ஊரெங்கும் வாழும்..... வலி

 தமிழ்மண நட்சத்திரவாரத்திற்காக (ஜூலை 19 - 26. 2010) எழுதப்பட்ட ஆக்கம் இது
................................................................................................
என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று சிந்திக்க சற்று நிதானிக்க வேண்டியிருக்கிறது. எப்பொழுதும் ஏதாவது நடந்து‌ கொண்டேயிருக்கிறது
நன்மையாயும்
தீமையாயும்

கடந்து போன ஒரு வருடத்தைத் திரும்பிப் பார்க்கிறேன்..

இடப்பெயர்வுகள்,
தொழிற்பெயர்வுகள்,
பயணங்கள்,
சுகயீனங்கள்,
நல்லதும் கெட்டதுமான சந்திப்புகள்,
சம்பவங்கள்
கடந்து போன, கடந்து கொண்டிருக்கும் வலிகள்

அப்பப்பா..

இன்றைய நாளும் அப்படிப்பட்டதே. மறக்கமுடியாத நாட்களுக்குள் ஒரு நாளாய் மாறியிருக்கிறது.

இரண்டு நாட்களாய் தொலைபேசியில் அழைத்துக் கொண்டிருந்தார் ஒருவர். இன்று காலையும் அழைத்தார்.

இவரை முன்பு ஒரு தரம் ஒரு கடையில் சந்தித்திருக்கிறேன். அமைதியாய் நின்றிருந்தார் அந்தக் கடையில். ஒரிரு வார்த்தைகள் பரிமாறிக் கொண்டோம்.. அவ்வளவு தான்.

முதல் சந்திப்பை நன்றாக ஞாபகம் வைத்திருந்தார். தனது கணணி மக்கர் பண்ணுவதாயும் வந்து பார்க்க முடியுமா என்றார்.
ஓம் என்ற போது
விலாசம் தந்தார்

வாகனத்தை நிறுத்தி மாடிக் குடியிருப்பை நெருங்கும் போது
யாரோ ஜன்னலில் தட்டுவது கேட்டது. நிமிர்ந்து பார்த்தேன் ‌. முன்றாம் மாடியில் இருந்து கைகாட்டிக் கொண்டிருந்தார்.

கதவருகே காத்திருந்தேன். கீழிறங்கி வந்து
வணக்கமண்ணா
என்றார்.. கொழும்புத் தமிழில்

எனக்கு முதன் முதலில் புதிய மனிதர்களை சந்திக்கும் போது மனம் சில வேளைகளில் ”கவனம்” என்று எச்சரிக்கும் அல்லது தனது புலனாய்வை நிறுத்தி மௌனித்திருக்கும். இன்று மௌனித்திருந்தது.

மனிதரை பார்த்ததும் எதோ பிடித்துப்போயிற்று எனக்கு. ஏதோ எழுத்தில் கூறமுடியாத ஒரு அமைதியும் வேறு எதோவும் குடியிருந்தது அவர் முகத்தில்.

வயது 30களின் நடுவிலிருக்கும் போலிருந்தது அவர் தோற்றம்

மெதுவாய் மேலே அழைத்துப்போனார்.
அமைதியாய் ஆர்ப்பாட்டமின்றி, மிகச் சுத்தமாய் இருந்தது வீடு. வெளிச்சத்தை அள்ளி எறிந்து கொண்டிருந்தது சூரியன், வெளியில்.

பிரச்சனை விளக்கிளார். மிக விரைவில் தீர்வும் கிடைத்தது.
ரொம்ப நன்றிண்ணா என்றார்.

என்ன குடிக்கிறீர்கள் என்றார். மறுக்க முடியாததாய் இருந்தது மனிதரின் வேண்டுகோள்.

குளிர் தண்ணீர் என்றேன்
மறுத்து
சூப்பர்... பால் தேத்தண்ணி தருகிறேன் குடியுங்கள் என்றார். ஓம் என்றேன்

தேத்தண்ணி, பிஸ்கட், வாழைப்பழம் சகிதம் வந்தமர்ந்தார் முன்னால்.
பேச்சு எங்கெங்கோ போய் இறுதியில் வாழ்வில் வந்து நின்றது

தம்பி தனியவோ இருக்கிறீங்கள் என்றேன். குடும்பம் எங்‌கே? என்று கேள்விகளை அடுக்கிய போது மௌனமானார் அவர்.

ஏதோ புரிவது போலிருந்தது எனக்கு.

மெதுவாய் என் கை பிடித்து
வேண்டாம் அண்ணே.. வேறேதும் பேசுவோம் என்றார்.. உடைந்த குரலில்

புரிந்து சற்று மெளனித்து, சரி என்றேன்.

