கற்று மறந்த களவு

 1980 களின் ஆரம்பத்தில் நடந்த கதையிது.

அப்போ நான் ஏறாவூரில் வாழ்ந்திருந்தாலும் நட்புவட்டம் செங்கலடியிலிருந்தது (3 கி.மீ தூரம்). நெருங்கிய நண்பனும் அங்கு தானிருந்தான். அத்துடன் மனசுக்குள் பட்டாம் பூச்சிகளை பறக்கவைத்த ஒருத்தியும் அங்கிருந்தாள். ஆகவே ஒரு நாளில் அதிகமான நேரங்கள் செங்கலடியிலேயே கழிந்தன.

அம்மா வைத்தியராகத் தொழில் புரிந்ததால் நான் என்ன ஊருக்குள் செய்தாலும் அது நான் வீட்டுக்கு போக முதல் அம்மாவின் காதுக்கு போய்விடும். அந்தக் காலத்தில் இந்த மெபைல் போன் எல்லாம் இல்லை. ஆனால் வீடு தேடிப்போய் பத்தவைக்கும் எட்டப்ப பரம்பரையைச் சேர்ந்த சில தீவெட்டிப் பசங்களும், வேலை வெட்டி இல்லாத பல பழசுகளும் இருந்தார்கள் எங்களூரில்.

நண்பர்களுடன் சேர்ந்து இங்கிலீஸ் படிப்பதற்காக சாந்தி தியட்டரில் ஒரு இங்கிலீஸ் படத்தைப் பார்த்தால் நான் வீட்ட வர முதல்
”அம்மா தம்பி சாந்தி தியட்டரில படம் பார்க்கேக்க கண்டன்” என்று பத்த வைத்துவிட்டு போகும் பலரும் என்னுடன் தியட்டரில் படம் பார்த்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களுக்கு நாங்கள் இங்கிலீஸ் படிக்கவே தியட்டருக்கு போனோம் என்றால் அவர்கள் நம்ப மாட்டார்கள். ஏன் நீங்களும் நம்பவா போகிறீர்கள்? 

எனது குளப்படிகளை அறிந்தால் அம்மா பெரிதாய் சீன் எல்லாம் எடுக்க மாட்டார். தம்பி யோசிச்சு நடவுங்கோ என்பார். ஓம் ஓம் அம்மா என்று விட்டு போகும் போது நான் அதை மறந்துவிடுவேன். அம்மாவும் அடுத்த முறை யாரும் பத்திவைக்கும் வரை அதை மறந்து விடுவார்.

எனக்கும், எனது நண்பனுக்கும் இன்னுமொரு நெருங்கிய நண்பன் இருந்தான். அவர் ஊருக்குள் கடை வைத்திருந்த ஒருவரின் மகன். அவனே கடைக்கு பொறுப்பாயிருந்தான், அவனின் அப்பா இல்லா நேரங்களில். அதனால் கடையிலேயே அவனுக்கென்று ஒரு அறையிருந்தது. கையில் தாராளமாய் காசுமிருந்தது.

தினம் ஒரு படம் பார்க்காவிட்டால் எமக்கு தூக்கம் வர மறுத்த காலம் அது.  நாங்கள் சிறுவர்களாக இருந்த போது

”பாலா, படம் பார். பாடம் படி”

என்று சொல்லித்  தந்தார்கள். நாங்கள் கற்றதை மறக்க விரும்பாதவர்களாக இருந்தோம், இந்த விடயத்தில் மாத்திரம்.
ஆகவே தினம் ஒரு படம் பார்த்தோம்.

படம் முடிய நண்பனின் கடையில் குந்தியிருந்து அரட்டை அடித்து வீடு போக மணி பத்தரையாகிவிடும். செகன்ட் சோ என்றால் சாமம் தாண்டிவிடும். இந்த காலத்தில் கடைக்கார நண்பன் சிகரட் புகைக்கப் பழகிக் கொண்டான். எனது நண்பணும் நானும் தவிர்த்துக் கொண்டோம். சில காலத்தின் பின் சிகரட்டுடன் மதுவும் சேர்ந்த போதும் நாம் அதை தவிர்த்துக் கொண்டோம்.

ஆனாலும் இந்த சிகரட் எனது மனசுக்குள் ஒரு ஆசையை தூண்டிவிட்டதை மறுப்பதற்கில்லை. நண்பணுக்கும் அப்படியே.

ஒரு நாள் சிகரட் குடித்துப் பார்ப்பதாக முடிவு பண்ணிணோம். பயங்கர இராணுவமுகாமை தகர்க்கும் திட்டம் தீட்டுபவர்கள் போல இரண்டு நாள் நித்திரை இன்றி திட்டம் போட்டோம்.

5 கி.மீ தொலைவில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் சிகரட் வாங்குவதாகவும். அதுவும் ”கோல்ட் லீவ்” தான் வாங்குவதாகவும் முடிவு செய்யப்பட்டது. (அப்ப தான் தொண்டை நோகாதாம்) இரண்டு தடவை கடையை வேவு பார்க்கப் போனோம். அம்மாவுக்கு தெரிந்தவர்கள் நடமாடுகிறார்களா என அவதானித்தோம்.

