33 வருட ரகசியம்: அவளும் கோயிலும் நானும்

சர்வதேச ராணுவ ரகசியங்கள், உள் நாட்டு அரசியல் ரகசியங்கள் என்பவை 30 ஆண்டுகளின் பின் காலாவதியானவை என அறிவிக்கப்பட்டு அந்த ரகசியங்கள் வெளிவருவது போலத் தான் இந்தக் கதையும். ஏறக்குறைய 33-34 வருடங்களுக்கு முன்னான ரகசியம் இது. இன்று வரை பகிரப்படாத கதை. 

இனி இது ரகசியமில்லை.

கதைக்குப் போவோம் வாருங்கள்.....

காலம்: 1977ம் அல்லது 1978ம் ஆண்டு.
இடம்: இந்தப் பிரபஞ்சத்திலேயே அழகான மட்டக்களப்பு நகரமும், என் பாடசாலையும், அங்கிருந்த விடுதியும், ஆனைப்பந்தி கோயிலும், ஆனைப்பந்தி பாடசாலையின் பெண்கள் விடுதியும்.

பாத்திரங்கள்: 33 ஆண்டுகளுக்கு முன்னிருந்த நானும், அந்த வெள்ளைச்சட்டை, வெள்ளைப்பாவாடைத் தேவதையும்.

எனது பால்யக் காலங்கங்களில் பல ஆண்டுகள் விடுதி வாழ்க்கை என்று விதிக்கப்பட்டிருந்தது. விடுதி வாழ்க்கை என்பது இயந்திரமாக்கப்பட்ட வாழ்க்கை. அன்புக்காக ஏங்கி, ஏங்கி வாழும் வாழ்க்கை அது. அப்படிப்பட்ட வாழ்க்கையையும் அழகாக்கிய நிகழ்வு இது.

அந் நாட்களில் வெள்ளிக்கிழமைகளில் கோயிலுக்கும், சனிக்கிழமைகளில் 2 மணிநேரம் வெளியில் செல்லவும் அனுமதிப்பார்கள். படம் பார்ப்பதற்கு அனுமதி கிடைப்பது விடுதிக்கு பொறுப்பான ஆசிரியரின் மனநிலையைப் பொறுத்தது. அத்தி பூத்தாற் போல் அதற்கும் அனுமதி கிடைக்கும்.

ஆனால், வெள்ளிக்கிழமைகளில் ஆனைப்பந்தி கோயிலுக்கு போவது என்றால் அன்று காலையே மனம் ஆனந்தக்கூத்தாடத் தொடங்கிவிடும். காரணம் பக்தியல்ல, வெள்ளி இரவு படிப்பு இல்லாமல் போவதும், கோயில்புக்கையும், மோதகமும், புறக்கித் தின்னும் தேங்காய்ச் சொட்டும் தான்.


1976இல் விடுதியில் சேர்ந்த பின் பல வெள்ளிக்கிழமைகள் கடந்து போயின. எனக்கும் பதின்மக்காலங்கள் புகுந்து தனது விளையாட்டுக்களை அரம்பித்திருப்பதை நான் அன்று உணர்ந்திருக்காவிடினும் இன்று அது நன்காகவே புரிகிறது.

அதே கோயிலுக்கு நாம் ஒவ்வொரு வெள்ளியும் கோயிலுக்குப் போவது போல ஆனைப்பந்தி பாடசாலையின் பெண்கள் விடுதியில் இருந்தும் பெண்கள் (சிறுமிகள்) வருவார்கள். இவர்களை நான் கண்டுகொள்வதில்லை. அவர்களும் என்னை கண்டுகொள்வதில்லை. நானும் கோயில்புக்கையும், தேங்காய் சொட்டுமாய் எனது உலகம் உறுண்டோடிக் கொண்டிருந்தது.

அந்த சிறுமிகளில் ஒருத்தி (சத்தியமாய் இன்றும் பெயர் தெரியாது) ஒவ்வொரு வெள்ளியும் தேவாரம் பாடுவாள். உருகி உருகிப் பாடுவாள். கேட்பவர்களையும் உருக்கும் குரல் அது. அவள் தேவாரம் பாடும் நேரம் மட்டும் எனது எண்ணம் கோயிலில் இருக்கும். மற்றய நேரங்களில் பிள்ளையாருக்கு படைத்திருக்கும் புக்கையிலும், மோதகத்திலும் இருக்கும். பிள்ளையாரும் அதைக் கண்டுகொள்ளவில்லை, வழமை போல.

அதுவும் ஒரு வெள்ளிக்கிழமை தான். வழமை போல் வேட்டி, திறுநீறு சந்தனத்துடன் கோயில் மணலில் விளையாடிக் கொண்டிருந்தேன். தேவாரம் பாடும் பெண் கோயிலுக்குள் வந்து கும்பிட்டபடியே உள்வீதி சுற்றிவந்த கொண்டிருந்தாள். மனதுக்குள் ஏதோ செய்தது. அவளைப் பார்த்தபடியே இருந்தேன். நான் இருப்பதை அவள் கவனிக்கவேயில்லை. தேவாரங்களை முணுமுணுத்தபடியே கடந்து போனாள்.

