மரணமும் நானும்

 தமிழ்மண நட்சத்திரவாரத்திற்காக (ஜூலை 19 - 26. 2010) எழுதப்பட்ட ஆக்கம் இது
................................................................................................
தினமும் கடந்து போகும் கடைத்தெரு தான் அது. இந்த இடத்தை பல தடவைகள் கடந்து போயிருக்க்கிறேன். இருப்பினும் இன்றைய நாளைப் போல் அவ்விடம் என்னைக் கவர்ந்ததில்லை. மாலையிருட்டு நேரம், கடும் பனிக்குளிரில் வாகனத்தில் அந்த இடத்தை கடந்து கொண்டு போயிருந்த போது தான் பிரகசமான வெளிச்சத்தில் அக் கடையில் வைத்திருந்த கடும் கறுப்பு நிறத்தில், வெள்ளி நிறத்திலான கைப்பிடி போட்டு,  பட்டுப் போன்ற வெள்ளைத் துணியில் அலங்காரம் செய்யப்பட்டு மினுங்கிக் கொண்டிருந்தது அந்த சவப்பெட்டி. சில கணங்களில் கண்ணில் இருந்து அந்தக் கடை மறைந்து விட்டாலும் சிந்தனையில் இருந்து மறையவில்லை. மரணம் என்னைக் குடைய ஆரம்பித்தது.

அது ஒரு சவப்பெட்டிக் கடை. இந்தக் கடையையும்  இடத்தையும் பல தடவைகள் கடந்து போயிருக்க்கிறேன். ஏதுமொரு சிந்தனையும் இன்றி அதைப் பார்த்தும் சென்றிருக்கிறேன். இருப்பினும் இன்றைய நாளைப் போல் அந்தச் சவப்பெட்டி என்னைக் கவர்ந்ததில்லை.
பிரகசமான வெளிச்சத்தில் அக் கடையில் கடும் கறுப்பு நிறத்தில், வெள்ளி நிறத்தினாலான கைப்பிடி போட்டு,  பட்டுப் போன்ற வெள்ளைத் துணியினால் உட்புறம் அலங்காரம் செய்யப்பட்டு அழகாக மினுங்கிக் கொண்டிருந்தது அந்த சவப்பெட்டி. ஆனால் யாரொருவரையும் அக்கடையில் காணவில்லை.வெள்ளை நிற கோன் வடிவிலான பிளாஸ்டிக் பூக்கள் அழகாக அருகில் வைக்கப் பட்டிருந்தது. திடீரென்று  "ஒவ்வொருவரிடமிருந்தும் கண்ணுக்குப் புலனாகாத பாதை ஒன்று சுடுகாட்டை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது" என்று ஒருவர் சொன்ன ஞாபகம் வந்தது. அந்தக் கடையைத் தாண்டி விட்ட போதும் அந்தத் திகில் நெஞ்சோடு உறைந்து விட்டது.
மரணத்தில் தன் வாழ்க்கையை நிறுவிக் கொண்ட கடை அது!

நானும் ஒரு நாள் இப்படியானதோர் பெட்டியில் படுத்திருப்பேன் என்னும் எண்ணமே மனதுக்குள் ஒரு விதமாக பாரமான பயத்தைத் தந்தது. பட்டு வேட்டி, சேட், உத்தரியம் போட்டு, வீபூது பூசி, சந்தனப் பொட்டு வைத்து அதற்குள் நான் மாப்பிள்ளை போல் படுத்திருக்கக் கூடுமோ? யார் யார் உண்மையில் எனது பிரிவிற்காக அழுவார்கள்? மனம் பட்டியலிட்டது... மிகச் சிலரே ஞாபகத்தில் வந்தார்கள். யார் யார் ...அப்பாடா சனியன் தெலைந்தது என்று நிம்மதியாய் மனதுக்குள் சிரித்து, வெளியில் அழுவார்கள் எனற பட்டியலிலும் சிலர் வந்து போயினர். கடமைக்காக வரும் சிலரும் வந்து பார்த்து விட்டுப் போவார்கள்.