அடுத்து எங்கு வைத்து சிகரட் குடிப்பது என்ற பிரச்சனை வந்தது. நண்பனின் கடை வசதியான இடம் தான் ஆனால் அவன் எம்மை சிகரட் குடியுங்கள் என்று கேட்ட போது மறுத்த மானஸ்தர்களல்லவா நாம். எனவே அந்த இடம் தவிர்க்கப்படவேண்யதாயிற்று. கறுத்தப்பாலத்துக்கு கீழ் நின்று குடிக்கலாம் என்றால் அது நண்பனின் தகப்பனார் வாகனமோடும் பாதை என்பதால் அதையும் தவிர்த்தோம். இறுதியாக கடற்கரைக்கு (5 கிமீ) போகும் ‌பாதையில் வரும் ஓரு சிறிய கோவிலுக்கு பின்னாலுள்ள காட்டுப் பகுதியை தேர்ந்தெடுத்து முடிவு செய்து அதையும் போய் பார்த்து வந்தோம்.

தாக்குதலுக்கான நாளும் நேரமும் குறித்தாயிற்று. நண்பன் சிகரட் வாங்குவது என்றும் யாரும் தெரிந்தவர்கள் வந்தால் நான் சைக்கில் பெல் அடித்து சிக்னல் கொடுப்பதாக முடிவாயிற்று. நண்பன் சிகரட் வாங்கப்போனபோது என்னைக் கடந்த எல்லோரும் என்னையே பார்த்துப் போனது போல் இருந்தது.  நெஞ்சு தேவைக்கு அதிகமாகவே அடித்தது.

நண்பண் 2பக்கட் சிகரட் வாங்கி ஒளித்துக் கொண்டான். 2 ஏவுகணைகளை ஆமி செக் பொயின்ட்க்குள்ளால் ஒளித்துக் கொண்டுவருபவர்கள் போல எமது ம‌னநிலை இருந்தது. கோயிலடி காட்டுக்கு போகும் போது நான் சைக்கில் ஓடினேன். நண்பன் பெடல்போட்டு உதவினான். அடிக்கடி வாங்கிய சிகரட் இருக்கிறதா இல்லையாயா என தொட்டம் பார்த்துக் கொண்டான். நானும் ”இருக்குதாடா”,  ”இருக்குதாடா” கேட்டுக் கொண்டிருந்தேன்.

ஒரு விதமாய் 2 சிகரட் பெட்டிகளையும் காப்பாற்றி கொண்டுவந்தாயிற்று. சைக்கிலை கோயிலடியில் வைத்து புட்டி விட்டு காட்டுக்குள் நடக்கலானோம். நீண்டு பெருத்து வளர்ந்திருந்த ஒரு மரத்தின் கீழ் குந்தியிருந்து சுற்றாடலை நோட்டம் விட்டோம். சிகரட குடிக்க வந்த குரங்களை தவிர அந்தப்பிரதேசத்தில் வேறு குரங்குகளோ மனிதர்களோ இருக்கவில்லை. ஆனால் உயரத்தில் ஆள்காட்டி பறவை ஒன்று பறந்து கொண்டிருந்தது. கொண்டிருந்து மனதுக்குள் ஏதோ செய்தது.

மெதுவாய் ஆளுக்கொரு சிகரட் எடுத்து வாயில் வைத்துக் கொண்டபோது ”மூன்று முடிச்சு” ரஜனி ஞாகத்தில் வர சிகரட்ஐ கையால் எறிந்து வாயால் பிடிக்கப் பார்த்தேன். சிகரட் வாயைத் தவிர எல்லா இடங்களுக்கும் போனது.

அதற்கிடையில் நண்பண் சிகரட்ஐ பத்தவைத்து அனுபஸ்தன் மாதிரி ‌எரியும் நெருப்புக் குச்சியை ஒரு கையால் பிடித்து மறுகையால் காற்றை மறைத்து எனக்கு நீட்ட நானும் குனிந்து பற்றவைத்துக்கொண்டு முதல் தரம் உள்ளே இழுத்தேன். வந்த இருமலில் வாயில் இருந்த சிகரட் 2 மீட்டர் தள்ளிப் போய் விழுந்தது. நண்பனும் இருமினான். கடைக்கார நண்பனின் அறிவுரைகள் ஞாபகத்தில் வர மெதுவாய் புகையை உறுஞ்சினோம். இருமல் நின்றது. வட்டமாய் புகைவிட்டுப் பார்த்தோம். புகை, புகை மாதிரியே போனது. வட்டமாய் போகவே இல்லை.

இப்படியே இரண்டு மணிநேரங்கள் தொடர்ந்து பத்தியதில் தொண்டை கம்மிப் போனது. கதைத்தால் ஏம். ஆர் ராதா அல்லது கருணாநிதி கதைப்பது மாதிரி இருந்து எங்கள் குரல். இந்தப் பிரச்சனை, நாம் எதிர் பாராதது. என்ன செய்வது என்று தெரியால் குழம்பிய போது நண்பன் சொன்னான் விளையாட்டின் போது கத்தி தொண்டையடைச்சுட்டுது என்று சொல்லுவம் என்று.

