பல ஆண்டுகளின் பின் இன்று என் கையில் தூங்கியது ஒரு குழந்தை. குழந்தை தூங்குவது ஒரு சாதாரண விடயம் தான், ஆனால் அக் குழந்தை தந்த பரவசமானதோர் நிலை எத்தனையோ ஆண்டுகளின் பின் இன்று மீண்டும் கிடைத்தது. குழந்தை தூங்கியின் நான் ஏதோ ஒரு ஏகாந்த உலகத்தில் இருந்தேன்.
எனது இளையமகளுக்கு 10 வயதாகிறது.. ஆக அவள் குழந்தையாக இருந்து ஏறத்தாள ஏழு, எட்டு வருடங்களாகின்றன. மணிக்கணக்காய் தூங்கியிருக்கிறாள் என்கையில். நானும் தூங்கிப்போயிருக்கிறேன் பல நாட்கள் அவளருகில். அவளுக்கு என்று ஒரு பாட்டு இயற்றியிருந்தேன்.
அப்பாட செல்லம்
அம்மாட செல்லம்
அக்காட செல்லம்
என்று ஆரம்பித்து நெருங்கிய குடும்பத்தவர்கள் அளனவரும் வந்து போவார்கள் எனது பாட்டினுள். சில நேரங்களில் நான் யாரையும் மறந்து போனால் அவர்களையும் சொல்லச் சொல்வாள் மகள்.இப்பவும் சில வேளைகளில் இப்பாட்டை பாடச்சொல்வாள்.
எனது பாட்டை ரசித்த பெருந்தன்மையான இரு உயிர்கள் எனது குழந்தைகள் மட்டுமே. எனது பாட்டின் இனிமையில் தூங்கினார்களா அல்லது சொல்லத் தெரியாமல் அபசுரத்தை தாங்கினார்களா என்பது இன்றுவரை புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது.
இன்றும் இப்படித்தான் .. நண்பரின் குழந்தை அழுது ஆர்ப்பாட்டம் பண்ண மெதுவாய்த் தூக்கி பல்கனிக்கு கொண்டுவந்து புதினம் காட்டியபடியிருக்க அழுகை மெதுவாய் நின்று போனது. விக்கி விக்கி அழுததனால் சற்று தேம்பிக்கொண்டிருந்தாள் குழந்தை. மெதுவாய் ஒரு கொட்டாவியும் வந்தது குழந்தையிடமிருந்து. குழந்தையின் முகத்தோடு முகம் வைத்து ம்ம்ம் ம்ம்ம் என்று எனது ”சுப்பர் சிங்கர்” குரலால் ஹம் பண்ணிக்கொண்டிருந்தேன். குழந்தையும் கண்ணைச் சொருக அரம்பிக்க என்னையறியாமலே நான் எனது இளையமகளுக்கு இயற்றிய பாட்டு வாயில் வந்தது. என் சொந்தங்களில் அரைவாசியைக் கடந்த போது தான் உணர்ந்தேன் இப்பாட்டை நான் படித்துக் கொண்டிருப்பதை. நான் மீண்டும் ம்ம்ம் ம்ம்ம் என்று பாடி நிறுத்திய போது குழந்தை தூங்கியிருந்தாள்.
குழந்தை தூங்குவதை ஆறுதலாக அவதானிக்க ஆரம்பித்தேன். அயர்ந்து தூங்கிய குழந்தையின் முகத்தில் அசாத்திய அழகும், ஆழ்ந்த அமைதியுமிருந்தது. இடைக்கிடை கண்களைச் சுருக்கியும், முகத்தின் அசைவுகளினாலும், அழகிய புன்னகையுடனும் பாருடனோ ஏதோ பேசிக்கொண்டிருந்தாள் தூக்கத்தில். இதைத்தான் கடவுளுடன் குழந்தை பேசுகிறது என்பதா? அப்படியாய்த்தானிருக்கும்.
பெரியவர்கள் தூங்குவதற்கும், குழந்தை தூங்குவதற்கும் இடையில் தான் எத்தனை வித்தியாசம். சிலர் தூங்குவதை பார்க்கவே முடியாது. அவ்வுளவு பயங்கரமானதாய் இருக்கும். அது அவர்கள் தூக்கத்துடன் சண்டைபிடிப்பதை போல பயங்கர மூச்சும், குறட்டையும், விகாரமான முகமாயும்,அகலத் திறந்த வாயுனும், கைகால்களை அகட்டிப்போட்டபடி அட்டகாசம் பண்ணிக்கொண்டிருப்பார்கள். இவர்களின் அருகில் நிற்கவே பயமாக இருக்கும்.
ஆனால் இக் குழந்தையின் தூக்கம் எந்தளவு அமைதியைக் கொண்டிருந்ததோ அதைவிட அதிக அமைதியைத் தந்தது எனக்கு. பார்த்துக் கொண்டேயிருந்தேன், குழந்தையை.என் மனதில் பரவசத்தின் அளவு கூடக்கொண்டே போயிற்று. தியானம் போல். மனம் பஞ்சாயிருந்தது.
இதற்காகத்தானா குழந்தையும் தெய்வமும் ஒன்று என்கிறார்கள்? அப்படியானால் அது சத்தியமான உண்மை.
இன்றைய நாளும் நல்லதே
.
அழுத்தமான உலகின் அவசரங்களுக்கிடையே....
ReplyDeleteநல்லதோர் பரவச நிலை....
குழந்தைகளை தெய்வம் என்று சொல்வது "நாம்தான் தெய்வம்" என்று நமக்கு உணர்த்துவதனாலா??...
நல்ல எழுத்துக்கள் அண்ணா...
தொடருங்கள்....
குழந்தையும் தெய்வமும் ஒன்று தான்
ReplyDeleteநல்ல பகிர்வு
விசரன் அண்ணா,
ReplyDeleteஅப்பாவும் தாலாட்டு பாடி தூங்க வைப்பாரோ.நல்ல அப்பா, வாழ்த்துக்கள்.