அலெக்சாண்டர் மாமன்னனின் அற்புத சமையலும், Pacharan பானமும்

இந்த 850 கி. மீ நடைப்பயணத்தின்போது கடந்த மூன்று நாட்களாக ரஸ்ய நாட்டு நண்பன் அலெக்சான்டருடன் நடந்துகொண்டிருக்கிறேன்.

இன்று அவன்  இப்படிச் சொன்னான்.

”My norway friend, I make cook food you eat ( அவர் சமைக்கிறாராம், நான் உண்ண  வேண்டுமாம்).

”சரி” என்றேன்.

”We go buy super market and come” (சுப்பர் மார்க்ட்க்கு சென்று உணவு தயாரிப்பதற்கான பொருட்களை வாங்கி வருவோம்) என்றபடியே புறப்பட்டான்.

நானும் விதியை நொந்தபடியே புறப்பட்டேன்.

பேசிக்கொண்டே நடந்துகொண்டிருந்தோம். அவன் ரஸ்ய மொழியிலும் நான் தமிழிலும் உரையாடினோம். எனக்கு ருஸ்யநாட்டு மொழியும், அவனுக்கு தமிழும் புரிந்தது போல் உணர்ந்தேன்.

ஒரு நாய் எம்மை நோக்கி குலைத்தது. நான் சற்று எட்டி நடந்தேன். அலெக்சான்டர் அந்த நாயுடன் தனது ருஸ்ய நாட்டு மொழியில் பேசியபடியே அதனருகில் சென்றான்.  நாய் வாலை ஆட்டியபடியே  அவன் கையை நக்கியது.

பின்பு என்னையும் அருகே அழைத்து ” dog good friend, no run" (நாய் நண்பனாம், ஓடத் தேவையில்லையாம்)

எல்லாம் விதி என்றபடியே ”ம்” என்றேன். நாய் எனது கையையும் நக்கியது.

சுப்பர் மார்கட் கடைக்குள்  புகுந்தவுடன் ”வொட்கா” என்றான். நான் ”இல்லை” என்றேன். ( உன் ஊர்ப் புத்தி  உன்னை விடுமா என்று மனதுக்குள் நினைத்தபடியே)

Friend what drink? Wine? என்றான் என்னைப் பார்த்தபடியே. நான் இல்லை என்று தலையை ஆட்டினேன்.

திடீர் என்று அவன் கண்ணில் இந்நாட்டு மாநிலமான ”பஸ்கா” மாநிலத்தின் மிக முக்கிய பானமான ”Pacharán” பானம் கண்ணில் பட ” Friend, we drink Pacharán"  என்றான். எனக்கும் அது  பிடித்திருந்ததால் சரி என்றேன்.

தங்குமிடம் வந்தவுடன் சமையல் வேலையை மறந்து Pacharán போத்தலை திறந்து எனக்கும் பரிமாறினான்.

எனக்கு பசிக்கிறது என்றேன். பொறு, இன்னும் சற்று Pacharán  பருகு  என்றான். பருகினேன். புவியீர்ப்புவிசை சற்று கலங்குவது போலிருந்தது. நிறுத்திக்கொண்டேன். அவன் புவியீர்ப்புவிசைபற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

சற்று பதமான நிலை வந்தவுடன்;
 ”Friend, you wash என்று கூறி தக்காளியைக் காட்டினான். புரிந்துகொண்டேன். கழுவிக் கொடுத்தபின் " you eat hot?"  என்றான். யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்கிறாய் என்றபடியே ”ஆம்” என்று  தலையை ஆட்டினேன்.  தனது சமையல் பெட்டியினுள் இருந்து  காய்ந்த திப்பிலி மிளகாய், மிளகு போன்ற ஆயுதங்களை அவன் எடுத்தபோது எனக்கு சற்று பயமாக இருந்தது.

முட்டையை அவித்தபின் ஒரு முட்டையை உடைத்துக்காட்டி, மிகுதி இருந்த 5 முட்டையையும் உடைத்துத் தா என்றான். உடைத்துக்கொடுத்தேன்.

சற்று நேரத்தில் அற்புதமான சலாட், பாண், வாட்டிய இறைச்சி என பரிமாறினான். ஒலீவன் எண்ணையும் தந்தான்.

உண்மையில் அலெக்சான்டர் சமையற்கலையில் மிக மிக வல்லவன்.  உணவு அத்தனை ருசியாக இருந்தது.

இடையிடையே  I love Pacharán  என்றான்.  நானும், Me too my friend என்று கூறினேன். இருவரும் கிளாஸ்களை முட்டிக்கொண்டு "Buen Camino" (யாத்திரை சிறக்கட்டும்)  என்று பெரிதாக சொல்லிக்கொண்டோம்.

உண்டு முடிந்ததும். பாத்திரங்களை காட்டி, கழுவு என்றபின் மாயமாய் மறைந்துவிட்டான். நான்  Pacharán குடித்தபடியே கழுவிக்கொண்டிருக்கிறேன்.

1 comment:

  1. சுப்பர் மார்க்கட்டில் யார் காசு கொடுத்தது?

    ReplyDelete

பின்னூட்டங்கள்