”மலை” கேட்ட கேள்வி

 நான் நோர்வேயில் வாழ்ந்து கடந்திருக்கும் 23 வருடங்களில் 18 வருடங்களை Hareid என்னும் ஒரு கிராமத்திலேயே வாழ்ந்திருந்தேன். மிகச் சிறிய கிராமம். அதிகமாய் எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும். எனது குழந்தைகளும் இங்கு தான் பிறந்து வளர்ந்தார்கள். ஆனால் கடந்த சில வருடங்களாக இந்த இடத்தை விட்டு இடம் பெயர்ந்திருக்கிறோம். இருப்பினும் குழந்தைகளுக்கு இதுவே தாய்மண் என்னுமளவுக்கு ஒன்றிப்போயிருக்கிறார்கள் இந்த கிராமத்துடன். நாங்களும் தான். தற்போது விடுமுறைக்கு வந்திருக்கிறோம் இங்கு.

நேற்று மாலையே இன்று  மலையில் சாரணர் இயக்கமும், கிறீஸ்தவ இளைஞர் சங்கமும், உள்ளூர் விளையாட்டுச்சங்கமும் சேர்ந்து மலை உச்சியொன்றில் திருப்பலிப்பூசை வைப்பதாக அறிந்து கொண்டேன்.

 நான் பிறப்பால் இந்துவாயிருந்தாலும் பால்யத்து நட்புகள் எல்லாம் இஸ்லாம், கிறீஸ்தவர்கள், பௌத்தம் என்றிருந்ததாலும், எனது கல்லூரியும் எம்மதமும் சம்மதம் என்று போதித்ததாலும் நான் எங்கு அமைதியும் ஆறுதலும் கிடைக்கிறோ அதையே அதையே கோயிலாகப் பார்க்கிறேன்.

காலையில் நண்பர்களின் குடும்பத்துடன் வாகனத்தி்ல் மலையடிவாரத்தை சென்றடைந்து நடக்கத் தொடங்கிய போது முதலில் கண்ணில் பட்டான் ஒரு பையன். எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. அருகிலிருந்த பெற்றோரை வைத்து இன்னார் என அடையாளம் கண்டு கொண்டேன். எனது மகளின் வகுப்பில் படித்த பையன் அவன். இரண்டாண்டுகளில் அடையாளம் தெரியாமல் மாறியிருந்தான். இப்படி பலரையும் காணவும் சந்திக்கவும் கிடைத்தது.

 மலை உச்சையை சென்றடையும் வரையில் சிறுவர்களும், இளைஞர்களும் பைபிள் வசனங்களை எழுதி மரங்களில் கட்டித் தொங்கவிட்டிருந்தனர். மலை ஏறும் எல்லோருக்கும் ஒரு வாக்கியம் கெடுக்கப்பட்டது. எனக்கு கிடைத்த வாக்கியம் இப்படியிருந்தது.
”தேவனே! நான் அறியாமல் செய்யும் தவறுகளையும் மன்னிப்பீராக”
என்னையறியாமலே புன்னகைத்துக்கொண்டேன். தேவனும் என்னைக் கவினிக்கிறார் போலிருக்கிறது.

மலையுச்சியை சிறியவர்கள், பெரியவர்கள், வயோதிபவர்கள் என எல்லோரும் ஏறி ‌புல் வெளியொன்றில் குந்தியிருக்க பாதிரியார் இரண்டு தடிகளினால் செய்யப்பட்ட ஒரு சிலுவையின் கீழ் நின்று பிரசங்கம் நிகழ்த்தினார். அதன் உள்ளடக்கம் உன்னைப்போல் மற்றவனையும் நேசி என்றிருந்தது.

பல சிறுவர்கள், சிறுமிகள், இளைஞர்கள் ஓடியாடி தேவையான வேலைகளைச் செய்துகொண்டிருந்தனர்.


திருப்பலி முடிந்து இறங்கிவரும் போது வெளிநாட்டு இந்துக் கோயில்களில் எங்காவது இந்த நாட்டில் பிறந்து வளர்ந்த எமது சமுதாயத்தினர் ஆர்வமாக வேலைசெய்கிறார்களா என்னும் கேள்வி மனதிலடித்தது.

நாம் எங்கோ பிழைவிடுகிறோம் என்பது மட்டும் நன்கு புரிந்தது.


பி.கு: இந்த பதிவில் உள்ள படங்கள் மலையில் நடந்த திருப்பலியின் போதும், அதன் பின்பும் எடுக்ப்பட்டவை.

.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்