இன்று என்னை அதிகமாகவே பாதித்த ஒரு சம்பவம் பற்றிய கதை தான் இது.
சிறுவயது முதல் இன்று வரை நான் வழி தவறி தடுமாறும் போதெல்லாம் ஏதோ ஒன்று என்னை கைபிடித்து சரியான வழியைக் காட்டாவிட்டாலும் இங்கு தான் உன் பாதை இருக்கிறது என்று சமிக்ஞை தந்து கொண்டேயிருக்கிறது. இன்றும் அந்த சமிக்ஞை கிடைத்தது. இன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
எனது 9, 10 வயதுகளில் பதுளையில் குடும்ப நண்பர்ரொருவரின் வீட்டில் தங்கியிருந்து பதுளை சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் படித்தேன். தினமும் கிட்டத்தட்ட ஒரு மணிநேர நடைப்பயணம் பாடசாலைக்கு. காலப்போக்கில் ஒரு வண்டில் ஓட்டும் ஒருவர் நட்பாகிப்போனார்.. (அவருக்கு 30க்கு மேற்பட்ட வயது). வண்டில் பயணம் எமக்கு அவருக்கு பேச்சுத் துணை. அவர் மூலமாக பீடி பிடிக்கும் பழக்கம் வந்தது (நாம பிஞ்சில பழுத்தவுணுங்கோ). ஆனால் எப்படியோ ஒரிரு மாதங்களில் பீடிப்பழக்கமும் போய், வண்டில் பயணமும் துலைந்து போயிற்று. என்ன நடந்தது என்று ஞாபகமில்லை. இப்படித்தான் வாழ்வு எனக்கு முதன் முதலில் துலைந்திருந்த போது இது தான் உன் பாதை என்று சமிக்ஞை செய்தது.
விடலைப்பருவ காலங்களிலும் பல தடவைகள் வழி தடுமாறிய போது வாழ்வு ஆசிரியர்கள் என்னும் பெயரில் வந்து பாதை காட்டிற்று. முக்கியமாய் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி ஆசிரியர்களையும், கணிதடியுசன் தந்த ரட்ணராஜா மாஸ்டரையும், பின்பு மேல் வகுப்பில் டியுசன் தந்த சுபா ரீச்சரையும் ”வாழ்க்கை” துணைக்கழைத்து வந்து பல தடவைகள் எனக்கு வழி காட்டியிருக்கிறது.
நட்புகளுடன் இந்தியாவில் மொக்கைபோட்டுத்திரிந்த காலத்திலும் பல தடவைகள் எனது ”பாதைகள்” செப்பனிடப்பட்டிருக்கின்றன. அதற்கான முழுப் பெருமையும் அந்தக்காலத்து இயக்கங்கள், ஒரு இயக்கத்தின் தத்துவாசிரியர், போதைப்பொருள் கடத்தியவரொருவர், வயிற்றில் சுகமாகாத புண்ணுடன் அலைந்து கொண்டிருந்த ஒரு அண்ணண் ஒருவர் என பலரைச் சாரும்.
புலத்திலும் கூட பெற்ற தாய் தந்தை போல் வழி காட்டிய ஒரு நோர்வேஐிய குடும்பத்தவர்களும், நட்புக்கு இலக்கணமாய் இருந்த நோர்வேஜியர்களும், சில தோழமைகளும் நான் விழுந்த போதெல்லாம் கைதந்து எழுப்பிவிட்டு வழிகாட்டியிருக்கிறார்கள்.
ஏன், எனது குழந்தைகள் கூட அவ்வப்போது நான் விழுந்து, துலைந்து போகும் போதெல்லாம் அசரீரியாய் எழும்பு, உன்னால் முடியும், இனிமேல் இதுதான் உன்வழி என வழிகாட்டியிருக்கிறார்கள்.
இப்படி வாழ்வு என்னை கவனமாக கவனித்துக்கொண்டிருந்திருக்கிறது, இன்றுவரை.
மட்டற்ற அவதியான இந்த உலகில் அமைதியாய், நிதானமாய் எனக்கான பாதையை தேடிக்கொள்ள தினமும் முயற்சிக்கிறேன்.
வினை விதைத்தால் வினையும், தினை விதைத்தால் தினையும் கிடைக்கும் என்பதை பரிபூர்ணமாய் உணர்ந்திருக்கிறேன். எனவே வினையைக் கண்டால் என்னை நெருங்க முயற்சிக்காதே என்று சொல்லி விலகி திடமாய் நடக்கவும், தினையைக் கண்டால் கைகோர்க்கவும் கற்றுக் கொண்டிருக்கிறேன். இதனால் வாழ்வின் சூட்சுமங்கள் புரிந்திருக்கின்றன, புரிந்துகொண்டுமிருக்கின்றன.
சத்தியமாய் வாழ்வு மிக மிக அழகாயிருக்கிறது. அமைதி தருகிறது, பல நேரங்களில்.
இனி... இன்று நடந்த கதை.
காலை ஒரு வேலை நிமித்தமாக ஓரு இடம் போயிருந்தேன். வாகனத்தை போக வேண்டிய இடத்திற்கருகில் நிறுத்திய போது உடம்பெல்லாம் அசௌகரீயம் உணர்ந்தேன்.
தலை சுற்றியது
இதய படபடப்பு வந்து போனது
நாவறண்டது
கண் இருண்டது
வாகனத்தினுள் தண்ணீர் தேடினேன், கிடைக்கவில்லை. சற்று நேரம் அமைதியாய் உட்கார்ந்திருந்து சற்று சக்தி சேர்த்து வாகனத்தால் இறங்கி பணப்பையை (wallet)ஐ தேடினேன் ஏதும் வாங்கி உண்பதற்காய்.
