பூலான்தேவியின் கொள்ளைகள்

இந்தக் கதை ஏறத்தாள 25 வருடப் பழசான கதை தான்.

அப்போ எனக்கு 18 வயதிருக்கும். ஏ. எல் எடுத்து விட்டு சுளட்டித்திரிந்த காலம். ஊரில இருந்த தகரடப்பா பொண்ணுங்கெல்லாம் தேவைக்கு அதிகமாகவே அழகாகத் தெரிந்த காலம். நேரமே இல்லாம சைட அ‌டித்துக் கொண்டும், நண்பர்கள் சைட அடிக்கும் பிகருகளுக்கு பின்னால் நண்பர்களை சைக்கிலில் ஏற்றியபடியே ரொம்பவே பிசியாக ஓடித்திருந்துகொண்டிருந்தேன்.

நம்ம வீட்டில ”தங்கச்சி” என்ற பெயரில ஒரு பூலான்தேவி இருந்தாள். அவள்பண்ணிய இம்சை கொஞ்ச நஞ்சமல்ல? அவளின் அட்டகாசங்களில் முக்கிய அட்டகாசம் பற்றிய கதையே இது.

அதிரடிப்படையும், சிறப்பு போலீசும் நம்ம தம்பியை நன்றாக ”கவனித்ததால்” அம்மா தனது இளையபுத்திரனை லண்டனுக்கு அனுப்பினார். அதனால் தங்கையை தினமும் பாடசாலைக்கு போகும் வாகனத்தில் அவளை ஏற்றிவிடுவது எனது வேலையாகிப் போனது.

காலை 7மணியளவில் தங்கை பாடசாலைக்குப் போகும் வாகனம் ஒரு கடையருகில் வந்துநின்றதும் அவளை அதில் ஏற்றிவிட்டு நானும் வெள்ளைச்சட்டைகளைப் பார்க்கப் போவது வழக்கம். என்னைப் போல் கடமையுணர்வுள்ள சில நண்பர்களும் எனக்காக காத்திருப்பார்கள்.

தங்கை முதல் முதலில் பாடசாலைக்குப் சென்ற மாதங்கள் ஒரு வித பிரச்சனையுமில்லாமல் கடந்துபோயின. சைக்கிலில் அழைத்து வருவேன். வரும் வழியெல்லாம் அந்த பூலான்தேவி தன் வாயையே துப்பாக்கியாக்கி, கேள்விகளை தோட்டாக்களாக்கி, என்னைச் சுட்டபடியே‌ வருவாள். (முற்பிறப்பில் பல்குழல் பீரங்கியாக இருந்திருப்பாளோ?)

பாழாய்ப் போன யாரோ எனது தங்கைக்கு கள்ளத் தீனி உண்ணும் பழக்கத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இவளுக்கும் ருசி பிடித்துக்கொண்டது. ஆனால் காசுக்கு எங்கேபோவது என்னும் பிரச்சனை வந்த போதுதான் அவள் பூலான்தேவியாக மாறினாள்.

அன்றும் சைக்கிலில் ஏற்றிவந்தேன், அவளை. அவள் செல்லவேண்டிய வாகனம் நிறுத்தும் கடையருகே வந்ததும் வழமை போல் இறங்கிக் கொள்வாள், நாமும் நமது கடமையைச் செய்யலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவளோ நான் இறங்கமாட்டேன் என்று அடம் பிடித்தாள்.

அன்பாய் சொன்னேன், மறுத்தாள்.

செல்லமாய் கூறிப்பார்த்தேன், தலை அங்கும் இங்கும் ஆட்டினாள்

சற்று மெது உஸ்ணத்துடன் சொல்லவேண்டியதாயிற்று, அதையும் மறுத்தாள்.

இறங்கிப் போடீ, இல்லாட்டி அம்மாட்ட சொல்லுவேன் என்றேன், நக்கலாய் சிரித்தபடி மறுத்தாள்.

பயங்கரமாய் வெருட்டினேன், கண்களை குழமாக்கி அழுதபடியே மறுத்தாள்.

எனக்கு நேரம் போய்க்கொண்டிருந்தது. பெண்களுக்கான பஸ்கள் எல்லாம் போய்விடும் என்ற கவலையில் பிரசரும் ஏறிக்கொண்டிருந்தது.