எல்லோரும் கொஞ்ச நாட்களில் மறந்தும் போவார்கள்.

நான் எப்படி இறப்பேன்.....?
நித்திரையிலேயே அப்படியே?
விமானம் விழுந்து நொருங்கி?
நடந்து போகும் போது திடீர் என்று?
இன்டர் நெட்டில் எதையோவது பார்த்துக்கொண்டிருக்கும் போது?
பாத்ரூமில் வழுக்கி விழுந்து?
புற்று நோயால்?
மட்டக்களப்பில் நிலக்கண்ணி வெடியில் அம்பிட்டு?
யாராவது என்னை மண்டையில போட்டு?
நோய் வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்து?

இந்த நினைப்பே பயமாயிருக்கிறது. மரணம் நிகழப்போகிறது என்று தெரியும் போது எப்படி இருக்கும்? பயமாய் இருக்குமோ? தப்ப ஏலாது என்று தெரிந்த பின்பும் தப்ப வழிதேடுமோ? சாமிக்கு, நான் தப்பினால் .......என்று நேர்த்திகடன் வைப்‌பேனோ?

திடீர் என்று மரணத்துக்கு நாள் குறிக்கப்பட்டு வாழ்பவர்கள் ஞாபகத்தில் வந்தார்கள்.. ஐயோ! எவ்வளவு பயங்கரமான வாழ்வு அது. மரணத்தை வரவேற்கும் மனம் எவ்வளவு பண்பட்டதாய் இருக்க வேண்டும்? அவர்கள் எதைப்பற்றி சிந்திப்பார்கள்? மரணத்தைப் பற்றியா அல்லது வாழும் காலத்தைப்பற்றியா? நீ இந்த நிமிடத்தில் மரணமடைவாய் என்று கூறப்பட்டவன் நிலை எப்படியிருக்கும்? தினம் தினம் பயந்து பயந்து மரணித்துக்கொண்டிருப்பானா? அல்லது மரணத்தை மறந்து உங்களையும், என்னையும் போல ‌காலத்தை ஓட்டிக்கொண்டிருப்பானா?

நான் மரணித்துத் தான் இது தான் மரணம் என்று அறிய வேண்டியதில்லை. இன்று வரை மரணம் தன்னை எனக்கு  பல விதத்தில் அடையாளப்படுத்தியிருக்கிறது, இனி மேலும் அடையாளப் படுத்தும் முன்னரை விட அதிகமாக.

முதல் முறை அது எனக்கு அறிமுகமாகிய போது அது பிண நாற்றம் அடித்துக்கொண்டிருந்தது. .அடி வயிற்றை பிசைந்து வாந்தி வந்தது. என்னால் அங்கு நிற்க முடியவில்லை ஆம் ஒரு மரணத்தை புதினம் பார்க்கப் போயிருந்தேன். இறந்து 3 நாட்களாகியும் யாருக்காகவோ காத்துக் கொண்டிருந்தது அந்த உயிரற்ற உடலம். ஏதோ ஒரு வித பதார்த்தம் சொட்டு சொட்டாய் கிடத்தப் பட்டிருந்த வாங்குக்குக்  கீழே வழிந்துகொண்டிருந்தது. ஒருவர் ஒரு கையால் வேப்பமிலையால் கொசுக்களை கலைத்துக் கொண்டு மறுகையால் கைலேஞ்சியை மூக்கில் வைத்திருந்தார்.எக்கச்சக்கமான ஊதுபத்திகள் புகைந்து கொண்டிருந்தன. ஊதுபத்திகளையும் தாண்டி பிணம் நாறிக் கொண்டிருந்தது. பிணத்தை தூக்குபவர்கள் வேலிக்குள் மறைந்து எதையோ ஊத்தி ஊத்தி குடித்துக் கொண்டிருந்தார்கள். வர வேண்டியவர் வந்தாரா இல்லையா என்பது எனது ஞாபகத்தில் இல்லை. ஆனால் மாலை நேரம் மட்ட ரகமான பெட்டி ஒன்றினுள் அதனை வைத்து அவசர அவசரமாகத் தூக்கினார்கள்...சுடலை வரை மணத்துக்கொண்டு வந்தார் மரணித்தவர். செத்தாப்பிறகும் கஸ்டப்படுத்துறான் என்று யாரோ சொன்னதும் கூடக்  கேட்டது. முழு ஊர்வலமும் மூக்கை பொத்திக் கொண்டு நடந்தது.

