இன்றுடன் நமக்கு 45 வயதாகிறது. வாழ்வில் முக்கியமான ஒரு திருப்பத்தில் நின்று கொண்டிருக்கிறேன் போலிருக்கிறது, மனதுக்குள். நான் இப்போ இளைஞனுமில்லை, வயோதிபனுமில்லை. எனக்குப் பக்கத்தில் இளமையின் காலடித்தடங்களின் சப்தங்கள் கேட்கின்றன, ஆனால் சற்று தூரத்தே. வயோதிபத்தின் சில வாசனைகளையும் மூக்கருகே முகரக் கூடியதாகத்தானிருக்கிறது. ரெண்டுங்கொட்டான் நிலை போல..
எதிர்காலம் இப்படித்தானிருக்கும் என்று கூற முடியாவிடினும் 20, 30 களில் இருந்த தெளிவற்ற நிலைகளை கடந்திருப்பதால் ஓரளவு பாதையை ஊகிக்கவும் முடிகிறது. இருப்பினும் வாழ்வு தரப்போகும் எதிர்பாரா திருப்பங்களை, முன்பு போல இப்பவும் ஊகிக்க முடியாதிருந்தாலும் அவற்றை எதிர்கொள்ள அனுபவப்படிப்பு இருக்கின்றது என்றே நம்புகிறேன்.
ஏதொவொரு புள்ளியில் தொடங்கிய எனது வாழ்க்கை என்னும் கோடு, வேறு பலரின் வாழ்க்கைப்புள்ளிகளை தொட்டும், தொடாமலும், ஊடறுத்தும், சமாந்தரமாயும் போய்க்கொண்டேயிருக்கிறது, நன்மையாயும் தீமையாயும்.
முன்பு போல பூசல்கள்களை எதிர்கொள்ளும் முறட்டு இளமைக்கால திமிர் பெரிதே அடங்கி சமரசத்தினூடான அமைதியையே விரும்புகிறது.
சந்திரவெளிசத்தில்
மெது காற்றுடனான
அமைதியான கடல்
போல வாழவே விரும்புகிறேன். இருப்பினும் இங்கும் வாழ்க்கை, எனது வாழ்க்கையை தன்னிஸ்டத்துக்கு நிறுவிக்கொண்டேயிருக்கிறது.
நான் மட்டும் அதற்கு விதிவிலக்காயிருக்க முடியுமா என்ன? தற்போது தான் சற்று புரியத் தொடங்கியிருக்கிறது அதுவும், எனக்கு.
கடந்து போன காலங்கள், மனிதர்களையெல்லாம் நேரமுள்ள போது நினைத்துப்பார்ப்பதுண்டு. பலர் காற்றில் அழிந்து போன மணல் எழுத்துக்கள் போலவும், சிலர் கல்லில் எழுத்துப்போலவும் இருக்கிறார்கள். இன்னும் சிலர் என்னை இன்னமும் செதுக்கிக்கொண்டிருக்கிறார்கள். நன்றும் தீதும் இங்குமுண்டு.
பால்ய நட்பு மட்டும் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கேற்று, விமர்சித்து வந்து கொண்டிருக்கிறது இணைபிரியா தண்டவாளம் போன்று. எதையும், எப்பவும், எப்படியும் கொட்டித்தீர்க்க நம்பிக்கையான இடம் அதைத் தவிர வேறொன்றுமில்லை என்பேன் நான்.
புதிதாயும் சில நட்புகள் கிடைத்திருந்தாலும் அவை சாதாரண நட்பு என்னும் வார்த்தைக்கப்பால் மனதுக்கு அருகாமையில் வர நான் ஏதோ அனுமதிக்கிறேன் இல்லை போலவும் இருக்கிறது. அதற்கான காரணங்கள் என்னவென்றும் புரியவில்லை. அனுபவங்கள் தந்து போன நம்பிக்கையீனங்களாக இருக்கலாம். அவரவர் பலவீனங்கள் அவரவர்களுக்கு. வேர்த்து விறுவிறுத்து தேடியலைந்த பின், நான் முழுமையானவனில்லை என்பதும் புரிந்துதானிருக்கிறது. அதுவும் ஒரு வித ஆறுதல் தான்.
