அன்றொருநாள் கோயிலுக்குச் செல்ல நேர்ந்தது. அங்கு எனது நண்பருக்காய் காத்திருந்த போது எதிர்பாராதவிதமாய் அறிமுகமாயினார் இன்றைய கதையில் வரும் மனிதர்.
வயது 80க்கு மேலிருக்கும். மெலிந்து ஒடுங்கிய உடம்பு, வயதுக்கேற்ற குரல், தடக்கமில்லாத நிதானமான வார்த்தைகள், பழுத்த அனுபவங்கள், சிறு கூனல், இவையே அவரின் அடையாளங்களாய் இருந்தன.
டாக்ஸிக்காய் காத்திருப்பதாய்ச் சொன்னார். டாக்ஸி வர நோமாகியது. அதிக நேரமாகியது.
அம்மா, இருங்கோ என்று ஒரு கதிரையை எடுத்துப் போட்டேன். இருந்தார். உரையாடத் தொடங்கினோம். உரையாடல் எடுத்த உடனேயே அவரின் ஊர், வீடு, குடும்பம், கோயில் என்றலைந்து இறுதியில் அவரின் இன்றைய வாழ்க்கைக்குள் புகுந்தது. பேசிக் கொண்டே இருந்தார். நிறுத்தாமல். அவருக்கு பேசவேண்டிய அவசியம் இருந்தது. பல நாட்கள் பேசாதவர் போல் நிறுத்தாமலே பேசிக்கொண்டிருந்தார்.
அடிக்கடி ”ஏன்னடா மோனே, நான் சொல்லுறதில ஏதும் பிழை இருந்தால் சொல் என்றார்”. எனக்கும் அவரின் வார்த்தைகளில் பிழை இருந்தாய் தெரியவில்லை. ஆதலால் மெளனமாய் இருந்திருந்தேன்.
நீ என்ட பேரன் மாதிரி, ஆனபடியால் தான் உன்னுடன் கதைக்கிறேன் என்று சொல்லிச் சொல்லி தனது முழு வேதனைகளைகளையும் இறக்கிவைத்தார்.
மோனே! மற்றவன்ட சொத்தில ஆசைப்படாதே, உன்ட கையாலயும், தலையாலயும் உழைத்தது மட்டுமே உன்னுடையது என்றும், மதியாதார் வாசல் மிதியாதே என்னும் வார்த்தைகள் அடிக்கடி அவரிடம் இருந்து வெளிப்பட்டது.
மோனே! நான் ஊரில வீடு கட்டேக்க 8000 ரூபாவுக்கு வீடு கட்டினனான், நாங்கள் தான் சிற்றாள் வேலை செய்தோம், சீமெந்து 8ரூபாவுக்கு வாங்கினேன் என்றார் பெருமையுடன். ஊரிலேுயே முதல் கல் வீடு அவர்களுடையதாயிருந்ததாம். போரில் வீடு அழிந்தது அவருக்குள் அழியாத வடுவாயிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. ஆனாலும் அவரின் பிள்ளையார் கோயில் போரில் அழியாமல் இருந்ததாம். அது பிள்ளையாரின் சக்தி இன்றி வேறென்னவாயிருக்கலாம் என்றும் கேட்டார். ஏதும் பேச முயாதிருந்தது என்னால்.
தனது பிள்ளைகளுக்கு என்னென்ன சீதனம் கொடுத்தார், அதில் எத்தனை பவுண், எத்தனை வீடு, எத்தனை நிலம், எத்தனை பனை என்பது அவருக்கு நன்றாகவே நினைவிருந்தது.
”உன்ட அம்மாவ வடிவா பார்த்துக் கொள்கிறாயா?”என்று எனது மனச்சாட்சியையும் உலுப்பினார். என் மனம் ஏதோ கனத்துப் போனது அதைக் கேட்டதும். ஏலுமான அளவு செய்கிறேன் என்ற போது பொக்கைவாயால் வெற்றிலை தெறிக்க பெரிதாய் சிரித்தார்.