மறு முறை மரணம் என்னுடன் தன்னை சின்ன பெரியம்மா மூலமாக அறிமுகப்படுத்திக் கொண்டது. மட்டகளப்பில் இருந்து யாழ்ப்பாணம் போய் வீட்டு வாசலை அடைந்ததும் அக்கா என்று கொண்டு அம்மா ஆரம்பிக்க... சோதி அன்டி என்று பெரியம்மாவின் மகளும் (அக்கா) சேர, வந்திருந்த பல பெண்டுகள் அவசர அவசரமாய் அம்மாவுடனும், அக்காவுடனும் சேர்ந்து கொண்டார்கள். நான் பெரியம்மாவின் மகனைத்  தேடினேன். அண்ணன் மாதிரியாக இருந்த நண்பன் அவன். சோகமாய் பெரியப்பா அருகில் நின்றிருந்தான். அம்மா வந்து பெரியம்மாவினருகே அழைத்துப் போனா. தன்னைச் சுற்றி நடக்கும் எதையும் சட்டைசெய்யாமல் நிம்மதியாய் படுத்திருந்தார் பெரியம்மா. தொட்டுப்பார்‌த்தேன் குளிர்ந்து போயிருந்தார்.
இரவு நேரம் ஓரு கூட்டம் சீட்டுக் கட்டுடன் குந்தியிருக்க, இன்னொரு கூட்டம் வெத்திலை தட்டுடன் குந்தியிருந்தது. பெரியப்பா மட்டும் ஓடியாடிக் கொண்டிருந்தார். நானும் அண்ணரும் பிளேன் டி பரிமாறிய பின் பச்சைக் கோடு போட்ட நெல்லுச்சாக்கின் மேல் படுத்துக் கொண்டோம். அம்மா பெரியம்மாவுக்கு பக்கத்தில் தூங்கி வழிந்துகொண்டிருந்தா. காலையில் அண்ணணை குளிப்பாட்டி முரண்டு பிடிக்கப் பிடிக்க மொட்டையடித்தார்கள். பார்க்க சிரிப்பாயும், பாவமாயும் இருந்தது. வழமையாய் நடக்கும் எல்லாம் முடிந்து வீடு வந்த அண்ணனை மறு தினம் சாம்பல் அள்ள சாமம் போல அழைத்துப் போனார்கள். வரும் போது அழுதபடி வந்தான்.பக்கத்தில் வந்து படுத்துக் கொண்டான்.  அடுத்து வந்த ஒரு கிழமையில் வீடு வழமைக்கு மாறியிருக்க பெரியம்மா மட்டும் படத்தில் சிரித்துக் கொண்டிருந்தார்.