மீண்டும் வாழ்வியலே பேச்சின் உள்ளடக்கமாக இருந்தது
வெளிநாட்டின் வாழ்வும், அதன் ரணங்களும் அவருக்கு புரிந்திருப்பதாய் பட்டது அவரின் வார்த்தைகளினூடாக.
அவர் மனம் ரணமாயிருந்ததும் புரிந்தது.
வெளிநாட்டில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் பலமாய் பாதிக்கப்படுவதாயும், அது பற்றி யாரும் பேசுவதில்லை எனறும் சொன்னார். ஆண்களை மட்டுமே குற்றம் சுமத்துவதாயும் சொன்னார்.

மௌனமாய் உட்கார்ந்திருந்தேன். அவர் வேதனையின் வலி அந்த அறை முழுவதும் மெதுவாய் படர்ந்து கொண்டிருந்து. அவர் கேள்வியின் உண்மையும், ஆழமும் என்னைப் பலமாய் தாக்கியிருந்ததால் நான் ஏதும் பேசும் நிலையில் இருக்கவில்லை..

பணத்தின் குணமும் அதன் பலமும் பற்றிக் கதைத்தார். பகட்டான வாழ்வின் பலிகடாக்களாக பலர் உள்ளனர் என்றார்.
என் மெளனமே பதிலாகக் கிடைத்தது அவருக்கு.
இன்னும் என்னென்னமோ கதைத்துக்கொண்டிருந்தார். சீழ் கட்டியிருக்கும் மனதில் இருந்து வெளியேறத் துடிக்கும் சீழ் போலிருந்தது அவர் வார்த்தைகள்.
கசப்பும், வலியும், இழப்பும் நிறைத்திருந்தது மனிதரின் வார்த்தைகளை.

குரல் வர வர உடைந்து கொண்டிருந்தது. கண்ணீரைக் கட்டுப்படுத்த பெருமுயற்ச்சி செய்யது கொண்டிருந்தார். அணையுடைத்து ஓடித் தொடங்கியது கண்ணீர்.

வாழ்வின் அனுபவம் எனக்கு அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை ஏற்கனவே தெரிவித்திருந்தது.

நினைத்த மாதிரியே உடைந்தது சோகம் நிறைந்தது அவர் மனக்குடம்.
ஆறாய் பெருகியது கண்ணீர்..
குழந்தையாய் உடைந்து விம்மி விம்மி அழுதார்

உங்களுக்கு புரியாது அண்ணே...
ரொம்ப கஸ்டப்பட்டுட்டேன்
கடந்த வந்த பாதை வலி நிறைந்தது என்றார்

கண்ணீர் வெள்ளமாய் ஓடிக்கொண்டிருந்தது

மனிதர் கடந்து கொண்டிருக்கும் கணங்களை நானும் கடந்திருக்கிறேன்
சோகத்தை பகிர ஒரு காதும், தோளும்
வழிந்தோடும் கண்ணீரும்
பலம் பல தரும் என்பதை நன்கறிவேன்.

என் காதுகளையும், கண்களையும் அவருடன் பேசவிட்டேன்.
பேசி முடித்து
மெளனித்திருந்தார் பல நிமிடங்கள்..
நானும் ஏதும் பேசவில்லை
அறையை ஆட்கொண்டிருந்த மௌனம் அவருக்கு சற்று தெம்பைத் தந்திருந்தது

இப்போது

கண்துடைத்து, மூக்கு சிந்தி
நிதானமாகி
அவர் நிமிர்ந்த போது
சீழ் எடுத்த புண்ணாய் ஆறியிருந்தார் மனிதர்.

அவர் ”மன்னியுங்கள்” என்ற போது

கைபிடித்து
புரியும் அய்யா புரியும்
என்றேன்

கலங்கிய கண்ணால்
நன்றி என்றார்

மாம்பழம் சாப்பிடுங்கள் என்று பாக்கிஸ்தான் மாம்பழம் கொண்டு வந்து வெட்டியும் தந்தார். தேனாய் இனித்தது.
ருசித்துத் சாப்பிட்டோம் மாம்பழம்

வெளிக்கிட்ட போது
முதுகில் தட்டி நன்றி என்றார்
புன்னகைத்து
ஏதும் உதவி தேவை என்றால் தயங்காமல் கேளுங்கள் என்றேன்
நீங்களும் தான் என்றார்
புன்னகைத்து

வாசல் வரை வந்து வழியனுப்பினார்

மனிதம் புசித்ததால்
நிரம்பியிருந்தது மனது

மெதுவாய் இறங்கிக் கொண்டிருந்தேன் படிகளில்

வாழ்வின் சோகங்கள்
தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும்
என்பது
மனதுக்கு ஆறுதலாயிருந்தாலும்
ஏனோ வலித்தது.....

.

1 comment:

  1. உண்மை. ஆன்மாவிற்கு ஆண், பெண் என்ற பேதம் இல்லையே. அதனால் ஆணுக்கும், பெண்ணுக்கும் மனசு வலி ஒன்றுதானே, அன்பரே.

    ReplyDelete

பின்னூட்டங்கள்