ரகசியத்தின் ரகசியம்

மனிதர்களுடன் பழகும்‌போது மனம் திறந்து பழகுவது என்பது இலகுவானதன்று. என்னால் நண்பர்கள் எல்லோரிடமும் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளமுடிவதில்லை. என்னுடன் பழகும் பலர் தங்கள் வேதனைகளை, சோதனைகளை, இ‌ரகசியங்களை என்னுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். சிலர் பழகி சில நிமிடங்களிலேயே அவர்களது மனப்பாரங்களை என் முதுகில் ஏற்றிவிடுகிறார்கள். அவர்களின் மனப்பாரங்கள் என்றும் எனக்கு சுமையாய் இருந்ததில்லை. பகிர்பவருக்கும், பகிரப்பட்ட எனக்கும் அது ஒருவித ஆறுதலையே தருகிறது.

அண்மையில் ஒரு வயதான நோர்வஜியப் பெண் ஒருவர் கணணி திருத்த அழைத்தார். அவருக்கு 70 வயதிருக்கலாம். அவரின் கணணி திருத்தவேலை ஏறத்தாள 10 நிமிடங்களில் முடிந்ததும் ´தேனீர் அருந்திப் போ´ என்றார். அந்த தேனீர் அருந்தி நான் அவரிடம் இருந்து புறப்பட ஏறத்தாள ஒன்றரை மணிநேரமாகியது. விடுமுறைக்கு ஒரு நாட்்டுக்கு சென்றிருந்த அவரின் மகள், பாலியற் துஸ்பிரயோகத்தின் பின் கொலைசெய்யப்பட்டு சாலையோரத்தில் வீசப்பட்டிருந்த கதையை அவர் பகிர்ந்து கொண்டார். இருபது வருடங்களுக்கு மேலாகியும் அந்நினைவுகளில் இருந்து விடுபட முடியாதிருக்கிறார். நெருங்கிய உறவினரைத் தவிர வேறு ஒருவரிடமும் இதைப் பற்றி பேசியதில்லை என்றும் பேசினால் அவர்களின் ஆயிரம் குறுக்குக் கேள்விகளுக்கு பதில் கூறமுடியாதிருக்கிறது என்றார்.

என்னுடன் பேசுபவர்களிடம் நான் கதை புடுங்குவதில்லை. அதே போல் அவரிடமும் எதுவும் பேசாதிருந்தேன். ம் ம் என்பதைத் தவிர எதையும் கூறத்தோன்றவில்லை எனக்கு. அவரையே பார்த்திருந்தேன். கண்கலங்கி முமுக்கதையையும் கூறிய போதும் என்னால் ஏதும் பேசத் தோன்றவில்லை. அமைதியாய் உட்கார்ந்திருந்தோம். பல வேளைகளில் மௌனத்தின் மொழி பேசப்படும் வார்த்தைகளை விட ஆழமானதாய் இருக்கும் என்பதை அங்கு உணர்ந்தேன்.

நானும் என் ரகசியங்களை சிலரிடம் பகிர்ந்ததுண்டு. சிலரைப் பார்த்ததும் இவரை நம்பலாம் என்று மனதுக்குள் ஒரு நம்பிக்கை எம்மையறியாமலே வந்து உட்கார்ந்துவிடுகிறது. நெருக்கமான நட்போ, உறவோ அற்ற ஒரு சிலருடன் எனது வாழ்க்கையின் சில பக்ககங்களை பகிர்ந்திருக்கிறேன். அவர்களைப் பற்றி என் மனது கணித்தது சரி என்பது போலவே அவர்களின் நடவடிக்கைகளும் இருக்கின்றன.