மரணம் தன்னை அறிமுகப்படுத்திய இரண்டு முறையும் அது என்னை பெரிதாய் பாதிக்கவில்லை. ஆனால் மூன்றாம் முறை சற்று அதிகமாகவே தனது வீரியத்தை காட்டிற்று. அப்பா மாரடைப்பினால் தனது இறுதி நிமிடங்களை கடந்து கொண்டிருந்த தருணம் அது. அப்போது தான் நான் ஆஸ்பத்திரியிலிருந்த அப்பாவின் கட்டிலை வந்தடைந்திருந்தேன். மூச்சை கஸ்டப்பட்டு உள் இழுத்துக் கொண்டிருந்தார். நெஞ்சு கட்டிலை விட்டு மேலெழும்பி, மேலெழும்பி காற்றை தேடிக் கொண்டிருந்தது. அம்மா கண்ணீர் வழிய என்னை அணைத்துக் கொண்டிருந்தார். சற்று நேரத்தில் வைத்தியர் வந்து நெஞ்சில் அடித்தார், அமத்தினார். ஆனால் அப்பாவோ விடைபெற்றிருந்தார்.
அப்பாவுக்கும் எனக்குமான உறவு அப்படி ஒன்றும் சொல்லி கதைக்க கூடிய அளவில் இருந்ததில்லை. அப்பா இறந்து பல மணி நேரங்கள் நான் அழவில்லை. அப்பா வீட்டில் பட்டு வேட்டி சகிதம் புது மாப்பிள்ளையைப் போல் படுத்திருந்தார். வீடு திருவிழா மாதிரி பந்தல் போட்டு களை கட்டியிருந்தது. என்னை ஏனோ செத்தவீட்டுக்கு வந்திருந்த ”அவள்”  பாதித்துக் கொண்டிருந்தாள்.அப்பாவின் தாயார் தனது மகனுக்கு பக்கத்தில் கதிரை போட்டு உட்கார்ந்து அப்பாவின் கையை தடவிக் கொண்டிருந்தார். அடுத்த நாள் நான் தான் கதாநாயகன். தலையை வழிக்க மறுத்தேன். அதிசயமாய் ஒப்புக் கொண்டார்கள். ஐயர் கையில் தர்ப்பை போட்டு பக்கத்தில் இருத்திக் கொண்டார்.
முதல் முறையாகக் கண்ணீர் வழியத் தொடங்கியது அப்போது தான். பந்தம் ஒன்று போனதன் வலி கண்கள் வழியாக வழிந்தது. யார் யாரோ வந்திருக்க பொற்சுண்ணம் இடித்து, முட்டி தூக்கி, சுடுகாடு வரை நடந்து, முட்டி உடைத்து, கொள்ளி வைத்து திரும்பிப் பார்க்காமல் வீடு வந்து சேர்ந்த போது தான் அது இன்னும் கடுமையாக வலித்தது. பெரும் கேவலாகத் தொடங்கிய அழுகை அம்மாவைக் கண்டதும் பெரும் குரலெடுத்தது.அன்று அம்மாவின் கையுக்குள் அடங்கிக் கொள்ளும் வரை அழுது தீர்த்தேன். அடுத்து வந்த பல இரவுகளில் அப்பா கனவில் என்னை அடித்துக் கொண்டிருந்தார். இப்போது அவர் கனவில் வருவதுமில்லை; அடிப்பதுமில்லை.

அடுத்தடுத்த முறைகளில் மரணம் லைட் போஸ்ட் இல் சமூக விரோதி என்றும்; துரோகி என்றும் தன்னை காட்டிக்கொண்டிருந்தது. இது எத்தகைய ஒரு தண்டனை! அந்த மனிதனின் இறுதிக் கணங்கள் எத்தகைய உணர்வு நிறைந்ததாக இருந்திருக்கும்! சரியோ தவறோ இறந்தபின்னும் மற்றவர்களால் தீர்மானிக்கப் பட்ட அவமானத்தை தனக்கும் தன் பந்தங்களுக்கும் விட்டுச் செல்லும் மனம் எத்தகைய துன்பம் நிறைந்ததாக இருந்திருக்கும்! கடசிக் கணங்களில் அது எதை நினைத்திருக்கும்? பிள்ளைகளை? கணவனை அல்லது மனைவியை? தன் பக்கக் குற்றத்தை அல்லது நியாயத்தை? இல்லையென்றால் புதினம் பார்க்க வந்தவர்களைக் காப்பாற்ற மாட்டீர்களா என்ற பரிதாப கண்களோடு பார்த்திருந்திருக்குமோ? துன்பம் முழுவதையும் முகத்தில் ஏற்றித் தன் உயிரைக் கெஞ்சியிருக்குமோ? தன் குடும்பம் இனி என்னவாகும் என்ற எண்ணமொன்றே மனம் முழுக்க வியாபித்திருந்திருக்குமோ? சில நாட்கள் அது மனதில் நிழலாடிய வண்னமே இருந்தது.

