சிலுவைராஜ் சரித்திம்

வைகாசி மாதம் 25ம் திகதி என்று நினைக்கிறேன், ஒஸ்லோ கடையொன்றில் வாசிப்புப்பசிக்கு உணவு தேடி அலைந்து கொண்டிருந்தேன். கண்ணில் பட்டது சிலுவைராஜ் சரித்திம். பல தடவைகள் விலை குறைக்கப்பட்டிருந்தாலும் விற்ப்படாமல் இருந்தது. போட்டிருந்த விலையில் 50 வீதமான கழிவில் தந்தார்கள்.

வாங்கிக் கொண்டு வரும் போதே நிலக்கீழ் சுரங்க ரயிலில் வாசிக்க ஆரம்பித்திருந்தேன். கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களாக என்னுடன் நடந்து வந்த உற்ற நண்பனெருவனை இன்னும் சில நாட்களில் இழந்து விடுவேன் போலிருக்கிறது. ஆம், இன்னும் மிகச் சில பக்கங்களே மிச்சமிருக்கின்றன. முடிந்துவிடுமே என்று பயமாக இருக்கிறது எடுத்து வாசிக்க. 573 பக்கங்களைக் கொண்ட இந்த புத்தகத்தினூடாக என் மனதுடன் மிக நெருங்கியிருக்கிறான் சிலுவை.

அதற்குக் காரணம் ராஜ் கொளதமனின் எளிமையான எழுத்தும் சம்பவங்களும். அவர் சிலுவையின் கதையை சொல்லிக்கொண்டிருக்க நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன் என்பது போல இருக்கிறது அவரின் எழுத்து நடை. இப்படியானதோர் சுயசரிதமொன்றை நான் வாசிப்பது இதுவே முதல்த்தடவை. இப்புத்தகம் என்னை முழுவதுமாக ஆக்கிரமித்திருக்கிறது. மனிதரை ஒருதரமாவது சந்திக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டிருக்கிறது. இப் புத்தகத்தின் தொடர்ச்சியான ”காலச்சுமை",  "லண்டனிலிருந்து சிலுவைராஜ்" ஆகிய புத்தகங்களையும் தேடிக் கொண்டிருக்கிறேன்.

சிலுவையின் கதையில் இருக்கும் ”சாதிய அமைப்பின்” அநியாயங்கள், சோகங்கள், வலிகள் எல்லாம் எனக்குப் புதியவை. சத்தியமாக.

சிலுவையின் பெயரைப் போல அவனும் கத்தோலிக்க கிறீஸ்தவன். ஆனால் ”பறையர்” என்னும் சாதியைச் சேர்ந்தவன். அந்த சாதியில் எனதூரிலும் மனிதர்கள் இருந்தனர்.
ஆனால் சிலுவையைப் போல் என்னூரில் வாழ்ந்தவர்களும் கஸ்டப்பட்டிருப்பார்களா என்ற கேள்விக்கு என்னால் பதில் தேடிக் கொள்ள முடியாதிருக்கிறது. மனது ”இல்லை” என்றே அந்தப் பதில் இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறது.

எனக்கு சிலுவை பட்ட வலிகளை கற்றுத் தராத எனது புனிதப் பூமிக்கு முழந்தாளிட்ட கோடி கோடி வணக்கங்கள்.

சிலுவையின் தாய், தந்தை, சகோதரங்கள், அவனின் பாட்டி என்று  எல்லோரும் எனது உறவினர்களாகிவிட்டிருக்கிறார்கள். சிலுவையின் சரித்திரத்துக்கும் எனக்கும் பல இடங்களில் ஒற்றுமையிருக்கிறது. முக்கியமாய் அவன் தந்தையிடம் அடி வாங்கும் இடங்களும், அவனின் பாடசாலை விடுதி வாழ்க்கையும், கடந்து போன வயதுக்கோளாறுகளையும், அவனின் குசும்பு, நக்கலையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

யுதார்த்தமான அவனது சிந்தனையும், குசும்புகளும், சமுதாயத்தை சாடும் ரௌத்தரமும் என்னை மிகவும் கவர்ந்தன. ஒரு உதாரண மனிதனாயிருந்திருப்பான் சிலுவை என்பது எனது கருத்து.
 
ஒரு வேதனையை சிலுவை கடந்தால் அடுத்த வேதனை அவனை மாலை மரியாதைகளுடன் வரவேற்க காத்திருந்திருக்கிறது. அந்த மாலையையும், மரியாதையையும் வாங்கி்க் கொண்டு அதையும் கடந்து வரும் அவனின் மனத்துணிவும் ,அலட்சியமும் எனக்கு எதையே கற்றுத் தந்திருக்கிறது. வாழ்வில் சிலவற்றை அலட்சியம் செய்யவும் கற்றுக்கொள் என்று எனக்கு போதித்திருக்கிறான் சிலுவை.. நன்றி நணபா.

கீறீஸ்தவர்களின வாழ்க்கை, மதம், அவர்களின் பங்குக்கோயில் என்பன அவர்களின் வாழ்க்கையில் எந்தளவு பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதையும் சிலுவை மிக விளக்கமாகச் சொல்லித் தந்திருக்கிறான் எனக்கு.

மாம்பழம் களவெடுக்கப்போகும் சிலுவை,
நண்பர்களுடன் குளிக்கப் போகும் சிலுவை,
பாம்புபிடித்து கொல்லும் சிலுவை,
தியட்டருக்கு போகும் சிலுவை,
எம்.ஜி.ஆர் ரசிகன் சிலுவை
நண்பர்களுடன் ஒரு அறையில் குடியிருக்கும் சிலுவை
என்று எமக்குள் பலத்த ஒற்றுமையிருக்கிறது. ஆனால் சிலுவை மாதிரி தவளை பிடித்து நான் வெட்டிப்பார்த்ததில்லை எனது பால்யத்தில்.

சிலுவையின் காதல் தோல்விகள் மனதை சற்று வேதனைப்படுத்தினாலும் இனிவரும் பக்கங்களில், தொடர் புத்தகங்களில் அவனின் மிகுதி வாழ்க்கையை வாசிக்கும் போது  அவற்றையும் பகிர்ந்து கொள்வான் என்ற நம்பிக்கையிருக்கிறது. 

சிலுவையைப் பற்றி இன்னும் எவ்வளவோ எழுதலாம். இருப்பினும் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

வாசிப்பில் ஆர்வமுள்ள வாசகர்களே! இப் புத்தகத்தை மறக்காமல் வாசியுங்கள். அணு அணுவாய் ரசிப்பீர்கள் என்பதை மட்டும் என்னால்நிட்சயமபய் சொல்லமுடியும்.

ராஜ் கொளதமன் அய்யாவுக்கு!
நாம் கட்டாயம் சந்திப்போம்.

திருப்பித் தருவதாக உறுதியளித்தால் இப் புத்தகம் இரவல் வழங்கப்படும்.


இவ்வண்ணம்
சிலுவையின் நட்பில் பெருமை கொள்ளும்
விசரன்


.

1 comment:

பின்னூட்டங்கள்