சாதாரணமானவனின் தமிழ்

தமிழ்மண நட்சத்திரவாரத்திற்காக (ஜூலை 19 - 26. 2010) எழுதப்பட்ட ஆக்கம் இது
............................................................................................................................

தமிழ்மண நட்சத்திரவாரத்திரமாக என்னை எழுத அழைத்து, என்னையும் பெருமைப்படுத்திய தமிழ்மண நிர்வாகிகளுக்கு எனது நன்றிகள்.

இன்று, கடந்த 45 வருட வாசிப்பையும், எழுத்தையும் பற்றி உங்களுடன் பகிர்ந்து பயணிக்க விரும்புகிறேன்.

அன்பாய் அணைத்தும் (அடித்தும்) ”தமிழ்” ஊட்டிய அனைத்து ஆசான்களுக்கும், மட்டக்களப்பு மெதடிஸ்த கல்லூரிக்கும் இத்தால் கிடைத்த, கிடைக்கும் பெருமைகளை அன்புடன் காணிக்கையாக்குகிறேன்.

நீவிர் இன்றி இவன் இருக்க வாய்ப்பில்லை.
சத்தியமாய் இல்லை.

ப்ளாக் எழுது என்று ஆர்வமூட்டி அதன் சூட்சுமங்களை விளக்கித் தந்து பின்பு ஒதுங்கிக் கொண்ட நட்பூக்கும், எனது முதல் ஆக்கம் வெளியிட்டு ஊக்கம் தந்த யுகமாயினி குழுமத்திற்கும், பனியும் பனையும் புத்தகத்தில் ஒரு சிறுகதையொன்றை வெளியிடவிருக்கும் எஸ். பொ அய்யாவுக்கும்,வேறு சிலருக்கும் எனது நன்றிகள்.

கனக்க அலட்டுகிறேனோ?..

காரணம்,
செய்நன்றி மறப்பதில் ஏற்பில்லை எனக்கு.

எனக்கு தமிழ் அறிவித்தவர்களில் முதலில ஞாபகம் வருபவர்கள் எனது பெற்றோர்களே.. நாலைந்து வயதிலேயே வீட்டில் கரும்பலகை வைத்து அ, ஆ பழக்கத் தொடங்கனார் அப்பா. அடுத்ததாக ஏறாவூர் மகாவித்தியாலய அதிபர் அய்யா கனகநாயகம். முதலாம் வகுப்பு இவரிடம் தான் படித்தாய் ஞாபகம் (அய்யா நோர்வேயில் தான் இருக்கிறார்).

அடுத்ததாய் பல சிறிய பாடசாலைகளில் படித்தாலும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் காலங்களே எனக்குள் விருட்சமாய் இருக்கின்றன.

கண்கள் பனிக்கின்றன, எனக்கு
பசுமையாய் எத்தனை எத்தனை ஞாபகங்கள்
குடும்பத்தில் உறவொன்று கூடியது 1976 இல் நான் அங்கு சேர்ந்த போது. சுக, துக்கம் எல்லாவற்றிலும் இன்று வரை என்னோடு வந்திருக்கிறது என்னருமைக் கல்லூரி. இனியும் வந்து கொண்டேயிருக்கும்.


எழுத்திலும், வாசிப்பிலும் ஆர்வமேற்பட இங்கு அறிமுகமாகிய இரு மாபெரும் ஆசான்களே காரணம். அதில் ஒருவர்
சர்மா சேர்,
மற்றையவர்
விஜயரட்ணம் மாஸ்டர்

சர்மா சேரின் கண்டிப்பில் எனக்கு தமிழ் வந்ததோ இல்லையோ ஆனால் அடிக்கடி பயத்தில் மூத்திரம் வந்தது. சில வேளை அதற்கு போகக் கூட விடமாட்டார் சர்மா சேர்..”அடக்கீட்டு கிடடா” என்பார் எரிச்சலில்.

நான் அவருக்கு சவாலாக இருந்தேன் என்று தான் நினைக்கிறேன்... நம்ம தலைக்குள் இலக்கணத்தை ஏற்றுவது சீமெந்து தரையில் நெல் நடுவது போலானது. ஆனால் மனிதர் அதையும் உழுது, நாற்று நட்டு விவசாயப்புரட்சி செய்தார்.

தற்போது பேஸ்புக் இல் உலாவருகிறார் சர்மாசேர்..
எனது எழுத்தை ரசிக்கிறார் என்றார் ஒரு நாள்..
அது அவர் போட்ட பிச்சையென்பதை அவர் மறந்தாலும் நான் மறத்தலாகாது.


