உணர்ந்தவன், வலியின் வலியை

கண்ணை மூடு
காதை மூடு
சிந்தி
மீண்டும் மீண்டும்
சிந்தி

கசியத் தொடங்கியிருக்கும்
உன்னுள்ளும் மனிதம்

உற்றுக் கேள்
அது விசும்பும்
சத்தம் கேட்கும்

மனிதமுள்ள மனிதனல்லவா நீ

சிலருக்கோ
விட்ட பிழையும்
கொடுத்த வலியும்
மேல் எறிந்த
பந்தைப் போல்
அவர்களை குறிவைத்து
வருவது புரியும்

எங்கு ஓடினாலும்
வரும்
எப்ப வரும்
எப்படி வரும்
என்று தெரியாமல்
வரும்
(சுப்பர்ஸ்டார் மாதிரி)

எத்தனை சாட்சிகள்
அத்தனையும்
மனச்சாட்சிகள்

தாயின் மார்பில்
பால்வடியும் வாயுடன்,
தந்தையின் கையினுள்
குத்திநிற்கும் கண்களுடன்,
ஊட்டிய சோற்றுடன், ஏன்
பிரசவிக்க முதலே
மரண வலி


வீட்டில், வீதியில், ஆலயத்தில்
இப்படி எங்கும்
யுத்தம் தந்த எச்சம்

புத்தனும், அல்லாவும்,
தேவனும், முருகனும்
இது வரை
சோரம் போகவில்லை
ஜ.நா வைப் போல

அவர்கள் ஆண்டவனிடம்
மண்டியிடும் போது
அவர்
்அவர்களைப் பார்த்து
புன்னகைக்கலாம்
தவறாக எண்ணிவிடாதே
அதனர்த்தம்
அவர்களும் மனிதர்களா
என்பதே.

எங்கே புரியப் போகிறது
அது அவர்கனளுக்கு

பெருமையாய் பேசித்திரியும்
உன்னினமும் என்னினமும்
பெயருக்காய் பல்லைக்காட்டும்
மாற்றானும்

தலைவன் வருவான்
என்றொருவனும்
இனி உனக்கு
தலையே இல்லை
என்று மற்றொருவனும்
இவர்களுக்கிடையே
தன் பை நிரப்பும்
இன்னொருவனும்

இவர்களை நம்பி
எமார்ந்த
என்னையும் உன்னையும்
அவர்கள்
மறந்து போவார்கள்

கோட் சூட் போட்டவன்
கொஞ்சம் அனுப்ப
அவனும் இவனும்
அந்த கொஞ்சத்தில்
கொஞ்சம் எடுக்க
எனக்கும் உனக்கும்
மிச்சமிருக்கும் எச்சம்

இன்று என் வீட்டில்
ஆயிரமாயிரமாய்
உன் வீட்டில்
சில நூறு
இருப்பினும்
வலியின் வலியில்
ஒற்றுமையாய் நாம்

வலி மறந்து
மனிதம் படைப்போம்
வா
................................
ஆவணி 09

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்