ரகசியங்களுக்குள் இருக்கும் சுமை மிகப் பெரியது. அதை சுமந்து திரிபவர்களை அது மழைநீரில் கரையும் மணலைப் போன்று மெது மெதுவாக அரித்துக்கொண்டேயிருக்கிறது. நானும் எனது ரகசியங்களை என்னுள்ளேயே சுமந்துதிரிந்த காலங்களில் அந்தச் சுமையை உணர்ந்திருந்தேன். முதல் முதல் ஒருவரிடம் அதை பகிர்ந்து கொண்ட அன்று உடலின் பாரம் காற்றைப்போலிருந்தது. தூக்கமற்று அலைந்த மற்றைய நாட்களைவிட நன்றாகத் தூங்கினேன், அன்று.
மற்றவர்களின் ரகசியங்களை அறிந்துகொள்வதற்கான ஆாவம் மனிதர்களுக்கிடையில் வற்றாத கிணற்றின் ஊற்றைப்போன்று ஊறிக்கொண்டே இருக்கிறது. தங்கள் ரகசியங்களை மற்றவர்கள் அறியக்கூடாது என்று நினைப்பதும், சிலர் மற்றவர்களின் ரகசியங்களை அறியத் துடிப்பதும் ரகசியத்தின் விசித்திரங்கள். ரகசியங்களின் பொழுது இரவாயிருக்குமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

பலர் தங்களின் அளப்பெரிய தியாகங்களைக் கூட அவர்களின் மரணங்கள் வரை அல்லது அதற்குப் பின்னும் இரகசியமாகவே வைத்திருக்கிறார்கள். தங்களின் ஏமாற்றங்களை, ஏற்படுத்தப்பட்ட பச்சைத் துரோகங்களை ”அன்பு” என்னும் வார்த்தைகளினூடாக ஏற்றும், மன்னித்தும் வாழ்ந்து போகிறார்கள். இவர்களைப் போன்றவர்களால் தான் உலகத்தில் அன்பு இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறது என்பேன் நான். பார்க்க பகிரப்படாத குடும்பரகசியம். என்னால், அவர்களைப் போல் துரோகங்களை மன்னித்து மறக்கும் தன்மை இன்றுவரை இல்லாதிருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

ரகசியங்களிலும் பல விதங்கள் இருக்கின்றனவோ என்றே எண்ணத் தோன்றுகிறது. ரகசியங்கள் குழந்தைப்படருவத்தில் இருந்து நாம் முதியவர்களாகி இறக்கும் வரையில் எப்போதும் உருவாகக்கூடியவை. எனக்கும் எனது மகள் காவியாவுக்கும் ஒரு ரகசியம் இருந்தது. நாம் வாழ்திருந்த மலைப்பிரதேசத்தில் எமது வீட்டில் இருந்து 10 நிமிட நடைத் தூரத்தில் ஒரு நீர் அருவியும், அதில் இருந்து வழிந்தோடும் சிறிய ஆறும் இருந்தது. வீட்டிற்கு அருகில் இருப்பதால் மகள் தனியே அங்கு போய்விடுவாள் என்ற பயம் தாயாருக்கு. எனவே அடிக்கடி அங்கு போவதை நாம் தவிர்க்கவேண்டியதாயிற்று. என்னுடன் தனியே வெளியே வரும் போதெல்லாம் அடிக்கடி அங்கு செல்வோம். அம்மாவிடம் சொல்வதில்லை என்று எமக்குள் ஒப்பந்தம். ஆற்றருகில் குந்தியிருந்து கல் வீசுவதில் இருந்து என் கையை இறுகப்பற்றியவாறே நீர் பருகுவதும், கால் நனைப்பதும் என்று சில காலம் எமது ரகசியம் காப்பாற்றப்பட்டிருந்தது. பின்பொருநாள் அது ரகசியமற்றுப் போனது.