மற்றையவர் விஐயரட்ணம் மாஸ்டர். விடலைகளின் போக்கறித்து அதனூடாக தமிழ் கற்பிக்கும் திறமை கொண்டிருந்தார் அவர். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது மாதிரி தமிழ் கற்பிப்பார். வானொலி, புத்தகங்கள் மேல் ஆர்வமேற்பட இவரே காரணம்.

அவர் கற்பித்த ”நான் மலரோடு தனியாக என் இங்கு நின்றேன்” என்ற பாடலே எனக்குத் தமிழின்பால் ஈர்ப்பைத் தந்தது. 1980 களில் இலங்கைத் தொலைக்காட்சியில் ”இரு வல்லவர்கள்” காண்பிக்கப்பட்ட அடுத்த நாள் யார் நேற்று படம் பார்த்தீங்க டீவியில என்ற வகுப்பைத் தொடங்கினார். அடுத்து வந்த 40 நிமிடங்களும் தமிழ் என்னும் தேன் உண்ட களைப்பில் மயங்கிக் கிடந்தேன் நான்.

அந்த வரிகளை கேட்டுப்பாருங்கள்
பாட்டில்  ஜெயசங்கர் விஜயலட்சுமியை கட்டிப்பிடிப்பதே எங்களுக்கு கிளுகிளுப்பைத் தந்திருந்த காலம் அது.. இருப்பினும் அடுத்து வந்த நாட்களில் அந்த பாட்டை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து, உதாரணங்களை அங்கிருந்தே எடுத்து உவமானம், உவமேயம் புரிவைத்தார்.

பாட்டைக் கவனியுங்கள்
(ஆண்)

நீ வருகின்ற வழி மீது  யாருன்னைக் கண்டார்
உன்  வளை கொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார்
உன்  மலர்க் கூந்தல் அலை பாய அவர் என்ன சொன்னார்
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்

(பெண்)

நீயில்லாமல் யாரோடு உறவோடு வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக..
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

எத்தனை அருமையான  வார்த்தைகள். மனிதர் அத்தனையையும்  பிரித்துப் பிரித்து ஊட்டினார்..திகட்டத் திகட்ட தின்று தீர்த்தோம் நாங்கள்.

உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன் என்னும் வசனம் வந்த போது முழு வகுப்பும் குசும்புச் சிரிப்பு சிரித்ததை கண்டு எம்முடன் சேர்ந்து சிரித்தார் தமிழாசனும்.

பாடசாலைக் காலத்தில் வாசிகசாலையும் தன்பங்குக்கு தமிழை ஊட்டியது எனக்கு. அம்புலிமாமாவில் ஆரம்பித்து, ஜானி, ரிப்கிர்ப்பி, சிந்துபாத், இரும்புக்கை மாயாவி, வேதாளம் என்று சித்திரக் கதைகளுடன் பயணித்து,
சங்கர்லாலுடன் துப்பறிந்து,
செங்கையாழியானுடன் பண்றி  வேட்டைக்குப் போய்,
கறுப்புராஜாவில்.. சற்று காமம் கண்டு,
பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் என்று வேகம் கொண்டு சாண்டில்யனைக் கண்ட போது மயங்கிக் கிடந்தேன் அக்கா மஞ்சளழகியின் மடியில் (அண்ணன் தளபதி இளையபல்லவன் மன்னிப்பாராக).

இன்று வரை கடல் புறாவின்  மூன்று பாகங்களையும் குறைந்தது பத்துத் தடவைகள் வாசித்திருப்பேன்..ஆகா என்ன கற்பனை.. என்ன விறுவிறுப்பு.. சரித்திரத்தையும் கற்பனையையும் கலந்து எழுதும் அந்த தாவரவியல் பேராசிரியரை நமக்கு நன்றாகவே  பிடிக்கும். (சாண்டில்யனின் புத்தகங்களை 14,15 வயதில் வாசிக்க தடைபோட்டார் அம்மா..அந்த மனிசன் கண்ட மாதிரி  எல்லாத்தையம் வர்ணிக்கும் என்றார்  காரணம்  கேட்ட போது... அவருக்கு தெரியாமல் வாசித்தது வேறு கதை)
எனது தாயாரின் வாசிப்புப் பழக்கம் தான் எனக்கும் தொற்றியிருக்கிறது என்றால் அது மிகையில்லை.

இதன் பின்னான காலம் ஜெயகாந்தன், சுஜாதா, அனுராதா ரமணண் என்றிருந்தது.

