ஒரு ராஜாவும் ஒரு விசரனும்

 சில வாரங்களுக்கு முன் கிடைத்த அனுபவம் இது.
அன்று ஒரு நெட்கபேயில் பின் மதியத்தில் இருந்து கணணி திருத்திக் கொண்டிருந்தேன். நேரம் மாலையாகி பின்பு இரவுமாகிவிட்டது.

அந்நேரம் ஒருவர் உள்ளே வந்தார். பார்த்த உடனேயே அவரை எடைபோடத் தொடங்கிவிட்டது மனது. களைத்த முகம், தழும்பிக் கொண்டிருந்த பழுப்படைந்த கண்கள், காவியடித்துப், சூத்தைபற்றிப் போயிருந்த பற்கள், சவரம் செய்யாத முகம், போலியான புன்னகை என தன்னைப்பற்றி ஒரு நல்ல அபிப்பிராயத்தையும் கொடுக்காத மனிதராயிருந்தார் அவர்.

வந்ததும் ஒரு மூலை கணணியை தெரிவுசெய்து அது வேண்டும் என்றார். கடையுரிமையாளரும் அவரை எடைபோட்டபடியே ஒரு மூலையில் இருந்த கணணியைக் கொடுத்தார்.

அங்கு போய் குந்தியவர். சற்று நேரத்தில் உதவி வேண்டும் என்று வந்து சொன்னார். கடையுரிமையாளர் என்னை அவருக்கு உதவிசெய்ய முடியுமா என்ற போது வழமைபோல உனது தலை மேலும் கீழும் ஆடியது. என்ன உதவி என்றேன்? வா கணணிக்கருகில் என்றார். அருகில் போனதும் அவரது கதிரையில் இருத்தினார். அவரும் அருகில் குந்திக் கொண்டார். சுற்றும் முற்றும் சுத்திப் பார்த்தார். சூழ்நிலையில் திருப்திப்பட்டவராய்

தனக்கு சில பொருட்கள் வாங்க வேண்டும் என்றும், அவற்றை என்னைத் தேடித்தரும்படியும் சொன்னார். சரி என்று சொல்லி ”கூகில் ஆண்டவனை” துணைக்கழைத்தேன். சரி பொருட்களை சொல் என்றேன்.

 கண்ணாடி வெட்டும் லேசர் இயந்திரம் (கையடக்கமானது)
செல்போன்களை 100 மீற்றர் தொலைவுக்கு செயலற்றதாக்கும் கருவி
அலாரம் கருவிகளை செயலற்றதாக்கும் கருவிகள்
அலாரம் நம்பர்களை பதியும் கருவி

என்றார் மிக மிக சாதாரணமாய். ஏதோ கடையில் போய் சீனி வாங்கி வா என்பது போலிருந்தது அவர் நடவடிக்கை. நானோ விறைத்துப்போய் போசித்துக் கொண்டிருந்தேன்.

மெதுவாய் சுதாரித்து.. தேடிக் கண்டுபிடித்தேன் சில பொருட்களை. இதற்கிடையில் பரஸ்பரம் விசாரித்து நண்பர்களாகியிருந்தோம். அவர் இலங்கைக்கு அருகிலுள்ள ஒரு நாட்டவராம், பெயர் ராஜாவாம் (இதை நம்ப நான் ஒன்றும் முட்டாளில்லை), நோர்வேயில் வசிக்கிறாராம், மூன்று குழந்தைகள் உண்டாம் என்றெல்லாம் சொன்னார். நான் மிகவும் அடக்கியே வாசித்தேன்.

அது சரி இப் பொருட்களைக் கொண்டு என்ன செய்வாய் என்ற போது தந்தார் விளக்கம். தனது தொழிலை புரிந்திருப்பாய் என்ற போது மறுக்காமல் தலையாட்டினேன். புன்னகைத்துக்கொண்டோம்.

கடைகளில் களவெடுக்க கண்ணாடி வெட்டும் கருவிகளை பயன்படுத்துவதாயும், அலாரம்களை செயலிழக்கவைக்க மற்றைய கருவிகளை பாவிப்பதாகவும், இப்பொருட்கள் நோர்வேயில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் என்றும், ஆனால் அவற்றை நெதர்லாந்தில் இருந்து தனது சகாக்கள் கொண்டு வருவார்கள் என்றும் சொன்னார்.

உனக்கு பயமில்லையா என்ற போது நக்கலான புன்னகையை பதிலாய்த் தந்தார். அவருக்கு தேவையான பொருட்களின் பட்டியலை ”பிரின்ட்” எடுத்துக்கொண்டார்.