பிறிதொரு நாளில் மரணங்களை  உடல் சல்லடையாக்கப்பட்டு, இரத்தம் வழிய அநாதரவாய் ரோட்டுக்கரையில் கிடக்கவும் கண்டிருக்கிறேன். அப்போது மரணத்தை எல்லொரும் முண்டியடித்துக் கொண்டு புதினம் பார்த்தார்கள். நானும் தான். சொல்லிக் கொள்ளவே அவகாசம் இல்லாமல் விடை பெற்றுக் கொண்டவர்கள் அவர்கள். ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றே தோன்றுகிறது.

பின்பொரு நாள் மட்டக்களப்பு பஸ் ஸ்டான்ட் இல் வாழ்ந்திருந்த ஒரு சித்தசுவாதீனமற்ற ஒருவர் இறந்த போது, குப்பை தூக்கும் வண்டியில் கொண்டு போய் சுடலையில் போட்டார்கள் என்று சொல்லக்கேட்டிருக்கிறேன். தூக்கிப் போடக் கூட ஆளில்லாமல் போகும் நிலை எவ்வளவு பரிதாபமானது!
மரணம், எப்படிப் பார்த்தாலும் தனது வீரியத்தை ஏதோவொரு விதத்தில் ஒவ்வொரு முறையும் காட்டிக் கொண்டே தான்  இருக்கிறது.
சில முக்கியமற்றும்; சில புறக்கணிக்கப் பட்டும்; சில ஆ அப்படியா என்றபடியும்; அது தன்னைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.சில வியப்புக் குறிகளுடனும்,சில  கேள்விக்குறிகளுடனும் பல கமாக்களுடனும், இன்னும் சில மேற்கோட்குறிகளுடனும் நம்மை அது கடந்து போய்க் கொண்டிருக்கிறது. நமக்கும் ஒருநாள் அது நேரப்போகிறது என்பதை நம்மோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளாதவரை நமக்கு அது புதினமாகவே இருக்கிறது.
இதன் பின் பல காலம் மரணம் என்னிடம் வரவேயில்லை.
திடீர் என இரு முறை மரணம் நட்பை பறித்துக் கொண்டு சென்றது. மாலை மகிழ்ச்சியோடு என்னுடன் உரையாடிக்கொண்டிருந்த புது மாப்பிள்ளையான நண்பன் காலையில் விடைபெற்றிருந்தான். அவன் மனைவியின் கதறல் இன்று வரை காதில் ஒலிக்கிறது. அவவின் வாழ்வுக்கான கதறலும் அதற்குள் அடங்கியிருக்குமோ என்று இப்போது தோன்றுகிறது.
கண்ணீர் விட்டுத்தான் பிரிவின் துயர் அடங்கும் என்றில்லை. எனக்கு தனிமையும், அமைதியும், சிந்தனையும் கூட பிரிவின் துயரை ஆற்றித் தந்திருக்கிறது.

'ஆளை விடு நான் சாகப்போகிறேன்' என்று அடம்பிடித்துப் போய் சேர்ந்த நண்பனையும் பெற்றிருந்தேன். குடி, தனிமை, நோய் என தானே வரித்துக்கொண்ட பாவங்களுடன் வாழ்ந்த பாவப்பட்ட ஜீவன் அது. வொட்கா கொம்பனிக்காரன் அவனுக்கு சிலை வைத்திருந்திருக்க வேண்டும். செத்தவீட்டை நண்பர்களின் உதவியோடு நடத்தியும், அவனைப் பற்றி எழுதியும் அந்த வேதனையை கடந்து கொண்டேன்.

பெற்ற மகனை திடீர் நோய்க்கு பறி கொடுத்த ஒரு மச்சாளின் துயரம் பார்த்து குழந்தையின் மரணத்திற்குள் இருக்கும் வீரியம் அறிந்து கொண்டேன். ‌வேதனை என்னவென்றல் உயிருடன் இருக்கும் பெற்றோர்களும் அவர்களின் குழந்தையுடன் மரணிக்காமல் மரணித்துப் போவது தான்.அது ஒரு பெருந்துயர்!