வாசிக்காவிட்டால், வரமாட்டேன் என்று சண்டைக்கு வந்தது நித்திரை அந்தக்காலத்தில். மட்டக்களப்பு வந்தாறுமூலை வாசிகசாலையில் ஒரு வயதான அய்யா ஒருவர் குந்தியிருப்பார். அவர் தான் எனது தோழமைகளுக்கும் எனக்கும் புதிய புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். புத்தகத்தை திருப்பிக் கொடுக்கும் போது புத்தகத்தைப் பற்றி ஏதாவது சொல்லாவிட்டால் மனிதர் கடுப்பாகிவிடுவார். புரியாத சிவப்பு மட்டை புத்தங்களையும் தருவார். சோவியத்  ருஸ்யா என்றிருக்கும் அவற்றில் அதிகமான இடங்களில்.

அந்த வாசிகசாலையே கதி எனக்கிடந்த காலமும் இருந்தது.  அங்கிருந்த வாங்குகளில் மணிக்கணக்காய் குந்தியிருந்தால் குண்டி கோவிக்கும் என்பதால் அருகில் பரந்து  விரிந்திருந்த ஆல மரத்தடியில காற்றாட  படுத்திருந்து வாசித்து தள்ளியிருக்கிறேன் பல்லாயிரம் பக்கங்கள்.

வானொலி மாமாவையும் நான் மறக்க முடியாது. இலங்கை வானொலியின் சாதனைகளை பக்கம் பக்கமாக எழுதலாம். பல தமிழ் நிகழ்ச்சிகள் எம்மை கட்டிப்போட்டிருந்த காலம் அது.

1985 இன் இறுதியில் எனது 20களின் ஆரம்பத்தில் நானிருந்தேன். அதன் பின், கவிஞர் அப்துல்ரகுமான் என்னை மிகவும் கவர்ந்தார் அவரின் புதுக்கவிதைகளால். கவிஞர் மேத்தாவும், கவிப்பேரரசும் அப்படியே.
பல ஈழத்து, தமிழகத்து கவிஞர்களின் பெயர்கள் மறந்து விட்டாலும் அவர்களின் எழுத்தை மறக்க முடியாது.

புலம் பெயர்ந்தேன் 22 ம் வயதில். புதிய மொழி,  கல்வி ,தொழில் என்று போனது காலம். கல்யாணம், குழந்தை என லௌகீகம் போதிக்கப்பட்டிருந்த போது வயது 40ஐ தொட்டுக் கொண்டிருந்தது.

நோர்வே வாழ்க்கை  பல ஆண்டுகளாக வாசிப்பில், எழுத்தில் ஈடுபட அனுமதிக்கவில்லை (சிறு சிறு சஞ்சிகைகளை தவிர்த்து). நோர்வே இலக்கிய இதழான சுவடுகளில் இரண்டு ஆக்கங்கள் எழுதியிருந்தேன்.

நோர்வே நாட்டு புத்தகங்களில் கவனம் பெரிதாகத் திரும்பாவிட்டாலும் ஓரளவு நாட்டம் இருந்தது, இருக்கிறது. நோர்வே நாட்டு ஹென்ரிக் இப்சன் "Henric Ibsen"  எழுதிய  (http://en.wikipedia.org/wiki/Henrik_Ibsen) பொம்மை வீடு என்னும் நவீன நாடகம் உலகப்பிரசித்தி பெற்றது. இந்த நாடகம் 1950களுக்கு முன்பே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது ஆச்சர்யமானதோர் செய்தி. எங்களின் விடுதலைப்போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டும் ஒரு நோர்வேஜிய நாவல் வெளிவந்திருந்தது சில வருடங்களுக்கு முன்.

வயது 40 நெருங்கிக் கொண்டிருந்தது மீண்டும் ஆர்வம் வந்த போது அறிமுகமானவர்களே எஸ்.ராமகிருஷ்ணன்  அண்ணணும், அ. முத்துலிங்கம் அய்யாவும்.

வாசித்துப் பாருங்கள் இவர்களை.
http://www.sramakrishnan.com/
http://www.amuttu.com/

எழுத்துலக ஐம்பவான்கள் இவர்கள். இவர்களின் இலகு தமிழே என்னைக் கவர்ந்தது. இவர்களின் ஏகலைவனாய்  சுவீகரித்துக் கொண்டிருக்கிறேன் என்னை.