எனது பதின்மவயதில் இருந்து பல இரகசியங்கள் என்னுடன் இன்றும் வந்துகொண்டேயிருக்கின்றன. அவையொன்றும் ராணுவ ரகசியங்கள் அல்ல.  எனது நண்பன் ஒருவனுக்கு எமது ஆசி‌ரியை ஒருவரில் பருவக்கவர்ச்சி வந்தது தொடக்கம், தான் ”கப்பலில் வேலைக்கு” போவதை காதலி விரும்பாததால் அதை அவளிடம் சொல்லாதே என்ற நண்பனின் ரகசியங்கள் வரை இன்றும் பல பதின்மகாலத்து ரகசியங்கள் என்னுள் இருக்கிறன்றன.

ரகசியங்களில் சில ரகசியங்கள் வெளியில் பகிரப்படவே முடியாதவையாகவும் இருக்கின்றன. உற்ற நண்பர்களிடமும் பகிரமுடியாமலும் அவற்றின் கனம் தாங்கமுடியாலும் பலர் இருக்கிறார்கள். அண்மையில் திருநங்கைகளின் வாழ்வு பற்றிய ” வாடாமல்லி” புத்தகம் படிக்கக்கிடைத்தது. திருநங்கைகளை உள்ளடக்கிய குடும்பங்களின் மனநிலையை, அவமான எண்ணங்களை, பாசத்துக்கும் சமுதாயத்திற்கும் இடையிலான போராட்டத்தை மிகவும் அற்புதமாக எழுதியிருந்தார் சு. சமுத்திரம்.

இதே போன்றதே ஓர்பால் உறவும். இதுபற்றி வெளிநாடுகளில் வாழும் எம்மவர்களி‌டையேயே விரிவான பார்வை இல்லாதவிடத்து இலங்கையில் இந்தியாவில் இவர்களின் நிலையை நினைத்துப்பார்க்கவே முடியாதிருக்கிறது. இப்படியான ஒரு ரகசியத்தை வாழ்நாள் முழுவதும் சுமந்து திரிபவரின் மனநிலைகள், இதைப்பற்றி அறிந்த குடும்பத்தவரின் மனநிலைகள் பற்றி பலரும் சிந்திப்பதேயில்லை. ஒருபால் உறவு என்பதை ஏதோ கொலைக்குற்றம் போன்றல்லவா நாம் பேசித்திரிகிறோம். அவர்களும் மனிதர்கள் என்பதையும் மறந்து போகிறோம். நாம் பேச விரும்பாத, பேசத் தயங்கும் விடயங்களை பேசும் போதும், சமுதாய மாற்றங்களை உள்வாங்கும் போதும் இப்படியான ரகசியங்களைச் சுமந்த வாழ்பவர்களின் வாழ்வு சற்று இலகுவாகிப்போகும் என்றே எண்ணுகிறேன்.

சில உறவுமுறைகளும் ரகசியங்களை சுமக்கமுடியாமல் சுமந்துகொண்டிருக்கின்றன. சட்டத்தின் பார்வையில் சரியாக இருப்பினும் சமுதாயத்தின், கலாச்சாரத்தின் பார்வையில் தவறு என்பதால் தங்களின் உறவுகளை ரகசியமாகப் பேணுபவர்களும் இருக்கிறார்கள். இதற்கு உதாரணமாய் நான் அறிந்த, தன் தந்தை வழி வந்த ஒருவரை காதலித்த பெண்ணும், அந்த ஆணும் அனுபவித்த துன்பங்களும், ஏளனங்களும், அலட்சியப்படுத்தல்களும் இருக்கின்றன.