எனக்கு நீரழிவு நோயிருப்பதையும், இன்று காலையில் ஏதுவும் சாப்பிடாததையும் நான் இங்கு குறிப்பிட வேண்டும்)
அப்போது தான் நான் அவசரத்தில் பணப்பையை (wallet) வீட்டில் மறந்துவிட்டிருந்தது தெரிய வந்தது.
வாகனத்தினுள்ளும் சில்லறை ஏதுமில்லை. பொக்கட்டை துளாவினேன், அங்கும் ஏதுமில்லை.
ஏதும் உண்ணாமல் எழுந்து நிற்க முடியாத நிலை நெருங்கிக் கொண்டிருந்தது. மெதுவாய் வாகனத்தினுள் உட்கார்ந்திருப்போம் என நினைத்து வாகனத்தினுள் ஏற முயற்சித்த போது தோளில் நட்பாய் ஒரு கை விழுந்ததை உணர்ந்து திரும்பிப் பார்த்தேன்.
எங்கோ பார்த்த முகம். யார் என்று ஞாபகம் வரவில்லை.
என்னைத் தெரிகிறதா என்றான்
ஆம், இல்லை என்று இழுத்தேன்
எனக்கு நீ கணணி திருத்தித் தந்திருக்கிறாய். அன்று என்னிடம் பணமிருக்கவில்லை. நீ பிறகு தா என்று சொல்லிப் போனாய் என்று சொல்லி தான் வாழும் புறநகர்ப்பகுதியின் பெயரையும் சொன்ன போது தான் எனக்கு ஞாபகம் வந்தது. பாக்கிஸ்தான் நாட்டு அன்பர் அவர். பல மாதங்களுக்கு முன் நடந்த சம்பவம் அது. முற்றிலும் மறந்துவிட்டிருந்தது.
கால்சட்டை பொக்கட்டினுள் கைவிட்டு காசு எடுத்து, எனது கைபிடித்து இந்தா உனது பணம், உனது தொலைபேசி இலக்கம் துலைந்து விட்டதால் தொடர்பு கொள்ள முடியவில்லை. சிரமத்துக்கு மன்னித்துக்கொள் என்று சொல்லி தன் நெஞ்சில் கைவைத்து, தலைசாய்த்து விடைபெற்றார்.
நான் வாயடைத்துப் போயிருந்தேன்.
மனம் நிரம்பியதால் களைப்பும், சோர்வும் கலைந்துபோயிருந்தது. மனம் முழுவதும் பரவசம் உணர்ந்தேன்.
சற்று ஆறி, மெதுவாய் நடந்து போய் வயிற்றை நிரப்பிக் கொண்டேன்.
இன்றைய நாள் முழுவதும் மனம் இச் சம்பவத்தையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது.
அதேவேளை நான் நடந்து கொள்ளும் விதம் பற்றி சிலர் கூறும் குற்றச்சாட்டுகள் அர்த்தமற்றவை என்பதை வாழ்க்கை எனக்கு அறிவித்த விதத்தையும், நான் போகும் பாதை சரியானது என்பது பற்றி வாழ்க்கை எனக்கு தந்த சமிக்ஞையையும் யோசித்துப்பார்த்தால் தொலைந்துபோகாத ஒரு பாதையில் நான் நடக்கத் தொடங்கியிருக்கிறேன் என்றே நினைக்கிறேன்.
இன்றைய நாளும் நல்லதே..
.
அனுபவத்துடன் கூடிய சுவையான படிப்பினை ஊட்டும் நல்ல பதிவு. அழகிய பொருத்தமான படம். முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளேன்.
ReplyDeleteநல்லது செய்தால் நல்லது கிடைக்கும் என்பது உண்மை .
ReplyDeleteஇதை உணர்ந்து எழுதி உள்ளீர்கள்,
வைத்தில் மாறா புன்னுடன் ஒருவர்
அவர்தான் நாகரெட்ணம் அண்ணன், ஆனால் தத்துவ ஆசிரியர் அவர் யார் ?
போதைப்பொருள் கடத்தியவரொருவர் இவர் யார் ?
கணிதடியுசன் தந்த ரட்ணராஜா அவர் போல் ஒரு ஆசானை நான் இது வரை சந்திக்கவில்லை ஆனால் விஞ்ஞானமடியூஷன் ஆசிரியை குறிப்பிட தவறப்பட்டுள்ளது.இந்த டீச்சர்ரின் பிரம்படியை மறக்க முடியாது . அல்லது நீங்கள் விஞ்ஞானம் படிகவில்லையா? நான் மறந்து விட்டேன்.
உங்கள் இவ் எழுத்தில் ஒரு சில பத்திரங்களை என்னக்கு தெரிந்ததாள் நான் மிட்ககூடியதக
இருந்தது இது கொம்மன்சுக்கு அப்பால் பட்டது மனிக்கவும்.ப்ளீஸ் write more
அனுபவ பகிர்வு அழகாய் இருக்கிறது நாம் செய்யும் உதவி என்றோ ஒருநாள் நமக்கு கை கொடுக்கும். பணம் மட்டும் அல்ல, நல்ல மனங் களை உள்ளங்களை) சம்பாதித்துக் கொள்வதும் வாழ்க்கை. பாராடுக்கள்.
ReplyDelete