என்னமாய் எழுதுகிறார்கள், மனதுடன் உரையாடும் கலையை கரைத்துக் குடித்திருக்கிறார்கள் இருவரும். அண்ணன் ராமகிருஸ்ணண் சற்றே சீரியசான எழுத்துக்களின் சொந்தக்காரர். ஆனால் நம்ம முத்துலிங்கம் அய்யா குசும்பு கலந்த  எழுத்தின் குத்தகைக்காரர்.. (அண்மையில் கோத்தபாயவுக்கே குசும்பு பண்ணியவர்).

நான் 2006 இல் விசரன் என்னும் பெயரில் பதிவுலகத்துக்கு ஆறிமுகமாகியிருந்தாலும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே எனது வாழ்பனுபவங்களை எழுதத் தொடங்கி, தற்போதும், என்னைக் கடந்து போகும், கடந்து போன அனுபவங்களை  இணையத்தில் பகிர்ந்து கொள்கிறேன். இந்தப்பதிவு எனது 50 வது பதிவு  (திட்டமிடப்பட்ட செயல் அல்ல). ஆச்சரியமாக இருக்கிறது திரும்பிப் பார்க்கும் போது.

இணையத்தில் தினமும் எத்தனையோ எழுத்தாளர்களை கடந்து போகிறேன். பலர் என்னையும் கடந்து போகிறார்கள். சிலர் கை காட்டிப் பேசிப் போகிறார்கள், சிலர் தட்டித் தருகிறார்கள், சிலர் வழியமைத்துத் தந்து வாழ் என்று சொல்லி ஒதுங்கிக் கொள்கிறார்கள்.

தமிழ் எனக்கு

வாழ்வு தந்த
வலிகளைக் கடக்கவும், மறக்கவும்
தனிமையைக் கொல்லவும், வெல்லவும்
துயர் பகிரவும்
நட்டைப் பெறவும், தொலைக்கவும்
சுயவிமர்சனத்துக்கும்

தவிர

என்னை மனிதனாயும், மிருகமாயும்
சிலருக்குக் காட்டவும்

முக்கியமாய்

என்னை நானே அறியவும்
பேருதவி புரிந்திருக்கிறது

வாழ்க தமிழ்!
...........................

இறுதியாய்

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்

மேற் கூறியதற்கும், கீழுள்ள நோர்வே கவிஞர் கவிதாவின் கவிதை வரிகளுக்கும் தொடர்பிருக்கிறது போலிருக்கிறது எனக்கு..  உங்களுக்குமா?

மரபுகளை முறித்துக்கொண்டு
மனிதனாக இருக்கச் சொல்கிறது
எனது சுயம்

புரிந்ததா நட்பே?
நாளை சந்தி்ப்போம்.

4 comments:

 1. பல பூங்கொத்துக்கள் தரவேண்டும் உங்களுக்கு! தமிழ்மண நட்சத்திரப் பதிவர், 50 ஆவது பதிவு, எளிய தமிழில் (தலைப்பே அதுதான்!) வாசிப்பவரின் நினைவுகளை தமிழின் பக்கம் திருப்பியது, இதற்கெல்லாம் ஒவ்வொரு பூங்கொத்து!

  ஸ்ரீ....

  ReplyDelete
 2. நட்சத்திர வாழ்த்துகள்.எளிமையும் இனிமையும் நிறைந்த எழுத்து. இவ்வளவு தீவிரம் வாசிப்பில் காட்டுவது மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

  ReplyDelete
 3. எளிமையான தமிழ்,வலைப்பக்கமும் அதன் வண்ணமும் கூட அழகாக இருக்கிறது.

  சில உள்ளடக்கங்கள் நேர்மையின் அழகோடும்,கசப்பான உண்மைகளோடும்,உங்களுக்கே உரிய தனித்துவ மொழி வல்லமையோடும் மிளிர்கின்றன.

  உண்மைகளைக் காணவும்,புரிந்து கொள்ளவும்,அதனைச் சொல்லவும்,சந்திக்கவும், தாண்டிச் செல்லவும்,அதனோடு வாழவும் அசாத்திய நெஞ்சுரம் வேண்டும்.

  வாழ்த்துக்கள்!நட்சத்திரப் பதிவரானமைக்கும் சேர்த்து.
  கவிதை,கதை,கட்டுரை,மொழிபெயர்ப்புஎன இன்னும் நிறைய எழுதலாம் நீங்கள்.

  உங்களிடம் அதற்கான ஆளுமை நிறைய உண்டு.

  ReplyDelete
 4. மிக்க நன்றி நண்பர்களே.

  ReplyDelete

பின்னூட்டங்கள்