அன்று தொடங்கியது ஹோர்மோன்களின் ஆட்டம்.
மனம் அவளையே தேடியது. தேவாரம் படிப்பதற்காக முன்னால் நிற்பாள். அன்று முதல் நானும் நின்றேன். அவள் தேவாரம் படிக்கத் தொடங்குவதும் தெரியாது, படித்து முடிப்பதும் தெரியாது. அவளின் முகம் மட்டுமே தெரியும். கண்மூடி, அவள் தன்னிலை மறந்து தேவாரம் படித்த போது நானோ என்னிலை மறந்து அவளைப் படித்துக் கொண்டிருப்பேன். இதுவும் ஓருவித பக்தி தான்.

அமைதியான அழகுடன் இருப்பாள். தலையில் மல்லிகைப் பூவிருக்கும். கூப்பியிருக்கும் அவள் கைகளில் பிளாஸ்டிக் காப்புகள் இருக்கும். வெள்ளை சட்டையும், பழுப்படித்துப் போயிருந்த வெள்ளை பாவாடையுமாய் நின்றிருப்பாள்.

அன்று தொலைந்தவன் தான் அதன் பின் வந்த சில மாதங்கள் தொலைந்து போயிருந்தேன். ஒவ்வொரு வெள்ளியும் திருவிழா தான். வியாழன் இரவே எப்படா விடியும் என்றிருப்பேன். வெள்ளி மாலை குளித்து, மற்றவர்களுடன் வரிசையாக நடந்து கோயிலுக்குள் போனால் அவள் வரும் வரை மனது தவியாய் தவிக்கும். கண்டதும் அமைதி கொள்ளும். அப்பா அடித்து, அடித்து கற்பித்த தேவாரமெல்லாவற்றையும் அவள் அடிக்காமலும், கற்றுத் தராமலும் கற்பித்தாள். சமர்த்தாய் கற்றுக்கொண்டேன்.

தேங்காய் சொட்டு புறக்குபவர்களும், மோதகத்துக்கு அடிபடுகிறவர்களும் ஏதோ அற்பப் பிராணிகளைப் போல் தெரிந்தார்கள். அவர்களும் போட்டிக்கு ஒருவன் குறைந்துவிட்டான் என்பதால் மகிழ்ச்சியாய் இருந்தார்கள்.  பட்டினியாய் விடுதிக்குப் போனாலும், மனம் நிரம்பியிருக்கும்.

அவளுடனான அந்த நாட்களில் ஒரு துளியேனும் காமம் என்னும்  சொல்லுக்கு இடமிருக்கவில்லை.. எழுத்தில் சொல்லமுடியாத பரிசுத்தமான மகிழ்ச்சியான நிலையை மட்டுமே தந்து போன அனுபவமது.

ஒரு முறை மட்டும் இரு வார்த்தைகள் பேசினேன் அவளுடன். கோயிலில் திருவிழாவின் போது அய்யர் தேவாரம் படிப்பவளை தேடினார். என்னையும் தேடச் சொன்னார். தேடாமலே அறிந்திருந்தேன் அவளிடத்தை.  அவளிடம் சென்று ”அய்யா வரட்டாம்” என்றேன். நிமிர்ந்து பார்த்தாள் என்னை. என்னால் பார்க்கமுடியவில்லை. கொலுசின் ஒலி கேட்க ஓடினாள். பதட்டம் குறைந்ததும் நானும் ஓடி அவளுக்கு எதிர் வரிசையில் நின்ற போது

” இடரினும் தளரினும் எனதுறு நோய்
தொடரினும் உன்கழல் தொழுதெழுவேன்”

என்று கண்மூடி உருகிக் கொண்டிருந்தாள். ”அய்யா வரட்டாம்” என்ற அந்த  இரு வசனங்களைக் கொண்ட காட்சி எனது மனத் திரையரங்கில் 100 நாட்களுக்கு மெலாக ஓடி சாதனை புரிந்தது என்பதை அவளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

சில மாதங்களின் பின் அவளின் வருகை நின்று போனது. ஆரம்பத்தில் கஸ்டமாயிருந்தாலும், சில காலங்களில் அவள் ஞாபகத்தில் இருந்தும் மறைந்து போனாள்.

எனக்கு அவளைத் தெரியும், அவளுக்கு நான் யார் என்றே தெரியாது.

ஒரு வேளை நான் நினைப்பது போல, எனக்கு அவனைத் தெரியும், அவனுக்கு என்னைத் தெரிந்திருக்காது என்று இந்த 33 ஆண்டுகளில் ஒரு நாளாவது அவள் நினைத்திருகக்கூடுமோ?

நினைத்திருக்கலாம்.

நினைவுகள் தாலாட்டும் என்று எங்கோ கேட்ட ஞாபகம் வருகிறது.


.

7 comments:

 1. "இதயம்" முரளி மாதிரி இவ்வளவு பீல் பண்ணி இருக்கீங்களே...

  ReplyDelete
 2. வசந்த கால் நினைவுகள் மனதுக்கு இதமாக் இருக்குமாம்.

  ReplyDelete
 3. குழந்தைகள் உலகம் என்று சொல்லக் கூடிய காலத்தின், மனதுக்கு இனிய பதிவு.

  ReplyDelete
 4. நெகிழ்ச்சியான பதிவு!

  ReplyDelete
 5. என்ன இது எங்கேயோ உதைகிறது, கதையா அல்லது நிஜம்மா, ஒன்றுமாய் புரியவில்லை,
  கதை என்று சொல்லமுடியாத அளவு ஒரு உயிர் ஓட்டம் உள்ளது , மிகநல்லா உள்ளது.
  செ . ரஞ்சன்

  ReplyDelete
 6. மனம் ,மயங்குதெ உன்னை....

  ReplyDelete

பின்னூட்டங்கள்