக்கும் குதிரை மாதிரி துள்ளிக் கொண்டிருக்கிறது விரல்களுக்கிடையில்.
அன்றும் அப்படித்தான் முள்ளுக்கரண்டியை வைக்காமல் குச்சியை வைத்தார்கள். மற்றவர்கள் எல்லாம் ஏதோ சீனாவில் பிறந்து வளர்ந்தவர்கள் மாதிரி குச்சியால் சாப்பிடத் தொடங்கி அவர்கள் அரைவாசியைக் கடந்த பிறகும் எனது விரலுக்குள் குச்சிகள் நிற்காமல் தலைகெட்ட வெறியில் ஆடி ஆடி விழும் மனிதர்களைப் போல் எனது இரண்டு விரல்களுக்கும் நடுவில் நிற்காமல் விழுந்து கொண்டிருந்தது. எனது நண்பர்கள் கடைக்கண்ணால் பார்த்தபடி தங்களின் ”சூசியை” விழுங்கிக் கொண்டிருந்தார்கள். ஒரு வழியாய் குச்சியளை விரல்களால் பிடித்து ஒரு ”சூசியை” பிடித்து மெதுவாய் துக்கி வாய்கருகில் கொண்டு போய் வாயை திறக்கிறேன் அந்த சூசி குச்சியில் இருந்து மேசையில் விழுந்து பக்கத்து நண்பரின் பக்கம் உறுண்டோடி கீழே விழுந்தது. நண்பரோ
”என்ன சஞ்சயன், சூசியில இருக்கிற மீன் இன்னும் சாகேல்ல போல” என்றார்.
நானும் விடாமல்
”பொறுங்கள் நான் அதை குத்தி சாப்பிட்டால் அது செத்துவிடும்”
என்று சொல்லி முள்ளுக் கரண்டி எடுத்து வந்து ஒரு மாதிரி சாப்பிட்டு முடித்தேன். அன்று ஒரு சபதமெடுத்தேன். இனிமேல் இந்த குச்சியை தொடுவதில்லை என்று.
ஆனால் இன்று மீண்டும் இந்த குச்சி என் முன்னே கிடக்கிறது. உபசரிப்பாளனை அழைத்து எனக்கு இந்த குச்சி சரிவராது முள்ளுக்கரண்டி தா என்றேன். அவனும் யா, யா என்று குச்சியை எடுத்துப் போனான். அப்பாடா, பிரச்சனை முடிந்தது என்று நினைக்க முதல் வேறு குச்சியை கொண்டு வந்து வைத்துவிட்டு என்னைப் பார்த்து ”ஓகே?” என்று கேட்டான். அவன், நான் புதிய குச்சிகள் வேண்டும் என்று கேட்டதாக நினைத்திருக்கிறான் என்று அப்போது தான் புரிந்தது. ஒரு மாதிரி புரியவைத்து முள்ளுக் கரண்டியினை பெற்றுக் கொண்டேன்.
உபசரிப்பாளர் சாப்பாட்டினை தூக்கினால முறிந்துவிடும் அளவுக்கு மெல்லியவராய் இருந்தார். அவர் சாப்பாடு கொண்டு வந்த போது அவர் முறிந்து விடுவாரோ என்று பயந்தேன். எனது நல்ல நேரம் அப்படியொன்றும் நடக்கவில்லை.
சூப் வந்தது. மெதுவாய் சுவைத்தேன். சுட்டது. சற்று தேசிக்காய் பிளிந்து விட்டுப் பார்த்தேன். சுவை அதிகரித்திருந்தது போல் இருந்தது எனக்கு. அந்த சூப்இன் சுவை கற்புரவெள்ளியின் சுவையுடன் யூகலிப்டஸ் மர இலையின் வாசனையை கலந்துவிட்டால் கிடைக்கும் சுவை போலிருந்தது. சுப்புடன் உண்ணுவதற்காய் ஒரு வித இலையும், ஒருவித பயறு முளையும், ஒரு சிவப்பு கொச்சிக்காயும் தந்திருந்தார்கள்.
நாம தின்னாத கொச்சிக்காயா? என்று நினைத்தபடி அதை எடுத்து நுனியில் மெதுவாய் கடித்தேன் மெதுவாய் உறைத்தது. அடுத்தமுறை சற்று அதிகமாய் கடித்தேன். வாய்க்குள் யாரோ எரிகுண்டு போட்டது போல் உறைக்கத் தொடங்கியது. கண்களில் கண்ணீர் வழிந்தது. சற்று நேரம் எனது உயிரே ஆடிவிட்டது. தமிழனைவிட உறைப்புத் தின்னும் மனித ஜாதிகள் இருப்பது அப்போது தான் புரிந்ததெனக்கு.