எம்முடன் ஏறத்தாள 40 வருடங்கள் வாழ்ந்திருந்தார் ”எம்மி”  என்று எம்மால் செல்மாக அழைக்கப்பட்ட சிறியானி புஞ்சி நோனா என்னும் சிங்களப் பெண். எம்மைப் பொறுத்தவரை அவர் எமக்கு தாயிலும் மேலான தாய்.  எமக்காகவே வாழ்திருந்தவர். அவரின் இறுதி மூச்சு எனது மடியில் தான் போனது. எத்தனையோ நாட்கள் அவரின் தாலாட்டுடன் அவரின் மடியில் உறங்கியிருக்கிறேன், ஆனால் அவரோ தனது இறுதி உறக்கத்தை என் மடியில்  உறங்கி என்னை ஆறுதல் படுத்தினார்.  இறுதி நிகழ்வின் போது யாரும் ஏதும் கூறவிரும்புகிறீர்களா என பெரியவர்கள் கேட்ட போது அதுவும் நான் எனது 37வது வயதில் குழந்தைபோல் அழுதபடியே எல்லோருக்கும் ஒரு தாய் எமக்கு மட்டும் இ‌ரண்டு தாய்கள் என்று சொல்லி முடிக்க முதலே உடைந்து அழுதேன். சில மரணங்கள் இப்படித்தான். யாதொரு காரணமும் இன்றி ஏனோ வாழ்க்கையில் வந்து, அன்பினைக் காட்டி, பின் மறைந்து போகும். எம்மி எமக்கு அப்படி வாய்த்தவர்.

மரணம் சுவராசியமாயும் நடக்கும் என்று எங்கோ வாசித்தேன். ஆம்,  காலையில் வீட்டு ‌திண்ணையில் உட்கார்ந்து செய்தித்தாள் வாசித்தவர் ரோட்டால் போன லொறி டயர் வெடித்த சத்தத்தில் மாரடைத்து மரணித்தாராம். கேட்க சுவராசியமாய்த்தான் இருக்கிறது. அவருக்கு விதி லொரி டயர் வடிவத்தில் வந்திருக்கிறது.
நடைப் பிணங்களை கண்டிருக்கிறீர்களா? இறந்தும் நடந்து திரிபவர்கள். அவர்களை நான் கண்டிருக்கிறேன்.  ஊரிலேயே பெரிய மனிதர்களில் ஒருவர் அவருக்கு 5 ஆண் பிள்ளைகள். அதிலொருவன் என் நண்பன்.பெயர் பாஸ்கரன். பேக்கரி வைத்திருந்தாரன் அவன். ஆமி சுட்டு ஒருவன், ஆமி பிடித்து ஒருவன், போராளியாய் ஒருவன், சிறையில் ஒருவன், என ஒவ்‌லொருவராய் மறைந்து போக மனிதர் ஆடித் தான் போனார். சற்றே திமிர் கலந்த நடை ஆட்டம் கண்டது, மற்றவர்களுடனான பேச்சு குறைந்தது, நாளடைவில் தேவை என்றால் மட்டுமே பேசினார். ஏறத்தாள 20 வருடங்களின் பின் அவரைச் எனக்குச் சந்திக்கக் கிடைத்தது. மௌனமே உருவாய் கடையின் கல்லாவில் மனிதர் அமர்ந்திருந்தார். ஆனால் "அவர்"  அங்கிருக்கவில்லை என்பது தெளிவாகவே தெரிந்தது. என்னை அறிமுகப்படுத்தி 'ஞாபகம் இருக்கா ஐயா' என்றேன். உற்று உற்றுப் பார்த்தார்.. இல்லை என்று தலையை குறுக்கும் நெடுக்குமாக ஆட்டினார்.  பாஸ்கரனின் நண்பன் என்றேன்.... சற்றே உற்றுப் பார்த்து வாயைக் குறுக்காக விரித்தார்.பற்கள் தெரிந்தன.அது சிரிப்பென்று புரிந்து கொண்டேன்.ஆனால் அதில் உயிர் இருக்கவில்லை. உயிரற்ற உடல் ஒன்று சிரித்தது என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது எனக்கு.