அப்பாடா என்றிருந்தது அவரை விட்டகல்ந்த போது.
சற்று நேரத்தில் மீண்டும் அழைத்தார். கடைக்காரர் இப்பவும் என்னையே அனுப்பினார்.
(நம்ம விதியப் பார்த்தீர்களா.. சிரிக்காதீங், அழுதுடுவன்..ஆமா)

எங்கள் ராஜா தற்போது ஒரு வைத்தியரின் கையெழுத்தில் இருந்த மருந்து வாங்கும் பற்றுச்சீட்டை கணணியில் செய்து கொண்டிருந்தார். அவருக்கு சில எழுத்துக்களுக்கு நிறம் மாற்ற வேண்டியிருந்தால் என்னை அதைச்செய்ய காட்டித்தரும்படி கேட்டார். சொல்லிக் கொடுத்தேன்.

அதை வைத்து என்ன செய்வாய் என்ற போது, பொய் பற்றுச்சீட்டு செய்து அதன் மூலம் போதை மிகுந்த மருந்துகளை வாங்கி போதைமருந்துகளுக்கு அடிமையானவர்களுக்கு விற்பதாகவும், இதனால் சில நிமிடங்களிலேயே தான் பல ஆயிரம் குறோணர்கள் (600 குறோணர் =100$) சம்பாதிப்பார் என்றும் தனக்கு அது காணும் என்றும் தொழில் இரகசியம் விளக்கிய போது அதிர்ந்து தான் போனேன்.

உனக்கு என்ன வேண்டுமானாலும் சொல் கொண்டுவந்து மலிந்த விலைக்கு தருவேன் என்றார். 60 அங்குல புத்தாம் புதிய 3D தொலைக்காட்சிப்பெட்டி இருப்பதாயும் அதன் விலை கடையில் 6000$  என்றும் தான் அதை எனக்கு 1500 $ விலைக்கு தருவதாகவும் சொன்ன போது அன்பாய் மறுத்தேன். உனது நண்பர்களுக்கும் சொல் என்று சொன்னார். கட்டாயம் சொல்கிறேன் என்ற படியே அகன்று கொண்டேன் அவரிடமிருந்து.

அன்று இரவு தனிமையில் படுத்திருந்து போசித்த போது தான் விளங்கியது ஒஸ்லோவின் பாதாளகோஸ்டியொன்றின் முக்கியமானதோர் மனிதனையே நான் சந்தித்திருக்கிறேன் என்று. எனக்கு என்னை நினைத்தால் சிரிப்பாயிருந்தது. நான் சந்திக்கும் மனிதர்கள் எப்போது எதையோ தந்தபடியே என்னைக் கடந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். நன்மையாயும் தீமையாயும். இந்த ராஜாவை சந்தித்தது நன்‌மையா, தீ‌மையா? காலம் தான் பதில ‌சொல்ல ‌வேண்டும்.

இன்னொரு நாள் ட்ராம்ப் வண்டியில் சந்தித்துக் கொண்டோம். நான் காணாதது போல் நடித்துக் கொண்டிருந்தேன்.. ராஜாவோ அதைக் கவனிக்காமால் அருகில் வந்து நண்பரே! என்று சொல்லி கையை குலுக்கினார். அசௌகரீயமாக இருந்தாலும் நாகரீகத்துக்காய் கைகுலுக்கினேன். மெதுவாய் எனது காதுக்கருகில் கண்ணாடி வெட்டும் கருவி வந்துவிட்டது என்றார். எனது நெஞ்சு வெளியில் வந்து விழுந்தது போலிருந்தது எனக்கு. படபடப்பு அடங்கமுதல்அடுத்து வந்த தரிப்பில் இறங்க முதல, மீண்டும் சந்திப்போம் நண்பரே! என்று சொல்லி எனது பதிலை எதிர்பார்க்காமல் இறங்கியோடினார் ராஜா...

ஒரு இம்சை அரசனிடம் மாட்டிக்கொண்டிருக்கிறேன் என்பது மட்டும் புரிந்தது..

கந்தா கடம்பா காப்பாத்து......
.

3 comments:

 1. கணணியை வாங்க வந்தவர் உங்கள் கணணி அறிவையும் சேர்த்துவாங்கி விடார். உண்மியில்கண்ணி வாங்கினாரா
  சில் மனிதர்களிடம் அவதானமாய் இருங்கள்.

  ReplyDelete
 2. கல்வானி பசங்க கூட கூட்டு வைகதிங்க தல

  ReplyDelete
 3. I am reading your every post one by one for past two days I am from chennai , I dont know something take me into your writings , writing in tamil is difficult for me so only writing in english....

  i would like to expect more from you

  ReplyDelete

பின்னூட்டங்கள்