அழிந்து கொண்டிருந்தாலும் அவனும் போதிமரம்












நேற்றுமுன் தினம் மாலை வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கும் வழியில் ட்ராம்ப் எடுத்து எடுத்து, பின் சுரங்க ரயில் எடுப்பதற்காய் நடந்துவந்து கொண்டிருந்தேன், ஒஸ்லோ மாநகரின் முக்கிய வீதியொன்றினூடாக.

வெளியில் இரவு தனது இருப்பை உணர்த்திக் கொண்டிருந்தது. பலரும் தங்கள் தங்கள் வீடுகளை நோக்கிப் போய்க் கொண்டிருக்க. நேரம் நடுநிசியைத் தொட்டுக்கொண்டிருந்தது.

நானும் வழமைபோல் எனது விசர்த்தனமான சிந்தனைகளுடன் நடந்து சு‌ரங்க ரயில் நிலையத்தை அண்மித்து படிகளில் இறங்கிக் கொண்டிருக்கும் போது தான் கவனித்தேன் அவனை.

முழங்காளிட்டு முதுகு வளைத்து தலையை மேல் படியொன்றில் வைத்தபடி சரிந்திருந்தான். எனது கண்கள் இதைக் கவனித்ததே தவிர மனம் அதில் லயிக்காதனால் அவனைக் கடந்து சில படடிகள் இறங்கிய போது தான் மனதில் ஏதோ உறைக்க, இறங்கிய படிகளை மீண்டும் ஏறி அருகில் போய்

உதவி தேவையா என்றேன். 
பதில் இல்லை.
ஏதொ முனுகினான்.
முதுகு தொட்டு குனிந்து உதவி வேணுமா என்றேன் மீண்டும்
பலர் ஒரு மாதிரியாய் பார்த்தடி கடந்து போயினர்.

மெதுவாய் தலையை உயர்த்தி
(f)பித்த (பு.... வார்த்தை)
(h)ஹெல்வத்த (நரகம் .. இதுவும் இங்கு தூஷண வார்த்தை)
இன்னும் பல துஷணத்தில் திட்டினான்.
(யாரை என்று கேக்காதீர்கள்... அழுதுடுவன்)

அவனின்
கண்கள் நிலையில்லாமல் ஆடிக்கொண்டிருந்தன
கைகால்கள் நடுங்கின
நிற்கவே (குந்தியிருக்கவே) முடியாதிருந்தது அவனால்

நடுங்கிய கைகளினால்
கால்ச்டை பையினுள் இருந்து
கஸ்டப்பட்டு
வெளியில்  எடுத்தான்
ஒரு அலுமீனியப் பேப்பரை
அதன்மேல் ஏதோ கொட்டி
சூடாக்கி
ஊசி எடுத்து
அதை உறுஞ்சி
நடுங்கும் கைகையை
கயிறு ஒன்றினால்
இறுகக்கட்டி
புடைத்ததெழுந்த நரம்பில்
இரத்தம் சிந்திக் கொண்டிருக்க
குத்தி
உள் அனுப்பினான்

கண்கள் சொருகி
கனவுலகில்
வாழத்தொடங்கியிருந்தான்
நான்
படிகளில்
இறங்கிக் கொண்டிருந்த போது.

யார் பெற்ற பிள்ளையோ?
யாரின் காதலனோ?
யாரின் கணவனோ?
யாரின் தகப்பனோ?

வீடுவந்து
குளித்து
படுக்கையில் விழுந்து
நினைவிழக்கும் வரை
அவனே
நிறைத்திருந்தான்
என் மனதை

அவனும் எனக்கு போதிமரம்.

இன்றைய நாளும் நல்லதே


.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்