நோர்வேக்கு வந்த புதிதில் என்னைச் சுற்றியிருந்த உலகம் முழுவதும் புதினமாயிருந்தது. வந்து அடுத்த வருடமே மொழியைக் கற்பதற்காக புகைப்படக்கலையும், இயற்கையும் என்னும் தலைப்பிலான ஒரு கற்கை நெறியை தெரிவு செய்து வடநோர்வேக்கு பயணமானேன். தனியே நோர்வேஜியர்களுடன் வாழ்ந்தால் மொழியை சீக்கிரமே கற்கலாம் என்ற என்னமும், வட நோர்வேயின் இயற்கையை அனுபவிப்பதுமே எனது நோக்கமாயிருந்தது.
பாடசாலையில் என்னைத் தவிர வேறு 5 தமிழர்களும் இருந்தார்கள். அவர்கள் தனியே நோர்வேஜிய மொழியை மட்டுமே தெரிவு செய்திருக்க, எனது கற்கை நெறியில் நான் ஒருத்தன் மட்டுமே எனது நிறத்தில் இருந்தேன்.
வாழ்க்கையின் மிக இனிமையான வருடம் அது. மொழியும் புரியத் தொடங்கி, நான் படம் எடுத்தால் படமும் உருப்படியாய் வரத் தொடங்கியதும் அப்போது தான்.
பனிச் சறுக்கிலும் ஓரளவு தேர்ச்சி வந்தது, எனக்கு. கிழமையில் 3-4 நாட்கள் பாடசாலைக்கு வெளியே காடுகளிலும், திறந்த வெளிகளிலும், மலையுச்சிகளிலும் தங்கினோம். ”டென்ட்” அடித்து, மீன் பிடித்து, கண்டதையும் படமெடுத்து திரிந்திருந்தேன், மற்றவர்களுடன் சேர்ந்து.
இந்த நாட்களில் மிக நன்றாக அதிக தூரம் ஓடுவேன். விளைட்டுக்களில் பிரியமாயிருந்தேன். இதனால் அறிமுகமாகினார் Anders Ims என்னும் நோர்வேஜிய இம்சையரசனொருவன். அவரும் இதே பாடசாலையில் படித்தார்.
அவனுக்கு தூங்குவது என்றால் கொல்லக் கொண்டுபோவது போல. பயங்கர சுறுசுறுப்பானவன். அதேவேளை மிகவும் இரக்க்கமும், மிக மிக வெட்கமும் கொண்டவன்.
ஒரு நாள் ஜொக்கிங் போன போது அறிமுகமானான். பேசிய படியே ஓடி முடித்தோம். அது வெள்ளிக்கிழமை என்பதால் அடுத்த நாள் அலுப்பில் காலைத் தூக்கத்தை அனுபவித்துக் கொண்டிருந்தேன். தட தட என்று அறைக்கதவை யாரோ தட்டுவது கேட்டு திறந்தேன். இம்சையரசன் ஜொக்கிங் போகும் உடுப்புடன் புன்னகைத்துக் கொண்டிருந்தான். என்ன விசயம் என்றேன். வா ஓடப் போவோம் என்றான். எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. அவனின் அப்பாவியான அழைப்பையும் மறுக்க முடியவில்லை. சரி என்று வெளிக்கிட்டேன்.
அது தான் அந்த வருடம் நான் செய்த மிகப் பெரிய பிழை. அடுத்து வந்த ஒவ்வொரு சனியும் ஏதாவது ஒரு திட்டத்துடன் வருவான். மலைஏறுவொம், மீன் பிடிக்க பல மைல் தூரம் நடந்து போவோம், ஜொக்கிங் என்று அவன் அழைத்தால் அது கிட்டத்தட்ட அது ஒரு குட்டி மரதனுக்கு சமமாயிருக்கும். எனது அனுமதியையோ, விருப்பத்தையோ அவன் ஒரு நாளும் கேட்டதில்லை. நானும் மறுத்ததில்லை. எனக்கு வடநோர்வேயை சுற்றிக்காட்டிய பெருமையை அவனுக்கே சேரும்.
இப்படி ஒரு சனிக்கிழமை நடந்த கதை தான். இன்று நான் எழுதப் போகும் கதை.
அன்று கதவு தட்டப் பட்டது, வா உள்ளே என்றேன். பனிச்சறுக்கு உடுப்புடன் நின்றிருந்தான். இன்று என்ன திட்டம் என்றேன்? வா பனிச்சறுக்கு போவோம் என்றான். தூரமா என்ற போது சீச்சீ.. சற்றுத் தூரம் என்றான். சரி என்று உடைமாற்றி வெளிக்கிட்டேன். நேரம் 8 மணி என்று தெரிந்தது.
