கடந்து போகவும் கற்றுக் கொள்

நேற்றிரவின் அமைதியில் உறங்கிப் போவதற்காய் மின் விளக்குகளை அணைத்த பின் கட்டிலில் சாய்ந்து கொண்டேன். இருள் மெது வாய் கண்ணுக்குப் பழகிய பின் இருளையும் ஊடுருவிப்பார்க்க முடிந்தது. இருளின் இருளை மனதும் நுகர்வதாய் உணரத் தொடங்கினேன். எங்கும் இருள் எதிலும் இருள். இருண்ட காற்றும் சுவாசத்தினூடே உடலினுட் சென்று உயிர் வரை இருளை உணர்த்திற்று. என்றுமே இருளை நான் இவ்வளவு அருகாமையில் ரசிக்கவில்லையோ என்று எண்ணுமளவிற்கு அந்த அனுபவம் அமைந்திருந்தது. தொடுகைக்கு அப்பாற்பட்டதாய் இருள் இருப்பினும் கூட இருளை மனதால் நுகரமுடிந்தது.

இருள் சுகமானது, கனமானது, ரகசியமானது. இருள் நாம் பேசும், செய்யும் அனைத்தையும் தனக்குள் விழுங்கிக் கொள்கிறது. அது ரகசியங்களின் களஞ்சியம். கனமான மனதிற்கு போதிமரம்.

கட்டிலில் சாய்ந்திருந்த படியே இருளைப் பார்த்திருந்தேன். ஏதேதோ எண்ணங்கள் வந்து போயின. அழகான காட்சிகள் தொடக்கம் அசிங்கமான நினைவுகள் வரை. அம்மா, குழந்தைகள், தங்கை, தம்பி, நெருங்கிய நட்புகள், விரும்பத்தகாதவர்கள் என்று இருள் எனக்குள் மிகுதியாய் இருக்கும்
நினைவுகளை மீட்டிக் கொண்டிருந்தது. நான் கடந்திருக்கும் 46 வருடங்களில் இடங்கள், மனிதர்கள், நாடுகள் என்று தொடங்கி காதல், வாழ்க்கை, குழந்தைகள், வீட்டுக்கு வீடு வாசற்படிப் பிரச்சனைகள் என்று அனைத்தையும் கடந்த களைப்பில் கட்டிலில் படுத்திருப்பது போலிருந்தது.

மனதின் அயர்ச்சி என்பது உடலின் அயர்ச்சி போன்றதன்று. உடலின் அயர்ச்சியை உணவும், இளைப்பாறுதலும் போக்கிவிடுகிறது. ஆனால்  மனதின் அயர்ச்சியை கடந்து செல்வதென்பது அவ்வளவு எளிதானதன்று. சாண் ஏற முழம் சறுக்கும் விதியின் விசித்திரமான விளையாட்டு அது. ஆண்டுகள் பல கடந்த பின்பும் மன அயர்ச்சியை கடக்காதவர்கள் பலர் இருக்கிறார்கள்.

அண்மையில், எனது பதிவு ஒன்றிற்கு ஒரு நண்பர் ”கடந்து போகவும் கற்றுக் கொள்” என்று பின்னூட்டம் இட்டிருந்தார். கட்டிலின் மேல் சிந்தனைகளுடன் இருந்திருந்த எனக்கு அந்த வசனம் நினைவில் வந்த போது அறையின் இருளின் மத்தியிலும் வெளிச்சத்தை பிரஞ்ஞைபூர்வமாக உணரக்கூடியாதாய் இருந்தது. மிகவும் இலகுவான வசனம் ”கடந்து போகவும் கற்றுக் கொள்”. அதன் உள்ளர்த்தத்தின் வீரியம் எத்தகையது என்பதை அதை அனுபவித்தால் மட்டுமே உணரமுடிகிறது.

கடந்து போவது என்பது இலகுவானது அன்று. இருப்பினும் அதற்கு பல வழிமுறைகள் இருக்கின்றன. பிரஞ்ஞைபூர்வமாக சுயவிமர்சனத்துடன் இறந்த காலங்களை கடந்து கொள்வதே புத்திசாலித்தனமாக இருக்கும் என்பது எனது கருத்து. உணர்ச்சிகளின் கொந்தளிப்பினாலும், கலாச்சாரத்தின் தளைகளினாலும், சுய இரக்கத்தினாலும் எம்மில் பலர் வாழ்வினை எமது விருப்பத்திற்கு அப்பால் வாழ்ந்து வாழ்க்கையைத் தொலைத்துக்கொண்டிருக்கிறோம் என்பதையும் மறுப்பதற்கில்லை. கடந்து காலத்தை கடந்து கொள்ள அசாத்திய மனத்துணிவும், மனத்திடமும்
வேண்டும்.