இடைக்கிடை மரணம் மகா பசி கொள்ளும். அப்போது அதன் வீரியம் தனி ‌மனிதனை மட்டுமல்ல ஐம் பூதங்கள் உட்பட முழு உலகத்தையும் ஆட்டிப் போடும். சுனாமி என்னும் ஆழிப்பேரலை, நில நடுக்கங்கள்,பூகம்பம், வெள்ளப் பெருக்கு, காட்டுத் தீ, இன அழிப்புக்கள், மனிதம் மறந்து போன போர்கள்.... என  எல்லாம் மரணத்தின் மகா பசிக்கு விருந்து வைப்பவை. இதிலுள்ள விசித்திரம் என்னவென்றால் இயற்கைக்கு வரும் மரணப் பசியை விட சில மனிதர்களுக்கு வரும் மரணத்தின் மேலான பசியே பெரும் பசியாயிருப்பது தான்.

மரணத்தின் ஒலியை அல்லது ஓலத்தைக் கேட்டடிருக்கிறீர்களா? நான் கேட்டிருக்கிறேன். நாம் பால்ய காலத்தில் விளையாடித் திரிந்த மைதானமொன்றின் அருகில் மாடு வெட்டும் இடமிருந்தது. கத்தி கழுதில் விழ முதல் மாடு கத்தும் ஓலம் இதயத்தை சல்லடை போடும். வெளியில் காத்திருக்கும் மாட்டுகளின் அவலச் சத்தமும் மனதை அலைக்கழிப்பவை.  சாவை அறிந்து கத்தும் கதறல் அது.
‌அவை தவிர மரணத்தின் ஓலத்தை நான் கோயிலிலும் கேட்டிருக்கிறேன். பலியிடப் போகும் உயிர்களின் கதறலும், ஓலமும் பக்தர்களுக்கும் கடவுளுக்கும் கேட்காமலிருப்பது விசித்திரம் தான்.உயிர்களைக் காப்பாற்றும் கடவுளுக்கு உயிரை பலியிடும் விசித்திரம் அது!

மரணங்களில் தான் எத்தனை விதம்! பரிதாபமான முறையில் ஒரு மரணம் நிகழுமாயின் அது பரிதாப மரணமாயும்; அநியாயமாய் மரணம் நிகழுமாயின் அது அநியாயச் சாவு என்றும், சிறப்பாய் வாழ்ந்து, நோய் நொடி இன்றி வயதான காலத்தில் நிகழும் இயற்கையான மரணம் சந்தோசமான சாவு எனவும்; எதிர்பாராத திடீர் மரணம் அகாலமரணம் என்றும்; இவை தவிர வீர மரணம், தற்கொலை, கொலை,கருணைக் கொலை... என. இப்படி மரணத்திலும் பல வகை இருப்பது மரணத்திற்கு தெரியுமோ என்னவோ? ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் எதுவும் மரணிக்கலாம், மரணத்தை தவிர்த்து
உலகம் சுற்றுகிற சுற்றில் சக பயணிகளான நாமெல்லாம் எப்போது எங்கெங்கு எப்படியெல்லாம்  தூக்கியெறியப் படுவோமோ தெரியவில்லை. ஆனால் அந்த நாட்களும் வந்தே தீரும் என்பதில் ஐயமில்லை.

இப்போதெல்லாம் மரணித்த பின் என்ன நடக்கிறது என்று அறிகிற ஆவல் என்னையும் தொத்திக் கொண்டிருக்கிறது.  ஆனால் விபரம் தொரிந்தவர்கள் தான் எவருமில்லை, என் சந்தேகங்களை தீர்க்க. ஒரே குழப்பமாக இருக்கிறது. ஆனால் அது பற்றி அறியக்கிடைக்கும் நாள் தினமும் என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் மிகத் தெளிவாய்த் தெரிகிறது.

.

1 comment:

  1. பதிவு சற்று நீளமாய் உள்ளது. அலசல் நன்று. நல்ல எழுத்து நடை. மேலும் தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete

பின்னூட்டங்கள்