கையில் இரண்டு தோடம்பழங்களும், நீரும் கொண்டு போனேன். அவனோ இரண்டு தோடம்பழங்களுடன் மட்டுமே வெளிக்கிட்டான்.
பனிச்சறுக்கு உபகரணத்தை காலில் பூட்டி நடக்கத் தொடங்கினோம். அவன் எனக்கு முன்னால் நடக்கிறான். நான் வழமை போல் அவனைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தேன். இடக்கிடை நான் பின்னால் வருகிறேனா என்று திரும்பிப் பார்த்தபடியே நடந்து கொண்டிருந்தான். அவனின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாது தடுமாறும் போது தனது வேகத்தை சற்று குறைத்து என் உசார் படுத்தியதாக பின்பொரு நாள் சொல்லிச் சிரித்தான்.
நேரம் போய்க் கொண்டிருந்தது. அவன் தனது நடையை நிறுத்துவதாயில்லை. பசி வயிற்றைக் கிண்ட. எனக்கு பசிக்கிறது என்றேன். அதற்கிடையிலா என்று அங்கலாய்த்தவன், சற்று நேரம் ஆறுதலைடைந்து தோடம்பழத்தை சாப்பிட அனுமதித்தான். நோரம் 12ஐ நெருங்கிக் கொண்டிருந்தது.
மீ்ண்டும் ஆரம்பித்தான். நானும் பின்னால் இழுபட்டுக் கொண்டு போனேன். மலையை ஏறுவதும், கடப்பதும், இறங்குவதுமாயிருந்தோம். கையில் இருந்த கடைசி தோடம்பழமும் வயிற்றுக்குள் போய் பல மணிநேரங்களாகிய போது நேரம் மாலை 3 மணி ஆகியிருந்தது. எனக்கு பசிக்கொடுமை அதிகரிக்க நிலத்தில் இருந்த பனியை தின்னத் தொடங்கினேன். அதைக் கண்டவன் பனியை சாப்பிடாதே வயிறு வலிக்கும் என்றான். எனக்கு பசிக்கிறது என்றேன். தனது தோடம்பழத்தை உரித்து அதில் பாதியை எனக்குத் தந்தான்.
என்னால் நடக்க முடியாது என்று சொன்னேன். கெதியில் போய் சேர்ந்துவிடுவோம் என்றான். எங்க பரலோகத்துக்கா என்று கேட்கத் தொன்றியது என்றாலும் அடக்கிக் கொண்டு. மீண்டும் அவனைப் பின் தொடர்ந்தேன்.
மாலை 5 மணிபோல் என்னால் நடக்க முடியாது குந்திய போது, வா இன்னும் சற்றுத் தூரம் போனால் பள்ளி மட்டும் பள்ளமான பகுதி, சறுக்கிக் கொண்டே போகலாம் என்றான். ஒரு விதமாய் மாலை 7 மணிபோல் படசாலைக்கு வந்த போது ”வெல்டன்” என்று நோர்வேஜிய மொழியில் சொல்லிப் போனான். எனக்கு பதில் சொல்லவே தெம்பிருக்கவில்லை. பிழிந்து போட்ட கரும்பு சக்கை போலிருந்தது உடம்பு.
மாலை அனைவரும் சுற்றியிருந்து உணவு உண்ட போது அருகில் வந்து உட்காந்து கொண்டான். அவனைக் கவனிக்காமல் வயிற்யை நிரப்பிக் கொண்டிருந்தேன். இன்று நீ 54 கிமீ போய் வந்திருக்கிறாய் என்றான். எனக்கு அவனைக் கொல்லவேணும் போலிருந்தாலும், எனது சாதனை சந்தோசத்தை தந்து கொண்டிருந்தது. அவனைப் பார்த்து புன்னகைத்தேன்.
நாளைக்கு காலை ரெடியாயிரு என்று சொல்லி எழுந்து போனான். ஏனக்கு தலை சுற்றத் தொடங்கியிருந்தது.
...................
ஒவ்வொரு நத்தார் பண்டிகைக்கும் அவனிடமிருந்து வாழ்த்தும், அந்த வருடம் என்ன என்ன செய்தான் என்றும் எழுதியிருப்பான். கடைசியாய் வந்த கடிதத்தில் (Alska)அலாஸ்காவில் பல நாட்கள் தங்கி பல நூறு கிலோமீற்றர்கள் பனியில் பயணித்ததாய் எழுதியிருந்தான். நல்ல நேரம் நான் அருகில் இல்லை என்று நினைத்துக் கொண்டேன். அப்படி நான் அவனுக்கருகி்ல் இருந்திருந்தால், இந்த நேரம் எனக்கு அஞ்சலி நோட்டீஸ் அடித்திருப்பாகள்.
.
No comments:
Post a Comment
பின்னூட்டங்கள்