பெரும்பாடுபட்டு சூப்பை அழுதழுது குடித்து முடித்தேன். உபசரிப்பாளர் எனது இனிப்புப் பண்டத்தை கொண்டுவர உள்ளே போனார். எனது வாயில் உமிழ்நீர் நீர் ஊறும் கிணறு போல் ஊறிக் கொண்டிருந்தது. கடவுளே பொரித்த வாழைப்பழம் பெரிதாய் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
உபசரிப்பாளர் வந்தார்.
வைத்தார்.
போனார்.
நான் எதிர்பாத்தளவு பெரிதாயிருக்கவில்லை பொரித்த வாழைப்பழம். என்றாலும் பறவாயில்லை என்று கண்களை மூடி உலகை மறந்து சுவைத்துக் கொண்டிருந்தேன்.
சில நாட்களுக்கு முன் டாக்டர், தம்பி உமக்கு சீனி தேவைக்கு மிக அதிகமாய் இருக்கிறது. இனி இனிப்பு சாப்பிடக் கூடாது, உடற்பயிட்சி செய்ய வேணும், 3 தரம் குளிசை போடவேணும் என்று சொன்னதெல்லாம் எனது ஞாகத்தில் இருந்து மறந்து போயிருந்தது. (மன்னியுங்கள் டாக்டர்...)
வாய்குள் வாழைப்பழும் ஜஸ்கிறீமும் என்னை சொர்க்கத்துக்கு அழைத்துக் கொண்டு போய்க்கொண்டிருக்கும் போது எனது ”பில்லை” கொண்டு வந்து வைத்தான் உபசரிப்பாளன். பில்லை பார்த்தேன். சொர்க்கத்தில் இருந்த நான் நரகத்துக்குள் விழுந்த மாதிரி இருந்தது அதில் இருந்த தொகை.
பணம் செலுத்தி வெளியில் வந்து மெதுவாய் ஜக்கட் பொக்கட்டுக்குள் கையை விட்டு ஒளித்து வைத்த குச்சி இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டேன். அது அங்கு இருந்தது
வெளியில் வந்தேன். முகத்தில் மைனஸ் 7 குளிர் அடித்தது. மனதோ பொரித்த வாழைப்பழத்தை நினைத்தது.
என்னை நோக்கி ஒருவர் என்னை நோக்கி நடந்து வருவது போல இருந்தது. நிமிர்ந்து பார்த்தேன். டாக்டர் போலிருந்தார் அவர்.
இதுவும் பிரமையாயிருக்கும்.
இன்றைய நாளும் நல்லதே
.
மிகவும் ரசித்தேன் உங்கள் பதிவை!
ReplyDeleteHi bloggers/webmasters submit your blog/websites into www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends....
ReplyDeletewww.ellameytamil.com
நகைச்சுவை மன்னன் தோற்று விடுவார் உங்கள் பதிவை படித்து.நல்ல அனுபவம் டாக்டர் வர போறார் கருத்து சொல்ல. சிரிச்சு சிரிச்சு வயிற்று வலி .
ReplyDeleteடாக்டர் பீஸ் நீங்க தான் தரணும்.
"..இனிப்புப் பண்டம் ஞாபகத்தில் வர, டாக்டர் மறந்து போனார்..."
ReplyDelete"..பில்லை பார்த்தேன். சொர்க்கத்தில் இருந்த நான் நரகத்துக்குள் விழுந்த மாதிரி இருந்தது .."
சுவையோ சுவை.
ஆசை யாரை விட்டது. ஒரு நாள் தானே சாப்பிடீர்கள் பரவாயில்லை விடுங்கள். Dr எம் கே முருகானந்தன் அவர்கள் கூட ஒண்டும் சொல்லேலைதானே? இடைக்கிடை சாப்பிட்டு மருந்தை போடலாம்(இது என் அப்பா சொன்னது).
ReplyDeleteகொச்சிக்கா what is this ? i didnt hear this one before ( :( I am tamilian living in TN past 25 yrs but unable to find out what is this)
ReplyDeletealso in most of the places following ur slang is somewhat difficult but I enjoy this :)
ஜோதி கார்த்திக்! கொச்சிக்காய் என்றால் மிளகாய். மிகவும் உறைப்பான மிளகாய் வகை.ஒரு கொச்சிக்கா சாப்பிட்டால் வாயில் வெடிவைத்த மாதிரி இருக்கும்
ReplyDelete