கடவுளின் சைக்கில் திருத்திய.. நான்
நான் வசிக்கும் தொடர்மாடியில் இருந்து சுரங்கரயில் நிலையம் நோக்கி சில மாதங்களுக்கு முன் ஒரு நாள் நடந்து கொண்டிந்தேன். நோரம் மதியத்தை தொட்டுக்கொண்டிருக்க, ஏனைய நேரங்களில் அவ்விடத்தில் ஓடித்திரியும் பல நாட்டு சிறுவர்கள் எவருமில்லை. பாடசாலைக்கு போயிருப்பார்கள். ஊரே அமைதியாயிருந்தது
மெது குளிரை சுவைத்துக்கொண்டு நடக்கிறேன் புல் தரையில் தனது நீல நிறமான குட்டி சையிக்கிலை தள்ள முயற்கித்துக் கொண்டிருந்தார் இக் கதையின் கதாநாயகன். அது வரமாட்டேன் என்று அடம் பிடிக்க, இவர் முக்கி இழுக்க.. என்று சைக்கிலுடன் சண்டைபிடித்துக்கொண்டிருந்தான்.
சைக்கில் பெரிய சக்கரங்களைக் கொண்டிருந்தாலும், உதவிக்காக இரு குட்டி சக்கரங்கள் பின் சக்கரத்தின் இருபகுதியிலும் பூட்டப்பட்டிருந்தது. இதைப் பார்த்தவுடன் நம்ம கதாநாயகன் சைக்கில் ஓடப்பழகுகிறார் என்றும் புரிந்தது.
அருகில் சென்று மெதுவாய் புன்னகைத்தேன். இறுகியிருந்த முகத்தினூடாக என்னைப் பார்த்தான். பிறகு மீண்டும் வராத சைக்கிலை இழுக்கத் தொடங்கினான். புல்லின் வழுக்கலில் பின் சக்கரம் உருளாமல் இழுபடத் தொடங்கியது.
நான் பார்த்துக் கொண்டிருப்பதை அவதானித்தவன் மெதுவாய் முனுகினான் சைக்கில் உடைந்துவிட்டதென்று.
நான் உனது சைக்கிலை திருத்தித் தரவா என்றேன். ஒளி கொண்டன அவன் கண்கள். அவனையும் மீறி தலை மேலும் கீழுமாக ஆடியது.
சைக்கிலை வாங்கி சக்கரத்தை நோக்கினேன். செயின் பின்பக்க சக்கரத்தில் இருந்து கழண்டு இறுகிப்போயிருந்தது. சிறு தடியொன்று தேடினேன். என்னுடனேயே நடந்தான் தடி தேடி.
உன் பெயர் என்ன என்றேன் முகம்மட் என்றான். அவனின் முகத்திலேயே எழுதியிருந்தது அவன் சோமாலியநாட்டுக் குழந்தையென்று. எனது பெயர் என்ன என்றான் பெரியமனிதன் போல். சஞ்சயன் என்றேன். உச்சரித்துப்பார்த்தான் முடியவில்லை. அமைதியானான்.
தடி தேடி எடுத்து செயினை நெம்பி சக்கரத்தில் மாட்டினேன். சீட்டை பிடித்துத்துத் தூக்கி பெடலை காலால் அமத்தினேன். சிக்கலில்லாமல் உருண்டது.
இந்தாருங்கள் உங்கள் சைக்கில் என்றேன். அவசரமாய் ஏறிக் குந்தியவன் இருதரம் சைக்கிலை எழும்பி நின்று மிதித்தவன் மிக்க நன்றி சசே என்றான். மிக்க நன்றி என்பது புரிந்தது.. அது என்ன சசே? புரியவில்லை அது.
எனக்கு முன்னால்
பெருவேகத்தில் ஓடி
மடக்கித் திருப்பி
என்னைக் கடந்து
பின்னால் போய்
மீண்டும் என்னைக்
கடந்த போது
ர்ர்ர்...ர்ர்ர் புரும், புரும் என
சத்தம் வந்தது
அவன் வாயில்
ஆகா
கதாநாயகன்
கார் ஓடுகிறார்
என்றும் புரிந்தது.
அடுத்து வந்த நாட்களில் அவனை நான் மறந்து போயிருந்தேன். அன்றும் வழமைபோல் அவ்வழியால் பொய்கொண்டிருந்த போது என்னைத் தாணடிப் போய் நின்றது ஒரு சைக்கில். காலை நிலத்தில் ஊன்றியபடியே திரும்பி என்னைப் பார்த்து புன்னகைத்தான்.
ஹாய் முகம்மட் என்றேன்
புன்னகைத்தான் புதிதாய் மலர்ந்த ஒரு பூவாய்
சைக்கில் நன்றாக ஓடுகிறதா என்றேன்
தலை மேலும் கீழுமாய் ஆடியது. அதோடு பெரிதாயிருந்த அவன் சொக்கையும் ஆடியது.
நீ எங்கே போகிறாய் என்றான்?
வேலைக்கு என்றேன்.
நானும் வேலைக்கு போகிறேன் என்று சொல்லி எழும்பி நின்று சைக்கிலை மிதித்தான். எனக்கு முன்னால் சில தூரம் போய், சைக்கிலை திருப்பி பெருவேகமெடுத்து என்னைக் கடந்த போது bye சசே என்று நோர்வேஜிய மொழியில் கத்தினான்.
ஆகா... சசே என்பது எனது பெயர் என்பது அப்போது தான் புரிந்தது.
இன்றும் புன்னகைக்கிறான், சசே அவனைக் கடக்கும் போதெல்லாம்.
பி.கு: உதவிச்சக்கரங்கள் அவனது சைக்கிலில் இருந்து அகற்ப்பட்டிருக்கின்றன
-
Subscribe to:
Post Comments (Atom)
sasay ithuvum nallathan ullathu.
ReplyDelete