எல்லோராலும் தங்களின் கடந்த காலங்களை முற்றிலுமாகக் கடந்து கொள்ள முடிவதில்லை. காலம் என்பது எம்முடன் எப்போதும் வாழ்ந்துகொண்டிருப்பது போலவே உணர்கிறேன். கடந்த காலத்தின் சில செயல்கள், எச்சங்கள், நினைவுகள், உறவுகள் என்று பலவும் ஒரு மெல்லிய நூலைப் போன்று வாழ்க்கைக்காலம் முழுவதும் தொடர்ந்து கொண்டேயிருக்கும். அவை சுவையானதாயும் சுமையானதாயும்
இருக்கும். வாழ்க்கை முடியும் போது அந் நூலும் அறுந்து போகிறது.

இலங்கையில் நான் இருந்த காலங்களில் ஒரு வயதான பெண் ஒருவர் இருந்தார். அவருக்கும் கணவருக்கும் பல பல ஆண்டுகளுக்கு மேலாக பேச்சுவார்த்தை அற்றுப்போயிருந்தது. ஒரே வீட்டில் வாழ்ந்தார்கள். கணவருக்கு நேரத்துக்கு உணவு, தேனிர் கொடுப்பார். அவர் சாய்மனைக்கதிரையில் இருந்தபடியே பத்திரிகையை மேலிருந்து கீழாகவும் பின்பு கீழிருந்து மேலாகவும் படித்துக்கொண்டிருப்பார். அவர்களின் குழந்தைகள் மணமுடித்து வெளியேறி இருந்தனர். இருவரும் நேருக்கு நேர் சந்திப்பதையும் தவிர்த்தார்கள்.

ஒரு நாள் அவரிடம் என்ன பிரச்சனை உங்களுக்கிடையில் என்றேன். இவை விளங்கும் காலம் உனக்கும் வரலாம் என்றார். இப்போது புரியாது என்றார். ஒன்றும் புரியாது நின்றிருந்தேன் நான். ஆனால் தற்போது அவர் பேச்சின் ஆழம் புரியும் ஞானம் கிடைத்திருக்கிறது. அவரும் அவரின் மனைவியும் அந் நாட்களில் தனது கடந்த காலத்தைக் கடந்துகொள்ள முடியாது தடுமாறிக்கொண்டிருந்தார்கள் என்பது இப்போது தான் புரிகிறது.

"திறன் அல்ல தன் - பிறர் செய்யினும், நோ நொந்து,
அறன் அல்ல செய்யாமை நன்று"

எம்மில் எத்தனைபேருக்கு இந்தக் குறளின் அர்த்தம் உணர்ந்து வாழ்கிறோம். பலரும் கடந்த காலத்தை ஈரமான துணிமூட்டை போன்று காலமெல்லாம் தோளில் சுமந்து திரிகிறோம். அதை உலர்த்தி வாழ்வின் பாரத்தை குறைத்துக்கொள்ளும் நோக்கமற்று. சாண் ஏற முளம் சறுக்கும் இந்த விளையாட்டில் தினமும் தோற்றுக்கொண்டிருப்பதாகவே உணர்கிறேன் பலரைப் போலவே.

”கடந்து போகவும் கற்றுக் கொள்” என்பது இலகு, அதை கடந்து போவது என்பது கடினம். அறையின் இருட்டினூடே இதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். தூரத்தே வெளிச்சமாய் ஏதோ தெரிவது போலிருந்தாலும் அது கானல் நீராயிருக்குமோ என்றும் அஞ்சவேண்டியிருக்கிறது. நானும் மனிதனல்லவா.

இன்றைய நாள் நல்லதாயும் இருக்கலாம்

7 comments:

 1. ”கடந்து போகவும் கற்றுக் கொள்” என்பது இலகு, அதை கடந்து போவது என்பது கடினம்.
  இது உண்மையே ஆரம்பத்தில் இதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை ஆயினும் பின் புரிகிறது...

  ReplyDelete
 2. நன்று. மிக அழகாக உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி தமிழரே.

  ReplyDelete
 3. கடந்து போகவும் கற்றுக் கொள்வது என்பது மிகவும் சிரமமான காரியம்தான். நல்ல விஷயங்களை எளிதில் கடந்து விடலாம். அதே நேரத்தில் மனதை அழுத்துகிற விஷயங்களை கடந்து செல்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அது போன்ற நேரத்தில் ‘இதுவும் கடந்து போகும்...’ என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டும்.
  உங்கள் பதிவுகளை http://www.hotlinksin.com/ இணையதளத்தில் பகிர்வதன் மூலம் ஏராளமான வாசகர்களைப் பெறலாம்.

  ReplyDelete
 4. பட்ட எங்களுக்குத்தான் தெரியும் கடப்பதின் வலி !

  ReplyDelete
 5. ”கடந்து போகவும் கற்றுக் கொள்” என்பது இலகு, அதை கடந்து போவது என்பது கடினம்.

  இன்றைய நாள் நல்லதாயும் இருக்கலாம்..

  பாராட்டுக்கள்..

  ReplyDelete
 6. பக்குவமடைந்த மனப்பாங்கும் ..நல்ல எழுத்துநடையும் வந்திருக்கிறது . பாராட்டுக்கள்.

  ReplyDelete
 7. superb!!!!

  What you said is 100000000% true.

  sorry no tamil font at this moment:(

  ReplyDelete

பின்னூட்டங்கள்