இருவரின் வாய்யில் சிகரட் மணத்த்தது. இதை நாம் எதிர்பார்த்தால் வரும் போதே சின்ன வெங்காயம் கொண்டுவந்திருந்தோம்ம். அதையும் சப்பி சாப்பிட்டாயிற்று.

மெதுவாய் வீடுவந்து ஏதும் பேசாமல் இருப்போம் என்றால் தங்கை (4-5 வயதிருக்கும்) விளையாடக் கூப்பிட்டாள், அம்பத்தெட்டு கேள்விகள் கேட்டு வாயைக் கிண்டிணாள்.
பேசிக் கலைத்ததும் அவள் அழுதபடியே அம்மாவிடம் போக...
அம்மா ”டேய் அவளுக்கு என்னடா சொன்ன நீ” என்றபடி தங்கையுடன் வர
நான் கரகரத்த தொண்டையால் பதில் சொல்ல...
என்ன தொண்டை கட்டிக்கிடக்குது, வெங்காயம் மணக்குது என்று அம்மா கேட்க...
நான்  முழுச...
அந்த நேரம் பார்த்து சிகரட் குடித்த நண்பனின் அம்மா எங்கள் வீட்டுக்குள் நுளைய...
அம்மா அவருடன் கனநேரமாக குசு குசு வென்று ஏதொ கதைத்துக் கொண்டிருந்தார்...
பெரும் பயம் பிடித்துக் கொண்டது என்னை...
வெளியில் பாய்ந்தோடி, விளையாடி, படம் பார்த்து, ஊர் சுற்றி சாமம் போல வீட்டுக்குள் புகுந்து படுத்து கண்ணை மூடுகிறேன்...
டேய்... என்ன உன்னைய களுவன்கேணி போற ரோட்டில இருக்கிற கோயில் பக்கம் கண்டதா ஒரு ஆள் வந்து சொல்லீட்டு போகுது என்றார் அம்மா.

நான் பதில் சொல்லாமல் போர்வையால் தலையை மூடிக் கொண்டேன்... அம்மாவும் ஏதும் கேட்கவில்லை.

அன்றிரவு அப்பா ”கனகலி்ங்கம் சுருட்டு” குடிப்பது போலவும், வானத்தில் பறந்த அந்த ஆள்காட்டி பறவையையும் கனவு கண்டேன்.பி.கு
நண்பனின் அம்மா வந்தது அம்மாவிடம் மருந்தெடுக்க.

அந்த 10 சிகரட்டுக்கள் மட்டுமே இந்த 45 வருடங்களில் எனது வாயில் குந்தியிருந்திருக்கின்றன. சத்தியமாக.


களவும் கற்று மற என்று இதற்காகத் தானோ சொன்னார்கள்?


.

5 comments:

 1. களவும் கற்று மற என்று இதற்காகத் தானோ சொன்னார்கள்?

  ReplyDelete
 2. சும்மா விடாதிங்கோ சஞ்சயன். குளிருக்கு வெளிநாட்டில சும்மா ஒண்டு ரெண்டு பதியிருப்பியள் தானே? அம்மாவை விடுங்கோ அவை எப்போதும் அப்பாவிகள், உங்கட அப்பாட்ட இருந்து எப்பிடி தப்பினிங்கள்?

  ReplyDelete
 3. அப்பர் நம்மட இம்சைகளை பார்த்தால் தனக்கு கஸ்டம் என்பதால் எனக்கு 15 வயதாயிருக்கும் போதே மேல்லோகம் போய்விட்டார். இவ்வளவு நாளும் குளிர் தெரியவில்லை இப்பதான் தெரிய ஆரம்பி்க்கிறது. பார்ப்போம் என்ன நடக்குதென்று.....

  ReplyDelete
 4. ஏறாவூர் என்றதும் ,இரண்டு வரிகள் எழுதாமல் நகர்வதில்லை என்று முடிவெடுத்து விட்டேன். கொஞ்சக் காலம் நானும் அங்கே இருந்திருக்கின்றேன். 1978 இல் வீசிய புயல் என்னை மறுபடியும் கல்முனைக்கு நகர்த்தி விட்டது.நீங்கள் 1980 இல் அங்கு வரும் போது நான் இல்லை. ஒரு ஊரில் இரண்டு 'வால்கள்' இருக்கக் கூடாது என்பது ஏறாவூர் பத்ர காளியம்மாளின் சித்தம் போலும் . என்றாலும் ஏற்கனவே நான் விட்ட புகை வளையங்களை அந்தக் காற்று வெளியில் நீங்கள் கண்டிருக்கக் கூடும்.

  ReplyDelete
 5. மிக்க நன்றி நண்பர்களே.. இப்படியான ஈரலிப்பான நினைவுகள் வாழ்வினை தினம் அழகுபடுத்தி கடந்து போகும் போது வாழ்வு இனிக்கிறது.

  ReplyDelete

பின்னூட்டங்கள்