”சரி.. அண்ணா இண்டைக்கு 10 சதம் தாறன் இறங்கிப் போங்கோ” என்றேன். பூலான்தேவி சிரித்தபடியே கையை நீட்டினாள். நானும் முதன் முதலாய் லஞ்சம் (கப்பம்) கொடுத்தேன். துள்ளிக் குதித்து ஓடினாள், அவளின் வாகனத்துக்கு.

எனது கடமையின் அவசரத்தில் இதை நான் பெரிதாய் எடுக்கவுமில்லை, ஞாபகத்தில் வைக்கவுமில்லை.

அடுத்தநாளும் வந்தது. அன்றும் அழுதாள். நானும் 10 சதம் வெட்டினேன்.

இப்படித் தொடங்கிய கொள்ளை காலப்போக்கில் 20 - 30சதம் என்று அதிகரித்து, காலப்போக்கில் 50 சதமாகுமளவுக்கு அதிகரித்தது. அம்மாவிடம் வீட்டில் கூறமுடியாதிருந்தது. நீயே அவளை பாடசாலையில் கொண்டு போய் விட்டு விட்டு வா என்றால்... சகலதும் சிக்கலாகிவிடும் என்பதால் அடக்கியே வாசித்தேன்.

அந் நாட்களில் போலீஸ்காரன் பெண்டாட்டியான எனது அம்மா காசு வைக்கும் பெட்டியில் இருந்து தினமும் 2-3 ரூபா திருடுவது எனது வழக்கமாய் இருந்தது. தினமும், படம் பார்க்கவும் இதர செலவுகளுக்கும், அது போதுமானதாகவிருந்தது.

அந்தக் பணத்தில் 50 சதத்தை பூலான்தேவி தினமும் பகல்கொள்ளையடித்துக் கொண்டிருந்தாள். எனக்கு இது பலத்த பொருளாதார சிக்கலை ஏற்படுத்தியிருந்தது மட்டுமல்ல நண்பர்கள் மத்தியில் மானப்பிரச்சனையையும் ஏற்படுத்தியது. அதை பல வழிகளில் முயன்றும் நிறுத்த முடியவில்லை.

1985 இன் இறுதியில், நான் ஊரில் இருந்து புறப்படும் வரை, பூலான் தேவி என்னிடம் தினமும் கொள்ளையடித்தபடியேயிருந்தாள்.

இருபது வருடங்களுக்கு பின்பான ஒரு சுப முகூர்த்தத்தில் பரணீதரன் என்றொரு கொள்ளைக்காரன் எங்கள் பூலான்தேவியை கொள்ளையிட்டுப்போனார், தான் ஒரு கொள்ளைக்காறியை கொள்ளையடிக்கிறேன் என்பது தெரியாமலே.

தற்போது சிட்னி மாநகரத்தில் தன்னைக் கொள்ளையடித்த கொள்ளைக்காரனையே கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறாளாம் எங்கள் பூலான்தேவி.

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் என்று சும்மாவா சொன்னார்கள்.

எங்கள் பூலான்தேவிக்கு இது சமர்ப்பணம்


.

6 comments:

  1. 25 வருஷத்துக்கு முன்னாடி உங்க வயசு 18 ன்னா இப்போ 43 கணக்கு கரெக்ட் தானே...

    ReplyDelete
  2. ஆகா.. நீங்க கணக்கில புலி போல.. :-). இது கிட்டத் தட்ட 25 - 27 வருடத்துக்கு முன்னான கதை.

    ReplyDelete
  3. பூலான் தேவி வாசிகக் மாட்டார் என்ற தைரியத்தில எழுதி இருகிறீங்க இருங்க . நான் காட்டிக் கொடுக்கிறேன். ஹா ஹா......

    ReplyDelete
  4. hahaha i love this............. wait wait avala verupethata parungo hahahhahahah

    ReplyDelete
  5. அற்புதமான மலரும் நினைவுகள்

    ReplyDelete
  6. அன்றைக்கு விரட்டின படி அந்த ரகசியம் வெளி வந்துவிட்டது பலே கில்லாடிதான் நீங்க

    ReplyDelete

பின்னூட்டங்கள்