பரஸ்பர நம்பிக்கையை தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும் இந்தக் காலத்தில் என்னைக் கடந்து போகும் பலர், ஏனோ என்னுடன் தங்கள் சோகத்தை நம்பிப் பகிர்கிறார்கள். பலர் முன்பின் அறிமுகமில்லாதவர்களாக இருந்தாலும் கொட்டித்தீர்க்கிறார்கள் மனதின் கனத்தை. அவர்களின் கனங்கள் எனது கனத்தை கனமற்றதாக்குவதை உணர்கிறேன். முள்ளை முள்ளால் எடுப்பது என்பது இதைத் தானோ?
எது எப்படியோ
இன்னும்
சில
மணி நேரங்கள்,
நாட்கள்,
வாரங்கள்,
மாதங்கள்
அல்லது வருடங்கள்
நான் வாழ நேரலாம்.
அது வரை
இந்த விசரனின்
பினாத்தல்களை
சகித்தே ஆகவேண்டும்
என்று
சபிக்கப்பட்டிருக்கிறது
உங்களுக்கு.
.......
கார்டூன் போட்டுத் தந்த குமுதம் கார்டூனிஸ்ட் தம்பி பாலாவுக்கு மனம் கனிந்த நன்றிகள்.
.
வாழ்க பல்லாண்டு ...........அருமை பெருமையாய் உங்கள் அம்மா உங்களை பெற்றடுத்த்போது எத்தனை கற்பனைகளை வளர்திருபாள் 45...வது அகவை காணும் உங்களை வாழ்த்துகிறேன். இந்த வயதில் மனம் சற்று படித்திருக்கும் சிலவற்றை சகித்து கொள்ள பழக்கி இருக்கும். இன்னும் கொஞ்சக்காலம் படைத்தவனின் அழைப்புவரும் வரை உங்கள் கடமைகளை செய்துகொண்டே இருங்கள். மீண்டும்பிறந்த நாள்வாழ்த்துக்கள் .
ReplyDeleteவிசரன் அண்ணா வாழ்த்துக்கள். எங்க ஊர் 60 வயதை கடந்த கமல், ரஜனி,சரத், போன்றவர்களைதான் பாருங்களேன். கொஞசம் துள்ளலாகத்தான் எழுதுங்களேன். அமைதியான கதைகள் வேறு யாராவது கதைக்கட்டும். 45 வயதை ஏதோ 145 வயது போல் எழுதி உள்ளீர்கள். எனக்கே பயமாக உள்ளது! இளமை,முதுமை என பயம் காட்டிவிட்டீர்கள். ராகுலும் ,ஸ்டாலினும் இளஞ்சரணிக்கு தலைவராக இருக்கும் போது ......
ReplyDelete///பரஸ்பர நம்பிக்கையை தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும் இந்தக் காலத்தில் என்னைக் கடந்து போகும் பலர், ஏனோ என்னுடன் தங்கள் சோகத்தை நம்பிப் பகிர்கிறார்கள். பலர் முன்பின் அறிமுகமில்லாதவர்களாக இருந்தாலும் கொட்டித்தீர்க்கிறார்கள் மனதின் கனத்தை. அவர்களின் கனங்கள் எனது கனத்தை கனமற்றதாக்குவதை உணர்கிறேன். முள்ளை முள்ளால் எடுப்பது என்பது இதைத் தானோ? ///
ReplyDelete//அது வரை
இந்த விசரனின்
பினாத்தல்களை
சகித்தே ஆகவேண்டும்
என்று
சபிக்கப்பட்டிருக்கிறது
உங்களுக்கு.///
இந்த சபிப்பு சந்தோசமாக இருக்கிறது...
இன்னும்
ReplyDeleteசில
மணி நேரங்கள்,
நாட்கள்,
வாரங்கள்,
மாதங்கள்
அல்லது வருடங்கள்
நான் வாழ நேரலாம்.
திரும்பிப்பார்க்கவே பயமாய் இருக்கிறது.என் கடந்தகாலங்களை, நாளையை பற்றிய ஏக்கங்கள் பயங்கள் அதிகமாகவே இருக்கிறது.உங்களின் பதிவினை வாசிக்கையில்,இழந்துபோனவைகளை பற்றிய நினைவினூடாக இனி எல்லாவற்றையும் வரித்துக்கொள்ளவேண்டும் என்ற நினைவே ஏற்படுகிறது.
வாழ்த்துக்கள் ஐயா பல்லாண்டு வாழ .