சீக்கிரம் மறையும் துக்கம்

நேற்றிரவு ஜெயமோகனின் காடு நாவல் வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் ரெசாலம் என்பவர் ஒரு தேவாங்கு வளர்க்கிறார். ஓரு நாள் தேவாங்கை ஒரு சிறுத்தை பிடித்துக் கொண்டுபோய்விடுகிறது. ரெசாலம் உடைந்துபோய்விடுகிறர். இந்த இடத்தில் குட்டப்பன் என்னும் பாத்திரம் இப்படிச் சொல்கிறார்.  ”துக்கங்களில் சீக்கிரம் மறையும் துக்கம் மரணம்”
இவ் வசனம் என்னை நேற்றிவு பலமாய் யோசிக்கவைத்தது.

யோசித்துப் பார்த்தால் குட்டப்பன் சொன்னது உண்மை என்றே படுகிறது. மரணத்தின் வீரியம் பலமானது தான். ஆனால் அது மிக விரைவில் எம்மைக் கடந்து போய்விடுகிறது.

எனது தகப்பனார் மரணித்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன். மிஞ்சி மிஞ்சிப்போனால் ஒரிரு வாரத்தில் கவலை மறந்த விடலையாய் சுற்றத் தொடங்கியிருந்தேன் 1981 இல். எம்மை வளர்த்து ஆளாக்கிய எம்மியின் (பார்க்க தாயினும் மேலான தாய்) மரணமும் இப்படியே. இடையில் இரு நட்பூக்களையும் இழந்திருக்கிறேன். அவர்களும் ஓரிரு வா‌ரங்களில் கடந்து போய்விட்டார்கள். முள்ளிவாய்க்காலில் கரைந்து போன ஆயிரமாயிரமான உறவுகளைக் கூட கணப்பொழுதில் மறந்த மனிதக் கூட்டமல்லவா நாங்கள்.

துயரத்தில் பலவகைகள் உண்டல்லவா? நோய்களின் துயர், பிரிவுத் துயர், தோல்வியின் துயர்,  துரோகத்தின் துயர், மரணத்துயர் என்று ‌நீண்டுகொண்டேபோகும் இத்துயர்களின் பட்டியல்.

குட்டப்பன் சொன்னது போல் மரணம் மட்டுமே இத் துயரங்களில் விரைவாக எம்மை கடந்து போகிறது.

நோயின் துயர் நோயிருக்கும் வரை தொடர்கிறது...
பிரிவின் துயரும் நீண்டதே. காலம் பிரிவைத்துயரை செப்பனிடும் வரை அது தொடர்கிறது.
தோல்வியின் துயரும் இப்படியே. சில தோல்விகள் கல்லில் எழுத்து போல் வாழ்நாள்வரை தொடர்கிறது.
ஆனால் மரணத்தின் துயரை மட்டும் நாம் ஒரு சிறு ஓடையைக் கடப்பது போல் பாய்ந்து கடந்து விடுகிறோம்.

எப்படி இது சாத்தியமாகிறது?

மரணம் என்பது சர்வநிட்சயமானதொன்று, மாண்டவர் திரும்புவதில்லை என்னும் யதார்த்தமான உண்மையை நாம் மனதார ஏற்றுக்கொள்வதாலா நாம் இந்த மரணத்தை இலகுவாக கடந்து கொள்கிறோம்? இருக்கலாம்.

நான் போய்ச்சேர்ந்த பின்பும் இது தான் நடக்கப்போகிறது. ஆக.. இறந்த பின்பாவது நான் மற்றவர்களை கஸ்டப்படுத்தமாட்டேன் என்பது மட்டும் நன்கு புரிகிறது.

யாதார்த்தம் அறிவித்த குட்டப்பனுக்கு எனது நன்றிகள்.


.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்