உலாவித்திரியும் கதைகள்

ஆதிகாலம் தொடக்கம் மனிதர்களுக்கு கதைகள் என்றால்  ஒரு ”இது” இருக்கத் தான் செய்கிறது. ஒவ்வொருத்தரைப் பொறுத்தும் இந்தக் கதைகளின் இருப்பிடம், தன்மை,  இலக்கு, பொருள் என்பன மாறுபடுகின்றது. ஆண்களுக்கு ஒரு வித கதைகளும், பெண்களுக்கு இன்னொருவித கதைகளும் பிடிக்கும் என்றும் வாசித்திருக்கிறேன். சிலருக்கு இன்னொருவரைப் பற்றியே பேசுவது சுவராசியமாக இருக்கிறது.  அவர்களிடம் கேட்ட கதைகளை இன்னொருவர் இன்னொருவருக்கு  சொல்லும்போது அதற்கு கை, கால்களை பூட்டி விடுகிறார்கள். பூட்டப்பட்ட கையும் காலும் மெதுவாய் தவழ்ந்து, மெது நடை பயின்று பின்பு பெரு வேகம் எடுத்து உலாவித்திரியும் பலரின் வாய்களில். முதலில் சொன்னவருக்கே அக்கதை திரும்பி வரும் போது அவருக்கே புதிய கதை போல் மாறியிருக்கும்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள் தங்கள் பக்கத்து அநியாயங்களை நியாயப்படுத்துவதற்காக சில கதைகளுக்கு கை, கால் பூட்டி விடுகிறார்கள். பல இடங்களில் இதனால் நியாயம் அடிபட்டும் போய் அந்தக் கை கால் பூட்டப்பட்ட கதைகள் பலரை ரணப்படுத்தியபடியே வாழ்ந்து கொண்டிருக்கும், பல காலம். ஆனால் கதைக்கு கை கால் பூட்டியவருக்கு மட்டும் தெரியும் அவர் தொடங்கி வைத்த நியாயத்தின் நியாயம். ஆனால் அவர் மௌனித்திருப்பார்... என்றும் போல். மனிதமே இல்லாத மனிதர்கள் இவர்கள்.

இப்படித்தான் நானும் உதவியென்று போய் மாட்டிக் கொண்டு முழித்திருக்கிறேன் பல தடவைகள். இருப்பினும் தற்போது வாழ்க்கை ”பன்னாடைத்” தத்துவத்தை கற்றுத்தந்திருக்கிறது எனக்கு. அதென்ன பன்னாடைத் தத்துவம் என்று உங்களில் சிலர் கேட்கலாம். வடிகட்டல் தத்துவம் தான் அது. தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றையதை ஒரு காதால் கேட்டு மற்றக் காதால் விடுவது தான் அதன் ரகசியம்.

இதைக் கற்க கல்லூரிகள் கிடையாது வாழ்கை என்றும் கல்லூரியை விட. நானும் அண்மைய காலங்களில் தான்  இந்தக் கல்லூரின் சில பாடங்களில் ”சாதாரண” சித்தியடைந்திருக்கிறேன். இக்கல்லூரியில் சிறப்புச்சித்தியடைந்தவர்கள் இலர் என்றே கூறுகிறார்கள்.
நீங்கள் எப்படி?

.

2 comments:

  1. பூட்டப்பட்ட கையும் காலும் மெதுவாய் தவழ்ந்து, மெது நடை பயின்று பின்பு பெரு வேகம் எடுத்து உலாவித்திரியும் பலரின் வாய்களில். முதலில் சொன்னவருக்கே அக்கதை திரும்பி வரும் போது அவருக்கே புதிய கதை போல் மாறியிருக்கும்..........அருமை. நிதர்சனம்.......interesting too......வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. கை கால் வைத்து அனுப்பினால் பறுவாயில்லை. இரண்டு கைகளால் உழைத்தும் சேமிக்க முடியாத உலகில் பல கைகள் நல்லது தானே. குடும்பச் சுமைகளை இரண்டு கால்களால் சுமக்க முடியாத நாம் மனங்களில் அல்லவா சுமக்கிறோம். பலகால்களும் வசதிதான். ஆனால் கை கால்கள் மட்டுமா வைத்து அனுப்புகிறார்கள். வாய்கள் அல்லவா வைத்து அனுப்புகிறார்கள். சாப்பிட என்று எண்ணுகிறீர்களா? இல்லவே இல்லை கடிப்பதற்கையா கடிப்பதற்கு. இந்தவாய்கள் பன்னாடை யிலுள்ள கண்களையும் அல்லவா அடைத்து விடுகிறன.

    ReplyDelete

பின்னூட்டங்கள்