டேய் என்று அன்பாய் அழைத்து, உன்னைப் போல மற்றவனையும் நேசி என்னும் தொனியில் பலமாய் அறிவுறுத்தினார். மற்றவர்களின் மனதை புண்படுத்தாதே என்றும், மற்றவர்களின் பிழைகளை மன்னித்துவிடு என்றும் அவை உன் உயர்த்தும் என்றார். கேட்க நல்லாயிருக்கு ஆனால் உதுகளை செய்யுறது கஸ்டமெல்லோ என்றேன்? என்ட வயது வரேக்க உனக்கு விளங்குமடா என்றார் என்னைப் பார்த்து. சிரித்தேன், அவரும் சேர்ந்து சிரித்தார்.
நேர்வேயில் வாழ்ந்தாலும் அவரின் மனம் முழுக்க ஊரிலேயே அலைந்து திரிந்தது. தனது பனைகளை ஆமிக்காறன் தறித்து விட்டதாயும், உவங்களுக்கு பனையின்ட அருமை தெரியுமே தம்பீ.. அறுவாங்கள்.. என்றார்.
தனக்கேற்பட்ட சோதனைகள், வேதனைகள், வாழ்க்கையில் கடந்து வந்த, கடந்து கொண்டிருக்கும் வலிகள் என எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்தார். பகிரக் கூடாத பல பரம ரசியங்கயையும் பகிந்து கொண்டார். அவரின் கண்கள் கலங்கி இருந்ததை காணக் கூடியதாயிருந்தது, அந்நேரங்களில்.
மோனே! இந்த வயதிலயும் உடம்பில ஒரு வருத்தம் கிருத்தம் இல்ல, ஏன் என்று தெரியுமோ என்றார்? வாயைப் பிதுக்கினேன். உன்ட நெஞ்சுக்கு உண்மையாயிரு, மற்றவனுக்கு அள்ளி வைக்காதே, உதவி செய், அதோட பிள்ளையார கும்புடு என்ட வயதிலயும் சுகமாயிருப்பாய் இருப்பாய் என்றார். நான் இந்து வயதிலயும் கண்ணாடி போடுறதில்ல ஆனா நீ போடுறாய் என்று ஒரு நக்கலும் விட்டார். சேர்ந்து சிரித்தோம்.
அவரின் டாக்ஸி வந்தது. எழுந்து ஜக்கட்டை எடுத்தார். அதைப் போடுவதற்கு உதவினேன். மெதுவாய் திரும்பி, உனக்கு எத்தனை பிள்ளைகள் என்றார். இரண்டு பெண் குழந்தைகள் என்றார். என் கையை பிடித்து நீ குடுத்துவைச்சவன்டா என்று சொல்லி டாக்ஸியில் ஏறிக் கொண்டார். டாக்ஸி புறப்பட்டது. ஜன்னலினூடாக அவர் கை காட்டுவது தெரிந்தது. நானும் கையைக் காட்டினேன்.
அவர் போனதும் மனம் அவரைச் சுற்றியே வந்து கொண்டிருந்தது. அவருக்கும் எனக்கும் என்ன தொடர்பு? ஏன் என்னிடம் தன் வாழ்வின் பகிரக் கூடாத ரகசியங்களையெல்லாம் பகிர்ந்து போகிறார்?
இன்றைய நாளைப் போல் பல நாட்கள், பலர் என்னிடம் தங்களின் சுகங்களையும், சோகங்களையும் பகிந்து என்னைப் பெருமைப் படுத்திப் போயிருக்கிறார்கள். என்னைக் கடந்து போகும் பலரும் ஏன் இந்தளவுக்கு என்னை நம்பி தங்களின் வாழ்க்கையை பகிர்ந்து போகிறார்கள்? இந்த வினாவுக்கான விடையை பல நாட்களாக தேடுகிறேன். அனால் விடை மட்டும் கிடைக்காமலிருக்கிறது.
சில வினாக்களுக்கு விடைகள் இல்லை என்கிறார்கள். அப்படிப் பட்டதாயிருக்குமா எனது வினாவும்?
சில வினாக்களுக்கு விடை தெரியாவிட்டால் ஏற்படும் பயம், ஏக்கம், தவிப்பு, என்னிடம் இல்லை. என்னிடமிருப்பதெல்லாம் பலரின் ரகசியங்களும் அவை தந்து போயிருக்கும் எகாந்தமும் தான்.
இன்றைய நாளும் நல்லதே.
.
No comments:
Post a Comment
பின்னூட்டங்கள்