யுத்தகாலத்தில் தமக்கேற்பட்ட அவமானங்களை வெளியில் பேசமுடியாது, அவ் இரகசியங்களின் கனம் தாங்காது மனநோய் கண்டவர்களும், மனஉளைச்சல் கொண்டவர்களும் எம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சமூகத்தின் மேல்மட்ட மனிதர்களின் வாழ்வில் கூட துரோகம், பொய், ஏமாற்று, கொலை என்று பலவித ரகசியங்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
எல்லோரிடத்திலும் ரகசியங்கள் உண்டு. ரகசியங்களை காப்பாற்றுவதும் ஒரு வித ரகசியம் தான். எம்மில் பலர் மனதின் பாரத்தை யாரிடமாவது இறக்கி வைப்பதற்காக அலைந்துகொண்டிருக்கிறோம். எங்களின் பாரங்களை யாரிடமாவது இறக்கிவைத்து,  தாங்கொணா கனத்துடன் அலையும் மற்றவரின் சுமைகளையும் இறக்கிவைக்க முயலுவோம், வாருங்கள்.

இன்றைய நாளும் நல்லதே!


4 comments:

 1. அருமையான நல்ல புரிதலுடன் எழுதப்பட்ட பதிவு. ரகசியங்களின் அவசியம் என்ன? ஏன் சிலர் அல்லது எல்லோரும் ரகசியங்களை பாதுகாக்கிறார்கள் என்று ஆராய முற்பட்டால் நல்ல பதிகள் நமக்கு கிடைக்கலாம். ரகசியங்கள் ஒரு வித பாதுகாப்பை அளிக்கின்ரன. சிலர் தனிப்பட்ட முறையில் நல்லவர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்களுடைய சில செயல்பாடுகள் சமூக அளவில் கலாசாரம், பாரம்பரியம் என்று பார்க்கும்போது ஏற்று கொள்ளப்படமுடியாத விசயமாக இருக்கலாம். அதன் பொருட்டு ரகசியம் காப்பவர்களாக இருப்பார்கள். அதே சமயம் உண்மையை பகிர முடியாமல் தவிப்பார்கள். இது ஒருவிதமான அக போராட்டம்.

  மாறிவரும் பொருளாதார , சமூக சூழலில் நாம் இருக்கிறோம். தனி மனித சுதந்திரம், அவர் அவர் விருப்பு வெறுப்பு போன்றவற்றில் அடுத்தவர் தலை இடக்கூடாது போன்ற பண்பியல் குணங்களை நாம் அறிவதில்லை. பிறரிடம் நமக்கும் சமூகத்திற்கும் அவசியம் தேவைப்படும் விசயத்தை மட்டுமே கேட்க வேண்டும் , தேவை இன்றி பிறர் விஷயம் அல்லது சுதந்திரம் தொடர்பான விசயங்களை அறிய தேவை இல்லை என்ற பக்குவம் நம்மவர்களுக்கு இன்னும் வர வில்லை என்றே நினைக்கிறேன்.

  இது தொடர்பான மேலும் தாங்கள் எழுத வேண்டுகிறேன்

  ReplyDelete
 2. சுவாரசியம் மிக்கது இந்த ரகசியங்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விடயங்களை ரகசியமா பேனுகின்றார்கள்.

  ReplyDelete
 3. //நாம் பேச விரும்பாத, பேசத் தயங்கும் விடயங்களை பேசும் போதும், சமுதாய மாற்றங்களை உள்வாங்கும் போதும் இப்படியான ரகசியங்களைச் சுமந்த வாழ்பவர்களின் வாழ்வு சற்று இலகுவாகிப்போகும் என்றே எண்ணுகிறேன்.//
  நிச்சயமாக! ஆனால் எம்மில் எத்தனைபேர் இதை பொறுப்புணர்வுடன் செய்கிறோம்? நம்மவர் மத்தியில் இருக்கும் பரந்த அறிவின்மையும் குறுகிய மனப்பான்மையும் போக்க முயற்சிக்கவேண்டும்

  ReplyDelete
 4. மனம் விட்டு எதையும் சொல்லிப் பேசுமளவிற்கு எவரும் இல்லை இப்போவெல்லாம்.அதனால் ரகசியங்களை உள்ளுக்குள்ளேயே புதைத்து அவதிப்படவேண்டியதுதான் !

  ReplyDelete

பின்னூட்டங்கள்